Tuesday 27 November 2012

பாலு மகேந்திராவின் சந்தியாராகம்

சந்தியாராகம்
சந்தியாராகம்
கிட்ட தட்ட இரண்டு ஆண்டுகளாக தேடி தேடி கிடைக்காத சந்தியாராகம் முக நூல் வழியாக, ஜெயகாந்தன் என்ற நண்பரின் மூலம் கிடைத்தது இங்கு நான் பதிவிட போவது விமர்சனங்கள் அல்ல. ஒரு ரசிகனின் பதிவு. எனக்கு தெரிந்த, என் கண்ணுக்கு புலப்பட்ட அழகியல்களின் பதிவு. படத்தை பார்த்தவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பார்க்காதவர்கள், தயவு செய்து படத்தை தேடி, பார்த்துவிட்டு படிக்கவும்..
Black and Whiteல்தான் கிடைத்தது, ப்ரிண்ட். சிறு வயதில் பொதிகையில் கலரில் பார்த்த ஞாபகம்.. ஆரம்ப காட்சிகளில் வரும் விவரணை, மிகவும் கவித்துவமாக துவங்குகிறது.. லாங்க் ஷாட்டில் பெண்கள் குடத்தை எடுத்து கொண்டு போவது, மாடுகள் குளிப்பது,..... என அழகாக ஒரு கிராமத்தின் சூழ்நிலையை விவரிக்கிறது.
 எனக்கு சத்யஜித் ரேயின் பதேர் பாஞ்சாலியை பார்த்துக் கொண்டிருக் கிறோமா? என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. அந்த சீக்வென்சில் வரும் ஆரம்ப ஷாட்களில் அடுத்து, மத்திய வயதுப் பெண்கள் தம் பிள்ளைகளுக்கு முடி வாரி கொண்டிருக்கின்றனர். கோழியைச் சுற்றி அதன் குஞ்சுகள் அலைகின்றன. படத்தின் ஆதாரத்தை இந்த இரண்டு ஷாட்களிலுமே சொல்லி விட்டதாக எனக்குப் பட்டது. குறியீடுகள் என்பது இப்படியல்லவா இருக்க வேண்டும், வசந்த பாலன் மற்றும் பாலாஜி சக்திவேலின் படங்களில் எல்லாம் அப்பட்டமாக நான் குறியீடுகள் வைத்திருக்கிறேன் பார்த்துக் கொள் என்று இருக்கும்.. எதார்த்தமாக அமையும் குறியீடுகள் தான் முழுமையாக ஒரு பார்வையாளனை உள் வாங்கும்..
அடுத்தது தாத்தாவின் அறிமுகம், ஆராம்ப காட்சியிலிருந்தே தன்னுடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார்.. மூட்டை அமுக்கும் போது உள்ள முக சுளிவு, வாய் கொப்பளிக்கும், மூக்கை உரிஞ்சுவது என முதல் காட்சியிலேயே மிகவும் நெருக்கப்பட்டு போகிறார்.. அடுத்த ஷாட்டில் வரும் பாட்டி, அவரைப் பார்த்துதாத்தா "ஏண்டி ஜுரமும் அதுவுமா ஏண்டி குளத்துல குளிச்சிட்டு வர? வென்னீர் போட்டிருக்கலாம்ல?" என்று கேட்கிறார் தாத்தா. பின் நடக்கப் போகும் ஒரு துயரத்திற்கு இது ஒரு மேற்கோள் என்று கூறலாம். இது போன்ற எதார்த்தமான communication மற்ற எந்த இயக்குனரிடமும் பார்க்க இயலாது. பின்னே இன்னொரு இடத்திலும் இது கையாளப் பட்டிருக்கும். பார்க்கலாம். அடுத்தது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எது உதவுகிறது என்று சொல்லும் வகையில் ஒரு பெண் வீட்டின் முன்பு வந்து அப்பள‌ம் கேட்பதும், கடைக்காரன் அப்பள‌ம் கேட்பதுமாக அமைந்தது.
தாத்தா குளிக்கப் போகும் போது செய்யும் சேட்டை அழகு:)
 எனது கீழ் வீட்டில் வசிக்கும் என் தாத்தாவிடமும் இதை கண்டிருக்கிறேன். நான் எப்போதாவது மறைந்திருந்து அவர் செய்யும் குறும்புகளை பார்க்கையில், குழந்தைத்தனமாக ஏதோ செய்து கொண்டிருப்பார். என்னைப் பார்த்தவுடன் ஒரு திடீர் பரபரப்பு வந்து விடும் அவருக்கு.. வீட்டில் அப்பள‌ம் கேட்டு விட்டுப் போன பெண் சிறுநீர் கழிக்கும் சிறுவனைத் தள்ளி விடுவது, தாத்தா விளையாடுவதை ஒருவர் பார்க்கும் போது அவர் அதிர்ச்சியாவது என உதடுகளை விரிக்கச் செய்யும் காட்சிகள் அற்புதம்.. வயதானால் நாள், கிழமை மறந்துபோதல், தனக்கு சொந்தம் என்று தம்பி மகன் ஒருவன் தான் இருக்கிறான் என்பது போன்ற விஷயங்களை போகிற போக்கில் சொல்லிப் போகிறார் பாலு.. அடுத்து பாட்டி, கோழியைப் பார்த்து சொல்லும் காட்சியை வேறு மாதிரியாக எடுத்திருக்கலாம் என்று படுகிறது.. பாட்டி தனித் தனியாக தாய் தனி, சேய் தனி என்று பார்த்திருந்தால் மட்டும் போதும், இன்னும் கொஞ்சம் கவித்துவம் தூக்கியிருக்கும்.. வீட்டுக்கு வருகிறார் தாத்தா, பாட்டி இறக்கிறார். நெருப்பு, ரையில் பயணம், டைட்டில் கார்ட்........
சென்னை, மன்னிக்கவும் மெட்ராஸ்... லாங்க் ஷாட்டில் அட்ரெஸ் கேட்கும் காட்சியை உண்மையிலேயே அவரை அலைய விட்டு எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. அர்ச்சனாவின் வீட்டு சூழ் நிலை, மெட்ராசின் கொடூர‌ம்(பட்டப்பகலில் சிறுவர்கள் இருவர் சிகரெட் பிடிப்பது), அங்குள்ள ட்ராஃபிக்கை கடக்க சிரமப்படுவது என ஒவ்வொரு ஷாட்டிலும் ஏதோ ஒன்றை சொல்லி விடுகிறார் பாலு.. அதிலும் உண்மையிலேயே அந்த ஆட்டோ, தாத்தாவை இடித்துவிடும் போலிருந்தது.. எதார்த்தமான பதிவு.. அடுத்து வரும் காட்சியில் பத்திரிக்கையில் காதல் பற்றி வாசிக்கும் வள்ளியை மிரட்டி பத்திரிக்கையைப் பிடுங்குகிறாள் அர்ச்சனா.. அந்த கால கட்டத்தில் எல்லோரது அம்மாவும் இது போல தான் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. எங்க அம்மாவுக்கு சின்ன வயதில் பாட்டியிடம் இது போன்ற திட்டுகள் அதிகம், வாசிப்பு என்னும் பழக்கத்தினால்.. அடுத்த காட்சியில் அர்ச்சனாவின் கஷ்டங்களை சொல்லும் தொனியில் ஓட்ட ஸ்டவ் சம்பாஷணைகள் நடை பெறுகின்றன..
தாத்தா உள்ளே வந்து, மௌனமான நேரங்களை தாண்டி, வள்ளியை தாத்தா முத்தமிட்ட போது, தாடி குத்துவதை வள்ளியின் மூலம் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார். நான் என்னையே அறியாமல் கை தட்டினேன். என் உதடுகளின் ஓரங்கள் விரிந்திருந்தது.. அதே போல் நீண்ட பயணத்திற்குப் பின் வரும் இயற்கை உபாதைகள்.. தாத்தா "வாசு இந்த கக்கூசு எங்கப்பா இருக்கு?" என்று கேட்கும் இடம் அருமை..
பாலுவின் எல்லா படங்களிலுமே கணவன், மனைவி சித்தரிப்பு ஒரு தனி ரகம்.. இருவருமே கொஞ்சி கொஞ்சி தான் பேசிக் கொள்வார்கள்.. அவருடைய "வீடு" படத்தில் பானுசந்தர் அர்ச்சனாவை "....யா" என்ற சொல்லை தான் பிரயோகிப்பார்.. எனக்கு அந்த சொல்லாடல் மிகவும் பிடிக்கும்..
முக்கால்வாசி பெரியவர்கள் எழுந்திருக்கும் போதும் சரி, உட்காரும் போதும் சரி, ஏதோ ஓர் கடவுளின் பெயரை சொல்லி விட்டு தான் உட்காருவார்கள். இங்கு தாத்தா கக்கூசில் உட்காரும் போது முருகா என்று சொல்லி உட்காருவார்.. சின்ன விஷயம் தான் ஆனால் அவசியம் சேர்க்கப்பட வேண்டிய ஒன்று..
அடுத்து சமூக பிரச்சனையை சொல்லும் காட்சி.. எந்த ஒரு கலையும் அதன் சமூகப் பார்வையோடு ஒன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து.. இந்த படத்தில் மெட்ராசில் அப்போதிருந்த தண்ணீர் பிரச்சனையை விவரித்திருப்பார்.. சோப்பு கொண்டு வரும் வள்ளி தாத்தா குளிப்பதை ரசித்து பார்த்து கொண்டிருக்கிறாள்.. எவ்வளவு அழகான முகம் அந்த குழந்தைக்கு.. என் தாத்தாவை பார்ப்பது போன்று இருந்தது சொக்கலிங்கம் பாகவதர் குளிக்கும் போது.. உலகில் உள்ள அனைத்து தாத்தாக்களும் பேத்திகளும் அழகு தான்.. அவர்களிடம் ஒருவரிடத்தில் ஒருவருக்கு, அழகான அன்பு இருந்து கொண்டே இருக்கிறது.. என் தாத்தாவும், என் தங்கையும் அது போன்று தான்.. ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தால் என்ன பேசிக் கொள்வார்கள் என்று தெரியாது, ஆனால் இதெல்லாம் என் தங்கை சின்ன வயதில் இருக்கும் போது தான்.. இப்போது அவளே தாத்தா ஏன் இப்படி மொக்க போடுறாரு என்று சொல்கிறாள்.. வயது வளர வளர நமக்குள் இருக்கும் அக அழகு வடிந்து கொண்டே இருக்கும் போல..
அடுத்தது இரவில் ஏற்படும் சண்டை.. காலையில் வாய்க்கு ருசியாக எத்தனிக்கும் அர்ச்சனாவுக்கு தாத்தா மீது பயம் உண்டாகிறது.. சந்தானம் போடும் சத்தம் தாத்தாவின் காதுகளில் விழுகிறது.. நான், அடுத்த நாள் காலையிலேயே கிளம்பி விடுவார் என்று நினைத்தேன்(மற்ற தமிழ் படங்களாக இருந்தால் இப்படி தான் இருந்திருக்கும்)..
ஆனால் யாருமில்லாத நிலையில் வந்த தாத்தாவுக்கு, அங்கிருந்து போகும் மனம் சட்டென்று எப்படி வரும்? அடுத்த நாளிலிருந்து அர்ச்சனாவுக்கு உதவி செய்யும் முனைப்பு வருகிறது.. ஒரு விதமான guilty feeling என சொல்லலாம்.. கிணற்றிலிருந்து, தண்ணீர் இறைக்கும் காட்சியில் இரண்டு விஷயங்களை விஷுவலாக காண்பிக்கிறார். மூச்சு வாங்கும் தாத்தா சிரமப்பட்டு தண்ணீர் இறக்குகிறார்.. அர்ச்சனா, தாத்தா செய்யும் உதவியில் முதலில் பூரிப்படைந்து பின்பு "இந்த கிழம் இன்னும் எவ்வளவு நாள் தங்குமோ?" என்ற பாவனையில் முதலில் சிரிப்பு, மெல்ல குறைந்து சோகத்தில் முடிகிறது அர்ச்சனாவின் முகம்..
அடுத்த நாளில் வீட்டுக்கார பெண்மனி பணம் கேட்பதும், அதை தாத்தா கொடுப்பதும் கொஞ்சம் எதார்த்தத்தை மீறிய ஒரு விஷயமாக இருந்தாலும், தாத்தா அர்ச்சனாவிடம், தான் பணம் தந்ததை சொல்லி இருந்தால் அந்த சினெமேடிக் காட்சி சமன் செய்ய பட்டிருக்கும்.. ஆனால் இந்த முடிச்சை பின்னால் உபயோகித்துக் கொள்கிறார் பாலு.. சாப்பாடு சாப்பிடும் நேரத்தில் அர்ச்சனாவுக்கும் தாத்தாவுக்கும் நடக்கும் சம்பாஷனைகள் வெகு இயல்பு.. என் அம்மாவிடம் விருந்தினர் யாராவது சாப்பாடு சூப்பர் என்று சொல்லி விட்டால் போதும், தனக்கு சாதம் இருக்கா என்று பார்க்காமல் அத்தனையும் அந்த பாராட்டியவருக்கே வைத்து விடுவார்.. நம் வீட்டுப் பெண்களுக்கு கிடைக்கும் ஒரே அங்கீகாரம் இந்த சாப்பாடு விஷயத்தில் தான்.. அடுத்தது தாத்தா கீரையை மறுக்கும் நிகழ்வு வீட்டில் உள்ள எல்லா வயதானவர்களும் செய்ய கூடியதே.. என் பாட்டி எவ்வளவு தான் பசி எடுத்தாலும் மிகவும் குறைந்த அளவிலேயே தான் சாப்பிடுவார்.. வீட்டில் சும்மா இருக்குற நமக்கு எதுக்கு அதிகம் ஆகாரம் என்பது போன்ற ஒரு நினைப்பு அவர்களினுள்ளே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் போல..
இந்த இடத்தில் ஒரு முக்கியமான அழகியலை சொல்ல மறந்து விட்டேன்.. பாலுவின் கேமரா தந்திரங்கள்.. நடுத் தெருவில் மரங்களின் ஊடே விழும் ஒளியை அவரைப் போல அழகாக வேறு யாரால் காட்ட முடியும்? வள்ளி உடம்பு முடியாமல் வீட்டுக்கு வந்ததும் அர்ச்சனா எரிந்து விழும் காட்சிகள் நான் என் வீட்டில் என் அப்பாவிடம் என் அம்மா(தாத்தாவை பற்றி) கத்துவதை ஞாபகப்படுத்தியது.. மருத்துவமனை வாசலில் அர்ச்சனா கூப்பிட்டதும் சின்ன குழந்தை போல் ஓடி வருவது ஆகட்டும், ரிக்ஷாவில் வள்ளியின் கால்களை தன் மடியில் போட்டு கொள்வதாகட்டும், சொக்கலிங்க பாகவதர், மனதை கரைத்து விடுகிறார்..
பாலு மகேந்திரா
யோசித்துப் பாருங்கள் சிவாஜி போன்ற நடிகர் இந்த வேடத்தில் நடித்திருந்தால், ஒரு எழவும் நமக்குத் தோன்றியிருக்காது.. ஆனால் பாலு முதலில் அவரைத் தான் நடிக்க வைப்பதாக இருந்தது போல..
அன்றிரவில் நடக்கும் வாக்குவாதங்கள் எல்லோர் வீட்டிலும் நடந்து கொண்டிருப்பதே.. தாத்தா தன் கௌரவத்தை விட்டு கொடுக்க மாட்டார்.. மறு நாள் காலை, ஒரு அற்புதமான ஷாட்டை வைத்திருப்பார் பாலு.. சந்தானம் எழுந்தவுடன் குழந்தையின் கழுத்தை தொட்டுப் பார்ப்பார். என் அப்பா நான் முதல் நாள் இரவில் சற்று லேசாக இருமினாலும், மாத்திரை கொடுத்து, அடுத்த நாள் காலை எழுந்தவுடன் என் கழுத்தை வந்து தொட்டு பார்த்துவிட்டு தான் பல் தேய்க்கவே போவார்..
இதில் இன்னொரு அழகான விஷயம் குழந்தை வள்ளி உண்மையிலேயே தூங்கி கொண்டிருக்கும் போது தான் அந்த ஷாட் எடுக்கப் பட்டிருக்க வேண்டும்.. அது தூக்கக் கலக்கத்தில் மூக்கை நோண்டி, உதடுகளை சிறு அசை போடும் அந்த அற்புதமான சிணுங்கல்கள், மிக இயற்கையாக அமைந்துள்ளது..
அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது.. எந்த வித லாஜிகல் தவறுகளும் இருக்கக் கூடாதென்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார், பாலு..
அர்ச்சனா, தாத்தா தனது பையை எப்படி எடுத்து போயிருப்பார் என்று கேட்கும் போது, சந்தானம், ராத்திரியே எடுத்து வைத்திருப்பார் என்று சொல்லி எவனும் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு, பிழைகள் மிகவும் குறைந்த ஆக்கமாக கொடுத்திருக்கிறார்.. தாத்தா முதியோர் இல்லத்தில் சேரும் போது அவரைப் பற்றிய விவரங்கள் எடுக்கும் பெண் அவருக்கு இடது பக்கம் அமர்ந்திருப்பார். ஆனால் தாத்தாவோ வலது புறத்திலிருந்து பதில் சொல்லித் திரும்புவார்.. இது சாதாரணமாக கண்டு கொள்ளப்பட வேண்டிய, கதையின் போக்கை தடை செய்யும் தவறு அல்ல என்றாலும், பாலு இந்த இடத்தில் கொஞ்சம் சொதப்பிவிட்டார்.. நான் தான் தப்பாக புரிந்து கொண்டேனோ என்று திரும்ப திரும்பப் பார்க்கையில், பாலுவின் தவறு தான் என்று விளங்கியது..

