Tuesday 14 October 2014

தமிழ் இனி மெல்ல[3.11] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல[3.10] சென்ற பதிவின் இறுதியில் 

அதைக்கேட்டதும் இராஜாதிராஜனின் முகம் இறுகுகிறது. தான் கூறும் சொற்கள் ஒவ்வொன்றும் அவனது உள்ளத்தில் பழுக்கக் காய்ச்சி எறியப்பட்ட ஈட்டிகளாகத் தாக்குகின்றன என்பது சிவாச்சாரிக்குத் தெரிந்து தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு அரசன் தனது தவறுகளைத் தெரிந்து கொண்டால்தான் அதைத் திரும்பச் செய்யமாட்டான், அதிலிருந்து கற்றுக் கொள்வான். என்று, உள்ளதை உள்ளபடி உரைக்கிறான் சிவாச்சாரி.

“நான் எப்படி அந்தப் போரை நடத்தி இருப்பேன் என்று கேட்டதால் அதையும் சொல்கிறேன். எலிப்பொந்தில் குடியிருக்கும் எலிகள் பூனைகயைக் கண்டால் வெளிவரா. புகையிட்டோ, தண்ணீரைப் பெருகவிட்டோ அவற்றை எப்படிப் கொல்வோமோ, அப்படித்தான் நான் பாண்டிய வீரர்களை அழித்திருப்பேன்.

“சுரங்கத்தில் இருப்பவர்களுக்கு முக்கியத்தேவை காற்று, அந்தக் காற்று செல்லவிடாமல் தடுத்தால் சுரங்கத்தால் உள்ளவர்கள் ஒன்று வெளியேறுவார்கள், அல்லது அங்கேயே மூச்சுத் திணறி இறந்து போவார்கள். அதற்குமுன் சுரங்கத்திலிருந்து அவர்கள் வெளியேறும் வழிகள் எங்கு இருக்கின்றன என்று ஆராய்ந்து அறிந்துகொண்டு, அங்கு நமது வீரர்களை நிறுத்தி, இருக்கின்றன என்று ஆராய்ந்து அறிந்துகொண்டு, அங்கு நமது வீரர்களை நிறுத்தி, வெளிவருபவர்களைப் பிடித்திருப்பேன், அல்லது அழித்திருப்பேன். சுரங்கத்திற்குள் சென்றிருக்க மாட்டேன்.

“இதற்கு நிறையப் பொறுமை தேவை.  ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு என்பது போலத்தான். வெற்றிக்காக நான் காத்திருப்பேன்!” என்ற சிவாச்சாரி, “ராஜா, இறந்த வீரர்களுக்காக உன்னையே நீ வாட்டிக்கொள்ளாதே! அது உன் உள்ளத்திற்கும், சோழநாட்டுக்கும் பெரிய புற்றுநோயாக மாறி அழித்து விடும்.  இதிலிருந்து நீ கற்றுக்கொண்டால் போதும்.  நான் முதன் முதலாக இளஞ்சேரனைக் கொன்று, கழிவிரக்கம் அடைந்த போது நீ எனக்குக் கொடுத்த அறிவுரையை நினைவில் கொண்டு, மனத்தைத்  தேற்றிக்கொள்!” என்று ஆறுதல் கூறி முடிக்கிறான்.

இராஜாதிராஜனின் விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்கிறது.  அவற்றைச் சுண்டி எறிந்த அவன், “நீர் சொல்வதில் உண்மை நிறைந்திருக்கிறது, சிவாச்சாரியாரே! அழ அழச் சொல்பவர்கள் தான் நம் நலம் நாடும் மனிதர்கள் என்று, காலம் சென்ற அத்தையார் குந்தவைப் பிராட்டியார் சொல்வார்கள். என் கண்களில் நீரை வரவழைத்த நீர் எம் நலம் விரும்பிதான்!” என்று மேலாடையால் கண்களைத் துடைத்துக்கொள்கிறான்.

