Sunday 10 August 2014

தமிழ் இனி மெல்ல.. [32]பேடி மாதிரிப் போர் நடத்தாதே

தமிழ் இனி மெல்ல சென்ற பதிவின்[31] இறுதியில் 
சுற்றி உள்ளவர்களின் மனத்திரையில் அந்தத் தாக்குதல் படமாக விரிகிறது.
“காலைவரை இத்தாக்குதல் நீடிக்கும். எதிரிகள் காலையில் என்ன ஆயிற்று என்று தெரிந்துகொண்டு அணியை வகுக்கும் பொழுது நாங்கள் ஐந்து கல் கிழக்கில் இருக்கும் பெரிய குன்றுகளின் பின்னால் மறைந்து கொண்டு விடுவோம். ஆக, பாண்டிப் படைகள் வடக்கேயும், கிழக்கேயும் செல்லாதபடி மடக்கிவிடுவோம். அவர்கள் மேற்குப் பக்கம் வந்தால் நீங்கள் தாக்குதல் நடத்துங்கள். நிலைமையைத் தெரிந்து கொண்டு நாங்கள் மேலும் அடுத்த இரவு தாக்குதலைத் தொடங்குவோம்.
“தாக்குதல் நடக்கும் இந்நேரத்தில் தெற்கே சென்றால் பொன்னமராவதி விழுந்து விடும் என்று பாண்டியர்கள் தயங்குவார்கள். இந்தத் தயக்கம் தீர்ந்து அவர்கள் முடிவெடுப்பதற்குள் நமது படைகள் தொண்டியிலிருந்து பொன்னமராவதி வந்து விடும்
“அவர்கள் வந்தவுடன் முழு மூச்சுடன் பொன்னமராவதியைத் தாக்குவோம். அச்சமயம் நமது படைகள் எண்ணிக்கையும், எதிரிப் படை எண்ணிக்கையும் சமமாகி விடும். நமது படைகள் உற்சாகத்துடனும், எதிரிப்படைகள் ஒழுங்கு குலைந்த நிலையிலும் இருப்பர். பொன்னமராவதி விழுந்து விடும். அமரபுஜங்கன் ஒன்று, சிறைப்படுவான், அல்லது மரிப்பான்.” என்று தாக்குதல் திட்டத்தை விளக்குகிறான் சிவாச்சாரி.
இராஜராஜர் முகத்தில் சிறிது இருள் படர்கிறது. “இதுவரை யாம் இருட்டில் எதிரியைத் தாக்கியதில்லை, தாக்கவும் போவதில்லை. அதை நீரும், இராஜாதிராஜனும் முதலும் கடைசியுமாகச் செய்வீராக! சோழமாதா உங்களுக்கு வெற்றியை அளிக்கட்டும். சிறிது நேரம் எம்மைத் தனியாக விடுவீராக!”  என்று அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்.
தமிழ் இனி மெல்ல.. [32]தொடர்கிறது 



அரிசோனா மகாதேவன் 

                                              அத்தியாயம் 9
                                   பொன்னமராவதி அரண்மனை
                            பரிதாபி, ஆனி 18 - ஜூலை 3, 1012
                               

மாரச் சத்தம் தொலைவில் கேட்கிறது. பாண்டியப் படைத் தலைவர்கள் படைகளை ஒருங்கே சேர்த்துக் கொண்டிருக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த டமார ஒலி அமரபுஜங்கனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. அவனது உடல் பொன்னமராவதி அரண்மனையில் இருந்தாலும், உள்ளம் அன்று காலையில் பரிதாபமாக மடிந்த படைவீரர்களையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கிறது. காலடிச் சத்தம் கேட்டுத் தலையைத் திருப்பிப் பார்க்கிறான். திருமாறன் வந்து வணங்கி நிற்கிறான்.

