Sunday 12 October 2014

தமிழ் இனி மெல்ல...[3.10] தொடர்கிறது

தமிழ் இனி  மெல்ல...[3.9] சென்ற பதிவின் இறுதியில்
சந்திரையின் தாயின் முகம் பெரிதாக மலர்கிறது. “நிச்சயம். நிங்ஙள் ஆள்காரங்களை அனுப்பிச்சுக் கொடுத்தால் ஞான் சந்திரையை நிங்கள் இல்லுக்கு அனுப்பி வைக்காம். இனி சந்திரை நிங்கள் அனுஜச்சியானு.” என்று பற்கள் தெரியச் சிரிக்கிறாள். அவர்கள் கிளம்பும் சமயம் பெரிய, நரைத்த முறுக்கு மீசையுடனும், அள்ளி முடிந்த நரைத்த கொண்டையுடனும், மூன்று ஆட்கள் உடன் வர ஒரு பெரியவர் வருகிறார். அவரைக் கண்டதும், “இவர்தன்னே எண்ட சேட்டன், சோமசுந்தரத் தம்புரான்.” என்று அறிமுகப் படுத்துகிறாள் சந்திரையின் தாய்.

அதே சமயம் நிலவு மொழியை அழைத்துச் செல்ல இரண்டு குதிரைகள் பூட்டிய இரதம் ஒன்று வருகிறது. அதிலிருந்து இறங்குகிறான் காடவன். காடவனைக் கண்டதும் கைகூப்பி வணங்குகிறார் சோமசுந்தரத் தம்பிரான்.

“தம்பிரானைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.” என்றபடி நிலவுமொழியையும், பொன்னம்பல ஓதுவாரையும் அறிமுகம் செய்விக்கிறான் காடவன். சிறிது நேரம் நலம் விசாரித்தபின் நிலவுமொழியும், ஓதுவாரும் அவருடன் இரதத்தில் ஏறிக் கொள்கின்றனர். இரதம் புறப்படுகிறது.

சந்திரையைக் கோவிலில் சந்தித்ததைப் பற்றியும், அவள் குடும்பத்தைப் பற்றியும் விவரிக்கிறாள் நிலவுமொழி. தனக்கு சந்திரையை மிகவும் பிடித்துவிட்டதைப் பற்றியும் தெரிவித்து விட்டு, “உங்களுக்கு சந்திரையின் அம்மானை முன்னமேயே தெரியுமா?” என்று வினவுகிறாள்.
“ஆம்!” என்று சுரத்தில்லாமல் தலையாட்டுகிறான் காடவன்.

“ஏன் உங்கள் முகம் களையில்லாமல் இருக்கிறது?” என்று கேட்கிறாள் அவள்.

“இந்த ஆண்டு சேரமான் செலுத்த வேண்டிய திரைப் பணக் கணக்கு இன்னும் சரிவரக் காண்பிக்கப் படவில்லை. சோமசுந்தரத் தம்பிரான்தான் இந்தப் பகுதிக்கு நிலவரி வசூல் செய்ய வேண்டிய கணக்காயர். இவர் கணக்கைச் சரியாகக் காட்டாமல் மென்று விழுங்குகிறார். சேரமானிடம் காண்பித்து விட்டுச் சேதி சொல்கிறேன் என்கிறார். இவரிடம் கண்டிப்பாகப் பேசவோ, இந்த வரவு செலவுக் கணக்குகளிலோ எனக்கு அவ்வளவாக மனம் செல்லவில்லை.

“சேரமானின் அமைச்சர்களுடன் கலந்து தமிழாசிரியர்கள் எத்தனை பேர் நியமிக்கப்பட வேண்டும், அரச ஏடுகளில் தமிழ் எழுதப் படுகிறதா, அரச அலுவல்கள் நல்ல, தூய தமிழில் நடத்தப்படுகிறதா, நம்பூதிரிகளின் வடமொழி ஆதிக்கம் குறைக்கப்படுகிறதா என்று கவனிக்க வேண்டும் என்பதில்தான் மனம் சென்று கொண்டிருக்கிறது. நிலவரி வேலைப்பளுவைக் குறைக்க எனக்கு உதவியாக ஒரு தலைமைக் கணக்காயரையும், அவருக்குத் துணையாக பத்துப் பதினைந்து சிறிய கணக்காயர்களையும் அனுப்பி வைக்குமாறு மூன்று மாதம் முன்னரேயே திருமந்திர ஓலைநாயகத்திற்கு மடல் அனுப்பியுள்ளேன். இன்னும் அவரிடமிருந்து பதில் வரவில்லை. பொதுவாக செயல் திறனுக்கு மறு உருவமான ஓலைநாயகம், இந்த விஷயத்தில் ஏன் பதில் தெரிவிக்காமலிருக்கிறார் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை!” என்று அலுத்துக் கொள்கிறான் காடவன்.

