Friday 31 October 2014

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய வைபவம்- திருமழிசை ஆழ்வார்

ஸ்ரீ வைஷ்ணவ ஆசார்ய  வைபவம் நூலில் இருந்து 


                                                 திருமழிசை ஆழ்வார்

எம்பெருமான் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருக்கோலத்தைத் தனது திருமேனியிலேயே அனைவரும் காணும்படி வெளிப்படுத்தி அனுபவித்தவர் திருமழிசையாழ்வார். காஞ்சிபுரத்திற்குக் கிழக்கில் திருமழிசை எனும் திருத்தலம் உள்ளது. 




அப்பகுதியில் பார்க்கவர் எனும் முனிவர் “தீர்க்கசந்திர யாகம்” செய்து வந்தார். அப்பெரியவருக்கும் கனகாங்கி எனும் தேவமாதிற்கும் துவாபரயுகத்தில் சித்தார்த்தி ஆண்டு தைத்திங்கள் தேய்பிறையில் மக நட்சத்திரத்தில் பிரதமை திதியில் ஞாயிற்றுக் கிழமையில் திருமாலின் திரு ஆழியின் அம்சமாய் கை கால் முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டம் பிறந்தது.
                                                              

அதனைப் பெற்றவர்கள் மிகவும் வருத்தம் கொண்டனர். அதை அருகில் இருந்த ஒரு பிரம்புப் புதரில் அவர்கள் போட்டுவிட்டுப் போக திருமால் அங்கே எழுந்தருளி அதை நோக்கி அருள்புரிய அப்பிண்டம் அழகிய ஆண் குழந்தையாக உருப்பெற்றது. உடனே அது அழத் தொடங்கியது. “மகீசார க்ஷேத்ரபாதி” யான எம்பெருமான் மீண்டும் எழுந்தருளி தனது திருக்கோலத்தைக் காட்டி அக்குழந்தையின் பசி தாகம் போக்கி மறைய அது இப்போது திருமாலின் பிரிவாற்றாமையால் அழத் தொடங்கியது.

அச்சமயத்தில் அங்கு வந்த திருவாளன் என்பவர் அம்மகவை எடுத்துத் தன் இல்லம் சென்று தன் மனைவியான பங்கயச் செல்வியிடம் அளித்தார். அவர் அக்குழந்தையை வளர்க்க எண்ணி உச்சி முகர்ந்து மார்போடணைத்தார். பங்கயச் செல்விக்கு உடன் பால் சுரந்தது. ஆனால் அக்குழந்தை அப்பாலை உண்ணவில்லை, அழவும் இல்லை, சிறுநீர் கழித்தல் முதலானவையும் செய்யவில்லை. இதனைக் கேள்வியுற்று ஒரு முதிர்ந்த சான்றோர் தன் கையில் ஒரு கலத்தில் பால் காய்ச்சிக் கொண்டு வந்தார். அம்மகவின் முன் அதை வைக்க அக்குழந்தை அப்பாலை அருந்தியது.

திருவாளனும் பங்கயச் செல்வியும் அப்பெரியவரிடம் நாள்தோறும் பால் கொண்டு வந்து பாலகனைப் பருகுவிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவரும் இசைந்து அங்ஙனமே செய்தார். தம் மனைவியோடு தினமும் வரும் அம்முதியவரின் எண்ணம் அறிந்த அக்குழந்தை ஒருநாள் பாலமுதில் சிறிது நிற்கும்படி செய்து மீதியை உண்டது. எஞ்சிய பாலை அப்பெரியவர்கள் அருந்தினர். அதனால் அவர்கள் இளமைப் பருவம் அடைந்தனர். சில திங்கள்கள் கழிந்து அவர்களுக்கு ஓர் ஆண்மகவு பிறக்க அப்பிள்ளைக்குக் கணிகண்ணன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

திருவாளனுக்கும் பங்கயச் செல்விக்கும் வளர்ப்பு மகனாக இருந்த பிள்ளை திருமழிசை என்ற தலத்தின் காரணமாக திருமழிசை ஆழ்வார் எனும் திருநாமத்துடன் விளங்கியது.

