Sunday 19 October 2014

இ.ஏவுகணை தொடர்கிறது:தான் இன்னமும் தேவைப்பட்டவன்

                          தான் இன்னமும் தேவைப்பட்டவன்
 கணேசன் 
                                                  
தான் இன்னமும் தேவைப்பட்டவன் என்பதறிந்து கணேசன் மகிழ்ந்து போனார். தான் எதிர்பார்த்த விதத்தில் “ஆஹா! தம்பி போர்முனையிலிருந்து வருகிறான்” என்று குடும்பம் ஒன்றுகூடிக் கொண்டாடா விட்டாலும் அவனால் சில உதவிகள் செய்ய முடியும் என்று குடும்பம் எதிர்பார்ப்பது தவறில்லை என்று கணேசன் உணர்ந்தார்.

அவர் இராணுவ அதிகாரியாகிய நாள் முதல் அவரது சம்பளம் திருவாரூர் ஸ்டேட் பாங்க்குத்தான் வருகிறது. அவ்வப்பொழுது கடிதம் மூலமாகவே ஏதாவது தேவை என்று கேட்பார். மற்றபடி எல்லாமே காசோலை மூலமாகவே நடந்து கொண்டிருந்தது. மறுநாள் காலை தனது கணக்கிலிருந்த பணத்துடன் கடனாகவும் கொஞ்சம் பெற்றுக் கொண்டு நாகப்பட்டினத்தில் அவரது சின்ன அண்ணனை அலுவலகத்தில் சந்தித்து அவர் கேட்டிருந்த பணத்தைக் கொடுத்தார். அலுவலக நண்பர்களுடன் கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றார் . வீட்டின் கதவைத் திறந்த சின்ன அண்ணியார் வேறு ஒருவரும் தனது கணவருடன் நிற்கிறார் என்பதை உணராதவர் போல சென்று விட்டார். கணேசன் முன் ஹாலில் உட்கார்ந்திருக்க அவர் அண்ணன் உள்ளே சென்று உடைமாற்றிக் கொண்டு வந்தார். மாலை 5 மணி இருக்கலாம்.

இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க சற்று நேரத்தில் கணேசனது அண்ணியார் ஒரு தட்டில் இரண்டு மூன்று இட்லி சட்னியுடன் எடுத்து வந்து கணவரிடம் தந்து விட்டு உள்ளே சென்று விட்டார். கணேசனது அண்ணன் நாள் முழுவதும் அலுவலகத்தில் பணியாற்றி களைத்து வந்தவர் இட்லி சாப்பிட ஆரம்பித்தார்.

 இது உண்மையான நிகழ்ச்சியா? அல்லது கற்பனையா? என்று பிரித்துப் பார்க்க முடியாத கணேசன் நம்ப முடியாத அதிர்ச்சியில் உறைந்து போனார். இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த அவரது அண்ணன், குடும்பத்தில் சில பிரச்னை, அதைப் பற்றி எல்லாம் நீ கவலைப்படாதே என்று ஆறுதலாகச்  சொன்னார்.

அங்கு நேர்ந்த மௌனப் புறக்கணிப்பை மனசிற்குள் வாங்கிக்கொண்ட  சிறிது நேரத்தில் தான் ஊருக்குப் போய் வருவதாகச் சொல்லிவிட்டு கணேசன் பஸ் ஸ்டாண்ட் போய்ச் சேர்ந்தார்.

அவர் ஊருக்கு உடனடியாக பஸ் இல்லை. காத்துக் கொண்டிருந்த நேரத்தில் கணேசன் நடந்த நிகழ்ச்சிகளை சற்றே எண்ணிப் பார்த்தார். கல்லூரியில் படித்துக் கொண்டும், பின்னர் போர்க்களத்திலும் இருந்த கணேசன் தன்னைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையோ என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