“தம்பிரானைப் பார்த்தால் நல்ல மனிதராகத்தானே தெரிகிறார்! அவரது தங்கைகூட என்னிடம் மிகவும் அன்பாகத்தானே பழகினார்கள்?” என்று கேட்கிறாள் நிலவுமொழி.

“நீ என் மனைவி என்று அறிந்து கொண்ட உடனேயே உன் மூலம் தனது அண்ணனின் நெருக்கடியைக் குறைக்க முனைகிறார்கள், அந்தப் பெண்மணி. நீ இன்னும் சேரநாட்டுப் பெண்களின் திறமையை அறிந்து கொள்ளவில்லை. ஆழ்ந்து சிந்தித்து, விரைவில் செயல்படுவதில் அவர்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள். சேரநாட்டில் பெரும்பாலும் சொத்துக்கள் தாய்வழி என்பது உனக்குத் தெரியாதல்லவா! பெரிய சொத்தைக் கட்டிக் காப்பதில் அவர்களுக்கு உள்ள உரிமை நம் நாட்டுப் பெண்களுக்கு இல்லை. ஆகவே இங்கு பெண்களின் கை சற்று உயர்ந்துதான் இருக்கிறது. நீ போகப் போகப் புரிந்து கொள்வாய்!” என்று பதிலளிக்கிறான் காடவன்.

“சோழ நாட்டில் குந்தவைப் பிராட்டியாருக்கு இல்லாத செல்வாக்கா? சக்கரவர்த்திகள் கூட அவர் சொல்லுக்குத் தலைசாய்ப்பதை நான் நேரில் கண்டிருக்கிறேனே!” என்று வினவுகிறாள் நிலவுமொழி.

“நிலா, பிராட்டியாரின் செல்வாக்கு திருப்பணி விஷயத்தில்தான்! அரசு நிர்வாகத்தில் அவர்கள் ஒருபொழுதும் தலையிட மாட்டார்கள். நான் எப்படிச் சொல்லி உனக்குப் புரிய வைப்பது! இங்கு பெண்களுக்கு உரிமை அதிகம். சோமசுந்தரத் தம்பிரான் இல்லில் கிட்டத்தட்ட நூற்று இருபத்தைந்து பேர் ஒன்றாகக் கூடி வாழ்கிறார்கள். இவர்கள் எல்லோருக்கும் தலைவிதான் நீ பார்த்த பெண்மணி. அந்த வீட்டில் அவர்கள் சொல்லுக்கு எதிராகப் பேசும் திறன் தம்பிரானுக்குக்கூட இல்லை. அது அவர்கள் வீட்டு விஷயம். அரசு விஷயத்தில், அதுவும் நிலவரிக் கணக்கு விஷயத்தில் தம்பிரான் எதையோ மறைக்கிறார் - அல்லது மறைக்கும்படி உத்தரவிடப் பட்டிருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.” என்று காடவன் சொன்னதும் நிலவுமொழிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

“நிலா, உன்னைப் பார்த்தவுடனேயே நீ சோழநாட்டைச் சேர்ந்த செல்வாக்குள்ள ஒரு பெண் என்பதை உடனேயே அறிந்து கொண்டுவிட்டார்கள் அந்தப் பெண்மணி. அதனால்தான் தனது மகளின் மூலம் உன்னைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பியிருக்கிறார்கள். நீ கோப்பரகேசரியாருக்கும், மறைந்த சக்ரவர்த்தி அவர்களுக்கும் மிகவும் வேண்டியவள் என்பதை எவ்வளவு சுலபமாகத் தூண்டித் துருவி அறிந்து கொண்டுவிட்டார்கள் பார்த்தாயா! அது தெரிந்தவுடன் உன் மூலமாக என்னிடம் செல்வாக்கைப் பெற முயற்சி செய்யத் துவங்கி இருக்கிறார்கள்.” என்று நிறுத்துகிறான் காடவன்.
நிலவுமொழிக்கு கலக்கமாக இருக்கிறது. தெரியாத்தனமாக புதைமண்ணில் காலைவிட்டு விட்டோமோ என்று அஞ்சுகிறாள்.
                                                                                 