அடுத்து வரும் தாத்தாவின் நாடக நடிப்பு காட்சி அற்புதம்.. பின்னி எடுத்திருக்கிறார் மனுஷன்.. நடிப்பு முடிந்தவுடன், ஒரு 'கெத்'தோடு நின்று கொண்டிருப்பார் தாத்தா.. நான் சொன்ன இரண்டாவது சிறந்த communication தாத்தா சொந்த ஊரிலும் இல்லை என்று தெரிய வரும் செய்தி. அங்கேயும் இல்லையா என்று தொடர்ந்து பீடிகை போட்டு, நொண்டி தாத்தாவிடம் சொல்வதாக முடியும். அர்ச்சனா தாத்தாவை வந்து பார்க்கும் காட்சிகள், தாத்தா அர்ச்சனாவை, மற்ற முதியோர்களுக்கு அறிமுகப்படுத்தும் காட்சி எதார்த்தத்தின் உச்சம்.. கடைசியில் குழந்தையின் பிறப்புறுப்பை பார்ப்பது, குழந்தையின் கை விரல்களைப் பிடிப்பது என கவிதையாக, மன நிறைவாக முடிகிறது படம்..
படம் பார்த்து முடித்த உடன் ஓர் அழகான உணர்வு என்னுள் இறங்கியது.. இவ்வளவு அருமையான படம் ஏன் பெரிதளவில் கொண்டாடப்படவில்லை?.. என்ன ரசனை நம் மக்களுக்கு? என்பது போன்ற நியாயமான கேள்விகள் என்னுள் எழுந்தது..
படத்துக்கு தேசிய விருது கிடைத்தது..
அவ்வளவு தான்..
அதைத் தவிர வேறு எந்த அங்கீகாரமும் ஏன் கிடைக்கவில்லை?..
இப்படத்தை பார்த்து பிடித்தவர்களுக்கு நான் கூறிக் கொள்வது ஒன்று தான். பாலுவின் கதை நேரம் டெலி ஃபிலிம்களையும் பாருங்கள்..
அந்த ஆக்கங்களிலும் இந்தப் படத்தில் இருந்த தரம் இருக்கும்.
[நன்றி :பிரசன்ன கிருஷ்ணா .ஒரு சினிமாவை ஆழமாக ரசிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுத்ததற்கு !]

வி.ஏ. சிவ அய்யாத்துரை

வி.ஏ. சிவ அய்யாதுரை

வி.ஏ. சிவ அய்யாதுரை
கணினியுடன் இணையமும் பயன்பாட்டுக்கு வந்ததும் அதனுடைய வளர்ச்சி வேகம் இருமடங்காகியது என்றால் அது மிகையாகாது. அதுவும் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தக்கூடிய சாதனங்களின் வளர்ச்சியும், அதனைச் சார்ந்த மென்பொருள்களின் வளர்ச்சியும் விண்ணைத் தொட்டது.

புறாவைப் பயன்படுத்தி தூது அனுப்புவது முதல், அஞ்சலகம் மூலம் கடிதங்களைப் பெற்றவரைக்கும் தகவல் தொடர்பானது ஒரு சீரான இடைவெளியில் வளர்ந்துகொண்டே வந்தது. கணினி என்ற ஒரு வஸ்துவை கண்டுபிடித்த பிறகு, தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியை யாராலும் தடுத்த முடியவே இல்லை.. மின்னஞ்சலைக் கண்டுபிடித்து, அதனை முதன் முதலாக உலகிற்கு அளித்தவர் ஒரு தமிழரே!

அந்த வகையில் நாம் அன்றாடம் தகவல் தொடர்புக்குப் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையும் ஒன்று. இந்த மின்னஞ்சல் சேவையை gmail உட்பட பல்வேறு நிறுவனங்கள் நமக்கு இலவசமாக அளிக்கின்றன.

தற்போது மின்னஞ்சல் இல்லையென்றால் உலகத்தில் முக்கியமான அலுவலக கோப்பு பரிமாற்றங்கள் முதல், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் வரை அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். அந்த அளவிற்கு மின்னஞ்சலின்
இத்தகைய பயன்மிக்க மின்னஞ்சலை கண்டுபிடித்து தகவல்தொடர்பு உலகிற்கு அர்ப்பணித்தவர் ஒரு தமிழர் என்றால் நம்மால் நம்பமுடிகிறதா?

V.A. சிவா அய்யாதுரை என்ற பெயர்கொண்ட இவர்தான் பயன்மிக்க மின்னஞ்சலை உருவாக்கியவர்.
மின்னஞ்சலைக் கண்டுபிடித்தபோது இவருக்கு பதினான்கு வயது மட்டுமே.. ஆச்சர்யமாக இருக்கிறதா? மிகவும் இளவயதிலேயே இச்சாதனையை இவர் நிகழ்த்தியிருக்கிறார்.
பல இழுபறிகளுக்குப் பின்னரே இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு அமெரிக்க அரசாங்கம் காப்புரிமை கொடுத்தது. 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முப்பதாம் நாள்தான் முறையாக இவர் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமையைப் பெற முடிந்தது. இதற்கிடையில் இவர் கண்டுபிடித்த இந்த வியத்தகு கண்டுபிடிப்பிற்கு பலரும் சொந்தம் கொண்டாடினார்கள் என்பது வேறு கதை.
மாணவப்பருவத்தில் தான் கண்டுபிடித்த மின்னஞ்சலுக்கு காப்புரிமைப் பெற நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டார். இதைப்போன்ற கஷ்டகாலம் மற்ற இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கும் வரக்கூடாது என்ற எண்ணத்தில் இவர் இன்னொவேஷன் கார்ப்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, புதிய கண்டுபிடிப்பாளர்களை  ஊக்குவிக்கும் வகையில் ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகையும் அறிவித்திருக்கிறார்.
இன்றைய நிலையில் பல்வேறு தொழில்களுக்கு சொந்தக்காரரான சிவா அய்யாதுரை அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகம் MIT யில் விரிவுரையாளரும் கூட.
அமெரிக்க தமிழர் பேரவை பெட்னா அவரை கௌரவித்து சிறப்பித்துப் பாராட்டியிருக்கிறது.
 இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் மின்னஞ்சலைப் பயன்படுத்தும் பொழுதும், திரு. வி.ஏ. சிவா அய்யாதுரையே உங்களின் நினைவுக்கு வருவார் என நினைக்கிறேன்.
 இன்று அனைவராலும் பயன்படுத்துக்கூடிய, மிகச்சிறந்த என்று அழியாத ஒரு கண்டுப்பிடிப்பை நிகழ்த்தி, உலக மக்களுக்கு வழங்கிய திரு. சிவா அய்யாத்துரை அவர்களை வாழ்த்திப் பாராட்டி இணையவெளி தன நேசத்தைப் 
பகிர்ந்து கொள்கிறது.

Tuesday 13 November 2012

கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்


அரவிந்த் சச்சிதானந்தம்


கைக்குட்டைகளும் டிரான்ஸ்வெஸ்டிசமும்

அரவிந்த் சச்சிதானந்தம்


“Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia

கைக்குட்டை  என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமாக இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர்  விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதத்தில்  நான் ஆயிரம் ரூபாய்க்கு கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்கு புரியும். ஒரு வருடத்திற்கு சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே செலவளிக்கிறேன். நான் என்ன செய்வது ! வேறு வழி இல்லை…

ஏதோ நான் கைகுட்டையை  வைத்து பாய்மரக்கப்பல் செய்வதாக  நீங்கள் நினைத்துவிடாதீர்கள். நீங்கள் எதற்காக கைக்குட்டை பயன் படுத்துகின்றீர்களோ அதே காரணங்களுக்காக கைக்குட்டையை பயன்படுத்தும்  ஒரு சாதாரண  மனிதன் தான்.. ஆனால் என் வாழ்க்கையில் கைக்குட்டைகள் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் விளைவுகள் சாதரனமானவையன்று.

“பத்திரம்டா ! எங்கேயும் கீழ விட்டுறாத…” ஒவ்வொரு முறையும் அம்மா சொல்லுவாள், அந்த கைகுட்டைய என் யுனிபார்ம்  ட்ரௌசரோட சேர்த்து ஊக்கை குத்தும் போது.

அழகான பூ போட்ட  வெள்ளை நிறக் கைக்குட்டை அது. என் வாழ்க்கையில் அதன் பின் ஏனோ பூ போட்ட கைக்குட்டை உபயோகப்படுத்தவில்லை. யாரும் உபயோகப்படுத்த விடவில்லை. பூ போட்ட கைகுட்டைகளும்  குடைகளும் பெண்களுக்கு  மட்டுமே உரித்தானவையென்று இங்கு ஏனோ நம்பப்படுகிறது. பூக்கள்,ஜனனம் முதல் மரணம் வரை மனிதனின் வாழ்கையை ஏதோ ஒரு வகையில் அலங்கரிகின்றன.

ஆண் கடவுளுக்கு பூ சூட்டி அழகு பார்க்கும் இந்த சமுதாயம், பூவை பற்றி ஒரு சராசரி ஆண் பேசினாலே அவனை விசித்திரமாகப் பார்க்கிறது. பூக்கள் ஆண்மையின் பலவீனமாகவும் பெண்மையின் அடையாளமாகவும் பார்க்கப்படுவது ஆணாதிக்கத்தின் உச்சம்.

ஆறாம் வகுப்பு  படிக்கும் போது பூ வரைந்த கைக்குட்டையை வைத்திருந்த  ராமஜெயத்தை எல்லாரும் அழும்  வரை கேலி செய்தது எனக்கு இன்னும் நினைவிலுள்ளது. எனக்கும் அந்தக் கைக்குட்டை ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அதை வெளியே சொல்ல  இயலவில்லை. நண்பர்கள் என்னை  ஒதுக்கி வைத்திடுவார்களோ  என்ற பயம்.வீட்டிலும் ஒரு  நாள் பூ போட்ட புடவையை  முகர்ந்து பார்த்ததற்கு அம்மா சூடு போட்ட அந்த தழும்பு இன்னும் என்  வலது துடையை உறுத்திக்கிட்டிருக்கு. அதனால் எனக்கு பிடித்த பல விடயங்களை வெளியே சொல்லாமல்  ஆசையை மனதில் வைத்தே பூட்டிக் கொண்டேன்…

சிறு வயதிலிருந்தே எனக்கும் கைகுட்டைக்கும் முரண்பட்ட ராசி. ஒவ்வொரு  முறையும் நான் கைக்குட்டையை தொலைத்துவிட்டு வந்து நிற்கும் போது  விளக்குமாற்றில்  அடி விழும். கீழே சிதறி விழும் குச்சிகளை மீண்டும் எடுத்து  சொருவி மறுபடியும் அம்மா அடிப்பாள். என்னை அடிக்கிறதுக்கு அவளுக்கு  ஏதாவதொரு காரணம் வேண்டும்.

“ஒரு கைக்குட்டையை தொலச்சதற்க்கா இப்படி போட்டு அடிக்குற”, வினவிய பக்கத்து வீட்டு அத்தையை அம்மா பார்வையாலேயே வெட்டினாள்.

“எம் புள்ளைய தான அடிக்கிறேன் …நீ யாருடி சக்காளத்தி !” அம்மா எல்லாரையும் இப்படிதான் தரைக்குறைவாக பேசுவாள். அதனாலேயே யாரும் மத்தியஸ்தத்திற்கு வரமாட்டார்கள்.

ஒவ்வொரு முறையும் கைக்குட்டையை தொலைத்து விட்டு நான்  ‘தேமே’ என்று அம்மா முன்னாடி வந்து நிக்கும் போதெல்லாம், அம்மா சாமியாட தொடங்கிவிடுவாள்.

அம்மா அடிக்கும்போது  அவள் கண்கள் சிவந்து, முகம் சிடு சிடுவென்று  இருக்கும். எதுவும் பேசமாட்டாள். என்றாவது கோபம் உச்சத்தை அடையும் போது, வெறிபிடித்தவள் போல் கத்துவாள். என்னை அடிக்கும் போது அவள் உடம்பு குளிர் ஜுரம் வந்தது போல் நடுங்கும்.மூச்சு இறைக்கும். ஆனாலும் முயன்று என்னை அடிப்பாள்.

“ஏன்டா உன் புத்தி இப்படி போகுது…பொருள தொலைச்சதற்கு பேயாடுறேன்னு சொல்ற முண்டைகளுக்கு என்ன தெரியும்,என் கவலை… !!!! “ ஒவ்வொரு முறையும் இதை சொல்லிடும் போது அவள் கண்கள் கலங்கிடும்.

“……..பொட்ட புத்தி உனக்கெதுக்கு டா !” அப்போது தான் எனக்கு விளங்கிற்று. நேற்று மொட்டைமாடியில் உலர்ந்துக் கொண்டிருந்த என் அக்காவின் சிகப்பு தாவணியை நான் நிரடிக்கொண்டிருந்ததை அம்மா பார்த்துவிட்டிருக்கிறாள்.

பெரும்பாலும்  அம்மா எதற்காக அடிக்கிறாள்  என்ற காரணம் மறந்து போய்விட்டிருக்கும். ஏதேதோ காரணங்களுக்காக அடிப்பதாலும், எந்த காரணங்களுக்காக அடித்தாலும் அடியும் வலியும் ஒரே மாதிரிதான் இருக்கும் என்பதாலும், நானும் காரணங்களை நினைவில் வைத்துக் கொள்வதில்லை.

“ஆண் பிள்ளைடா நீ …”என்று கூறி விட்டு மீண்டும் கலங்குவாள். கலங்கும் அவள் கண்களை காண தாளாமல் நான் அவள் கால்களை கட்டிக் கொள்வேன்.

“இனிமே இப்படி செய்ய மாட்டேன்மா ! நீ அழாத !”.

நான் என்ன தப்பு  செய்தேனென்று  எனக்கு விளங்காது. ஆனால் எங்க அம்மாவை ஆசுவாசப் படுத்த அப்படி சொல்லிவிடுவது வழக்கம். ஓரிரு நாட்களுக்குப் பின் எல்லாம் மறந்துவிடும். அக்காவின் தாவணியை எடுத்து உடலில் சுற்றிக் கொள்வேன். மறுபடியும் விளக்குமாறு குச்சிகள் சிதறும்.

அப்போதெனக்கு  பத்து வயதுதான் இருக்கும். நான் செய்வது தப்பென்று  எனக்கு தோன்றியதே இல்லை. ஆண்கள் மாதிரி சட்டை போடுற  பெண்களை நான் பார்த்திருக்கிறேன். எங்க பக்கத்துக்கு வீட்டு அக்கா எப்பவும் சட்டை பேன்ட் தான் போடும். ஆனால்  நான் புடவையை உற்றுப் பார்த்தாலே அம்மாவுக்கு கோபம் வந்திடும்.

“திருட்டுப் புத்தி வேறயா ?” மீண்டும் ஒருநாள் அம்மா சாமியாடினாள். இப்போது திருட்டுப் பட்டத்தையும் கொடுத்துவிட்டாள். அக்காவின் பூ போட்ட கைக்குட்டை என் பைக்குள் இருந்ததற்காக அம்மா சொல்லி சொல்லி அடித்தாள் “இது எப்படிடா உன் பையில வந்துது..குடிய கெடுக்கனே பொறந்திருக்கியா ! கோடரிக் காம்பே…”

அந்த கைக்குட்டை எப்படி என் பைக்குள் வந்தது என்பது எனக்கும் விளங்கவில்லை. ஒரு வேளை நான் தான் பையினுள் வைத்திருப்பேன். அப்போதெல்லாம்  ரயிலில் பத்து ரூபாய்க்கு மூன்று என பல வகையான   கைக்குட்டைகள் விற்கப்படும். அம்மா பெரும்பாலும் அதைத்தான் வாங்கித் தருவாள், எனக்கு கட்டம் போட்ட கைக்குட்டைகள், அக்காவிற்கு பூ வரைந்த கைக்குட்டைகள்.

இரு தினங்களுக்குமுன் அக்காவிற்கு கைக்குட்டை வாங்கிவந்தாள். அம்மாவிற்குத்  தெரியாமல் நான் எடுத்து  வைத்துக் கொண்டேன். எடுத்து  வைத்திருக்கலாம்… புடைவைகள், பூ வரைந்த கைக்குட்டைகள், தாவணிகள் போன்றவற்றை பார்த்தால் என் மனம் கட்டுப்பாட்டை இழந்து விடும். நடப்பது எதுவும் பெரும்பாலும் ஞாபகம் இராது. யாருக்கும் தெரியாமல் என் பையில் திருடி வைத்துக் கொள்வேன், ஓரிரு நாட்களுக்குபின் மீண்டும் அதே இடத்தில் வைத்துவிடுவேன்.

அன்று என் அம்மா  அக்காவின் கைக்குட்டையை திருடியதற்காக சாடும் போது சிரிப்புதான் வந்தது. ஒரு  நாள் அவள் மாங்காடு கோவிலுக்கு சென்றிருத்த போது, வீட்டிலிருந்த நான் அவளின் பழைய புடவையை எடுத்து சுற்றிக் கொண்டேன்.அது அவளுக்கு இன்னும் தெரியாது. தெரிந்திருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பாள். ஆனால் இன்று வெறும் கைகுட்டைக்காக அடிக்கிறாள்.

அம்மா ரொம்ப  நல்லவள், என்னை அடித்தாலும்…

பெரும்பாலும்  பிச்சைக்காரிகளுக்கு கொடுப்பதற்காகவே  தன் பழைய புடவைகளை எடுத்து  மூட்டைக் கட்டி வைத்திருப்பாள்.அவள் இல்லாத போது அதிலிருந்து  சில புடவைகளை எடுத்து ஒளித்து  வைத்துக் கொள்வேன். நிறைய  புடவைகள் இருப்பதால் அவளால் புடவை தொலைந்து போவதை கண்டு பிடிக்க இயலாது. யாரும் இல்லாத இடங்களில் அந்தப் புடவை என் தோளைத் தழுவும். பின் சாக்கடையில் நழுவும். பெரும்பாலும் யாரும் தென்படாத அந்த சுடுகாடு மண்டபத்தில்தான் நான் புடவையைப் பதுக்குவது, நெருடுவது, தோளில்சுற்றிக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவேன் .

என் தனிமையின்  பின்னால் ஒளிந்திருக்கும்  ரகசியங்களை  அம்மா எப்படியோ கண்டு கொண்டுவிட்டாள்.. அதன் பின் நான் பெரும்பாலும் தனியாக எங்கேயும் சென்றதில்லை. அம்மாவின் கழுகுப் பார்வையிலேயே என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சாமி படத்திற்கு பூ நான் தான் வாங்கி வருவேன். அதற்கும் தடை வந்து விட்டது.அம்மா தன் தலையில் பூ வைப்பதைக் கூட நிறுத்திவிட்டாள்…

நான் செய்வது  சரியா தவறா என்று தெரியாத  குழப்பத்தில் தான் என் வாழ்க்கை நகரத் தொடங்கியது. சரி-தவறென்று  பகுத்துச் சொல்ல வேண்டிய அப்பாவும் என்னுடன் இல்லை. என் அப்பாவை இது வரை நான் இரண்டு முறை தான் பார்த்திருக்கிறேன். என் அம்மா அவரின் புகைப்படத்தை எடுத்து வைத்துக் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நானும் பார்ப்பதால் அவர் முகம் எனக்கு மறக்கவில்லை.அவர் துபாய் சென்று பல வருடங்களாகிறது. நான்கைந்து வருடத்திற்கு ஒரு முறைதான் வீடு வருவார். கடைசியாக மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பார்த்ததாக ஞாபகம். நான் வளர்ந்ததெல்லாம் என் தாய், தமக்கை அரவணைப்பில்தான்.

