Saturday 31 January 2015

விடியாத சுதந்திர சூரியன்

விடியாத சுதந்திர சூரியன்

சி. ஜெயபாரதன் 

நடு ராத்திரி பெற்ற சுதந்திரம்
கண் திறக்க
விடிய வில்லை !
முடிய வில்லை  இருளாட்சி !
மடிக்குள் வெடி மறைத்து
நடக்குது மதப்போர் !
ஏர் முனைகள் வளைக்கப் பட்டு
வாள் முனைகள் ஆயின !
கார்மேகம் இப்போ தெல்லாம்
கரியமிலம் பொழிகிறது !

பாரதப் பண்பாடுகள்
நாராய்க் கிழிந்து,
வேர்கள்
கீழ்நோக்கிப் போகாது
மேல் நோக்கித் துளைக்கும் !
ழுத்தாணிகள் அமணமாய்
ஒழுக்கம் தவறிக்
குத்தூசி களாய்க் குத்தி எடுக்கும் !
பத்திர காளியின் கைச் சூலாயுதம்
பக்தரின் கைவசம் மாறும் !
பல்கலைக் கழகங்கள் வணிகச் சந்தையாய்
பண வேட்டை ஆடும்.
வேலை கிடைக்குது
கப்பம் ஒரு லட்சம் கட்டினால் !

கீழ் ஜாதியார் மேல் மட்டம் போய்
ஒதுக்கப் பட்டார் !
மேல் ஜாதியார் கீழ் மட்டம் போய்
விரட்டப் பட்டார் !
கணினி வர்த்தகம் 
நூற்றுக் கணக்கில் பெருகி
ஏழை செல்வந்தர்
வேற்றுமை ஏறிப் போச்சு !
நடிப்புக்கு மதிப்பளிக்கும்
நாட்டில்
படிப்புக்கு மதிப்பில்லை !

மருத்துவம் பணப் பட்டம் ஆனது !
உயிர்களுக் கில்லை மதிப்பு !
உன்னைப் பெற்ற அன்னையோ  
உடன் பிறந்த தங்கையோ
தனியாக
நடக்க முடியாது தெருவில் !
கருவிலே உருவாகும் பெண் சிசு
பிறக்கும் முன் பெறும் மரண தண்டனை !
பாரத மணிக்கொடி கிழிந்து போகுது !
விடியாத சுதந்திர சூரியன்
அத்தமிக்குது !
குடியாட்சியைத் தைப்பதா ?
முடிப்பதா ?