அரிசோனா மகாதேவன் எழுதும் 
தமிழ் இனி  மெல்ல...[3.10] தொடர்கிறது 
அவள் முகப் போக்கைக் கவனித்த காடவன், “நிலா, நீ எதைப் பற்றியும் கவலைப் படாதே. நான் சொன்னதற்காக அவர்களுடன் தொடர்பையும் உடனே துண்டித்து விடாதே. இதுவும் ஒருவிதமான அரசியல் விளையாட்டுத்தான். உன் மூலம் அவர்கள் என்னிடம் எந்தவிதமான செல்வாக்கை விரும்புகிறார்கள் என்று அறிந்து கொள். அந்தப் பெண் சந்திரை நல்லபெண் மாதிரித்தான் தெரிகிறாள். ஆகவே அவளை உன் தோழியாக வைத்துக்கொள்.

“ஆனால் தவறிக்கூட நமது அரசு இரகசியங்களைச் சொல்லிவிடாதே! நாம் எதற்காகச் சேரநாட்டிற்கு வந்திருக்கிறோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம், எங்கு செல்லப் போகிறோம், நமக்கு யார் யாரிடம் தொடர்பு இருக்கிறது. நமக்கு யாரிடம், எந்தவிதமான செல்வாக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தாதே. சாதாரணமாக ஒரு தோழியுடன் எப்படி நடந்து கொள்வாயோ அப்படி மட்டுமே நடந்து கொள்.

“இங்கு அனைவரும் உன்னை ஒரு செல்வாக்கு மிகுந்த சோழநாட்டுப் பெண்ணாகத்தான் நோக்குவார்கள். ஆகவே உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை யாருக்கும் வெளிக்காட்டிக் கொள்ளாதே. உனக்கு எதைச் செய்வதிலோ, சொல்வதிலோ, சந்தேகம் இருந்தால் அதைச் செய்யாதே, சொல்லாதே. என்னிடம் கலந்து கொள். ஒன்றை மட்டும் நன்கு நினைவில் வைத்துக்கொள். இது சோழநாடோ, வேங்கை நாடோ அல்ல. இது நமக்குத் திரை செலுத்தும் சேரநாடு. நாம் எப்பொழுதும் விழிப்பாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். நான் சோழநாட்டு அரசுப்பிரதிநிதி, நீ பிரதிநிதியின் மனைவி.  அதை நினைவில் வைத்துக்கொள். என்று ஆறுதலாகவும், அதே சமயம் அவளை எச்சரித்தும் பேசுகிறான் காடவன்.

பொன்னம்பல ஓதுவாரோ இது ஒன்றையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் வடக்கு நாதனை மனக்கண் முன் நிறுத்தி உருகிக் கொண்டிருக்கிறார்.  தந்தையைக் கண்ணுற்ற நிலவுமொழி, தானும் அவர் மாதிரி தாமரை இலைத் தண்ணீராக இருந்துவிட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்துக் கொள்கிறாள். தன்மீது ஒரு புதுவிதமான பொறுப்பையும் சிவாச்சாரி சுமத்தியிருப்பதைப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள்.

இரதம் அவர்களது மாளிகையை அடைகிறது.

                                                         *** *** *** *** 
சோழர் அரண்மனை, ஜெயங்கொண்ட சோழபுரம்
காளயுக்தி, கார்த்திகை 16 -டிசம்பர் 2, 1018

கௌளி பலபலவென்று எச்சரிக்கிறது. அது சிவாச்சாரியனின் காதிலும் விழுகிறது. இரகசிய ஆலோசனைக் கூட்டம் நடக்க இருக்கும் பொழுது இந்தக் கௌரி எதை சொல்லி எச்சரிக்கிறது என்று நினைத்த சிவாச்சாரி, இம்மாதிரி நினைப்பதே தவறு என்றும் தனக்குள் சொல்லிக் கொள்கிறான். இன்று பெரியதாக ஏதோ ஒன்று நடக்கப் போகிறது,  அது தனது வாழ்வையே திசை திருப்பப் போகிறது என்று மட்டும் அவனது உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. எதையும் நிதானமாகவும் கவனமாகுவும் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்துக்கொள்கிறான்.

