Monday 25 November 2013

எனக்கும் கடவுள் உண்டு.

என் கடவுளுக்கு மதம் கிடையாது

                            VKT6 

சொல்லத்துடிக்குது மனசு 

christ
Jesus
  
20.11.2007, பிற்பகல் 1.30.
அன்று இரவு எட்டு மணிக்கு 26 வது முறையாகச் சபரி மலைக்குச் செல்ல பூஜை செய்துவிட்டு, இருமுடி கட்ட  இரயிலைப் பிடிக்கும் தறுவாயில் தாகம் ஆசிரியரின் தொலைபேசி அழைப்பு. டிசம்பர் இதழுக்கான கட்டுரை வேண்டும் என்று. நினைத்துப் பார்க்கிறேன். 1981ஆம் ஆண்டு ஒரே ஆடையுடன் சென்னையில் அலைந்து திரிந்துகொண்டிருந்த நான், முதலில் கிடைத்த வருமானத்தில் மாற்றுடை வாங்கும் நிலையில் துணிக் கடைகளில் ஏறி இறங்கினேன். நான் கடைகளிலிருந்து இறங்கக் காரணம், துணிகளின் விலை ஏற்றம் தான். தேடிப்பிடித்து, எட்டு ரூபாயில் ஒரு வேஷ்டி வாங்கி அணிந்து கொண்டேன்.
இரவு பத்து மணியிருக்கும், தூங்கிப் போயிருந்த என்னை எழுப்பினர் சிலர்.”என்ன?’ என்ற கேள்வியுடன் விழித்து, விழிப்போடு கேட்டேன். “” பக்கத்துத் தெருவில் அய்யப்பசாமி பூஜை நடக்கிறது, வந்து கலந்து கொள்ளுங்க சாமிஎன்றொரு அழைப்பு. அழைத்தவர்கள் கூட்டத்தைப் பார்த்தேன். ஒவ்வொருவரும் கருப்பு, காவி, நீல நிற உடையணிந்து கழுத்தில் விதவிதமான மாலைகள் அணிந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தாடியும், நெற்றியைச் சந்தனமும் குங்குமமும் நிரப்பியிருந்தன.
அவர்கள் கூப்பிட்ட தோரணையில் “” சரி, போய்த்தான் பார்ப்போமேஎன்று அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று, அங்கு நடந்து கொண்டிருந்த அய்யப்பபூஜையில் கலந்து கொண்டேன்.
பூஜையில் கலந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்தவுடன்தான் புரிந்தது… அவர்கள் ஏன் என்னை பூஜைக்கு அழைத்தார்கள்..? என்ற கேள்விக்குப்  பதில் அளித்தது என் வேட்டி.  மாற்றுடையாக நான் வாங்கிய வேட்டியின் நிறம் காவியாக அமைந்து போயிருந்தது மாத்திரமே அழைப்பிற்கான  காரணம். அவர்கள் நடத்திய பூஜையோ, அதற்குரிய ஐதீகங்களோ, திட்டமிடலோ இல்லாமல் நான் அங்கு அமர்ந்திருந்ததுதான் உண்மை. ஆனாலும் அங்கு களைகட்டிய இசையும் சங்கீதமும், அனைத்திற்கும் மேலாக அங்கு பரிமாறப்பட்ட சர்க்கரைப் பொங்கல், வடை, பாயாசம், சாப்பாடு எல்லாம் எனக்கு விருந்தாக அமைந்திருந்தன. பன்னும்  வடையுமே கிடைப்பதற் கரிய உணவுகளாக இருந்த எனக்கு, இந்தப் பூஜை சாப்பாடு எப்படியிருந்திருக்கும் என்றுசொல்லித் தெரிய வேண்டியது இல்லை.
அக்கூட்டத்தில் பேச்சுக் கொடுத்ததில் அய்யப்பன்கோவில் செல்வதற்கான பூஜை புனஸ்காரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வந்தன. மறுநாள் விடியற்காலை  50 – க்கும் மேற்பட்ட “சாமிகள்சபரி மலை செல்லக்  கிளம்பினர். சபரி மலை செல்வதற்கான மற்றச்  சடங்குகளையும் புரிந்து கொண்டேன். அவர்களை வழியனுப்பி விட்டுத் திரும்பி வரும் போது ஒரு குரல் ,”"சாமிமாரே, இன்னைக்குச் சாயங்காலம் வெள்ளாளத் தெருவுல மணி வீட்டுல அய்யப்பபூஜை … வந்து கலந்துக்குங்ககூவிய சத்தத்தில் மனதில் குளிர் மழை பெய்தது. “” ஆகா! இன்றிரவும் ஒரு பிடிபிடிக்கலாம்.
அந்த கார்த்திகைமார்கழி இரு மாதங்களிலும் இருபதிற்கும் மேற்பட்ட அய்யப்பபூஜைகளில் கலந்து கொண்டு, பூஜை விருந்தினை உண்ணக் கூடிய வாய்ப்பினை அந்த எட்டு ரூபாய்க் காவி  வேட்டி ஏற்படுத்திக் கொடுத்தது.
1982 ஆம் ஆண்டு, மீண்டும் அந்தக் கார்த்திகைமார்கழி மாதங்கள் வந்தன. அப்போது நான் மாதம் ஆயிரம் ரூபாய் வரையிலும் வருமானம் கொண்டிருந்தேன். கருப்புடை, காவியுடைச் சாமிகள் தெரியத் தொடங்கினாலும் இப்போது அய்யப்பபூஜைகளில் கலந்துகொண்டு, அந்த உணவைச் சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடில்லாமல் போனது.
ஆனாலும், ஒரு வருடத்திற்கு முன்பு சப்புக் கொட்டிக் கொண்டு உண்ட உணவுகள் என் மனதில் நிழலாடத் தொடங்கின. என்னையறியாமலே என் தலை குனிந்தது. மாற்றுடைக்காக நான் பயன்படுத்திய காவியுடை, அய்யப்பசாமிகளை, என்னையும் சாமியாக நினைத்து எனக்கு விருந்திட்ட சமயங்கள் என் மனதை வெட்கப்பட வைத்தது.
இதற்குப்  பிராயச்சித்தமாக ஏதாவது செய்யலாமே… என்ன செய்யலாம்?” உடன் முடிவு செய்தேன் . நேராகப்போய் , ஒரு வேட்டி, மாலை வாங்கிக் கொண்டு  குளித்துவிட்டு, எனக்கு நானே மாலை போட்டுக் கொண்டு, அய்யப்பசாமியாகி, விரதமிருந்து கன்னி சாமியாக முந்நூறு ரூபாய்ச்செலவில் சபரிமலைக்குச் சென்று அய்யப்பனை வணங்கி விட்டு வந்தேன். 
ஆத்திகம் அறியாத மனசு. நாத்திகம் புரியாத வயசு. சூழ்நிலை எனக்கு வழிகாட்டியாக இருந்தது. நான் ஆத்திகனா? நாத்திகனா? புரியாமலே புனிதப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
3 ஆவது வருடம் சபரி மலைக்கு மாலைபோட வேண்டியிருந்த போது, நான் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தேன். தங்கியிருப்பவர்களுக்கு ஆதியோடு அந்தமாக அத்தனை வேலைகளையும் செய்யக் கூடியவராக இருபது வயது நிரம்பிய பழனி என்பவர் இருந்தார். எவ்வித உறவுகளுமற்ற அவரை அன்புத் தம்பியாகவே நான் பார்த்தேன், அவரையும் நம் செலவிலேயே சபரி மலைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து, அவ்வருடத்தில்  வேட்டி , மாலை அணிவித்து, அவரையும் சாமி ஆக்கி விட்டேன்.
45 நாள்கள் விரதமிருந்து கிளம்புவது என்று திட்டம். மாலை போட்டு இருபது நாட்களிருக்கும். என் அறைக்கு அடிக்கடி வந்து செல்லும் என் இஸ்லாமிய நண்பன் உபயதுல்லா அவர்களின் ஆறு மாதக் கைக்குழந்தை இறந்துபோன செய்தி எனக்கெட்டியது. அவரின் மனைவி, தம்பி மற்றும் குடும்ப உறவினர்களைக்கூட நான் நன்கு அறிவேன்.
சபரிமலைக்கு மாலை போட்டு விட்டால் மரணச் சம்பவங்களிலோ அவர்களின் வீடுகளிலோ கலந்து கொள்ளக்கூடாதுஎன்பதை அப்போது நான் அறிந்திருந்தேன்.”என்ன செய்வது?’ ஒரு பரிதவிப்பு. கழுத்திலிருந்த மாலையைப் போலவே, இதயத்திலும் ஏதோவோர் மாலை தொங்குவது போன்றதோர் உணர்வு.கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி, அறையில் வைத்து விட்டு, மரண வீட்டிற்குச் சென்றேன். இறந்த குழந்தையின் உடலைத் தூக்கிச் சென்ற தோள்களில் என் தோளும் ஒன்று.
அவர்களின்  துக்கத்தில் பங்கேற்றது, எனக்கோர் ஆத்ம திருப்தியைத் தந்தது. மீண்டும் அறைக்கு வந்து, குளித்துவிட்டு, மாலையைப் போட்டுக் கொண்டேன். அப்போது அறைக்குள் நுழைந்தான் நான் “தம்பிஎன்று பழகிய பழனி.
ஐயோ ! இதென்ன அநியாயம் ? சாமிகுத்தம் பொல்லாததுஎன்று சொல்லியபடியே அறையை விட்டு வெளியேறிவிட்டான். பிறகு இரண்டு,மூன்று தினங்களாக என் அறைப் பக்கமே அவன் தென்படவில்லை. நானே ஒரு நாள் சத்தமெழுப்பிய பிறகு என் முன் வந்தான்.
என்னடா…. ஆளையே காணலைஎன்று நான் கேட்க, “ கோயில்ல போய் ஒரு பூசாரிகிட்ட இப்படி மாலையக்கழற்றி வெச்சுட்டு மரண வீட்டுக்குப் போய்வந்துட்டு மறுபடியும் மாலையப்  போட்டுக்கலாமான்னுகேட்டேன். அவரு,”" அப்படி பண்ற ஆளு பெரிய பாவி. அவனுக்கு என்னாகும்னு பாரு…நீ அவனோட மலைக்குப் போனா, உனக்கும் அந்தப்  பாவம் வந்துடும்னு சொன்னாரு.அதனால நான் உங்களோட சபரிமலைக்கு வரலைஎன்று சொல்லிவிட்டு, அனல் உலையில் அகப்பட்டு வெளியேறுபவனைப் போல விறு விறு வென்று என்னறையிலிருந்து வெளியேறி விட்டான்.
சும்மா கெடந்தவனை மாலையும் போட்டு, என் சொந்தச்  செலவிலேயே மலைக்குக் கூட்டிச் செல்லலாமென்றிருந்தவனின் மனத்தில் ஐதீகத்தின் ஆளுமை எந்த அளவு இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதென்பதை நினைத்துத் திடுக்கிட்டேன்.
எனக்கே தெரியாது,நான் செய்தது சரியா… பிழையா என்று. இதில் அவனெடுத்த முடிவைப் பற்றி நானென்ன பிழை சொல்வது?
என் குழுவினர் பத்து பேரும் சேர்ந்துகொள்ள ஒரு வேனில் சபரிமலை செல்ல ஆயத்தமானோம். புறப்படும் நாளும் வந்தது. வரிசையாகக் குருசாமி முன்னால் சாமிகள் இருமுடிகள் கட்டிக் கொண்டிருந்தனர். என் முறையும் வந்தது. என் இருமுடியில் தேங்காயில் நெய் ஊற்றி, உள்ளே வைத்து இறுகக்கட்டி,”" சாமியே சரணம் அய்யப்பாஎன்ற சரண கோஷத்துடன் இருமுடியை என் தலையில் வைத்தபோது, இடி விழுந்தது போலொரு முழக்கம். நான் தங்கியிருந்த லாட்ஜின் நுழைவாயிலில் போட்டிருந்த தகரக்கூரை உடைந்து விழுந்திருந்தது.
அனைவரும் இருமுடிகளைக் கீழே வைத்து விட்டு என்ன நடந்ததென்று பார்க்க ஓடினோம். “நம்ம பழனிதகர கொட்டாயின் கீழே விழுந்து கிடக்கிறான். அவனுடைய கை உடைந்திருக்க, உடம்பெங்கும் இரத்தச் சிராய்ப்புகள்.அவன் உடம்பில் ஆங்காங்கேயிருந்து இரத்தம் பீறிட்டு வர, ஓடிப்போய் அவனை நான் தூக்கினேன். 
நாங்கள் மலைக்குச் செல்ல இருந்த வேனிலேயே அவனை ஏற்றிக் கொண்டுபோய்ச்  சைதாப்பேட்டையிலிருக்கும் பொது மருத்துவமனையில் சேர்த்தோம்.முதலுதவி அளிக்கப்பட்டது. லேசான மயக்கத்தில் இருந்த அவனிடம் கேட்டேன்…”"என்னாச்சு பழனி? ”
நீங்க சபரிமலைக்குப் போக மாட்டீங்கன்னு அந்த பூசாரி சொன்னதை நினைச்சுகிட்டு.. இன்னமும் உங்களுக்கு ஒண்ணுமே ஆகலை யேன்னு ரெண்டாவது மாடியிலிருந்து, எட்டிப் பார்த்துக்கிட்டிருந்தேன்.கொஞ்சம் அதிகமாகக் குனிஞ்சிட்டேன் போலிருக்கு.. அப்படியே விழுந்திட்டேன்..என்று அவன் சொல்ல, எனக்கு அழுவதா… சிரிப்பதா…? பெருமைப்பட்டுக் கொள்வதா? அல்லது அவனின் செய்கை சிறுமையானதா? என் அறிவுக்கு எட்டவில்லை.
சரி, நடந்து விட்டது. உனக்கு நான் சொன்ன மாதிரி பணம் கொடுத்து விடுகிறேன், உன் சிகிச்சைக்கும் சேர்த்து. நீ நினைக்கறபடி நல்ல சாமியாரோட மலைக்கு வாஎன்று, அவன் மருந்து, மாத்திரைக்கெல்லாம் பணம் கொடுத்து விட்டு, நாங்கள் மலைக்குக் கிளம்பினோம்.சென்று விட்டு சுகமாகத் திரும்பினோம். ஆனால் காயங்களின் கடும்தன்மை காரணமாக, பழனியால் அப்போது சபரி மலைக்குச் செல்ல முடியாமல் போனது.
இப்போதும் குழந்தை குட்டிகளோடு என் வீட்டிற்கு அவனும், அவன் வீட்டிற்கு நானும் வந்து செல்லக் கூடிய குடும்ப நண்பர்கள் நாங்கள். தற்போது, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. இராஜீவ் மேனன் அவர்களிடம் பழனி ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார்.
அப்புறம், எனக்குத்  திருமணம் முடிந்து குழந்தை, குட்டி பந்தமெல்லாம் விளைந்துவிட்ட நேரம். மந்தைவெளியில் ஒரு மாடி வீட்டின் கீழ்த்தளத்தில் மாதம் 300 ரூபாய் வாடகையில் குடியிருந்தோம்.மேலே மாடியில் வீட்டின் உரிமையாளர் வசித்திருந்தார். அவர்கள் கிறிஸ்துவர்கள். அவருக்கு இரண்டு குழந்தைகள். வீட்டு உரிமையாளர், வாடகைதாரர் என்ற பிரிவினை இல்லாமல் எங்கள் இரண்டு குடும்பங்களும் சொந்தக்காரர்கள்போலப் பழகிக் கொண்டிருந்தோம்.
1991ஆம் ஆண்டு நான் 10 வது முறையாகச் சபரிமலைக்கு மாலை போட்டு விரதமிருந்து, செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அன்று… கிறிஸ்துமஸ் நாள்.  வீட்டு உரிமையாளரின் எட்டு வயது மகன் மாடியிலிருந்து இறங்கி வந்தான். அந்த வீட்டிற்கு நாங்கள் குடிபுகுந்த நாள் முதல் கிறிஸ்துமஸ் நாளில் சிக்கன், மட்டன் பிரியாணி அவர்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்குள் வந்திறங்கும்.
அவ்வருடம் நான் விரதமிருந்து கொண்டிருந்த வேளையிலும் அச் சிறுவனை நோக்கி விளையாட்டாக, “இன்னைக்கு எங்க வீட்டுக்குச் சிக்கன் பிரியாணியா… மட்டனா?” என்று கேட்டேன். உடனே அந்தச் சிறுவன் சொன்னான், “ நீங்க எப்பவுமே கிறிஸ்துமஸ்க்கு முன்னாடியே மலைக்குப் போய் வந்துடுவீங்க… நாங்க எங்க வீட்டிலிருந்து பிரியாணி தருவோம். இந்த முறை நீங்க விரதமிருக்கீங்கன்னு எங்க வீட்ல பிரியாணி பண்ணவேணாமுன்னு அப்பா அம்மா சொல்லிட்டாங்க.
சாமியே சரணம் அய்யப்பா!என்று கோஷமிட வேண்டிய இதயம்,
சாமியே சரணம் ஏசப்பா!என்று கோஷ மிட்டது.
எப்போதும் என் நெற்றியில் இடம்பெற்றிருக்கும் சந்தனமும் குங்குமமும் சிறு வயது முதல் உள்ள பழக்கத்தினால் வைத்துக் கொள்கிறேனேதவிர, வேறு நோக்கம் எதுவும் கிடையாது.