முழு ஆண்டு  விடுமுறையில் என் சித்தி வீட்டில் கொண்டு விட்டுவிடுவாள் அம்மா. அங்கு சித்தியும், அவளின் பெண் மட்டும்தான் . என் சித்தப்பா நான் பிறப்பதற்கு முன்னே இறந்து விட்டார். என் சித்தி பெண் என்னைவிட வயதில் மூத்தவள். அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும், என் உடன் பிறந்த தமக்கையை விட. எப்போது நான் சித்தி வீட்டுக்கு போனாலும் அவளோடும் அவள் தோழிகளுடனும் தான் விளையாடிக் கொண்டிருப்பேன். என்னை அவள் தன் அனைத்து  தோழிகளிடமும் அறிமுகப் படுத்தி வைப்பாள். எல்லாரும் என்னை ‘தம்பி’ ‘தம்பி’ என்று செல்லமாக அழைப்பார்கள். அங்கேயே இருந்துவிடலாம் என எண்ணும் போது, அம்மா வந்துவிடுவாள், விடுமுறை முடிந்ததால் அழைத்து செல்வதற்காக.. வாழ்க்கையின் அழகான தருணங்கள் மிக வேகமாக கரைந்து விடுகின்றன… மீண்டும் விடுமுறையை எதிர்பார்த்து நான் வீட்டில் காத்துக் கொண்டிருப்பேன்…

“இந்த வருஷம் சித்தி வீட்டுக்கு போகல !” அம்மா கூறியவுடனே தூக்கி வாரிப் போட்டது.

“அப்பா வறார்டா….!”

எனக்கு எந்த சந்தோசமும் ஏற்படவில்லை. ‘அடுத்த வருஷம் வர வேண்டியவர் ஏன் இப்பவே வராரு’ என்றே தோன்றியது.

அம்மா ஏதோ வத்தி  வைத்திருக்கிறாள். ஒரு வேலை என் நடவடிக்கைகளைப் பற்றி  சொல்லி இருக்கலாம்.  பூமியே இருண்ட மாதிரி ஒரு மாயை. நான் செய்வதைப் பகுத்துப் பார்த்தறிய எனக்கு அந்த பத்து வயதில் விளங்கவில்லை. அம்மாவும் அக்காவும்தான் நான் செய்வது தப்பென்பார்கள். அப்பாவின் வருகையினால் சித்தி வீட்டு பயணம் தடைப்பட்டு விட்டது என்றதும் அப்பாவின் மீது வெறுப்பு தான் மிஞ்சியது .

அப்பா நிறைய பரிசுப் பொருட்கள் வாங்கி வந்திருந்தார். ‘உனக்குதான்டா’ என்றவாறே அவர் கொடுத்த அந்த பையை திறந்ததும், என்னால் என் சந்தோசத்தை அடக்கிக் கொள்ள இயலவில்லை. கலங்கிய கண்களுடன் அப்பாவைப் பார்த்தேன், அந்தப் பையினுள் இருந்த சுடிதாரை வெளியே எடுத்தவாறே.

“பை மாறி போச்சா ! அக்காகிட்ட கொடு…உன் பை இங்கிருக்கு ”
பின் அவர் கொடுத்த எந்த பொருட்களும் என்னைக் கவரவில்லை . என் கவனம் முழுக்க அக்காவிற்கு வாங்கிய அந்த நீல நிறச் சுடிதாரிலேயே இருந்தது….

அப்பா எதற்காக  வந்திருக்கிறார் என்றெனக்கு விளங்கவில்லை. அடிக்கடி அம்மாவும்  அப்பாவும் ஏதோ ரகசியம்  பேசிக் கொண்டனர். நான் அறையினுள்  நுழைந்தால்,பேச்சை நிறுத்திவிடுவார்கள். ஆனால் அப்பா என்னிடம் சகஜமாகத்தான் பழகினார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். நிறைய பொருட்கள் வாங்கித் தந்தார். எங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்துக் கொண்டிருப்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தது.

அம்மா மலிவு  விலை கைக்குட்டைகளை வாங்குவதைக்  கண்டு அப்பா கடிந்துரைத்தார். “உடம்ப தொடுற எந்தப் பொருளும் நல்ல ரகமா இருக்கணும்” அப்பா  சொல்லிக்கொண்டே இருப்பார். என்னை அறியாமலேயே என்மனதில்  அவர் வார்த்தைகள் பதிந்து  விட்டது. இன்று வரை எந்தப் பொருள் வாங்கினாலும் அப்பாவின்  வார்த்தைகளை பின்பற்றுவதன்  விளைவே பிராண்டட் கைகுட்டைகளுக்காக நான் பல ஆயிரங்கள் இறைக்கிறேன்….

“அக்கா கல்யாணம்டா….” இதற்கு தான் அப்பா வந்திருக்கிறார், கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பிவிடுவார் என்று நான் நினைத்துக் கொண்டேன். அதை உணர்ந்ததினாலோ என்னவோ ஏதோ சொல்ல வந்த என் தந்தை பேச்சை நிறுத்திக் கொண்டார்.

அடுத்த ஒரு  மாதத்தில் எங்கள் வீடு திருவிழாக் கோலம் பூண்டது. வேக வேகமாக கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. தினம் தினம் விருந்தாளிகள்  வீட்டை நிரப்பிக் கொண்டிருந்தனர். பக்கத்துக்கு தெருவில் ஒரு  லாட்ஜில் விருந்தினர்களுக்கு ரூம் போடப்பட்டிருந்தது. வரும் விருந்தாளிகளை லாட்ஜிற்கு  அழைத்து செல்வதே என் வேலை. எத்தனை வகையான மனிதர்கள் ! வகை வகையான ஆடை  அலங்காரங்கள் ! எங்கள் குடும்பம் இவ்வளவு பெரியது என இது நாள் வரை தெரியாது. அம்மா யாருடனும் ஓட்டமாட்டாள் என்பது விருந்தாளிகளாக வந்த பல பாட்டிமார்கள் சொல்லியே எனக்கு தெரிந்தது. என் வயது பையன்கள் நிறையப் பேர் வந்திருந்தனர். நாங்கள் அனைவரும் தெருவில் கிரிக்கெட் விளையாடுவோம். இரவில் கூட தெரு விளக்கின் துணையோடு கிரிக்கெட் கலைகட்டி கொண்டிருக்கும். இதுநாள் வரை இவர்களை அறிமுகம் கூட செய்து வைக்காத அம்மாவை எண்ணி நான் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தேன்.

ஊரிலிருந்து சித்தி தன் மகளுடன் வந்துவிட்டாள். நான் கிரிக்கெட்டில் நேரம்  செலவழித்ததால் என் சித்தி பெண்ணிடம் அதிகம் ஒட்டவில்லை.அவளிடம்  நான் திடீரென ஒட்டாமல் போனதை  அவள் ஒரு பெரிய அதிசயம்  போல் தன் தோழிகளிடம் விவரித்துக்  கொண்டிருந்தாள்.

“என் தம்பிய பாத்தீங்களா…பெரிய மனுஷன்…நம்ம யாருகிட்டயும் பேசமாட்றான்”
தோழிகள், அவர்கள் காதுகளுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொள்வார்கள். என்னை கேலி செய்கிறார்கள் என தெரிந்ததும் நான் என் உடன்பிறந்த அக்காவிடம் போய் சொல்லுவேன்.அவளும் எனக்காக மத்துசம் வாங்கிட வந்திடுவாள்…

“ஏண்டி கல்யாணப் பொண்ணே ! நீ உன் வேலைய பார்த்துகிட்டு போ…உன் தம்பிக்கு பத்து வயசுதான்…ஆனா.. ” நிறுத்திவிட்டு மீண்டும் என் தமக்கையின் காதில் ஏதோ சொல்லிட்டாள் என் சித்தி மகள். இப்போது எல்லாரும் என்னை நோக்கி சிரித்தார்கள், என் உடன் பிறந்தவள் உட்பட…

அக்காவின் கல்யாண வைபவத்தோடு சேர்த்து கேலிகளும்  கூத்துகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அக்கா புகுந்த  வீட்டிற்க்கு சென்று விட்டாள். வீட்டிற்க்கு வந்த விருந்தாளிகளும்  ஒவ்வாருவராக சென்றுவிட்டனர். இறுதியாக சென்றார்கள் என்  சித்தியும் அவளின் மகளும்.

“அடுத்தது இவளுக்குதான்டி.இப்பவே பைய்யன் தேட ஆரம்பிச்சாதான் இன்னும் ரெண்டு வருசத்துல முடியும்…அவரு திரும்பி துபாய் போகல…ஏதோ வியாபாரம் செய்றதா சொன்னாரு. அதனால அவரே எல்லாம் முன்னாடி நின்னு செஞ்சு வைப்பார்…நீ நல்ல பைய்யனா பார்த்து சொல்லு…” வாசலில் நின்று கொண்டே அம்மா சித்தியிடம் மனப்பாடம் செய்தவள் போல் ஒப்புவித்தாள்.

வெட்கத்துடன்  சித்தி மகள் “போயிட்டு வறேன் பெரியம்மா!” என்றவாறே என்னை பார்த்து குறும்பாக கண் சிமிட்டினாள்.

“மொட்டை பைய்ன் மாதிரி ஆடாத…வீட்ல அடக்கமா இரு.“ அம்மா அக்காவின் தோளில் தட்டியவாறே  கூறினாள்.சித்தியும் அவள் மகளும் வாசலில் இறங்கி நடந்தார்கள். ஆட்டோ பிடித்துக் கொண்டு வந்த அப்பா அவர்களை  பஸ் ஏற்றி விடுவதற்காக உடன் சென்றார்.

ஆட்டோ மறையும்  வரை கலங்கிய கண்களுடன்  நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.மணமாகிப் போய்விட்டாள். நெருடுவதற்க்கு அவள் தாவணி இனி இருக்காது. சித்தியின் மகளும் விரைவில் மணமாகி போய்விடுவாள். அப்பா  மீண்டும் வெளிநாடு போக போவதில்லை. ஏதோ மிகப் பெரிய சதி  என்னை சுற்றி நடந்துக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை மீண்டும் மீண்டும் இருள்கிறது. மருள்கிறது,  ஆட்டோவின் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்றன எண்ணங்கள். கலங்கின கண்கள். ஆட்டோ மறையும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆட்டோவின் பின் எழுதி இருந்தது, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்க்கு’ நான் எதையோ இழந்துக் கொண்டிருக்கிறேன். எது என்றுதான் விளங்கவில்லை……

அப்பா முன்னொருநாள் சொல்லாமல் தவிர்த்ததை அன்று  சொன்னார்,நிச்சயம் அம்மா உண்மைகளை ஓதி விட்டிருக்கிறாள். ”நான் துபாய்க்கு போகல. அம்மாக்கும் உடம்பு சரிபடல. அதனால உன்னை ஹாஸ்டெல்ல சேர்ந்த்துவிடலாம்னு இருக்கேன். நல்ல ஸ்கூல்டா. நிச்சயம் நீ பெரிய டாக்டரா இஞ்சினீயரா வரலாம். “

டாக்டரும் இஞ்சினீயருமே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் படிப்புகள் என நம்பும் இந்த மூட நாட்டில்,என் தந்தை ஒன்றும் விதிவிலக்கல்ல, அவரும் மற்றவர்களை போல என்னை இஞ்சினீயராக, டாக்டராக உருவாக்கிப்  பாக்க வேண்டும் என ஆசைப்பட்டார். என்னை முதல் நாள் அப்பா ஹாஸ்டலில் கொண்டு விடும் போது,வாங்கிய காசுக்கு அங்கிருந்தவர்கள் சொன்னார்கள், “நிச்சயம் இவனை பன்னிரண்டாவது வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வைக்குறோம்”

எனக்கு கண்கள் மீதும் இருட்டியது. நான் அப்போதுதான்  ஆறாம் வகுப்பு போக வேண்டும். அதற்குள் என் பன்னிரெண்டாம்  வகுப்பும் பிற்கால வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுகிறது.

“மாதம் ஒரு முறை நீங்க வந்து  பார்க்கலாம், வருடா வருடம் முழு ஆண்டு விடுமுறையில் 15 நாள் அவனைக் கூட்டி போய் வச்சுக்கலாம்” இன்னும் ஏதேதோ எழுதியிருந்தது அந்த தாளில். அப்பா உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்தார்.

“அப்பா எங்கயாவது போலாம்பா “ அப்பா எதுவும் பேசவில்லை. உடனே என்னை வெளியில் அழைத்து சென்றார். நான் அழுது கொண்டே இருந்தேன். அப்பா என்னை ஆசுவாசப் படுத்த முயற்சித்தும் பயனில்லை.  திடீரென்று அங்கு அமைதி குடிகொண்டது. நான் அழுகையை நிறுத்தியதற்கான காரணத்தை அப்பா கண்டுகொண்டார். அவருக்கு இந்நேரம் என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருக்கும். உபயம்:அம்மா.நான் தெருவில் ஒருவன் விற்றுக் கொண்டிருந்த கைக்குட்டைகளை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்.

“என் கூட வா” அப்பா வேகமாக ஒரு பெரிய துணிக் கடையினுள் என்னை அழைத்துச்சென்றார். எதிர்பாராத விடயங்கள் எதிர்பாராத
சமயத்தில் எதிர்பாராத மனிதர்களால் நிறைவேற்றிவைக்கப்பட்டு
விடுகிறது.பரந்த இவ்வுலகத்தில்
சந்தோசங்கள் சிறுசிறு விடயங்களிலும் ஒளிந்திருக்கிறது…

கடையை விட்டு நான் மலர்ந்த முகத்துடன் இறங்கினேன். அப்பாவின் முகமும்  மலர்ந்திருந்தது. அப்பாவின்  மீது பாசம் கூடிவிட்டது  எனவும் சொல்லலாம். அன்று  முழுக்க பல இடங்களுக்கு  அழைத்துச் சென்றார். எதிலும்  எனக்கு நாட்டமில்லை. என்  கவனம் முழுக்க அப்பா  வாங்கி தந்த அந்த பூ வரைந்த வெள்ளைக் கைக்குட்டையில் பதிந்திருந்தது..

ஹாஸ்டலில் கொண்டு விடும் போது கைக்குட்டையை அப்பா வாங்கி வைத்துக் கொண்டார்.என்னால்  எதுவும் பேச இயலவில்லை. அப்பா என் தலையை கோதியவாறே  சொன்னார், “நல்லா படிக்கணும், எது நல்லது எது கெட்டதுனு உனக்கே தெரியும்.”

அப்பா எதைக்  கெட்டதென்கிறார்….! சமுதாயம் வரையறுத்த கவைக்குதவா சட்டங்கங்களை கேள்விக் கேட்காமல் பின்பற்றுபவர்கள் நல்லவர்கள். அதில் சற்றே  பிறழ்ந்தாலும் ஒட்டுமொத்த சமுதாயமும் ஏசிடும். ஊரோடு  ஒத்து வாழ் என்பதே அப்பா  சொல்ல வந்தது.

போவதற்கு  முன் ஹாஸ்டல் வார்டனிடம் அப்பா வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்தியாவை  வல்லரசாக்குவதைப் பற்றியா  பேசியிருக்கப் போகிறார்கள் ! என்னை பற்றித்தான் பேசியிருப்பார்கள். ஹாஸ்டல் வார்டனும் என்னை  இரண்டு முறை திரும்பிப் பார்த்தது  எனக்கு என்னவோ போல் இருந்தது. இவர்கள் எல்லாரும் சேர்ந்து நான் செய்யாத தவறுக்கு என் மனதில் குற்ற உணர்ச்சியை ஏற்ப்படுத்தப் பார்க்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியும் பெற்று விட்டார்கள்.

அதனால் தான் பள்ளியை முடிக்கும்வரை  என் ஆசைகளை கட்டுப்படுத்திக் கொண்டேன், நான் தங்கியது ஆண் விடுதி என்பதால் நெருடுவதற்க்கு புடவைகளும் கிட்டவில்லை. என் நண்பர்கள் புடை சூழ வலம் வந்ததால் எனக்கும் புடவைகள் இன்னபிற இத்யாதிகள் மீது ஆர்வம் போய்விட்டதாகவே எண்ணினேன்……

ஆனால் கல்லூரி  வந்தபின் சக மாணவிகளின் ஆடைகளைப் பார்க்கும் போது என் உடலுக்குள்ளும் மூளைக்குள்ளும் மீண்டும் மணியடிக்கத் தொடங்கியது. பெண்களின்  சகவாசமேயின்றி பள்ளிப்  படிப்பு முடிந்ததால் எனக்குள் ஒரு  கூச்ச சுபாவம் குடிகொண்டுவிட்டது. அதனால் கல்லூரியில் நான் எந்த பெண்ணிடமும் பேச முயற்சித்ததில்லை.ஆனால் நீல நிற சுடிதார்கள் மீது எப்போதும் என் கண் படரும். அப்படி நின்று அந்த பெண்களின் ஆடைகளை பார்த்துக்கொண்டிருப்பேன் நான் அவ்வாறு வெறித்துப் பார்ப்பதைக்கண்டு, தங்கள் அழகில் மயங்கித்தான் நான் சொக்கி நிற்கிறேன் என்றெண்ணி உள்ளுக்குள் குளிர்ந்த அதிரூபசுந்தரிகள் என் கல்லூரியில் நிறைய உண்டு…

கல்லூரியிலும் விடுதி வாழ்க்கைதான். எப்போதாவது வீட்டிற்குச் சென்றால், அம்மா சில நேரங்களில் சந்தேகத்துடன் பார்த்தது இன்னும் நினைவிருக்கிறது.

“நான் இப்பெல்லாம் அப்படி இல்லைமா ” என்னை அறிமாலேயே ஒரு நாள் என் தாயிடம் சொன்னேன்.

“இன்னும் உன்னால சுதார்ப்பா இருக்க முடியல இல்லை”, சிடுசிடுத்தாள் அம்மா. ஆம். கல்லூரியிலும் என்னால் கைக்குட்டைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள இயலவில்லை. எல்லாம் விலையுயர்ந்த கைக்குட்டைகள்.எத்தனை கைக்குட்டைகள் வாங்கினாலும் இரண்டு நாட்களில் தொலைத்துவிடுவேன்.அம்மா காத்து கருப்பின் வேலையோ என எண்ணி கோவிலுக்கெல்லாம் அழைத்துச் சென்று மந்திரித்து விட்டிருக்கிறாள். எதுவும் பயன் தரவில்லை. இன்று வரை கைக்குட்டைகளை தொலைக்கும் பணியினை நான் செவ்வென செய்துவருகிறேன்.இன்று என் சுய சம்பாத்தியத்தில் வாங்கும் கைகுட்டைகளும் என்னிடம் நிலைப்பதில்லை.