“சிவாச்சாரியாரே, ஏன் மிகவும் அனைவருக்கும் முன்னாலேயே வந்து விட்டீர்?” என்றபடி அங்கு வருகிறான்  இராஜாதிராஜன்.  அவனைக் கண்டதும் சிவாச்சாரியனின் முகம் மலர்கிறது. அருள்மொழிநங்கையை மணந்து பின்னர் இராஜாதிராஜனுக்கும் அவனுக்கும் இடையே ஒரு நல்ல நட்புப் பிணைப்பு ஏற்பட்டு வருவதை உணர்கிறான். என்னதான் இராஜேந்திரன் அவனை நண்பனாக நடத்தினாலும், அவனுடன் சோழப் பேரரசன் என்ற முறையிலேயேதான் சிவாச்சாரியனால் பழக முடிகிறது. ஆனால் இராஜாதிராஜனோ தன்னைவிடப் பதினான்கு வயது மூத்த சிவாச்சாரியை வயதுக்கு உரிய மரியாதையுடனும், தமக்கையின் கணவர் என்ற உரிமையுடனும், போர் முறைகளையும், அரசியல் நீதிகளையும் போதித்து வரும் ஆசானாகவும், தந்தையிடம் பகிர்ந்து கொள்ள இயலாத விவரங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய தோழனாகவும் - இப்படிப் பலப்பல கோணத்தில் நடத்தி வருவது நன்றாகத்தான் இருக்கிறது.

“வா, ராஜா! எந்த ஒரு இரகசிய ஆலோசனைக் கூட்டத்திற்கும் முன்னமே வருவது எனது வழக்கம்.  கோப்பரகேசரியார் எதைப் பற்றிப் பேசக் கூடக் கூடும், அதற்கு என்ன மாதிரி உள்நோக்கங்கள் இருக்கலாம், அவற்றிற்கு எத்தனை விதமான பதில்கள் இருக்கலாம்? ஒவ்வொரு பதிலுக்கும் அவர், எத்தனை விதமான கேள்விகளைத் தொடுக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டிருப்பேன்.  சுருக்கமாகச் சொன்னால் இக்கூட்டங்களில் கலந்து கொள்வது சதுரங்கம் விளையாடுவது போலத்தான். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எனவே, அமைதியான இச் சூழ்நிலை எனக்கு அஞ்சனமாக இருக்கிறது.” என்று விளக்குகிறான் சிவாச்சாரி

மற்றவர்கள் முன்பு இராஜாதிராஜனை அரசனுக்குரிய மரியாதையுடன் விளித்தாலும், அவன் கேட்டுக் கொண்டபடி தனிமையில் அவனை ஒருமையில் அழைத்து வருகிறான் சிவாச்சாரி.

“சிவாச்சாரியாரே! எப்பொழுதும் இப்படி சோழநாட்டைப் பற்றியும், எனது தந்தையின் தேவைகளைப் பற்றியுமே சிந்தனை செய்து கொண்டிருக்கிறீரே! எப்பொழுதாவது என் தமக்கையைப் பற்றியோ, உமது மக்களைப் பற்றியோ நீர் சிந்தனை செய்வதுண்டா? போன தடவை தமக்கையாரைப் பார்த்துப் பேசிய பொழுது நீர் அவளுடன் நேராகப் பேசி மாதக் கணக்காகி விட்டது என்று வருத்தப்பட்டாள்.” என்று கேட்கிறான் இராஜாதிராஜன். அவன் குரல் சிறிது கடுமையாக இருந்தாலும், கண்களில் குறும்பு தாண்டவமாடுகிறது.

“எப்பொழுது கருவூரார் என்னை கோப்பரகேசரியாருக்குப் பணியாளராகும்படி பணித்தாரோ, அப்பொழுதே நான் என்னைப் பற்றியும், எனது குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்பதை விட்டுவிட்டேன்., ராஜா!”