ஆனால் என் கடவுளுக்கு மதம் கிடையாது !
 
 சொல்லத்துடிக்குது மனசு

குடியைக் கெடுக்கும் கடன்


Credit Cards on a White Background
கடன் அட்டை
கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு பத்து ரூபாய் கடன் வாங்கவேண்டுமென்றாலும் மொத்தக் குடும்பமே வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து – கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான் கடன் கிடைக்கும்எனும் நிலை இருந்தது. அதனடிப்படையில் கடன் கொடுத்தவர்கள் காலப்போக்கில் அந்தவெற்றுப்பத்திரத்தில் தாம் விரும்பிய வகையில் எழுதி, கடன் பெற்றவர்களின் வீடு – நிலபுலன்களையும் அநியாயமாக அபகரிப்பாகர்கள். இப்படி இழந்த குடும்பங்கள் எத்தனைஎத்தனையோ! இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில்கூட காலனிகள், சேரிகள், பிளாட்பாரங்களில் வாழ்ந்து – தொழிலும்செய்து பிழைப்பவர்கள்கூட ‘தண்டல்கடன் மூலம் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். வாங்கும்கடனுக்கு மாதவட்டியாக 10 வீதமும், இன்னொருவகையில் தினந்தோறும் செலுத்தப்படும் முறையின்மூலம் மாதத்திற்கு 30 வீதவட்டியும் கட்டிவருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத கணக்காகும். தண்டல் கடன் வாங்காத சேரி, காலனி மக்களோ, பிளாட்பார, நடைபாதை, நடைவண்டி வியாபாரிகளோ இல்லை எனும் அளவு அவர்களின் சமூகப் பொருளாதாரத்தைக் கடன்கள் நீக்கமறச் சூறையாடி வருகின்றன.
இத்தண்டல் முறைக் கடன் அரசினால் தடைசெய்யப்பட்டதும் மீறினால் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். ஆனால், அதிகமாக உள்ள சட்டப்பிரிவுகளில் அதிகம் மீறப்படுவது இந்தச்சட்டம்தான் என்பது புள்ளி விவரம். இச்சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் மிகமிகக் குறைந்த அளவினர் கூட இல்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும். இதற்கு மிகமிக முக்கியமான காரணம், இந்தத் ‘தண்டல்’ தொழிலில் ஈடுபட்டுவரும் அநேகம்பேர் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பொறுப்புகளிலும் இருந்துகொண்டு அவர்கள் செல்லும் கார்களில் கட்சிக்கொடியை மாட்டி, பாதுகாப்பைத் தேடிக் கொள்வதுதான்.
தண்டல்காரர்களிடம் கடன் பெற்றுத் திருப்பிக்கட்ட முடியாமல் மனைவியையும் மகள்களையும் இழந்த குடும்பங்களும் உள்ளன என்பது வெட்கக்கேடானது. அது மாத்திரமில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதும் பரபரப்பான செய்திகளாக அரங்கேற்றப்படாமல் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் முன்னேற்றம், சமூகத்தின் வளர்ச்சி என்பதெல்லாம் 20% வீதமக்களுள் நடைபெறும் பரமபத விளையாட்டு மட்டுமே. 80% வீத மக்களின் நிலைமை எல்லாவகையிலும் கேள்விக்குறியே. இப்படியான பழைய பேய்களைச் சமாளிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், தற்போது புதியப் பேயாகக் கடன் அட்டைகள் நுழைந்துள்ளன. 18 வயதிற்கும் 28 வயதிற்குமிடைப்பட்ட இளைய தலைமுறையினர் அதை எப்படிக் கையாள்வதென்றே தெரியாமல் பல கடன் அட்டைகளைப் பெற்றுத்தம் குடும்பத்தை விழிபிதுங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சம்பளப்பணம் வட்டியாகவே பறிபோகிறது.
credit1
கடன் அட்டை


