Wednesday 15 October 2014

கர்னல் கணேசன் தொடர் -ஆறு படை வீடுகளும் மன அமைதியும்


                                                                       
                                                                                                           




நினைவூட்டுகிறோம் [சென்ற பதிவின் இறுதியில்]
அளவுக்கு மீறிய உடற்பயிற்சியும் ஆம்புலன்ஸும்
ஆனால், ஒருநாள் இரவு நன்றாகத் தூங்கிவிட்டு காலையில் எழுந்திருக்க முயற்சித்தபொழுது ஒரு பக்கக் கைகால்களை அசைக்கவே முடியவில்லை. இடது கையை நகர்த்த வேண்டுமானால் வலது கையின் துணை கொண்டுதான் நகர்த்த முடிந்தது. மருத்துவமனைக்கு செய்தி தெரிவித்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் வந்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு மூன்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். காப்டன் கணேசன் மருத்துவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் கேஸ் ஆகி நாலைந்து டாக்டர்கள், தலைமை மருத்துவர் எல்லாரும் வந்து எப்படி அந்த நிலைக்கு அவர் ஆளானார் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். அளவுக்கு மீறிய உடற்பயிற்சியினால் ஒரு பக்க தசைப்பகுதி சிதைக்கப்பட்டிருப்பதாக முடிவு செய்து உடல் வலிக்கான மருந்தும் ஓய்வும் தேவை என்று முடிவு செய்தார்கள். ஒரு வாரம் 10 நாட்கள் மருத்துவமனையிலிருந்தார். ஒன்றிரண்டு நண்பர்கள் வந்து பார்த்து ஆறுதல் சொல்லி விட்டுப் போனார்கள். மருத்துவமனையிலிருந்தது பற்றி அவருடைய வீட்டினர் யாருக்கும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் தெரிவித்தாலும் யாரும் உடனடியாக வந்து உதவப் போவதில்லை. 

இராணுவத்தில் ஒரு வசதி என்னவென்றால் பிறர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லை. தங்குமிடம் மிக நல்ல வசதியுடன் கூடியஸிங்கிள்ஸ் அகாமெடேஷன் எனப்படும் தனி அறை. உணவுக்கு ஆபீஸர்ஸ் மெஸ். மாதம் முடிந்தவுடன் வங்கியில் சேர்க்கப்படும் சம்பளம் என்று எல்லாமே ஒரு ஒழுங்கு முறையுடன் நடக்கும். தன்னைப் பற்றிய ஒரு அனுதாபம் கொண்டு கவலைப்படாமலிருந்தால் - தனது இராணுவப் பணியை சற்றே கவனமுடன் செய்தால் அதிகாரிகளின் வாழ்க்கை நன்றாகவே இருக்கும்.

ஆனால், கணேசன் அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரவில்லை. சொந்த ஊரில் உற்றம் சுற்றத்துடன் கலந்து பழகியவர். ஒரு சிறிய பண்ணை வீடு போல வீட்டில் ஆடு, மாடு, மனிதர்கள் என்று கூட்டமுண்டு. இளமையில் நாலைந்து சகோதர சகோதரிகளுடன் ஒன்றாக வளர்ந்தவர். அவர்கள் எல்லாரும் கணவன் - மனைவி என்று தங்களுக்கான குடும்பத்தை ஏற்று அதில் ஒன்றிவிட்டனர். ஆனாலும், அவர்களுடன் கலந்துறவாடவே கணேசன் விரும்பினார். நடைமுறை வாழ்க்கையில் அது முடியாத போது அவர் வருத்தப்படவே செய்தார்.