சிவாச்சாரியனின் குரலில் இருப்பது குறும்பா அல்லது மெய்ம்மையா என்று உணர முடியாது குழம்பிய இராஜாதிராஜன், “அது போகட்டும். உம்மிடம் நானம் ஒன்று கேட்க வேண்டும் என்று ஒரு ஆண்டுக்கும் மேலாக நினைத்தேன். அதற்கு வாய்ப்பு கிடைக்காமலே போய்விட்டது. ஆலோசனைக் கூட்டம் ஆரம்பிக்க இன்னும் அரை நாழிகை இருக்கிறதல்லவா. அதற்குள் என் கேள்விக்கு உம்மால் விளக்கம் தர இயலும் என்று தான் ஓடோடியும் வந்தேன்.” என்கிறான்.

“என்னால் முடிந்த விளக்கத்தைத் தர நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்”. என்று சிவாச்சாரி சொன்னதும், சுற்றுமுற்றும் திரும்பி பார்த்துவிட்டு, “கடந்த ஆண்டு இலங்கையில் பதிமூவாயிரம் சோழ வீரர்களைக் காவு கொடுத்து பாண்டியரின் பரம்பரைச் சொத்தை நான் கைப்பற்றினேன். அதற்குக் காரணம் தந்தையார் தோல்வி என்ற சொல்லை என்றும் ஒப்புக் கொள்ளாமல் இருப்பது தான். அன்று நான் வெற்றி பெறாதிருந்தால் இன்று சோழ இளவரசன் ஆகியிருக்க மாட்டேன்.

“இருப்பினும் என் நெஞ்சை அத்தனை வீரர்களின் சாவு இன்றும் அரித்துக் கொண்டு தான் இருக்கிறது. போரில் வீரர்கள் மாள்வது இயல்புதான்.  ஆயினும் இத்தனை வீரர்கள் மாள்வதை நான் தடுத்திருக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை கிடைக்கா விட்டால் என் தலையே வெடித்து விடும் போல இருக்கிறது. போர் நடந்த இடத்தையும், அச் சுரங்க விழிகளையும் நீர் பின்பு பார்வையிட்டு இருக்கிறீர். நீராக இருந்தால் எப்படி அப்போரை நடத்தி இருப்பீர்? சிறிதும் இனிப்புப் பூச்சுப் பூசாமல் எனக்கு பதில் சொல்லும்” என்று மெல்லிய குரலில் கேட்கிறான். இராஜாதிராஜன்.

                                                 *** *** *** ***
                                             அத்தியாயம் 8
      சோழர் அரண்மனை, ஜெயங்கொண்ட சோழபுரம்
                      காளயுக்தி, கார்த்திகை 16 - டிசம்பர் 2, 1018

சற்று நேரம் வாளாவியிருந்த சிவாச்சாரி தொண்டையைச் செருமிக் கொண்டு மெல்லிய குரலில் பேசத் துவங்குகிறான். “ராஜா, ஒரு போரில் வெற்றி மட்டும் முக்கியமல்ல. அந்த வெற்றியை எப்படி அடைகிறோம் என்பது அதைவிட முக்கியமானது.  வெற்றிகள் பலவிதம் - அவற்றில் சாலச்சிறந்தது போரே செய்யாமல் அடையும் வெற்றி. எதிரிகளைக் குழப்பி, அவர்களது படைகளின் மனத் திண்மையையும், கட்டுப்பாடையும் இழக்கச் செய்து, போரே நடத்தாமல் பணியச் செய்வது தான் அது. அதனால் செல்வம் கிட்டும். அப்படிச் செய்வதற்கு படை நடத்துவோர் சிறந்த ராஜதந்திரியாகவும் இருத்தல் வேண்டும்.

“உனது பாட்டனார் திரிபுவனச் சக்கரவர்த்திகள் அப்படிப் பட்டவர். உனது தந்தையாரின் சீற்றத்தையும், போரில் எதிரிகளை வேரறுக்கும் திறனும் எவரையும் போரிடுமுன் தயங்கவும், சிந்திக்கவும் வைப்பதாலேயே பல மன்னர்கள் அவர் தலைமை தாங்கி வருகிறார் என்றாலே போரிடத் தயங்குகிறார்கள்.

“அதற்கடுத்தது, எதிரிகள் கூட்டு சேர்ந்து, வலிமை பெறும் முன்னரே அவர்களின் படைகளை அழித்து, அவர்கள் ஒன்று சேர்ந்து நம்மைத் தாக்கவிடாமல் செய்வது, தங்களுக்குத் துணையாக வரும் என்று எதிர்பார்க்கும் படைகள் வராவிட்டால், போரில் எதிரிகளின் மனத் திண்மை வெகுவாகக் குறைந்து விடும்.