நீங்கள் இருப்பது மெக்கா

நீங்கள் இருப்பது மெக்கா

எஸ்..செந்தில் குமார்
ஒண்ணுக்கு போகக்கூட பயமா இருக்கு சார்என்னக் கொல பண்ணப் பாக்குறாங்க சார்நாங்குத்த வைக்கும் போது அலேக்கா தூக்கிட்டிப் போகப் போறதா அந்த பாகிஸ்தாங்காரன்
 முதுகுக்குப் பின்னாடி நின்னுக்கிட்டு பேசிக்கிட்டு நிக்கிறான் சார்…”
தொலைபேசி இப்படி பயமுறுத்தும்,. அதை மனம் இறுகி  கீழே வைப்பது ஒரு சாதாரணமான காரியம் அல்ல. அது இவ்வளவு கடினமான ஒன்றாக மாறும் எனநான்  நினைத்துப் பார்த்ததில்லை.  அந்தத் தொலைபேசி உரையாடல்கள் எங்குஎப்படி முடிப்பதென தெரியாதபடி நீண்டுகொண்டே போயின
அடுத்த வினாடி இறக்கப் போகும் நபரின் கடைசி அழைப்பைப் போலவே ஒவ்வொரு அழைப்பும் இருந்ததால், தொலைபேசியை துண்டிப்பது, ஒருவரின் வாழ்வைத் துண்டிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
பின்னணியில் மக்கா மசூதியில் தொழுகை துவங்குவதற்கான பாங்கு சத்தம் மனதைக் கரைய வைக்கும் குரலில் ஒலித்தது. "அல்லாஹு அக்பர் அல்லாஹ்...
உலகம் முழுவதுமிருந்து தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிட்டு உம்ராவுக்கும் ஹஜ்ஜுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வரும் மெக்கா மசூதிதான் அது.
மீண்டும் மக்கா மசூதியில் தொழுகை துவங்குவதற்கான பாங்கு சத்தம் படிப்படியாக அலையலையாக மனித இனத்திற்கே அழைப்பு விட்டது. 
அவனுக்கு மற்றொரு காட்சி நினைவு வந்தது அப்போது. கோவில்பட்டியில் ஒரு கூரை வீட்டில் கண்கலங்கி நிற்கும் ஒரு இளம் தாயின் முகம். அவள் கையைப் பற்றிக்கொண்டு அவள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு தாய் முகத்தைப் பார்த்தபடி நிற்கும் ஒரு இளம்பெண்ணின் முகம்.
"ரெண்டு சின்னப் புள்ளைகள வச்சுக்கிட்டு நான் இங்கன தனியா கஸ்டப்படறேன்ஸ்கூல் பீஸ்கூட கட்ட முடியலஸ்கூல் போக வேண்டிய மூத்தவன் வீட்டுல விளையாடிக்கிட்டிருக்கான்விவரம் புரியாமஇவரு என்னடான்னா என்னக் கொல்ல வாராங்கன்னு போனுல அலறராறுஒண்ணு அவரு இங்கன வரணும்இல்ல நாங்க செத்துப் போவணும்... சொல்லச் சொல்ல தனது தாயின் கண்களிலிருந்து வழியும் கண்ணீரைத் துடைக்கிறாள் இளைய மகள்.
அவள் தனது கணவரைப் பார்த்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டனஹஜ் சென்ற யாரோ ஒரு கோவில்பட்டிக்காரர் தனது செல்போனில் எடுத்து வந்த தனது கணவரின் புகைப்படத்தை அவர் நம்ப மறுக்கிறார்அவர் குண்டா இருப்பாருஇதுல யாரோ ஒல்லியாமுகம் சப்பிப்போயி இருக்காங்கமூக்கு மட்டுந்தான் அவருதான்னு காட்டுது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார் 