பிராண்டட் கைக்குட்டைகள் மீது ஒரு வகையான  மோகம் படர்ந்திருப்பதால் ஒவ்வொருவாரமும் பல நூறுகள் செலவு செய்து
கைக்குட்டைகள் வாங்கிடுவேன்.
ஓரிரு நாளில் தொலைத்தும் விடுவேன் ….

அம்மா ஒரு முறை சொன்னது நன்றாக நினைவில் உள்ளது,
” நீ வேணும்னே தான்  தொலைச்சுட்டு வந்து நிக்கிற….”.
நானும் அன்று பல்லை
இளித்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு வேளை அம்மா சொன்னது உண்மையாக இருக்கலாம். நான் என் பாக்கெட்டில் கைக்குட்டை வைப்பது வரை நினைவிருக்கும். பின் தேடும்போது கைக்குட்டை அங்கிருக்காது. கைக்குட்டை எங்காவது விழுந்திருக்கலாம். பறந்திருக்கலாம். இல்லையேல் நானே தூக்கி எறிந்திருக்கலாம். பிடிக்காத பொருளை ஏன் வைத்திருக்கனுமென்று நான் எண்ணியிருக்கலாம். எதுவும் சரியாக நினைவிலிராது.

ஒரு பொருள் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அடுத்தவருக்கு இன்னது தான் பிடிக்க வேண்டும் என கட்டாயப் படுத்தும்போது காரணங்கள்  நிச்சயம் தேவை . பூ வரைந்த கைக்குட்டைகள்  எனக்குப் பிடிக்கும். அது எனக்கு பிடிக்கும் என்பது என்னை  சூழ்ந்தோருக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கு  காரணங்கள் தேவையில்லை. ஆனால்  அதை நான் ஏன் வைத்துக் கொள்ளகூடாது என்பதற்கு  இச்சமுகம் காரணம் சொல்ல  முன்வரவில்லை. அவர்களைப் பொறுத்த  வரையில் பூ பெண்மை சார்ந்தது. என்னை பொறுத்த வரை பெண்மை, பெண்ணை மட்டும் சார்ந்ததன்று. இதை என்னால் தர்க்கம் செய்திடமுடியும். ஆனால் செய்திட திராணியில்லை. உலகம் என்னை விசித்திரமாகப் பார்த்துவிடுமோ என்றொரு விசித்திரமான உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப் பட்டுவிட்டது. விசித்திரமாகப் பார்த்தால் என்ன !

சம்பாதிக்க  தொடங்கிய,பின் ஒரு முறை அந்த எண்ணத்தோடுதான் கடையில்  சென்று பூ வரைந்த கைக்குட்டை வாங்கினேன்.
“சார்! இது உங்களுக்கா !” ஆச்சர்யத்துடன் வினவினான் கல்லாவில் அமர்ந்திருந்தவன். நான் எதுவும் பேசமால் நின்று கொண்டிருந்தேன்.
“இல்ல சார். பூ போட்டு இருக்கே அதான் !” மீண்டும் சற்று ஏளனமாக வினவினான் அவன்.
“ஓ! மாறி போச்சா…வேற எடுத்திட்டு வரேன் “என்று நான் வேகமாக உள்ளே சென்றேன். பின் வேறொரு கைக்குட்டையை, உலக மொழியில் சொல்லவேண்டுமெனில், ஆண்கள் பயன்படுத்தும் கைக்குட்டையை வாங்கிவந்தேன்.
நான் நினைத்திருந்தால்,அது எனக்கு தான் என்று தைரியமாக சொல்லியிருக்கலாம். இல்லை என் தமக்கைக்கு என்று பொய் சொல்லிருக்கலாம். ஆனால் எதுவும் செய்யவில்லை. செய்ய முடியவில்லை. அவனும் ஏன் அப்படி வினவினான் என்று எனக்கு விளங்கவில்லை. என்னைப் பார்த்தவுடேனே ஏதாவது கண்டுகொண்டு விட்டானா? அவனின் ஏளனப் பார்வை நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ண வைத்தது. நான் என்ன தவறு செய்துவிட்டேன் !

பெண்மையை போற்றுவோம் எனக்கூறும் சமுதாயம் ஆண்களிடத்தில்  பெண்மை இருந்தால் ஏன் ஏற்றுக்  கொள்வதில்லை? நான் அவ்வாறு கேள்வி கேட்பதே   தவறோ ! ஆண்மை பெண்மை என பாகுபாடுகள் எவ்வாறு வந்தது. ஆண்மையின் குணங்கள் இவை, பெண்மையின் குணங்கள் இவை என வரையறுத்தது யார் ! வரையறுக்கும் உரிமையை அவர்களுக்கு யார் வழங்கியது. பெண்மையும் பெண்ணியமும் வெவ்வேறோ ! ஆண் போல் வாழ்வதே பெண்ணியம் என ஏன் பெண்ணியம் பேசும் பெரும்பாலானோர் கருதுகின்றனர்  ! அப்படியெனில் பெண்மைக்கான அடையாளம் எது ! ஆண்மைக்கான அடையாளம் எது ! அடையாளங்களை அடையாளப்படுத்த யாரால் முடியும். !
தாய்மை பெண்மையின் அடையாளமெனில், தாய்மை ஒரு உணர்வெனில், ஆணாலும் தாய்மை உணர்வை வெளிப்படுத்த இயலுமெனில், ஆணினுள்ளும் பெண்மை இருக்கு என்றுதானே அர்த்தமாகிறது. அவ்வாறெனில் ஆணும் இங்கு பெண்ணாகிப் போகிறான். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள ஆண்கள் ஏன் பயப்படுகிறார்கள். பெண்மையின் அடையாளங்களை துறப்பதே பெண்ணியம் என ஆண்கள் பெண்கள் உட்பட பலரும் ஏன் கருதுகிறார்கள்? பெண்ணியம் என்பது சமுக உரிமை சார்ந்த விடயமாயிற்றே ! அதை ஏன் பெண்மையோடு குழப்புகிறார்கள். பெண்மையை துறப்பதுதான் பெண்ணியமென்று ஏன் கூறுகிறார்கள். பெண்மை துறப்பதெனில் ஆண்மையை தழுவவேண்டும் என்றுதானே அர்த்தப்படுகிறது. அவ்வாறெனில் இங்கு பேசப்படும் பெண்ணியம் ஆணாதிக்கத்தை மறைமுகமாக ஆதிரிக்கின்றதோ !

பெண்ணியம் பேசும் ஆண்களும், ஆண்களிடத்தில் இருக்கும் பெண்மையை ஏன் வெறுக்கிறார்கள். பெண்ணியம் பெண்மை சார்ந்ததெனில் அவர்கள் (ஆண்கள்) பெண்மையை, அது யாரிடம் இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதானே ஆகவேண்டும். பெண்ணியத்திற்கும் பெண்மைக்கும் சம்பந்தம் இல்லையெனில், பெண்ணியம் என்பது யாது ! பெண்ணியம் பெண்களின் உரிமை சார்ந்தது என்றால், பெண்மைக்கும் பெண்ணியத்திற்கும் சம்பந்தம் இல்லையென்றால், பெண்மை பெண்களுடையது எனக் கருதும் பெண்ணியவாதிகள் பெண்ணியத்தை பெண்களோடு எவ்வாறு பொருத்துவார்கள் ! அவவாறு பெண்மை என்னும் உணர்வு பொருத்தப்படமால் அகற்றப் படும்போது, எல்லாரும் உணவற்ற ஒரே ஜடநிலையை தானே அடைகிறோம் ! ஜட நிலை உயிர் நிலை ஆகாதே . !

அப்படியெனில்  எல்லோரும் ஜடமா ! ஜடமில்லையெனில், உணர்வுகள் உண்டெனில், எல்லாவகையான உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமம்தானே ! அப்போது பெண்மை எனவும் ஆண்மை எனவும் எப்படி பாகுபாடுவருகிறது ! மெல்லிய குணம் பெண்மை, முரட்டு குணம் ஆண்மை என்கிறார்களா ! எத்தனை மென்மையான ஆண்கள் இங்குண்டு. அவர்களெல்லாம் பெண்களா? ஆதிகாலத்தில்-தாய் மண் சமுதாயத்தில்  வேட்டையாடியது பெண்கள்தானே ! அவ்வாறெனில் அவர்கெல்லாம் ஆண்களா ! இப்படி அடிக்கடி மாறிவரும் வரையறைகள் எப்படி நியமாக இருக்க முடியும்? நியாமற்ற வரையறைகளை ஒதுக்கிவிட்டால் ஆண்களும் பெண்களும் ஒன்றுதான் என்று தெளிவாகப் புரிந்துவிடுமே. ஆண்களும் பெண்களும் ஒன்றெனும் பட்சத்தில் இது ஆண்மைக்கான குணம், பெண்மைக்கான குணம் என்ற வாதம் உடைபட்டு போய்விடுகிறது. பாகுபாடுகள் தகர்ந்துவிடுகிறது. ஒரு மனிதனின் குணங்கள் தனிப்பட்ட மனித வாழ்க்கை சார்ந்ததாக மாறிவிடுகிறது. அவ்வாறெனில் தனிப்பட்ட மனிதனின் விருப்பு வெறுப்புகளில் தலையிட சமுதாயத்திற்கு யார் உரிமை அளித்தது ? சேலைகளை சுற்றிக்கொள்வதும், பூ வரைந்த கைக்குட்டைகளை பயன்படுத்துவதும் என் தனிப்பட்ட விடயமாயிற்றே ! இதற்க்கு இந்த உலகம் என்ன பதில் வைத்திருக்கிறது !

இது போன்று என்னுள் ஆயிரம் கேள்விகள் ஓடும். குறிப்பாக பெண்கள் உடை விற்கும் கடைகளுக்கு சென்றால் பல லட்சம் கேள்விகள் மனதில் எழும். அன்றும் இது போன்று சிந்தித்துக்கொண்டு நிற்கையில்தான் இனிமையான அந்த குரல் கேட்டு திரும்பினேன்.
“அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க, இந்தப் புடவை எப்படி இருக்குனு பார்த்து சொல்லுங்க ” இனிமையான அந்த குரலுக்கு சொந்தக்காரி என் மனைவி. நான் ஏதோ அவளுக்கு புடவை தேர்ந்தெடுக்கத்தான் ஆவலுடன் ஒவ்வொரு முறையும் கடைக்கு வருகிறேன் என இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறாள் என் அப்பாவி மனைவி . ஒவ்வொரு முறையும் அவள் புடவையை உற்றுப்பார்க்கும் போது, “உங்களுக்கு என் மேல ரொம்பத்தான் ஆசை” என்பாள் வெகுளியாக. இப்போது புடவையை அவள் உடுத்தியிருக்கும்போதே நெருடலாம்.என் மனைவியாயிற்றே !

“உன் புடவை நல்லாயிருக்கு,எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”ஒவ்வொரு முறையும் நான் சொல்லக் கேட்டு ரசிப்பாள். ஆனால் அதனுள் பொதிந்திருக்கும் உண்மையான உண்மைகளை, நான் சொல்லவந்த அர்த்தங்களை அவளால் புரிந்துக் கொள்ள முடியாது. புரிந்து கொண்டு விட்டால் நிச்சயம் அவளால் என்னோடு நிம்மதியாக வாழமுடியாது.

பல முறை யோசித்திருக்கிறேன், அவளின் கரங்களை பற்றி என்னைப் பற்றின உண்மைகளை சொல்லிவிடலாமென்று. ஏதோ சொல்லமுடியாத உணர்ச்சி, குற்ற உணர்ச்சி, என்னுள் விதைக்கப்பெற்ற அந்த உணர்ச்சி என்னைத் தடுத்திடும்.

பில் கவுண்ட்டரில் சொன்னேன், “அந்த நீலக் கலர் புடவை ரொம்ப நல்லாயிருக்கு. வாங்கிக்கோ “

“ஐ. மீன், உனக்கு ரொம்ப நல்லாயிருக்கும்”

“ஐம் மூவ்ட். எவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க என் மேல ! லெம்மீ டேக் இட்” என்றவாறே அந்த நீல நிற புடவையையும் வாங்கிக் கொண்டாள்…

என்னைப் பற்றிய ரகசியங்கள் யாருக்கும் தெரியாது. என் பெற்றோர்கள் என்  தமக்கையின் குடும்பதோடு  வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டனர். அவர்கள் என் ரகசியங்களை மறந்திருப்பார்கள். கால  ஓட்டத்தில் நான் மாறிவிட்டதாகவே அவர்கள் எண்ணுகிறார்கள். நான் என்ன தவறு செய்துவிட்டேன் ! மாற்றிக் கொள்வதற்க்கு…

என் மனைவியை  பொறுத்த வரையில் நான் ஒரு  உன்னதமான கணவன்.  ரகசியங்களை வெளிப்படுத்தி அந்த உறவினை நான் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும். வெளியே சொல்லிவிட்டால் அது ரகசியமாகாது.என்றாவது ஒரு நாள் என் மனதில் குற்ற உணர்ச்சி எழும், சமுதாயத்தால் விதைக்கப்பட்ட குற்ற உணர்ச்சி. என் மனைவியின் புன்சிரிப்பில் அது மறைந்துவிடும். என்னுள் ரகசியங்களை நான் புதைத்து வைத்திருந்தாலும், நாங்கள் எந்தக் குறையுமின்றி சந்தோசமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நானும் எந்தத் தடங்கலுமின்றி- தடங்களுமின்றி என் மனைவி வீட்டில் இல்லாத சமயங்களில் அந்த நீல நிறப் புடவையை என் மீது சுற்றிக் கொண்டுதான் இருக்கிறேன். பூ வரைந்த கைக்குட்டைகளையும் யாருக்கும் தெரியாமல் பயன்படுதிக் கொண்டுதான் இருக்கிறேன். யாரையும் பாதிக்காத இந்த விடயங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இது ஒரு சிதம்பர ரகசியம். உங்களுக்குள்ளும் ஆயிரம் ரகசியங்களுண்டென்று எனக்குத் தெரியும். அதையும் சிதம்பர ரகசியாமாகவே வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களை பாதிக்காத எந்த விடயமும் தவறில்லை, தப்பில்லை.அதனால் தைரியமாக உங்கள் ரகசியங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் ரகசியங்கள் ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்பட வேண்டும்….

இன்னும் சொல்வதற்க்கு நிறைய உண்டு. இப்போது நான் செல்ல வேண்டும், என் மனைவிக்குப் புடவை வாங்குவதற்காக. அப்படியென்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். உங்களுக்குத் தெரியும், நான் யாருக்காக புடவை வாங்கப் போகிறேனென்று…
அரவிந்த் சச்சிதானந்தம்

Congrats :for a difference:அரவிந்த் சச்சிதானந்தம்

எழுத்தாளர்,
சென்னை.
Thanks: Vallamai Minnidhazh.

Friday 9 November 2012

முத்துகிருஷ்ணனின் கதை

முத்துகிருஷ்ணனின் கதை
என் கதை

”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்” என்பது போல் எனக்கும் ஒரு கதை இருக்கும் தானே.

மதுரை மாவட்ட மங்கல்ரேவு கிராமத்தில் 1973ல் பிறந்தேன், எனது அப்பா அழகர்சாமி ஒரு கிராமப்புற விஞ்ஞானி, அம்மா பென்மலர் தையல் கலைஞர். எனது அப்பா வழி தாத்தா ஒரு நாடககலைஞர், அம்மா வழி தாத்தா நேதாஜியில் ஐ.என்.ஏ வில் பணியாற்றிய வீரர். எனது வளர் இளம் பருவம் வரை கோவா, ஹைதிராபாத், மும்பை நகரங்களில் வசித்தேன். அப்பா நவீன மும்பை தமிழ் சங்கத்தின் பல கால செயலராக இருந்ததால் இயக்க பணியின் அறிசுவடிகள் அறிமுகமானது. பல மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் சார்ந்த ஒரு கூட்டு வாழ்க்கை தான் இந்தியாவின் வேற்றுமைகள் குறித்த முழுமையான சித்திரத்தை அளித்தது. இந்த வேற்றுமையின் ஒற்றுமை என்றால் என்ன என்பதை என் பள்ளி வகுப்பறைதான் கற்றுக் கொடுத்தது.

மும்பை பள்ளியில் மராத்தியை தான் இரண்டாம் பாடமாக எடுத்து பயின்றேன். 1986ல் மதுரை நோக்கி பயணமானோம். அதன் பின் இங்கு பத்தாம் வகுப்பு வரை ஹிந்தியை மொழிப்பாடமாக எடுத்து பயின்றேன். மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்பில் டிப்ளமா முடித்தேன். அந்த காலகட்டத்தில் மின்னனுவியல் இத்தனை பிரம்மாண்ட வளர்ச்சியை கண்டிருக்கவில்லை, மதுரையில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இல்லை, அதனால் மெல்ல வேறு துறைகள் சார்ந்த வேலைகளை பார்க்க தொடங்கினேன். சில ஆண்டுகள் பல வேலைகள் செய்தேன் அதன் பின் சொந்தமாக பல தொழில்கள் செய்தேன். பெரும் மூலதனமோ, உறவினர்களின் ஆதரவோ இல்லாததால் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தே இளமை பருவம் கடந்தது. நண்பர்களான சிலரிடம் உதவி வேண்டி அவர்களுக்கு சேவகம் செய்தே வாழ்வில் பல ஆண்டுகளை, வயதை தொலைத்தேன்.

இந்த அலைக்களிப்பான மனநிலையில் இடதுசாரி இயக்கங்களுடன் தொடர்பு ஏற்பட்டது. பாபர் மசுதி இடிப்பு என் மனநிலையை வெகுவாக பாதித்த பின்புலத்தில் அந்த நேரம் தமுஎசவில் கலை இரவு மேடைகளில் ஒளித்த மதசார்பின்மையின் குரலை கேட்டு உறுப்பினரானேன். உடன் மார்க்சிஸ்டு கட்சியிலும் உறுப்பினராக இணைந்தேன். 10 ஆண்டுகள் தீவிரமான இயக்க அனுபவம். சில கசப்பான அனுபவங்களால் அங்கிருந்து வெளியேறினேன். வேலைக்கு செல்ல வேண்டும் அல்லது தொண்டு நிறுவனம் தொடங்க வேண்டும், இது தான் என் முன் இருந்த வேலை வாய்ப்பிற்கான தீர்வுகள். இரண்டையும் செய்ய கூடாது என்று அறுதி தீர்வு எடுத்தேன். இனி அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்தில் இருந்தும் விலகி நின்று என்னால் இயன்றதை இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று மனம் தன் நீரோட்ட படுகையை தேர்வு செய்தது.