“இனி இவ்வாறு கழிவிரக்கம் ஏற்படாதபடி நடந்துக்கொள்வேன். நான் செய்யத் துணியாத எந்த ஒரு தாக்குதலையும், என் வீரர்களைச் செய்யச் சொல்ல மாட்டேன். தலைவனாக முன்னிருந்து போர் நடத்துவேன். இது உறுதி!” என்று சிவாச்சாரியின் கைகளைப் பற்றி உறுதிமொழி கூறுகிறான்.

அந்த உறுதிமொழியே அவன் பிற்காலத்தில் உயிரிழக்கக் காரணமாக அமையும் என்று தெரிந்திருந்தால் கூட அந்த உறுதி மொழியைக் கொடுப்பதிலிருந்து பின்வாங்கியிருக்க மாட்டான், அந்த சோழர் குலத்  தோன்றல்

தமிழ் இனி மெல்ல[3.11] தொடர்கிறது 

அரிசோனா மகாதேவன் 
                                   

“ ஏ சந்திரை. நீ மாமன் பேச்சை கேட்கும். இல்லுக்குப் போ. இல்லாதுகூடா ஈ புருஷனோட போ! பேச்சைக் கேட்காத பெண்குட்டிகள் எனிக்கு வேண்டா.” என்று உறுமினார் தம்பிரான்.

“அம்மா சந்திரை, நான் பார்த்துக் கொள்கிறேன்.  நீ உன் மாமன் சொல்லியபடி வீட்டிற்கே செல். சண்டை ஆண்கள் விவகாரம். நீ இதில் தலையிட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான் நன்று.” என்று கனிவுடன் கூறினான் காடவன்.
“நிலா சேச்சி ஒரு குஞ்சுக்கு அம்மையாகப் போகுன்னதானு. ஈ சமயத்தில் நான் நில சேச்சிக்குத் துணையா இருக்கும்.” என்றபடி வீட்டிற்குள் சென்றால் சந்திரை. அங்கே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலவுமொழியைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

“சந்திரை. எனக்கு பயமா இருக்கு சந்திரை! அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆயிட்டா என்னாலே தாங்க முடியாது.” என்று விம்மினாள் நிலவுமொழி. அவளை இதமாகத் தட்டிக் கொடுத்தாள் சந்திரை.

“நிங்ஙள் சரணம் அடைஞ்சா நல்லதானு. நூறு ஆள்காரங்க இன்னும் அஞ்சு நிமிஷத்தில் இவிட வந்து சேரும்.” என்று மிரட்டிப் பார்த்தார் தம்பிரான்
.
“தம்பிரான், நான் உங்கள் இல்லில் உணவு உண்டிருக்கிறேன். உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்று சொல்வார்கள்  ஆகவே உமது உயிரை எடுக்க எனக்கு மனம் வரவில்லை.  நீர் தப்பித்துச் சென்றுவிடும். நானும் என் மனைவியும் இவ்விடத்திலிருந்து சென்று விடுகிறோம்.  அதற்குப் பிறகு நான் தப்பிப்பதும், மாள்வதும் சேர வீரர்கள் கையில் இருக்கும், உம்மிடம் இருக்காது.” என்று புலியாக உறுமினான் காடவன்.

“எனிக்கி சேரமானிட ஆக்ஞைதான் முக்யம்.” என்று தன்னுடைய சுருள் கத்தியைச் சுழற்றக் கையெடுத்தார் தம்பிரான். உடனே தம்பிரானின் புஜத்தில் ஒரு அம்பு பாயவே, அவரது சுருள் கத்தி கீழே விழுந்தது. உடனே அவருடைய மூன்று ஆள்காரர்களும் தத்தம் கத்தியை உறுவினார்கள்.  அடுத்த கணமே அவர்களது மார்பை சோழ வீரர்களின் அம்புகள் துளைத்தன. அவர்களும் மண்ணில் வீழ்ந்தனர்.
தம்பிரான் வலியில் துடித்தார்.  அவரருகில் சென்று அவரது கையில் தைத்திருக்கும் அம்பைப் பிடுங்கி எறிந்த காடவன், அவரை மெல்ல வீட்டிற்குள் இழுத்து வந்தான்.

