Saturday 25 October 2014

“காதல் மட்டும் வாழ்கிறது!” அணிந்துரை


முனைவர் இர.வாசுதேவன்
3, அ5/6, அருணா, 
(கவிஞர் இரவா-கபிலன்)
10 ஆவதுகுறுக்குத்தெரு     பெசண்ட்நகர்    
 சென்னை - 600 090.
                                அணிந்துரை

“காதல் மட்டும் வாழ்கிறது!” காதலின் சிறப்புத் தலைப்பு!
                                                                   

நூலின் பெயரைக் கேட்டவுடன் படிக்கவேண்டும்! என்று ஆவலைத் தூண்டியது. இந்நூலைப் படிக்கும் வாய்ப்பும் அணிந்துரை வழங்கும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது!

இந்நூலாசிரியர் ஜி.ஜே. தமிழ்ச்செல்வி. வாழ்க்கை நிகழ்வுகளைக்கவிதையாக வரைந்துள்ளார்.  கவிதைகளில் தமிழ்ப்பண்பு மணக்கிறது!
                                                                     
ஜி.ஜே. தமிழ்ச்செல்வி
பெண்ணின் தன்மையைப் போலவே கவிதையும் மென்னடைபோடுகிறது!
யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாய் ஒருவரின் நாட்குறிப்பைப்படித்தது போலிருந்தது!

இணைந்த உயிர்கள் இணைந்து மகிழ்ந்த பொழுதுகளைப் பகிர்ந்து கொள்ளவரைந்த ஓவியமாகத் தெரிந்தது!

ஆற்று மணல் அடிசுடும் போதில் ஓட்டமும் நடையுமாய் ஓடிவருவது போல் கவிதை நூலைப்படிக்க முடியவில்லை! ஆங்காங்கே நின்று இளைப்பாறும் போது கவிதை அனுபவம் நம்மோடு இணைந்துவிடுகிறது!

தென்றல் சுமந்த நள்ளிருள் நாறி நறுமணம் உயிர்ப்புடன் உலவிவருவது போல, கவிதையில் காதல் உலாவருகிறது! கட்டுக் கரும்பில் எந்தக் கணு சுவைக்கும் என்று தெரியாமல் திக்குமுக்காடும் சிற்றெறும்பாக மயங்கிச்சுவைத்தேன். காதல் கனவு காயம்பட் டிருந்தது!

“காதல் மட்டும் வாழ்கிறது”

என்னும் கவிதை அன்பின் எழுச்சியால் காதல் மாளிகையை எழுப்புகிறது! காதலுக்கு மௌனமே பொழுது! மௌனமேமொழி! மௌனமே காதலை எடுத்துரைக்கும்! என்று காதல் பாடம் நடக்கிறது!

’மௌனம் என்பது
என்னவாக இருக்கும்?
ஓசை இன்றி
மனம் பேசிக் கொள்வதோ!

வியக்க வைக்கும் வரிகள்.
“காதல் மட்டும் வாழ்கிறது!” என்னும் கவிதைச் சுருக்கம்!

  காற்று தூதனுப்பி
  கார்மேகம் சேதிசொல்லி
  நித்தம் நினைவுகளின்
  நித்திரையில் முத்தமிட்டு
  கால்கள் கடுகடுக்க
  காதம் பின்தங்கி
  இருவரும் நடந்து வந்து
 ஒருவராய்த்  தனித்து விட்டேன்!

காதலர் இணைந்தும் இயைந்தும் நடப்பது இயல்பு! இருவரும் நடந்து வந்து ஒருவராய் தனித்துவிட்டேன்! என்னும் வரிகள் காதலர் பிரிவுதெரிகிறது!
பிரிவுக்கானகாரணம்? பிரிந்தவர் எழுப்பும் குற்றச்சாட்டு? கடிச்சொல்? எதுவும் காணப்படவில்லை!

”காதல் நினைவுகள்
சுகமாக ப் பரவ
தோற்ற என்னுள்
காதல் மட்டும் வாழ்கிறது!”

காதல் கொண்டவர் தோற்றுவிட்டார்!

 வருத்தம் அவருக்கு மட்டும் வரவில்லை! அவரின் இதயத்துள் படிந்த வருத்தம் படிக்கும் போது நமக்கும் வரும்!  என்றாலும் காதலர் உள்ளத்தில் எண்ணத்தில் எழுந்த கவிதை வாழ்கிறது!

காதல் கொண்டவன் தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்தினான்? என்று சொல்லாமல் அவனின்மொழி, பார்வை, மீசை, உடலசைவு, நடை, உடலின்நிறம் போன்றவை காதல் கொண்டவளுக்கு எப்படியெல்லாம் உவப்பாக, உவகையாக, உயிர்ப்பாக இனித்தன! என்பதைக் கூறுமிடங்கள் இனிக்கின்கிறன.