“எல்லாவற்றிலும் கடைசியானது முற்றுகை இடுவது, இதனால், உடனடியாக வெற்றி கிடைக்காது, எனவே படைத்தலைவன் பொறுமையிழந்து பொய்க்கும் எறும்புகளாகத் தன் படைவீரர்களை தாக்குதலுக்கு அனுப்புகிறான். அதனால் அவனது படைக்கு எதிரிகளை விட மும்மடங்கு சேதம் விளைகிறது. அதுதான் உனக்கு? ஏற்பட்டது. ஐயாயிரம் பாண்டிய வீரர்களை அழிக்கக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு வீரர்களை இழக்க நேரிட்டது!”

சிவாச்சாரியனை இடைமறித்த இராஜாதிராஜன், “சிறிது பொறும், சிவாச்சாரியாரே! நான் எங்கே முற்றுகை இட்டேன்? கோட்டையும், கொத்தளங்கலும் அங்கு எங்கே இருந்தன? எலிப் பொந்து போல சிறிய சுரங்கமும், அதற்குச் செல்லும் வழிகளும் தானே இருந்தன!” என்று சற்று உரத்த குரலில் கேட்கிறான்.

அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறான் சிவாச்சாரி.

“ராஜா, சற்றுப் பொறு, ஒரு அரசனுக்கும், படைத்தலைவனுக்கும் நிறையப் பொறுமை வேண்டும், சிந்தித்துப் பார்.  முற்றுகை என்றால் ஒரு கோட்டையும், அதை வலிமைப் படுத்தும் கொத்தளங்களும் இருக்க வேண்டும் என்றா நினைத்தாய்! அல்ல, அல்ல. அந்தப் பாண்டியப் படைத் தலைவன் நிலத்திற்கு அடியில் பதினைந்து தப்படிக்குப் பதினைந்து தப்படி அளவில் கட்டியிருந்ததும் ஒரு சிறிய கற்கோட்டைதான்.  அதனைச் சுற்றிச் சுற்றி வந்த சுரங்கப் பாதைகளும், அவைகளை ஒன்றோடொன்று பிணைத்த சுரங்க அறைகளும், அவன் அமைத்த அரண்களே ஆகும். நன்கு கவனித்துப் பார்த்தால், வலுவாகத் தாக்க இயலாத அளவுக்கு, சுரங்க வழிகளைச்  சிறியதாக அமைத்திருந்தது புலப்பட்டிருக்கும்.

“நீ அனுப்பிய சோழ வீரர்கள் எறும்புக் கூட்டமாகத்தானே அந்த சுரங்கத்திற்குள் நுழைந்தார்கள்! இன்னும் ஒன்று, அங்கிருந்த பாண்டிய வீரர்கள் அனைவரும் சரணடைவது ஒரு தேர்வுரிமையே இல்லை என்பதைப் புரிந்துகொண்டு இருந்ததால், தாங்கள் உயிருடன் தப்பப் போவதில்லை என்பதையும் நன்றாகவே அறிந்து கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட போர்வீரர்கள் சாதாரணப் போர்வீரர்களைவிட மிக்க வலிமையானவர்கள், அவர்களின் எண்ணிக்கையை சாதாரண வீரர்களைவிட மும்மடங்கு அதிகமாகக் கணிக்க வேண்டும் என்று சீனப் போர் அறிஞர் சுன் சூ உரைத்திருக்கிறார்.  நான் இதுவரை பேற்கோள் காட்டியதும் அவரது போர்த் தந்திர நூலில் இருந்து தான்.  ஆகவே வெற்றி பெற வேண்டும் என்ற அவசரத்தாலும், பரபரப்பாலும் தேவையின்றி பல்லாயிரக் கணக்கான சோழ வீரர்கள் மரணத்தைத் தழுவ நேரிட்டது என்பதை உனக்குச் சொல்லாது போனால், நான் ஒரு பொய்யனே ஆவேன்.” என்கிறான் சிவாச்சாரி.

அதைக்கேட்டதும் இராஜாதிராஜனின் முகம் இறுகுகிறது. தான் கூறும் சொற்கள் ஒவ்வொன்றும் அவனது உள்ளத்தில் பழுக்கக் காய்ச்சி எறியப்பட்ட ஈட்டிகளாகத் தாக்குகின்றன என்பது சிவாச்சாரிக்குத் தெரிந்து தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு அரசன் தனது தவறுகளைத் தெரிந்து கொண்டால்தான் அதைத் திரும்பச் செய்யமாட்டான், அதிலிருந்து கற்றுக் கொள்வான். என்று, உள்ளதை உள்ளபடி உரைக்கிறான் சிவாச்சாரி.