வீட்டிற்குள் வந்ததும், “என்ன ஷமிக்கணும். ஆள்காரங்க முன்னால் நான் உங்க பக்கம்னு காட்டிக்க ஏலலே!” என்று வலியுடன் கூறினார் தம்பிரான்.

“அது எனக்கும் தெரியும். தேவையில்லாமல் உங்களை கண்டபடி பேசவேண்டி வந்து விட்டது.  காயத்தில் குருதி பெருகுகிறதே!” என்று அம்பு தைத்த இடத்தை அழுத்திப் பிடித்தான். சோழ வீரர்கள் அவரது காயத்திற்கு பச்சிலை வைத்துக் கட்டுப் போட்டார்கள்.

சந்திரைக்கு ஒன்றுமே புரியவில்லை.

காடவன் விளக்கினான். “முதலில் தம்பிரான் நிலவரி விவரங்களை சேரமான் சொல்லியபடி மறைத்துத்தான் வந்தார்.  நான் அதைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டேன். சேரமான் திறை செலுத்தாமல் இருக்க முடிவு செய்து விடதாயும், என்னைச் சிறைப் பிடித்து, பிணைக் கைதி ஆக்கி, என் விடுதலைக்கு சோழநாட்டிலிருந்து ஈடு கேட்க முடிவு செய்திருப்பதாகவும் தம்புரான் எனக்கு விளக்கினார். கூட வந்த ஆள்காரர்கள் சேரமானின் ஒற்றர்கள். எனவே அவர்களுக்காகத்தான் இந்த நாடகம்.   அதனால்தான் தம்பிரான் சந்திரையை இல்லிற்குப் போகச் சொன்னார்.  நீதான் விஷயத்தைப் பெரிதாக்கி விட்டாய், சந்திரை! அதனால்தான் தம்பிரான் மேல் அம்பு தைக்க நேர்ந்தது.  நல்லவேளை, மெதுவாக எய்ததால், அது ஆழமாகப் பாயவில்லை!”
“சந்திரை, நீ சோழராஜாவையும், அவர் பார்யாளையும் நம்மட இல்லுக்கு இரகசியமா கூட்டிப் போய்க்கோ.  இவிடம் நடந்த யுத்தத்தில் நம்மட ஆள்காரங்கள் மரிச்ச சேதியைச் சொல்லான் வேண்டி, ஞான் சேரமான் அரண்மனைக்குப் போகும்.” என்று அவர்களை அனுப்பி வைத்தார் தம்பிரான்…

…தன்னை அவர்கள் இல்லிற்கு அனுப்பிவிட்டு, சோழர்களுக்கு விவரம் தெரிவிப்பதற்காக வேண்டி, காடவன் தொண்டை நாட்டிற்குச் சென்று விட்டால், அன்றிலிருந்து தம்பிரானின் இல்லில் மறைவாகவே இருந்து வருகிறாள் நிலவுமொழி.  எப்போது அவன் திரும்பி வந்து தன்னைக் கூட்டிச் செல்வானோ என்று ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.
                                                              *** *** ***
                                                        அத்தியாயம் 9
  வடபெண்ணை ஆற்றங்கரை, விக்கிரம சிம்மபுரி
                        காளயுக்தி, மாசி 13 - பிப்ரவரி 28, 1019
சில்லாய்ப்பு சிவராத்திரியுடன் நின்று விடும்!” என்னும் பழமொழியை உறுதி செய்வது போல பனி பெய்வது நிற்க ஆரம்பித்திருக்கிறது. வடபெண்ணை ஆற்றின் தென்கரையில் தொண்டை மண்டலத்தின் வட எல்லையில் அமைந்திருக்கும் விக்கரமசிம்மபுரி3 தெலுங்கு பேசும் ஆந்திரத்திற்கும், தமிழ் கூறும் மாநிலத்திற்கும் பாலமாய் இருந்து வருகிறது.