தமிழக-இந்திய சமூகங்கள் சார்ந்த கேள்விகள் விவாதங்கள் என மனம் வாசிப்பின் மீது மையம் கொண்டது. வாசிக்க வேண்டும் என்றால் முதலில் தமிழ் மொழியை கற்க வேண்டும். 1996ல் தமிழ் மொழியை கற்கத் தொடங்கினேன். இடைவிடாத பயணமும் வாசிப்பும் என் வாழ்வில் புதிய அத்தியாயத்தை மலரச் செய்தது. மொழி இந்த நிலத்தின் சிறகுகளை எனக்கு அளித்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகமயம், சுற்றுச்சூழல், விவசாயம், மதவாதம், அரசியல், சர்வதேச அரசியல், விளிம்புநிலை மக்கள் ஆகிய பல்துறைசார் கட்டுரைகளை எழுதி வருகிறேன். தமிழில் முன்னணி இதழ்களில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளும், 11 புத்தகங்களும் வெளியாகியுள்ளது. மொழியாக்கங்களும் செய்து வருகிறேன். இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பல கருத்தரங்குகளில் தொடர்ந்து பங்கு கொள்வது எனது பார்வைகளை விசாலபடுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு எட்டு நாடுகளின் வழியே 10,000 கி.மீ, தரை வழியே பயணித்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்குச் சென்ற சர்வதேச குழிவில் இடம்பெற்றேன். இந்த ஆண்டும் ஜோர்தனில் நிகழ்ந்த பாலஸ்தீன நில மீட்பு போராட்டத்தில் பங்கு கொண்டேன். தொலைக்காட்சி ஊடகங்களில் சமூகம் சார்ந்த உரையாடல்களில் தொடர்ந்து என் கருத்துகளை பகிர்ந்து வருகிறேன்.

மாதத்தின் பாதி நாட்கள் பயணத்திலும், மீதி நாட்கள் மதுரை வீதிகளில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் தான் என வாழ்வில் இயல்பாக மாறிவிட்டது. எந்த வருமானமும் இல்லாமல் இது எல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று பலர் என்னிடம் விசாரிப்பதுண்டு. இந்த மொத்த நடவடிக்கைகளையும் நான் மேற்கொள்ள உறுதுணையாக இருப்பது எனது அதயந்த நண்பர்களும் எனது குடும்பத்தாருமே.

எனது காதலி சோபியா லாரன்ஸ், எனது தங்கை கல்யாணி - தட்சிணாமூர்த்தி, தம்பி ரவி - காமாட்சி,  இவர்களின் செல்வங்கள் அகில், யுவன், அனன்யா என அனைவரும் என் மீது கொண்ட நம்பிக்கையும் பிரியமும் தான் தொடர்ந்து செயல்பட ஆதாரமாக விழங்குகிறது. வகுப்பு தோழர்கள். கல்லூரி சகாக்கள், இலக்கிய வாசகர்கள், அரசியல் நண்பர்கள் என சகல இயங்குதலும் இவர்களின் அன்பு இல்லாமல் சாத்தியமில்லை
Thanks: Muththukrishnan.com

Tuesday 6 November 2012

வெங்காயம்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!
    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.
சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.  பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.    வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்  6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
 7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்து விடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
 20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
 26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
 47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.          

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன என்னபலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்துஅரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விடகாதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி
இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து
சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன்
சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச்
சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து
மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள்

ஜேக்கப் சகாயகுமார் அருணி


செஃப் ஜேக்கப்
செஃப் ஜேக்கப் என்று அறியப்படும் ஜேக்கப் சகாயகுமார் அருணியை, சில கட்டுரைகளை எழுதுவதற்காக சந்தித்து இருக்கிறேன். நமது உணவு, பண்பாடு பற்றிய ஆர்வத்தை வெளிப்படுத்திய ஒரு சில சமையல்கலை நிபுணர்களில் அவரும் ஒருவர். அவரது உதவியுடன் “தமிழ் பாரம்பரிய உணவு” குறித்து இந்தியா டுடே இதழிலும், பிறகு ஊர் சிறப்பு உணவு வகைகள் தொடர்பாக ஃபெமினா இதழிலும் எழுத வாய்ப்பு கிடைத்தது. வெறுமனே சுவை, செய்முறை, ஆங்காங்கே ஊட்டச்சத்து தகவல்களை தெளித்துத் தருவதிலேயே பெரும்பாலான சமையல்கலை நிபுணர்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஓர் உணவு, அதன் பின்னணி, வரலாறு, பண்பாட்டுடன் அதற்கிருந்த பிணைப்பு போன்றவற்றை வெகுமக்களை கருத்தில் கொண்டு முன்வைத்தவர்களில் ஒருவர் ஜேக்கப். பெரும் வணிக உணவகங்கள் வெளிநாட்டு உணவுத் திருவிழாக்களை நடத்தி வந்த நிலையில் சங்ககால உணவு, உள்ளூர் உணவு போன்றவற்றில் கவனம் செலுத்தியவர். இதற்கெல்லாம் மேலாக ஒவ்வொரு ஊருக்கும் உள்ள சிறப்பு உணவு வகைகளை பிரபலப்படுத்தியவர். அவற்றுக்கான பெயர் காரணங்களை விளக்கி, சில நேரம் குறிப்பிட்ட ஊரில் அதை சிறப்பாகச் செய்யும் நபரின் பெயரிலேயே உணவு வகைகளை அடையாளப்படுத்தியவர்.

உத்தமபாளையத்தில் பிறந்து மதுரையில் வளர்ந்த அவர், தனது அம்மா அளித்த ஊக்கம் காரணமாகவே சமையல்கலை நிபுணராக மாறியதாக முன்பு கூறியிருக்கிறார். ரசம் என்றிருந்து, பிறகு ரசா என்று பெயர் மாற்றப்பட்ட உணவகத்தை நிர்வகித்து வந்த அவர், சில மாதங்களுக்கு முன்னால்தான் சொந்தமாக ஜேக்கப்ஸ் கிச்சன் என்ற உணவகத்தை ஆரம்பித்தார். அதற்குப் பிறகு கூடுதலாக பரபரப்பாகிவிட்ட அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. பொதுவாக, பெரிய உணவகங்கள், பிரபல சமையல்கலை நிபுணர்களைப் போல பிகு செய்யும் பண்பை அவரிடம் நான் பார்த்ததில்லை. கட்டுரைகள் எழுதுவதற்காக அணுகியபோதும், உணவு தொடர்பான பிற சந்தேகங்களைக் கேட்டபோதும், நட்புணர்வுடன் பதில் சொல்வார். நமது உணவு, பண்பாட்டுடன் அது கொண்டுள்ள உறவு குறித்து தமிழ் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்திருந்தபோதும் (வீ.அரசு, பொ.வேல்சாமி, நாஞ்சில் நாடன் போன்றோர் இதற்கு உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்), அதை வெகுமக்களிடம் கொண்டு சென்றதில் ஜேக்கப் போன்றவர்களது பங்கு குறிப்பிடத்தக்கது என்று நினைக்கிறேன். மேலும், ஒரு சில ஊர்களின் அடையாள (சிக்னேச்சர்) உணவு வகைகளே பிரபலமாக இருந்த நிலையில், தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களில் புகழ்பெற்றிருந்த உணவு வகைகளை பிரபலப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

செட்டிநாட்டு சைவ, அசைவ உணவு வகைகள்தான் தமிழகத்திலும் வெளியிலும் பிரபலமானவையாக இருந்து வந்தது. உண்மையில் நம்முடைய ஒவ்வொரு பகுதிக்கும் தனிப்பட்ட உணவுக் கலை உண்டு. அவற்றை கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு உணவு வகைகளை தேடிச் செல்ல வேண்டும் என்று கூறுவார்.

ஒரு பிரபலமாக, அவர் நடத்திய டிவி சமையல்கலை நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை. நண்பர்கள் கூறி கேள்விப்பட்டது, செய்திகளில் பதிவானதை படித்ததுடன் சரி. அதிலிருந்து வித்தியாசமாக சமையல்கலை நிகழ்ச்சியை நடத்தினார் என்று தெரிய வந்தது. அவரது கின்னஸ் சாதனை போன்றவற்றிலும் எனக்குப் பெரிய ஆர்வமில்லை. (கீழ்க்கண்ட விஷயங்களுக்கும் திரு. ஜேக்கப்புக்கும் நேரடி சம்பந்தமில்லை. ஆனால், அவருடைய மரணத்துடன் சேர்த்து பேச வேண்டியவை இவை.)

துர்மரணம்


இந்த துர்மரணத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் ஜேக்கபின் வயது, வெறும் 37 என்பதுதான். சமீபகாலமாக எனக்குத் தெரிந்த வட்டத்தில் 35-45 வயதுக்குள் மாரடைப்பு, புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கட்டுமீறிப் பெருகிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இந்த மரணங்களுக்கான ஒட்டுமொத்தக் காரணம் அறுதியிடப்படவில்லை என்றாலும், இந்த மரணங்கள் அடிக்கோடிடும் செய்தி நமது உணவுப் பழக்கம், ஆரோக்கியத்தை பராமரிக்கும் முறையில் உள்ள பெரும் இடைவெளிகளையே சுட்டிக்காட்டுகிறது.

நமது உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இல்லை என்பது திட்டவட்டம். மற்றொன்று, உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பு நம்மிடம் சுத்தமாக குறைந்துவிட்டது என்பதுதான் (இந்த வரியை எழுதும் நானும் இதற்கு எந்த வகையிலும் விதிவிலக்கல்ல). நம்மிடையே உள்ள உடல்உழைப்பு, உடற்பயிற்சி சார்ந்த மனோபாவமும் சோம்பலும்தான் உடல்நலனுக்கு மிகப் பெரிய எதிரிகள். உழைப்பை மதிக்காத மனோபாவம், நமது சமூகத்தின் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள், சிக்கல்களுக்கு தோற்றுவாயாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில் உடல்நலனை முற்றிலும் பாதிக்கிறது.

மற்றொரு பக்கம், சமூக மாற்றம் உட்பட இன்னபிற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், நமது பணிகள் அனைத்துக்கும் மூலதனமாக இருக்கும் உடலுக்கு என்று சிறிதளவு நேரத்தைக்கூட ஒதுக்குவதில்லை. ஒரு யோகக்கலை நிபுணரை சந்தித்தபோது, “வாக்கிங் செல்வது என்பது நேரத்தை வீணடிப்பது என்ற மனோபாவத்தை முதலில் கைவிடுங்கள். உங்கள் உடல்நலனுக்காகத்தான் அந்த நேரத்தைச் செலவிடுகிறீர்கள்” என்றார். என்னுடைய சித்த மருத்துவ நண்பரும், விகடனில் நமது உணவுப் பாரம்பரியத்தின் மகத்துவம் குறித்து “ஆறாம் திணை” என்ற பெயரில் எழுதி வருபவருமான சிவராமன், 35 வயதுக்கு முன்னதாக உடற்பயிற்சி நடைமுறைகளை கட்டாயமாக கடைப்பிடித்தாக வேண்டும் என்கிறார். முடி கொட்டுவது முதல், மாரடைப்பு வரை பல்வேறு பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் நமது இதயம் சீராக இயங்க முடியாமல் போவதுதான். உடலின் ஒவ்வொரு நுண்ணிய பாகமும் ஒழுங்காகச் செயல்பட வேண்டுமானால், அதற்கு அந்த இடங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான ரத்தம் பாய வேண்டும். அதற்கு உடலை நாம் நன்றாக இயக்க வேண்டும்.

எதையோ நினைத்து, எதையோ தேடி கண்ணை மூடிக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். எப்போது நின்று திரும்பிப் பார்க்கப் போகிறோம்?

நன்றி-'கீற்று'- ஆதி வள்ளியப்பன்

Sunday 4 November 2012

செம்மங்குடி

செம்மங்குடி (தன் ஊர் தேடல்) – மெளனி

என் ஊர் செம்மங்குடி என நான் நினைக்கும்போது, அதற்கான ஒரு முக்கிய நியாயத்தையும் சொல்ல வேண்டி வருகிறது. என் தந்தை வழி மூதாதையர் அநேக தலைமுறைகள், சமீபகாலம் வரை, இந்த ஊரில் வீடு, சொத்து, சுதந்திரத்துடன் வசித்து வந்திருக்கிறார்கள்.

கர்நாடக சங்கீத உலகில் மிகவும் புகழ்பெற்று, இப்போது இருக்கும் செம்மங்குடி ஸ்ரீனிவாஸ அய்யரையும், காலஞ்சென்ற பிடில் வித்துவான் நாராயணசாமி அய்யரையும், அகால மரணம் எய்திய அவர் குமாரன் கலியாணசுந்தரத்தையும் தெரியாதவர்கள் மிகச் சிலரே, அவர்களும் இவ்வூர்காரர்களே.

ஒரு காரணச் சிறப்புப் பெயரென, ஓர் ஊரைக் குறிக்கும் இப்பெயர். (செம்–அம்-குடி; செம்–மன்–குடி; குடியிருக்கச் செம்மையான ஊர்.) மேலும் தஞ்சை ஜில்லாவில் அநேக கிராமங்களுக்கும் இப்பெயர் இருப்பதன் காரணமாக, எங்கள் ஊரை ‘தீபங்குடி செம்மங்குடி ‘ என்று பக்கத்து ஊரையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கம். பெயர்க் குழப்பத்தில் கடிதங்கள் தவறிச் சென்று விடாதிருக்க தபால் இலாகாவினர் செம்பங்குடி என்ற முத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள்.

கும்பகோணம் திருவாரூர் பஸ் பாதையில், குடவாசலைக் கடந்து, மேலும் ஐந்து மைல் செல்ல, காப்பணாமங்கலம் கிராமம் வரும். காப்பணாமங்கலத்திலிருந்து நேர் வடக்கே இருக்கும் பெரும்பண்ணையூர் செல்ல, ஆற்றிற்கு அங்கு ஒரு பாலம் இருக்கிறது. அதைக் கடந்தவுடன் கிளை பாதை என ஆற்றின் வட கரையிலும் தோப்பினுள்ளும், கோணல் மாணலாக செல்லும் ஒரு குறுகிய வண்டிப்பாதையில் அரை மைல் கிழக்கே சென்றால் செம்மங்குடியை அடையலாம். அடையுமுன் மேலக் குடியானத் தெருவையும், சமீபத்தில் ஊர்ச் செலவிலும் முயற்சியினாலும் ஏற்பட்ட செம்மங்குடி உயர்நிலைப் பள்ளியையும் தாண்டிச் செல்ல வேண்டும்.

இது ஒரு சிறிய கிராமம். வரிசைக்கு சுமார் இருபது வீடுகளைக் கொண்ட ஒரு கிழக்கு மேற்கு வீதிதான் அக்கிரஹாரம். மேலக் கோடியில் தெருவைப் பார்த்து நிற்கிறது ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோவில். கீழ்க் கோடியில் நேராக இன்றிச் சிறிது வடக்கே தள்ளி கிழக்கே எட்டிய தூரம் வரையில் காணக் கிடக்கும் வயல் வெளியைப் பார்த்து நிற்கும் கோவில் ஆனந்தவல்லி சமேத அகஸ்தீச்வரர் கோவில். கோவில்கள் எல்லாம் நல்ல நிலைமையிலே ஊர்க்காரர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அக்கிரஹாரத்தின் கீழ்க் கோடியிலிருந்து, தெற்கே செல்லும் சிறிது இரட்டை வரிசைத் தெருதான் கீழ்க்குடியானவர் தெரு. இது தெற்கே குடமுருட்டியாறு வரையிலும் சென்று முடிகிறது. ஊராருக்குக் குல தெய்வமாக விளங்கும் ‘கரும்பாயிரம் கொண்டவர் ‘ ஆற்றங்கரையிலே தேடிக் கண்டு பிடிக்கும் வகையில் ஒரு சிறு கூரைக்கு அடியில் இருக்கிறார்.

செம்மங்குடி ஒரு பாடல் பெற்ற ஸ்தலமல்ல. ஆயினும் இதைச் சுற்றி இரண்டு மூன்று மைல்களில் இருக்கும் பாடல் ஸ்தலமாகிய எண்கண், தலையாலங்காடு, ஸ்ரீவாஞ்சியம், அய்யம்பேட்டை முதலியவற்றிற்கு நடுநாயகம் போன்றே மத்தியில் இருக்கிறது. இது ஒரு புராதன ஜைன ஷேத்திரம். இங்கு ஒரு பழைய ஜைன கோயில் உண்டு. மேலும் இது, முதலாம் குலோத்துங்கன் சபையில் கவிச் சக்கரவர்த்தியாக விளங்கிய வரும், ‘கலிங்கத்துப்பரணி ‘ ஆசிரியருமான ஜயங்கொண்டாருடைய ஊராகும்.

தஞ்சை ஜில்லா பிராமண சமூகத்தில் ‘வாத்திமர் ‘ என்றொரு பிரிவுண்டு. இதிலும் அநேக உட் பிரிவுகள் உண்டெனினும் ‘பதினெட்டுக் கிராமத்து வாத்திமர் ‘ என்ற சுமார் ஆயிரம் குடும்பத்தினர் மாயூரம், கும்பகோணம், நன்னிலம் தாலுகாக்களில் உள்ள பதினெட்டுக் கிராமங்களில் இன்றுவரையில் வழிவழியாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த வாத்திமர்களில், ஒரு கோத்திரத்தினரைத் தவிர வேறொருவரும் இன்றி வசிக்கும் கிராமம்தான் செம்மங்குடி என்பது. ஆகவே கிராமத்தினர் எல்லோரும் நெருங்கிய பங்காளிகள். மூல புருஷனிடமிருந்து பதினான்கு தலை முறைகள் தாண்டாதவர்கள். அந்த முதல் மனிதன் என்று சொல்லக் கூடியவர். (ஸ்வர்ண சாஸ்திரி என்பார்கள்) சுமார் 450 வருஷங்களுக்கு முன் (சோழராஜ்யம் சீர்குலைந்து அரசியல் குழப்பமான நாளில் ) இந்த ஊரில் குடியேற ஆந்திர சோழ பிரதேசத்திலிருந்து வந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் குடி வந்த காலத்திற்கு முன்பே சுற்று வட்டாரத்தில் அநேக கிராமங்களில் இருந்தும், சகவாசத்திற்கு தூரத்தையும், வாசத்திற்கு தனிமையையும் விரும்பியவர் போன்று இந்த குடமுருட்டியாற்றின் கடைசி படுகையென சொல்லக்கூடிய செழிப்பிலும் விஸ்தீரணத்திலும் குறைவுகொண்ட இந்த இடத்தைப் பிடித்தார் போல்லும். அவர் வழி வந்தவர்களாகத்தான் இக்கிராமத்தினர், கிராமச் சண்டை பூசலின்றியும், அக்கம் பக்கம் கிராமத்தாருடன் நெருங்கிய சிநேகித தொடர்பு கொண்டும் இதுவரையிலும் வாழ்ந்து வருகிறார்கள். இக் கிராமத்தினர் பொது அறிவும் பகுத்தறிவும் கொண்ட புத்திசாலிகள். ஒரு நியாயப் போக்கு நடைமுறைகளும் இதற்கு மேலாக ஒரு critical sense சும் இவர்களிடம் இருப்பதை பழகி அறிய முடியும். தன்மானமுடையவர்கள். பிழைப்பிற்காக எதையும் செய்யலாம் என்ற நியதியை உடையவர்கள் அல்ல.