மனம் ஒரு மாயக் கண்ணாடி! தானே ஒரு கற்பனையான சூழ்நிலையை உருவாக்கிவிட்டு பிறகு அந்த சூழ்நிலையின் காரணமாக துன்பப்படுவது மனிதர்களின் இயல்பு. கணேசன் தனது போர் முனை அனுபவங்களுக்குப் பிறகு தனக்கு யாரும் கடிதம் எழுதவில்லை என்று வருத்தப்பட்டார். ஆனால், அவரது சகோதர சகோதரிகள் தங்களது குடும்பப் பிரச்சினையில் மூழ்கி வெளிவராமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை! அதை நிரூபிப்பது போல் மேலும் நிகழ்ச்சிகள் நடந்தன.காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டவர் வங்கி வேலைகளை முடித்துக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தார்.

பிறகு பஸ் ஸ்டாண்டில்வெகுநேரம் காத்திருந்து பஸ் ஏறி வீட்டிற்கு வந்து சேருகையில் இரவு 10 மணியாகிவிட்டது. பகற் பொழுதிற்குப் பின் அவர் ஏதும் சாப்பிடவே இல்லை. மிகவும் களைத்து சோர்ந்து போய் வீடு சேர்க்கையில் வீடு பூட்டி இருந்தது. தந்தை வெளியில் உறங்கிக் கொண்டு இருந்தார். தம்பியும் அவர் மனைவி, குழந்தையும் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் சென்று தம்பி எழுந்து வந்து கதவைத் திறந்து விட்டு, வந்துவிட்டாயா அண்ணே என்றுகேட்டுவிட்டு உறங்கப் போய்விட்டார். கணேசன் சற்று நேரம் அங்கிருந்த பென்ச்சில் உட்கார்ந்தார். மிகவும் பசியாக இருந்தது.

இரவு அதிக நேரமாகி விட்டதால் ஒரு சமயம் அண்ணன் வீட்டிலேயே சாப்பிட்டு வந்திருக்கலாம் என்று தம்பி நினைத்திருக்கலாம். சற்று நேரம் படுத்தார் கணேசன். மீண்டும் மீண்டும் அன்றைய நிகழ்ச்சிகள் விஸ்வரூபம் எடுத்து அவர் மனதில் நடமாடின. பகலெல்லாம் விவசாய வேலைகளை மேற்பார்வையிட்டு வரும் தம்பி களைத்துத் தூங்கி விட்டான். வயதான கணேசனின் தந்தை பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் அவர்களே தனது தங்களது தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்று நிம்மதியுடன் உறங்குகிறார். கணேசன் பகல் உணவிற்குப் பின் கொஞ்சம் தண்ணீர் கூடக் குடிக்காமல் இரவு 10-11 மணியளவில் கூரையைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடக்கிறார்.

இந்த ஊரிலோ அல்லது இந்த உறவுகளுக்கிடையிலோ தான் இன்னமும் இருக்க வேண்டுமா என்று வருத்தம் மேலோங்கியது. சரியாகத் தூங்காமலேயே பொழுது விடிந்தது.காலையில் எழுந்து முகம் கழுவிக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு தனது கைப்பெட்டியை எடுத்துக் கொண்டு அவர் அப்பாவிடமும், தம்பி, தம்பி மனைவியிடமும் தான் ஊருக்குப் போய் வருவதாக சொல்லிவிட்டு புறப்பட்டார்.

"ஏன் அண்ணே! ஒரு மாதம் விடுமுறை என்றாயே?" என்று தம்பி கேட்டார்.

"ஆமாம்! வேலை இருக்கிறது" என்று சொல்லி வீட்டை விட்டு வெளியில் வந்தார். இந்த வீடு, இதில் உள்ள மனிதர்கள், அண்ணன் தம்பி உறவுகள் எல்லாம் பொய்யாகப போய்விட்டதாக மீண்டும் உணர்கிறார். எங்கு போவது என்று தெரியாமல் கால்போன போக்கில் தான் விளையாடித் திரிந்த அந்த ஊரில் நடந்து கொண்டிருந்தார்.        

               பிறந்த மண்ணைப் பிரிவது நெஞ்சைக் கசக்கிப் பிழிவது

 பிறந்த மண்ணைப் பிரிவது நெஞ்சைக் கசக்கிப் பிழிவது போல் உணர்கிறார். அந்த மண்ணை மிதிக்கையில் எத்தனை தடவையானாலும் சலித்துப் போகாமல் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். பாரத நாட்டின் எல்லைப் புறங்களில் பணியாற்றுகையில் 1965-ம் ஆண்டு மேற்கு பாகிஸ்தானிய நகரான சியால்கோட்டுக்கு அருகாமையில் போர்க்களத்திலிருந்த பொழுதும்  கிழக்கு வங்கப் போர்க்களத்திலிருந்த பொழுதெல்லாம் இந்த பிறந்த மண் அவரை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறது.

இன்று எந்தவித உணர்வும் இல்லாமல் மெல்ல நடந்து கொண்டிருந்தார். வழக்கமாகப் பழக்கப்பட்ட கால்கள் அவரை ரயில்வே ஸ்டேஷன் கொண்டுவந்து சேர்த்திருந்தது. அந்த நேரத்தில் வந்த ஏதோ ரயிலில் ஏறி உட்கார்ந்தார். வண்டி புறப்பட்டு சென்னை நோக்கி ஓடியது. ஒரு மாதம் விடுமுறையில் வந்தவர் 10-15 நாட்கள் கூட செலவிட முடியாத சூழ்நிலையில் மீண்டும் தனது இராணுவப் பொறியியற் கல்லூரி நோக்கி திரும்பிவிட்டார்.அபிராமி பட்டர் நினைவு வந்தது.

நாளும் பொழுதும் தன்னையேத் துதித்து வந்த பக்தன் அந்த பக்திப் பெருமழையில் நனைந்திருந்தபோது மன்னனுக்கு அமாவாசையான அன்றுபௌர்ணமி என்று தவறாக பதிலளித்து இரவையும்அந்த நேரத்தையும் எதிர்பார்த்து இறைஞ்சி நின்ற அபிராமி பட்டருக்குக் கருணைபுரிந்து அன்று பௌர்ணமியே என்று பூரண நிலவாய் விண்ணில் தோன்றிய தெய்வ அருள் பற்றி கணேசன் நினைத்துப் பார்த்தார். எந்த விதமான சுயநலமும் இன்றி நாட்டுப்பற்றுடன் கலந்து தனது சுயமுன்னேற்றத்தை எதிர்பார்த்து நின்ற கணேசன் தனது உற்றமும் சுற்றமும் தன்னை கைவிட்டது போன்று கலங்கினார்.

ஆனால், அவர் தன்னிரக்கம் கொண்டு தளர்ந்துபோய்விடவில்லை. தீவிரமான சுய ஆராய்ச்சியும் இறைபக்தியும் கொண்டு புதுவழி காண ஆரம்பித்தார். அன்பும் அழகும் அறிவும் திறமையும் கொண்ட வாழ்க்கை துணைவி அமைந்து சத்புத்திரர்கள் உருவாகி, தனது வாழ்க்கை சிறக்கும் என்று திடமாக நம்பினார். இந்த அபிராமி பதிகத்தை படித்து மனம் தெளிவும் உறுதியும் பெற்றார்

           .கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர்
            கபடு வாராத நட்பும் 
            கன்றாத வளமையும் குன்றாத இளமையும் 
             கழுபிணி இலாத  உடலும்
            சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
             தவறாத சந்தானமும்
            தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
            தடைகள் வாராத கொடையும் 
            தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
            துன்பமில்லாத வாழ்வும்
            துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
             தொண்டரொடு கூட்டு கண்டாய்
            அலையாழி அறிதுயிலும் மாயனது
            தங்கையேஆதிகடவூரின் வாழ்வே
            அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுக பாணி
            அருள்வாய் அபிராமியே!

அபிராமியும் அமிர்தகடேஸ்வரரும் காப்டன் கணேசனுக்கு தங்கள் பூரண அருளை வழங்கினார்கள் என்பது தான் காலம் தந்த பதில்.

அவர் ஒரு இராணுவ அதிகாரி! ஆரம்ப காலத்தில் Officers are born with silver spoon  என்ற பெருமையான உதாரணத்திற்கு விளக்கமான பயிற்சியும் வாழ்க்கை முறையும் கொண்டிருப்பதைக் கண்டவர். கணேசன் தனது உற்றார் பெற்றோர் அந்த இராணுவ அதிகாரியின் வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று மனம் கலங்கினார்.

 ரயில் வண்டி ஓடிக் கொண்டிருக்க மிகவும் புண்பட்ட இதயத்துடன் தான் விளையாடித் திரிந்த வயல் வெளிகள் பின்னோக்கி ஓடுவது கண்டு மிகவும் கண் கலங்கினார். சிறு வயதில் ஒருமுறை அவரது தம்பிக்கு காலில் முள் தைத்து புரையோடி விட்டது. கிராமப்புற மருத்துவன் வந்து வைத்தியம் பார்த்தான். கால் பாதத்தில் மெல்லிய கம்பியை விட்டு மேல்புறமாக இழுத்தான். தம்பி வலியால் துடித்த பொழுது கணேசனை தம்பி மேல் உட்கார்ந்து அவர் அசையாமல் பிடித்துக் கொள்ளச் செய்துவிட்டு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தார். இரத்தமும் கீழுமாக வெளியேற தம்பி மிகவும் துடித்தார். பின்னர் பச்சிலை வைத்துக் கட்டினார்கள். 15-20 நாட்களில் குணமாகி விட்டது.இன்று கணேசனின் மனதிலிருந்தும் அப்படித்தான் இரத்தமும் சீழும் வெளியேறுகிறது.

 “காலம் என்ற வைத்தியன் கட்டும் பச்சிலையினால் அந்தப்புண் குணமாக வேண்டும். இந்த ஊரும் மனிதர்களும் மீண்டும் ஒருமுறை அவர் இங்கு வரநேர்ந்தால் ஒரு சமயம் அவரை வரவேற்கலாம். மனதில் அலை அலையாக எழும் உணர்வுகளை வெளியில் யாருக்கும் சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த துக்கமும் துயரமும் தனது மனதில் தவறான அணுகுமுறையால் உருவானவை என்பதை கணேசன் ஆணித்தரமாக உணர்ந்தார்.

இழப்பதற்கு ஏதுமில்லாதவன் பெறுவதற்கும் தகுதி இல்லாதவனே என்று தானே உருவாக்கிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்தார். இல்லை! இழப்பதற்கு இன்னும் ஏராளமானவை அவரிடம் இருக்கிறது. 30 வயதே ஆன அவரின் எஞ்சிய வாழ்க்கை இமயம் போல் எழுந்து நிற்கும். அவர் ஏன் அதை இழக்க வழிதேட வேண்டும்? உடலாலும் மனதாலும் உறுதியானவராக அவர் ஆகவேண்டுமானால் தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம் கொள்ள வேண்டும்.  சுயகௌரவத்தை யார் ஒருவன் உணர்வாகக் கொள்கிறானோ அவன் உயர்வடைகிறான் என்பதை காப்டன் கணேசன் அறிவார். மீண்டும் அவர் இராணுவப் பொறியியற் கல்லூரியில் நுழைந்தபோது ஒரு புது மனிதனாக - புத்துணர்ச்சியுடன் நுழைந்தார்.      
                                                                 

மிலிடெரி  ஸ்பெஷல் டிரெயினில் வீடு திரும்பும் கணேசன்

ஊரும் சதமல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப்பெற்ற
பேருஞ்சதமல்ல; பெண்டீர் சதமல்ல; பிள்ளைகளும்
சீருஞ்சதமல்ல; செல்வம் சதமல்ல; தேசத்திலே 
யாருஞ்சதமல்ல; நின் தாள் சதம் கச்சி ஏகம்பனே!
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக 
மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே
-பட்டினத்தார்[
[va

No comments:

Post a Comment