தொல்காப்பியர் “வடவேங்கட முதல் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தமது தொல்காப்பியத்தில் குறித்திருந்தாலும், விக்கிரம - சிம்மபுரிவரை தமிழ் அறியப்பட்டு வருகிறது.  இராஜராஜரின் தமிழ்த் திருப்பணித் துவக்கத்தால் அங்கு சென்ற தமிழாசிரியர்களும், அரசு அலுவலர்களும் தமிழைப் பேசி, தமிழைப் பரப்பி வந்த காரணத்தால் அரசுத் தொடர்புள்ள அனைவருமே அப்பகுதியில் தமிழை அறிந்து இருக்கின்றனர்.

மாலையில் வெண்ணாற்றில் உடற்சூடு தீரும்வரை நன்கு நீந்திக் குளித்துவிட்டு, மாலை வழிபாட்டை முடித்து விட்டுக் கரையேறுகிறான் சிவாச்சாரி. அவனுக்காகக் கரையில் காத்துக் கொண்டு இருக்கிறார். ஈராயிரவன் பல்லவராயர்.

“என்ன சிவாச்சாரியாரே! வெகுநேரமாக மாலை வழிபாட்டைச் செய்து கொண்டு இருக்கிறீர்களே! கதிரவனும் சாய்ந்து விட்டானே! அடுத்தபடி வயிற்றைக் கவனிக்க வேண்டாமா?” என்று தனக்கே உரித்தான வயிற்றுக் கவலையைத் தெரிவிக்கிறார்.

“மனம் சரியாக இல்லை பல்லவராயரே! அதனால்தான் எம்பெருமானிடம் முறையிட்டுக் கொண்டேன்!” என்று பதிலளிக்கிறாள் சிவாச்சாரி.

“உமக்கா மனம் சரியில்லை? அதிசயமாக இருக்கிறதே! கோப்பரகேசரியாரின் மருமகன் நீர்! இளம் வயதிலேயே திரிபுவனச் சக்கரவர்த்திகள் உம்மைத் தமது திருப்பணி ஆலோசகராக நியமித்ததோடு மட்டுமல்லாமல், சோழ சாம்ராஜ்ஜியத்தின் திருமந்திர ஓலைநாயகமாகவும் ஆக்கினார்.  சோழநாடு முழுவதும் உம்மை மதிக்கிறார்கள்.  அப்படி இருக்கையில் உமக்கு மனம் எப்படி சரியில்லாமல் இருக்கக் கூடும்? உம்மைவிட மிகவும வயதானவன் நான். உமக்குப் பெரிய தமையன் என்று நினைத்து என்னிடம் உமது மனக்கவலையைச் சொல்லுமே! உமது மனச்சுமை குறையுமே!” என்று அக்கரையுடன் கேட்கிறார் பல்லவராயர்.

“பதவிகளால் மனம் நிறைந்துவிடாது பல்லவராயரே! அவற்றுடன் பொறுப்புகளும் நிறைய வந்து சேருகின்றன. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு முக்கியமான பொறுப்பை நிறைவேற்ற முற்படும்போது இன்னொரு முக்கியப் பொறுப்பைப் பின்தள்ள வேண்டியிருக்கிறது. அதுவாவது சரி. சில போது ஒன்றை நிறைவேற்றினால் இன்னொன்று முழுமையாடையாது போகும் என்றுதான் மனது அலட்டிக் கொள்கிறது. நிறை பதவிகளைச் சுமந்து கொண்டு ஒரு பொறுப்பையும் மனநிறைவுடன் முழுமையாகச் செய்ய
3
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை விக்கிரமசிம்மபுரி என்று அழைக்கப்பட்டு வந்தது. தொண்டை மண்டலத்தில் எல்லையில் வடபெண்ணை ஆற்றின் கரையில் இருந்த அவ்வூர் பல்லவர்களாலும், பின்பு சோழர்களாலும், அதற்கு பிறகு தெலுங்குச் சோடர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது.

