Saturday 25 October 2014

தமிழ் இனி மெல்ல [3:14] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [3:13]சென்ற பதிவின் இறுதியில் 
இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் அவா? என்ன நினைத்தாரோ அதுதான் நடந்து வருகிறது.  இராஜராஜ நரேந்திரனால் சோழப் பேரரசுக்குத் தலைவலி மிகுந்ததுதான் மிச்சம்.  அவனால் சோழநாட்டின் வடகிழக்கு எல்லை காக்கப் படுவதற்குப் பதிலாக அவனது நாட்டைக் காக்கச் சோழர்களின் படைகளும், செல்வமும் அழிந்து வருவதைக் கண்கூடாகக் கண்டு உள்ளுக்குள் வருத்தி வருகிறார்.  அவனால் இராஜேந்திர சோழருக்கும் கடந்த இருபத்தி நான்கு ஆண்டுகளாக மனவலிதான் பெருகிவருகிறது என்பதை அறிந்தும் அனுதாபப் படுவதைத் தவிர வேறு எதுவும் அவரால் செய்ய இயலவில்லை.

வேங்கையின் மைந்தனான இராஜேந்திரரைத் தவிர வேறு எவராலும் இத்தனை மனவலியுடன் சோழப் பேரரசின் செல்வாக்கையும், ஆற்றலையும் இந்த அளவுக்குப் பெருக்கி இருக்க இயலாது.  தன் கனவை எத்தனை மன வலிமையுடன் நனவாக்கி இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது பிரம்மராயிருக்கு இதயம் நெகழ்கிறது. முப்பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் துளிர்த்த அவர்களது நட்புதான் எப்படிப்பட்ட பெரிய ஆலமரமாக  விழுதூன்றித் தழைத்து இருக்கிறது.  என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது பிரம்மராயருக்கு இதயம் நெகிழ்கிறது.  முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் துளிர்த்த அவர்களது நட்புதான் எப்படிப்பட்டபெரிய ஆலமரமாக விழுதூன்றித் தழைத்து இருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தால் அவரது நெஞ்சம் விம்முகிறது.  இராஜேந்திரரை நிமிர்ந்து பார்த்துப் பேசவே அனைவரும் அஞ்சும் பொழுது, தன் இதயத்தில் இருப்பதைச் சற்றும் மறைக்காமல் பங்கு கொள்ளவும், அவரை இடித்துரைத்து அறிவுரை கூறவும் சோழநாட்டில் இப்பொழுது தனக்கு மட்டுமே உரிமை அளிக்கப் பட்டிருக்கிறது என்பதை நினைத்தால், அது தனது கருநாதரான கருவூரார் இட்ட பிச்சை என்றுதான் அடக்கம் அடைய வேண்டியிருக்கிறது.

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்புகிறார் பிரம்மராயர்.

“அய்யா, உடல் சூடு தணிய பசு மோர் கொண்டு வந்திருக்கிறேன்.” என்று பணிவுடன் ஒரு மண் குடுவையை நீட்டுகிறான் அவரது சமையற்காரன் சுப்பன். கடந்த பத்து ஆண்டுகளாக அவர் செல்லுமிடமெல்லாம் சென்று அவரது உணவுத் தேவையை அவன்தான் கவனித்துக் கொள்கிறான்.  அவன் நளனிடம்தான் சமையற்கலை-பயின்று வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்கிறார் பிரம்மராயர்  அவனது கைமணம் அப்படி.

குடுவையை வாங்கி அதிலிருக்கும் மோரை அருந்துகிறார் சாதாரண மோரில்கூட எதையோ கலந்து எவ்வளவு மணமுள்ளதாகச் செய்து விடுகிறான் இவன் என்று அவனை மனதிற்குள்ளேயே பாராட்டுகிறார் அவர்

தமிழ் இனி மெல்ல [3:14] தொடர்கிறது 

அரிசோனா மகாதேவன் 
-                                                                                    
“சுப்பா! நீ இல்லாது போனால் நான் பட்டினி கிடந்து விடவேண்டிதுதான்.  அப்படி என்னைக் கெடுத்து வைத்திருக்கிறாய்!” என்று அவனைச் செல்லமாகத் திட்டுவதுபோலப் பாராட்டுகிறார்.

“எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்!” என்று அவரிடமிருந்து குடுவையை வாங்கிக்கொண்டு நகர்கிறான் சுப்பையன் என்ற சுப்பன்.

