Tuesday 26 August 2014

சிரிக்கிறேன் மகிழ்ச்சியின் உச்சநிலையில்:ஜி.ஜே.தமிழ்ச்செல்வி

ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 



சிரிக்கிறேன் 
மகிழ்ச்சியின் உச்சநிலையில்
நின்று கைக்கொட்டி

ஒரு குழந்தையின்
உற்சாகத்தோடு
அந்த நளினம் ஒட்டிக்கொள்கிறது

நீ போகும் திசையெல்லாம்
என் பார்வையும்
உன்னை தழுவியபடி

நீ எதை செய்தாலும்
அது எனக்காகவே
செய்யப்படுவதாக ஒரு மலைப்பு

உன் வெறுப்பேற்றல்களிலும்
காதல் தொனிக்கக்  
காண்கிறேன்
             

உன் ஒவ்வொரு எழுத்துக்களிலும்
எனக்கான காதல்
விதைக்கப்படுவதான உணர்வு

உன் கைகளில் பிணைப்படவென
தவித்துச்  சிலிர்க்கிறது
அனுதினமும் தேகம்

நம் சந்திப்புகளை
ஒத்திகைப் பார்க்கிறது
கனவு மனம்

0000000000000000 

லட்சிய நோக்கு கொண்ட பயணத்தில்
உன் கரம் பற்றியே பவனி வர
ஆசிக்கிறது கவிதை மனம்

ஆசைகளைப்  புறந்தள்ளி
லட்சியங்களை முன் வைக்கிறாய்

ஒவ்வொன்றாக

காட்சியகப்படுத்தும் அத்தனை
லட்சியங்களிலும்
நம் தீர்மானங்களுக்காக
பிரிந்து நிற்கிறோம் நீயும் நானும்

நம் விரல்கள் இணையத்  தவிப்பதை
அறிந்தும் அறியாததாக
நடத்தப்படும் இந்த பாசாங்கில்

உன் அனுபவ ஞானத்திற்கு முன்
தலை வணங்குகிறது
என் கையகப்பட்ட எழுதுகோல்
0000000000000000 
நேசத்தைப்
பகிரப்படும் நேரங்களில்
புதுப்பிக்கலாம்
நீயும் நானும்

புதுப்பிக்காத காலங்கள்
காதலின் முதுமையில்
மரணத்தைத் தேடும்
நெடுந் தூரப் பயணம்

வாழ்தலின் இளமைக்கென
நெடுங்காலம் இருக்க
நம் எந்திரத்தனத்தை விடுத்து
மழலையான நாட்கள் அநேகம்

ஆழமாய் சுவாசித்தோம்
காதலின் இசை மீட்டினோம்
இருவருமாய்

No comments:

Post a Comment