கல்லூரியில் செமஸ்டர்  முறையிலான பாடங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு செமஸ்டர்  முடிந்தவுடன் 15 நாட்கள் விடுமுறையும், மற்றொரு செமஸ்டர்  முடிந்தவுடன் ஒரு மாத விடுமுறையும் என இராணுவத்தினர்களுக்கான இரண்டு மாத விடுமுறை பிரிக்கப்பட்டிருந்தது. மீதம் 15 நாட்கள் அவர்கள் கணக்கில் சேமிப்பாகச்  சேர்க்கப்பட்டு விடும். இராணுவத்தினர் 240 நாட்கள் விடுமுறை சேமித்து ஓய்வு பெறும்போது அதற்குரிய சம்பளத்தைப்  பெற்றுக் கொள்ளலாம் என்பது விதிமுறை. கர்னல் கணேசன் தொடர் 

                        ஆறு படை வீடுகளும் மன அமைதியும்

“பங்களாதேஷ்” போர் முடிந்து முதன்முறையாக ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது. உறவுகளைப் பற்றிய கசப்பான உணர்வினால் எங்கு போவது எப்படி விடுமுறையை செலவிடுவது என்று கொஞ்சநேரம் கணேசன் யோசித்துப் பார்த்தார். மனிதர்கள் எப்படி இருந்தாலும் தான் பிறந்து வளர்ந்த ஊரையும் ஓடி விளையாடித் திரிந்த இடங்களையும் அவரால் மறக்க இயலவில்லை. அங்கேயே செல்வது என்று முடிவு செய்து 15 ஏப்ரல் 1972 அன்று ரயில் ஏறினார். மறுநாள் பகல் மூன்று மணியளவில் ரயில்வண்டி “திருத்தணி”யில் நின்று கொண்டிருந்தது. தூரத்தில் முருகன் கோவில் கண்ணுக்குத் தெரிந்தது.

முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் திருத்தணியும் ஒரு படை வீடு. ஒரு சமயம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசித்தால் மனதில் அமைதியும் ஆறுதலும் ஏற்படலாம் என்று அவர் நினைத்தார். உடனே  கைப்பெட்டியுடன் திருத்தணியில் இறங்கினார்

இளமை முதலே “மனமே கோவில், மனச்சாட்சியே தெய்வம்” என்ற நினைவிலேயே வளர்ந்தவர் காப்டன் கணேசன். கல்விக் கூடங்கள், தெய்வ வழிபாட்டு இடங்கள் எல்லாம் வியாபாரமாகப் போய்விட்ட பிறகு அதுபோன்ற இடங்களில் அதிக நாட்டமில்லை அவருக்கு. அரசாங்கப் பணியிடங்களில் கூட உண்மையாகவும் நேர்மையாகவும் சட்ட திட்டங்களின் படியும் வேலை செய்ய முடிவதில்லை. ஆகையினால், அவர் அதிகமாகக் கோவில் குளங்கள் சுற்றியதில்லை. ஆனாலும், அன்றிருந்த மனநிலையில் உறவினர்கள் வீட்டில் தங்கி இருக்க விருப்பப்படாததால்  ஆறு படை வீடுகளையும் பார்த்து வர நினைத்தார்.

திருத்தணி கோவில் வளாகத்திலேயே தங்குவதற்கான வசதி இருந்தது. அந்த அறையில் குளித்து உடைமாற்றி கோவிலுக்கு சென்றார். அதிகக் கூட்டமில்லாத அக்கோவிலில் சந்நிதிக்கு முன்பாக ஒரு மூலையில் உட்ர்ந்து கண்களை மூடிக் கொண்டார். “பங்களாதேஷ்” போருக்கு முன்பான மனநிலையும் போருக்குப் பின்னான மனநிலையும் திரைப்படம் போல் மனதில் ஓடின. இராணுவப் பணியே ஏற்புடையது என்று முடிவு செய்து பொதுப் பணித்துறை வேலையை ராஜினாமா செய்தாகி விட்டது. இராணுவப்பணி தனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் அந்தப் பணியின் சிறப்பு பற்றியும் அந்தப் பணியிலுள்ளோர்களுக்காக உற்றார் சுற்றம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். இந்நிலையில் தனது வருங்காலம் நல்லபடி அமைய இறையருள் மட்டுமே உதவ முடியும் என்று மனமுருக வேண்டி நின்றார். ஒரு விரக்தி மனப்பான்மையோ அதன் காரணமாக தீய பழக்கவழக்கங்களைக் கொள்வதோ கூடாது என்பதில் மிகவும் தெளிவாக அவர் இருந்தார். இரவு வெகுநேரமாகி கோவிலை மூடுவதற்கு ஆரம்பித்தார்கள். ஆகட்டும்! காலம் காட்டும் வழியில் விவேகத்துடன் நடப்போம் என்று முடிவு செய்து கோவிலில் இருந்து வெளிவந்தார்.