ஊரில் உள்ள மூன்று குளங்களில் இரண்டு, எப்போதும் எதற்காகவும் என எல்லோருக்கும் பயன்பட முடியாதென்பதில் ஒன்று ஒருவருக்கும் பயன்படாது, கவனிக்கப்படாது, பாழடைந்து கொண்டிருக்கின்றன.

சிவன் கோவில் குளம் மட்டும் ஒரு காவலில் உபயோகிக்க இருக்கிறது. ஆற்றங்கரையிலுள்ள ஸ்நானத்துறையும், பக்கத்து நந்தவனம், மடம் தோப்பு எல்லாமே இந்தக் கதிக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன. பழைய குதூகலம் மாறிவிட்டது. பேச்சில் சுவாரஸ்யம் குன்றி விட்டது. மனிதர்களிடம் மனச்சோர்வும் காண இருக்கிறது. ஊரும் தன் தனித்தன்மை இழந்து வருகிறது.

எப்பவோ ஆற்று வெள்ளத்தில் போய்விட்ட அக்காவை நினைத்து, புது வெள்ளம் வருமுன்னே அக்காவை திரும்பிப் பார்க்கும் ஆவலில் எங்கிருந்து எல்லாமோ அக்குக் குருவி சோகமுற கத்துவது கேட்கிறது. ஆங்காங்கே தோப்போடு அழிவுறாமல் தனித்து நிற்கும் மா மரங்களினின்றும் கேட்கும், குயில் கூவுதலிலும் இனிமை இல்லை. நந்தவனம் இப்படி தோன்ற இருப்பதிலேயே ஏன் பாழ்தோற்றம் கொள்ளுகிறது ? அநேக எதிரிகள் தங்கிப் போவதற்கும், ஊருக்கு பொது மடமாக இருந்தது இடம் தெரியாது பூமியில் புதைவு கொண்டு விட்டது. அரச மரங்கள் இரண்டு, சுற்றுவார் இல்லாது நின்று கொண்டிருக்கின்றன.

எங்கிருந்தோ மகிழம்பூ மணம் மூக்கில் இனிக்க உணர, அந்த இரண்டு மரங்கள் இருந்த இடத்தைப் பார்க்கிறேன். காலடியில் சிதறிய தன் பூக்களின் வாசனையை தாமே குனிந்து மகிழ்ந்து நிற்பது போன்றவை, இருந்த இடத்தில் இல்லை. ஆயிரம் காலத்திற்குப் பின்னும் வாட வாட மணம் கமழ விட்டு எங்கேயோ சென்றனவே போலும்………. வெகு அப்பாலிருந்து செம்மங்குடியின் சங்கீதமும், பிடிலும் லேசாக மிதந்துவருகிறது….ஆம். எப்போதோ சிவன் கோயிலில் நடந்த கச்சேரிதான்.

இப்படி இவ்வளவு காலம் தாவி தூரத்தில் தான் இனிமையெனப் படுகிறதா ? குடமுருட்டி ஆறும் இரு கூறாக பிரிக்கப்பட்டு வாய்க்காலாக தேய்ந்துவிட்டது.

இருட்டு காணும் முன்பு மாலை வந்து கொண்டிருக்கிறது. மயக்கமும் கூட வருகிறது. இன்று நடுப்பகல் வெயில் வெகு கடுமை…. வசீகர எண்ணங்கள் மறைய, வருங்கால நினைவுகள் தோன்ற இருக்கிறது.

இருள் சூழுமுன் , உள்ளூர் ஆற்றை கடக்குமுன் பயமேதும் தோன்றவில்லை. அப்பால் எல்லையில் உள்ளூர் மயானம் குறுக்கிடும்போது…. எரியும் சவ ஒளியில் முன் நீண்டு ஓடும் நிழலை பிடிக்க ஓடும் விளையாட்டா இந்த நடையின் ஓட்டம். இரவின் இருளில் கரையும்போது. தான் என்ன, தன் நிழல் என்ன ? நிசியில் தவறிய காகத்தின் கரைதலும் ஒளி கொள்ளுவதை அறிவிப்பதாகுமா ? வருங்கால நல்லுலகின் வானில் ஒளியைக் காண என் பவிஷ்ய புராண படிப்பு உதவாததை உணருகிறேன்.

எங்கிருந்தோ குலை நடுங்க ஓர் ஊளையிடும் சப்தம் கேட்க ஓடுவதைப் பார்க்கிறேன். எட்டிய வெளியில் தமுக்கொலி ஓர் அவல்யத்தில் ஊரை பிடிக்க வரும் துர்த்தேவதைகளை விரட்ட இருக்கிறது.

எங்கேயோ எட்டிய சகவாசத்திற்கும், தனிமை வாசத்திற்கும் என என் ஊரைத்தான் நான் தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன்.
நன்றி : சிங்கமணி
[தமிழில் எழுதிய தன்னிகரற்ற எழுத்தாளரான மௌனி தன ஊர் பற்றி எழுதிய இந்த அற்புதமான நடைச் சித்திரம் உங்கள் சொந்த ஊரைப் பற்றி நினைக்க  வைக்கிறது அல்லவா?பின்வரும் ஈமெயில்  முகவரிக்கு எழுதி  அனுப்புங்கள்.innayaveli@gmail.com
பிரசுரமாகும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூபாய் நூறு சன்மானம் தர ஐக்கியா டிரஸ்ட் நிறுவனம் சித்தமாக உள்ளது .கட்டுரைகளை ஒரு நூலாக்கும் திட்டம் உள்ளது . அவற்றை ஒருங்கிணைத்து தாரிணி பதிப்பகம் ஐக்கியா டிரஸ்ட்ஆதரவில் வெளியிடும் -ஆசிரியர்  ]

Saturday 3 November 2012

முழுமையான விமர்சகர் தமிழில் இல்லை.




தமிழில் விமர்சகர்களே இல்லை!
 வண்ணநிலவன்


இலக்கியம்’ கலையா, சமுதாய மாற்றத்துக்கான கருவியா என்ற விவாதம் இன்னும் நடந்து கொண்டிருப்பதுபோல், ‘விமர்சனம்’ என்பது ரசனை அடிப்படையில் அமைய வேண்டுமா, கோட்பாட்டு அடிப்படையில் அமைய வேண்டுமா என்ற சர்ச்சையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களும், தமிழ் விமர்சகர்களும் இரண்டு பிரிவாக நின்று இன்றும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கோட்பாட்டை முன்வைத்தே விமர்சனம் எழுதுகின்றனர். கல்வித் துறை சாராத விமர்சகர்களில் சிலரும் கோட்பாட்டு விமர்சனத்தை முன் வைக்கின்றனர். பாரதிக்குப் பிந்திய தமிழ் இலக்கியம் என்பது மணிக்கொடி போன்ற இலக்கியப் பத்திரிகைகளில்தான் வளர்ந்தது. இன்று போலவே அன்றும் இலக்கியப் பத்திரிகைகளில் விமர்சனம் என்பது பெரும்பாலும் புத்தக விமர்சனமாகவே இருந்தது.
ஒரு நாவலையோ அல்லது கவிதையோ அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட விமர்சனங்கள் மிக மிகச்சொற்பம். பெரும்பாலான விமர்சனக் கட்டுரைகள் போகிற போக்கில் அபிப்பிராயங்களை  உதிர்த்துச்சென்ற விமர்சனங்களாகவே இருந்தன; இருக்கின்றன. ஒரு படைப்பாளியின் ஒட்டு மொத்தப் படைப்புகளையும், அழகு கெடாமல் கலாபூர்வமாகவும், ஆழமாகவும் விமர்சித்த விமர்சனங்கள் இன்று வரை தமிழில் இல்லை.
கல்லூரிப் பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் கல்விப் புலத்திற்கு ஏற்ற சட்டகத்தில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், வண்டி வண்டியாகக் குவிந்து கிடக்கின்றன. ஒரு பக்கம் இலக்கியப் பத்திரிகைகளில் எழுதப்படும் புத்தக மதிப்புரைகளை விமர்சனமாகக் கருதும் போக்கும், இன்னொரு பக்கம் கல்வித் துறையில் எழுதிக் குவிக்கப்படும் வறண்ட ஆய்வுக் கட்டுரைகளுமே ‘தமிழ் இலக்கிய விமர்சனம்’ என்ற மயக்கத்தைத் தோற்றுவிக்கின்றன.
விமர்சனம் என்பது வெறும் கோட்பாடோ, ஆய்வோ அல்லது வெறும் ரசனை சார்ந்து உதிர்க்கப்படம் அபிப்பிராயங்களோ அல்ல. மொழியின் அழகும், படைப்பின் ஆழமும் ஒரு சேர வெளிப்படும் அபூர்வமான கலையே விமர்சனம் என்பது. ஒரு படைப்பையோ, அல்லது ஒரு படைப்பாளியின் ஒட்டுமொத்த மன உலகையோ நளினமும், அழகும் மிக்க உரைநடையில் ஆழமான வீச்சுடன் எழுதத் தெரிந்தவனே முதல் தரமான விமர்சகன். இதுபோன்ற விமர்சன மனோபாவம் கொண்ட விமர்சகர் தமிழில் இல்லவே இல்லை. இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லோரும் அரைகுறை விமர்சகர்களே.
பழைய சங்க இலக்கியங்களிலும், புதுமைப்பித்தனைப் போன்ற உரைநடையாசிரியரிடமும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த வையாபுரிப் பிள்ளை கூட, மேலெழுந்தவாரியான அபிப்பிராயங்களையும், முடிவுகளையுமே தனது கட்டுரைகளில் சொல்லிக் கொண்டு போகிறார். புதுமைப்பித்தனது சிறுகதைகளுக்கு முதல் முதலாக முன்னுரை எழுதிய ரா. ஸ்ரீ. தேசிகனின் அந்த முன்னுரைக் கட்டுரையில் மதுரமான நடையிருக்கிறது. ஆனால், ஆழமில்லை என்றாலும் வையாபுரிப் பிள்ளையும், ரா.ஸ்ரீ. தேசிகனும் வியக்கப்பட்டவர்கள். வையாபுரிப் பிள்ளையின் பழைய இலக்கியங்களில் கால நிர்ணயம் பற்றிய ஆராய்ச்சியில் உள்ள ஆழம், அவை எப்படி இலக்கியமாகின்றன என்பதில் இல்லை. இதை நுட்பமான வாசகனால் உணர்ந்து கொள்ள முடியும்.
புதுமைப்பித்தனைப் போல க.நா.சு, சி.சு. செல்லப்பா, தொ.மு.சி. ரகுநாதன், சுந்தரராமசாமி, இன்றைய ஜெயமோகன் வரை பல உரைநடையாசிரிகளும் விமர்சனக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றனர். புதுமைப்பித்தனுடைய விமர்சனக் கட்டுரைகள் அவரது சிறுகதைகளின் நடையைப்போல் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் ஜனித்தவை. மின்னல் கீற்றுகளின் ஜாலம் நிரம்பியவை.
‘க.நா.சு.’ என்ற க.நா. சுப்பிரமணியத்தின் விமர்சன பாணி அவரது தனிப்பட்ட ரசனையிலிருந்து உருவானது. ஆனால், அவரது ரசனை, உலக இலக்கியங்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்ட ரசனை. தனது ரசனையை அபிப்பிராயங்களாகவே வெளிப்படுத்தினார். ஆழம் அவ்வளவாக இல்லாதது. புதுமைப்பித்தனைப் போலவே மின்னல் கீற்றுகள் போல் சில பகுதிகள் தென்பட்டாலும், அவை விரிவற்றவையே.
சி.சு. செல்லப்பாவின் விமர்சனம் கல்லூரிப் பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களின் கட்டுரைகளைப் போல், படிப்படியாகத் தனது வாதங்களை எடுத்து வைப்பவை. விரிவான அலசல் விமர்சனம் அது. ஆனால், நளினமற்றது. நடையழகில்லாதது. தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பாரதியின் காலம் பற்றிய கட்டுரை சற்று ஆழமானதுதான். ஆனால், செல்லப்பா, க.நா.சு.வைப் போலவே மொழியின் அழகு கூடி வராதது.
சுந்தரராமசாமி விமர்சனக் கட்டுரைகளில் அவரது அபாரமான உரைநடை அழகு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், சுந்தரராமசாமி தனது முடிவுகளில் தவறு செய்யக் கூடியவர். ஒரு கவிஞனின் உணர்ச்சிகரமான மனநிலையைக் கொண்ட சு.ரா. சம்பத், இமையம், நாரணோ ஜெயராமன் போன்ற படைப்பாளிகளை மிகையாகப் பாராட்டியவர்.
ஜெயமோகன் தனது பெரும்பாலான கட்டுரைகளில், கோட்பாடுகளை நிறுவிவிட்டு, அதை நியாயப்படுத்தும் முயற்சிகளில் அலுப்பூட்டும் விதமாக ‘கூறியது கூறல்’ என்ற பிழையைச் சர்வசாதாரணமாகச் செய்பவர். (அவரது கதைகளும் இதே தன்மை கொண்டவைதான்.) சுந்தரராமசாமியின் காலடிச் சுவட்டில் நடப்பவராகத் தோன்றும் ஜெயமோகனால் ஒருபோதும், சு.ரா. தனது கட்டுரைகளில் தோற்றுவிக்கும் உரைநடையின் லகரியைத் தோற்றுவிக்கவே முடியாது.
‘வெ.சா.’ என்ற வெங்கட் சுவாமிநாதனும் உணர்ச்சிகரமான, வேகமான உரைநடைக்குச் சொந்தக்காரர்தான். இவர் இலக்கியத்தைத் தாண்டி நாடகம், சினிமா, ஓவியம் குறித்தும் தீவிரமான அபிப்பிராயங்களைச் சொல்கிறவர். ஆனால், தனது அபிப்பிராயங்களைத் தரப்படுத்தாமல் எழுதுகிறவர் வெ.சா. இலக்கியத்தில் தி. ஜானகிராமனை வியப்பவர் வெ.சா. மற்றப் படைப்பாளிகளைவிட தி.ஜா. எப்படி உன்னதமான இலக்கியத்தைப் படைத்துள்ளார் என்பதை வெ.சா. ஒருபோதும் தரப்படுத்திச் சொன்னதே இல்லை. டி.கே. பத்மினியின் ஓவியங்களை வியக்கிறார் வெ.சா. எந்த அடிப்படையில் டி.கே. பத்மினி வியப்பிற்குரிய கலைஞர் என்பதை விரிவாகவோ, ஆழமாகவோ தரப்படுத்த இயலாதவர். பெரிய விமர்சகரைப் போல் தோற்றம் தரும் வெ.சா.வுக்கும், க.நா.சு.வுக்கும் அதிக வித்தியாசமில்லை.
க.நா.சு.வும் மேலெழுந்தவாரியாக தனது அபிப்பிராயங்களை சற்று மொன்னையும், மிதமுமான உரைநடையில் சொன்னவர். இதேபோல்தான் வெங்கட் சுவாமிநாதனும் தனது கட்டுரைகளில் அபிப்பிராயங்களைக் கொட்டுகிறார். ஆனால் க.நா.சு.வைவிட வேகமான நடையில் எழுதியவர் வெ.சா. வேகமும், விரிவும் உண்டு. ஆனால், ஆழமில்லை வெ.சா.விடம்.
சி.சு. செல்லப்பா, க.நா.சு., வெங்கட் சுவாமிநாதன் போன்றவர்கள் தங்களுடைய ரசனை சார்ந்து அபிப்பிராயங்களைச் சொன்னவர்கள். இவர்களிடம் இலக்கியக் கோட்பாட்டு அடிப்படையிலான அணுகுமுறை எதுவும் கிடையாது. அழகியல், செவ்வியல் கோட்பாடுகள் கூட இவர்களிடம் இல்லை. ஆனாலும், இவர்கள் தங்களது அபிப்பிராயங்களுக்காக தமிழ் வாசகர்கள் மத்தியில் ‘விமர்சகர்கள்’ என்று கொண்டாடப்படுகின்றனர். இவர்களை வியந்து கொண்டாடாமல், தூர விலகி நின்று பார்க்கும் வாசகனுக்கு இவர்களது குறைகள் தென்படாமல் போகாது.
இவர்களைத் தாண்டி வந்தால், மார்க்ஸியக் கோட்பாட்டைச் சுவீகரித்துக் கொண்டு, அதன் அடிப்படையில் முற்போக்கு  பிற்போக்கு என்று இலக்கியத்தை அணுகிய மார்க்ஸீய விமர்சகர்கள் சிலரும் உள்ளனர். சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையில் எழுதிய  சி. கனகசபாபதி மார்க்ஸீய அடிப்படையில் இலக்கியத்தை அணுகியவர். என்றாலும் வறட்டுத்தனமில்லாத கட்டுரைகளை எழுதியவர்.
ந. பிச்சமூர்த்தியின் கவிதைகளைப் பற்றி இவர் எழுதிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. கலாப்ரியாவின் கவிதைகளைக் கனகசபாபதி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கனகசபாபதி நல்ல விமர்சகர்.
கனகசபாபதியைப் போலவே பேராசிரியரான தி.சு. நடராஜனும் மார்க்ஸீய அடிப்படையில் இலக்கியத்தை அணுகியவர்தான். என்றாலும், வறட்டுத்தனம் தட்டாத ஒருசில விமர்சனங்களை தி.சு. நடராஜன் எழுதியிருக்கிறார். குறிப்பாக லா.ச. ராமாமிர்தத்தைப் பற்றி நடராஜன் எழுதியுள்ள கட்டுரை (அவரது கருத்தை நான் ஏற்கவில்லை). மிக முக்கியமான, ஆழமான கட்டுரை. கனகசபாபதியும் சரி, தி.சு. நடராஜனும் சரி, மனத்தைக் கவரும் உரைநடையைக் கொண்டவர்களல்ல. கவித்துவமான மொழியில் இவர்கள் எழுதியிருந்தால், இவர்களது விமர்சனங்கள் தமிழின் மிகச் சிறந்த விமர்சனங்களாகியிருக்கும்.
இலங்கை விமர்சகர்களான கைலாசபதி, மு. தலையசிங்கம், கா. சிவத்தம்பியும் தமிழ் வாசகர்களால் விமர் சகர்களாகக் கொண்டாடப்பட்டவர்கள். கைலாசபதியும், சிவத்தம்பியும் மார்க்ஸீய அணுகுமுறையை ஏற்றுக்கொண்டவர்கள். கைலாசபதியைவிட சிவத்தம்பியின் விமர்சனங்கள் சற்று ஆழமும், விரிவும் கொண்டவை. மு. தளையசிங்கம் மார்க்ஸீயத்துக்கு எதிராக இயங்கி, இலக்கியத்தில் முற்போக்குக்கு மாற்றாக ‘நற்போக்கு’ என்ற கருத்தை முன்வைத்தவர்.
தளைய சிங்கம் சர்வோதயச் சிந்தனையை வரித்துக்கொண்டவர். அவரது கதை, கட்டுரைகள் எல்லாமே வறட்சியானவை. என்றாலும் கைலாசபதி, சிவத்தம்பியைப் போல் பிரபலமான விமர்சகர். அவரது நற்போக்கு விமர்சனக் கோட்பாடு அவருடனேயே முடிந்துவிட்டது.
கோவை ஞானி ஆரம்ப காலத்தில் மார்க்ஸீய அடிப்படையை ஏற்றுக்கொண்டு விமர்சனங்கள் எழுதியவர். பின்னர் ஒரு சமயத்தில் இந்திய ஆன்மிகத்தையும் மார்க்ஸீயத்துடன் இணைத்துக் கொண்டு ஒரு கலவையான சிந்தனைப் போக்கைக் கையாள ஆரம்பித்தார். இதனால் மௌனி, லா.ச.ரா. போன்ற தீவிர மார்க்ஸிஸ்டுகள் ஒதுக்கி வைத்த, தமிழின் முக்கியமான படைப்பாளிகளையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் ஞானி. எல்லா தரப்பு படைப்பாளிகளையும் அரவணைத்து ஏற்றுக் கொள்கிறார் ஞானி.