ஃபக்கீர் மைதீனுக்கு ஒரே ஒரு பிரச்சனைதான்அவரைக் கொலை செய்ய பின்தொடர்ந்து வருபவர்களை விலகிச் செல்லுமாறு கூற வேண்டும்அவள் தனது கணவரைப் பார்த்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டனஹஜ் சென்ற யாரோ ஒரு கோவில்பட்டிக்காரர் தனது செல்போனில் எடுத்து வந்த தனது கணவரின் புகைப்படத்தை அவர் நம்ப மறுக்கிறார்அவர் குண்டா இருப்பாருஇதுல யாரோ ஒல்லியாமுகம் சப்பிப்போயி இருக்காங்கமூக்கு மட்டுந்தான் அவருதான்னு காட்டுது என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தாள்.
பக்கீர் மைதீன் போன்ற வேலை இழந்த பலருக்கும் அடைக்கலம்தஞ்சம் புகுந்தவர்கள் எப்படியாவது சொந்த ஊருக்குத் திரும்பிவிடத் துடிக்கும் போது ஃபக்கீர் மட்டும்  மெக்காவிலேயே நிரந்தரமாக வசித்துவிட விரும்புகிறார். தனக்குள் நிலைத்து நீங்க மறுக்கும் ஒரே ஒரு பயத்துடன். அவரைக்கொல்ல ஒருவர் மட்டுமல்ல. பலர் முயலும் மனதுக்குள் நிகழும்  போராட்டத்தில் பல சைத்தான்களை ஒரே நேரத்தில் கல்லெறிந்து விரட்ட முயன்று தோற்றுக்கொண்டிருந்தார்.
கோவில்பட்டியில் ஒரு ஹோட்டலில் கிளீனர் வேலை செய்த ஃபக்கீர் மைதீன் முதலில் சவூதியில் ஒரு சோப் தொழிற்சாலையில் சிறிது காலம் வேலை செய்தார்மிச்சம் பிடித்த 1 லட்ச ரூபாய் சவூதி வருவதற்கு ஏஜெண்டிற்கு கொடுத்த பணத்திற்குக்கூட போதவில்லைமுதலாளியால் பாஸ்போர்ட் பிடுங்கப்பட்டுவேலையை விட்டு விரட்டப்பட்ட ஃபக்கீர் இப்போது மெக்கா மசூதிக்குள் பிறர் செய்யும் உதவியில் தனது வாழ்வை ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
சொற்பமான சம்பளம் என்றாலும் சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்ந்துவிட்டு, சவூதி அரேபியாவில் அடிபட்டு, மிதிபட்டு பிச்சை எடுக்கும் நிலைமைக்கு ஆளாகிக்கொண்டிருப்பது பற்றிகூட அவருக்குப் பெரிதாக கவலை இல்லை. கொள்ள வருபவர்கள் .. இடைவிடாது அதற்கு முயன்றுகொண்டே இருப்பவர்கள் .இது தான் அவர் பிரச்சினை 
சோப் ஃபேக்டரி வேலையை ஏன் விட்டீங்க?
சவூதியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் அவலம் குறித்த கட்டுரைக்காக பாதிக்கப்பட்ட பலருடன் நடத்திய நேர்காணல்களில் ஒன்றில்தான் ஃபக்கீருடனான தொடர்பு ஏற்பட்டதுநான் வேலை செய்த பத்திரிகையில் அந்தக் கட்டுரை வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகும் ஃபக்கீரின் தொலைபேசி அழைப்பு தொடர்ந்துகொண்டிருந்ததுஅது அலுவலகத்திலும் பிரச்சனையாகத் துவங்கியிருந்ததுஅவரின் தொலைபேசி அழைப்புகள் அலுவலத்தில் பிறரிடமும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது.
அழைப்புகளை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி அலுவலகத்தில் ஆலோசனை கூறத் துவங்கினார்கள்.
அவரைப் பேசிக்கிட்டே இருக்க விடாதீங்கநீங்க நிறைய கேள்வி கேளுங்கஎன்ன சாப்பிட்டீங்கஎன்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க என்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி கேளுங்கஅதுவே ஒரு சைக்யாட்ரிக் ட்ரீட்மெண்ட் மாதிரி.
இன்னொருவர் கூறினார்.
