Friday 8 August 2014

தமிழ் இனி மெல்ல.[31] யாம் இருட்டில் எதிரியைத் தாக்கியதில்லை, தாக்கவும் போவதில்லை.

தமிழ் இனி மெல்ல.[30] சென்ற பதிவின் இறுதியில் ...
குதிரை திருநின்றவூருக்குள் நுழைகிறது.

சோழ இளவலின் வருகையால் திகைத்துப் போன ஊர்த்தலைவர், பரக்கப் பரக்க ஓடிவந்து வரவேற்கிறார். கோவில் விடுதியில் தான் தங்கப் போவதாகச் சொல்கிறான் இராஜேந்திரன். தன்னுடன் இரண்டாயிரம் வீரர்கள் வந்திருப்பதாகவும், அவர்கள் அவசரப் பணியில் வந்திருப்பதால் தங்களுடன் உணவு கொண்டுவரவில்லை என்றும், அவர்களுக்கு உணவும், குதிரைகளுக்குத் தீவனமும் வேண்டும் என்று கேட்கிறான். உணவுக்கும், தீவனத்திற்கும் உரிய விலையைப் பொற்காசுகளாகக் கொடுத்து விடுவதாகவும் சொல்கிறான்.

நெகிழ்ந்து போகிறார் ஊர்த்தலைவர். வராத விருந்தினராக நாட்டுக் காவலரான அரசர் தங்கள் ஊருக்கு வந்திருப்பதால் தாங்கள் உணவுக்கு எந்த விலையும் வாங்க மாட்டோம் என்றும், தன் வீட்டிலிருந்து அவனுக்கும், அவனுடைய பிரதானிகளுக்கும் உணவு உடனே சமைத்து எடுத்து வருவதாகவும், இருதயாலீஸ்வரர், மற்றும் பக்தவத்சலப் பெருமாள் கோவில்களின் மடைப்பள்ளிகளில் வீரர்களுக்கு உணவு சமைக்கச் செய்தி அனுப்புவதாகவும் சொல்கிறார். கோவில்களில் சமைப்பதால், புலால் உணவு கிடைக்காது என்று தெரிவிக்கிறார். அதனால் குறையொன்றுமில்லை என்று அறிவித்த இராஜேந்திரன், தனக்கும் சைவ உணவே கொடுக்குமாறு தெரிவிக்கிறான்.

அதன்பின் இருபது குதிரை வீரர்களை, உணவு உண்டுவிட்டுக் காஞ்சி செல்லுமாறு பணிக்கிறான். மறுநாள் தான் காஞ்சி வந்து சேருவதற்குள், அங்கு இருக்கும் காலாள், குதிரை, யானைப் படைகள் அனைத்தும் தஞ்சை புறப்பட ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றும் செய்தி எழுதுவித்து இலச்சினையைப் பதித்து அனுப்புகிறான்.

கோவில் குளத்தில் குளித்து, இறைவனைப் பணிகிறான் இராஜேந்திரன். இதயத்தைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் உட்பிரகாரத்தின் கருவறையில் வீற்றிருக்கும் இருதயலீஸ்வரைக் குழைந்து வணங்குகிறான்.

“இறைவா, என் தந்தைக்கு எந்தவிதமான தீங்கும் ஏற்படாவண்ணம் காப்பாற்றுவாயப்பா! சைவம் தழைக்க நாங்கள் திருப்பணி செய்கின்றோம். உனக்குப் பலப்பல கோவில்களைக் கட்டித் திருப்பணி செய்த விஜயாலய சோழனின் வழி வந்த நாங்கள் உன் திருப்பணியைத் தொடர அருள் செய்யுமய்யா! ஆயிரமாயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் கற்கோவில்களைக் கட்டி சைவத்தின் பெருமை நிலைக்கச் செய்வோம். இதற்கு உன்னருள் வேண்டுமய்யா! அதற்கு எனக்குத் திறனைக் கொடுத்து அருள்வாயப்பா!”  என்று உள்ளம் கசிந்து வேண்டிக் கொள்கிறான். பூசை செய்த சிவாச்சாரியார் கொடுத்த திருநீரைப் பணிவுடன் நெற்றியில் தீட்டிக்கொண்டு இறைவனின் பிரகாரத்தைச் சுற்றிப் பணிந்துவிட்டு கோவில் விடுதிக்குத் திரும்பி வருகிறான்.

