Friday 1 August 2014

அரிசோனாவில் ஆடிப்பூரம்

அரிசோனாவில் ஆடிப்பூரம் 


அரிசோனா மகாதேவன் 

ஆடிப் பூரத் திருநாள் தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற தமிழ் பேசும் நல்லுலகங்களில் ஆடிமாதத்தில், பூர நட்சத்திர நாளில் பெரும் அளவில் கொண்டாடப்படுகிறது.  இத் திருநாள் கொண்டாடப் படுவதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. 
  
முதலாவது, சக்தி வடிவான அம்பிகை அருள் பாலிக்கும் திருநாள் என்றும், அம்பிகையின் வளைகாப்புத் திருநாள் என்றும்,  ஆண்ட சராசரங்களையே பந்தாகக் கொண்டு விளையாடும் சிறுமியாகக் கொண்டாடப்படும் சக்தி, பூப்படைந்த திருநாள் என்றும் கொள்ளப் படுகிறது. 



மாரியம்மன் கோவில்களில் பராசக்தியை வேண்டிக்கொண்டு, “தீ மிதிப்பு” விழாவும், படையல் விருந்தும் நடப்பதுண்டு. இத்தீமிதிப்பு வைபவம் திருவண்ணாமலைக் கோவிலில் உண்ணாமுலையம்மையின் ஆலயத்திற்கு முன்னாலும் நடந்துவருகிறது. 


இரண்டாவது, இந்நாள் மகள் வேண்டி நோன்பிருந்த பெரியாழ்வார், கோவில் நந்தவனத்தில் மலர்கள் கொய்யும்போது, திருமகள் அவதாரமான ஆண்டாள் துளசிச் செடிகளின் ஊடே மகவாகக் கிடைத்த நாள். ஆகையால், வைணவர்கள் ஆடிப்பூர நன்னாளை ஆண்டாள் ஜெயந்தி என்று கொண்டாடுவர். திருவில்லிப்புத்தூரிலும், திருவரங்கத்திலும் இந்நாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.
                                                   

தமிழ் ஆகம முறைப்படி கட்டப்பட்டு வரும் அரிசோனா ஆனைமுகன் ஆலயத்திலும் (Maha Ganapati Temple of Arizona),  மற்றும் வேங்கடகிருஷ்ண ஷேத்திரத்திலும் ஆடிப்பூரம் கொண்டாடப்பட்டது.ஆனைமுகன் ஆலயத்தில் ஆடிப் பூரத் திருநாளில், கோவிலில் குடிகொண்டிருக்கும் விசாலாட்சி அம்பிகைக்கு, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பட்டுப் புடவை உடுத்தப்பட்டு, வளையல் மாலைகளும், மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டன.  
                                                     
                                                   
பக்தர்கள் தங்கள் வீட்டில் மலர்ந்ந்த மல்லிகை, ரோஜா, மற்றும் பல மலர்களால் மாலை தொடுத்து, விசாலாட்சிக்கு அணிவிக்கச் செய்து, அந்த ஆனந்த தரிசனத்தைக் கண்ணுற்றார்கள். வேத மந்திரங்கள் நிறைந்த ஆகமப் பூஜைகளுடன், தேவாரமும், அபிராமி அந்தாதியும் ஓதப்பட்டது.  சிறப்பு ஆராதனைக்குப் பிறகு, அம்மனுக்கு அணிவித்த வளையல்கள் அங்கு வந்திருந்த பெண்களுக்கு வழங்கப்பட்டன.  பக்தர்களே கோவில் மடைப்புளியில் சமைத்த பிரசாதங்களும், உணவுவகைகளும் வழங்கப்பட்டன.                        
                                                           
                                                 

வேங்கடகிருஷ்ண ஷேத்திரத்தில் கொண்டாடப்பட்ட ஆண்டாள் ஜெயந்தி உத்சவத்தில், பெண்கள் கூடி விளக்கு பூஜை செய்து, லலிதா சஹாஸ்ரநாமம், மற்றும் லட்சுமி அஷ்டோத்திர தோத்திரங்களைப் பாராயணம் செய்தனர்.  லட்சுமிக்கு பூஜை செய்து முடிந்ததும், கட்டணம் செலுத்தி விளக்கு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் வெள்ளி நாணயம், சிறு லட்சுமி விளக்கு, வளையல்கள் வழங்கப்பட்டன. கோவில் தளிகை அறையில் சமைத்த பிரசாதம் அனைவருக்கும் வழங்கப் பட்டது.

நமது தமிழ் இந்துக் கலாசாரத்தையும், திருநாள்களையும் போற்றிப் பேணி வளர்ப்பதில், தமிழர்கள், அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த இரு திருவிழாக்களும் காட்டா நிற்கின்றன.

No comments:

Post a Comment