என்ன என்பதுபோல புருவங்களை உயர்த்துகிறான் அமரபுஜங்கன்.
“அரசே! தாங்கள் விரும்பியபடி சேர மன்னர், படைத் தளபதி, பிரிவுப் படைத் தலைவர்கள் ஆகியோரை அழைத்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார்கள். தாங்கள் காலையிலிருந்து உணவே உண்ணவில்லை. சாப்பிடுவதற்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன். சிறிதாவது உண்டால்தான் உங்கள் உடம்பிற்குத் தெம்பு பிறக்கும்.” என்று பரிவுடன் கூறுகிறான் திருமாறன். அவன் முகத்தில் இருக்கும் ஆதங்கம் மங்கிய தீவட்டி வெளிச்சத்திலும் அமரபுஜங்கனுக்குப் புலனாகிறது.
“ம்... உணவு ஒன்றுதான் குறைச்சல்! களத்தில் தேவையில்லாமல் வீழ்ந்து உயிரை விட்டார்களே, அந்தப் பாண்டி நாட்டு வீரர்களுக்கு இனி பசி எடுக்கவா போகிறது? எவ்வளவு உண்டாலும் நிறைவில்லாமலேயே இருப்பானே, அந்த ஈழப்படைத் தலைவன் - அவன் இனிமேல் உண்ண உட்காரவா போகிறான்? நான் மட்டும் வயிறு புடைக்கத் தின்று என்ன செய்யவேண்டும் திருமாறா?” என்று இறைகிறான் அமரபுஜங்கன்.
“அரசே! போர் என்றால் பல்லாயிரக் கணக்கானோர் மடிவது என்பது உலகறிந்த உண்மையில்லையா! இது தங்களுக்குத் தெரியாத ஒன்றா? நம்முடன் தோள்கொடுத்துப் போர் புரிந்து மாண்டவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி, அவர்களுக்காக நாம் பழி வாங்குவதுதானே! அதற்காகவாவது தாங்கள் உணவு உண்ணத்தானே வேண்டும்! அரசர் தாங்கள் நன்றாக இருந்தால்தானே குடிகளாகிய நாங்கள் உற்சாகமாக இருப்போம்!  தாங்கள் நலிந்தால் நாடு நலிந்து விடாதா?” என்று அவனைச் சமாதானப்படுத்தி உணவைப் பரிமாறுகிறான் திருமாறன்.

தனது பெரிய மீசையை ஒதுக்கி விட்டபடியே சாப்பிட ஆரம்பிக்கிறான் அமரபுஜங்கன். ”திருமாறா! உனது தம்பி முருகேசன் தன் குடும்பத்துடன் ரோகணத்தில் இருக்கிறான். இளவரசன் விக்கிரமனுக்குத் துணையாக இருப்பது யார்!”

“அரசே! எனக்கடுத்த தம்பி வெற்றிவீரனும் என் மூத்தமகன் காளையப்பனும்தான் இளவரசருடன் இருக்கிறார்கள். வெற்றிவீரன் இளவரசுக்கு வாட்போர் பயிற்சி செய்து வைத்திருக்கிறான். காளையப்பன் மல்யுத்தப் பயிற்சி தந்து கொண்டிருக்கிறான். இளவரசர் இக்கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்று வருவதாக இருவரும் எனக்கு அவ்வப்போது செய்தி தந்து கொண்டிருக்கிறார்கள்.”

“நன்று. மிக்க நன்று! விக்கிரமனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மதுரையில் இருக்கும் அவனுக்குத் துணையாக எத்தனை படைவீரர்கள் இருக்கிறார்கள்?” என்று வினவுகிறான் அமரபுஜங்கன்.

“மதுரைக் கோட்டைக்குள் மொத்தம் ஐயாயிரம் பேர் இருக்கிறார்கள் அரசே!”
அமரபுஜங்கன் சாப்பிட்டு முடிப்பதற்கும், சேர மன்னன் கோவர்த்தன மார்த்தாண்டன் தன் பரிவாரங்கள் புடைசூழவும், அமரபுஜங்கனின் படைத்தலைவர், மற்றும் குதிரைப்படை, வில்லாளர்கள் தலைவரும் உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கிறது. அவர்களை இருக்கையில் அமரும்படி கைகாட்டுகிறான் அமரபுஜங்கன். திருமாறன் அவன் பின்னால் நின்று கொள்கிறான்.