அங்கு ஊர்த்தலைவர் உணவுடன் காத்துக்கொண்டிருக்கிறார். ஊர் நலத்தை விசாரித்து அறிந்தபின் தன் பரிவாரத்துடன் உணவுண்டுவிட்டு, மறுநாள் செய்யவேண்டியதைப் பற்றிய சிந்தனையில் ஆழ்கிறான்.
* * *

தமிழ் இனி மெல்ல.[31] தொடர்கிறது


                        அரிசோனா மகாதேவன் 
                                         
                                
                               பிரான்மலை
                      பரிதாபி, ஆனி 18 - ஜூலை 3, 1012
பிரான்மலையின் வடப்புறம் சோழப்படைகள் தண்டூன்றி இருக்கின்றன. பொன்னமராவதிக்கு ஐந்து கல் தொலைவில் மேற்கிலிருந்து தென்மேற்குவரை படர்ந்திருக்கும் பிரான்மலை அவர்களுக்கு மறைவிடத்தை அளித்து அவர்கள் இருப்பது பாண்டியர்களுக்குத் தெரியாமல் செய்திருக்கிறது. சிவாச்சாரியனின் ஆலோசனைப்படி இரண்டாயிரம் வீரர்களை மட்டுமே வெள்ளாற்றிற்கு வடகரையில் நிறுத்திவிட்டு, பத்தாயிரம் வீரர்களுடனும், இருநூற்றைம்பது யானைகளுடன் மழை ஆரம்பித்ததுமே வெள்ளாற்றைக் கடந்து பிரான்மலைக்கு வந்து விடுகிறார் இராஜராஜர்.

சிங்களப் படைத்தலைவன் இறந்தான் என்ற செய்தி அவர்களுக்கு மிகவும் உற்சாகமளிக்கிறது. மேலும் தங்களுக்கு ஒரு வீரன்கூட நஷ்டமில்லாமல் ஆயிரக்கணக்கான எதிரி வீரர்களை வீழ்த்திய திட்டத்திற்கு சிவாச்சாரியனைப் பாராட்டுகிறார் இராஜராஜர்.

“சிவாச்சாரியாரே, யாம் கூட முதலில் உமது போர்த்திட்டம் பித்தன் மதுவுண்டு உளறுவது மாதிரி இருக்கிறதே என்றுதாம் நினைத்தோம். கணநேரம் சிந்தித்தபின் உமது திட்டத்தின் உள்நோக்கத்தைப் புரிந்தறிந்து கொண்டோம். படைநடத்துதலை அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும் என்று நீர் சொன்னதின் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டு வருகிறோம். மழை பெய்ய ஆரம்பிக்கும்போதே படையை இரண்டாகப் பிரித்து முக்கால்வாசிக்கும் மேலானபேரை பிரான்மலைக்குச் சென்று மறைந்து கொள்ளச் சொன்னது சிறப்பான திட்டம். இயற்கையையும் நமக்கு சாதகமாக போருக்குப் பயன்படுத்திய உமது அறிவுத்திறன்தான் என்னே! இதுவும் நீர் கற்ற சீனப் போர்முறைகளின் ஒன்றோ?” என்று புன்னகையுடன் வினவுகிறார்.

முகத்தில் எந்தஒரு சலனத்தையும் காட்டாமல் அமைதியாக, “தங்களுக்கும் சோழநாட்டிற்கும் பணிசெய்ய ஒரு வாய்ப்புக் கிடைத்து எல்லாம் வல்ல எம்பெருமானின் அருள், சக்கரவர்த்திகளே! நான் வெறும் கருவிதான். எந்தப் புகழுக்கும் நான் பாத்திரமானவன் அல்ல. ஏவுகணைக் கருவிகளைச் செய்த தச்சர்களும், கொல்லர்களும், அவற்றைத் திறமையாக இயக்கிய யானைப்படைத் தலைவர்களும்தான் இப்பாராட்டுக்கு உரியவர்கள்!” என்று அவன் அடக்கத்துடன் பதிலளித்தது அருகில் இருந்த அனைவருக்கும் மகிழ்வைத் தருகிறது.