“தண்டநாயகர் வந்தால் எனக்குத் தெரிவி.  நான் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.” என்று கயிற்றுக்கட்டில் சாய்ந்து கொள்கிறார்

“சுப்பா! நீ இல்லாது போனால் நான் பட்டினி கிடந்து விடவேண்டிதுதான்.  அப்படி என்னைக் கெடுத்து வைத்திருக்கிறாய்!” என்று அவனைச் செல்லமாகத் திட்டுவதுபோலப் பாராட்டுகிறார்.

“எல்லாம் தங்கள் ஆசீர்வாதம்!” என்று அவரிடமிருந்து குடுவையை வாங்கிக்கொண்டு நகர்கிறான் சுப்பையன் என்ற சுப்பன்.

“தண்டநாயகர் வந்தால் எனக்குத் தெரிவி.  நான் சற்று ஓய்வு எடுத்துக் கொள்கிறேன்.” என்று கயிற்றுக்கட்டில் சாய்ந்து கொள்கிறார் பிரம்மராயர். அவரது மனம் கடந்த இருபத்திநான்கு ஆண்டுகளில் நடந்ததை அசை போடுகிறது….

…அவருக்கும், இராஜராஜ நரேந்திரனுக்கும் வாக்குவாதம் நடந்து மூன்று மதாங்கள் கழிந்தபின் பெரும் படையுடன் வந்து சேர்ந்தார் இராஜேந்திரர். கலிங்கத்தைக் கடந்து வங்கத்திற்குச் சென்று, அங்கு அரசாளும் மகிபாலனை  வென்று கங்கைநீரைக் கொணருமாறு பிரம்மராயருக்கு ஆணையிட்டார்.  நரேந்திரனை மாளிகைக்குத் தருவித்தார்.  தனக்கு ஆதரவாகப் பேசுவார் தனது மாமன் என்று ஆவலுடன் ஓடிவந்த அவனுக்கு ஏமாற்றம்தான் காத்திருந்ததது.  எரிமலையாக வெடித்த இராஜேந்திரர், “நீ எப்பொழுது வேங்கைநாட்டை மீட்க வில்லையோ, அப்பொழுதே நாட்டு உரிமையை இழந்து விட்டாய்! உனது தந்தை உனக்கு இளவரசுப் பட்டம் கட்டாமல் இருந்த கராணம் என்ன என்று உணர்ந்து  கொண்டாயா? உன்னை நீ உணராமல் மற்றவர்கள் மீது பழி போடாதே! இருப்பினும் நீ என் தங்கையின் மகன்.  உனக்கு அம்மங்கையை மணமுடிப்பதாக வாக்கு வேறு கொடுத்திருக்கிறேன். அதனால் உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன்.  எந்த சோழ பிரம்மராயமையைப் பெருக்கிக் கொண்டு, வெற்றிவீரனாகத் திரும்பி வா.  என் மகளை உனக்கு மணமுடித்து, வேங்கைநாட்டையும் சீதனமாகத் தருகிறேன்.” என்று தன் முடிவை அறிவித்து விட்டார்.

வறு வழியின்றி பிரம்மராயருடன் கிளம்பினான் நரேந்திரன்.  வங்கம் சென்றிருக்கும் படைகள் ஆதரவின்றித் துண்டிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அவா?களுக்கு அப்பொழுது விரைந்து செய்தி அனுப்பவும், மேலைச் சளுக்கியர்களைச் சமாளிக்கவும், வேங்கை நாட்டிலேயே ஒரு பெரும்படையுடன் தங்கிவிட்டார் இராஜேந்திரர்.  கடற்படையும் வங்கத்திற்கு விரைந்தது.

வங்க அரசனான மகிபாலனைப் போரில்லாமல் பணிய வைக்கத்தான் நினைத்தார் பிரம்மராயர்.  ஆனால் சோழப் படைகளைக் குறைத்து மதிப்பிட்ட வங்க மன்னன் மகிபாலன்8 போருக்குத் துணியவே, அவனது படைகளைத் துகள்ககளாகச் சிதைத்த பிரம்மராயர், அவனையும், அவனது மனைவி மக்களையும் சிறைப்பிடித்து, அவன் தலைமீது கங்கைநீர் நிரம்பிய பொற்குடத்தை ஏற்றி, சோழநாடு திரும்பிவர கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆயின.  வங்கத்திலிருந்து வேங்கை நாட்டை அடையுமுன் அவர் காலில் விழுந்து கதறிய மகிபாலனின் மகளின் மீது இரக்கப்பட்டுத் தனது இலச்சினை உள்ள ஒரு தங்க மாலையை அவளது பாதுகாப்பிற்காகக் கொடுத்து அவளை விடுவித்து, தகுந்த துணைகளுடன் அனுப்பி வைத்தார்.