இப்பரந்த உலகில் தனக்கென்று நல்ல படிப்பு, திறமை, உடல் நலமும் இருக்கையில், இராணுவ அதிகாரி என்று பெருமைப்படத்தக்க பணியும் இருக்கையில் தனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையாமலா போகும்? என்று அவர் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். அது இயற்கைக்கு முரண்பாடானதாக இருக்கும். அப்படி விதியின் வலிய கரத்திலகப்பட்டு தனது வாழ்க்கை சீரழிந்தால் அதற்கு தன்னைத்தான் குறை சொல்ல வேண்டும் என்பதை ஆணித்தரமாக அவர் ஏற்றுக் கொண்டார். தானே தனக்கு தலைவிதி என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திக் கொண்டு “வாழ்ந்தே தீருவேன்” என்ற வைராக்கியத்துடன் அவர் திருத்தணியிலிருந்து சென்னை வந்தடைந்தார். சென்னையில் அவரது நண்பரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான திருநாவுக்கரசு இருக்கும் 38, பெல்ஸ் ரோடு , திருவல்லிக்கேணி  என்ற முகவரியிலுள்ள தங்குமிடம் சென்றார். அப்பொழுது நண்பர் அங்கு இல்லை. ஆனாலும், முன்பு அறிமுகமானவர்கள் இருந்தார்கள். இரண்டு நாட்கள் அங்கு தங்கிவிட்டு அடுத்த கோவிலைக் காணப் புறப்பட்டார். 20-04-1972க்கான அவருடைய நாட்குறிப்பு இப்படி இருக்கிறது
.
“இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு விட்டேன். எனது தாயகத்தின் வளம் ரயில் சாலையின்  இருபுறமும் விரிந்து பரந்து கிடக்கின்றது. எனது வளநாட்டின் மக்கள் பொன்னேர் பூட்டி, புதுநெல் விதைத்து, ஓய்வின்றி உழைக்கிறார்கள். ஓ! இந்த மகத்தான பூமியையா மறந்து விடப் போகிறேன்? அது எப்படி முடியும்? அண்ணன், தம்பிகள் என உறவினரிடையே நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான பாசம் தவறுதான். ரயில் வண்டி விழுப்புரம் சந்திப்பில் நிற்கிறது. கூப்பிடு தூரத்தில் உடன் பிறந்த அண்ணன் வீடு இருக்கிறது. திருமணமாகி ஆறு குழந்தைகளைப் பெற்றுக் கொண்ட அவர் தனதுகுடும்பத்தை நடத்த தம்பிகள் உதவுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

மூத்த மருமகளாக வந்து தாய் போல் எங்களை அரவணைத்து புத்துயிர் ஊட்டி இருக்க வேண்டிய அவர் மனைவி, தான், தன் குடும்பம் என்று விலகிப் போய்விட்டதில் அண்ணன் தம்பிகள் உறவு தாமரை இலை தண்ணீர் போல் ஓட்டாமல் போய்விட்டதில் ஆச்சரியமில்லை. நான் தயிர்சாதம் வாங்கி ரயில் பெட்டியில் உட்கார்ந்தபடியே உண்ணும்போது தொண்டை அடைக்கிறது. ஓ! நான் அழக்கூடாது. போருக்கு சென்று புதிய நாடொன்றை அறிமுகம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் தம்பிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு! கணேஷ்! பாசத்தை மறந்துவிடு! என்று உள்மனம் சொல்லுகிறது. நான் கண்ணீரையும் தயிர் சாதத்தையும் ஒன்றாக சேர்த்து விழுங்குகிறேன். ஓ! ஓ!! என்று கூவிக்கொண்டு ரயில் புறப்படுகிறது. தளைகள் அறுபடும் பொழுது எவ்வளவு வேதனையாக இருக்கிறது. காலமெல்லாம் வேதனைப்படுவதை விட இப்படி ஒரு சில நிமிடங்கள் உணர்ந்து உதறி விட்டு விடுவது நல்லதுதான்.”