ரொக்கமாக நூறுரூபாய் கொடுத்தால் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை, கடன் அட்டை உபயோகித்து வாங்க முன்னூறு ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இப்படிப் பலவகைகளிலும் தங்களது உழைப்பையும் ஊதியத்தையும் இழக்கிறார்கள்.
கடன் அட்டையைக் கன்னாபின்னா என்று பயன்படுத்திவிட்டு, அந்தப்பணத்தைக் கட்டாமல் இருப்பவர்களின் வீடுதேடி வங்கிக்காரர்கள், வசூல் என்ற பெயரில் குண்டர்களை அனுப்ப, கடன்அட்டை வாங்கியவர்கள் ஓடிஒளிந்து, வேலையும் பறிபோய், குடும்ப நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன். என்னிடம் பணியாற்றுபவர் எவரும் சீதனம் வாங்கமாட்டார்கள்; கடன் வாங்க மாட்டார்கள். தமது ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, செலவினங்களையும் சேமிப்பையும் வரையறுத்து வாழ்ந்து உயர்ந்து வருகிறார்கள்.
பலர் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது கடன் வாங்காமல் முடியாதே என்ற ஒரு மன அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அதன் காரணமாகவே அடமானம் வைத்துக் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு, கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் ஏற்படும் அவமானங்களையும், அவலங்களையும் சுமக்கிறார்கள். அத்துடன், திருமணம்மூலம் இவ்வளவு கடன் சுமையாகிவிட்டதே எனமணமக்கள் பரிதவித்து, இல்லற அமைதியைச் சீர்குலைவு செய்து கொண்டவர்கள் ஏராளம். திருமணச் செலவென்பது மொய் எவ்வளவு வரும் என்பதை அளவுகோலாகக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வேதவிர வேறொன்றுமில்லை.
எங்களுக்கான சம்பிரதாயமுறையும் காலம்காலமாக அதனையே சொல்லிவருகிறது.
பொதிகையில் ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியினை நான் நடத்தி வந்தபோது ஒரு பெண்மணியைப் பேட்டிக் காண நேர்ந்தது. அவர் ரூ. 600 சம்பளத்திற்கு ஒரு சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வருபவர். அவரது கணவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. கையில் கிடைக்கும் பணத்தையெல்லாம் மதுவுக்கே செலவழித்துவிட்டு மயங்கிக்கிடப்பவன். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்.
முதல்பெண்ணுக்கு 20 வயது, இன்னொன்றுக்கு 18 வயது, கடைசிப்பெண்ணுக்கு 16 வயது. எப்படித்தம் பெண்களைக் கரையேற்றப் போகிறோம் என்றதவிப்பு அந்தப்  பெண்மணிக்கு. வரன் கிடைத்தாலும் அவர்கள் கேட்டதும், கல்யாணச்செலவுக்கும் சேர்த்து 12 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக ஆரம்பத்தில் தெரிவது தண்டல் வட்டிக்காரர்கள்தான்
.
கை நீட்டுகிறாள்.
கடன் கேட்கிறாள்.
கிடைத்து விடுகிறது.
பெருத்த வட்டி.
இதைப்பற்றிக் கவலைகொள்ளும் நிலையில்அவளில்லை.
அவள் முதல்மகளின் திருமணம் சுற்று வட்டாரம் மெச்ச, நடந்தேறுகிறது. வாங்கிய கடனுக்கு  வட்டிகூடக் கட்டமுடியாமல் மாதங்கள் உருள்கின்றன. ஆறு மாதங்களைத் தாண்டிவிட்டதால் தண்டல்காரன் பொறுமை இழந்து போகிறான். அவனது நடவடிக்கைகள் பயத்தை வரவழைப்பதாக மாறிவருகிறது. இன்னும் இரண்டு பெண்களைக் கரையேற்ற கையில் வைத்துக்  கொண்டிருக்கும் பதைப்பு ஒருபுறம். கட்டவேண்டிய கடன், வட்டியுடன் சேர்ந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த விட்ட திகில் மறுபுறம். விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்… எடுத்துவிட்டாள், தற்கொலை செய்துகொள்வது என்று. ஆனால் விதி, பக்கத்து வீட்டுப்பாட்டி உருவத்தில் வந்து கடனை அடைக்க வழிகாட்டியது. புரோக்கர்மூலம் ஒரு மருத்துவ மனையில் தனது கிட்னியை விற்றுக் கடனை அடைக்கநேரிட்டது.
பாவம்! இன்னும் மூச்சிரைக்க, நடக்க முடியாமல் சத்துணவுக் கூடத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு, பாதி உயிரோடு வாழ்ந்து வருகிறாள்.
ஜப்பான் நாட்டில் ஒருவர் கடன் அடைக்காமல் இறந்து போனால் கடன் கொடுத்த அனைவரும் ஒரு வேனில் வந்து அவர் வீட்டுக்கு முன்னால் காரில் பொருத்தியிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அவர் கடன் தொகையை அறிவிப்பார்கள். அந்தக் கடனை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் பிணம் அடக்கம் செய்யப்படும்.
போர்க்களத்தில் சகோதரர்கள், சொத்து, சுகம், நாடு என அனைத்தையும் இழந்து நிற்கிறான் இராவணன். கோபலகிருஷ்ண பாரதியார் தாம் எழுதிய இராமநாடகக் கீர்த்தனைகள் என்ற நூலில்
“கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்று குறித்துள்ளார்.
அப்படியானால் கடன் எவ்வளவு கொடுமையானது என்பதை இதைவிட எவர் சொல்லிவிட முடியும்?
உலகிலேயே மிகப் பெரியதுன்பமாக  இராமாயணம் கடனைத்தான் குறிப்பிடுகிறது. கடன் பட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனநிலையிலுள்ள மனிதர்கள் காலப்போக்கில் கடனுக்காக ஏந்திய கைகளைப் பிச்சைக்காக ஏந்தி நிற்பார்கள்.
இதில் இன்னொருவகை, நன்றிக்கடன். இதனால் புழுங்கி வாழ்ந்து வரும் எத்தனையோ மேதைகளை, வெற்றியாளர்களை நான் அறிவேன். இன்றைய மிகப்பெரிய இசையமைப்பாளர் 30 வருடங்களுக்கு முன்னால் வெடித்துக் கிளம்பிய இசை ஞாயிறு. அவர் வெற்றி அடைந்தவுடன் ஒரு பாடகி, பத்திரிகையொன்றில் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்..
.
“இவர்கள் சோற்றை மாத்திரம் அவித்து வைத்து விட்டுச்  சாம்பாருக்கும் ரசத்திற்கும் எங்கள் வீட்டிற்கு வந்து தட்டேந்தியவர்கள்”
இவ்வாறான அவமானங்கள் பல பேரது வாழ்க்கையில் கூனிக்குறுக வைத்துக் கொண்டிருக்கிறது.
பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்கள். ‘பிச்சையிடுபவனை அறிந்து பாத்திரம் ஏந்து’ என்பதை வாழ்வில் புரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிகள் கடன் தருகின்றனவே… பெற்றுக் கொள்ளக்கூடாதா என்ற நினைப்பு தேவையில்லை. அவைதகுதி அடிப்படையில் தரப்படும் மூலதனமாகும். வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் என்று வங்கிகளிடமிருந்து கடன்பெற்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்கள் உரிமை பெற்றவர்கள்தான்.வங்கிகளில் பெறும் கடன் அட்டைக்கடன், தனிப்பட்ட கடன்களைக் கட்டாவிட்டால் அப்புறம் அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேறுகடன்அட்டை, தனிப்பட்டகடன் மாத்திரமல்லாது வீட்டுக்கடன், வாகனக்கடன், வர்த்தகக்கடன்கூடக்   கிடைக்காது என்பதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்றே ஒன்றுதான்.
நாணயம் தவறாமல் இந்தக்கடன்களைத் திருப்பிச்செலுத்தினால் வங்கிகளைவிட வேறு எந்தப்பெரிய மனிதனும் உங்களுக்கு உதவிவிட முடியாது.
வங்கிக்கடன், தோழமை கொண்டமூலதனம்.  நன்றிக்கடன், தேள்கள்கொட்டும் ஆறாரணம்.


Wednesday 6 November 2013

ஒரு பெண்ணின் பார்வையில் காதலை....

இது நிகழாது இருந்திருக்கலாம் - எனது (முதல்) பார்வையில்
காதல் காலந்தோறும் கவிஞர்களையும் கவிதைகளையும் வாரி வழங்கி வந்தாலும் பெண் கவிஞர்களை குறைவாகவே உருவாக்கி வந்திருக்கிறது. இது, காதலில் உருகுபவனும் சரி, காதல் தோல்வியில் வாடுபவனும் சரி அது ஆணாகத் தான் இருக்க முடியும் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது. பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது, அவர்கள் காதல் உணர்வும் ஆண்களுக்கு சளைத்தது அல்ல என்பதை பொதுவெளியில் பெண்கள் கவிதையாக பகிர்வதில் ஏனோ ஒரு சுதந்திரமான சூழல் இன்னும் இங்கு உருவாகவில்லை. 
இருப்பினும், அங்கொருவர் இங்கொருவராக பெண்களும் காதல் குறித்த தங்கள் உணர்வுகளை கவிதைகளாக வடித்து வருவதை படிக்கும் வாய்ப்பு கிடைக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் நமது அனைவருக்கும் பரிட்சயமான தமிழ்ச்செல்வி அக்கா எழுதிய "இது நிகழாது இருந்திருக்கலாம்" கவிதைத் தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்ச்செல்வி
இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் பார்வையில் காதலைச் சொல்லும் ஒரு கவிதைத் தொகுப்பு. கலையாத கனவுகள் என்று கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது எனச் சொல்வதில் இருந்து, முதல் பார்வை, முதல் தீண்டல், முதல் முத்தம், ஊடல், காத்திருப்பு, பரிசு, குறுஞ்செய்தி, புறக்கணிப்பு, அணைப்பு, காமம் என காதலர்களுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பெண்ணின் பார்வையில் பெண்ணே சொல்வதால் வார்த்தைகள் யாவும் இயல்பாக பெண்ணின் உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளது.

கவிதைத் தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காதலின் ஏதாவது ஒரு படிநிலையை, மகிழ்வை, வருத்தத்தை என ஏதாவது ஒரு உணர்ச்சியை பிரதிபலிப்பதாக இருந்தாலும் நான் அதிகம் இரசித்த ஒரு கவிதையின் வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

குறுஞ்செய்தி என்னும் கவிதையில் வரும் வரிகளான
என்னால் அனுப்பப்படுகிற
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் கவனம் உன்மேல்
என உறுதிபடுத்தத் தான்
பதில் வராத போதும் கூட
நான் நினைப்பதுண்டு
என் நினைவுக் கரைதலில்
நீ குறுஞ்செய்தியை
பார்க்க மறந்தாய் என்று.
என்பது காதலர்களின் இயல்பான மனநிலையான புறக்கணிப்பையும் காதல் என உருவகப்படுத்தும் தன்மையைக் காட்டுமிடத்தில் கவிஞராக/காதலராக நம் மனம் கவர்கிறார் ஆசிரியர்.

அதே கவிதையின் இறுதியில் முத்தாய்ப்பாய்
நம்பிக்கை ஒன்றில் தான்
காதலின் விதை
ஆழப் பதியப்படுகிறது
விருட்சமாய் உருமாற...
என்ற வரிகளில் காதலைப் பற்றிய தனது பார்வையை தெளிவாக எடுத்துரைக்கும் இடத்திலும் கவிஞர் மனம் கவர்கிறார்.

இந்த கவிதை மட்டுமல்ல கவிதைத் தொகுப்பில் இருக்கும் நாற்பத்தைந்து கவிதைகளிலும் இப்படி பெண்ணின் பார்வையில் காதலைக் காணுமிடத்து மனம் அந்த உணர்வுகளை எளிதில் உள்வாங்கி இரசிக்க முடிகிறது.
பல கவிதைகள் நன்றாக அமைந்திருந்தாலும் சில கவிதைகளை வாசிக்கும் போது இன்னும் சற்று இக்கவிதையை மெருகேற்றி இருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தாலும் கவிஞருக்கு இது முதல் கவிதைப் புத்தகம் என்பதால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்; என்றாலும் வரும் படைப்புகளில் இன்னும் மேம்பட்ட அதே சமயம் கவிதை என்னும் போர்வாளை காதலுக்குள் மட்டும் அடைக்காது சமுதாயத்தின் அவலங்களையும் சீர்கேடுகளையும் சாடியும் சமகால சமூக நிகழ்வுகளை பிரதிபலித்தும் வீச வேண்டும் என்ற கோரிக்கையை கவிஞருக்கு முன்வைத்து இன்னும் பல கவிதை புத்தகங்களை எழுத வாழ்த்தி அமரும் அதே வேளையில் கவிஞராய் தமிழ்ச்செல்வி அக்கா மென்மேலும் பல உயரங்களைத் தொட இறையருள் என்றும் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
PRASATH

Wednesday 23 October 2013

இது நிகழ்ந்திருக்கிறது


ஜி. ஜே. தமிழ்ச்செல்வி



என் வார்ப்பில், என் நெகிழ்வில், என் உணர்வுகளின் வசப்படுதல் அற்ற தருணங்களில் வந்த ஒவ்வொரு எழுத்தின் உயிர்ப்பலைகள் தொடுத்த மாலை தான் இது நிகழாதிருந்திருக்கலாம்.
மின்தமிழ், பண்புடன் குழுமங்களிலும், விண்முகில் வலைப்பக்கத்திலும் என் கவிதைகளை படித்த திரு. சி. ஜெயபாரதன் அவர்கள், தமிழ்ச்செல்வி உங்கள் கவிதைகளை மெருகேற்றலாம். அழகாக்கலாம், நல்ல சொல்வளம் உங்களுக்கு என்ற போது, நன்றி அய்யா என்று சொல்லி ஒரே ஒட்டமாக ஓடி போனேன். மெருக்காக்குதல் அழகாக்குதல் இதெல்லாம் எனக்கு தெரியாத ஒன்று. நான் எழுதிய கவிதையை திரும்ப ஒரு பத்து நாட்கள் கழித்து கேட்டால் நானா எழுதினேன் என்று யோசிக்கக் கூடியவள் நான்.
மனதில் எழுதியே தீரவேண்டும், இப்பொழுது எழுதி தான் ஆக வேண்டும் இதற்கு மாற்றாக எதுவுமே இல்லை என்ற நிலையிலேயே எழுதுவேன். தோன்றாவிட்டால் வேறு வேலைப் பார்க்க போய்விடுவேன். ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு இந்த கருவில் நாம் ஒரு கவிதை எழுதலாம் என்றால் இதுவரையில் என்னால் முடிந்ததில்லை.
நான் படித்தது அதிகம் அதாவது என் 8 வயதில் இருந்து 19 வயதான காலகட்டங்களில். எழுத்து எனக்கு உற்ற நண்பனாக, துணைவனாக,ஆசானாக இருந்துவந்திருக்கிறது. அதன்பிறகு நான் எழுதவோ படிக்கவோ இல்லை. அதன்பிறகு நான் மீண்டும் எழுத துவங்கியது, இப்போது நான் செய்துக்கொண்டிருக்கும் வேலையும் இணையமும் கிட்டியதால் தான். இரவு வெகு நேரம் தனித்து இரவு பணி செய்யும் வாய்ப்பும், இணையம் மூலமாக எனக்கு கிடைத்த முதல் நட்பான படுகை. காம் அதன் மூலம் வந்த நண்பர் தமிழ்ராஜாவின்  ஊக்கப்படுத்துதல் எழுத களம் அமைத்து தந்த படுகையின் உரிமையாளர் ஆதித்தன், ஊக்கப்படுத்தவென வலம் வந்த அருந்தா மற்றும் சுமையா? இன்னும் பலர்…அதன் பிறகு தொழிற்களம் அருணேஷின் அறிமுகம், சும்மா எழுதுக்கா எழுதுக்கான்னு கூலா சொல்லிட்டு போன மிக அருமையான சகோதரர் அவர். அதன் பிறகு ஜீவ்ஸ் என் மானசீக குரு, கவிதைன்னா இப்படி இருக்கனும்னு சொன்னவர். சில கவிதைகள் அவர் பாராட்டை பெறவேண்டும் என்று எழுதி ஐஸ்ட் பாசான தருணங்கள். ம் ஓகே ஆனா இது கவிதை அல்ல என்று ஜீவ்ஸ் ன் வாய்சில் நானே சொல்லிக்கொண்டதுண்டு. இந்த கவிதை தொகுப்பு என் எழுத்தின் ஆரம்ப கால பயண ஓட்டம்.
காகிதத்தில் பதிப்பித்து ஜி.ஜே.தமிழ்ச்செல்வியின் எழுத்துலகத்தை மற்றொரு களத்திற்கு கொண்டுச் சென்ற தாரிணி பதிப்பகத்தாருக்கு மிகவும் நன்றி.
 