“போரே புரியாமல் இத்தனை வீரர்களை அநியாயமாக இழந்து விட்டோம்! மாண்டவர்களுக்கு மேலே காயம் பட்டவர்கள் பலமடங்கு அதிகம். மேலும் நமக்குத் தோள் கொடுக்க வந்த சிங்களப் படைத்தலைவரோடு சிங்களப் படைகள் கிட்டத்தட்ட மொத்தமும் அழிந்து போய் விட்டன!” என்று படைக் கணக்காளர் தெரிவிக்கிறார்.

“இப்பொழுது போரிடும் நிலையில் எத்தனை வீரர்கள் உள்ளார்கள்? யானைகள், குதிரைகள் எத்தனை உள்ளன?” கேள்வி பிறக்கிறது அமரபுஜங்கனிடமிருந்து.

“இருபதாயிரம் வீரர்கள் தேறலாம். இங்கு வந்த முப்பத்தைந்தாயிரம் பேரில், ஆறாயிரம் பேர் வீரசொர்க்கம் அடைந்தனர். ஒன்பதாயிரம் பேர் படுகாயம் அடைந்ததால் அவர்கள் போரிடும் நிலையில் இல்லை. மேலும் குதிரைப் படைக்குச் சேதம் அதிகம். கால் உடைந்த குதிரைகள் பாதிக்கு மேல் இருக்கும். அவை பிழைப்பது கடினம். யானைப் படைகளுக்கு அதிக சேதம் இல்லை. வழுக்கி விழுந்ததால் பத்து யானைகள் காலுடைந்து கிடக்கின்றன. அவற்றின் பிளிறல்தான் யுத்தகளத்தை உலுக்குகிறது.” உற்சாகமில்லாமல் பதில் வருகிறது.

“எப்படி இத்தனை பேர் இறந்தார்கள்? இத்தனை பேருக்குப் படுகாயம் எப்படி ஏற்பட்டது? பாதி குதிரைப்படை அழிக்கப்பட்டதா? இத்தனைக்கும் எதிரிகள் வெள்ளாற்றைத் தாண்டிக்கூட வரவில்லையே தளபதியாரே! அவர்கள் எறிந்த கற்களா இவ்வளவு சேதத்தை விளைவித்தன?” நம்பிக்கையின்மை அமரபுஜங்கனின் குரலில் நன்றாகவே தெரிகிறது.

“கவண் கற்களால் தலை உடைந்து இறந்தவர்கள் ஆயிரம் பேர்கள் கூட இருக்கமாட்டார்கள் அரசே! அந்தக் குழப்பத்தினால் தாறுமாறாக நமது படைவீரர்கள் ஓட ஆரம்பித்தனர். மழை பெய்து நிலப்பகுதி வழுக்கலாக இருந்ததால் சறுக்கி விழுந்தனர் ஆயிரக் கணக்காணோர். இவர்கள் மீது ஏறி மிதித்துக் கொண்டு பலர் ஓடியதால், விழுந்தவர்களுக்குப் படுகாயமோ, மரணமோ ஏற்பட்டது. அடிப்பட்ட குதிசைகளும், யானைகளும் தறிகெட்டு ஓடியதால் ஏற்பட்ட சேதமும் மிகமிக அதிகம். நமது யானைகளாலும் குதிரைகளாலும், இன்னும் ஆங்காங்கு ஓடிய பாம்புகளால் கடிபட்டதாலும் கிட்டத்தட்ட இன்னொரு இரண்டாயிரம் வீரர்கள் மரணத்தைத் தழுவினர். இது தவிர சிங்களப் படைகள் நாலாயிரம்பேர் வெள்ளாற்றைக் கடக்க முயற்சி செய்தனர். அவர்களில் இரண்டாயிரம் பேர் திரும்பி வரவில்லை. ஆயிரம் பேர் வெள்ளாற்றில் பிணமாக மிதந்தனர். கை, கால் உடைந்தவர்கள், தலையில் அடிபட்டு இன்னும் உயிரோடு, ஆனால் போரிட இயலாது இருப்பவர்கள், என்று நமது படைவீரர்களும், மிகுந்த சிங்கள வீரர்களுமாக ஒன்பதாயிரம் பேர் செயலிழந்து போயிருக்கிறார்கள். சேதம் விளைவித்துத் தாறுமாறாக ஓடிய குதிரைகள் அனைத்தும் கால்கள் உடைந்து கிடக்கின்றன. அவற்றின் கதி அதோகதிதான்! இதை நினைக்க நினைக்க என் நெஞ்சம் கொதிக்கிறது அரசே!” உள்ளம் உருக, இறந்த, காயமடைந்த வீரர்களிடம் அநுதாபத்துடன் அமரபுஜங்கனுக்குப் பதில் சொன்ன பாண்டியப் படைத் தலைவர், “இதில் ஒரே ஒரு நல்ல செயதி என்னவென்றால் தங்களை திருமாறன் சரியான நேரத்தில் முன்னிலையிலிருந்து அகற்றிப் பொன்னமராவதிக்குக் கொண்டுவந்ததுதான்!” என்று முடிக்கிறார்.