இயலாது போவதுதான் சுமையாக அழுத்துவதோடு மட்டுமல்லாமல் அரித்தும் எடுக்கிறது.” என்று பதில் வருகிறது.

“அதென்ன அப்படிச் சொல்லிவிட்டீர்? சோழநாட்டில் எல்லோரும் உமது பணியைப் பாராட்டித்தானே பேசுகிறார்கள்? எந்தப் பணியைக் கொடுத்தாலும் அதைச் சிறப்பாக நிறைவேற்றுபவர், இவ்வளவு பதவிகளைச் சுமந்தாலும் சிறிதும் தலைக்கனம் அற்றவர், எளிமையான வாழ்க்கை நடத்துபவர், தனக்கு என்று சுயநலமாகச் செயல்படாது சோழநாட்டிற்காகவும், கோப்பரகேசரியாரின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடப்பவர் என்ற நற்பெயரை ஈட்டியிருக்கிறீரே! அப்படி இருந்தும் பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்ற இயலாது போகுமோ என்று ஏன் நீர் வருந்துவதுதான் எனக்குப் புரியவில்லை. நான் ஒரு போர்வீரன் சிவாச்சாரியாரே! மனதைப் படிக்கும் வித்தை பயிலாதவன். சற்று விளக்கித்தான் சொல்லுமேன்!” என்று சிவாச்சாரி சொன்னதை நம்பாதவாறு கேட்கிறார் பல்லவராயர்.

“ சில சமயம் எதையும் உடைத்துப் பேச இயலாது பல்லவராயரே! உங்களைப் போன்று நானும் ஒரு போர்வீரனாக இருந்து விட்டாலோ, அல்லது கோவிலில் இறைவனை அர்ச்சிக்கும் சிவாச்சாரியின் பணியில் இருந்திருந்தாலோ ஒருவேளை அப்படிப்பட்ட நிம்மதி கிடைத்திருக்குமோ என்னவோ? என்னிடம் இருக்கும் ஒவ்வொரு பொறுப்பும் என்னை ஒவ்வொரு பக்கமும் பிடித்து இருக்கின்றன. அதனால் என் மனது ஒவ்வாத செயல்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது போகட்டும். இப்பொழுது மனது ஒவ்வாத செயல்களைச் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அது போகட்டும் இப்பொழுது என் மனதை வாட்டுவது..” என்று சற்று நிறுத்திய சிவாச்சாரி, நான் சொன்ன சொல்லுக்காக சேரநாட்டிற்குச் சென்ற காடவராயன், அவன் மனைவியான நிலவுமொழியின் கதி என்ன ஆயிற்று என்பது தான்.