மேலைச் சளுக்கியர்கள் அச்சமயம் படையெடுத்து வரவே, மூன்று ஆண்டுகளாகச் சேரநாட்டை “சோழ கேரளன்” என்ற பட்டத்துடன் ஆண்டுவந்த தன் மூத்தமகன் மனுகுலகேசரி ஆளவந்தானை ஒரு பக்கமும், தான் இன்னொரு பக்கமுமாகக் கிடுக்கித் தாக்குதல் செய்த இராஜேந்திரருக்கு அப்போரில் வெற்றி கிட்டினாலும், ஆளவந்தான் வீரமரணம் எய்திய செய்தியும் வந்து சேர்நதது. அதையும் விழுங்கிக்கொண்டு மேலைச் சாளுக்கியர்களை அவர்களது தலைநகரான மன்னைக்கடக்கத்திற்கு அருகிலிருக்கும் கொல்லிப்பாக்கையில் அழித்தொழித்தார். தன் படைத் தலைவர்கள் அனைவரோடு மட்டுமல்லாமல் படைகளில் பெரும் பகுதியையும் இராஜேந்திரரின் சீற்றத்திற்கு இழந்த மேலைச் சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் தலைநகரை விட்டோடி ஒளிந்துகொண்டான்9

வெற்றியுடன் திரும்பிய நரேந்திரனுக்கு தன் மகள் அம்மங்கையை மணமுடித்து, துந்துபி ஆண்டு ஆவணி இரண்டாம் நாள் (ஆகஸ்ட் 16, 1022)10 அவனை வேங்கை நாட்டு மன்னாகவும் முடிசூட்டிவிட்டுச் சோழநாட்டிற்குத் திரும்பினார் இராஜேந்திரர்…

…அப்பொழுது தன்னெதிரிலேயே அம்மங்கைக்கு அவர் செய்த அறிவுரை இன்னும் பிரம்மராயர் காதில் ஒலிக்கிறது, “மகளே மங்கை! என் தங்கை செய்த தவற்றை நீயும் செய்துவிடாதே! உனக்குப் பிறக்கும் நமது தோன்றல்களைத் தமிழர்களாக வளர்த்து வா! இதற்காக எந்த உதவியையும் கேட்டுப் பெறத் தயங்காதே. பிரம்மராயர் தமிழ் ஆசிரியரை அனுப்பி வைப்பார். வேங்கை நாட்டில் தமிழர்கள் அரசாட்சி செய்ய எனக்கு நீ உதவி செய் அம்மா!”
…காடவனையும், நிலவுமொழியையும் வேங்கை நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்ற ஆவலுடன் கங்கைகொண்ட சோழபுரம் திரும்பிய பிரம்மராயரை இடிபோலத் தாக்கியது, நிலவுமொழி மகளை ஈன்றபொழுது ஏற்பட்ட குளிர் காய்ச்சலில் இவ்வுலகை விட்டு நீங்கிய செய்தி.  துடித்துப் போய்விட்டார் அவர்.  காடவனுடன் இருந்த சேரநாட்டுப் பெண் சந்திரைதான் நிலவுமொழியின் மகளைத் தன் மகளாக வளர்த்து வருவதாகவும் அறிந்து கொண்டார்.
தமிழ் கற்பிப்பதில் நிலவுமொழியைப் போலத் திறமையுள்ள ஆசிரியையை இனிமேல் காணமுடியுமா என்று கலங்கினார் அவர். சந்திரையைத் தனது கணவன் காடவன் கையில் பிடித்துக் கொடுத்து விட்டுத்தான் இறந்தாளாம் நிலவுமொழி. சந்திரை நன்றாகவே மூக்கொலி இல்லாமல், சோழநாட்டுத் தமிழைப் பேசுவதைக் கண்டு மலைத்தார் அவர்.