ஒரு தடவ செமையா கத்திவிடுங்கதிஸ் இஸ் டூ மச்அவன் நம்மளை பைத்தியமாக்கிடுவான்.
ஆனால் அந்த இரண்டையும் என்னால் செய்ய முடியாதுஅவரை எங்கேஜ் பண்ணுவதில் எனக்கு உடன்பாடில்லை
அத்தகைய திறன்களோநேரமோ எனக்கில்லைஅவரைத் திட்டுவதிலோஅவமானப்படுத்துவதிலும் உடன்பாடில்லைஏற்கனவே மன நலம் பாதிக்கப்பட்ட அவரை இன்னும் ஆழமான மனச் சிதைவில் தள்ள நான் காரணமாகிவிடக்கூடாது.
நான் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் ..
அடுத்தவங்க சாப்பிட்ட எச்சி எலையை எல்லாம் எடுக்கச் சொன்னாங்க சார். மாட்டேன்னு சொன்னதுக்கு ரெண்டு மலையாளியை வச்சு அடிச்சுப்புட்டாங்க. என்னய அந்த மலையாளிங்கதான் இப்பவும் கொல பண்ண ஃபாலோ பண்ணறாங்க சார். கெடை க்கிற சாப்பாட்டை அவனுக புடுங்கித் திங்குறானுக. முழு வயிறு சாப்பிட்டு நாலுமாசமாகுது. கடைசியா குளிச்சு அதுக்கு மேல. சட்ட பூரா அழுக்கு, கிழிசல்…”
என்ன படிச்சிருக்கீங்க
நாலாப்பு வரை படிச்சிருக்கேன் சார். உங்களுக்குப் புரியல சார். என்னைய கொலை பண்ண வாராங்க சார். எப்பப் பாத்தாலும் போன்லயே பேசிக்கிட்டிருக்கியேன்னு அன்னைக்கு போனை பிடுங்கிக்கிட்டாங்க சார்
கோவில்பட்டியில ஹோட்டல் கிளீனர் வேலைல என்ன சம்பாத்தியம் கிடைச்சது
மாசம் நாலாயிரம் சார். உங்களுக்குப் புரியலை சார். உயிரக் கையில பிடிச்சுக்கிட்டு அழையுறேன் சார்.
இந்திய தூதரகத்துக்கு போங்க. நீங்க இந்தியா திரும்பி வர அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க
என்னால எம்போஸிக்கெல்லாம் போக முடியாது. மெக்காவ விட்டு வெளிய கால் வைச்சாலே என்ன கொன்னுபுடுவாங்க அந்த முத்தவா (சவூதி மத போலீஸ்) வேற இங்குனுக்கே சுத்திக்கிட்டிருக்காங்க. அடிக்கிறாய்ங்க …”
நீங்க சொந்த நாட்டுக்குத் திரும்ப விரும்பலையா? எம்பஸிக்குப் போகாம உங்க பிரச்சனை எப்படி தீரும்?"
உங்களுக்குப் புரியலை சார். இங்க என்னயக் கொல்ல காத்துக்கிட்டிருக்காங்க. ஒண்ணுக்கு போகும் போது தூக்கி வண்டியில போட்டுடணும்னு பேசிக்கிட்டே பின்னாடியே வாராணுக சார். என் பொண்டாட்டிகூட இதுக்கு உடந்த. காசு கொடுத்து என்னக் குளோஸ் பண்ண ஆள் ஏற்பாடு பண்ணியிருக்கா சார். அவள விசாரிச்சா எல்லா உண்மையும் தெரியும்னு எஸ்.பி சார்கிட்டகூட சொல்லிட்டேன். யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க
ஹலோ, உங்களை சவூதியிலிருந்து மீட்டுக் கொண்டு வரத்தான் உங்க மனைவி கந்து வட்டிக்கு பணம் வாங்கி ஏஜெண்டுகிட்ட கொடுத்திருக்காங்க..
உங்களுக்குப் புரியலை சார். அவங்கெல்லாம் (ஏஜெண்ட்) உடந்த. என்னை இங்கேயே போட்டுத் தள்ளணும்னு முடிவெடுத்திட்டாங்க. பாங்கு சத்தம் கேக்குது சார். வக்கிறேன்…””