“சேரநாட்டிற்குப் படையெடுத்துச் சென்ற இளவரசர் ஆளவந்தானிடமிருந்து தகவல் நேராக கோப்பரகேசரியாருக்குச் செல்வதால் அவ்விருவரைப் பற்றியும் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாகத் தகவர் எனக்கு வரவில்லை. ஜெயங்கொண்ட சோழபுரத்தில் கோவிலின் கட்டுமானப் பணிகளை விரைவு படுத்துமாறு பணித்துவிட்டு, அதைக் கவனித்துக்கொண்டிருந்த என்னைத் திடுதிப்பென்று “வேங்கை நாட்டிற்குச் செல்! இராஜேந்திர சோழபுரத்தில்4 தண்டூன்றி இருக்கும் நமது படைகளுடன் வடமண்டலத் தண்டநாயகருடன் சேர்ந்து வெங்கிக்குப் படைகளை நடத்திச் சென்று வேங்கை நாட்டு அரியணையை நமது கைமீறாமல் பார்த்துக்கொள். யாருக்கும் எதற்காகவும் பணிவு காட்ட வேண்டாம்.  நாம் உமக்கும் தகவல் அனுப்பும் வரை அங்கு இராஜராஜ நரேந்திரனைக் கவனித்துக்கொள்! என்று அனுப்பிய கோப்பரகேசரியார். உங்களிடம், காஞ்சியில் உள்ள படைகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு விக்கிரம சிம்மபுரி சென்று, மேற்குத் தண்டநாயகரின் படைகள் வரும்வரை காத்திரு!” என்றும் சொல்லியதின் பொருள்தான் எனக்கு விளங்கவில்லை. இளவல் இராஜாதிராஜரையும் மதுரைக்கு அனுப்பி விட்டார். அவரை அதைப் பற்றிக் கேட்டதற்கு…” என்றவன் அதற்குமேலே தொடராமல் நிறுத்தி விடுகிறான்.

“கேட்டதற்கு என்ன சொன்னார் கோப்பரகேசரியார்?” என்று மேலும் சொல்லும்படி அவனை ஊக்குவிக்கிறார் பல்லவராயர்.

தேவைக்கு மேலே பேசிவிட்டோமோ என்று மெல்ல நாக்கைக் கடித்துக் கொண்ட சிவாச்சாரி, “கோப்பரகேசரியாரைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே பல்லவராயரே! சிலசமயம் அவர் மனதில் இருப்பதைப் புரிந்து கொள்ள யாரால் இயலும்? ஏதோ பெரிய திட்டத்திற்குத்தான் பின்னல்களைப் போடுகிறார் என்று நினைக்கிறேன்.” என்கிறான்.

“நான் போர்வீரன்தான் சிவாச்சாரியாரே! மனோதத்துவம் தெரியாதவன்தான்.  ஆனால் யார் மழுப்புகிறார்கள் என்று எனக்குத் தெரியாதா? உமக்குச் சொல்ல விருப்பமில்லாது போனால் நான் மேற்கொண்டு கேட்கவில்லை. விடுதி வந்துவிட்டது.  நல்ல சாப்பாட்டின் மணம் மூக்கைத் துளைக்கிறது. நன்றாக வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கும். உமது கவலைகள் பறந்து விடும்!” என்று சிரித்தபடி நடக்கிறார் பல்லவராயர்.

“இவரைப் போலக் கவலைப்படாமல் இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? போர், அதற்குப் பிறகு உணவு - இந்த இரண்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப் படாமல்

எப்பொழுதும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்!” என்று நினைத்துக்கொண்ட சிவாச்சாரி, “பல்லவராயரே! உங்களை மாதிரி இருந்து விட்டால் கவலை அருகில் வரக்கூட அஞ்சுமே! அந்தக் கலையை எனக்குக் கற்றுக் கொடுங்களேன்!” என்று அவரை புகழ்கிறான்.

“சிவாச்சாரியாரே! உம் மனதில் இழையோடும் எண்ணங்களை மறைப்பதில் வல்லவர் நீர்! ஏதோ உம்மையும் அறியாமல் என்னிடம் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொண்டீரா, அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகச் சிறிது அதைக் கோடி காட்டினீரா, நானறியேன். இருப்பினும் உமது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிடுகிறேன். எந்த வேலையைப் பற்றியும் கவலைப் பட்டு மட்டுமே அதை நிறைவேற்ற முடியுமா? ஆகவேதான் நான் எதற்கும் கவலைப் படுவதே கிடையாது. எல்லாவற்றையும் நான் வழிபடும் ஏகாம்பரநாதனிடம் விட்டுவிட்டு எனது சக்திக்கு இயன்றபடி முழுமனதுடன் செய்து விடுகிறேன்.  எனது ஒரே கவலை எனக்குள்ளேயே இருந்து  கொண்டு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் பசித் தீக்கு எப்பொழுது ஆகுதி செய்வோம் என்பது தான்!” என்று அட்டகாசமாகச் செிரிக்கிறார்.