தனது கொள்ளுப் பேத்திக்கு “ நப்பின்னை” என்ற நற்றமிழ  வைணவப் பெயரை வைத்துவிட்டுத்தான் திருமாலின் திருவடிகளை பற்றிக்கொண்டார் சேதுராயர் என்றும் அறிந்து கொண்டார்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் பெருவுடையார் கோவிலைக் கட்டுவதிலும், கடற்படையைப் பெருக்கி, கடாரத்தையும், ஸ்ரீவிஜயத்தையும்11 கைப்பற்றுவதில் இராஜேந்திரர் கவனத்தைச் செலுத்தியதாலும், இராஜராஜ நரேந்திரன் வங்கப் போரில் அனுபவம் பெற்றிருந்தாலும், வேங்கை நாட்டைப் பற்றி அவர் அதிகக் கவனம் செலுத்தவில்லை.

வேங்கை நாட்டில் நிலவிய அமைதி ஒன்பது ஆண்டுகள் கூட நீடிக்கவில்லை. மேலைச் சளுக்கியர்கள் வேங்கை நாட்டை பிரஜோற்பத்தி (1031) வருடத்தில் தாக்கிக் கைப்பற்றி விஜயாதித்தனை அரியணையில் ஏற்றினர்.  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழித்து இராஜாதிராஜனும் பிரம்மராயரும் கலிதண்டிக்கருகில் குருதிப் புனலைப் பெருகி ஓடவிட்டு, விஜயாதித்தனையும், அவனுக்குத் துணைவந்த மேலைச் சாளுக்கியர்களை ஓட ஓட விரட்டி அடித்து, இராஜராஜ நரேந்திரனுக்கு வேங்கை நாட்டு அரியணையைத் திரும்பப் பெற்றுக் கொடுக்க வேண்டி வந்தது.

அந்தப்  போரை நடத்த இராஜாதிராஜனுக்கும், அவருக்கும் சிறிதும் விருப்பமே இல்லை. ஒரு நாட்டைக் கட்டிக் காக்கும் திறமையில்லாமல், படைகளைப் பெருக்கிக் கொள்ளாமலேயே கோதாவரிக்கு வடகரையில் பாதுகாப்பில்லலாத இடத்தில் புதியதாக இராஜமகேந்திரபுரம் என்னும் தலைநகரைக் கட்டி, நாள்களை வீணடித்த நரேந்திரனுக்காக ஏராளமான படை வீரர்களின் உயிரை பலிக்கொடுக்க வேண்டாம் இருவரும் என்று வாதாடினார்கள்.

கோதாவரிக்கு வடகரையில் இருக்கும் நகரத்தை, பருவமழைக்காலத்தில் பொங்கிப் பெருகும் வெள்ளத்தைத் தாண்டி அடைவது மிகவும் கடினம என்பதால் அதை விட்டுவிட்டு நரேந்திரனுக்கு கிருஷ்ணா நதிக்குத் தென்புரத்து நாட்டையும், விஜயாதித்தனுக்கு கிருஷ்ணா நதிக்கு வடபுரம் இருக்கும் வேங்கைநாட்டின் பாதியையும் அளித்தால் அண்ணன் தம்பிக்கிடையில் உரிமைப் போர் வராது, மேலைச் சாளுக்கியர்கள் குழப்பம் செய்ய மாட்டார்கள் என்று பிரம்மராயர் எடுத்து உரைத்தது இராஜேந்தரரின் காதில் ஏறவே இல்லை. கலிங்கத்தை கட்டுப்பாட்டில் வைக்க வேங்கை நாட்டின் வடபகுதியும் சோழப் பேரரசின் நேராட்சிக்குள் வரவேண்டும், அதற்காகக் கடற்படையை கோதவரிக்கு வடபுறம் அனுப்பலாம் என்று கூறிய இராஜேந்திரர் மேலைச் சாளுக்கியரை வெல்லாமல் அவரது முகத்தில் மீண்டும் விழிக்க வேண்டாம் என்று கடும் சொற்களைக் கூறி இருவரையும் அனுப்பிவிட்டார்.

