Thursday 23 October 2014

பூதத்தாழ்வார்

                                                       
                                           
                                  
                                 பூதத்தாழ்வார்
                                                 


சோழநாடு சோறுடைத்து என்றும் சேரநாடு வேழமுடைத்து என்றும் பாண்டிநாடு முத்துடைத்து என்றும் புகழப்படுகின்றன. அதுபோல தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று நடுநாடாம் தொண்டை நாட்டை ஔவையார் பாராட்டிப் பாடுகிறார்.

இத்தொண்டை நாட்டை ஆட்சி செய்தவர்களில் பல்லவ மன்னர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். அவர்களில் மிகப் புகழ்பெற்ற நரசிம்மவர்மனுக்கு ‘மாமல்லன்’ எனும் பட்டப்பெயர் உண்டு. எனவே அவனால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மாமல்லபுரம் என அழைக்கப்பட்டது.

இம்மாமல்லபுரத்தில் திருமால் பள்ளி கொண்டு காட்சி தந்து உலகிற்கு அருள்பாவிக்கிறார். ஏனைய திருத்தலங்களில் பாம்பணை மீது பள்ளி கொண்டருளும் பெருமாள் இங்கு தலத்தில் பள்ளி கொண்டருளுகிறார். எனவே இத்தலத்தைக் கடல் மல்லைத் தலசயனம் என்று கூறுவார்கள்.
                                                                          

பல்லவ மன்னன் பல சிற்பங்கள் அமைத்து கலைக் கோயிலாகக் கட்டிய இக்கடல் மல்லையில்தான் பூதத்தாழ்வார் திரு அவதாரம் செய்தார். துவாபரயுகத்தில் மல்லிகைப் புதரில் நீலோற்பலமலரில் இவர் தோன்றினார். சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் நவமி திதியில் புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் பூதத்தாழ்வார் இம்மண்ணுலகில் எழுந்தருளினார்.

மேலும் திருமாலின் ஐந்து படைகளில் ஒன்றான கௌமோதகி எனும் கதாயுதத்தின் அம்சமாக பூதத்தாழ்வார் தோன்றினார்.

பிறந்தது முதலே அவர் மனம் இம்மண்ணுலக வாழ்வை நாடவில்லை. எம்பெருமானை எண்ணி எண்ணி அப்பெருமானின் திருவடி ஞானம் பெறுவதையே அவரது உள்ளம் விரும்பியது. தன்மனக் கோயிலிலேயே அவர் பெருமாளுக்குத் தனி இடம் கொடுத்தார். இறைவனை ஞான நீரால் திருமஞ்சனம் செய்தார். அவரது திருப்பாதங்களில் பூதத்தாழ்வார் அன்பாகிய மலரை இட்டு ஆராதனை செய்தார்.

உலகுண்ட பெருவாயான அப்பெருமாளுக்குச் செந்தமிழ்ப்பாக்களால் பாமாலை சார்த்தி மகிழ்ந்தார். அதனால் “யானே நலம் உடையேன் ஏழ்பிறப்பும் தவம் உடையேன்” என்று அகமகிழ்ச்சி கொண்டார்.

பூதத்தாழ்வாரைக் கண்டவர்கள் இவர் நம்மைப் போன்றவர் அல்லர். தெய்வப் பிறப்பினர் என்று தொழுதனர். “நெடியோனாகிய திருமாலை வணங்கி அருள் பெற்றால் வேறு ஏதும் வேண்டாம்” எனும் மனம் பெற்ற பூதத்தாழ்வார் “திருமாலைச் செங்கண் நெடியானை எங்கள் பெருமானைக் கை கூப்பி வணங்கப் பெற்றேனாதலின் யான் இனி ஒரு குடைக்கீழ் மண்ணுலகை ஆள்வதையும் வேண்டேன், தேவர்கட்கும் தேவனாய்த் தேவருலகை ஆள்வதையும் வேண்டேன்” என்று பாடுவார்.
                                                        
இப்பெருமகனார் திருவரங்கம், தஞ்சை, திருக்குடந்தை, திருமாலிருஞ் சோலை, திருக்கோட்டியூர், திருத்தண்கால், திருக்கோவிலூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருவேங்கடம், திருப்பாற்கடல் ஆகிய திருத்தலங்களைப் பாடி அருள் செய்துள்ளார்.

“பூதத்தான் தாளிணைகள் பூதலத்தில் வாழியே”

No comments:

Post a Comment