அவரது சிரிப்பில் கலந்து கொண்டு அவருடன் நடக்கிறான் சிவாச்சாரி. விடுதியில் பசியாறிவிட்டுப் படுத்ததும் அவனது மனம் தனக்கும் இராஜேந்திரனுக்கும்  மூன்று திங்களுக்கு முன்னர் இடையில் நடந்த விவாதத்தை அசைப்போட்டுப் பார்க்கிறது…

….சேரநாட்டுக்கு ஆளவந்தானைப் படையெடுத்துச் செல்லும்படி அனுப்பிவிட்டு, அவனையும் இராஜாதிராஜனையும் இருத்திக் கொண்டுவிட்டுப் பேச ஆரம்பித்தான் இராஜேந்திரன்.

“சிவாச்சாரியாரே! நான் முன்பே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். எனது முப்பபாட் டனாருக்கும் முப்பாட்டனார் விஜயாலய சோழர் அடிக்கல் நாட்டிய சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு எனது தந்தையார் விரிவு படுத்த மிகப் பெரிய அடித்தளம் இட்டார். அதற்கு மேல் ஒரு பெரிய மாளிகையைக் கட்டவேண்டும்.  இல்லாது போனால், இந்த இராஜேந்திரன் ஒரு சாதாரணமான அரசனாகத்தான் ஆகிவிடுவான். வரலாறு என் முப்பாட்டனாரையும், என் தந்தையாரையும் போற்றும் அளவுக்கு என்னைப் போற்றாது.  அவர்களுக்குக் கிடைக்கப் போகும் மரபுப் பெருமை எனக்குக் கிட்டாது. எனது. வழித்தோன்றலான இராஜாதிராஜனுக்கும், அவனது சந்ததியாருக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்காது போய்விடுவேன்.  எனவேதான் நான் கண்டு கொண்டிருக்கும் பெரிய கனவை நனவாக்க விரும்புகிறேன். எந்தத் தமிழ் மன்னனும் செய்யாத அளவுக்குத்  தமிழ்ப் பேரரசை பெரிதாக்க விரும்புகிறேன்.

“ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் என்று பாண்டியனையும், இமயவரம்பன் என்று நெடுஞ்சேரலாதனையும், மதுரையைத் தீயிட்டுக் கொளுத்திய பத்தினித் தெய்வத்திற்கு சிலையமைக்க இமயத்திலிருந்து வடபுல மன்னர்கள் தலையில் கல்லேற்றி வந்த என்று சேரன் செங்குட்டுவனையும் - காவியங்கள் உயர்த்திப் பாடுகின்றன.  இப்படிப் பாண்டியனும், சேரர்களும் புகழ்ந்து பாடப்படும்போது, எந்தச் சோழன் அவர்களுக்கு இணையாகப் பாடப் படுகிறான்? காவிரிக்குக் கரையமைத்த சோழரான கரிகால் பெருவளத்தான் கூட தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தானே பெரும்பெயர் பெற்றார்! இப் பரந்த பாரத பூமியில் இமயம் வரை சென்று புகழ் பெறவில்லையே! அதைப் போக்க விரும்புகிறேன் நான். சிவபெருமான் தலையில் இருந்து பகீரதனால் பூவுலகுக்குக் கொண்டு வரப்பட்ட கங்கையின் நீரைக் கொணர்ந்து, நான் புதியதாக அமைத்து வரும் பெருவுடையார் கோவிலுக்குக் குடமுழுக்கைச் செய்வித்து, சோழர்களுக்கு வையகத்தில் பேரையும் புகழையும் ஈட்ட ஆர்வமான இருக்கிறேன். என் தந்தையாருக்கும், கதிரவன் வழிவந்த எனது சோழர் பரம்பரைக்கும்5 செய்யக்கூடிய சிறந்த பணி வேறொன்றும் இல்லை.” பெருமிதத்துடன் சொல்லி முடித்தான் இராஜேந்திரன்.