ஏழு ஆண்டுகள் கழிந்தபின் அப்பிள்ளை பல நூல்களைக் கற்று பற்பல சமயங்களிலும் புகுந்து இறுதியில் சிவவாக்கியர் எனும் பெயருடன் சைவ சமயத்தைச் சார்ந்து ஒழுகத் தொடங்கியது. சிவவாக்கியர் பல சிவத்தலங்களுக்கும் சென்று திருமயிலையை அடைந்தார்.
                                                                     


முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வார் அங்கிருந்த பூஞ்சோலையில் தங்கி இருந்தார். சிவவாக்கியரைத் தடுத்தாட்கொண்டு உலகின் முதற்பொருளாய் விளங்கி முக்திநிலை அளிக்கும் முதல்வன் திருமாலே என்று பேயாழ்வார் அவருக்கு உணர்த்தினார். பேயாழ்வார் திருநாராயணனின் திருமந்திரத்தை உபதேசிக்கத் திருமழிசையாழ்வார் ஸ்ரீ வைணவர் ஆனார். இதற்கு அவருக்கு நானூறு ஆண்டுகள் சென்றன.
                                                                           
திருமழிசையாழ்வார் எம்பெருமானையே தியானித்துக் கொண்டு திருமழிசையில் உள்ள “கஜேந்திர ஸரஸ்” குளக்கரையில் எழுநூறு ஆண்டுகள் யோகத்தில் மூழ்கி இருந்தார். பிறகு அவர் ஒரு மலைக் குகையை அடைந்து அங்கு சில காலம் தியானத்தில் எழுந்தருளிச் செய்தார். அப்போது உலகில் இதுவரை காணாத பேரொளி அக்குகையில் தோன்ற அதைக் கண்ட பொய்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய முதலாழ்வார்கள் அங்கு வந்து திருமழிசையாழ்வாரைக் கண்டனர். அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் அன்புகொண்டு தழுவிப் பின் யோகத்தில் மூழ்கி இருந்து சிலகாலம் கழித்துத் திருமயிலை அடைந்தனர். அங்கிருந்து முதலாழ்வார்கள் விடைபெற்றபின் திருமழிசையாழ்வார் திருமழிசைக்கு மீண்டும் வந்தார்.
அங்கு ஒரு நாள் சாத்துகைக்குத் திருமண் வேண்டி அகப்படாமல் திருமழிசையாழ்வார் வருந்தினார். அவரது கனவில் திருவேங்கடநாதன் எழுந்தருளி, திருமண் உள்ள இடத்தைக் குறிப்பிட்டுக் கூறி அருளினார். அவரும் அங்கே சென்றுத் திருமண் கண்டு எடுத்துப் பன்னிரண்டு திருநாமம் அணிந்து திருமாலைத் தொழுதார். பிறகு திருமழிசையாழ்வார் கச்சியில் உள்ள திருவெஃகா சென்றார். அங்கு பொய்கையாழ்வார் அவதரித்த பொய்கைக் கரையில் ஆழ்வார் எழுநூறு ஆண்டுகள் யோகத்தில் எழுந்தருளி இருந்தார். இவரருளால் முதியவர்களுக்கு இளமைக் கோலம் வந்து பிறந்த கணிகண்ணன் இங்கு வந்து திருமழிசையாழ்வாரின் சீடர் ஆனார்.

இங்குதான் அன்பிலும், தொண்டிலும் பக்தியிலும் சிறந்திருந்த ஒரு முதிய பெண்மணி ஆழ்வாரின் திருவருள் பெற்று இளமையான அழகுப் பெண்ணாக உருமாறினாள். அவள் அழகில் மனம் பறிகொடுத்த பல்லவ வேந்தன் அவளை மணந்து மனைவியாகப் பெற்றான்.

சில ஆண்டுகளில் முதியவனான அவ்வேந்தன் தானும் இளம்பருவம் அடைய விரும்பினான். அவன் மனைவி தனக்கு இளமைத் தன்மை ஏற்பட்ட வரலாற்றினைக் கூறி “கணிகண்ணரின் துணையைப் பெற்று ஆழ்வாரின் அருளைப் பெறுவீராயின் தாங்களும் இளம்பருவம் அடையலாம்” என்று கூறினாள்.

மன்னன் கணிகண்ணரை அழைத்து அவரது ஆசானான ஆழ்வாரை அழைத்துவர வேண்டினான். “எம் குரவர் எவர் மனைக்கும் வாரார் ” என்று கணிகண்ணர் விடை கூறினார். அதற்கு அரசன் “நீரே எம்மீது ஒரு பாட்டுப் பாடுக!” என்று கூற “யான் மானிடம் பாடவந்த கவியல்லேன்” என்று கணிகண்ணன் விடையறுத்தார். மன்னர்கள் திருமாலின் அம்சம் பெற்றவர்கள். எனவே அரசர்களைப் பாடுதல் குற்றமாகாது என்று மன்னன் சொல்ல கணிகண்ணன் திருமாலைப் போற்றி ஒரு பாடல் பாடினார்.

மன்னன் இப்போது திருமாலைப் பற்றிப் பாடியது ஏன் எனக் கேட்டான். “தாங்கள்தான் மன்னர்கள் திருமாலின் அம்சம் என அறிவித்தீர்கள். திருமாலைப் பாடுவதும் மன்னரைப் பாடுவதும் ஒன்றே அன்றோ? எனவேதான் திருமாலைப் பாடினேன்” என்று கணிகண்ணர் கூறினார். உடன் மன்னன் சினம் கொண்டான். நகரை விட்டு வெளியேறுமாறு கணிகண்ணருக்கு ஆணையிட்டான். கணிகண்ணன் ஆழ்வாரிடம் விடைபெறச் செல்ல ஆழ்வாரோ நானும் எம்பெருமானை எழுப்பிக் கொண்டு வருகின்றேன் என்று சொல்லித் திருமாலை நோக்கி

“கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டா-துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்” 
என்று பாடினார்.

எம்பெருமானும் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு தேவர்களும் பின்தொடர காஞ்சி மாநகர் விட்டு வெளியேறினார். அந்நகரம் பொலிவிழந்து இருள் பெற்றது.

அரசன் அமைச்சர்களை அழைத்துக் காரணம் கேட்டான். ஒற்றர்கள் மூலம் நிகழ்ந்ததை அறிந்த அரசன் வருந்தினான். கணிகண்ணரைத் தேடிச் சென்றுக் காலில் விழுந்து வணங்கி மீண்டும் கச்சிப்பதிக்கு எழுந்தருள வேண்டினான். கணிகண்ணரும் இசைவு தெரிவித்து ஆழ்வாரை வேண்ட ஆழ்வார் பெருமானைப் பார்த்து

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கெழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்” 
என்று பாடினார்.

திருமாலும் மீண்டும் கச்சிமாநகர் அடைந்தார். பைந்நாகப் பாய்விரித்துப் பள்ளி கொண்டருளினார். பெருமாள் ஆழ்வாருடனும் கணிகண்ணருடனும் ஓர் இரவு தங்கிய இடத்திற்கு ஓரிரவிடுக்கை என்று பெயர் வந்தது.

பின்பு திருமழிசையாழ்வார் திருக்குடந்தை செல்ல எண்ணிப் புறப்பட்டார். வழியில் உள்ள பெரும்புலியூர் என்ற கிராமத்தில் ஒரு திண்ணையில் தங்கினார். ஒரு சில அந்தணர்கள் திண்ணையிலே அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். இவரைக் கண்டதும் “நான்காம் வருணத்தினனாகிய இவன் கேட்க வேதம் ஓதக் கூடாது” என நிறுத்தினர். அவர்கள் கருத்தறிந்த திருமழிசையாழ்வார் திண்ணையை விட்டிறங்கினார். அந்தணர்கள் வேதம் ஓதத் தொடங்கியபோது அவர்களுக்கு விட்ட வாக்கியம் தோன்றவில்லை. உடனே ஆழ்வார் ஒரு கருநெல்லை நகத்தால் பிளந்து குறிப்பால் காட்டியருளிச் செய்தார். அவர்களுக்கு விட்ட வாக்கியம் தோன்றியது. அந்தணர்கள் ஆழ்வாரிடம் பிழை பொறுக்குமாறு வேண்ட அவரும் அவர்களுக்கு இன்மொழிகள் கூறி விடைபெற்றார்.

பின்னர் அவ்வூரில் திருமழிசையாழ்வார் பிச்சை ஏற்றுச் செல்ல தெருக்கள் தோறும் எழுந்தருளினார். அவ்வூர்க்கோயிலில் குடிகொண்ட பெருமாள் ஆழ்வார் செல்லும் வீதிகள் தோறும் தம் திருமுகத்தைத் திருப்பி அருளினார். இதைக் கண்ட அர்ச்சகர் நம்பியார் வியப்படைய அந்தணர்கள் ஆழ்வார் பெருமையைக் கூறினார்கள். அனைவரும் சென்று திருமழிசையாழ்வாரை வரவேற்று யாகசாலை அழைத்துச் சென்று சிறந்த பீடத்தில் வீற்றிருக்கச் செய்தனர்.

பிறகு யாகத் தலைவர் யாகத்தில் செய்யும் அக்கிர பூசையை திருமழிசை ஆழ்வாருக்குச் செய்யும்போது சில வேள்விச் சடங்கர்கள் ஆழ்வாரை இழிவுபடுத்திப் பேசினர். யாகத்தலைவர் மனம் வருந்தி ஆழ்வாரிடம் வேண்ட ஆழ்வாரும் 

“அக்கரங்கள் அக்கரங்கள் என்றுமாவ தென்கொலோ
இக்குறும்பை நீக்கியென்னை ஈசனாக்க வல்லையேல்
சக்கரங்கொள் கையனே சடங்கர்வா யடங்கிட
உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே” 
என்று பாடியருளினார்.

அவ்வளவில் யாவரும் காணும்படி திருமழிசையாழ்வாரின் திருமேனியில் எம்பெருமான் பள்ளி கொண்ட கோலத்தைக் காட்டி அருளினார். இக்காட்சி கண்ட சடங்கர்கள் ஆழ்வாரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.
                                                                                   
பிறகு ஆழ்வார் திருக்குடந்தை அடைந்தார். ஆராவமுதனைச் சேவித்தார். அப்பதியில் இதுவரையில்தான் எழுதிய பாசுரங்களை எல்லாம் எடுத்து ஆழ்வார் காவிரி ஆற்றில் விட்டார். அவற்றுள் தொண்ணூறு பாசுரங்கள் உடைய நான்முகன் திருவந்தாதியும் நூற்றிருபது பாசுரங்களை உடைய திருச்சந்த விருத்தமும் எதிர்த்து வந்தன. அவற்றை எடுத்துப் பெருமானைச் சேவித்து அவ்விரண்டு நூல்களையும் உலகிற்கு அருளினார்.

திருக்குடந்தைப் பதியில் திருமழிசையாழ்வார் இரண்டாயிரத்து முன்னூறு ஆண்டுகள் எழுந்தருளியிருந்தார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அன்ன ஆகாரங்களை விட்டு விட்டு காய் கிழங்குகளைச் சிறிது அமுது செய்து 4700 ஆண்டுகள் மண்ணுலகின் உயிர்களுக்கு நல்வழியை ஆழ்வார் உணர்த்தினார் என்பர் அறிஞர்.

இவரால் பாடப்பெற்ற திருத்தலங்களாக திருவரங்கம், அன்பில், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூர், திருவெஃகா, திருவெவ்வுளூர், திருவேங்கடம், திருப்பாற்கடல், துவாரகை, பரமபதம் போன்றவை விளங்குகின்றன.[வளரும்]



No comments:

Post a Comment