 
"இது நிகழாதிருந்திருக்கலாம்" 
 கவிதைத் தொகுப்பு.
படைப்பு ;- ஜி. ஜே. தமிழ்ச்செல்வி
தாரிணி பதிப்பகம், 
ப்ளாட். எண் 4-ஏ ரம்யா பிளாட்ஸ் 
32/79 காந்தி நகர் 4வது பிரதான சாலை,
அடையார் – சென்னை-600020 
இந்த விலாசத்தில் கிடைக்கும்.
vaiyavan.mspm@gmail.com
இந்த தொகுப்பு ஒரு மழலையில் கிறுக்கல்களை மகிழ்ந்து ஓவியமாக ரசிக்கும் இயல்புதான் என் பாற் அக்கறைக்கொண்டவர்களிடத்தில் இருந்தது. அந்த வரிசையில் நான் கேட்டதும், அணிந்துரை வழங்கிய கவிஞர்.மகுடேஸ்வரன் அவர்களுக்கும், நான் கேட்காமலேயே…அணிந்துரை வழங்கி கௌரவித்த திருமதி.பூங்குழலி மற்றும் திருமதி.பவளசங்கரி அவர்களுக்கும் எனது நன்றிகள்.
என் எழுத்துக்களை புத்தக வடிவில் ஏந்தியபோது ஒரு சிலிர்ப்பு மனதை நிறைத்தது. முழுவதும் இலக்கணத்துடனோ அல்லது இலக்கியமாகவோ இதைப்பார்த்தால் ஒரு பூஜ்ஜியம் அங்கு இருக்கும். ஒரு படைப்பாளியின் முதல் புத்தக அனுபவம் என்று பார்த்தால் அனைவர் உள்ளமும் நட்புடன் சிரிக்கும்.
மின்தமிழ் மற்றும், பண்புடன் குழும நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.
மீண்டும் ஒரு முறை புத்தகம் வெளிவர காரணராக இருந்த அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள் பல.
இங்கு நான் கூற விரும்பும் நன்றி என் பெற்றோருக்கு, காலஞ்சென்ற என் தந்தையார் நான் எழுத்துலகிற்கு வரவேண்டும் என்று விரும்பினார். துண்டு காகிதங்களில் எழுதிய என் எழுத்துக்களை படித்துவிட்டு என் பெண் அறிவாளி என்று புகழ்ந்துக்கொண்டிருக்கக் கூடியவர். அப்பொழுது அது எனக்கு தவறாக தோன்றி அதிக நாட்கள் சண்டை போட்டிருக்கிறேன் அவரோடு. ஆனால் இப்போது மிகவும் வருந்துகிறேன். நன்றி என்று சொல்லி ஒரு வார்த்தையில் நிறைவு செய்துவிட முடியாது இந்த நிகழ்வை.
என் தாயார் இன்று நான் உங்கள் முன் உயிருடன் இருக்க காரணமானவர். வெறும் கண்ணு மட்டும் தான் அசையுது இந்த குழந்தைய காப்பாற்றி என்ன செய்ய போற பேசாம கொஞ்சம் இளநீர் ஊற்றிடு ஜன்னிக் கண்டு இறந்துடும் என்று சொன்னவர்களிடம் சண்டைப்போட்டு இன்று வரை இந்த கணம் வரை என் ஒவ்வொரு அசைவிற்கும் உறுதுணையாக இருப்பவர்.
இந்த புத்தகத்ததின் நிறை குறைகளை கடந்து, இந்த புத்தகத்தை கையில் ஏந்திய போது அவள் விழிகளில் கசிந்த கண்ணீர் ஒன்றே எனக்கான உந்துதல் பரிசு.
வாழ்வில் எதுவும் நிகழாதிருந்திருந்தால் இதுவும் நிகழாதிருந்திருக்கும். இந்த நெகிழ்ச்சிக்கு இந்த நிகழ்தல் விதிக்கப்பட்டது என்று எண்ணுகிறேன்.
நட்புடன்
ஜி.ஜே.தமிழ்ச்செல்வி

அ .முத்து லிங்கமும் அலிஸ் மன்றோவும்- 2

அ .முத்து லிங்கமும் அலிஸ் மன்றோவும்- 2

அம்மா, நீ வென்றுவிட்டாய்.


அ .முத்து லிங்கம்

ஓர் எழுத்தாளரைப் பற்றி நினைக்கும்போது மனதில் என்ன தோன்றுகிறது? அதுதான் முக்கியம். அலிஸ் மன்றோ பற்றி நினைத்துப் பார்த்தபோது அவருடைய கலகல சிரிப்பொலிதான் ஞாபகத்துக்கு வந்தது. பேசிவிட்டு சிரிப்பார் அல்லது சிரித்துவிட்டு பேசுவார். நான் சந்தித்தபோது அவருக்கு வயது எழுபத்தைந்து. குழந்தைப் பிள்ளைபோல சிரிப்பு. இன்று, 82 வது வயதில், 2013ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அவருக்கு கிடைத்துள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னர் ஓரு காலை நேரம் அவர் என்னை தொலைபேசியில் அழைத்தார். கனடாவில் சந்தைக்காரர்கள் அதிகாலையிலேயே தங்கள் வேலையை ஆரம்பித்துவிடுவார்கள். தொலைபேசியில் ’நீங்கள் இதை வாங்குங்கள். உங்களுக்கு மட்டும் 50 வீதம் கழிவு கிடைக்கும்’ என்று தொந்திரவு கொடுப்பார்கள். நான் அசட்டையாக டெலிபோனை எடுத்து ’என்ன வேண்டும்?’ என்று கேட்டேன். அப்பொழுது அவர் ’நான் அலிஸ் மன்றோ பேசுகிறேன்’ என்றார். அவர் வெளிநாடு போவதால் திரும்பி வந்ததும் எனக்கு ஒரு செவ்வி தருவதாக ஒப்புக்கொண்டார். அவருடைய தொலைபேசி எண்ணை தந்தபோது கிட்டத்தட்ட நேர்காணல் முடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் திளைத்தேன்.
அது எத்தனை தவறு. அவர் கொடுத்த கெடு தாண்டியதும் அவருடைய தொலைபேசி எண்ணை அழைத்து தகவல் விட்டேன். பதில் இல்லை. மறுபடியும் தகவல் விட்டேன் பதில் இல்லை. நான் விட்ட தகவல்கள் எல்லாம் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்தன. அவர் தகவல்களைக் கேட்பதில்லை என்ற விசயம் எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. நேர்காணல் தள்ளிப்போனது. அந்தச் சமயம் அவருடைய கூட்டம் ஒன்று பற்றி பேப்பரில் விளம்பரம் வந்தது. 35 டொலர் நுழைவுக்கட்டணம் கொடுத்து அந்தக் கூட்டத்துக்கு போனேன். எப்படியும் அவரைச் சந்தித்து நேர்காணல் செய்யவேண்டும் என்பதே என் நோக்கம். ’ஒருநாளைக்கு ஒரு நன்மையாவது செய்யவேண்டும்.’ இது அவருடைய மந்திரம் என்பதைப் படித்திருந்தேன். கூட்டம் முடிந்ததும் அவருடைய மந்திரத்தை ஞாபகப் படுத்தியதும் உடனேயே சம்மதித்தார். அப்படியே அவருடைய நேர்காணலை அடுத்த நாள் டெலிபோன்மூலம் நடத்தி முடித்தேன்.