அவனது கண்கள் பளிச்சிட்டன. அவனது மனக்கண் முன்பு அவனது திட்டம் நிறைவேறுவதை அவனால் காண முடிந்தது.

அப்படியே பேச்சிழந்து நின்றுவிட்டான் சிவாச்சாரி. அவனது மனம் இதற்கு எவ்வளவு செலவாகும், எத்தனை வீரர்கள் உயிரிழப்பார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தது. சோழ நாட்டின் செல்வம்  இந்தச் செயலுக்காக எவ்வளவு விரயமாகும், அதனால் இராஜராஜரின் தமிழ்த் திருப்பணி எப்படித் தடைப்படும் என்று தான் அவனுக்குத் தோன்றியது.
---------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
4தற்பொழுதைய விஜயவாடா, சோழர் காலத்தில் (பதினொன்றிலிருந்து பதிமூன்றாம் நூற்றாண்டு வரை “இராஜேந்திர சோழபுரம்” என்றும், விசயவாடை” என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
5சோழர்கள் தங்களைச் சூரியவம்சம் என்றும், பாண்டியர்கள் சந்திர வம்சம் என்றும தங்களைச் சிறப்பித்துக்கொண்டனர்.


1 comment:

  1. அன்புள்ள மகாதேவன் ஐயா அவர்களுக்கு

    வணக்கம். இந்த அத்தியாயம் வரை படித்துவிட்டேன். எனக்கு சரித்திரத்தில் ஆர்வம் அதிகம் என்றாலும் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்வதில் நான் கொஞ்சம் பலவீனம்தான். என்றாலும் கல்கியின் சரித்திரக் கதைகளைப் படிப்பதுபோன்ற நடை இலகுவான ஏராளமான செய்திகளைத் தெளித்துக்கொண்டே போகிறது. எங்கும் அலுப்பில்லை. சுவை கூடுகிறது. தொடர்ந்து வாசிக்கவும் துர்ண்டுகிறது. ஒருங்கிணைத்த தன்மையுட்ன் கதை செறிவாகச் செல்கிறது.

    நம்முடைய வரலாற்றைப் படிக்கையில் பெருமிதமாக உள்ளது. மிகவும் அழகாக கதைசொல்கிறீர்கள். எனக்கு நீண்ட நாட்களாக சரித்திர நாவல் எழுதவேண்டும் என்கிற ஆர்வம் உண்டு. இருப்பினும் அதற்கான தயக்கத்தை உங்களின் இந்த நாவல் அகற்றிவிட்டது. என்றேனும் ஒருநாள் ஒரு சரித்திர நாவலை நானும் எழுதுவேன் என்கிற ஓர் ஊக்கத்தை அளித்திருக்கிறது.

    சம்பவங்கள் வெகு சுவையாகவும் நேர்த்தியாகவும் சொல்லப்படுகின்றன.

    தொடர்ந்து வாசிப்பேன். விரைவில் தமிழுக்கு ஒரு நல்ல நாவல் வளர்ந்துகொண்டிருக்கிறது என்கிற மகிழ்ச்சி பூத்திருக்கிறது மனத்தில். இவற்றுக்கெல்லாம் அடிவேராக இருக்கிற திருமிகு வையவன் ஐயா அவர்களுக்கு என் நன்றிகள்.

    அவரின் மணல்வெளி மான்களை வாசிக்கக் காத்திருக்கிறேன்.

    சந்திப்போம் அடுத்த அத்தியாயத்தில்.

    ReplyDelete