“அதுமட்டுமல்ல சக்கரவர்த்திகளே! இரவோடிரவாக வெள்ளாற்றங்கரையில் இருந்த பனை மரங்களை வெட்டி, ஏவுகணைக் கருவிகளை செய்வித்ததும் மிகவும் பிரமாதம்! மரங்கள் நீங்கியதால் கற்களைக் குறிபார்த்து எறியத் தடை எதுவும் இல்லாமல் இருந்தது. நாங்கள் அனைவரும் சிவாச்சாரியாரின் அறிவுத் திறனை ஒருமனதாகப் பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்!” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் தென்மண்டலப் படைத்தலைவர்.

“நாம் இங்கு இருக்கிறோம் என்பது பாண்டியர்களுக்குத் தெரியாமல் இருப்பதே நமக்குப் பெரிய சாதகமான நிலையாகும். தொண்டியிலிருந்து சோழப்படை புறப்பட்டு பொன்னமராவதியை வந்தடையும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறதல்லவா?” என்று கேட்கிறான் சிவாச்சாரி.

“இன்னும் மூன்று நாள்களில் வந்து விடுவார்கள் சிவாச்சாரியாரே! அதுவரை?...” என்று இழுக்கிறார் படைத்தலைவர்.

“மூன்று நாள்கள்வரை பாண்டியன் படையைப் பொன்னமராவதியில் வைத்திருப்பான் என்று நம்புவோம் தண்டநாயகரே!  எப்படியிருப்பினும், தொண்டியிலிருந்து நமது படைகள் வந்து சேரும்வரை பாண்டியனை இங்கு இருத்திவைப்பது எமது கடமை! புரிகிறதா உமக்கு?” என்று இராஜராஜர் கேட்டதும் குலை நடுங்குகிறது படைத்தலைவருக்கு.

அதன் உட்பொருள் அவருக்குத் தெரியாமல் இல்லை. சிவாச்சாரி அமரபுஜங்கனைச் சிறைபிடிக்கத் தீட்டிக் கொடுத்த போர்த்திட்டம் நிறைவேறவேண்டும் என்பது இராஜராஜரின் திட்டவட்டமான உத்தரவு. தொண்டியிலிருக்கும் படைகள் பாண்டியப்படையின் பின்பக்கத்தைத் தாக்கவேண்டும் என்பது திட்டம். அப்படை வந்து சேராவிட்டால் அப்படையின் இடத்திற்குத் தாங்கள் செல்லவேண்டும் என்பது மாற்றுத் திட்டம். கடைசி வீரன் வரை பாண்டியப் படைகளோடு போராடவேண்டும் என்பதுதான் அத்திட்டத்தின் முக்கிய நிபந்தனை.

இந்தப் போருக்கு இராஜேந்திரனின் மூத்தமகன் இராஜாதிராஜனையும் அழைத்து வந்திருக்கிறார் இராஜராஜர். அவன் பங்கு பெரும் முதல் போர் அது.

“ஏன் தண்டநாயகரே அமைதியாகிவிட்டீர்?” என்று மிகவும் மெதுவாக, ஊடுருவும் குரலில் கேட்கிறார் இராஜராஜர். “போர் என்று வந்தால் யாமும், சோழப் படையின் சாதாரண வீரனும் ஒன்றுதான். யாம் யாவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அப்படிப் பிரித்துப் பார்த்தால், அடுத்த கணமே யாம் வீரர்களின் நம்பிக்கையை இழந்து விடுவோம்.” பிறகு தன் அருகில் நிற்கும் இராஜாதிராஜனிடம், “இதுதான் போர்வீரர்களின் தலையாய கோட்பாடாகும், இராஜாதிராஜா!”  என்கிறார்.

இராஜாதிராஜன் தன்னுடைய அறிவுரையைத் தன் இதயத்தில் எழுதி வைத்துக் கொள்வான், அதன்படி தான் தலைமை வகிக்கும் ஒவ்வொரு போரிலும் முன்னிருந்து நடத்திச் செல்வான், அப்படியே தனது இறுதி மூச்சை ஒரு போரிலேயே விட்டுவிடுவான் என்று இராஜராஜர் அறிய வாய்ப்பில்லைதான்!

“சக்கரவர்த்தி அவர்களே!” இராஜாதிராஜன் தனது பாட்டனாரை அவரது பட்டத்தைச் சொல்லி அழைக்கிறான். “நான் ஒரு திட்டத்தைச் சொல்லலாமா?”

தலையை அசைக்கிறார் இராஜராஜர்.

“நமது குறிக்கோள் பாண்டியப் படைகளை பொன்னமராவதியில் நிறுத்தி வைப்பதுதான். எனவே, துணிச்சலான படைத் திறனுடன், குறைவான வீரர்களுடன் அதை நிறைவேற்றலாம். அது எதிரிகளைக் குழப்பி, அவர்களின் கட்டுப்பாட்டைக் குலைக்கும். நாமும் அதிக அளவு வீரர்களை இழக்க வேண்டாம்!” இராஜாதிராஜன் தன் போர்த்திட்டத்தை விவரிக்கத் துவங்குகிறான். பதினேழு வயதே ஆன அவன், போர் நடத்தும் முறைகளை அணுகும் வழி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இராஜராஜர் தண்டநாயகரிடமும், சிவாச்சாரியிடமும் கருத்துக்களைக் கேட்கிறார்.

“சக்கரவர்த்தி அவர்களே! திட்டம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அது நாம் இருக்கும் இடத்தை நமது எதிரிகளுக்குக் காட்டிக் கொடுத்து விடாதா?” என்று இழுக்கிறார்.

“எதிரிகளைக் குழப்புவதும், அவர்களை நாம் விரும்பும் இடத்திற்கு வரவழைத்து முறியடிப்பதும் ஒரு சிறந்த போர்முறைதான்!” என்ற சிவாச்சாரி, “இளவரசரின் திட்டத்திற்குச் சிறிது மெருகேற்ற வேண்டும். அவர் இந்தத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கினால், அது அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பையும் அளிக்கும்!”  என்று முடிக்கிறான்.

அவனது பதில் அனைவரையும் பேச்சிழக்க வைக்கிறது. சிவாச்சாரி என்ன சொல்கிறான்? இளவரசன் இராஜாதிராஜனின் உயிரைப் பணயம் வைக்க முயல்கிறானா? இராஜராஜர் முன்பு கூறியது போல மதுவுண்ட பித்தனாகப் பிதற்றுகிறானே!

“சக்கரவர்த்தி அவர்களே! இந்தப் பயங்கரமான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இளவரசரின் உயிரைப் பந்தாட சிவாச்சாரியார் விரும்புவதுபோலத் தெரிகிறது! நான் தாக்குதலை முன்னின்று நடத்துகிறேன். இளவரசர் தங்களுடனேயே இருக்கட்டும்!” என்று தண்டநாயகர் கெஞ்சுகிறார்.

“தண்டநாயகரே! இராஜாதிராஜனையே கேட்டுவிடுவோமே!” என்ற இராஜராஜர், தன் பேரன் பக்கம் திரும்பி வினவுகிறார், “யாம் உனது முடிவை அறிய விரும்புகிறோம்!” 

“சக்கரவர்த்தி அவர்களே! தாங்கள்தான் சிறிது நேரம் முன்னர் அனைத்து வீரர்களையும் என்னைப் போல நடத்தவேண்டும் என்று அறிவுரை கூறினீர்கள்! நான் கலந்துகொள்ள இயலாத போர்த்திட்டத்தை நான் தீட்டிக் கொடுத்தால் நான் ஒரு ஏமாற்றுக்காரன் ஆகமாட்டேனா! இந்தத் தாக்குதலை நானே முன்னின்று நடத்தத் தாங்கள் எனக்கு அருள்கூர்ந்து அனுமதி அளிக்க வேண்டுகிறேன்!” இராஜாதிராஜன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வீரம் வழியும் குரலில் பதிலிருக்கிறான்.

இராஜராஜரின் முகத்தில் பெருமை கலந்த புன்னகை மலர்கிறது. “மிக்க நன்று! எந்த ஒரு படைத்தலைவனுக்கு அருகிலும் ஒரு திறமை வாய்ந்த ஆலோசகர் இருப்பது அவசியம். யாம் சிவாச்சாரியை உன்னுடன் ஆலோசகராக அனுப்புகிறோம்.” அவர் சிவாச்சாரியை உற்று நோக்குகிறார்.
அந்தப் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களைக் காண்கிறான் சிவாச்சாரி.

“யாம் எமது பொக்கிஷத்தையே உன்னிடம் ஒப்படைக்கிறோம். அதைப் பாதுகாத்து, பத்திரமாகத் திரும்பக் கொணர்வாயாக!” என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது அவர் பார்வை. வெகு நாள்களுக்குப் பிறகு சிவாச்சாரியின் முகத்தில் உணர்ச்சிகள் பெருக்கெடுக்கின்றன. கண்களில் நீர்க்கசிவு தென்படுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------

                                   வரவேற்கிறோம் 

                                                            


          இணையவெளியில் ஒரு புதிய தாரகையாக உதித்திருக்கும்
           லிங்க்     http://tamizhtharakai.wordpress.com/]

      தாரகை [தமிழ் வானில் ஒரு விண்மீன்] வலைப்பதிவிற்கு 

இந்த விரிந்த தமிழ் வானத்தில் இருக்கும் கணக்கற்ற விண்மீன்கள் நாம்!  நமது கருத்துக்களையும், நமது படைப்புகளையும், செய்திகளையும் இங்கு பகிர்ந்து கொள்வோம்! கதைகள், கட்டுரைகள். புகைப்படங்கள் (தமிழ் வானத்தில் நடப்பது), எதுவானாலும் சரி, அனுப்புங்கள்!..அனுப்பவேண்டிய முகவரி:  tharakai.editor@gmail.com
வாழ்க தாரகை ! வளர்க அதன் ஒளி வீச்சு! இணையவெளியின் மனமார்ந்த வரவேற்பும் வாழ்த்துக்களும் தாரகைக்கு என்றென்றும் உரியன  
----------------------------------------------------------------------------------------------------------------------

“சக்கரவர்த்தி அவர்களே! என் உயிரைக் கொடுத்தாவது இளவரசரைப் பாதுகாப்பேன்! இது என் நெஞ்சில் என்றென்றும் ஆனந்த தாண்டவம் ஆடும் அம்பலவாணன் மீது ஆணை!”  அவனது குரல் இலேசாகக் கரகரக்கிறது.

அதன் பிறகு, இராஜாதிராஜனின் போர்த் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று விவரிக்க ஆரம்பிக்கிறான்.

“இன்று காலை நடந்த தாக்குதலின் விளைவாகக் குழம்பி இருக்கும் பாண்டிய வீரர்கள் நாளை எதுவும் செய்ய மாட்டார்கள். ஒற்றர்களை வெள்ளாற்றின் மறுபக்கம் செய்தி சேகரிக்க அனுப்புவார்கள். அவர்களின் ஒருவர்கூட உயிருடன் திரும்பக் கூடாது என்று நமது தண்டநாயகர் அங்கு இருக்கும் நமது ஒற்றர் படைக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, நாகைப்பட்டினத்தில் நமது கடற்படைகள் இருபதாயிரம் வீரர்களைக் கரை இறக்கி இருப்பதாகவும், அவர்கள் தஞ்சைக்கு விரைந்து கொண்டிருப்பதாகவும், பாண்டிய ஒற்றர்களுக்குத் தவறான செய்தி நேற்று அனுப்பப் பட்டிருக்கிறது. ஆகவே, தஞ்சை பலப்படுத்தப் பட்டிருப்பது போன்ற உணர்வு பாண்டியருக்கு ஏற்படுத்தப்படும்.

“மழை ஒலி நமது யானைகள், குதிரைகள், அணிவகுத்து நடந்தபோது எழுந்த ஒலிகளை அடக்கிவிட்டது. மழை நின்றுவிட்டபடியால் இனிமேல் அந்த உயர்நிலை நமக்குக் கிடைக்காது. பொன்னமராவதிக்கு வடக்கிலும், கிழக்கிலும் ஒரு காத தூரத்திலும், சிறிய குன்றுகள் உள்ளன. நானும் இளவரசரும் ஞாயிறு சாய்ந்தவுடன், ஐம்பது யானைகள், ஐநூறு குதிரைகள், ஐநூறு வில்லாளர்கள், ஐயாயிரம் வீரர்களுடன் மெதுவாகச் சென்று இந்தக் குன்றுகளில் சென்று மறைவோம். பகலில் மெதுவாக முப்பது ஏவுகணைக் கருவிகளை அந்தக் குன்றுகளின் மறுபுறத்தில் கிட்டத்தட்ட நூறு அடிஉயரம் வரை ஏற்றிப் பொறுத்தி வைப்போம். அதனால் ஏவுகணைகளின் அளவெல்லை ஒருகாதத்திற்கும் மேலாகவே அதிகரித்துவிடும்.