மலையாளிகள், முத்தவாக்கள், பாகிஸ்தானியர்கள், சில சமயம் தமிழர்கள் என யாரைப் பார்த்தாலும் பயம். அனைவருமே தன்னைக் கடத்திக் கொண்டு போய் கொன்றுவிடுவார்கள் என்று அவருக்கு அச்சம். வாரத்தில் ஒரு டஜன் முறையாவது தொலைபேசி அழைப்பு அழைத்துவிடும். ஒவ்வொரு முறையும் ஒரு பதைபதைப்புடன்தான் தொலைபேசி உரையாடல் ஆரம்பிக்கும். உரையாடல் முழுவதும் அவரது உயிருக்கான அச்சுறுத்தல் பற்றித்தான் இருக்கும்.
ஃபக்கீர் பெரிதாக எந்த உதவியும் கேட்கவில்லை. தான் சொல்வது உண்மை என்பதை ஒருவர் நம்ப வேண்டும். நம்பி கேட்பவரின் காதுகள் மட்டும் அவருக்குப் போதுமானது. அவராகப் பேசுவார், அவராக துண்டித்துவிடுவார். அரிதாக கேட்கிற உதவிகள், செய்யும்படியானவையாக இருக்காது.
ஒரு முறை இந்திய ஜனாதிபதியின் முகவரியைக் கேட்டார். மற்றொரு முறை இந்து முன்னணி அலுவலக எண். மாவட்ட கலெக்டர், எஸ்.பியின் அந்தரங்க செல்போன் எண்ணையெல்லாம் கண்டுபிடித்து, விடாமல் பேசியவர், ஒரு நாள் இந்திய ஜனாதிபதியையும் தொலைபேசியில் பிடித்துவிடுவார். இந்த அம்சத்தில் அவரின் தர்க்கம் சரியாக வேலை செய்தது.
இந்த ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை எட்டு பேருக்கு எழுதிப் போடாவிட்டால் ரத்தம் கக்கிச் சாவீர்கள் என்ற அஞ்சல் அட்டை பாணியில், இந்த தொலைபேசி தொல்லையை வேறு பக்கமாவது திருப்பிவிட்டுவிடலாமா என்று நினைத்தேன்
ஃபக்கீரிடம் இதைப் போல மாட்டியவர்களும் அதையே செய்திருந்தார்கள். வேறொரு பத்திரிகையாளர் தான் தப்பிப்பதற்காக முதலில் கலெக்டரின் அந்தரங்க செல்பேசி எண்ணைக் கொடுத்திருந்தார்,
அடுத்து எஸ்.பியின் எண், அடுத்து என்னுடைய அலுவலக நேரடி தரைவழி தொலைபேசி எண் 
அதே போல நானும் ஏதாவது செய்யலாமா என நினைத்தேன். கடைசியில் அதைச் செய்தேன்.
ஃபக்கீர் பேசிக்கொண்டே இருக்கும் போது, தரைவழி இணைப்பு தொலைபேசியின் ரிசீவரை மேசையின் மீது வைத்துவிடுவேன். சில நிமிடங்கள் ஓடியிருக்கும். ஆனால் எதிர்முனையில் ஃபக்கீர் பேசிக்கொண்டே இருப்பார். தான் சொல்ல வேண்டியதை சொல்லி முடித்ததும் அவராகவே இணைப்பைத் துண்டித்துவிடுவார்
சில தருணங்கள் யாரும் கேட்காத ஃபோனில் அவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசியிருக்கிறார். குரலில் ஏற்ற இறக்கங்களுடன் பயமும் கோபமும் மாறி மாறி வரும்.
ஒரு முறை ஃபோனை எடுத்தவுடன் விரக்தியும் கோபமும் கலந்த குரலில் கூறினார்.
சார், அடுத்த முறை ஃபோன் வரலைனா செத்துட்டேன்னு நினைச்சுக்குங்க சார்…”
எனக்குத் தாங்க முடியவில்லை 
"ஃபக்கீர்.. நீங்கள் இருப்பது மெக்கா. உங்களை அல்லாஹ் அப்படி நிர்க்கதியாகச் சாகவிடமாட்டார்.நம்புங்கள். அதோ கேட்கிறது பாருங்கள் பாங்கு ஒலி..:" என்றேன்.
"அல்லாஹு அக்பர் அல்லாஹ்...அல்லாஹு அக்பர் அல்லாஹ்...” நிஜமாகவே அந்த பாங்கு படிப்படியாக அலையலையாக மனித இனத்திற்கே விட்ட அழைப்பாக எனக்குத் தோன்றியது 
ஃபக்கீர் அதை நம்பிச் சற்றாவது தேறுதல் பெறவேண்டும் என்ற எண்ணம் கூடவே எழுந்தது 
ஒரு பிரார்த்தனை போல .