நிம்மதிப் பெருமூச்சு கிளம்புகிறது அவரிடமிருந்து.

சிறிது நேரம் சிந்தித்த அமரபுஜங்கன், “வெள்ளாற்றைத் தாண்டி சோழப் படை வந்ததா? நாகையில் தரையிறங்கிய சோழர் கடற்படை வீரர்கள் தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைத் தவிர நமது ஒற்றர் களிடமிருந்து வேறு ஏதாவது போர்த் தகவல் வந்ததா?” என்று மீசையை நீவியவாறு கேட்கிறான்.

“வெள்ளாற்றிலிருந்து நல்லூர் வரை இரண்டு கல் நீளம், இரண்டு கல் அகலத்திற்கு பிணக்காடாக இருக்கிறது அரசே! கதிர் சாயும் வரை நமது வீரர்களின் உடல்களைத் தாண்டி யாரும் வரவில்லை. தொண்டியிலிருந்த சோழர் படை அங்கிருந்து புறப்பட்டு விட்டதாம். பாதி மதுரைக்குச் செல்வதாகவும், பாதி தஞ்சைக்குத் திரும்புவதாகவும் பேசிக் கொண்டார்களாம். ஆனால்...” இழுக்கிறார் படைத்தலைவர்.

“என்ன ஆனால்?”

“அதுதான் நமக்குக் கடைசியாகக் கிடைத்த செய்தி அரசே! சோழப் படையின் அணிவகுப்பைப் பற்றியும், அவர்கள் படை முன்னேற்றத்தையும் அறிந்து வரவும் சென்ற ஒற்றர்கள் யாரும் திரும்பவில்லை. மேலும், வெள்ளாற்றைக் கடந்து சென்று இராஜராஜர் இருக்குமிடத்தை அறிந்து வரச் சென்ற ஒற்றர்களும் திரும்பவில்லை.” ஏமாற்றம் ஒலித்தது படைத்தலைவரின் குரலில்.

“ஆக, சோழப்படைகள் எண்ணிக்கையும், நமது எண்ணிக்கையும் ஒன்றாகிவிட்டது. இன்று நடந்த தாக்குதலினால் நமது படைகள் மன உறுதி இழந்திருக்கின்றனர். அதைத்தானே எம்மிடம் சொல்ல வருகிறீர்?” கண்களை உருட்டி விழித்தபடி கேட்கிறான் அமரபுஜங்கன்.

“அரசே! இன்று நடந்த தாக்குதல் நமது வீரர்களை நிலை குலையச் செய்திருக்கலாம். ஆனால் நமது வீரர்கள் கோழைகள் அல்ல அரசே! ஒரே ஒரு பாண்டிய வீரன் மிஞ்சினால் கூட, பல சோழப் பதர்களை எமனுலகுக்கு அனுப்பாமல் சாகமாட்டான்!” மார்பை உயர்த்திப் பதிலளிக்கிறார் படைத்தலைவர்.

“எனக்குத் தெரிந்த செய்தியைச் சொல்லவேண்டாம் படைத்தலைவரே! தேவையில்லாமல் சிங்களப் படை அழிந்து விட்டது. இதற்கிடையில் இராஜராஜனுக்கு இன்னும் இருபதாயிரம் வீரர்கள் அதிகமாகி இருக்கிறார்கள். நாம் மதுரையை விட்டுக் கிளம்பும் போது அவன் இருந்த நிலைமைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம். நமக்கு உதவியாக வந்த சேர மன்னர் மார்த்தாண்டரின் படை வீரர்களில் எத்தனை பேர் மிஞ்சி இருக்கிறார்கள் என்றுகூட இன்னும் தெரியவில்லை.” என்ற அமரபுஜங்கன், சேரமன்னனை நோக்கி, “மார்த்தாண்டரே, தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய நான் ஆவலாக உள்ளேன்!” என்று வினவுகிறான்.

மார்த்தாண்டனின் முகம் சற்று மலருகிறது. அவனும் தன் பெரிய மீசையை நீவி விட்டுக் கொள்கிறான். “அமரபுஜங்கரே! நாம் இருக்கும்போது தனித்து முடிவு எடுக்காது எமது கருத்தையும் அறிய விழைவது எமக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பொழுது இருக்கும் நிலையில் நாம் முன்பு திட்டம் தீட்டியபடி இராஜராஜனைச் சிறைப்பிடிக்க முடியுமா? இதுவரை நமது படைகள் வெள்ளாற்றுக்குத் தெற்கே இருக்கிறது என்றுதான் இராஜராஜனுக்குத் தெரியும். நமது நிலை சரியாக இருக்காத இந்நேரத்தில் நாம் தஞ்சையை நோக்கிச் செல்வது சரியான முடிவா என்பதுதான் என் கேள்வி.

“அதற்காக நமது திட்டத்தைக் கைவிடவேண்டும் என்று சொல்வதாக நினைக்க வேண்டாம். ஒத்திப் போடலாமா என்று தோன்றுகிறது இதைப் போர்த்தந்திரம் என்று நினைத்துப் பாருங்கள்!” என்று முடிக்கிறான்.
அமைதியாகி விடுகிறான் அமரபுஜங்கன்.

அவனது நெற்றியில் சிந்தனைக் கோடுகள் ஓடுகின்றன. முழங்காலில் ஊன்றிய கைவிரல்கள் தாளம் போடுகின்றன. கண்களை மெல்ல மூடுகிறான். மூச்சை நன்றாக இழுத்து விடுகிறான். அவன் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாகிவிட்டது அனைவரையும் உள்ளூரப் பதட்டப்பட வைக்கிறது.

சேர மன்னனின் பதில் பாண்டியப் படைத் தலைவருக்குச் சம்மதமாக இல்லாவிட்டாலும், தலையிருக்க வால் ஆடக்கூடாது என்று தன்னை அடக்கிக் கொள்கிறார். அவனுடைய இப்பதில் அமரபுஜங்கன் மனதை எப்படிப் புண் படுத்தியிருக்குமோ, என்ன விதமான பதில் வருமோ என்று மனதளவில் அச்சப்படுகிறார். தனது அரசர் எவ்வளவு ஆசையுடன் திட்டம் தீட்டினார் - அதற்காக இரண்டு ஆண்டுகள் எப்படி இலங்கைக்கும், சேரநாட்டிற்கும் சென்று படை திரட்டினார் - ஒரு அராபியனைப் போல எப்படி மாறுவேடமிட்டு அலைந்து திரிந்தார் என்று அவருக்குத்தானே தெரியும்?

வெண்ணெய் திரண்டுவரும் பொழுது தாழி உடைந்த மாதிரி இப்படி நடந்து போனது எவ்வளவு ஏமாற்றத்தைத் தந்திருக்கும்! சில நாள்கள் பெய்த மழையும், பனை மரத்தால் செய்த கவண் கல் எறியும் பொறிகளும் (டூச்தணஞிடஞுணூண்)  இப்படி இரண்டாண்டுத் திட்டத்தைத் தவிடு பொடியாக்கிவிடும் என்று நேற்றுவரை அவர்கள் கனவுகூடக் காணவில்லையே! தான் வீரமுழக்கமிட்டாலும், தங்கள் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது என்றும் அவருக்குத் தெரிந்துதான் இருக்கிறது. அமரபுஜங்கன் மனம் தளர்ந்து விடக்கூடாது என்றுதான் தோள் தட்டினோம் என்றும் அவர் உணர்ந்துதான் இருக்கிறார். மன்னன் இப்படி அமைதி யாகிவிட்டானே! எவ்வளவு நேரம்தான் இப்படி இருப்பான் என்று கவலைப்படுகிறார்.

சேர மன்னனுக்கும் அமரபுஜங்கனின் அமைதி சஞ்சலத்தைத் தருகிறது. தான் பேசியதை கோழைத்தனம் என்று அமரபுஜங்கன் எடுத்துக் கொண்டிருப்பானோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. தனது படைகள் அழியப் போவதைப் பற்றி அவன் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. ஆனால் தோல்வியைத்தான் சந்திக்கப் போகிறோம் என்று தெரிந்தும் போரிடுவது அவனுக்குச் சரியாகப் படவில்லை.

இராஜராஜனைச் சிறைப்பிடிக்காமல் போரிட்டுத் தோற்றால் அதோடு நின்றுவிடப் போவதில்லை. இராஜேந்திரனின் அளவு கடந்த சினத்திற்கும், அவனுடன் திரண்டு வரக்கூடிய இலட்சம் வீரர்களுக்கும் அவனது வயநாட்டால் பதில் சொல்ல முடியாது போய்விடுமே! மின்னல் தாக்குதல், மின்னல் தாக்குதலாக இல்லாவிட்டால் அதன் விளைவு நாம் விரும்பியபடியா நடக்கும்? மிஞ்சிய படைகளுடன் சேரநாட்டிற்குத் திரும்பி சென்றால் இராஜேந்திரனின் கோபத்திற்குத் தப்பலாம் என்றுதான் அவன் நினைக்கிறான். அவன் மேலே பேசி அமரபுஜங்கனுக்கு நிலைமையை விளங்கவைக்கலாம் என்று சொல்ல அவன் தொண்டையைச் செருமிக் கொள்வதற்குள் அமரபுஜங்கனின் குரல் அவையில் ஒலிக்கிறது.

“நமது நண்பரும், ஆதரவாளருமான சேரமானின் கருத்து வலுவானதே. அதை முற்றிலும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அவர் சொன்னதில் ஒன்றை மட்டும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்தோம். அவர் சொன்ன போர்த் தந்திரத்தை உபயோகித்து இராஜராஜனை இரண்டு நாள்களில் சிறைப்பிடிப்போம். அதற்காக நமது வீரர்கள் யாரும் உயிரிழக்கத் தேவை யில்லை. நாம் இராஜராஜனைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம்! அவனை நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைப்போம்!” என்று நிதானமாக அவைக்கு எடுத்துரைக்கிறான்.

“அது எப்படி இயலும் அமரபுஜங்கரே?” கேள்வி பிறக்கிறது மார்த் தாண்டனிடமிருந்து.

“இராஜராஜன் எப்படிப் போர் புரிவான் என்று எமக்கு நன்றாகத் தெரியும் மார்த்தாண்டரே! இன்று காலை நடந்த போர் இராஜராஜனது முறை அல்ல. என்றும் அவன் நேருக்கு நேராக மோதுவானே தவிர, மறைந்திருந்து தாக்கியதாக சரித்திரமே இல்லை. எனவே இந்தத் தாக்குதல் வேறு யாராலேயோதான் நடத்திப் பட்டிருக்க வேண்டும். அல்லது, மிகவும் குறைவான அளவு அவனிடம் படைகள் இருந்திருக்க வேண்டும். எனவே, இப்படிப்பட்ட போரை நடத்த யாரோ ஒரு போர்த்தந்திரி இராஜராஜனுக்கு ஆலோசனை வழங்கி இருக்கவேண்டும்.

“எம்மைப் பொறுத்தவரை அந்த இரண்டுமே உண்மை என்று நினைக்கிறோம். அதுமட்டுமல்ல, இராஜராஜன் வெள்ளாற்றைக் கடந்து நம்மைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கிறான் என்றம் நினைக்கிறோம். அவன் நம்மீது நாளையோ, அல்லது நாளை மறுநாளோ மீண்டும் பனைமர வண்டிகள் மூலம் தாக்குதலைத் துவங்குவான் என்றும் நம்புகிறேன். அதை நடத்தவேண்டும் என்றால் அவன் நமது அருகில், அதாவது ஒரு காத தூரத்திற்கு வந்தாக வேண்டும். ஆகவே அவன் நமக்கு அருகில்தான் இருக்கிறான். அவனைப் பொன்னமராவதிக்கு வரவழைக்க வேண்டும்.” அவன் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

“அமரபுஜங்கரே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான்கு நாட்களாகப் பெய்த மழையில் நம்மைத் தென்கரையில் கட்டிப்போட்டு விட்டது வெள்ளாறு. அப்படியிருக்க நம் வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இராஜராஜன் படையுடன் எப்படி வெள்ளாற்றைக் கடந்து இருக்க இயலும்? தவிர நாளையோ, நாளை மறுநாளோ மறுபடியும் தாக்குதலைத் துவங்குவதற்கு பனைமர வண்டிகளை நமது கண்ணில் படாமல் இழுத்துச் செல்ல இராஜராஜன் என்ன மந்திரவாதியா?” அமரபுஜங்கன் மீது கேள்வி தொடுக்கிறான் மார்த்தாண்டன்.

“நம்புவதற்கு அரியது என்பதையெல்லாம் நீக்கிவிட்டால், மீதி இருப்பது - எவ்வளவுதான் .இயலாததாக இருந்தாலும் - அதுதான் உண்மை மார்த்தாண்டரே!”40 திடுமென்று ஒரு பொய்த் திரை நீங்கி உண்மையைக் கண்டவன் போல பேசுகிறான் அமரபுஜங்கன்
.
“நாம் மதுரையில் போர் ஆலோசனை செய்வதற்குச் சில நாட்கள் முன்னர்தான் இராஜராஜனின் தமிழ்ப் பணி ஆலோசகன் என்று ஒரு சிவாச்சாரி வந்து போனான். நான் கொல்லத்தில் இருந்து மதுரை வரும் முன்னரும் அவன் மதுரை வந்திருந்தான். அப்பொழுது மதுரையின் கோட்டைச் சுவர்களைச் சுற்றிப் பார்த்தான் என்று அமைச்சர் கூறினார். அதுதவிர படைக்கலன்களிலும் கவனம் செலுத்தினான் என்றும் சொன்னார். மேலும், அவனது உடற்கட்டைப் பார்த்தால் கோவிலில் பூசை செய்யும் சிவாச்சாரி மாதிரித் தோன்றவில்லை, ஒரு போர்வீரன் மாதிரியே இருந்தது என்றும் தெரிவித்தார்.

“கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவன் இராஜராஜனின் தலைமை ஒற்றனாகவோ, அல்லது போர்த்தந்திரம் தெரிந்த ஆலோசகனாகவோ இருக்கவேண்டும் என்றே நினைக்கிறோம். அவன் வந்தபோது நமது கோட்டைக்குள் மறைந்திருந்த வீரர்களைப் பற்றி அறிந்து கொண்டதோடு மட்டுமில்லாமல், பொன்னமராவதியைச் சுற்றியுள்ள நிலப் பரப்பைப் பற்றியும் தெரிந்து கொண்டு சென்றிருக்கிறான் என்று துணியலாம்.
“அவன்தான் வெள்ளாற்றுக்கு இருகரையிலும் இருந்த பனைமரங்களை வெட்டி கவண் கல் வீசும் வண்டிகளைத் தயாரித்திருக்கிறான் என்றே நம்புகிறேன்.