அன்றைய மனநிலையைக் கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது அவரது நாட்குறிப்பு. நேரே சுவாமிமலை சென்றடைந்தார். வீட்டிற்கு வரவில்லை என்றும் சில கோவில்களுக்குப் போய் வருவதாகவும், அவரது தம்பிக்கு எழுதி இருந்த கடிதத்தின் காரணமாக திருமணமாகி, மனைவி குழந்தை மற்றும் தந்தையுடன் இருக்கும் அவர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணனைக் காண வந்தார். “ஏன் அண்ணே! வீட்டுக்கு வரவில்லையா?” என்று வருத்தப்பட்டார். போர்க்களத்தைப் பற்றியோ அதில் ஏற்பட்ட கணேசனது மனமாற்றங்கள் பற்றியோ அவரிடம் ஏதும் பேசவில்லை. தம்பி, கிராமத்தில் இருப்பவர். அவரிடம் ஏதும் சொல்லி அவருக்கும் மனவருத்தம் ஏற்படுத்த கணேசன் விரும்பவில்லை. பின்னர் இருவரும் சுவாமிமலை கோவிலுக்கு சென்றனர்.

தந்தைக்குப் பிரணவ மந்திரமான ஓம்! மந்திரத்தை முருகப்பெருமான் உபதேசித்த இடம் சுவாமிமலை. தம்பிகள் இருவரும் இருவேறு மனநிலையில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து இருவரும் தஞ்சாவூர் சென்றனர். தஞ்சாவூரில் அவர்களது குடும்பத்திற்கு அறிமுகமான நண்பர் இருந்தார். அவர் வீட்டில் சிறிதுநேரம் இளைப்பாறினார்கள். பின்னர் கணேசன் பழனி போகலாம் என்று முடிவெடுத்தார். அவரது தம்பியும் உடன் வருகிறேன் என்றார். இருவரும் பழனி சென்றனர். அண்ணனுக்கு மாம்பழத்தை தந்து விட்டார் என்று கோபத்தில் ஆண்டி வடிவில் கோவணத்துடன் முருகப் பெருமான் காட்சிதரும் படைவீடு பழனி. பழனியில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு அவரது தம்பியை ஊருக்குப் போகச் சொல்லிவிட்டார். அண்ணன் ஏன் இப்படி கோவில் குளம் சுற்றுகிறார் என்று தம்பிக்கு வருத்தம். மனதில் நினைப்பதை எல்லாம் வெளியில் சொல்ல முடிவதில்லையே! தம்பியை அனுப்பிவிட்டு கணேசன் மதுரை சென்றார். மதுரையில் ஓரிரு நாட்கள் தங்கி திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர் சோலை ஆகிய இரு படை வீடுகளையும் தரிசித்தார்.

அடுத்ததாகக் கடைசிப் படை வீடு திருச்செந்தூர் செந்தில்நாதனின் அரசாங்கம் நடக்கும் அந்தக் கடற்கரை. இதற்கு முன்பும் கூட ஒன்றிரண்டு முறை கணேசன் வந்துள்ளார். அங்கு வரும்பொழுதெல்லாம் கடற்கரைக்கு அருகில் தமிழ்நாடு சுற்றுலா மாளிகையில் அறை எடுத்துக் கொண்டு அந்த கடற்கரையில் வெகுநேரம் வீழ்ந்து கிடப்பார். அன்றும் கூட அப்படித்தான் கிடந்தார் .சூரபத்மனை வீழ்த்தி முருகப் பெருமான் தேவர்களைக் காப்பாற்றிய இடம் திருச்செந்தூர். ஒரு போர்க்களம் கண்டு புதிய நாடொன்று உருவாவதைக் கண்டு திரும்பியிருந்த கணேசனுக்கு அந்த இடம் நிறைவான மனஅமைதியைத் தந்தது.

அடுத்து என்ன செய்வது என்று ஏதும் முடிவெடுக்க முடியவில்லை. பெரியண்ணன் விழுப்புரத்திலும் அக்காள் திருச்சியிலும் ஒரு தம்பி,   தந்தையுடனும் மனைவி குழந்தையுடனும் சொந்த ஊரிலும் இருந்தார்கள். கடைசித் தம்பி கல்லூரி விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். அம்மாவின் மறைவிற்குப் பின் தந்தை இருந்தும் அவரவர்களது குடும்பப் பிரச்சினை. இந்நிலையில் கணேசன் தனித்து விடப்பட்டதில் ஆச்சரியமில்லை.