அந்த சொற்களின் சூடு இராஜாதிராஜனை மிகவும் பாதித்தது. தான் கூடச் சென்றதுதான் அவனது புண்பட்ட நெஞ்சத்திற்கு அஞ்சனமாக அமைந்தது என்பதை நன்கு அறிந்து கொண்டார் பிரம்மராயர்.  அருள்மொழிநங்கைதான் அவர்கள் இருவரையும் போருக்குப் புறப்படுவதற்கு முன் மிகவும் தேற்றி அனுப்பினாள்.  தனது ஆற்றாமையை, மனச் சீற்றத்தை மேலைச் சளுக்கியர்பால் காட்டினான் இராஜாதிராஜன். அவனது யானை இந்திரனின் வாகனமான ஐராவதமாகவும், அவன் இந்திரனாகவும், அவனது ஆயுதங்கள் இந்திரன் ஏவிய வஜ்ராயுதமாகவும்தான் எதிரிகளை வதைத்தன.  போரின் வெற்றிக்குப் பிறகு கழிவிரக்கத்தால் மிகவும் வருந்தினான் இராஜாதிராஜன்.

“பிரம்மராயரே!” அவனும் சிவாச்சாரியனை அப்படித்தான் அழைக்க ஆரம்பித்திருந்தான்.  “இதுவரை நான் கடமைக்குத்தான் எதிரிகளைக் கொன்றேனே தவிர, அக்கொலையினால் மகிழ்ச்சி அடையவில்லை.  இந்தப் போரில் கொலை செய்வதில் எனது மனம் வெறிகலந்த மகிழ்வுற்றது.  ஒவ்வொரு வீரனும் கருதி பெருகச் சாகும் பொழுது கள்ளுண்ட மயக்கம் எனக்கு ஏற்பட்டது. இரவில் அளவில்லாமல் கள்ளுண்டு மயங்கி, காலையில் எழும்போது தோன்றும் வெறுமையும், தலையிடியும் ஏற்படுவது போன்ற ஒரு உணர்வுதான் எனக்கு மிஞ்சி இருக்கிறது.  கள்ளுண்பவன் அதற்கு அடிமையாகி விடுவது போல நானும் இக்கொலை வெறிக்கு அடிமையாகாமல் உம்மைப் போல அமைதியாக இருக்க, விருப்பு வெறுப்பற்றுச் செயல்பட எனக்கு உதவி செய்யும்!” என்று வேண்டினான்.

போர்களத்தில் கண்ணன் அர்ஜுனனுக்கு கீதாபதேசம் செய்தது போல,  பாசறையில் கீதையை எடுத்துரைத்து, இராஜாதிராஜனுக்கு மூச்சுப் பயிற்சி, மனதை ஒருமைப் படுத்துதல் இவற்றைக் கற்றுக்கொடுத்து, அவனைத் பழைய நிலைக்குத் திரும்பக் கொணர்ந்தார் பிரம்மராயர்.

தன் மகன் மறையன் அருள்மொழி போர்க்கலையில் விருப்பம் மிகக்கொண்டதால், அவனுக்கும் தன் போல போர்ப் பயிற்சி கற்பித்ததும், அவனும் சோழப் படைவீரனாகச் சேர்ந்ததும் அவருக்கு மகிழ்வாக இருந்தாலும், அவனுக்கு அரசாளும் விருப்பம் இருந்தது அந்த மகிழ்வைவெகுவாகக் குறைக்கத்தான் செய்தது.

“மகனே! உன் உடலில் சோழ அரசர் பரம்பரை இரத்தம் ஓடினாலும், நீ ஒரு அந்தணனின் மகன்தான் என்பதை என்றும் நினைவு கொள்ள வேண்டும். உன் அன்னை அரசுரிமையைத் துறக்க வேண்டும், எக்காலத்திலும் எனக்கோ, எனது வழித் தோன்றல்களுக்கோ ஒருபொழுதும் அரசுரிமை நல்கப் படக்கூடாது என்ற கோரிக்கையை உனது பாட்டனாரும், முப்பாட்டனாரும் ஏற்றுக் கொண்ட பின்னரே அவளை மணம் செய்து கொள்ளச் சம்மதித்தேன்.  எனவே, உன் மனதில் அரசனாகும் எண்ணம் வரவே கூடாது. அது இருந்தால் அதை இப்பொழுதே எரித்துப் பொசுக்கிவிடு! என்று கடுமையான அறிவுரை செய்ததும், அதைக் கேட்ட அருள்மொழி நங்கையும் அதை ஆமோதித்துப் பேசியதோடு மட்டுமல்லாமல், மறையனிடம் அவள்மீது உறுதிமொழி செய்தும் வாங்கிக் கொண்டாள்.