பல்கேரிய மார்க்ஸிய விமர்சகர் ஜார்ஸ் லூகாஸ் போலவோ, வால்டர் பெஞ்சமினைப் போலவோ  நுட்பமும், கவித்துவமும், விரிவும்கொண்ட மார்க்ஸிய விமர்சகர்கள் தமிழில் இல்லை. சுய ரசனை அடிப்படையில் எழுதி விமர்சகர்கள் என்று அறியப்பட்டவர்களும் சரி, மார்க்ஸீய அடிப்படையில் விமர்சனம் எழுதுவதாகக் கூறிக் கொண்டவர்களும் சரி, மேலே கூறப்பட்ட எல்லோருமே போகிற போக்கில் அபிப்பிராயங்களைத் தெளித்து விட்டுச் செல்கிறவர்கள்தான்.
ஆழம், விரிவு, கவித்துவமான மொழிநடை இம்மூன்றும் இணைந்த முழுமையான விமர்சகர் என்று தமிழில் யாருமே இல்லை.
Thanks:ஆழம்

Friday 2 November 2012

மெளனி – நேர்காணல்

மெளனி
மெளனி – நேர்காணல்

கி. அ. சச்சிதானந்தம்

தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் அவரை ஒருதடவை சந்தித்தாலே போதும், அவருடைய தும்பை மலர் போல் வெண்ணிறமான, அடர்ந்து திமிறி நிற்கும் தலைமுடியும்; சிற்பியின், ஓவிய விரல்களில் தினவு எடுக்கச் செய்யும் முகபாவமும், அவரின் உரையாடலும், அவரது உயர்ந்த கலைப்படைப்பைப் போலவே பசுமையாக நினைவில் நிற்கும்.

மெளனி அவர்கள் கணிதத்தில் பட்டம் பெற்றவர். ஆழ்ந்த இலக்கிய ஞானம் உடையவர்; சங்கீதத்தில் பயிற்சி கொண்டவர்; தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்; மெளனியின் ஆளுமை, கணிதத்தால் ஏற்பட்ட அறிவுநுட்பமும், சங்கீதத்தால் உண்டான கலையுணர்வின் நளினமும், இலக்கியத்தால் வந்த கற்பனையும், தத்துவம் அளித்த தீர்க்க முடியாத தாகமும், இத்தனையும் உள்ளடக்கியது. அவருடன் உரையாடும்போது நம் மனக்கண் முன்பு ஒரு மாபெரும் உலகம் விரிகிறது.

உயர்ந்த இலக்கியப் படைப்பு ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுப் புதுப் பொருளையும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அர்த்தத்தையும், ஒருத்தருக்கே வெவ்வேறு காலத்தில் வெவ்வேறாகத் தோன்றும்படி இருக்கும் என ஆங்கிலக் கவி ஆடன் கூறியிருப்பது மெளனியின் இலக்கியப் படைப்புக்கு மிகப் பொருந்தும். அவர் எழுதி அச்சில் வெளிவந்தது மிகக் குறைவுதான். ஆனால், எழுதி வைத்து அச்சில் வராதது சுமார் 2 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன!

இரு உலகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று காலத்தால் படைக்கப்பட்டது. இவ்வுலகத்தில் தவிர்க்க முடியாத தேவை, மாயை, துயரம், மாறுதல், அழிவு, இறப்பு யாவும் மாற்ற முடியாத சட்டங்களாக இருக்கின்றன. மற்றோர் உலகமோ ஊழுழியால், காலங்கடந்த நிரந்தரத்தால் படைக்கப்பட்டிருக்கிறது. இங்கே சுதந்திரம், அழகு, அமைதி கொலுவீற்றிருக்கின்றன. நம் சாதாரண அனுபவம் காலத்தால் படைக்கப்பட்ட அந்த முதல் உலகத்தில் நடைபெறுகிறது. ஆனால், அந்த இரண்டாம் உலகத்தின் காட்சி, தற்செயலான சுயமாய் எழும் நினைவாலும், ஆழ்ந்த த்யான உணர்வாலும், தோன்றும்போதே மறையும் அந்தக் காலத்துளிகளில், கணங்களில் புனையா ஓவியம் போல் தெரிகிறது. மெளனி என்னும் மாபெரும் கலைஞன் அந்தக் காலத்துளிகளின் மின்னொளியைப் பிடித்துக் காலத்துக்கு உட்பட்ட இவ்வுலக அனுபவத்தின் மேல் பாய்ச்சுகிறார். ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?’ என்றாரே அந்த நிழல்களின் மேல் தெரியும் வினா விடைகளைக் காணலாம்.

தங்கள் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களாகவும், இலக்கியத் துறையுடன் தங்களுக்குத் தொடர்பு ஏற்பட்டது பற்றியும் தீபம் வாசகர்களுக்குத் தெரிவிக்கலாம் அல்லவா?

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் மாணவர்களாக இருந்த காலத்தில், ஆங்கில இலக்கியத்தையும் பிற பாஷைகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உலக இலக்கியங்களையும், படித்து உணர்ந்து ரஸிக்கும் ஆர்வம் பலரிடம் இருந்தது. அவர்களில் நானும் ஒருவன். ஒருவகையில் என் மனோபாவத்தைப் பொறுத்து, ஏன் நாமும் அதைப் போலத் தமிழில் எழுத முயலக் கூடாதென்பதின் விளைவாக என் எழுத்து தோன்றியது போலும். வேறு ஒரு வகையிலும், நான் ஏன் அப்போது எழுத ஆரம்பித்தேன் என இப்போது என்னால் அனுமானிக்க முடியவில்லை. 1934லிலிருந்து முடிவிற்குள், அநேக அரைகுறை கதைகளையும், பூர்த்தியாகாத நான்கு ஐந்தையும், ஒரு நெடுங்கதையும் எழுதிவிட்டேன். என்னைப் பொறுத்த மற்றொரு விஷயம், உருவாகிவிட்டதென்பதற்கு, அச்சுக்குப் போகும் வரையிலும் பலப்பல உருமாறத்தான் திரும்பத் திரும்ப எழுதுவது வழக்கம். இவ்விதமான என் வழக்கத்தினால் என் கதைகள் ஒன்றுக்கும் ஒரு நகல் எனச் சொல்லும்படி என்னிடம் ஒன்றும் இருந்ததில்லை. அச்சில் வந்து எனக்கு அனுப்பிய பிரதிகளையும் நான் கவனமாகக் காப்பாற்றுவது கிடையாது… 1959ல் என் கதைகளை சேகரம் செய்ய க.நா.சுவும், சி.சு.செ.யும் எடுத்துக் கொண்ட முயற்சி நான் சொல்லுவதை மெய்ப்பிக்கும்.

‘மணிக்கொடி காலம்’ பற்றித் தாங்கள் வாய்மொழியாக விளக்கிக் கொள்ள வாசகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். ஒரு சிறிது கூறுங்களேன்?

இந்தக் கேள்வியை நான் எப்படி விளங்கிக் கொண்டு பதிலளிப்பது என்பதில் கொஞ்சம் சிரமம் தோன்றுகிறது… ‘மணிக்கொடி காலம்’ என்பது 1932 – 38 வரை. (வ.ரா. பி.எஸ். ராமையா, பா.ரா. இவர்களை ஆசிரியர்களாகக் கொண்டு) வெளியான காலத்தைக் குறிப்பதென்று எண்ணி ‘மணிக்கொடி’யில் என்னுடைய பெரும்பான்மையான கதைகள் வெளிவந்ததென்பதை எண்ணிச் சொல்கிறேன். மேலே குறிப்பிட்ட ஆர்வங்கொண்ட அநேகருடைய கதைகள் அதில் வெளிவந்தன. அதிலும், பி.எஸ்.ரா. காலத்திலிருந்து சிறுகதைகளுக்கு எனவே வெளிவந்த பத்திரிகை என்பதில் அதிகமாகவே வந்தன. கதைகளின் புதுத் திருப்பமும், நோக்கும் அநேகர் கவனத்தை ஈர்க்க இருந்தன. அவைகளின் இலக்கியத் தராதரத்தை விமர்சகன் ஏற்று நன்கு தெரிந்து சொல்ல வேண்டியது கடமை. என்னுடையது என்பது என் அபிப்பிராயம். என் கதைகள் மணிக்கொடியில் வர நேர்ந்தது ஒரு எதேச்சையான சம்பவமெனத்தான் எனக்குத் தோன்றுகிறது. யார் யார் கதைகள் அதில் எந்த்ந்தக் காரணங்களுக்காக வெளிவந்தன என்பதை என்னால் சொல்ல இயலவில்லை. ஒருவகையில் என் கதைகள் வேறு எந்தப் பத்திரிகைகளிலும் வெளிவந்தோ அல்லது வெளி வராமலோ இருந்து இருக்கலாமெனக் கொள்ளலாம்…

தங்களுக்கும் புதுமைப்பித்தனுக்கும் நேராகவோ கடித மூலமாகவோ தொடர்பு இருந்ததா? புதுமைப்பித்தனைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

மணிக்கொடியில் என் இரண்டாவது கதை வெளிவந்தவுடன், எங்கள் ஊர்வாசியான ந. பிச்சமூர்த்தி அவர்கள் (பழைய மணிக்கொடி எழுத்தாளர் என்பதில்) எனக்கு அறிமுகமானார். அதோடு கூட அவர் நண்பரான கு.ப.ராவும் என் வீட்டிற்கு சமீபத்தில் இருப்பவர்கள். முன்பே இவர்களைத் தெரியுமானாலும், நான் ஒரு கதாசிரியன் என்ற பாவத்தில் சொல்கிறேன். பிறகு நான் இவர்களை சந்தித்துப் பேசுவது வழக்கம். ந.பி. வக்கீலாகத் தொழிலாற்றிக் கொண்டிருந்தவர். அடிக்கடி அவரிடம் பேசுவது முடியாது. கு.ப.ரா. என்னைப் போன்றவர். அவரை அடிக்கடி சந்திக்கவும் பேசவும் வாய்ப்பிருந்தது… அநேகமாக இலக்கிய சர்ச்சைகள்தான். நானும் என்னை ஒரு விதத்தில் விமர்சகன் என்று சொல்லிக் கொள்ள உரிமை உண்டு. (அத்தொழிலை வெகுவாக என் எழுத்து வெளிவரும் முன்பு அதனிடம் உபயோகிக்கிறேன்). என் பேச்சில் சுவாரஸ்யம் கண்டவர் போலும். அதை எழுதித் தன்னிடம் கொடுக்கும்படி அநேக தரம் கேட்டதுண்டு. பேச்சுக்கும் எழுத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அடிக்கடி நான் அவரிடம் கூறுவதுண்டு.

ஒருநாள் கு.ப.ரா. என்னை ஒரு கதை எழுதிக் கொடுக்கும்படி கேட்டார். 1937ல் தினமணி ஆண்டு மலரை வெளியிடும் பொறுப்பைப் புதுமைப்பித்தன் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்றும், அவர் ஒரு துல்லியமான இலக்கிய உணர்வு கொண்டவர் என்றும், மேலும் அவரே ஓர் உயர் இலக்கியப் படைப்பாளி எனவும் சொல்லி, என்னுடைய கதையை அவர் போடுமாறு அவருக்கு அனுப்புவதாகச் சொல்லி கேட்டார். புதுமைப்பித்தன் பற்றியும், மணிக்கொடியில் எழுதுவதிலிருந்து எனக்குப் பெயர் பரிச்சயம் உண்டு. எனக்கு அப்போது எழுத ஒன்றும் தோன்றவில்லை. முடியவில்லை என்று சொல்லவும் இயலவில்லை. ஆரம்ப காலத்தில் எழுதியிருந்த ஒரு அரைகுறை கதை, பிறகு எழுதிய ஒரு அரைகுறை இவைகளை ஒன்றாக சேர்த்து (பின்பகுதி முன்னாலும் முன்பகுதி பின்னாலும் எழுதப்பட்டது) ஒரு பெரிய அளவில் (எனக்கு நீள அளவில் எழுதுவது வழக்கமல்ல) ஒரு கதையை அவரிடம் கொடுத்ததுதான் ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 1939ல் ஒருதரம் சென்னை சென்றபோது அவரை நேராக சந்தித்தேன். பிறகு 1945 வரையில் அவ்வப்போது போகும்போது நேர்ந்தால் சந்திப்பது என்பதில் ஒரு நான்கைந்து தரம் சந்தித்துப் பேசியிருப்பேன். அதிகமான தொடர்பு இல்லை. எனினும் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்ட வகையில்தான் தோன்ற இருக்கிறது போலும். என்னைப் பற்றி 1946ல் வானொலியில் அவர் பேசியதும் எனக்குத் தெரியாது. சிதம்பரத்தில் வசித்த க.நா.சு. ‘பொன்னி’ என்ற ஒரு பத்திரிகையில் அதைக் காணா எனக்குக் காட்டியதுதான் தெரியும்.

ஒரு ஐரானிகல் ஆட்டிட்யூட் இயங்க ஒரு பிரமாதமான சாதனையைத்தான் புதுமைப்பித்தன் இலக்கியப் படைப்பில் காட்டியிருக்கிறார். தமிழ்ச் சிறுகதை உலகில் அவருக்கு நிச்சயம் ஒரு ஸ்தானம் உண்டு. இலக்கியப் பார்வை என்பதில் ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’க்கு எந்த மதிப்பு என்பது விமர்சனத்திற்கு உரியது. அவர், க.நா.சு. சொல்கிறபடி அவருடைய ‘ஐரானிக் ஆட்டிட்யூட்’ இயங்கிப் பிரமாதமான சாதனை காட்டினாலும் ஒரு பூரண இலக்கியத்தன்மை உருப்பெறாத அளவில் ‘ஒரு மேதையைத் தமிழ்நாடு இழந்தது’ எனக் கொள்வது சரி. (‘ஐரானிக் ஆட்டிட்யூட்’டில் பூரண இலக்கியத்தன்மை உருப்பெற முடியாது என்ற சித்தாந்தம் இதைவிட ஓர் உயரிய ‘ஆட்டிட்யூட்’ இருக்கிறது என்பதைக் குறிக்கும். அதில் யாராவது இருக்கிறார்களா என்பதையும் விமர்சகர்கள்தான் கூறவேண்டும்). க.நா.சு. ஒருவரின் மதிப்பீட்டை ஒருவகையில் சரி என ஒப்புக் கொள்கிறேன். ”மேதைத்தன்மையும், கலையில் ஒரு பூரணத்துவம் காண முடியாதபடிக்கும், அவருடைய தனித்துவம் காட்ட முடியாதபடியும் ஆனதற்குக் கலையாக்குவதிலும், கட்டுப்பாட்டிலும் அவர் நம்பிக்கையற்ரவராக இருந்துவிட்டதினால்தான்” என்பதை நான் வேறு ஒரு வகையாகக் காண்கிறேன். அவர் ஐரானிக் ஆட்டிட்யூட்டில் இலக்கியம் படைத்ததனால் என்று கொள்ளும்படி எனக்குத் தோன்றுகிறது. இலக்கியப்படைப்பில் ஐரானிக் ஆட்டிட்யூட்தான் சிறந்ததெனச் செயல்பட முடியுமென்பது முடியாது. இந்தப் போக்குப் புத்தியைச் சார்ந்தது என்றும் மனதை சார்ந்து முழுமனிதன் செயல்பட இடம்கொடுக்க முடியாதென்பதையும் நான் ஒருவகையில் உணர்கிறேன். புதுமைப்பித்தனுக்கு இந்த மாதிரியான உணர்வும் அடிக்கடி தோன்றியிருக்கலாம். என்னைப் பற்றிய அவருடைய மதிப்பீடு வாசகங்களினூடே அதை நான் அனுமானிக்கிறேன். ஐரானிக் ஆட்டிட்யூட்டில் உயர்வகை இலக்கியம் ஒருவகையில் முடியும் என்பதைப் புதுமைப்பித்தனைப் போல எழுதும், எழுத ஆசை கொள்ளும் அநேக படைப்பாளிகளின் தரத்தை உணரும்போது நமக்கு விளங்கும். ஐரானிக் ஆட்டிட்யூட் இலக்கிய மதிப்பு ஒருவகையில் ரிலேட்டிவ் ஆகத்தான் இருக்க முடியும். அவர் கதைகளில் காணும் ஒரு அதிசய பிரமிப்பு முழுதும் பூர்த்தியாக செயல்பட முடியாதவாறு அனுபவமாவதில், இன்னும் சிறிது காலம் இருந்து அவர் ‘போஸ்’ என இந்த ஆட்டிட்யூட் மாறி வேறுவிதமான இலக்கியம் படைத்திருப்பாரோ எனவும் நினைக்க வேண்டியிருக்கிறது. சமய சந்தர்ப்பம் சூழ்நிலை இவைகளின் நிமித்தம் உண்டாகி ஒரு ‘போஸ்’ எனத் தோன்றியது. விடாது பிடிக்கும் நிலைமை அடைந்து அதை விட்டு விலக முடியாது. மேலும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் இந்த நோக்கிற்குச் செயல்படுகிறது என்றும் சொல்லலாம்.