ஆனாலும் உறவினர்களைக் கண்டு ஓரிரு நாள் செலவிட்டு விட்டு இராணுவப் பொறியியற் கல்லூரி திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தார். முதலில் சொந்த ஊருக்குப் போகலாம் என்ற முடிவுடன் திருச்செந்தூரைப் பிரிந்தார். மதுரை வந்து சேருகையில் “திருச்சி டாக்ஸியில் ஒரு இடம் காலி” என்று கூவிக் கொண்டிருந்தார்கள். ஏதோ சிந்தனையில் அந்த டாக்ஸியில் ஏறிவிட்டார். திருச்சி வந்து சேர்ந்த பிறகு அக்காள், அவர் கணவர், குழந்தைகளையும் பார்த்துவிட்டுப் போகலாம் என்று அவர்கள் வீட்டிற்குச்  சென்றார். அக்காள், போர்க்களம் சென்று திரும்பிய தம்பியாக அவரை வரவேற்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு அக்காள் குடும்பத்தை காண வந்துள்ள தம்பியாக அவரை எதிர்பார்த்தார். வழக்கமாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு போல் “சீர் கொண்டு வந்தால் சகோதரி” என்ற நிலையில் உலகப் பிடிப்பே ஒரு பாரம் என்பது போல் கோவில்கள் சுற்றி வந்து கொண்டிருக்கும் தம்பியிடம் என்ன இருக்கும்?
.
அக்காளின் குடும்பம் நல்ல நிலையில் இல்லைதான். ஆனால், ஒரு குடும்பத்தை நிர்வகிப்பது குடும்பத் தலைவன், தலைவி போன்றோரைத் தவிர மூன்றாவது மனிதரா நிர்வகிக்க முடியும்? கணேசன் தன்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவி இருக்கிறார். ஆனாலும் அவர்கள் கஷ்டப்பட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். தன் வழி தனிவழி என்றும் அதைப் பற்றி உறவினரில் யாரும் அறிந்து கொள்ளவும் முடியாது. பகிர்ந்து கொள்ளவும் முடியாது என்பதால் கணேசன் அடுத்த நாளே அக்காள் வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டார்.

அடுத்த நாள் கணேசன் அவரது பிறந்த ஊரான சன்னாநல்லூர் சென்றார். வீட்டிற்கு செல்கையில் இரவு நேரமாகிவிட்டது. வெளி வராந்தாவில் உறங்கிக் கொண்டிருந்த அவரது தந்தை எழுந்து வந்து “நான் உயிரோடிருக்கையில் நீ ஏனடா சந்நியாசி போல் கோவில் குளங்கள் எல்லாம் சுற்றுகிறாய்?” என்று அவரை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார். “அப்படி எல்லாம் ஒன்றுமில்லையப்பா” என்று ஆறுதலாக அவருக்குச் சொல்லிவிட்டு கணேசன் உறங்கப் போனார்.

அக்காள் தங்கைகள் என்று சிறுவர்களாக அவர்கள் ஓடி ஆடி உண்டு உறங்கி செலவிட்ட நாட்களை மறந்துவிட முடியுமா?