பதினாறு வயதிலேயே சோழப் படையில் சேர்ந்து விட்டான் மறையன் அருள்மொழி.  குதிரையேற்றத்திலும், விற்போரிலும் அவன் சிறந்து விளங்கியது பிரம்மராயருக்குப் பெருமையாக இருந்தது. இராஜேந்திரரின் கடைசி மகன் வீரனுக்கு (பிற்கால வீரராஜநே?திரன்) துணையாக விளங்கினான் அவன். வீரனுடன் சில போர்களுக்கும் சென்று தனது திறமையைக் காட்டவே, அதைப் பாராட்டிய வீரன், அவனைத் தனது குதிரைப்படைத் தலைவரில் ஒருவனாக நியமித்தான்.

தனது முதல் மனைவியின் மகள் சிவகாமியை நினைத்தால்தான் பிரம்மராயர்  செஞ்சம் கனத்தது. தமிழை நன்கு எழுதப் படிப்பதில் தேர்ச்சி பெற்று, கவிதை புனைவதில் திறமையை வளர்த்துக் கொண்டு கலைவாணியைப் போல் எழுத்தாணியும் ஓலையுமாகத் திகழ்ந்த அவளுக்குப் பதினான்கு வயதிலேயே மறை ஓதும் அந்தணர் ஒருவரை மணமுடித்து வைத்தார்.  இரண்டு ஆண்டுகளிலேயே கையில் மூன்று மாதம் நிறைந்து ஆண்குழந்தையுடன் கைம்பெண்ணாகி வீட்டிற்கு அவள் திரும்பி வந்தது அவரது இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.  வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கக் காலடி எடுத்து வைத்த அவள் இரண்டு ஆண்டுகளிலேயே வாழ்க்கையின் இன்பங்களை இனி நுகரமுடியாத நிலைமைக்குத் தள்ளப் பட்டதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவரது முதல் மனைவி பித்துப் பிடித்தவள் போலாகிவிட்டாள்.

அருள்மொழிநங்கை தான் ஒரு நங்கூரமாக அனைவருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றி அவர்களை நிலைப்படுத்தினாள்.

சிவகாமியின் மனம் ஆறுதலடைய வேண்டும், கையிலிருக்கும் குழந்தைக்காகவாவது அவள் வாழ்வில் பற்று வைக்கவேண்டும் என்று அவளுக்கு தமிழை நேரம் கிடைக்கும் போதெல்லாம் போதித்தார் பிரம்மராயர். அருள்மொழிநங்கையும், அவளுக்குத் தேவாராம், திருவாசகம் இவைகளைக் கற்பித்தாள். திருப்பணி விவரங்களைத் தங்கச் சுருளில் எழுதி வரும் அரிய பணியையும் இராஜேந்திரரின் அனுமதியுடன் அவளிடம் ஒப்படைத்தார் பிரம்மராயர்…

… கடந்த பத்து ஆண்டுகளாக திருப்பணி எழுத்தராக இருந்து வருகிறாள் சிவகாமி. தன்னைவிட இராஜேந்தரருடன் அதிக நேரம் பழகிவருகிறாள் சிவகாமி என்று அறிந்து பெருமையடைந்து வருகிறார் பிரம்மராயர்.

இராஜேந்தரருக்குத் தமிழ் ஆர்வம் அவ்வளவாக இல்லை என்ற பிரம்மராயரின் நினைப்பை மாற்றியவேள சிவகாமிதான்.

“தந்தையே, கோப்பரகேசரியார் தமிழில் கவிதை புனைய வல்லவர்12. கங்கையையும், மதியையும் சூடிய எம்பிரான் சிவபெருமான் மீது கவிதைகள் இயற்றி இருக்கிறார்.  அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்று நான் பலவாறு நான் எடுத்துச் சொல்லியும் மறுதளித்துவிட்டார்.  தங்களின் பெயரன் சிவசுப்பிமணியன் (சிவகாமியின் மகன்) அவரது கவிதைகளை மனப்பாடம் செய்து வருகிறான்.  அவற்றை பிற்காலத்தில் போற்றிப் பாதுகாக்க அது உதவும் என்று நம்புகிறேன்.” என்று ஒரு தடவை கங்கைகொண்ட சோழபுரத்தில் அவளைச் சந்தித்த போது கூறியதையும் நினைவு கூர்ந்து மகிழ்கிறார்.