“நான் எப்படி அந்தப் போரை நடத்தி இருப்பேன் என்று கேட்டதால் அதையும் சொல்கிறேன். எலிப்பொந்தில் குடியிருக்கும் எலிகள் பூனைகயைக் கண்டால் வெளிவரா. புகையிட்டோ, தண்ணீரைப் பெருகவிட்டோ அவற்றை எப்படிப் கொல்வோமோ, அப்படித்தான் நான் பாண்டிய வீரர்களை அழித்திருப்பேன்.
“சுரங்கத்தில் இருப்பவர்களுக்கு முக்கியத்தேவை காற்று, அந்தக் காற்று செல்லவிடாமல் தடுத்தால் சுரங்கத்தால் உள்ளவர்கள் ஒன்று வெளியேறுவார்கள், அல்லது அங்கேயே மூச்சுத் திணறி இறந்து போவார்கள். அதற்குமுன் சுரங்கத்திலிருந்து அவர்கள் வெளியேறும் வழிகள் எங்கு இருக்கின்றன என்று ஆராய்ந்து அறிந்துகொண்டு, அங்கு நமது வீரர்களை நிறுத்தி, இருக்கின்றன என்று ஆராய்ந்து அறிந்துகொண்டு, அங்கு நமது வீரர்களை நிறுத்தி, வெளிவருபவர்களைப் பிடித்திருப்பேன், அல்லது அழித்திருப்பேன். சுரங்கத்திற்குள் சென்றிருக்க மாட்டேன்.
“இதற்கு நிறையப் பொறுமை தேவை.  ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு என்பது போலத்தான். வெற்றிக்காக நான் காத்திருப்பேன்!” என்ற சிவாச்சாரி, “ராஜா, இறந்த வீரர்களுக்காக உன்னையே நீ வாட்டிக்கொள்ளாதே! அது உன் உள்ளத்திற்கும், சோழநாட்டுக்கும் பெரிய புற்றுநோயாக மாறி அழித்து விடும்.  இதிலிருந்து நீ கற்றுக்கொண்டால் போதும்.  நான் முதன் முதலாக இளஞ்சேரனைக் கொன்று, கழிவிரக்கம் அடைந்த போது நீ எனக்குக் கொடுத்த அறிவுரையை நினைவில் கொண்டு, மனத்தைத்  தேற்றிக்கொள்!” என்று ஆறுதல் கூறி முடிக்கிறான்.

இராஜாதிராஜனின் விழிகளில் கண்ணீர் ததும்பி நிற்கிறது.  அவற்றைச் சுண்டி எறிந்த அவன், “நீர் சொல்வதில் உண்மை நிறைந்திருக்கிறது, சிவாச்சாரியாரே! அழ அழச் சொல்பவர்கள் தான் நம் நலம் நாடும் மனிதர்கள் என்று, காலம் சென்ற அத்தையார் குந்தவைப் பிராட்டியார் சொல்வார்கள். என் கண்களில் நீரை வரவழைத்த நீர் எம் நலம் விரும்பிதான்!” என்று மேலாடையால் கண்களைத் துடைத்துக்கொள்கிறான்.

“இனி இவ்வாறு கழிவிரக்கம் ஏற்படாதபடி நடந்துக்கொள்வேன். நான் செய்யத் துணியாத எந்த ஒரு தாக்குதலையும், என் வீரர்களைச் செய்யச் சொல்ல மாட்டேன். தலைவனாக முன்னிருந்து போர் நடத்துவேன். இது உறுதி!” என்று சிவாச்சாரியின் கைகளைப் பற்றி உறுதிமொழி கூறுகிறான்.


அந்த உறுதிமொழியே அவன் பிற்காலத்தில் உயிரிழக்கக் காரணமாக அமையும் என்று தெரிந்திருந்தால் கூட அந்த உறுதி மொழியைக் கொடுப்பதிலிருந்து பின்வாங்கியிருக்க மாட்டான், அந்த சோழர் குலத்  தோன்றல்.[வளரும்]

No comments:

Post a Comment