அலிஸ் மன்றோ

அந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது அலிஸ் மன்றோ சொன்ன ஒரு விசயம் ஆச்சரியமூட்டியது. ‘எழுத்து எழுத்து என்று இவ்வளவு காலமும் ஓட்டிவிட்டேன். இனிமேல் எழுதுவதை நிறுத்தப்போகிறேன். என்னாலே என் அலுவல்களைக் கவனிக்க முடியவில்லை. அந்தந்த மருந்துகளை அந்தந்த நேரத்துக்கு எடுக்கவேண்டும். தேகப்பியாசம் செய்வது, வீட்டைத் துப்புரவாக்குவது, சமைப்பது, குப்பைகளை அகற்றுவது எல்லாமே பெரும் சுமையாகத் தெரிகிறது’ என்றார். என்னால் நம்பமுடியவில்லை. எழுத்தாளரால் எப்படி எழுதுவதை நிறுத்தமுடியும். எழுதுவதுதானே அவர் மூச்சு. நான் நினைத்தது சரிதான். எழுதுவதை நிறுத்தப்போகிறேன் என்ற உரைக்கு பின்னர் அவர் எழுதி மூன்று புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எழுத்தாளரால் எழுதுவதை நிறுத்தவே முடியாது.  ‘Dear Life’ என்ற தொகுப்புதான் தன்னுடைய கடைசி நூல் என்று அலிஸ் மன்றோ சொல்லியிருக்கிறார். அதை அவசரப்பட்டு நம்பக்கூடாது.
அவருக்கு  கிடைத்த பரிசுகளை பட்டியலிட்டால் அதுவேஒருபக்கத்துக்கு மேலேவரும். ஆளுநர்பரிசைமூன்றுமுறையும், கனடாவின்அதிஉயர்இலக்கியப்பரிசானகில்லெர்விருதைஇரண்டுதடவையும்பெற்றவர். உலகஅளவில்பொதுநலநாடுகள்எழுத்தாளர்பரிசு,  ரில்லியம்புத்தகப்பரிசுஎன்றுஎல்லாவற்றையும்இவர்பார்த்துவிட்டார். இதுதவிர மான் புக்கர் சர்வதேச விருது 2009ம் ஆண்டு கிடைத்தது. இப்பொழுது இலக்கியத்தின் அதி உச்சமான நோபல் பரிசும் கிடைத்துவிட்டது. கடந்த பத்து வருடங்களாக எதிர்பார்த்த விருது இது.  இலக்கியத்துக்காக கனடிய எழுத்தாளர் ஒருவருக்கு கிடைத்த முதல் நோபல் பரிசு. ( ஸோல் பெல்லோவுக்கும் இலக்கியத்துக்காக நோபல் பரிசு கிடைத்தது. ஆனால் அவர் கனடாவில் பிறந்த அமெரிக்க எழுத்தாளர்.) இலக்கியத்துக்காக நோபல் பரிசுபெற்ற 13வதுபெண் எழுத்தாளர்.    இவர் புதுமைப்பித்தனைப்போல, Jorge Luis Borges போல சிறுகதைகள் மட்டுமே முக்கியமாக எழுதியவர்.  நோபல் பரிசு அங்கீகாரம் சிறுகதை இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரம்.
அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். ’உங்களுடைய சிறுகதைகளைப் படிக்கும்போது அழகான வசனங்களின் கீழே அடிக்கோடிடுவேன். ஆனால் சமீபத்தில் நீங்கள் ஓரிடத்தில் உங்கள் கதைகளில் அழகான வசனங்கள் வரும் இடங்களை வெட்டிவிடுவீர்கள் என்று படித்திருக்கிறேன். அது உண்மையா?’ அவர் சொன்னார். அழகான வசனம் அல்ல. கெட்டிக்காரத்தனமாகத் தோன்றும் வசனம். அல்லது திரும்பத்திரும்ப மினுக்கப்பட்ட அலங்காரமான வசனம். அவற்றை நான் விரும்புவதில்லை. அகற்றிவிடுவேன். காரணம் ஒரு கதையை சொல்லும்போது அந்தக் கதைதான் முக்கியம். ஓர் அலங்காரமான வசனம் வாசகருடைய கவனத்தை கதையின் மையத்திலிருந்து திருப்பிவிடும். ஆனால், கதை முடிவை நோக்கிச் செல்லும்போது வசன அமைப்பு முக்கியமாகிறது. அந்த வசனம் சொல்வது அதில் உள்ள வார்த்தைகளின் சேர்க்கையிலும் பார்க்க அதிகமாக இருக்கவேண்டும். அதை வரவேற்பேன். ஒரு வசனம் அது சொல்ல வந்ததிலும் பார்க்க கூடச்சொல்லவேண்டும். ஆனால் வன்னவேலை எனக்கு பிடிக்காது.’ அப்பொழுது நான் ‘நீங்கள் வெட்டியெறிந்த வசனங்களையெல்லாம் எனக்கு தரமுடியுமா?’ என்று கேட்டேன். அவர் பெரிதாக சத்தம்போட்டு சிரித்தார்.
’நோபல் பரிசு புனைவு இலக்கியத்துக்கு மட்டும்தானே கொடுக்கிறார்கள். அது அவ்வளவு முக்கியமானாதா?’ என்று அவரை ஒருதடவை கேட்டேன். அவர் சொன்னார். ’புனைவிலே கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. செக்கோவை நான் எப்பொழுது வேண்டுமானாலும் படிப்பேன். சமீபத்தில் டோல்ஸ்டோயுடைய ’போரும் சமாதானமும்’ நூலை மறுபடி படிக்கத் தொடங்கியிருக்கிறேன். இது ஒருதடவை படித்துவிட்டு மூடிவைக்கும் சமாச்சாரம் அல்ல. புனைவு படிப்பதுதான் என்னுடைய மூளைக்கு வேலை கொடுக்கிறது. மனநிலையை தளரவைக்க அபுனைவு படிக்கிறேன். ஆதிகாலத்தில் இருந்து இன்றுவரை மனிதன் புனைவு இலக்கியத்தில்தான் நாட்டம் செலுத்தியிருக்கிறான். தலைமுறை தலைமுறையாக புனைவுக் கதைகள்தான் சொல்லியிருக்கிறான். எந்த மொழியிலும் பழம்பெரும் இதிகாசங்கள் எல்லாம் புனைவுதானே.’
அலிஸ் மன்றோவுடைய சிறுகதைகள் மிக நீண்டவை. ஆகவே தமிழ் மொழிபெயர்ப்பில் அவர் சிறுகதைகள் அதிகம் படிக்க கிடைப்பதில்லை. அவர் என்னிடம் கேட்டார். ‘என்னுடைய சிறுகதைகளை உங்கள் மொழியில் மொழிபெயர்ப்பது சுலபமா?’ நான் சொன்னேன். ‘மிக எளிது. உங்கள் வசன அமைப்பு தமிழில் மொழிபெயர்ப்பதற்கு இலகுவானது. ஆனால் உங்கள் கதைகள் நீண்டுபோய் இருப்பதால் அவற்றை பிரசுரிப்பது கடினம். உங்கள் கதைகளின் நீளம் 70 பக்கம், எங்கள் சிறுபத்திரிகைகளின் முழு நீளம் 60 பக்கம்தான்’ என்றேன். அவர் மறுபடியும் சிரித்தார்.
நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட செய்தியை அவரிடம் தெரிவிப்பதற்கு நோபல் கமிட்டியின் செயலாளர் ஸ்வீடனில் இருந்து தொலைபேசியில் அவரை அழைத்தார். வழக்கம்போல அலிஸ் மன்றோ டெலிபோனை எடுக்கவில்லை. ஆகவே 1.2 மில்லியன் டொலர் நோபல் பரிசு விவரத்தை செயலாளர் தகவல் மெசினில் விட்டார். இது ஒன்றும் அறியாத அலிஸ் மன்றோ ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார். நடு இரவு அவருடைய மகள் டெலிபோனில் அழைத்து. ’அம்மா, நீ வென்றுவிட்டாய்’ என்று கத்தியபோதுதான் அவருக்கு விசயம் தெரிந்தது.
நானும் செய்தி கிடைத்தபோது அலிஸ் மன்றோவை அழைத்து  தகவல் பெட்டியில் என் வாழ்த்தை தெரிவித்தேன். நோபல் கமிட்டி செயலாளர் விட்ட தகவலுக்கு மேல் என் தகவலும் காத்திருக்கும். எப்போதாவது ஒருநாள் அலிஸ் மன்றோ அதைக் கேட்பார்.

அ .முத்து லிங்கமும் அலிஸ் மன்றோவும் -1

அ .முத்து லிங்கம்


 அ .முத்து லிங்கமும் அலிஸ் மன்றோவும் -1

அலிஸ் மன்றோவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள். பத்துவருடமாக எதிர்பார்த்த பரிசு இப்பொழுது  அவருடைய 82வது வயதில் கிடைத்திருக்கிறது. என்னுடைய வாழ்த்தை அவருடைய தகவல் பெட்டியில் விட்டிருக்கிறேன்.
இப்பொழுது யோசிக்கும்போது ஒரு முக்கியமான விசயம் நினைவுக்கு வருகிறது. இவர்தான் தற்கால சிறுகதைகளின் அரசி. அவர் சொன்னார் தான் சிறுகதைகளை எழுதி முடிவுக்கு கொண்டு வரும்போது குறைந்தது மூன்று முடிவுகளைப்பற்றி தீர ஆலோசிப்பாராம். சில சிறுகதைகளை 6 மாதகாலமாக எழுதி பின்னர் தூக்கிப்போட்டிருக்கிறார். சிறுகதை எழுத்தாளருக்கு நோபல் பரிசு கொடுப்பதில்லை. அலிஸ் மன்றோவுக்கு கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறது.
2006ல் அவர் பற்றி நான் எழுதிய கட்டுரை.                           

                                        ஆயிரம் பொன்
                                         அ.முத்துலிங்கம்

       பிரபலமான தமிழ் எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை ஒன்று உண்டு. ஏற்கனவே புத்தகம் போட்ட எழுத்தாள நண்பர்கள் தங்கள் புத்தகங்களை இலவசமாக அனுப்பி வைப்பார்கள். ஆரம்ப எழுத்தாளர்களும் தங்கள் படைப்புகளைத் தந்து கருத்து கேட்பார்கள். வாசகர்கள் தங்கள் கையெழுத்துப் பிரதிகளை அனுப்புவார்கள். எல்லோருக்கும் பதில் எழுதவேண்டும்.
       ஆங்கில எழுத்தாளர்களுக்கும் இதே தொல்லை உண்டு என்பதை சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் கண்டுபிடித்தேன். சிலர் தங்கள் சிறுகதைகளை எப்படி பிரசுரம் செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள். வேறு சிலர் ஆசிரியருடைய மின்னஞ்சல் முகவரியை அறியத் துடித்தார்கள். இன்னும் சிலர், என் கண்ணுக்கு முன்னாலேயே பெரிய கட்டு ஒன்றை தூக்கிக் கொடுத்து வீட்டிலே போய் படித்துப் பார்க்கச் சொன்னார்கள்.
       இந்தச் சோதனை சோமர்செட்மோம் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. அவர் இங்கிலாந்தில் வசித்த சமயம் அமெரிக்காவில் இருந்து இளம் எழுத்தாளர்கள் நாவல்கள் எழுதி அனுப்பிவைப்பார்கள். அவர் வாழ்ந்த காலத்தில் கடிதத்தை பெறுபவரே கட்டணம் செலுத்தவேண்டும். தொக்கையான பேப்பர் கட்டுகள் எல்லாம் வரும். சோமர்செட்மோம் பாவம் காசு கட்டி அதை தபால்காரரிடம் இருந்து மீட்பார். அது மாத்திரமல்ல, அதைப் படிக்கும் கஷ்டமும் அவர் தலையிலேயே விடியும்.
       நான் கலந்துகொண்ட கூட்டத்தில் இருந்த ஒரு எழுத்தாளர் குதிரையில் இருப்பவர் போல உயரமாக இருந்தார். பேசும் குரலில் இல்லாமல், பாடும் குரலில் அவர் பிரசங்கம் செய்தார். மற்றவர்கள் அவரைச் சுற்றி நின்று கேட்டார்கள். வாசகர்களிடமிருந்து தப்புவதற்கு அவர் வழி வகைகள் சொல்லிக்கொண்டிருந்தார்.
       'ஒரு நாள் எனக்கு கூரியரில் பார்சல் ஒன்று வந்தது. உள்ளே முன்பின் தெரியாத ஒருத்தர் 600 பக்க நாவல் ஒன்றை அனுப்பியிருந்தார். எழுத்துரு 8 சைசில் குறுக்கி குறுக்கி அச்சடிக்கப்பட்டிருந்தது. ஒரு லைன் போய்விடும் என்ற ஏக்கத்தில் பாரா பிரிவுகளைக் கூட அவர் கஞ்சத்தனமாகவே செய்திருந்தார். நான் முதலாம் பக்கத்தை வாசிக்கத் தொடங்கினேன். எல்லா எழுத்துக்களும் எறும்பு ஊர்வதுபோல ஓடின. நாவலின் தலைப்புக்கூட நீண்டது. 'என் தகுதிக்கு மீறிய ஆசைகளும், என் தகுதிக்கு குறைந்த காதல்களும், என் தகுதிக்கு சரியான தோல்விகளும்.' தலைப்பை வாசிக்கவே மூச்சு வாங்கியது. இருபது பக்கம் படித்த பிறகுதான் கதையை சொல்வது ஒரு பூனை என்று தெரியவந்தது. சகாரா பாலைவனத்தை கடந்துவிடலாம் ஆனால் அந்த எழுத்தை கடக்க முடியாதுபோல தோன்றியது. நான் அந்த ஆரம்ப எழுத்தாளருக்கு இப்படி ஒரு கடிதம் வரைந்தேன்.
              அன்புள்ள நண்பரே,
              உங்களுடைய இணைப்புக் கடிதத்தில் நாவல் ஒன்றை அனுப்புவதாக கூறியிருந்தீர்கள். கிடைக்கவில்லை. அச்சடித்த காகிதக் கட்டு ஒன்றுதான் வந்திருந்தது. நாவல் கிடைத்ததும் பதில் எழுதுவேன்.
       அவர் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அந்தக் கடிதத்துக்கு பிறகு அவருக்கு வரும் இலவச பிரதிகளும், புத்தகங்களும் கணிசமாக குறைந்துவிட்டனவாம்.
       இந்த எழுத்தாளர் சொல்வதில் சிறிது அளவு உண்மை இருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு நாவல், நாலு சிறுகதைகள், 15 கவிதைகள் வந்தால் பாவம்  எழுத்தாளர் என்ன செய்வார். அதிலும் நாவல்கள் ஓர் இலையானின் ஆயுட்காலம்கூட நின்றுபிடிக்க முடியாதவை. எழுத்தாளர் தன் எழுத்து வேலையை துறந்து,  முழுநேர வாசிப்பில் இறங்கினால்கூட முடிகின்ற விசயமா இது.
       வாசகர்கள் கொடுக்கும் தொல்லையினாலோ, என்னவோ மேலைநாட்டு எழுத்தாளர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள். வாசகர்களை அவர்கள் கிட்ட அணுகவிடுவதில்லை. வாசிப்பு கூட்டங்களில் சந்தித்தால் சரி, மற்றும்படி தொலைபேசிப் பேச்சோ, கடிதப் போக்குவரத்தோ கிடையாது. அப்படி தீவிரமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.
       ஆனால் என் விசயம் வேறு. எழுத்தாளர்களை தேடுவது என் வேலை. அவர்களிடம் கற்றுக்கொள்ள எனக்கு எவ்வளவோ இருக்கிறது. சந்திப்பு முடிந்ததும் அதை கட்டுரையாக எழுதிவிடுவேன். சந்திக்காவிட்டாலும் ஒன்றும் பெரிய நட்டமில்லை. அந்த முயற்சியே பெரும் அனுபவம்தான். அதையும் கட்டுரையாக்கிவிடுவேன். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்.

       1973ம் ஆண்டு பீட்டர் மாத்தீஸன் என்ற இயற்கை விஞ்ஞானி நேபாளத்தின் இமயமலைப் பிரதேசங்களில் பனிச்சிறுத்தை என்ற அபூர்வமான விலங்கை தேடி அலைந்தார். உறையவைக்கும் குளிரில் மாதக் கணக்காக தேடியும் அந்த மிருகம் தென்படவில்லை. திரும்பியதும் அவர் தான் தேடி அலைந்த அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதினார். அதன் தலைப்பு 'Snow Leopard'. இறுதிவரை தான் காணாத ஒரு மிருகத்தின் பெயரையே சூட்டினார். அந்தப் புத்தகம் வெற்றி பெற்றது. பலர் அதை classic என்று வர்ணித்தார்கள். தோல்வியை வெற்றியாக்கிவிட்டார் மாத்தீஸன். அவருடைய நூலுக்கு 1979ம் ஆண்டு The National Book Award கிடைத்தது.    
       சுரா என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். எப்படி நீங்கள் பிரபலமான ஆங்கில எழுத்தாளர்களுடைய செவ்விகளை சுலபமாக பதிவு செய்துவிடுகிறீர்கள் என்று. அவருக்கு தெரியும் இந்த எழுத்தாளர்கள் தங்களைச் சுற்றி அத்தனை காவல் அரண்களை உண்டாக்கி வைத்திருக்கிறார்கள் என்று. இவர்களுடைய முகவரி கிடைக்காது. டெலிபோன் டைரக்டரியில் அவர்கள் பெயர் இருக்காது. மின்னஞ்சல் விலாசம் புதைக்கப்பட்டிருக்கும். ஒரு  பாதுகாப்பு வலயத்துக்குள் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதுவே சுராவின் ஆச்சரியத்துக்கு காரணம்.
       நான் 'அது ஒரு ரகஸ்யம்' என்றேன். 'எப்படி?' என்றார். நான் சொன்னேன், 'முதலில், அவர்களுடைய மனைவிமார்களை பிடிக்கவேண்டும்.' சுரா சிரித்தார். அவர் இதை நம்பவில்லை.
       ரோபையாஸ் வூல்ஃப் என்பவர் தலைசிறந்த எழுத்தாளர். இவரை எழுத்தாளருக்கு எழுத்தாளர் என்று சொல்வார்கள். இவர் ஸ்டான்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியர்; புனைவு இலக்கியம் கற்றுக் கொடுப்பவர். இவருடைய செவ்வியை நான் சமீபத்தில் பதிவு செய்திருந்தேன். இவருக்கு கடிதம் மேல் கடிதம் எழுதினாலும் பதில் கிடைக்காது. ஒரு நாள் அவருடைய மனைவியிடம் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, பேராசிரியர் வெளி மாநிலம் போயிருப்பதாக. நான் விடவில்லை. பேராசியருக்கு என்னை நினைவூட்டும்படி மனைவிக்கு கடிதம் எழுதத் தொடங்கினேன். தொல்லை தாங்காமல் ஒரு நாள் பேராசியரே தொடர்பு கொண்டார். பிறகு எல்லாமே சுலபமாகிவிட்டது.
       புக்கர் பரிசு பெற்ற மைகேல் ஒண்டாச்சி என்ற எழுத்தாளர் ரொறொன்ரோவில் இருக்கிறார். நான் இருக்கும் இடத்திலிருந்து இருபது மைல்களுக்கும் குறைவான தூரத்தில். இவரும் சந்திக்கமாட்டார், பதில் போடமாட்டார். இவருடைய மனைவி பெயர் லிண்டா. இவரை ஒரு விருந்தில் சந்தித்தேன். இவரிடம் நான் அவருடைய கணவரைச் சந்திக்க முடியாத அவலத்தை விவரித்தேன். அவர் என்னுடைய பெயரைக் கேட்டார். சொன்னேன். அந்தப் பெயர் தன்னுடைய ஞாபக சக்திக்கு சவாலாக இருக்கிறதென்றார். என்னுடைய பெயரை அவருடைய வசதிக்காக பாதியாக தறித்து முத்து, முத்து என்றால் pearl என்று சொல்லித் தந்தேன். அன்று அந்த விருந்து முடியும் வரை அந்த நல்ல பெண் ஒரு நாலாம் வகுப்பு மாணவிபோல என்னுடைய பெயரை மனனம் செய்தபடியே இருந்தார்.
       இப்படி பல யுக்திகள் என் கைவசம் இருந்தன. ஆனால் இவை எல்லாம் அலிஸ் மன்றோவின் முன் அடிபட்டுப் போய்விட்டன. அவரே ஒரு மனைவி. அவரை பிடிக்க நான் யாரைப் பிடிப்பது.
அலிஸ் மன்றோ

       நான் கனடாவுக்கு வந்த காலம் தொட்டு சந்திக்க விரும்பிய கனடிய எழுத்தாளர் அலிஸ் மன்றோ. இவரிலே எனக்கு பெரும் மதிப்பு இருந்தது. இன்று உலகிலே எழுதும் சிறுகதை எழுத்தாளர்களில் இவர் முன்னணியில் இருக்கிறார். பெண்களின் விடுபடல் பற்றியே பெரும்பாலும் பேசும் இவருடைய சிறுகதைகள் விரலினால் தொட்டு சொல்லமுடியாத ஒருவகையான நெகிழ்வை ஏற்படுத்திவிடும். புதுமைப்பித்தன் போல, Jorge Luis Borges போல இவர் சிறுகதைகளை மட்டுமே எழுதுவார். இவரிலே உள்ள சிறப்பு இத்தனை வயதாகியும் இவருடைய எழுத்தில் இளமை குன்றவில்லை. ஒரு சிறுகதையை எழுதி முடிப்பதற்குள் அவருடைய வயது அரை வருடம் கூடிவிடும். வயதேறும்போது சிலபேருடைய எழுத்து தரம் குறைந்துபோகும். இவர் விசயத்தில் அப்படி இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் அவர் அதற்கு முன் எழுதியதை வென்றுகொண்டே இருக்கும். இது அவ்வளவு சுலபமில்லை. ஏனென்றால் சிறுகதையை ஓர் அளவுக்கு மேலே தீட்ட முடியாது. இவர் என்றால் மிகவும் சாதுர்யமாக அதை செய்துகொண்டே இருக்கிறார்.
       இவருக்கு கிடைத்த பரிசுகளை பட்டியலிட்டால் அதுவே ஒரு பக்கத்துக்கு மேலே வரும். ஆளுநர் பரிசை மூன்று முறையும், கனடாவின் அதி உயர் இலக்கியப் பரிசான கில்லெர் விருதை இரண்டு தடவையும் பெற்றவர். உலக அளவில் பொதுநல நாடுகள் எழுத்தாளர் பரிசு, ஓ ஹென்றி பரிசு, ஸ்மித் இலக்கியப் பரிசு, ரில்லியம் புத்தகப் பரிசு என்று எல்லாவற்றையும் இவர் பார்த்துவிட்டார். இது தவிர National Book Critics Circle Award ம்,  US National Arts Club பரிசும் சமீபத்தில் இவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் எழுதிய புத்தகங்களில் அதிகம் பேசப்பட்டது Runaway சிறுகதைத் தொகுப்பு. இதற்குத்தான் 2004ம் வருடம் கனடாவில் கில்லெர் விருது கிடைத்தது. 
       இருபது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு பயிலரங்கில் கலந்துகொண்டேன். கொடையாளர்களுடன் சந்திப்பதற்கான பயிற்சி எங்களுக்கு கொடுக்கப்பட்டது.
       'பல நாள் முயற்சிக்கு பின் உங்கள் காதலியை முதன்முதலாக சந்திக்கிறீர்கள். நீங்கள் மறக்காமல்  செய்ய வேண்டியது என்ன?' பயிற்சியாளர்  என்னைத்தான் கேட்டார். நான் கடவு எண்ணைத் தொலைத்ததுபோல திருதிருவென்று முழித்தேன். நான் எங்கே காதலியை கண்டேன்? என்றாலும் அழுத்தமான முத்தம் கொடுக்கவேண்டும் என்று அழுத்தி சொன்னேன். பிழை, ஒரேயொரு சரியான பதில்தான் உண்டு. காதலியுடனான அடுத்த சந்திப்புக்கு நீங்கள் ஒரு காரணம் உண்டாக்கவேண்டும். முதல் சந்திப்பின் வேலை அடுத்த சந்திப்புக்கு அடிபோடுவதுதான்.
       பீட்டர் செல்லர்ஸ் நடித்த 'விருந்து' படத்தின் கடைசிக் காட்சி ஞாபகத்தில் இருக்கும். முதல் சந்திப்புக்கு பிறகு காதலனும் காதலியும் பிரிகிறார்கள். காதலன் 'இதோ உங்கள் தொப்பி' என்கிறான். காதலி சொல்கிறாள் 'நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.' அவன் சொல்கிறான் 'இந்த தொப்பியை கொடுப்பதற்கு நாளைக்கு என்ன நேரத்துக்கு நான் வரட்டும்.'
       இதுதான் சூக்குமம். ஒரு பிரபலமான எழுத்தாளரைச் சந்திக்கும்போதும் இதே முறையைதான் கையாள வேண்டும். அடுத்த சந்திப்புக்கு ஒரு சாக்கு உண்டாக்கவேண்டும். அவரே உங்களைத் தொடர்பு கொள்வது மாதிரி செய்தால் உத்தமம். முதலாவது தொடர்பிலும் பார்க்க  இரண்டாவது சந்திப்பு முக்கியம்.
       பலவிதமான தந்திரங்களை பிரயோகித்து அலிஸ் மன்றோவை சந்திப்பதற்கு நான் எடுத்த அத்தனை முயற்சிகளும் படுதோல்வியில் முடிந்தன. இவருக்கு அனுப்பிய கடிதங்கள் இவரிடம் போய் சேர்ந்ததற்கான அடையாளமே  இல்லை.
       ஒரு முறை இவர் கொடுத்த செவ்வி ஒன்றை பத்திரிகையில் படித்தேன். அதில் இப்படி சொல்லியிருந்தார். 'கடந்த இருபது வருடங்களில் இன்னொருவருடைய தேவையை மதித்து நான் செயல்படாத நாள் ஒன்றுகூட இல்லை. என் எழுத்து வேலைகள் அவற்றை சுற்றித்தான் நடக்கின்றன.'
       நான் இதைப் பிடித்துக் கொண்டேன். அன்றே அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'உங்கள் செவ்வியை படித்தேன். ஒரு நாளில் ஒருவருக்காவது நீங்கள் உதவி செய்வீர்கள் என்று அறிகிறேன். இன்று என்னுடைய முறை. என்னுடைய தேவைகளுக்கு இன்றைய நாளை ஏன் ஒதுக்கக்கூடாது.' இப்படி எழுதியதும் வழக்கம்போல மறந்துவிட்டேன்.
       கனடாவில் வசிப்பவர்களுக்கு ஒரு நிரந்திரமான துன்பம் உண்டு. நுளம்புக் கடி, கரப்பான் பூச்சி, இலையான் தொல்லை, இப்படி அல்ல. இவற்றிலும் பார்க்க மோசமானது, சந்தைப்படுத்துவோர் படுத்தும் பாடு. தொலைபேசி மூலம் விற்பனைக்காரரும், கடன் அட்டைக்காரரும், புள்ளிவிபர கணக்கெடுப்பாளர்களும் தொல்லைப் படுத்துவார்கள். அதுவும் ஓய்வு நாள் என்றால் உங்கள் நிம்மதி போய்விடும்.
       ஒரு நாள் அதிகாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த நேரத்தில் என்னை ஒருவரும் கூப்பிடமாட்டார்கள். கைபேசியை எடுத்ததும் ஒரு குரல் என் முழுப்பெயரையும் உச்சரித்தது. அந்த புது உச்சரிப்பில் என் பெயரைக் கேட்டபோது அதுதான் என் பெயர் என்பது எனக்கே மறந்துவிட்டது; என் பெயர் அப்படி ஒரு சத்தம் கொடுக்காது. எடுத்த எடுப்பில் 'என்ன வேண்டும்?' என்றேன்.
       'நான் அலிஸ் மன்றோ' என்றார். அடுத்த கணம் நான் உருகிப்போனேன். என் காதுகளை நம்பமுடியவில்லை. நான் என்ன செய்கிறேன் என்று வினவினார். எதற்காக அவரை பார்க்கவேண்டும் என்றார். கிடைத்த அவகாசத்தில் நான் அவருடைய நீண்டகால வாசகன் என்றும், அவர்மேல் மிக்க மதிப்பு கொண்டிருக்கிறேன் என்றும், அவரை செவ்வி கண்டு ஒரு பத்திரிகைக்கு எழுத வேண்டும் என்றும், அவரை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்யவேண்டும் என்றும் கூறினேன். அவர் கலகலவென்று சிரித்தார். ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் முற்றுப்புள்ளிக்கு பதிலாக ஒரு சிரிப்பு சிரித்தார். 17 வயதுப் பெண்ணின் சிரிப்பு. 74 வயதுப் பெண்மணி என்று எனக்குத் தோன்றவே இல்லை. அவர் குரலில் இருந்த உற்சாகமும், சிரிப்பும், கருணையும் என்னால் என்றும் மறக்க முடியாததாக அமைந்தது.
       'நான் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ளுகிறேன். திரும்பி வந்தவுடன் உங்களை தொடர்பு கொள்வேன்' என்றார். அது மாத்திரமல்ல, அவருடைய தொலைபேசி எண்ணையும், தன்னுடைய ஏஜண்டின் பெயரையும், அவருடைய முகவரியையும் தந்தார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன். அதன் பிறகு டெலிபோன் மௌனமானது.
       பல தடவைகள் அவர் கொடுத்த இலக்கத்தை அழைத்தபோது தொலைபேசி நேராக பதில் மெசினுக்கு போய்விடும். நான் தகவலை விடுவேன். அதற்கு எதிர்வினையே இல்லை. அவருடைய ஏஜண்டுக்கு கடிதம் எழுதுவேன். அது போன வேகத்திலேயே திரும்பிவிடும். சிரித்து சிரித்து பேசும் இந்த அருமையான பெண் என்னை ஏமாற்றுவதற்காகவா இப்படிச் செய்தார். நான் அதை நம்பத் தயாராக இல்லை.
       கனடாவில் இருந்து ஒருவருக்கும் இதுவரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அது கிடைக்குமானால் அதற்கு தகுதியானவர்  மார்கரெட் அற்வூட். அவருக்கு அடுத்தபடி அலிஸ் மன்றோ என்கிறார்கள்.
       இவருடைய எழுத்தின் விசேஷம் காலத்தை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டு எழுதுவது.  எப்பொழுதும் கிராமத்துப் பின்னணியில் எழுதுவதே இவருக்குப் பிடிக்கும். தன்னுடைய பழைய கதைகளை திருப்பி படிக்கும்போது சில வசனங்கள் அழகாக செதுக்கப்பட்டு, அதி நேர்த்தியாக இருப்பதாக சொல்கிறார். இப்பொழுது எழுதும்போது, அப்படியான வசனங்கள் வரும் இடங்களை எல்லாம் தான் அடித்துவிடுகிறாராம். எழுதுவதற்கு உட்கார்ந்தால் இரவிரவாக எழுதுகிறார். அந்த இரவு தான் இறந்துபோகக்கூடும் என்பதுபோல செயல்படுகிறார்.
        என்னிலும் பார்க்க முயற்சிகூடிய ஒரு நிருபர் அவரை மடக்கி கேள்வி ஒன்று கேட்டார். 'நீங்கள் எழுதும் கதைகளில் உங்கள் பெற்றோர்கள் இருக்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் இல்லை. அது ஏன்?' அவர் 'என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள், ஆனால் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்கள். முதியோர் இல்லத்தில் அவர்கள் என்னை வந்து பார்க்கவேண்டும் அல்லவா?' என்றார் நகைச்சுவையாக.        இவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றிப்போட்ட ஒரு சம்பவம் இவர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது நடந்தது. ஓரு மாணவன் இனிப்பை கடித்து சாப்பிட்டபோது ஒரு துண்டு உடைந்து கீழே விழுந்தது. 'நான் சாப்பிடுகிறேன்' என்று அந்த துண்டை அலிஸ் எடுத்தார். அந்த மாணவனுடைய பெயர் ஜேம்ஸ் மன்றோ. அவனைக் காதலித்து, உடனேயே மணம் புரிந்து தன் பெயரை அலிஸ் மன்றோ என்று மாற்றி, படிப்பையும் பாதியிலே நிறுத்தினார். இனிப்பிலே ஆரம்பித்த காதல் கசப்பாகி வெகு விரைவிலேயே மண முறிவு ஏற்படும் என்பதை அவர் அப்போது அறியவில்லை.
       ரொறொன்ரோ Harbourfront மையத்தில் எழுத்தாளர் கூட்டத்தில் அலிஸ் மன்றோ வாசிப்பதாக விளம்பரங்கள் வெளியானதும் நான் பதற்றமானேன். தான் எழுதிய ஒரு புத்தகத்தில் இருந்து இரண்டு பக்கங்கள் வாசிப்பார். அவ்வளவுதான். அதற்கு டிக்கட் $35. எப்படியும் அந்தக் கூட்டத்துக்கு போகலாம் என்று முன்கூட்டியே பணம் கட்டுவதற்கு தொலைபேசியில் அழைத்தால் எல்லா டிக்கட்டுகளும் முடிந்துவிட்டன.
       அலிஸ் மன்றோவுடன் உட்கார்ந்து விருந்து சாப்பிடுவதற்கு $150 என்றார்கள். இந்தக் கட்டணம் என்னுடைய பட்ஜெட்டுக்கு மிகவும் மேலே.  சரி, இதை விடக்கூடாது என்று என்னுடைய பெயரைக் கொடுத்தேன். எல்லா டிக்கட்டுகளும் இரண்டு வாரங்கள் முன்பாகவே விற்றுத் தீர்ந்துவிட்டனவாம். ஒரு எழுத்தாளருக்கு இது எத்தனை பெரிய கௌரவம் என்று நினைக்க நினைக்க பெருமையாக இருந்தது.
       எனக்கு தெரிந்த வித்தைகள் அனைத்தையும் பயன்படுத்தியும் அலிஸ் மன்றோவின் செவ்வி இதுவரை கிடைக்கவில்லை. அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகள் நிறைய இருந்தன. பீட்டர் மாத்தீஸன் நேபாளத்து மலைகளில் பனிச்சிறுத்தையை தேடி அலைந்ததுபோல நானும் அவருடைய சந்திப்புக்காக அலைந்ததுதான் மிச்சம்.
    கனடாவில் எழுத்தாளர்கள் தங்களுக்கு அமைக்கும் தற்காப்பு வியூகத்திலும் பார்க்க ஆச்சரியம் கொடுப்பது சபைகளில் அவர்களுக்கு தரப்படும் மரியாதை. ஒரு பிரபலமான சினிமா நடிகைக்கு கிடைப்பதுபோல, அரசியல்வாதிக்கு கிடைப்பதுபோல, விளையாட்டு வீரருக்கு கிடைப்பதுபோல சமூகத்தில் இவர்களுக்கு நிறைய கௌரவம் உண்டு. ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் சிறப்பை வைத்து அந்த நாட்டை மதிப்பிடலாம் என்பார்கள். அந்த வகையில் கனடா எனக்கு தரும் மகிழ்ச்சி சொல்லும் தரமல்ல.
    இன்னொரு விதத்தில் துயரமும் இருந்தது. எழுத்தாளர்கள், வாசகர்களிடமிருந்து தூர விலகிப் போகிறார்கள். அலிஸ் மன்றோ என்னை மறந்து போயிருப்பாரோ என்று நினைக்கிறேன். சிரித்து சிரித்துப் பேசும் இந்த முதிர் பெண்மணி என்னை ஏமாற்ற ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார். அதிகாலையில் அடிக்கும் ஒரு தொலைபேசிக்காக நான் காத்திருக்கிறேன். இரண்டு வருடமாக. டெலிபோன் வந்தால் ஆயிரம் பொன். வராவிட்டால் என்ன? அதுவும் ஆயிரம் பொன்.
நன்றி : அ .முத்துலிங்கம்                                        [தொடரும்.நன்றியும் தான் ]

Monday 7 October 2013

திருக்குற்றாலம் சித்திரசபை!

குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் -திருக்குற்றாலம் சித்திரசபை!


இறைவன் நடராஜரைத் தொழும் பக்தர்களுக்கும் , அகத்தியர் மற்றும் திருமூலர் போன்ற சித்தர்களுக்கும் திருக்குற்றாலம் தனியானதொரு மகிழ்ச்சியைத் தரும். திருக்குற்றாலத்தில் அமைந்துள்ள  சித்திரசபை ஓவியங்கள், நடராஜரது அண்ட நடன நிகழ்ச்சித் தத்துவம்  நிகழ்ச்சிக்கு  ஒரு வாய் பேசாத சாட்சி மற்றும் தெய்வீக நாடகம் என்று பார்வையாளர்களைக் கவரும் வண்ணம், சுவர்களில் காட்சிகள் வரையப்பட்டிருக்கின்றன..

மீண்டும் மீண்டும் ஓவியங்களைப் பாருங்கள் . நிறங்கள் வளைவுகள் மற்றும் மாறாத வண்ணங்களையும் பாருங்கள் நிச்சயமாக மானுடர்களால் வரையப்பட்ட ஓவியங்கள்  என்று கருத இயலாது. இப்படிப்பட்ட நிறம் , வீரியம் மற்றும் நுட்பமான உணர்வுகளை ஐக்கியப்படுத்தி மனிதர்களால் பேசும் சித்திரங்களைத் தீட்டியிருக்க இயலாது என்ற வியப்பும் மகிழ்வும் ஒருசேர உள்ளத்தில் தோன்றுவதை நம்மால் தடுத்து நிறுத்த இயலாது.


திருக்குற்றாலம் சித்திர சபை தமிழ்நாட்டில் ஐந்து பிரபலமான சபைகளில்  

ஒன்றாகும் சிதம்பரம் இருப்பது பொற்சபை, மதுரையில் உள்ளது வெள்ளி 

சபை.   திருநெல்வேலி, இராஜவல்லிபுரத்தை அடுத்துள்ள செப்பறை தாமிர 

சபை.  பலர் நெல்லையப்பரோடு நிறுத்திவிடுகின்றனர். செப்பறையே 

மெய்யான தாமிரசபை. நெல்லையில் நடராஜர் ஆடுவது ஆனந்தக் கூத்து.

 திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் உள்ளது இரத்தின 

சபை ஆகும். திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபை  கலை முற்றிலும் 

ஓவிய வடிவங்களைக் கொண்டு ஒளிர்கின்றது

பராக்கிரம பாண்டியன் மூலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சித்திர சபை நாட்டுப்புறக் கலைகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்துள்ளது  அது  பழந் தமிழர்களின் புகழ்பெற்ற ஓவியக் கலையின் மேதைமைகளுக்குப் போதிய சான்றுகளாகத் திகழ்கின்றன. மற்றும் நம் முன்னோர்கள் அழகியல் உணர்வுகளையும் வெளிக்கொணர்கின்றன.
அஜந்தா-எல்லோரா என்று சுற்றுலா செல்வோர் சித்திரசபையையும் காண்பதைக் கடமையாகக் கொண்டால்தான் தமிழரின் அருமை புரியும்.

பேரருவி, சிற்றருவி, ஐந்தருவி சாலைகள், , இந்த அழகான மண்டபம் ,. சித்திரசபைக்  கட்டமைப்பு, கேரளக் கோயில்களின் தோற்றங்களைப் பிரதிபலிக்கும் பொதுவான பல விஷயங்கள் உள்ளன . சபையின் நான்கு சுவர்களிலும் தெய்வங்கள் , பக்தர்கள் , புராணக் கதைகள் , புராண நிகழ்வுகள் என பல்வேறு வகையான ஓவியங்கள் முன்னும் பின்னுமாக ஒரு ஒழுங்கு முறையில் சுவர்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளன..

சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் முறையாகச் சித்திரங்களில் காட்சியளிக்கின்றன. சித்திர சபையில் வரையப்பட்டுள்ள கடவுள் நடராஜர் ஓவியம் உயிர்பெறெழுந்து நம் முன் நடனமாடுவதுபோன்ற உணர்வைத் தோற்றுவிக்கின்றது. இந்த இடத்தில் ஓர் செவி வழிச் செய்தியையும் குறிப்பிடவேண்டும். ஐந்து சபைகளிலும் உள்ள நடராஜர் திருவுருவங்க்களைச் வடிவமைத்த பெருந்தச்சன் ( ஸ்தபதி ) ஒருவரே ஆகும் என்பதே அந்தத் தகவல்.  ஆண்டாண்டுக் காலமாக ஸ்தபதி என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் பெருந்தச்சன் என்று குறிப்பிடுதலே சரியானதாகும்.

 இறைவனின் இரக்கமுள்ள முகத்தில் தெய்வீக அருள் ததும்பப்  பார்க்கும் பொழுதுதான்" மனித்தப் பிறவியும்  வேண்டுவதே இந்த மாநிலத்தே" . என்று பாட்ட்டின் உண்மைப் பொருளை உணர முடியும். இஇஇந்தத் தெய்வீக உணர்வினை பெரும்பாலான நடராஜர் சந்நிதிகளில் நன்கு உணர இயலும்.
 விஷ்ணுவின் 10 அவதாரங்களையும் இங்கே ஓவியங்களாக உள்ளன. மேலும் சைவ மற்றும் வைஷ்ணவ ஒருமையையை வலியுறுத்துகின்றன என்றும் கொள்லலாம். திருக்குற்றாலநாதர் திருக்கோயில், வைஷ்ணவக் கோயிலாக இருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டது என்று கூறப்படுவதை ஈண்டு நினைவு கூறலாம்..

துல்லியமாக கணிதவியல் நுட்பத்துடன் வரையப்பட்ட இலங்கை சக்ரா போன்ற தந்திரக் குறியீடுகள் சித்திரசபை மண்டபத்திற்கு மேலும் அழகு சேர்க்க்கின்றன. முருகன் மற்றும் வள்ளி  தெய்வானை திருமணக் காட்சிகள், மற்றும் மீனாட்சி கோயிலின் சுந்தரேஸ்வரர் என்று தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பிரம்மா தாமரைக் கண்களுடைய விஷ்ணு அல்லது அனந்தபத்மநாபனின் தொப்புளில் இருந்து பிறப்பு எடுத்து   தோன்றும் காட்சியும் அனைவரையும் ஈர்க்கும் புகழ்பெற்ற  பதினாறு  வடிவங்களில் விநாயகா மண்டபத்தின் மேல் அலங்கரிக்கிறது .

ஒரு முதலை இரும்பு பிடியில் சிக்கி ஒரு யானை விஷ்ணுவின் அருளால் மோட்சம் பெற்ற புராண வரலாற்றுக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. பாகவதத்தின் கதைகள் ஆங்காங்கே வரையப்பட்டுள்ளன.
  .
கண்ணுக்கினிய அழகானவர்கள் ஒரு முக்கிய இடத்தை கண்டுபிடிக்க அதன்  பொங்குமாக்கடலில் விழுந்து துள்ளி எழுந்து  நீர்த்திவலைகளுடன் கூடிய  வேகத்துடன்  நீர்வீழ்ச்சியாகக் கீழே வருகின்ற திருக்குற்றாலப் பேரருவி நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. வீரபத்திரன். காலிங்க்கநாதர் போன்ற சிறு தெய்வங்களும் வெளிப்புறச் சுவரில் வரையப்பட்டுள்ளன.வனப்பு மிகு வனிதையரின் சுதை ஓவியங்கள் சித்திரசபைக்கு மென்மேலும் மெருகூட்டுகின்றன.

ஓவியங்களின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் அவை முற்றிலும் மூலிகைச் சாறுகள் கொண்டு செய்யப்பட்டுள்ளன என்பதே ஆகும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் G.நடராஜப்பெருமாள் என்னும் அன்பர் 23-12-2012-ல் ஆங்கிலத்தில் எழுதியிருந்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கமாகும்.                                                                                                         

600 ஆண்டுகளுக்குப்பின் புதுபொலிவு பெற்ற சித்திரசபை -இது அண்மையில்
அனைத்துப் பத்திரிகைகளிலும் வந்த தலைப்புச் செய்தி. இதனை எளிதாக ஒரு நிரூபர் சேகரித்து விடலாம். ஆனால் எல்லோராலும் வெளிப்படுத்தப் படாததோர்  உண்மை நிகழ்வைக் கேட்கும் நல்வாய்ப்பு எமக்குக் கிடைத்தது.

உண்மை நிகழ்வின் சிறப்பு 

 இந்துசமய அறநிலையத்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருபவர் ஹரிப்பிரியா. இவர் சித்திரசபையினைப் பார்வையிட வருகின்றார்.

அப்போது அங்கு பணியாற்றும் A.சுடலைமுத்து என்பவர், அதிகாரியிடம் சித்திரசபையைச் சீரமைத்திட தனியார் ஒருவரிடமிருந்து உதவி கிடைக்கும் என்று உறுதிப்டக் கூறுகின்றார். அதிகாரி, அது எப்படி என்று வியப்புடன் வினவ எல்லாம் சித்தர் அருள் என்று விடையிறுக்கின்றார்.

சரியாக 22 நாட்கள் கழித்து கரூரிலிருந்து ஒரு செல்வந்தர் தம் குடும்பத்தாருடன் வருகைதந்து சித்திரசபையைக் கண்டு களிக்கின்றார். அப்போதைய நிலை சித்திரங்கள் ஒளி இழந்தும், பல இடங்களில் சுவரினின்றும் உதிர்ந்தும் காணப்பட்டன.

கரூரிலிருந்து வந்தவர் V.K.தங்கவேல் என்பவர் ஓர் மில்லின் உரிமையாளர்
அவரிடம், காவலாளி A.சுடலைமுத்து, திருக்குற்றாலத் தல வரலாற்றையும், சித்திரசபையின் அருமை பெருமைகளையும், வழிவழியாக வந்த செவிவழிச் செய்திகளையும் விரிவாக இரண்டு மணிநேரத்திற்கு மேல்  எடுத்துக்கூறிவிட்டு, தாங்கள் சித்திரசபையைப் பொலிவு பெறச் செய்வது இறைவனின் சித்தம் என்று கூறுகின்றார்.

"அதிசயங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று அடிக்கடி எழுதவும், பேசவும் செய்வார், நெல்லை மாவட்டம், இராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த சாகித்திய அகடமி விருது பெற்ற ,தம் வாழ்க்கையே இதமிழிலக்கியத்திற்கு அர்ப்பணித்துத் திருமணம் கூடச் செய்து கொள்ளாத பிரபலமான நம் நினைவில் வாழும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன்.

ஆம் அந்த அதிசயம் அங்கே நிகழ்ந்தது. எவ்வளவு செலவாகும் என்று 

கொடுப்பவர் கேட்கவில்லை. யாரிடம் பணம் கொடுக்க வேண்டும் என்பதே 

அவரது அடுத்த வினா.  நிர்வாக அதிகாரி கஜங்காத்தபெருமாள் 

,அறங்காவலர் குழுத்தலைவர் தங்கம் பலவேசம், அறங்காவலர்கள் 

வீரபாண்டியன், முரளி ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். சித்திர சபையைச் 

சீரமைத்திட முன்தொகை வழங்கப்பட்டது. வேலை முடிய முடிய பகுதி 

பகுதியாகத் தொய்வின்றிக் கரூர் அன்பர்களிடமிருந்து 

45 லட்சம் ரூபாய் வரை எத்தகைய தடங்கலுமின்றி வந்து சேர்ந்தது. 

சித்திரசபையின் குடமுழுக்கும் செவ்வனே நடந்தேறியது. -16-09-2013-ல்.

இங்கு குறிப்பிட வேண்டியதொரு முக்கியமான தகவல் வருமாறு. நமது தலைநகராம் தில்லியில் இந்திய  மூலிகை ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகின்றது. அங்கிருந்து வந்தோரே ஆர்வமுடன் இயற்கை மூலிகைச் சாற்றினைக் கொண்டே, நம் மூதாதையர்கள் வரைந்திருந்த சித்திரங்களின் மீது அச்சரம் பிசகாமல் கோடிழுத்து வண்ணந் தீட்டிப் புதுப்பொலிவை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தி பேசுபவர்களாகவே இருந்திருக்கக் கூடும். மெய்யான கலை இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்தல்லவா ?

சித்திரசபைச் சீரமைப்பது தனியார் நன்கொடைகளைக் கொண்டே நிகழும் என்று முன்னதாகவே அறுதியிட்டுச் சொன்ன A.சுடலைமுத்துவையும் நாம் ஒரு சித்தராகவே பார்க்கின்றோம். ஏனெனில், மனிதர்களைத் தெய்வமாக வழிபடுவது சித்தர் வழிபாட்டின் தொடர்ச்சிதானே.

உண்மையை உள்ளது உள்ளபடி அறிய திருநெல்வேலி மாவ்ட்டம், தென்காசியை அடுத்துள்ள திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபைக்கு வாருங்கள்.  உள் நுழையுமுன் இடதுபுறம் காணப்படும் கல்வெட்டினைக் காணுங்கள்.

கல்வெட்டில் இடம்பெற்றுள்ள  நற்றொண்டாற்றியோர் பெயர்கள் 

01. V.K.தங்கவேல் 

02. எஸ். ஜெயராம்

03. எஸ். சிவசண்முகம்

04.  த. பாலச்சந்திரன்

முகவரி :- 52, 5-வது குறுக்குத் தெரு, கரூர்- 679 002 

பயன்கருதாமற் சாதாரண காவலாளியின் வேண்டுகோளை ஏற்று 

நன்கொடை வழங்கி, 600 ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த சித்திரசபையப் 

புதுப்பொலிவு பெறச் செய்த கரூர் அன்பர்களுக்கும், உடன் பணியாற்றிய 

டில்லி ஓவிய விற்பன்னர்களுக்கும், துணை நின்ற ஒவ்வொருவருக்கும் 

தனித்தனியாகவும் மொத்தமாகவும் வலைபதிவர்கள் சார்பில் நெஞ்சார்ந்த 

நன்றிகளும், வணக்கங்களும், வாழ்த்துக்களும் !   .

சித்திர சபையில் இன்னுமொரு சிறப்பம்சம் :-

செந்தமிழ் நாட்டுத் திருக்கோயில்களின் தூண்களில் யாளிகள்   
( யானை + சிங்கம்  ) மிருக உருவங்க்கள் இருக்கும். அதன் வாய்க்குள் கோழிமுட்டை வடிவிலான உருண்டைக் கற்கள் இருக்கும். சிலைகளைச் செய்து முடித்த பின்தான் அதன் வாய்க்குள் அந்தவகைக் கற்களைச் சிற்பி உள்ளே போட்டுள்ளதாக முதியோர் கூறக் கேள்வி. 

அந்தக் கற்களை எதோ ஒரு நிலையில் வெளியெ எடுத்துவிடலாம். ஆனால், இன்றளவும் எடுத்தவர் யாரும் இல்லை. ஆனால், அண்மையில் சங்கரன்கோயில் சென்றிருந்தபோது கோமதி அம்மன் சந்நிதிக்கு வெளிப்புறமுள்ள யாளிகளின் வாய்க்குள் முட்டை வடிவிலான கற்கள் இல்லவே இல்லை. காணாமற்போன கற்களைக் கண்டுபிடிப்பதற்கே ஓர் ஆய்வு நடத்திடல் வேண்டும்.

ஏன் இந்த யாளி விஷயம் ? சித்திரசபையினை உருவாக்குவதில் பயன்படுத்தப்பட்ட அளவுகோலை, வேலைகள் எல்லாம் முற்றுப்பெற்றவுடன் கூண்டொன்றிற்குள்  சிற்பி போட்டு விட்டார். அந்த அளவுகோலை  கூண்டிலிருந்து வெளியே எடுக்க முற்பட்டால் அது இயலாத காரியமாக உள்ளது. 25% அல்லது 50% அல்லது 75% கூட அளவுகோல் வெளியே எடுக்க முடிகிறதாம். இன்றளவும் யாராலும் முழுமையாக எடுக்க முடியவில்லையாம் . அடுத்தமுறை செல்லும்பொழுது முயன்று பார்க்க வேண்டும்.

நீங்களும்தான்  சிற்பி பயன்படுத்திய அளவுகோலை வெளியே எடுக்க முயற்சி செய்யுங்களேன்?
Thanks: Sankara Ramasamy