தமிழில் கவிதை எழுதும் அளவு திறமை உள்ள இராஜேந்திரன் ஏன் இராஜராஜர் அளவுக்குத் தமிழைப் பரப்புவதில் முழு மனதையும் காட்டவில்லை, அல்லது வெளியில் அப்படிக் காட்டிக் கொள்வதில்லை என்று அவ்வப்பொழுது குழம்பியும்  வருகிறார்.

பாசறைக்கு வெளியில் எழும் அரவமும், ஒலிகளும் அவரை நிகழ்காலத்திற்குக் கொணர்கின்றன.

“பிரம்மராயர் களைப்பாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் தாங்கள் சந்திக்க வந்திருப்பதாகச் சொல்கிறேன்.  கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களேன்.!” என்று சுப்பையன் கெஞ்சுவதும், “நான் வேங்கை நாட்டு மன்னன், யாருக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை!” என்று பதிலுக்குத் தெலுங்கு மொழியில் இராஜராஜ நரேந்திரன் இரைவதும் பிரம்மராயரை முழு உணர்வுக்குக் கொண்டு வருகிறது.

அவசர அவசரமாக எழுந்தவர், தனது மேல்துண்டால் தோள்களைச் சுற்றிப் போர்த்திக் கொண்டு பாசறையை விட்டு வெளிவந்து, “வரவேண்டும், அரசே! தாங்கள் சொல்லியனுப்பினால் நான் தங்கள் பாசறைக்கு வந்து விட்டுப் போகிறேன். என்னைத் தேடிக்கொண்டு தாங்கள் வரவேண்டுமா!” என்று நரேந்திரனை வரவேற்கிறார்.

“வரவேற்பு இருக்கட்டும். இன்னும் நாம் கிருஷ்ணாவுக்கு தென்கரையில் இருக்கிறோம்! எப்பொழுது இராஜமகேந்திரபுரத்தை மீட்கப் பொகிறோம்? உதவிக்கு இன்னும் தெற்கிலிருந்து படைகள் வந்து சேரவில்லை, என்ன காரணம்? எனக்கு வரவர மதிப்பு குறைந்து விட்டது.  எனது மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை, எழுபது வயதுக்கு மேலாகிவிட்டது. அவரால் வந்து போரிட இயலாது. ஆனால் எனக்கு உதவியாகத் திறமையான, துடிப்புள்ள இளைஞர்கள் யாரையும் அனுப்பாமல் ஒரு முதியவரை அனுப்பி இருக்கிறார் எனது மாமனார். நான் நாட்டை இழந்து மாரடிக்க வேண்டி இருக்கிறது. இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம்?” என்று உரக்கப் பொரிந்து தள்ளுகிறான்.

என்றுமே அவனிடம் அமைதியாக இருந்து பழகிய பிரம்மராயரை இதுவரை இல்லாத வேகம் வந்து பிடித்துக் கொள்கிறது. கண்மண் தெரியாத, இனம் புரியாத சினம் வெடிக்கிறது.

“நரேந்திரா, உள்ளே வா!” என்று பல்லைக் கடித்துக் கொண்டே அவனது கையைப் பிடித்துத் தரதரவென்று பாசறைக்கு உள்ளே இழுத்து கொண்டு சென்ற அவர், சுப்பையனிடம் உள்ளே யாரும் வரக்கூடாது என்று கண் காட்டுகிறார்.

“என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய், நீ? மகள்களை மணந்து கொண்டிருப்பதால் கோப்பரகேசரியாரைப் பொறுத்தவரை நீயும், நானும் உறவில் ஒன்றுதான். வயதில் மூத்தவன் ஆனாலும் உன்னைவிட எல்லா விதத்திலும் திறமையும், ஆற்றலும், வலிமையும், அறிவும் மிகுந்த என்னால் வாட்போரிலோ, மல்யுத்தத்திலோ இப்பொழுதும் உன்னை வெள்ள இயலும்.  பலப் பரீட்சை செய்து பார்க்க நீ ஆயத்தமாக இருக்கிறாயா? என் ஆற்றலுக்கும், வலிமைக்கும் மரியாதை கொடுக்காவிட்டாலும், எனது வயதிற்காவது நீ மரியாதை கொடுக்க வேண்டும்.