“கதிரவன் மேற்குத் திசையில் மறைந்தவுடன் தாக்குதலை ஆரம்பிப்போம். மழை இல்லாததால் ஏவுகணைத் தொட்டியை எண்ணெய் ஊறிய கந்தலால் சுற்றிய கற்களால் நிரப்பி வைப்போம். முதலில் வில்லாளர்கள் பாண்டியப் படைகள் மீது சரமாறியாக அம்புகளை எய்வார்கள். இதனால் குழப்பமுற்ற பாண்டிய வீரர்கள் அவர்களை நோக்கி ஓடிவருவார்கள்.

“அச்சமயம் ஏவுகணைகளில் நிரப்பப்பட்ட கற்களுக்குத் தீயிட்டு, கற்கள் அவர்கள் மீது எறியப்படும். அவர்கள் கூடாரங்கள் தீப்பற்றி எரியும். அவர்களது குதிரைகளும், யானைகளும் தட்டுத் தடுமாறி ஓடி அவர்களுக்கு நிறையச் சேதத்தை விளைவிக்கும். ஒருபுறம் துவங்கிய தாக்குதல் முடிந்தவுடன் மறுபுறம் தாக்குதல் ஆரம்பிக்கும். இத்தாக்குதலின் நோக்கமே நம் சோழவீரர்கள் அவர்களை கிழக்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் பெரும்படையும் தாக்குகிறோம் என்ற அச்சத்தை விளைவிப்பதுதான்.”

சுற்றி உள்ளவர்களின் மனத்திரையில் அந்தத் தாக்குதல் படமாக விரிகிறது.

“காலைவரை இத்தாக்குதல் நீடிக்கும். எதிரிகள் காலையில் என்ன ஆயிற்று என்று தெரிந்துகொண்டு அணியை வகுக்கும் பொழுது நாங்கள் ஐந்து கல் கிழக்கில் இருக்கும் பெரிய குன்றுகளின் பின்னால் மறைந்து கொண்டு விடுவோம். ஆக, பாண்டிப் படைகள் வடக்கேயும், கிழக்கேயும் செல்லாதபடி மடக்கிவிடுவோம். அவர்கள் மேற்குப் பக்கம் வந்தால் நீங்கள் தாக்குதல் நடத்துங்கள். நிலைமையைத் தெரிந்து கொண்டு நாங்கள் மேலும் அடுத்த இரவு தாக்குதலைத் தொடங்குவோம்.

“தாக்குதல் நடக்கும் இந்நேரத்தில் தெற்கே சென்றால் பொன்னமராவதி விழுந்து விடும் என்று பாண்டியர்கள் தயங்குவார்கள். இந்தத் தயக்கம் தீர்ந்து அவர்கள் முடிவெடுப்பதற்குள் நமது படைகள் தொண்டியிலிருந்து பொன்னமராவதி வந்து விடும்

“அவர்கள் வந்தவுடன் முழு மூச்சுடன் பொன்னமராவதியைத் தாக்குவோம். அச்சமயம் நமது படைகள் எண்ணிக்கையும், எதிரிப் படை எண்ணிக்கையும் சமமாகி விடும். நமது படைகள் உற்சாகத்துடனும், எதிரிப்படைகள் ஒழுங்கு குலைந்த நிலையிலும் இருப்பர். பொன்னமராவதி விழுந்து விடும். அமரபுஜங்கன் ஒன்று, சிறைப்படுவான், அல்லது மரிப்பான்.” என்று தாக்குதல் திட்டத்தை விளக்குகிறான் சிவாச்சாரி.

இராஜராஜர் முகத்தில் சிறிது இருள் படர்கிறது. “இதுவரை யாம் இருட்டில் எதிரியைத் தாக்கியதில்லை, தாக்கவும் போவதில்லை. அதை நீரும், இராஜாதிராஜனும் முதலும் கடைசியுமாகச் செய்வீராக! சோழமாதா உங்களுக்கு வெற்றியை அளிக்கட்டும். சிறிது நேரம் எம்மைத் தனியாக விடுவீராக!”  என்று அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.[வளரும்]

No comments:

Post a Comment