கும்பகோணத்திலிருந்து கணேசனது தங்கை தன் மகனுடன் வந்திருந்தார். தம்பியின் மகனும் தங்கையின் மகனும் ஊர் சுற்றி வரும் பெரியப்பாவை / மாமாவை வியப்போடு பார்த்தார்கள் மறுநாள் காலை. ஏழு பேர் அண்ணன் தம்பிகளாகப் பிறந்த ஒரு குடும்பத்தில் காலப் போக்கில் குழந்தைகள் வளர்ந்து தங்களுக்கென தனித்தனியாக குடும்பம் ஏற்படுத்திக் கொள்வது இயற்கை. காலத்தின் கட்டாயம். ஆனால், அப்படிக் குடும்பம் ஏற்படும் பொழுது அண்ணன் தம்பிகள், அக்காள் தங்கைகள் என்று சிறுவர்களாக அவர்கள் ஓடி ஆடி உண்டு உறங்கி செலவிட்ட நாட்களை மறந்துவிட முடியுமா? வளர்ந்து பெரியவர்களாகி தங்களுக்கென மனைவி / கணவர் என்றாகும் பொழுது புதிதாக வரும் கணவனோ அல்லது மனைவியோ எந்த அளவு குடும்ப உறுப்பினர்களை ஒற்றுமையுடன் இருக்க உதவ முடியும். மேலும் எல்லாருக்கும் வாழ்க்கை ஒரே சீராக அமைவதில்லையே, கல்வி, பொருளாதாரம் போன்றவை வேறுபடும் பொழுது தங்களது தனிப்பட்ட குறை நிறைகளை மறந்து பழைய பாசத்துடன் அவர்கள் எப்படிப் பழக முடியும்? அப்படிப் பழக முடிந்தால் அந்த குடும்பம் ஒரு தெய்வாம்சம் நிறைந்த குடும்பமாக இருக்கும்.

ஆனால், கணேசன் குடும்பத்தினர் சாதாரணமானவர்கள். ஒரு கால கட்டத்திற்குப் பிறகு அங்கு உடன் பிறந்தோர் என்ற ஒற்றுமை குறைந்து அவர்கள் தனித்தனியாக விலக ஆரம்பித்தனர். தனக்கென மனைவி, குடும்பம் என்றமையாத காப்டன் கணேசன் பழைய பாசத்@தாடு  பார்க்க வருகையில் அங்கு அவர் வேறுபட்ட மனிதர்களைக் கண்டார். ஆனாலும் தங்கை, தம்பியின் குழந்தைகள் இந்தக் கிழவன் ஏன் இப்படி கலங்கித் தவிக்கிறான் என்பது போல் கணேசனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். வாழ்க்கையில் மனிதர்கள் சாதிப்பதற்கு எண்ணற்ற வழிகளும் வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. நாம் ஏன் சில இழப்புகளை மட்டுமே மனதில் தேக்கி வைத்து வருத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட சற்றே உற்சாகம் ஏற்பட்டது.

நாகப்பட்டினத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கணேசனது சின்ன அண்ணன் இரண்டு நாட்களில் ஊருக்கு வந்து கணேசனை சந்தித்தார். குடும்பத்தை ஒற்றுமை குலையாமல் காப்பாற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு தங்குமிடம் கட்டாயம் வேண்டும் என்று அவர் பேசினார். பெண்கள் அவர்களது கணவர்களது திட்டப்படி வாழவும் மற்ற 5 சகோதரர்களும் ஒரு ஒருங்கிணைந்த திட்டப்படி வாழவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். சொந்த ஊர் ஒரு ஹெட் க்வார்ட்டர்ஸ் போல் இயங்க திருச்சி, தஞ்சாவூர், கடலூர், சென்னை ஆகிய இடங்களில் அவர்களுக்கு சொந்த வீடு அமைய வேண்டும் என்று பேசினார்.


இதற்கெல்லாம் பொருளுதவி - உதவி என்றில்லாமல் ஒரு முதலீடு என்ற முறையிலாவது தனிமனிதனாகவும் உயர் இராணுவ அதிகாரியாகவும் இருக்கும் கணேசன் தான் ஏற்பாடு செய்ய  வேண்டும் என்றும் பேசினார். சாதாரண வேலையில் இருந்து கொண்டு குடும்பத்தை அறிந்தோ அறியமலோ பெருக்கிக் கொண்டு விட்ட மூத்த அண்ணனுக்கு அவரது அறிவுரையை ஏற்று நாம் தான் பொருளுதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் திட்டமிட்டார்கள். அது போன்ற சில ஆரம்பகட்ட வேலைகளுக்காக ரூ.3,000/- தேவைப்படுவதாக அவர் பேசினார்.தன்னால் முடிந்தால் மறுநாள் நாகப்பட்டினத்தில் அவரை சந்திப்பதாகவும் கணேசன் சொல்ல சகோதரர்கள் பிரிந்தார்கள்[தொடரும் ]

No comments:

Post a Comment