“நான் வேங்கை நாட்டு மன்னனாக இருந்திருந்தாலும் உன் மாதிரி மூன்று தடவை அதை இழந்திருக்க மாட்டேன்! அரசுரிமை வேண்டாம் என்று எளிய வாழ்வு வாழும் என்னைக் கிள்ளுக்கீரையாக மதித்து, உனது ஏவலுக்கு ஓடும் வேலையாள் போல நடத்தினாலும் பரவாயில்லை, பொறுத்துக் கொள்வேன். பல்லாயிரக் கணக்கான சோழ வீரர்களையும், தனது மூத்த மகனான மனுகுலசேரி ஆளவந்தனையும் உன்னை வேங்கை மன்னனாக ஆக்கும் வேள்வியில் ஆகுதி கொடுத்த கோப்பரகேசரியாருக்கு உன்மீது அக்கரை இல்லை என்று அவதூறு செய்தால், சோழச் சக்கரவர்த்திகளை அவமதித்த குற்றத்திற்காக உன்னை நான் சிறையில் அடைக்க முடியும்.  அதைத் தெரிந்துகொள்! என்று ஆவேசமாகப் பொரிந்து தள்ளுகிறார் பிரம்மராயர்.

முதன் முறையாக பிரம்மராயரின் சீற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்கிறான். வயதானாலும், கூர்மையாக நகமும், பற்களும் உள்ள சிங்கம்தான் அவர் என்று அவனுக்குப் புரிகிறது. செயலிழந்து திகைத்து நிற்கிறான்.  அவனது நிலையைக் கண்ட பிரம்மராயரின் முகத்தில் கோபம் மறைந்து புன்னகையும் இரக்கமும் தவழ்கிறது.  அவனது முதுகில் இலேசாகத் தட்டிக் கொடுக்கிறார் அவர்.[வளரும்]

*** *** ***
அடிக்குறிப்பு 
---------------------------------------------------------------------------------------------------------------------------------
8இராஜேந்திர சோழர் வேங்கை நாட்டில் தங்கிவிட்டதாகவும், அவரது படைத்தலைவரே வங்கத்தின் மீது படையெடுத்துச் சென்றதாகவும், இராஜராஜ நரேந்திரன் கூடச் சென்றதாகவும், வங்கமன்னன் மகிபாலனைத் தோற்கடித்து அவன் மூலம் கங்கை நீரைக் கொணர்ந்ததாகவும், பின்னர் அவனைக் கப்பம் கட்டும் சிற்றரசானச் செய்து அவனுக்கு வங்கத்தை திரும்ப இராஜேந்திரரே வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
9இந்த வெற்றியை தஞ்சைப் பெரியகோவில் பொறிக்கப்பட்டுள்ள இராஜேந்தரனின் கல்வெட்டுகள் ஏழலை இலட்சம் பேருள்ள இரட்டைப் படைகள், இயற்கையான வலிமையால் பெற்ற வெற்றியால், அச்சமும், முழுவதும் வஞ்சமும் உள்ள ஜெயசிம்மன் ஓடி ஒளிந்துகொண்டான்” என்று மேலும் இந்தப் போரை விரிவாக விளக்குகின்றன.
10இந்த நிகழ்ச்சியின் தேதியை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தனது தென்னாட்டு வரலாறு (History of South India) குறிப்பிடுகிறார்.பக்கம் 26
11ஸ்ரீவிஜயம் தற்கால இந்தோனேஷியாவில் சுமத்ரா, மலேஷிய தீபகற்பங்களை உள்ளடக்கிய பேரரசாகும். அவ்வரசு புத்த சமயத்தை தழுவி வந்தது.  சோழர்களின் ஆதிக்கத்தாலும், உறவாலும் சைவ, வைணவ சமயங்கள் அங்கு பரவி, கோவில்களும் கட்டப்பட்டன. 1025ம் ஆண்டு சோழப் படைகள் ஸ்ரீவிஜயத்தையும், கடாரத்தையும் தாக்கி வென்றன.
12இராஜேந்திர சோழர் தமிழில் சிறந்த எழுத்தாளர் என்றும் சிவபெருமான் மீது கவிதைகள் புனைந்திருக்கிறார் என்றும் மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் இருந்த திரிலோசன சிவாச்சாரியார் தனது சித்தாந்த சரவளியில் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment