Wednesday 15 October 2014

மணல்வெளி மான்கள். 1

முன்னுரை

வையவன்
மணல் வெளியில் மான்கள் வசிப்பதில்லை. ஆனால் குரூர சக்திகள் துரத்தி வரும்போது அவை மணல் வெளிகளைக் கடக்க முயலும். சில சமயம் வெல்லும்; சில சமயம் மடியும்.
மனிதகுலமேதான் இன்றைய மணல்வெளி மான்கள். துரத்துவது வன்முறை. தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு மனிதர்களைத் தவிர வேறு எவருமில்லை.
எதிர்த்துத்தாக்கு!
தீயைத் தீயால் அணைமணல்வெளி மான்கள். 
முள்ளை முள்ளால் எடு!
இதுதான் காட்டுமிராண்டி வாழ்வின் ஆதி அம்சம். மனிதனின் அந்த விலங்குத் தன்மையை மாற்றி மாற்றி எழுந்த மகான்களின் குரல்கள் மறு பரிசீலனை செய்தன; பக்குவப்படுத்தின.
எனினும் அது இடையறாத போராட்டம் ஆயிற்று. நன்மைக்கும் தீமைக்குமான நிரந்தர யுத்தமாகியது.
இதை நீக்க மெய்யறிவு உதவியதைப் போல் அறிவியல் உதவவில்லை. அறிவியல் உதவ்வில்லை. இதயத்தை, உணர்வுகளை, மனிதனிடம் உள்ள மனிதத்துவத்தை மேன்மைப் படுத்துவதற்கு மாறாக அறிவியல் ஒருவரை ஒருவர் வஞ்சிக்கவும் அழித்துக் கொள்ளவுமே உதவுகிறது. அது அச்சத்தை மூலதனமாக்கி  அதிநவீன ஆயுதங்களையே உற்பத்தி செய்து வருகின்றது.
அதன் விளைவுகளை அமெரிக்காவில் பெண்டகன் சந்தித்தது.
அறிவுக்கு மாற்று மருந்து உணர்வின் மேன்மை, கலைகள் அதற்கே முயலுகின்றன.
கலைகளின் தலைமைப்பீடம் இன்றும், இலக்கியமாகவே இருந்து வருகிறது. உலகெங்கும் நிகழும் வன்முறைகளைக் கண்டு மனங் கசிந்து வெற்றுக் கண்ணீர் விடாமல் மேலான பாத்திரங்களைச் சிருஷ்டித்துக் காட்ட வேண்டிய பொறுப்பு இலக்கிய ஆசிரியனுக்கு உண்டு.
இந்த நாவல் அதையே உத்தேசமாகக் கொண்டது. இதன் கதாநாயகனும் கதாநாயகியும் வாழ்ந்து காட்டி, வன்முறைக்கு இரையாகாமல் நிமிர்ந்து நிற்பது எப்படி என்று நிரூபிக்க முனைந்துள்ளார்கள்.
நாவலைப் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் ஆத்மீக வழிபாடாகக் கொண்டு படைத்த முயற்சி இது. படித்துப்பாருங்கள். 
                                                                வையவன்



,

No comments:

Post a Comment