காதலனைக் காணாத பொழுதெல்லாம் காதலிக்கு துன்பம் நிறைந்ததாகவே இருக்கும். அந்த காதல் வலியும் ஒரு வகையில் சுகமானதாகவே இருக்கிறது என்பதும் சுகமானது. இந்த சுகமான காதல் வலி வராமலும் இருந்திருக்கும்! ஆனால், வந்தது ஏன்? எப்படி? என்பதையும் ஒரு கவிதை தெரிவிக்கிறது!
”உன் பார்வையில் நான்
 லயிக்காமல் இருந்திருந்தால்
  என் விழியும் உனைத் தழுவி
  சுகிக்காமல் இருந்திருந்தால் ..
  நம் விரல்கள் பிணையாமல்
  இருந்திருந்தால் ..
  அலைபேசிஎண்கள்
 அறிமுகம் ஆகாமலிருந்திருந்தால்
இந்தக் காதலும்வந்திருக்காது!

 காதலைச் சுமந்து மகிழ்ந்த பெண் மனத்தில் காதல் வலியும் வந்திருக்காது! என்னேசுகம்! காதல்சுகம்!

இன்று
உன் பிரிவு தந்த
வலியின் சுகம் சுகிக்காமல் இருந்திருப்பேன்!
பிரிவும் அன்புக் காதலன் தந்தது! என்பதால், அதனையும் ஒரு சுகமாகக் கருதும் பேதை நெஞ்சில் தோன்றிய காதல் மட்டும் வாழ்கிறது!
காதலர் பேசிக் கொண்டிருக்கும் போது எப்படிப் பேசுவார்கள்? எவ்வாறு பேசுவார்கள்?

சன்னமாய்த்தான் பேசுகிறேன்!
என் காதலைப் பற்றி
எனக்குள்ளாக!
எந்தப் பட்சியின் செவியில் விழுந்ததோ!
சிறகடித்து உன்னிடம் சேர்த்து விடுகிறது!

காதலரின் காதல் பேச்சு வெளிப்படையானது இல்லை! தங்களுக்குள் தாங்களே பேசிக்கொள்வார்களாம்!

என்றாலும் ஒருவர் மனத்தில் எழுந்த காதல் செய்தியை ஒருவரிடமிருந்து மற்றொருவர்க்கு எடுத்துச்செல்லும் செயலியாகப் பட்சியின் சிறகடிப்பு நிகழ்கிறது! உண்மையான காதல் உணர்வு ஊர்ந்து வருகிறது!

காதல் கொண்ட இருவர் கருத்து ஒருமித்து மணிக்கணக்கில் மௌனமாக இருக்கும் அவர்களின் தேவைதான் என்ன?

”அருகில் இருந்திருக்கலாம்
அணைக்காவிட்டாலும்!”

காதல் என்பது உடல் பசியல்ல! உள்ளத்துஉணர்வு! அதேபோல், காதலர் கனவு காண்பதில் வல்லவர்கள்! என்று கூறும் வரிகளில்,

”தூரிகை இன்றி
தீட்டப்படுகின்றன
வண்ணக்கனவுகள்!
நீ பேசும் வார்த்தைகளில் ..!
இதுவே காதலர் சுகத்திற்குப் பறந்து செல்ல கட்டிய படிக்கட்டுகள்!
நான் சுயநலவாதிதான்!
ஒட்டு மொத்த
காதலின் குத்தகைக்காரி!
உன்னைத் தொட்ட காற்று
என் மேனி தழுவிச் சென்றால்
உன் அணைப்பை ருசிபார்த்த
உணர்வுக்குள் பயணமாகிறேன்!
என்று காதலின் மென்மையைப் பண்பை உணர்த்துகிறது!
காதல் வந்தால்
கள்ளத்தனமும்
 கள்ளமாய் வந்து
ஒட்டிக்கொள்ளும்போலும்!

என்னும் வரிகள் இவர்களின் காதல் மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டது! என்பதைக் கூறுகிறது!
இன்றோ நாளையோ
நாளை மறுதினமோ
மணப்போம்! என்று சொல்லி
பேசிய போதெல்லாம்
உன் விழிப் பார்வைகள்
கடந்து சென்ற பாதையை
பார்த்தேன்!
பாவிச் சிறுக்கிக்குப்
பாடம் புரிந்திருக்க வேண்டும்!

என்று உணர்ச்சியின் வீச்சு வெளிப்படுகிறது! காதலர்கள் மணமுடித்துக் கொள்ளவில்லை! என்பது வெளிப்படை. ஆனால், தாயாகினேன் - நீ தோள் சாய

என்னும் வரிகள் காதல் தாயாக்கியது தெரிகிறது!
நீ இல்லாத நிமிடங்கள் கானல்!
நீ இல்லாத உலகம் நரகம்!

என்று காதல் மனம் பித்தாகி இருக்கிறது! பிரிந்து சென்றவனை எங்கேயாவது ஒரே ஒரு வரியிலாவது குற்றச்சாட்டு இருக்கிறதா? என்றால் இல்லை!
அவரின் மனம் முழுவதும் காதல் மட்டும்!
வாழ்த்துகள்!
சென்னை
29.8.2014                                                                                          இர.வாசுதேவன்                                

No comments:

Post a Comment