தாங்கள் நீண்ட காலமாக எழுதாமலிருக்கிறீர்களே ஏன்? புதுமைப்பித்தன் தங்களைத் திருமூலரோடு ஒப்பிட்டிருக்கிறார். இனிமேல் திருமந்திரம் ஒன்றாவது கிடைக்குமா?

ஏதோ ஒரு சமயம் எழுதியவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆவலில் என்னை இந்தக் கேள்வி கேட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். அப்போது நான் எப்படி எழுதினேன் என்பதே இப்போது எனக்குப் புரியவில்லை. எனக்கு நிறைய எழுத வேண்டும் என்ற ஆவல் எப்போதும் உண்டு. எப்படி எழுதுவது என்பது வர வர வெகு கடினமாகவே தோன்றுவதை உணருகிறேன்… இவ்வகையில் கடினமெனத் தோன்ற தமிழ்மொழி வெகுவாக என்னைப் பொறுத்தவரையில் தொண்டாற்றிக் கொண்டு வருகிறது. என்னைத் திருமூலருடன் ஒப்பிட்டது எதற்கென என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த வாக்கியத்திற்குப் பிறகு அவர் சொன்னதிலிருந்து ஒருவகை அனுமானம் கொள்ளவும் என்னால் முடியாமல் இருக்கிறது. நான் திருமந்திரம் படித்ததில்லை… புதுமைப்பித்தன் உயிரோடிருந்தால் அவரை நான் பதிலளிக்கக் கேட்டிருப்பேன்.

தற்காலத் தமிழிலக்கியம் பற்றித் தங்கள் கருத்துக்கள் யாவை?
நான் எழுதுவதை சந்தர்ப்பம் நிர்பந்தத்தினாலல்லாது பிறருக்கு தெரியப்படுத்துவது இல்லை. ஒருவகையில் நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன் என வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வகையில் ஆதி நாட்களிலிருந்து என்னை எழுத்தாளனாகத் தெரிந்தவர்கள், எழுத்தாளர்களிலேயே சிலர்தான் இருக்கிறார்கள். அதாவது ந. பிச்சமூர்த்தி, பி.எஸ். ராமையா. சி.சு.செல்லப்பா, க.நா.சு., சி.சு.ம, ஆகியவர்கள்தாம். இப்போது சமீபகால இலக்கிய உலக நடப்புகளைச் சில சமீப கால நண்பர்கள் மூலம் தெரிந்துக் கொண்டதில் என் அனுமான அபிப்பிராயமெனச் (தற்கால தமிழ் இலக்கியத்தில் சிறிதுதான் பரிச்சியம்) சொல்ல, சமய சந்தர்ப்ப சூழ்நிலை சரியாகப்படவில்லை என்ற லெளகீக காரணத்தை முன்னிட்டு, முடியவில்லை என்பதற்கு மன்னிக்கவும்…

சிறுகதை இலக்கியப் படைப்பில் தங்கள் நோக்கில் தொழில் நுணுக்கங்களாக எவற்றை கூறுகிறீர்கள்?
எந்த அம்சம் தொழில் நுணுக்கமென, நான் என் சிறுகதைப் படைப்பில் கையாண்டேன் என்பது சொல்லும் வகைக்குத் தெளிவாக உணர்வு கொள்ளவில்லை. ஆனால், ஒன்று சொல்லலாம் என நினைக்கிறேன். எதைச் சொல்கிறோம் என்பது, எப்படி சொல்லுவது என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும்கெட்டு ஒன்றுமே இலக்கியமெனத் தோன்ற உண்டாகாது.

தங்களின் இலக்கியப் பார்வை அல்லது தத்துவத்தைக் கூறுவீர்களா?

இலக்கியம் என்பதற்குப் பதில் கலை என்பதாகக் கொண்டு சிறிது கூறுவது ஒருவகையில் சுலபமாகத் தோன்றுகிறது. இது ஒரு வகையில் உங்களுக்கு ஆச்சர்யமாகப் படலாம். இலக்கியம் என்பது கலையின் ஒரு பிரிவு என்பதில்… ஆனால், இலக்கியம் என்பது வார்த்தைகள் மூலம் செயல்படுவதன் காரணமாக வார்த்தைகள் என்பது அதன் அருத்தத்தின் குறியீடு என்பதினாலும்… மொழி என்பது இலக்கியத் தத்துவத்திற்கு, என்ன உறவுடையது என்பது மிகவும் சிரமம் கொடுக்கக் கூடியது. சில காலம் முன்பு நான் கலை இலக்கியம் என்பதைப் பற்றி நன்கு உணர்ந்தவன் என்று இறுமாப்புக் கொண்டிருந்தேன். தற்காலத்தில் சில விமரிசனத் தோரணைகளும், தமிழ் மொழியில் விரிவும் நன்கு உணர ஏற்பட்டதிலும் மேலும் சமீபமாக சில ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்க நேர்ந்ததாலும் இந்த எண்ணம் எவ்வளவு அறிவீனம் என்ற நினைவு ஏற்படலாயிற்று. நான் கண்ட கலைத் தத்துவம் இலக்கிய தத்துவத்துக்கு வேறு முரணாகத் தோன்றியதால் அல்ல வெளியீடு பற்றிய சிரமம், ஆங்கில மொழி விரிவையும் நம் மொழியின் குறைவையும் நான் வெகுவாக வருத்தத்துடன் காண நேர்ந்தது.

அதாவது ‘தான்’ தன்னை மங்கலாக உணர்கிறது. அது உண்மையும் அழகும் நிறைந்ததாயும் உணர்கிறது. அந்த நிறைவைத் தன் முன்னாலேயே ஒரு புறநிலைப் பொருளாக, தனக்கு எதிரான மற்றொரு ‘தான்’ ஆக இல்லாமல், பிரக்ஞை இல்லாமலே உருவாக்கிக் கொள்ளுகிறது. இப்படியாக, இந்த தான் மங்கலாக வெளிப்பட்டதை உண்மையென உணர்ந்து கொண்டே செல்லுகிறது. இந்த நிலையில் கலை, தத்துவம், சமயம் எல்லாமே ஒன்றாக இருக்கின்றன.

இலக்கியப் படைப்பில் படைப்பாளியும், இரசிகனும் ஒருவகையில் ஒன்றெனப்படுவார்கள். படைப்பாளி யாருக்காகவும் படைப்பதில்லை. இரசிகனும் பிறர் படைத்ததென உணர்ந்து படித்து இரசிப்பதில்லை… இலக்கியப் பொருள் என்றோ அழகிய பொருள் என்றோ ஒன்று இருப்பதாக எண்ணி அதைப்பற்றிச் சுற்றி வளைத்து எழுதுவது இலக்கியமாகாது… பிரத்திய அநுபவம் ஒரு நிலை ஒரு பார்வையில் கொள்வதில், அதில் ஒன்றியும், தன் மனம் புலன்கள் இரசித்து உணர்ச்சி வசப்படாது ஒரு நோக்கு காட்சியெனக் காட்டுவதுதான் உயர்ந்த இலக்கியத் தத்துவமெனப் படுகிறது.

‘தீபம்’ பற்றி தங்கள் கருத்தென்ன?

இலக்கியத் தரமான பத்திரிகை நீண்டகாலம் வாழ்ந்தது இல்லை. நீடித்து வாழ்வதெல்லாம் இலக்கியத் தரமாக இருப்பதில்லை என்று தோன்றி உருவாகிய ஒரு போலி நியதியைத் ‘தீபம்’ பொய்யாக்கும் என நம்புகிறேன்.

நன்றி: மெளனியின் கதைகள்; பீகாக் பதிப்பகம்; எண்.6, முதல் தெரு, வடக்கு கோபாலபுரம்; சென்னை – 8

அழியாச் சுடர் மெளனி

மெளனி


அழியாச் சுடர் மெளனி

எவ்வித ஆடம்பரமோ, ஆரவாரமோ அற்றவர்;  படாடோபமோ, பகட்டோ இல்லாதவர்; விளம்பரமோ, விமர்சனமோ விரும்பாதவர்; இலக்கிய ஆர்வம் குறைந்த வாசகர்களின் மெளனத்தைக் கலைத்துத் தட்டி எழுப்பியவர்; அமைதி எனும் மெளன வழியையே தம் தலையாய கொள்கையாகக் கொண்டவர், இத்தகு சிறப்புமிகு மணிக்கொடி மெளனியே சுப்ரமணியம் எனும் இயற்பெயர் கொண்ட சிறுகதை எழுத்தாளர் ஆவார்.

இவரை அனைவரும் செல்லமாக ஆர்.எஸ்.மணி என அழைப்பினும் "மெளனி" என்ற புனைபெயரில் கதைகள் புனைவதையே தம் அவாவாகக் கொண்டவர்.

1907ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் செம்மங்குடியில் பிறந்த இவர், கும்பகோணம் சென்று கல்வி கற்றார்.1926ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்தார்.

பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணிதத்தை விருப்பப் பாடமாக எடுத்து முதல்தர மாணவராகத் தேர்வு பெற்றார்.

ஆழ்ந்த இலக்கியச் சிந்தனையும், தத்துவ ஞானமும், இசையில் இணையற்ற ஈடுபாடும் கொண்டவர். வயலின் வாசிப்பதில் வல்லமை பெற்றவர்.

மாணவப் பருவத்தில் ஆங்கில இலக்கியங்களையும், ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்த பிற இலக்கியங்களையும் ஊன்றிப் படித்தார். ஏன் நாமும் அதுபோன்று எழுதக்கூடாது என்ற தாக்கம் இவர் மனதில் மேலோங்கியது. இவ்வுந்துதலால் 1934இல் தம் எழுத்துப் பணியைத் தொடங்கிய இவர், கதை நூல்கள் பல எழுதினார்.

பின்னர் கும்பகோணத்தில் சில ஆண்டுகள் குடும்பத்துடன் வாழ்ந்த இவர், சிதம்பரம் வந்து வாழ்க்கை நடத்தினார். அங்கு, பயிர்த்தொழிலை முதன்மையாகக் கொண்டாலும், நெல் அரைவை ஆலை ஒன்றைத் திறம்பட நடத்தி வந்தார்.  இவரது "ஏன்" எனும் சிறுகதை முதன்முதலில் பி.எஸ்.இராமையாவால் "மணிக்கொடி" இதழில் வெளிவந்தது. இக்கதை வாசகர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இவரது "அழியாச் சுடர்" எனும் நூல், 1959ஆம் ஆண்டிலும், "மெளனியின் கதைகள்" எனும் நூல் 1967,1978 மற்றும் 1991ஆம் ஆண்டுகளிலும் வெளிவந்துள்ளன. "அழியாச் சுடர்" எனும் நூல், மக்கள் மத்தியில் சுடர் விட்டுப் பிரகாசிக்க உறுதுணையாக அமைந்தவர்கள் க.நா.சுப்ரமணியமும், சி.சு.செல்லப்பாவும் ஆவர்.

மெளனியின் ஆளுமையில் கணிதத்தில் அறிவு நுட்பமும், சங்கீதக் கலை உணர்வில் நளினமும், இலக்கியத்தில் கற்பனையும், தத்துவத்தில் தீர்க்க இயலா தாகமும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தன. சிறுகதை இலக்கியம் படைப்பதில் எண்ணற்ற சோதனைகள் உற்றபோதும், அனைத்தையும் தாங்கி, சாதனை படைத்தவர். தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் இவருக்குத் தலையாய பங்குண்டு.

மெளனியால் எழுதப்பட்ட 15 சிறுகதைகள் மணிக்கொடி முதலிய பல ஏடுகளில் வெளிவந்தன. ஆயினும், அவை அனைத்தும் 1959ஆம் ஆண்டு "அழியாச் சுடர்" எனும் ஒரே தொகுதியாக வெளிவந்தது.

அக்கதைகளுள்,

    * காதல் சாலை
    * கொஞ்ச தூரம்
    * பிரபஞ்ச கானம்
    * அழியாச் சுடர்
    * எங்கிருந்தோ வந்தான்
    * நினைவுச் சுழல்
    * மனக்கோலம்
    * நினைவுச் சுவடு

ஆகிய எட்டும் சிறந்த காதல் ஓவியங்களாகும்.

"மாறுதல்" என்ற கதை மட்டும் மரணம் தழுவியது.



    * குடும்பத்தேர்
    * மிஸ்டேக்
    * சுந்தரி
    * இந்நேரம் - இந்நேரம்
போன்றவை மாபெரும் காவியங்கள்.

இவருடைய காதல் கதைகளில், "அன்பின் ஐந்திணைக்குரிய அன்பு, காதலாக இல்லாமல், பெருந்திணைக்குரிய பொருந்தாக் காதலாக" அமைந்திருப்பது இவரது மனத்துணிவை மக்களுக்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

எந்தக் கதாசிரியரும் கையாளாத வசன நடையைக் கையாண்டு அதில் வெற்றியும் கண்டார்.

அவரது கதைகளில் இழையோடும் தத்துவங்கள் கருத்தாழம் மிக்கதாக மிளிரும். அவரது எழுத்து நடை காட்டாற்று வெள்ளம் போன்று கரைபுரண்டோடாது, தெளிந்த நீரோடைபோல் அமைதியாகத் தவழ்ந்து செல்லும் பாங்குடையது.

ஒவ்வொரு கதையிலும் புதுப்புது உத்தியைக் கையாண்டு, பல்வேறு கருத்துகளைச் சுவையாகச் சொல்வது மெளனிக்குக் கைவந்த கலை. இவர் கையாண்ட வசனநடை தமிழ் மறுமலர்ச்சிக்குப் புத்துயிர் ஊட்டியது.

1961 மார்ச் மாதம், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா, "எழுத்து" எனும் தம் இதழில் மெளனியின் நூல்கள் பற்றிக் குறிப்பிடும்போது, "அவரது கலைப் படைப்புகளை ஆழமாக உணர்ந்து கொள்ளாவிட்டால், அவற்றை மதிப்பீடு செய்ய இயலாது என்றும், அவற்றில் பழகிக்கொள்ள விசேஷ முயற்சி தேவை'' என்றும் கூறியுள்ளார்.

1962 பிப்ரவரி மாதம் வெளிவந்த "எழுத்து" எனும் இதழில் பேராற்றல் மிக்க எழுத்தாளரும், திறனாய்வாளருமான க.நா.சுப்ரமணியம், மெளனியின் கதைகள் பற்றிக் குறிப்பிடும்போது, "எத்தனையோ கதைகளும் கதாசிரியர்களும் இருப்பினும், மெளனியின் கதைகள் இலக்கிய உலகில் ஒரு தனிப்பெரும் சிகரம். அதைவிட உயரமான சிகரம் என்று சொல்ல ஏதுமில்லை'' என யதார்த்தமாகக் கூறியிருப்பது மெளனிக்குக் கிட்டிய வெற்றியாகும்.

மேலும், "இன்றைய சிறுகதை உலகில் மெளனியை விஞ்சியவர் எவருமில்லை'' எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர்தம் "விமர்சனக் கலை" எனும் மற்றொரு நூலில், "கம்பனை அனுபவிக்கத் தெரியாதவன் துரதிஷ்டசாலி, அதைப்போன்றே மெளனியை அனுபவிக்கத் தெரியாதவனும் துரதிஷ்டசாலிதான்'' என அழுத்தமாகக் கூறியுள்ளார்.

பெரும் எழுத்தாளரான தொ.மு.சிதம்பர இரகுநாதன் தம் "இலக்கிய விமர்சனம்" எனும் நூலில், "புதுமைப்பித்தன், மெளனி, இலா.ச. இராமாமிர்தம் ஆகிய மூவருமே தமிழின் இன்றைய முக்கிய சிறுகதைப் படைப்பாளிகள்'' எனப் பாராட்டியுள்ளார்.

"தமிழில் விமர்சனத்துறை - சில போக்குகள்" எனும் நூலை தமிழுலகத்துக்கு அளித்த முதுபெரும் திறனாய்வாளராய் இன்றும் நிலைத்து நிற்கும் தி.க.சிவசங்கரன் தம் நூலில், "மெளனியிடம் கலையுள்ளம், கற்பனை, வெளியீட்டுத் திறன் ஆகியவை நன்கு அமைந்துள்ளன. மெளனி, புதுமைப்பித்தன், கு.ப.இராஜகோபாலன் ஆகியோர் பாணியில் கதை எழுத முயன்று தோற்றவரும் உண்டு. மணிக்கொடியில் புதுமைப்பித்தன், மெளனி போன்றவர்களின் படைப்புகளால் அகவை முப்பதுக்கும் குறைவாய் உள்ள இவ்விளைஞர்கள் தமிழ் இலக்கியத்தை உன்னதச் சிகரங்களுக்கு இட்டுச் செல்கின்றனர்'' எனவும் கூறியிருப்பது மெளனியின் எழுத்தாற்றலுக்குத் தரும் தகுந்த சான்றாகும்.

சிறுகதையின் முன்னோடியான புதுமைப்பித்தன், மெளனியின் பெருமையைக் குறிப்பிடும்போது, "தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்'' என்றும், "கற்பனை எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைகளுக்குள் அடைபட மறுக்கும் கருத்துகளையும் மடக்கிக்கொண்டு வரக்கூடிய ஆற்றல் பெற்றவர் அவர் ஒருவரே'' எனவும் குறிப்பிட்டுள்ளது அவரது திறமைக்குச் சான்று பகரும்.

சிறுகதை மன்னன் ஜெயகாந்தன், "மெளனியின் கதைகளை, மீண்டும், மீண்டும் படித்து உள்ளத்தில் தேக்கி இன்புறுவேன்'' என முத்தாய்ப்பு வைத்தாற்போல கூறியிருப்பதும் மெளனிக்குக் கிடைத்த மாபெரும் சிறப்பு.

இவ்வாறு சான்றோர் பலரின் பாராட்டுதல்களுக்கு உரியவராய் விளங்கியவர் மெளனி.  புதுமையான சிறுகதைகள் பல படைத்ததன் மூலம் தமிழுலகுக்குத் தொண்டாற்றி, பெயரும் புகழும் பெற்று விளங்கிய மெளனி, 1985ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி இயற்கை எய்தினார்.  அவர் மறைந்தாலும், அவரது மெலிந்த தேகமும், தும்பை மலர்போன்ற வெண்ணிற முடியும், தீர்க்கமான ஒளிவீசும் கண்களும், கலகலவென எல்லோரிடமும் சிரித்துக்கொண்டே உரையாடும் காட்சியும் என்றும் நம் கண்முன்னே நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

நன்றி:- இராஜை. என். நவநீதகிருஷ்ணராஜா-தினமணி