அவனுடைய திறமையைத் தெரிந்து கொண்டதால்தான் முன் பின் அறியாத ஒருவனாகிய அவனுக்கு இராஜராஜன் தன் முத்திரை இலச்சினை அளித்திருக்கிறான். அவன் இராஜராஜனுக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கும் போர்முறைகள் முறையற்றதாகத்தான் இருக்கும். அவனது போர்முறை நம் தமிழ்நாட்டுப் போர்முறையோ, பாரதப் போர்முறையோ அல்ல. பின்னிருந்து தாக்கும் பேடிகள் தொகுத்திருக்கும் வெளிநாட்டுப் போர்முறையாக இருக்கக் கூடும்.

“சிந்தித்துப் பாருங்கள். மழை பெய்ய ஆரம்பித்த போதே இராஜராஜன் வெள்ளாற்றைக் கடந்திருக்கலாம். அது நாம் வெள்ளாற்றங்கரையை அடைவதற்கு இரண்டுநாள் முன்பு நடந்திருக்கக்கூடும் அடித்துப் பெய்த மழையில் நம்மால் சோழப்படையின் முன்னேற்றத்தைப் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது. எனவே இராஜராஜன் இங்கு எங்கோதான் ஒளிந்திருக்கிறான்.

“குறிப்பாகச் சொன்னால் அவன் பிரான்மலையில்தான் ஒளிந்திருக்க வேண்டும். அவன் நம்மைத் தாக்க தகுந்த தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான். அவன் மேற்கிலிருந்து நம்மைத் தாக்கும்பொழுது, தொண்டியிலிருந்து வரும் அவனது படைகள் தெற்கிலிருந்தோ, தென் கிழக்கிலிருந்தோ நம் படைகளின் பின்பகுதியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யத் திட்டம் தீட்டியிருக்கக் கூடும்.

“எது எப்படியிருந்தாலும், நமது கிழக்குப் பக்கம் யாரும் இல்லை. அது இராஜராஜனுக்கும் தெரியும். நாம் கிழக்கு நோக்கி நகர இயலாதவண்ணம் நாளை தாக்குதலைத் தொடங்கினாலும் தொடங்கலாம். அதற்காக அவன் தனது படையில் ஒரு பகுதியை கிழக்கு நோக்கி அனுப்ப வேண்டியதிருக்கும். நமது படைகள் இன்றுதான் திரும்பி வந்ததால், அவனது படைகள் இன்று பகலில் கிழக்கு நோக்கிச் செல்லச் சாத்தியமில்லை. எனவே இன்றிரவுதான் அவன் அனுப்பக் கூடும். அதை நாம் தடுக்கவேண்டும். பனைமர வண்டிகளில் மரங்கள் நிறுத்தப்பட்டால் இழுத்துச் செல்வது கடினம். எனவே, கிழக்கே சென்றுதான் அதை ஒருங்கிணைப்பார்கள். அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

“அதுமட்டுமல்ல, இராஜராஜனுக்கு நாம் செய்தி அனுப்ப வேண்டும் - அவனது திட்டம் நமக்குத் தெரிந்து விட்டதாக. அது மட்டுமல்ல, பேடி மாதிரிப் போர் நடத்தாதே, வீரன் மாதிரி நேருக்கு நேர் வந்து போர் நடத்து என்று அவனுக்கு அழைப்பு  விடவேண்டும். இதுதான் என் திட்டம்!”  என்று தன் திட்டத்தை விவரிக்க ஆரம்பிக்கிறான் அமரபுஜங்கன். மகுடி இசையில் கட்டுண்ட நாகம் மாதிரி அவனது திட்டத்தை உள்வாங்குகின்றனர் அனைவரும். அமரபுஜங்கன் தன் வாழ்விலேயே மிகப்பெரிய சூதாட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறான் என்பதும் அனைவருக்கும் புரிகிறது[வளரும்].
* * *
40ஷெர்லக் ஹோம்ஸ் சொல்லும் மேற்கோளே இங்கு கையாளப் பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment