Sunday 31 August 2014

தமிழ் இனி மெல்ல..:பாகம் 3:திருப்பணியா, மரபுப் பெருமையா?

                         தமிழ் இனி மெல்ல..[தொடர்கிறது]
                                      
                                  
                     அரிசோனா மகாதேவன் 
                           பாகம் 3
              திருப்பணியா, மரபுப் பெருமையா?

மூன்றாம் பகுதியின் முக்கிய இடங்களும், கதா பாத்திரங்களும்
இடங்கள்: 
சோழப் பேரரசு: தென்னிந்தியாவில் துங்கபத்திரை நதியிலிருந்து கலிங்கம் (ஒரிசா) வரை வடக்கிலும், குமரி வரை தெற்கிலும், இலங்கையும் அடங்கியது வங்கம். கடாரம் (மலாயா), ஸ்ரீவிஜயம் (சுமத்ரா) திரை செலுத்தி வந்தன. தலைநகர்: கங்கைகொண்ட சோழபுரம்.
பாண்டிய நாடு: வெள்ளாற்றுக்குத் தெற்கிலிருந்து குமரி வரையும், வங்கக் கடலிலிருந்து, மேற்குத் தொடர்ச்சி மலை வரையிலான அரசு; சோழப் பேரரசுக்குக் கட்டுப் பட்டது தலைநகர்: மதுரை
சேரநாடு: தற்பொழுதைய கேரளா. சோழப் பேரரசுக்குக் கட்டுப் பட்டது. தலைநகர்: மகோதயபுரம்
வேங்கை நாடு: வெங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசுக்குக் கட்டுப் பட்டது.
வட இலங்கை: சோழப் பேரரசால் நேரடியாக ஆளப்பட்டது. அனுராதபுரம், பொலனருவை போன்ற நகரங்களை உள்ளடக்கியது.
ரோகணம்: இலங்கைச் சிங்கள மன்னனால் ஆளப்பட்ட தென் இலங்கைப் பகுதி.
கருநாடு:இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டைய கர்நாடக மாநிலம்: சோழப் பேரரசுக்குக் கட்டுப் பட்டது.
    அரச பரம்பரைகளும், குலங்களும்
                                    சோழ அரச பரம்பரை
இராஜேந்திர சோழன்: சோழப் பேரரசன். இயற்பெயர் மதுராந்தகன். பட்டப்பெயர். கோப்பரகேசரி
திரிபுவன மகாதேவி: இராஜேந்திரனின் மூத்த மனைவி. பட்டத்து அரசி
பஞ்சவன் மகாதேவி: இராஜேந்திரனின் இரண்டாம் மனைவி
வீர மகாதேவி: இராஜேந்திரனின் மூன்றாம் மனைவி
இராஜாதிராஜன்: இராஜேந்திரன், திரிபுவன மகாதேவியின் மூத்த மகன்.
இராஜேந்திர தேவன்: இராஜேந்திரன், திரிபுவன மகாதேவியின் இரண்டாம் மகன்.
மதுராந்தகி: இராஜேந்திர தேவனின் மகள்; இராஜேந்திர
நரேந்திரனின்  மனைவி.
வீரன் (வீர ராஜேந்திரன்) : இராஜேந்திரன், வீர மகாதேவியின் மகன்
அதிராஜேந்திரன்: வீரராஜேந்திரனின் மகன். விஜயாலய சோழ வம்சத்தின் கடைசி ஆண்மகன்
அருள்மொழி நங்கை: இராஜேந்திரன், பஞ்சவன்சமகாதேவியின் மகள், சிவசங்கர சிவாச்சாரியின் மனைவி
அம்மங்கை ;இராஜேந்திரன், திரிபுவன மகாதேவியின் மகள், இராஜராஜ நரேந்திரனின் மனைவி.
ஆளவந்தான்: இராஜேந்திரனுக்கும், வெளிர் அரசர் சேதுராயரின் மகளுக்கும் பிறந்தவன்
கீழைச் சாளுக்கிய அரச பரம்பரை
விமலாதித்தன்: கீழைச் சாளுக்கிய அரசன்
குந்தவி: விமலாதித்தனின் பட்டத்து அரசி, இராஜராஜ சோழனின் மகள். இராஜேந்திரனின் தங்கை
இராஜராஜ நரேந்திரன்: விமலாதித்தன்,  குந்தவியின் மகன்.
அம்மங்கை: இராஜராஜ நரேந்திரனின் மனைவி.
இராஜராஜ நரேந்திரன்: இராஜராஜ நரேந்திரன். அம்மங்கையின் மகன். பட்டப் பெயர்: முதலாம் குலோத்துங்கன்: முதல் சாளுக்கிய சோழன்
விஜயாதித்தன்: விமலாதித்தனுக்கும், இரண்டாம் மனைவிக்கும் பிறந்த மகன்.
                                             பாண்டிய அரச பரம்பரை
விக்கிரம பாண்டியன்:பாண்டிய மன்னன்.

                                            சேர அரசர்கள்
பாஸ்கர ரவி வர்மன்: வட சேர நாட்டு அரசன். மகோதயபுரத்திலிருந்து (திரிச்சூர்) அரசாண்டான்.
                                   பிரம்மராயர் சிவாச்சாரி குலம்
சிவசங்கர சிவாச்சாரி (பிரம்மராயர்) : தமிழ்த் திருப்பணி ஆலோசகர், திருமந்திர ஓலைநாயகம். இராஜேந்திரனின் தலைமைப் படைத்தலைவர். பட்டப்பெயர்: இராஜேந்திர சோழ பிரம்மராயர். முதல் பகுதியில் வந்த ஈஸ்வரனின் மூதாதை.
சிவாச்சாரியின் முதல் மனைவி: பெயர் கொடுக்கப்படவில்லை.
அருள்மொழி நங்கை: சிவாச்சாரியின் இரண்டாம் மனைவி. இராஜேந்திரனின் மகள்.
சிவகாமி: சிவாச்சாரி. அவன் முதல் மனைவியின் மகள்.
மறையன் அருள்மொழி: சிவாச்சாரி. அருள்மொழி நங்கையின் மகன்
சிவசுப்பிரமணியன்: சிவகாமியின் மகன்
வெற்றிமாறன் குலம்
வெற்றி வீரன்: விக்கிரம பாண்டியனின் முதல் மெய்காப்பாளன்
காளையப்பன்: திருமாறனின் மகன்; விக்கிரம பாண்டியனின் மெய்க் காப்பாளன்
முருகேசன்: வெற்றி மாறனின் பேரன். வெற்றிவீரனின் தம்பி; ரோகணத்தில் (தென் இலங்கை) மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் பொக்கிஷத்தின் காவலன்
வள்ளி: சொக்கனின் மனைவி
சொக்கன்: முருகேசனின் மகன்
மீனாட்சி: சொக்கனின் மனைவி
முத்துவீரப்பன்: சொக்கனின் மகன்
நிலவுமொழி குலம்
நிலவுமொழி: குலத் தலைவி; முதல் பகுதியில் வரும் காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதனின் குல முதல்வி.
பொன்னம்பல ஓதுவார்: நிலவுமொழியின் தந்தை.
காடவன்: நிலவுமொழியின் கணவன். வேளிர் இளவரசன்
நப்பின்னை: காடவன். நிலவுமொழியின் மகள்
சந்திரை: காடவனின் இரண்டாம் மனைவி
சேந்தரையன்: நப்பின்னையின் கணவன்
அழகிய மணவாளினி: நப்பின்னை சேந்தராயனின் மகள். கருணாகரத் தொண்டைமானின் மனைவி
மணவாள நம்பி: நப்பின்னை, சேந்தராயனின் மகன்.
                                       சேதுராயர் பரம்பரை
சேதுராயர்: வேளிர் அரசர்
காடவர்: சேதுராயரின் பேரன்; நிலவுமொழியின் கணவன்
தொண்டைமான் குலம்
ஈராயிரவன் பல்லவராயர்: இராஜராஜ சோழனின் மையப் படைத்தலைவர். பல்லவ அரச பரம்பரை.
கருணாகரத் தொண்டைமான்: ஈராயிரவன் பல்லவராயரின் பேரன். பல்லவ இளவரசன்
                                        வங்க மன்னன் பரம்பரை
மகிபாலன்: வங்க மன்னன்
மினோத்தி: மகிபாலனின் மகள்
                               பண்டைய நகர்களின் பெயர்கள்
திருமயிலை: மயிலாப்பூர், சென்னையின் ஒரு பகுதி
தில்லை: சிதம்பரம்
நெல்லை: திருநெல்வேலி
பொன்னமராவதி:வட பாண்டிய நாட்டின் தலை நகர். தற்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது
பழையாறை:சோழர்களின் பழைய தலைநகரம் இப்பொழுது ஒரு சிற்றூராக உள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம்:சோழப் பேரரசின் தலைநகர். தற்பொழுது ஒரு சிற்றூராக இருக்கிறது.
இராஜமகேந்திரபுரம்: வேங்கை நாட்டின் புதிய தலைநகர். தற்பொழுதைய ராஜமுந்திரி, ஆந்திரா
விக்கிரம சிம்மபுரி:நெல்லூர், ஆந்திரா

                                         இடைச்செருகல் 2

                                            ஈஸ்வரனின் வீடு
                              தாது, தை 1 - ஜனவரி 15,  2416

“லட்சியம் நிறைவேறிச்சா? ராஜராஜர் செத்துப் போனதுக்கப்பறம் என்ன ஆச்சு? ராஜராஜருக்கு அப்புறம் ராஜேந்திர மகாராஜா தொடர்ந்து திருப்பணி வேலை பார்த்தாரா? பாண்டியர்கள் தொடர்ந்து கஷ்டப்படுத்தினாங்களா, இல்லே கஷ்டப்பட்டாங்களா?” என்று கேள்வி மேல் கேள்வியாகத் தொடுக்கிறான் ஏகாம்பரநாதன்.

“பழய காலத் தமிழர்களுக்கு இவ்வளவு பெரிய ராஜ்ஜியம் இருந்துச்சா? அவங்களை யாரும் கட்டி ஆளலயா? அப்புறம் எப்படி நம்ம மாதிரி எடுபிடி ஆனாங்க?” கேள்வி பிறக்கிறது அழகேசனிடமிருந்து. “பெரிசா ராசாங்கம் பண்ணின நாமா இப்படி அடிமையா ஆயிட்டோம்?” அவனது குரலில் வியப்பும்,  நம்பிக்கை இன்மையும்,  பச்சாத்தாபமும் கலந்திருக்கிறது.
“நிலவுமொழி என்ன ஆனா? தன்னோட பொண்ணு மாதிரி பாத்துக்கறேன்னு ராஜேந்திர மகாராஜா சொன்னாரே? அவளை நல்லபடியா ஆக்கறேன்னு சிவாச்சாரியரும் அவ அப்பாவுக்கு வாக்கு கொடுத்திருந்தாரே? அதெல்லாம் என்ன ஆச்சு?” ஆவலும், கவலையும் தோய்ந்திருக்கிறது காமாட்சியின் குரலில்.

“இவ்வளவு பவர்ஃபுல்லா,  சக்தியோடவா அந்தக் காலத்து தமிழ் ராஜாக்க இருந்தாங்க? பின்ன எப்படி இங்கே தமிழ் ராஜாக்க இல்லாம போனாங்க?” நிமிஷா கேட்கிறாள்.

“நிமிசா?” காமாட்சி அவள் பக்கம் திரும்பிப் பேச ஆரம்பிக்கிறாள்.
நிமிசாம்மா என்று கூப்பிடுவதை அவள் நிறுத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருக்கிறது. தங்களுடன் சேர்ந்து அவள் ஒன்றாக வாழ ஆரம்பித்ததிலிருந்து நிமிஷாவைத் தன் தங்கையாகவே கருதி வருகிறாள். நிலவுமொழியின் வழித் தோன்றலான அவள் நிமிஷாவுக்குத் தமிழ் பேச மட்டுமல்லாது, எழுதவும் கற்றுக் கொடுத்துவிட்டிருக்கிறாள்.

“நிமிசா, நீதான், பள்ளிக் கூடத்தில் சரித்திரப் பாடம் படிச்சியே, அதுல இதப் பத்தி ஒண்ணும் சொல்லலியா?” என்று கேட்கிறாள்.

“காமாச்சி அக்கா, பாரதத்தின் பழைய சரித்திரம் படிச்சவங்களுக்கு அது தெரியுமோ என்னவோ, எங்களுக்கு அதைப் பத்தி எதுவும் சொல்லித் தரலை. பொது ஆண்டு 2200லேந்துதான் சரித்திரம் சொல்லிக் கொடுத்தாங்க. பாரதம் எப்படி ஒரு பெரிய வல்லரசாச்சு, சீனாவும் பாரதமும் எப்படி ஒண்ணா உழைச்சது அப்படீன்னுதான் படிச்சேன். மத்தப்படி யாருக்கு என்ன தெரியும்?” உதட்டைப் பிதுக்குகிறாள் நிமிஷா.

“நிமிஷா சொல்றதுதான் உண்மையா இருக்கணும், காமாட்சி! நாம எடுபிடியாவே வளர்க்கப் பட்டோம். நம்ம அப்பா, அம்மா தமிழ் கற்றுத் தராவிட்டால் எழுதப் படிக்கக் கூடத் தெரியாத தற்குறியாத்தான் வளர்ந்திருப்போம், ஒரு அதிசயம் பாத்தியா! நீ, நான், அளகேசன் மூணு இடத்துலேந்து வந்திருந்தாலும், நம்ம மூணு போரோட பெற்றோரும் நமக்கு தமிழ் எழுதப் படிக்கச் சொல்லி கொடுத்திருக்காங்களே! அதை நினைச்சுப் பாத்தா என்னால நம்பவே முடியலை!”  ஈஸ்வரனின் குரலில் வியப்பு இருக்கிறது.

“ஆமாம் ஈஸ்வரா, எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஏதோ முக்கியமான விசயத்துக்காகத்தான் நாம ஒண்ணு சேந்திருக்கோம்னு நினக்கறேன்.” என்கிறான் அழகேசன். அவனது கை வழக்கப்படி மீசையை நீவி விடுகிறது.

“அது போகட்டும். எங்கோ பெங்கால்லேந்து எங்க தாத்தா பாட்டி தக்கண் கண்ட்டுக்கு என் அம்மாவோட வந்தாங்களாம். எங்கம்மாவும் உங்கள் மாதிரி இருக்கற எல்லாரையும் எங்களுக்கு வேலை செய்யறதுக்காவே பொறந்தவங்க அப்படீன்னு நிறையத் தடவை சொல்லி வளத்திருந்தாங்க. நான் ஒங்களோட சேந்து இருப்பேன், தமிழ் பேசறவரைக் கல்யாணம் செய்துப்பேன், இப்படி ஒங்ககூட தமிழிலே பேசிக்கிட்டு இருப்பேன்னு ஆறு வருஷம் முன்னாலவரை நினச்சுக்கூட பாத்திருக்க மாட்டேன். ஏதோ விதிதான் நம்ம எல்லாரையும் சேத்து வச்சிருக்குன்னு நினைக்கறேன்.” என்று அவர்களுடைய உரையாடலில் கலந்து கொள்கிறாள் நிமிஷா.

அவள் சொல்வதில் இருந்த பழைய உண்மை கசப்பான ஒன்றாக இருந்தாலும், அவள் மனதில் அப்பொழுது தான் உயர்மட்டத்தைச் சேர்ந்தவள், அவர்கள் கீழ்மட்டத்தில் இருந்தவர்கள் என்ற நினைப்பு அணுவளவும் இல்லை என்றும், அவள் அவர்களில் ஒருவராகவே ஆகிவிட்டாள் என்றும் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்ததால் யாரும் 
அவள் பேச்சைத் தவறாகவே கருதவில்லை.

“நீ சொல்றது உண்மைதான், நிமிசாக்கா. உன்ன மாதிரி எனக்கு இன்னொரு அக்கா,  ஈஸ்வரன் மாதிரி ஒரு அண்ணா, அழகேசன் மாதிரி ஒரு பெரியண்ணா கிடைப்பாங்கன்னு நானும் நினைக்கவே இல்லை.” என்று குதூகலத்துடன் கூறுகிறான் ஏகாம்பரநாதன். அவனுக்கு எல்லாமே மிகவும் மகிழ்வாகத்தான் இருக்கிறது.

ஈஸ்வரனின் கழுத்தில் தொங்கிய சங்கிலியை உற்றுக் கவனித்த ஏகாம்பரநாதன் திடுமென்று,  “ஈஸ்வரண்ணா,  உங்க கழுத்தில தொங்க சங்கிலியை நான் பார்க்கலாமா?” என்று கேட்கிறான். இதென்ன திடுமென்று கேட்கிறான் என்று நினைத்த ஈஸ்வரன், “இதோ!” என்று சங்கிலியைக் கழட்டி ஏகாம்பரநாதனிடம் கொடுக்கிறான்.

சங்கிலியில் தொங்கும் பதக்கத்தை தடவித் தடவி உற்றுப் பார்க்கிறான் ஏகாம்பரநாதன். தாவும் புலி, மீன், வில்-அம்புடன் சில எழுத்துக்கள் காணப் படுகின்றன. “ஈஸ்வரண்ணா,  இதில் ஏதோ எழுத்துக்கள் இருக்கு. ஆனா,  அதையெல்லாம் ஏதோ அழுக்கு மாதிரி மறைச்சுக்கிட்டிருக்கே?” என்று சங்கிலியை அவனிடமே திருப்பிக்கொடுக்கிறான்.

“இது பரம்பரைச் சொத்து. நானும் அந்த எழுத்தை மறைச்சுக்கிட்டிருக்கிற அழுக்கை நீக்க எதெதெல்லாமோ போட்டுத் தேச்சுப் பார்த்தேன், முடியலை.” என்று பதில் சொல்கிறான் ஈஸ்வரன். அவனிடமிருந்து சங்கிலியை வாங்கிப் பார்த்த அழகேசன், “புலி, மீன், வில்-அம்பு இந்த மூணும் எதைக் காட்டுது?” என்று எல்லோரும் கேட்கும்படி தனக்குத்தானே கேட்டுக் கொள்கிறான்.
“அழகேசண்ணா, உங்க வலது புஜத்திலே ஏதோ கட்டியிருக்கீங்களே, அது என்ன?” ஏகாம்பரநாதனிடமிருந்து ஒரு கேள்வி பிறக்கிறது. ஒரு பெரிய வெள்ளித் தாயத்து கறுப்புக் கயிற்றால் கட்டப் பட்டிருக்கிறது.

அதைத் தடவிக் கொண்ட அழகேசன், “ஏகாம்பரம், இதுவும் ஈஸ்வரனோட சங்கிலி மாதிரி எங்க பரம்பரைச் சொத்துதான். எங்க பாட்டன், முப்பாட்டன் கட்டிக்கிட்டிருந்த தாயத்து இது. மூத்த பசங்களுக்கு இரு வருமாம். எங்க அப்பா படுத்த படுக்கையாய் இருக்கறபோது இதைக் கழட்டி, என்கிட்ட கொடுத்து, “அழகு, இதைக் கட்டிக்க. இது எப்பவும் உன் புஜத்துலே இருக்கணும். உங்காலம் முடியறப்போ உன் மூத்த பையனுக்குக் கொடு, அப்படீன்னு சொல்லிட்டுப் போய்ச் சேந்தாரு.” என்று பதில் சொல்கிறான்.
அவனருகில் சென்று அந்தத் தாயத்தை உற்றுப் பார்க்கிறான் ஏகாம்பரநாதன். ஒரு மீனும், அதற்குக் கீழே இரண்டு வாள்கள் குறுக்காகவும் புடைப்புப் படமாக வடிக்கப்பட்டு இருக்கின்றன. 

அதைப் பார்த்த ஏகாம்பரநாதன், “அழகண்ணா, இந்த மீனுக்கும், கத்திகளுக்கும் என்னண்ணா அர்த்தம்?” என்று கேட்கிறான். உதட்டைப் பிதுக்குகிறான் அழகேசன்.

“ஒரு ஒத்துமை பார்த்தீங்களா? உங்க ரெண்டு பேரும் போட்டுக்கிட்டு இருக்கறதுல்ல பொதுவா மீன் இருக்கு பாத்தீங்களா?” என்று அவர்களைப் பார்த்துச் சொல்கிறான், இல்லை, வினவுகிறான் ஏகாம்பரநாதன்.

இருவருக்கும் மூளையில் ஏதோ பளிச்சிடுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர்.

ஜன்னல் வழியாக காலைக் கதிர்கள் அவர்கள் மேல் அடிக்க ஆரம்பிக்கிறது. அனைவரின் கண்களும் இரவு முழுவதும் விழித்திருந்ததால் சிவந்து போயிருக்கின்றன. அதிலும் ஈஸ்வரனின் கண்கள் கொவ்வைப் பழமாகச் சிவந்திருக்கின்றன.

“இன்னுமா நீங்கள் தூங்கலை? விடிய ஆரம்பித்து விட்டதே! இரவு முழுக்க என்ன செஞ்சீங்க?!” என்று கேட்டபடி அங்கு வருகிறார் ஈஸ்வரனின் தந்தை சங்கரன்.

“கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவில் குழல்ல இருந்த சுருளைப் படிச்சுக்கிட்டே இருந்ததுலே பொழுது போயிட்டது அப்பா!” என்று பதில் சொல்கிறான் ஈஸ்வரன்.

“முழுசையும் படிச்சு முடிச்சுட்டீங்களா?” என்று அவர் கேட்கவே, “இல்லையப்பா, இன்னும் நிறைய இருக்கு. நம்ம தமிழ்நாட்டை அரசாண்ட ராஜராஜ சோழச் சக்ரவர்த்தியைப் பத்தியும், அவர் ஆரம்பிச்சு வச்ச தமிழ்த் திருப்பணியைப் பத்தியும் அதிலே எழுதியிருந்தது. அவர் காலம் வரைக்கும் எழுதியிருந்ததைப் படிக்கவே ஒரு ராத்திரி முழுக்க ஆயிட்டது அப்பா!” என்று பதில் சொல்கிறான் ஈஸ்வரன்.

“அப்படியா! போய் பல்லை விளக்கிட்டு வாங்க. மத்த வேலையைக் கவனிக்கலாம். வயல் வேலை நிறையக் காத்துக் கிடக்கு. ராவு முழுக்க கண்முழிச்சா எப்படி வேலை செய்யறது?” என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறார். அனைவரும் மெல்லக் கலைந்து தத்தம் வேலையைக் கவனிக்கச் செல்கிறார்கள்.

சங்கரன் மனதில் ஏதேதோ எண்ணங்கள் படர்கின்றன. ஈஸ்வரன் இரவு முழுவதும் படித்ததை அவரும் படுத்தவாறு கேட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறார். அவர்கள் கையில் இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷம் கிடைத்திருப்பது ஏதோ ஒரு முக்கியமான விஷயத்திற்குத்தான் என்று உள்மனம் அவருக்குச் சொல்கிறது. எத்தனையோ நாள்கள் தங்கள் நிலை இப்படி ஆனது ஏன் என்று மனதிற்குள் அழுதிருக்கிறார். அதற்கு விடை இச் சுருளில் இருக்கக்கூடும் என்று அவர் மனதில் படுகிறது.

தமிழைக் கற்றுக் கொள்ள வேண்டும், அதிலும் முக்கியமாகக் கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்களையும் மறக்கக்கூடாது என்று அவரது தந்தை அவருக்குக் கற்றுக் கொடுத்ததும், அதைத் தான் ஈஸ்வரனுக்குக் கற்றுக் கொடுத்ததும், இந்தச் சுருளில் உள்ளதைத் தெரிந்து கொள்ளத்தானோ என்றும் படுகிறது. தமிழ் அறிவு உள்ள மூன்று குடும்பத்தினர் ஒன்று சேர்ந்ததும் தமிழ் இனத்திற்கு விடிவைக் கொண்டு வருவதற்காகவோ என்று நினைத்துப் பார்க்கிறார். ஆனால் தமிழே தெரியாத ஒரு பெண் தனக்கு மருமகளாக வந்து தமிழறிவு பெற்றதை நினைத்துப் பார்த்தாலும் அவருக்கு மலைப்பாக இருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் கனவில் கூட அவரால் கற்பனை செய்து பார்க்க இயலாத ஒன்று, ஈஸ்வரன்-நிமிஷாவின் திருமணம்.

“ஈஸ்வரா, காப்பாற்று!” என்று சிவபெருமானை மனதில் துதித்தவாறு வயலை நோக்கி நடக்கிறார் சங்கரன்.

அன்றைய வேலைகளை முடித்துக் கொண்டு இரவு உணவை உண்டபின் தங்கச் சுருள் உள்ள உருளையைக் கையில் எடுக்கிறான் ஈஸ்வரன். அவனைத் தடுத்த சங்கரன், “ஈஸ்வரா, நேத்திக்குத்தான் நீங்க யாரும் தூங்கவே இல்லை. ரெண்டு நாள் வயல் வேலை முடியட்டும். ராத்திரி முழுக்க கண் முழிக்காம, பகல்லே படியுங்க!” என்று சொல்கிறார். அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.[தொடரும்]
 

என்னால் ஒரு நல்ல காரியம்

கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 

                                                                       

அன்றாடம் ஒரு பார்வை 

என்னால்  ஒரு நல்ல காரியம்

திடீரென்று ஒரு நாள்  அவளை நான் சாலையில் சந்தித்தேன். அது முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டாள் அவள் கண்கள் என் கன்னங்களில் ஏதோ ஆறுதல் வேண்டி ஓய்வெடுத்தது போல் பதிந்தன. அவற்றிலிருந்து கண்ணீரின் ஈரம் என் கன்னத்தில் பட்டு நான் அவள் முகத்தை நிமிர்த்தினேன். என் கண்களைச் சந்திக்கக் கூச்சப்பட்டு அவளது இமைகள் தானதன. என் கவிதை உள்ளம் கண்ணிமைகளின் நுனியில் கோர்த்து நின்ற கண்ணீர்த்துளிகளைக் கண்டு மூங்கிலை மேலே தூங்கும் பனி நீரே என்று தாலாட்டத் தொடங்கியது 

ச்சே! தோழி அழுகிறாள். இந்த நேரத்தில் என்ன கவிதை என்று என் மண்டையில் ஒரு அடி விழுந்தது.  சாலை என்பதையும் மறந்து கட்டிக்கொண்டு அழுதவளைத்  தேற்ற வழி இன்றித்  தவித்தேன்.

அவள்  குடும்பப்பாங்கான பெண். நல்லவள். மாநிறம். நீண்ட கூந்தல்.எனக்கு மிகவும் பிடித்தது அவளது அழகிய நீண்ட கூந்தல் பெண்ணுக்குப் பெண்ணே கண்டு பொறாமைப்படும் கூந்தல் அது.. பேச்சிலேயே ஒரு மரியாதையும் கண்ணியமும் தெரியும். பிறருக்கு எப்போதும் உதவும் மனப்பாங்கு உடையவள். தற்போது பொதுப்பணித்துறையில்  பணியாற்றி வருகிறாள்.

அவள் கதையை நான் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தேன். அழுவதாக இருந்தால் அவள் என்னிடம் வந்து தான் அழுவாள். சிரிப்பதும் அப்படியே.என்னிடம் தான்.

அவளைக்  காதலிப்பதாகக் கூறியவர் பட்டியலை வரிசையைக் கூறிவிட்டு என்னிடம் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள். 

"இதுலே எவனையாவது பிக் அப் பண்ணிக்கிறது தானேடி!" என்றேன் ஒருமுறை .

" பெத்துப் பாடுபட்டு வளர்த்து நல்ல வரன் பார்க்கணும்னு ஜோசியர் களையும் கல்யாண ப்ரோக்கர்களையும் தேடி அலையிற என் அப்பா அம்மா நெஞ்சிலே இடி விழட்டுங்கிறியா ?"

அந்த லாஜிக் என் மனசைத் தொட்டுவிட்டது. இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தியா? வியந்தேன் மனசிற்குள்.

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்வேன் என்ற அவள் உறுதி நிலைத்தது. பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை ஏற்பாடு செய்தனர். மாப்பிள்ளை ஆசிரியர் உத்தியோத்திற்கு படித்திருந்தார். விரைவில் வேலை வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் பெண் தர ஒப்புக்கொண்டார்கள். 

இந்த மாப்பிள்ளையை என் சிநேகிதிக்கு ஏனோ பிடிக்கவில்லை. வேறு இடம் பார்க்கலாம் என்று வாய்விட்டு சொல்லி விலக்கப் பார்த்தாள். அவளுக்கு அடுத்து ஒரு  தங்கை. அவளுக்குத்  திருமணம் செய்ய வேண்டும் என்று காரணத்தைச்  சொல்லி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர்.


திருமணமும் வெகு ஆடம்பரமாக அதிக செலவுகளோடு நடந்து முடிந்தது. மாப்பிள்ளை வீட்டில் கேட்ட அத்தனை சீர்களும் கொடுத்தார்கள். தங்கள் பெண் எந்த குறையும் இன்றி அந்த வீட்டில் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்.

முதலிரவு அன்று அருகில் வந்து நின்ற மணமகன் அவள் தோளைத் தொட்டு  வேறு பெண்ணை காதலிப்பதாகவும், குடும்ப நிர்ப்பந்தத்திற்காக அவளை மணந்துக்கொண்டதாகவும் கூறி இருக்கிறான். மனைவி என்ற அந்தஸ்த்தை தவிர வேறு எந்த சுகமும் உனக்கு கிடைக்காது என்றும் கூறியிருக்கிறான்.

செய்வதறியாது திகைத்த அவள் தங்கையின் திருமணத்தை மனதில் வைத்துக்  கொண்டு உடனே வெளியேறிவிடாமல் அங்கே இருக்க முடிவெடுத்திருக்கிறாள். ஆனால் அவள் எதிரில் செல்போனில் தன் காதலியோடு பேசுவதும், போனில்  அந்தக்  காதலிக்கு முத்தம் கொடுப்பதுமாக இருந்திருக்கிறான். 

தங்கையின் திருமணம் முடிந்தது. மேலும் மன உளைச்சல் தாங்காமல் அவள் அவனை விட்டு வந்து விட்டாள்.

"அவனை விட்டு வந்துவிட்டாயே! விவாக ரத்து பெற்றாயா?"

" வாங்கிக்கொண்டேன்!"

"அப்புறம் என்ன? வேறு பொருத்தமான ஒருவனைத் திருமணம் செய்துகொள் "

" அப்படி எவனும் கிடைக்கவில்லை. வருகிறவன் எல்லாம் இரண்டு பிள்ளை மூன்று பிள்ளை கேஸ்கள். நான் கன்னி கழியாதவள் என்று நம்பத்தயாராய் இல்லாதவர்கள். எந்தப் பெற்றோருக்காக நான் காதல் கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தேனோ அவர்களே இரண்டாந்தாரமாக எப்படியோ வீட்டை விட்டு தொலைந்து தங்கள் சுமை தீர்ந்தால் சரி என்ற மனப்போக்கில் சலித்துக்கொள்கிறார்கள்!" என்றாள் .

மேலும் ஒரு பெருமூச்சு எனக்குள் புதைந்தது.

ராகவன் ஞாபகம் வந்தது. கருச்சிதைவினால் மனைவி இறந்து விட்டாள் ஒரு பெண்ணோடு வாழ்ந்து அந்தப் பாசத்திற்கு அடிமையாகிப் பட்ட பாடே போதும் என்று திடமாக இருப்பவன்.

நான் சொன்னால் கேட்பான்.

"ஒருவன் இருக்கிறான். இரண்டாம் தாரம் தான்.மனைவியை உயிருக்கு உயிராக நேசித்து அவள் இறந்ததால் மனமுடைந்து போனவன்.உனக்கு சரியென்றால் உடனே முயற்சிக்கிறேன்!" நான் சொன்னேன்

"அவர் என்னை நம்பவேண்டுமே!|"

"நம்ப வை நம்புவான்"

நம்பினாள். நம்பவைத்தாள் 

அடுத்தசந்திப்பில் அவள் முகத்தில் ஒரு புன்னகை. நாணப் புன்னகை.

"என்னடீ?" என்று கேட்டேன்.

",மூன்று மாதம் முழுகாமே இருக்கேன்"

எனக்குள் ஒரு சிறு பூரிப்பு. என்னால் கூட ஒரு நல்ல காரியம் செய்ய முடிந்திருப்பதில்.

வாழ்க்கை ஒரேயடியாகப் புலம்பலில் முடிந்துவிடுவதில்லை
------------------------------------------------------------------------------------------------------------------
நளினமும் நகைச்சுவையும் நவீனப் பார்வையும் கொண்ட  நாவல் அடுத்த செப்டம்பர் முதல் தேதிப் பதிவிலிருந்து  தொடங்குகிறது
------------------------------------------------------------------------------

                            எழுதுபவர்:?

                   ஆணா ? பெண்ணா?

                     நாவல் தலைப்பு?

                      தீம்?
                   
                    சமூகமா? சரித்திரமா?

----------------------------------------------------------------

  சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ்..சஸ்பென்ஸ் .... 

....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....
---------------------------------------------------------------

                ஒரே ஒரு யூகத்திற்கும் கூட ஒரு புதுமையான பரிசு!

Saturday 30 August 2014

எழுந்து வா இனிய தோழி !

மதன் பிரசாத் 
எழுந்து வா !        
                                        
எழுந்து வா !
இனிய தோழி ! - நீ 
தூங்கியது போதும் 

உனக்குள்ளே நீ 
உறைந்து போவதற்குள்  
உடனே எழுந்து வா !

மனம் கவலையில் 
மடிந்துபோவதற்குள்
துடிப்புடன் எழுந்து வா

உயிர்ப்பு அடங்குவதற்குள் 
உலகை அளந்திட 
எழுந்து வா !

உறவும் பகையும் 
உன்னை விழுங்குவதற்குள்
சாதிக்க விரைந்து வா - நீ
நீதி வழியில் நடந்திட 
நெருப்பாய் நடந்து வா !

போதும் இந்த வாழ்க்கை - என்று
மனம் புத்துணர்வை இழப்பதற்குள்
நீ  எழுந்து வா !


அடுத்த ஒரு பதிவிலிருந்து நாவல்

நளினமும் நகைச்சுவையும் நவீனப் பார்வையும்

 கொண்ட  நாவல் அடுத்த செப்டம்பர் முதல் தேதிப் 

பதிவிலிருந்து  தொடங்குகிறது
------------------------------------------------------------------------------

                            எழுதுபவர்:?


                   ஆணா ? பெண்ணா?

                     நாவல் தலைப்பு?

                      தீம்?
                   
                    சமூகமா? சரித்திரமா?

----------------------------------------------------------------

  சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ்..சஸ்பென்ஸ் .... 

....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....
---------------------------------------------------------------

                ஒரே ஒரு யூகத்திற்கும் கூட ஒரு புதுமையான பரிசு!

தமிழ் இனி மெல்ல:[42] இரண்டாம் பாகம் முற்றும்


தமிழ் இனி மெல்ல:[41] சென்ற இதழ் பதிவின் இறுதியில் 
ஆடாமல் அசையாமல், இளஞ்சேரனையே கண்வாங்காமல் பார்த்தபடி நின்றான் சிவாச்சாரி. நரேந்திரன் கை உடைவாளை நோக்கிச் சென்றது. சட்டென்று அவன் கையைத் தனது இடது கையால் உடும்புப் பிடியாகப் பிடித்தான் சிவாச்சாரி.

“சோழ நாயே! எனது அமைச்சரைக் குள்ளநரி என்று தரக்குறைவாகப் பேசுவாயா இனிமேல்?” என்று அரசவையே அதிரும்படி மறுமுறை அறைந்தான். “நன்றாய்த் தெரிந்துகொள்! நான் உன் மன்னனுக்குத் திரை செலுத்த மாட்டேன்! மனித பாஷையான உனது பாஷையைப் பட்டயங்களில் எழுத மாட்டேன். நீ செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல வேண்டும். தூதனாக வந்ததால் உன்னை வாழ்நாள் முழுவதும் கடுஞ் சிறையில் கழிக்கும் தண்டனையை வழங்குகிறேன். யாரங்கே! இருவரையும் விலங்கு மாட்டிச் சிறையில் தள்ளுங்கள்!”  என்று கர்ஜித்தான்.

சபையே அதிர்ந்து போயிற்று. அனைவரும் சோழப் பேரரசின் வலிமையை நன்கு அறிவார்கள் ஏதாவது சாக்கு சொல்லி, பாதி பொருள்களையாவது கொடுத்தனுப்புவதை விட்டுவிட்டு, ஒரு தூதுவனை, அதுவும், சோழப் பேரரசின் உயர் அதிகாரியை, அனைவருக்கும் முன்னே கன்னத்தில் அறைவது என்ன விளைவை ஏற்படுத்துமோ என்னும் அச்சம் அவையோர் அனைவரையும் சூழ்ந்து கொண்டது.

சிறிதும் கலங்காமல், தலை குனியாமல் சேரனை விழித்துப் பார்த்தபடி பதிலளித்தான் சிவாச்சாரி. “சேரமான் அவர்களே! மூவேந்தர் பரம்பரையில் வந்த தாங்கள் சேரர் குலத்திற்கே அழியாப் பழியைத் தேடிக்கொடுத்து விட்டீர்கள்! ஒரு தூதுவனை இப்படியா நடத்துவது? தங்கள் அமைச்சர் என்னை நாயே என்று அழைத்ததைத் தடுத்து நிறுத்தாமல், தாங்களும் என்னை நாயே என்று விளித்தீர்கள்! அதுவும் என் பிறந்த பொன்னாட்டைக் கேவலப் படுத்தும் வகையில்!

“தங்கள் அமைச்சரைக் கழுதைப்புலி என்று அழைத்ததற்காக என்னைத் தாங்கள் சிறைப்படுத்தலாம். ஆனால் வேங்கை நாட்டு இளவரசர் அரசவையில் ஒரு சொல் கூட பேசவில்லை. அவரைத் திரும்பச் செல்லவிடுங்கள்! சிறந்த சேரர் குலத்திற்கு அவமானம் தேடிக் கொள்ளாதீர்கள்!”  அத்துடன் நரேந்திரனின் கையையும் மெல்லத் தளர்த்தினான்
தமிழ் இனி மெல்ல:[42] தொடர்கிறது 

 அரிசோனா மகாதேவன் 
“உங்களை விடாவிட்டால்?” உஷ்ணமான கேள்வி பிறந்தது சேரனிடமிருந்து.
“இளவரசர் சிறை செல்ல நான் அனுமதிக்க மாட்டேன்! அவரும் சிறைப்பட மாட்டார்! எங்கள் இருவரின் உயிர் பிரிந்தால்தான் அது நடக்கும். அது நடப்பதற்குமுன் இங்கு பலரின் உயிர்கள் பிரிய நேரிடும். அது நடக்க வேண்டுமா? அவரைச் செல்ல விடுங்கள்! நான் உங்களுக்குப் பிணைக் கைதி ஆக, எந்தவிதமான தொல்லையும் கொடுக்காமல் கைதி ஆக சம்மதிக்கிறேன். இளவரசர் தங்கள் பதிலை கோப்பரகேசரியாருக்கு எடுத்துச் செல்வார்!” சிவாச்சாரியின் குரலில் சிறிதும் நடுக்கமோ, அச்சமோ இல்லை - அமைதியான எச்சரிக்கைதான் இருந்தது.

“வேங்கை நாட்டுடன் எனக்குப் பகை இல்லை என்பதால் இளவரசரை மட்டும் நான் திரும்பிச் செல்ல அனுமதிக்கிறேன். அதற்குப் பதிலாக உன்னுடன் வந்த சோழ வீரர்கள் அனைவரையும் உன்னுடன் சிறையில் அடைக்கச் சம்மதிக்கிறாயா?” சேரனின் குரலில் எகத்தாளம் இருந்தது.

“சம்மதிக்கிறேன். இளவரசர் எனது சம்மதத்தை விடுதியில் இருக்கும் சோழ வீரர்களுக்குத் தெரிவிப்பார். அவர்கள் அதற்குக் கட்டுப்படுவார்கள்!” அமைதியாகத் தன் இலச்சினை மோதிரத்தை நரேந்திரனின் கையில் கழட்டிக் கொடுத்த சிவாச்சாரியனின் குரலில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லை. அவன் முகத்தில் தன் நிலைமை என்ன ஆகுமோ என்ற அச்சமும் இல்லை52... 

...குதிரையின் குளம்பொலி கேட்டு நினைவுக்கு வருகிறான் நரேந்திரன். அவனது குதிரையின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்தவாறு அங்கு குதிரையில் வந்த வீரன் ஒருவன் அவனருகில் குதிரையை நிறுத்திக் கீழிறங்குகிறான்.

“வேங்கை நாட்டு இளவரசே! நான் சோழவீரன்தான். தாங்களும், சிவாச்சாரியாரும் சேரன் மாளிகைக்குச் செல்லும் முன்னர் ஓலைநாயகர் என்னைத் தனியாக ஒளிந்து கொள்ளுமாறும், தாங்கள் மட்டும் வெளியே வந்தால், மற்றவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருந்து, தங்களைத் தொடர்ந்து வந்து, தாங்கள் உதகை எல்லையைத் தாண்டியதும், தங்களைச் சந்தித்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லுமாறும் பணித்தார்.” என்று அருகில் வருகிறான்.

சிவாச்சாரி எதைத்தான் முன்கூட்டியே யோசித்து முடிவெடுக்கவில்லை என்று வியக்கிறான் நரேந்திரன். பித்துப் பிடித்தவனைப் போல அல்லவா நடந்துகொண்டான் இளஞ்சேரன்! அந்தச் சேரமானுக்குச் சற்றும் தணிந்து செல்லவில்லையே சிவாச்சாரி! தன்னை விடுவிக்க என்ன துணிச்சலுடன் நடந்து கொண்டான்! இனி அவன் கதி என்ன ஆகுமோ? ஒருவேளை சேரமான் அவன் சொன்னதற்குச் சம்மதிக்காது போயிருந்தால்... ?

நினைத்துப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது அவனுக்கு. இதுவரை போருக்குச் சென்றதே இல்லை அவன். தன்னைவிட வயதில் குறைந்த இராஜாதிராஜன், தென்சேரனை யானைப் போரில் வீழ்த்தினான் என்று கேள்விப் பட்டிருக்கிறான். இனி தானும் போருக்குச் செல்ல வேண்டும், உயிரை ஒவ்வொரு போரிலும் பணயம் வைக்க வேண்டும் என்று உணர்ந்தும் இருக்கிறான். முதன்முதலாக அப்படி உயிரைப் பணயம் வைக்கும் நிலை போரே இல்லாமல் வந்ததை நினைத்துப் பார்த்தால் ஒரு மாதிரியாக இருக்கிறது அவனுக்கு.

அவனது கவனத்தைக் கலைக்கிறான் சோழவீரன். “இளவரசே! சேரமானின் அரசவையில் ஏதாவது கைகலப்பு நிகழ்ந்து தங்கள் உயிருக்கு ஆபத்து நேரும் போலிருந்தால் நம்முடன் வந்த நூறு வீரர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது தங்கள் உயிரை மீட்க வேண்டும் என்றும் சிவாச்சாரி எங்களைப் பணித்திருந்தார். அதுதான், நமது வீரர்கள் விடுதியில் இல்லாமல், தங்கள் வருகைக்காக சேரமானின் மாளிகையின் வாயிலிலேயே காத்திருந்தார்கள்.” என்றும் சிவாச்சாரியனின் திட்டத்தைத் தெளிவுபடுத்துகிறான்.

சிவாச்சாரியனுக்கு சேரமான் இவ்வாறு நடந்து கொள்வான் என்று எப்படி முன்கூட்டியே ஊகிக்க முடிந்தது என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து பார்க்கிறான் நரேந்திரன். அவனுக்கு குழப்பம் மிஞ்சியதே தவிர, விடை ஒன்றும் கிடைக்கவில்லை.

“இளவரசே,  தாங்கள் மதியத்திலிருந்து உணவே உண்ணவில்லை. நான் கொஞ்சம் உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதை உண்டுவிட்டு, இரவை அந்தப் பாழடைந்த மண்டபத்தில் கழிப்போம். விடிந்ததும் மலையிலிருந்து இறங்க ஆரம்பிப்போம்.” என்று குதிரையின் பக்கவாட்டில் கட்டியிருந்த பையிலிருந்து உணவுப் பொட்டலத்தை எடுத்து அவனிடம் நீட்டினான் சோழவீரன்.
                                * * *
                                    நீலமலை அடிவாரம்
                       பிரமாதீச, மார்கழி 22 - ஜனவரி 7, 1014
சோழர் படை நீலமலை அடிவாரத்தில் வெற்றி முகாமிட்டிருக்கிறது. பதினைந்து நாட்களுக்கு முன்னர்தான் இளஞ்சேரனைப் போரில் வென்று, சேரப் படைகளில் பெரும்பாலோரை யமனுலகுக்கு அனுப்பிவிட்டு, வெற்றிவாகை சூடி, சிவாச்சாரியையும், சிறைப்பட்ட சோழ வீரர்களையும் விடுவித்திருக்கிறான் இராஜாதிராஜன்.

 கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களாகச் சேரனின் சிறையில் நாட்களைக் கழித்த சிவாச்சாரி, மீசை-தாடியுடன் தலை மயிரை உச்சியில் சுருட்டி முடிந்திருந்ததால் ஒரு முனிவரைப் போலக் காணப்படுகிறான்.

.
தலையில் கையை வைத்துக்கொண்டு குனிந்திருக்கிறான் சிவாச்சாரி. அவன் முன்னர் அமர்ந்திருக்கும் இராஜாதிராஜன், “ஏன் வீணாகக் கவலைப் படுகிறீர்கள் சிவாச்சாரியாரே! போர் என்றால் வீரர்கள் மடிவார்கள், நகரங்கள் அழியும். இது நீங்கள் அறியாததா!

“இந்தமட்டும் உங்களை உயிரோடு சிறை மீட்டது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாகத் தெரியுமா இருக்கிறது! உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்தால் நான் அக்காவுக்கு என்ன பதில் கொண்டு செல்ல இயலும்? தூதனாக வந்த உங்களைத் தகாத சொற்களால் அவமதித்து, தந்தையின் பிறப்பைப் பற்றியும் இழிவாகப் பேசிய சேரமானைத்தானே நீங்கள் காலனுக்கு இரையாக்கினீர்கள்! பின் ஏன் இந்த வருத்தம்?” என்று தேற்றுகிறான்.

“இளவரசே, என் ஒருவனுக்காக இத்தனை உயிர்கள் இறக்க வேண்டுமா? அதுமட்டுமல்ல, முதன்முறையாக நான் உயிர்க்கொலை செய்தேனே! அதுவும் ஒரு அரசனை, என்னை அவமானப்படுத்தியதற்காகக் கொன்றேனே!
“சிவபூசை செய்த நான் உயிர்க்கொலை செய்யலாமா? இது தகுமா? என் மனமே என்னைக் கொல்லுகிறது. அது மட்டுமா? என் பொருட்டு இயற்கை அன்னையின் மடியில் அழகுறத் தவழ்ந்த ஒரு நகரமே தீக்கு இரையாக்கப்பட்டு அழிந்ததே!

“என் நெஞ்சை இந்நிகழ்ச்சிகள் அரித்து எடுக்கின்றன, இளவரசே! பாண்டிய மன்னனுடன் நிகழ்ந்த போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் என்னால் அழிந்தனவே! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால் என் இதயம் வெடித்து இரத்தம் பெருக்கெடுப்பது போல இருக்கிறது. இளவரசே! அதுதான் என்னால் தாங்க முடியவில்லை!” முகத்தில் இருந்த கையை எடுக்காமலேயே பதில் கூறுகிறான் சிவாச்சாரி.

இதுவரை அவன் முகத்திலோ, அவன் குரலிலோ எந்த விதமான தடுமாற்றத்தையும் கண்டதில்லை இராஜாதிராஜன். போர்க் கலையைப் பற்றி அவனுக்கு நிறைய போதித்திருக்கிறான் சிவாச்சாரி. இதுவரை அவனிடம் கழிவிரக்கத்தை அவன் கண்டதே இல்லை. ஒரு கர்ம வீரனைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறான்.

இதுகாறும் அவன் அந்தண குலத்தாரைப் போல குருதியைக் கண்டு மருகவில்லை. அவன் மனத்தில் உள்ளதையும் யாரிடமும் திறந்து சொன்னதில்லை. சிவாச்சாரியனின் உள் உருவத்தை, மன ஓட்டத்தை முதன் முதலாகக் காண்கிறான் இராஜாதிராஜா.

“சிவாச்சாரியாரே! ”“உதகையைக் கொளுத்திவிட்டு, சிவாச்சாரியாரைச் சிறைமீட்டு வா! இல்லையேல் என் முன் வராதே!”  என்று என்னை ஆணையிட்டு அனுப்பினார் தந்தையார். நான் அரச கட்டளையைத்தான் நிறைவேற்றினேன். இளஞ்சேரனையும் சிறைப்பிடித்து வரத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். ஆயுதம் எதுவும் இல்லாதிருந்த உங்களைக் கொல்ல அவன் சிறைக்கு வந்த போது, துணிச்சலுடன் தங்களைப் பிணைத்திருந்த சங்கிலிகளையே துணையாகக் கொண்டு அவனது கழுத்தை நெறித்துத் தலையைப் பிளந்து கொன்றீர்கள்.

“தன்னைக் கொல்ல வரும் பசுவையே கொல்லலாம் என்னும் சாத்திரத்தை அறியாதவரா நீங்கள்! தவிர, நீங்கள் சோழப் பேரரசின் திருமந்திர ஓலைநாயகர் ஆவீர்கள். தாங்கள் இப்படிக் கழிவிரக்கப்படுவது தங்கள் பதவிக்கு அழகு சேர்க்குமா? வீரத்துடன் புலியாக உறுமுங்கள். அதுதான் சரியாக இருக்கும்!” என்று சிவாச்சாரியனை உற்சாகப் படுத்துகிறான் இராஜாதிராஜன்.

“என் கழிவிரக்கத்தைத் தேற்றியதற்கு மிக்க நன்றி இளவரசே! இது நம்முடன் இருக்கட்டும். முக்கியமாக கோப்பரகேசரியாருக்கு இது தெரியவேண்டாம்!” என்று தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டுக் கொள்கிறான் சிவாச்சாரி. அவன் கண்கள் சிவந்து இருக்கின்றன. “இதுதான் நான் கழிவிரக்கப்படும் முதலும் கடைசித் தடவையும் ஆகும் வேங்கைநாட்டு இளவரசர் நலமாகத் தஞ்சை வந்து சேர்ந்தாரா? சக்கரவர்த்தி அவர்களும், நங்கையும், மற்றும் என் வீட்டில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா?”

“பாட்டனாரைத் தவிர அனைவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள் சிவாச்சாரியாரே! இரண்டு திங்கள் முன்பு பெருவுடையார் கோவிலுக்குச் சென்ற பாட்டனார், படியிலிருந்து தவறி விழுந்து விட்டார். அதில் அவரது கால் எலும்பு முறிந்து விட்டது. நுடமருத்துவர் முறிவைச் சரிசெய்து தைலம் தேய்த்துக் கட்டுப்போட்டு தற்பொழுது குணமடைந்திருக்கிறார்.

“அவர் நீங்கள் சிறைப்பட்டதை அறிந்து மிகவும் வருந்தினார். அக்கா வெளிப்படையாக ஏதும் சொல்லாது போனாலும் உள்ளூர மிகவும் நொந்து போயிருக்கிறாள். தங்களைச் சிறை மீட்டதுமே, விரைவாகச் செல்லும் குதிரை வீரர்கள் மூலம் செய்தி அனுப்பி உள்ளேன்.

“நரேந்திரன் போருக்குத் தானும் வருவதாகச் சொன்னான். தந்தையார்தான் கோழியடிக்க இரு குறுந்தடிகள் தேவையில்லை என்று அவனைத் தடுத்து நிறுத்தி விட்டார். குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் அவன் தற்பொழுது போரில் ஈடுபடுவது முறையல்ல என்று என்னிடம் பிற்பாடு சொன்னார். நாமும் கூடிய விரைவில் திரும்பிச் செல்வோம். சிறையில் இருந்ததால் நீங்கள் மிகவும் மெலிந்திருக்கிறீர்கள். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்!” என்று கூடாரத்தை விட்டு வெளியேறுகிறான் இராஜாதிராஜன். வைக்கோல் மெத்தை இடப்பட்ட கயிற்றுக் கட்டிலில் தலை சாய்க்கிறான் சிவாச்சாரி.

அவன் மனம் இராஜராஜ நரேந்திரனைப் பற்றி சிந்தனை செய்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவனுடன் இருந்திருக்கிறான் நரேந்திரன். அந்தக் காலம் முழுவதும் தாமரை இலைத் தண்ணீர் போலத்தான் அவர்களுடைய உறவு இருந்து வந்திருக்கிறது. சிவாச்சாரி எவ்வளவுதான் நட்புக் கரம் நீட்டினாலும் நரேந்திரன் ஒதுங்கியே இருந்து வந்திருக்கிறான். இராஜேந்திரனுடைய உத்திரவுப்படி தன்னுடன் நேரத்தைக் கழித்து வருகிறானே தவிர, தன்னுடன் இருப்பதற்குச் சிறிதளவுகூட விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே காட்டி வருவது சிவாச்சாரியனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது.

தன்மீது எதனால் நரேந்திரனுக்குக் காழ்ப்பு உணர்ச்சி இருக்கக்கூடும் என்று சிவாச்சாரியனுக்குத் தெரியாமல் இல்லை. ஆயினும் நிலவுமொழியின் மீது தோன்றிய பித்து, அது நிறைவேறாமல் போனதனால் ஏற்பட்ட ஏமாற்றம், தாய் குந்தவியின் கோபம், குதிரைக் காப்பாளன் முன்னால் பட்ட அவமானம் இவற்றிற்கு வடிகாலாக, அவனுடைய மொத்தக் காழ்ப்புணர்ச்சியும் தன்மீது பாய்ந்திருக்கிறது என்று அவன் உணர்கிறான்.

ஆயினும், நரேந்திரனுடைய இந்த மனநிலைமைக்குத் தான்தான் மூலகாரணம் என்று முடிவு எடுப்பது அரசனாகப் போகும் அவனுக்கு அழகல்ல என்பதை அவனுக்கு எப்படி எடுத்துச் சொல்வது? மறைமுகமாக என்ன சொன்னாலும் அதை உணரும் அளவுக்கு அவனது அறிவுத் திறன் விரிவடையாமல் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால் சிவாச்சாரியனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

வயதில் சிறியவனான இராஜாதிராஜனுக்கு இருக்கும் அறிவு முதிர்ச்சி நரேந்திரனுக்கு இல்லாது போனதை இராஜேந்திரன் உணர்ந்து கொண்டதால்தானே, அவனை உதகைப் போருக்கு அனுப்பவில்லை!

இதுவரை ஒரு போரையும் சந்திக்காத நரேந்திரன் எப்படி சோழப் பேரரசின் வட எல்லையில் இருக்கும் வேங்கை நாட்டைக் கட்டி ஆளப் போகிறான்?  இந்நிலையில் அம்மங்கையை மணந்து கொண்டால், சோழ வளநாட்டின் மருமகனாகப் போகும் இவனைத் தூக்கி நிறுத்தவே சோழ நாட்டின் தளவாடங்களும், போர் முயற்சிகளும் நிறைய செலவிடப் படவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறான் சிவாச்சாரி. அது மட்டுமன்றி சோழ அரசின் கவனமும் தேவையின்றி வேங்கை நாட்டின் பக்கமே திரும்ப வேண்டியிருக்குமே!

எப்படியிருந்தாலும் இவன் மீது தனிக் கவனம்தான் வைத்திருக்க வேண்டி வரும் - இவனுக்கும், பிற்கால சோழப் பேரரசுக்கும் தலைவலி காத்திருக்கிறது என்று மட்டும் புரிந்து கொள்கிறான் சிவாச்சாரி. அந்தச் சிந்தனையிலேயே உறக்கம் அவனை ஆட்கொள்கிறது.
* * *

                                           பழையாறை அரண்மனை
                                           பிரமாதீச, ?? ?? - ?? ?? , 1014

“அருள்மொழி, எழுந்திரு!எத்தனை நாள்கள் இப்படி படுக்கையிலேயே படுத்துக் கிடப்பாய்? அரசகேசரியான நீ இப்படி மனத்தைத் தளரவிடலாமா? சோழப் பேரரசின் மாமன்னனான உனக்கு இது அழகா?” கணீரென்று ஒலிக்கிறது மிகவும் படிக்கப்பட்ட அந்தக் குரல் இராஜராஜரின் காதுகளில் தேனாகப் பாய்கிறது அந்தக் கனிவான குரல்.

குருநாதர் கருவூர்த் தேவரின் குரலல்லவா இது! அவர் திருக்கயிலையிலிருந்து எப்பொழுது திரும்பி வந்தார்? இனி தனது மனக்கவலையெல்லாம் தீர்ந்து போய்விடும், தமிழ்த் திருப்பணிக்கு வரும் எந்தத் தடைகளும் அவரது வருகையால் இனி கதிரவனைக் கண்ட பனியாக நீங்கிவிடும் என்ற நம்பிக்கை பிறக்கிறது இராஜராஜருக்கு.

அவரிடம் என்னவெல்லாமோ கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் நாக்கு பிறழ மறுக்கிறது.

“அருள்மொழி, உன்னைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். ஒளிமயமான, பனிசூழ்ந்த, இறையருள் பொங்கும், சச்சிதானந்தப் பேரின்பமான, சிவனாரின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். கண்ணைத் திற! எழுந்திரு! நமக்கு அதிக நேரமில்லை!” மீண்டும் கருவூர்த் தேவரின் குரல் காதில் ஒலிக்கிறது.

“தேவரே! தமிழ்த் திருப்பணி என்று முடியும்? அதை நிறைவேற்றாமல் அப்படியே விட்டுவிட்டு வரச் சொல்கிறீர்களே! என் உடல்நிலையில் என்னால் திருக்கயிலை வர இயலுமா?” என்று கேட்க நினைக்கிறது அவர் மனம்.

“அருள்மொழி, அது சிவனாரின் அருளுடன் நடைந்தேறும். எதையும் நினைப்பதும், ஆக்குவதும், காப்பதும், நிலைநிறுத்துவதும், துடைப்பதும், மறைப்பதும், அருளுவதும் அவன் செயலல்லவா? நான் செய்ய வேண்டுமே, நான் பார்க்க வேண்டுமே என்று நினைக்கும் தருணமா இது? நான் என்ற எண்ணத்தை நீக்கு! அவன் உன்னை அழைத்து வரச் சொல்லி நான் வந்திருக்கிறேன். எல்லாவற்றையும் அவனிடம் விட்டுவிட்டு அவனைச் சேர என்னுடன் கிளம்பு. என் பக்கம் திரும்பு, கண்களைத் திற, என் கைகளைப் பற்றிக் கொள். திருக்கயிலைக்கு அழைத்துச் செல்கிறேன்!” அவர் குரலில் குழந்தைக்கு தந்தை சொல்லும் ஆறுதலும், அழைப்பும் இருக்கிறது.

“நீங்கள் இருக்கும் பொழுது எனக்கு என்ன அச்சம்? உங்கள் கையைப் பற்றிக் கொண்டால் எனக்கு இளமைக்கான மனவலிமை வந்துவிடும் தேவரே! இதோ எழுந்திருக்கிறேன்!”  தனது வலிமையை எல்லாவற்றையும் ஒரு சேரத் திரட்டி, கருவூர்த் தேவரின் குரல் வரும் திசையை நோக்கித் திரும்ப விழைகிறார் இராஜராஜர்.

அச்சமயம் சிவாச்சாரி பதட்டத்துடனும், அவசரமாகவும் இராஜாதிராஜனுடன் உள்ளே நுழைகிறான். மஞ்சத்தில் இராஜராஜர் படுத்திருக்கிறார். அவரைச் சுற்றி அருள்மொழிநங்கை. இராஜேந்திரன், குந்தவைப் பிராட்டியார், குந்தவி, சோழமாதேவி, மற்ற ராணியார்கள், அரச மருத்துவர், அவரது பணியாளர் ஆகியோர் நின்று கொண்டிருக்கிறார்கள். சிவாச்சாரியனுக்கு இராஜராஜரின் தலையும் கால்களும் தெரிகிறது. அவன் வரும் அரவம் கேட்டதும், இராஜேந்திரன் அவன் பக்கம் திரும்புகிறான்.

இராஜராஜரின் தலை சிவாச்சாரி பக்கம் திரும்புகிறது. விழிகள் பாதி திறக்கின்றன. அவர் முன் தாடியுடனும் மீசையுடனும், தலைக்கு மேலே தூக்கி முடியப் பட்ட கேசமும் கொண்ட முகம் தெரிகிறது. பின்னால் தெரியும் வெளிச்சம் தலையைச் சுற்றி ஜோதியாகப் பளிச்சிடுகிறது.

அவர் முகத்தில் இலேசான புன்னகை மலர்கிறது. அருகில் வந்து நிற்கிறான் சிவாச்சாரி. இராஜராஜரது வலது கை அவனை நோக்கி மெல்ல உயர்கிறது. தன் கையை மெதுவாக அவரிடம் நீட்டுகிறான் சிவாச்சாரி.

நீட்டிய அவனது கையை தன் கையினால் உறுதியாகப் பற்றிக் கொள்கிறார் இராஜராஜர். அனைவரும் பல நாள்களாக சுயநினைவற்றிருந்த இராஜராஜர் கண்விழித்ததையும், சிவாச்சாரியனின் கைகளைப் பற்றிக் கொண்டதையும் வியப்புடன் நோக்குகிறார்கள். இராஜராஜரின் உதடுகள் மெல்ல அசைகின்றன. மெல்லிய குரலில் சிவாச்சாரியிடம் கனிவு ததும்பும் குரலில் கூறுகிறார். குழந்தை நாள் கழித்துத் திரும்பி வரும் தந்தையிடம் பேசும் அன்பு அதில் இருக்கிறது.

“வந்துவிட்டீர்களா கருவூர்த் தேவரே! என்னை நீங்கள் மறந்துவிட மாட்டீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். உங்கள் வருகையால் என் மனக்குறை நீங்கி விட்டது! தேவரே, என்னைத் திருக்கயிலைக்கு அழைத்துச் செல்லத்தானே வந்திருக்கிறீர்கள்! நான் வந்து விட்டேன். இத்தனை நாள் சோழ நாட்டை நான் சுமந்தது போதும். என்னை இறைவனிடம் அழைத்துச் செல்லுங்கள்! தென்னாடுடைய சிவனுடைய காலடியில் நான் தங்களுடன் சரணடைந்து விடுகிறேன்!! ஓம் நமச்சிவாய!!!”
அவரது புன்னகை அப்படியே உறைந்து போகிறது. விழித்த கண்கள் அப்படியே நிலைகுத்தி நின்று விடுகின்றன.
                                    * * *
 (இரண்டாம் பாகம் முற்றும்)
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
52உதகையில் ஆட்சி செய்து வந்த இளஞ்சேரன் இரண்டாம் பாஸ்கர ரவிவர்மன் அவனிடம் கப்பம் கேட்டு வந்த இராஜராஜ சோழனின் தூதுவனை அவமதித்துச் சிறையில் அடைத்ததாக “Medival Chola Empire and its relation with Kerala'' ” என்ற புத்தகம், பத்தாம் அத்தியாயத்தில் கூறுகிறது

‘கன்று நிற்கக் கயிறு மேயுதாம்’

ஜவாஹர் பிரேமலதா 
இணைப்பேராசிரியர், அரசினர் கலை, அறிவியல் கல்லூரி, சேலம்-7
                                                                 

‘கன்று நிற்க கயிறு மேயுதாம்’இப்படி ஒரு  விடுகதை
இதற்கு விடை  பூசணிக்கொடி என்பது. 
கயிறு விடுகதை போடுவோருக்கு மட்டுமின்றி தமிழ் இலக்கியம் தமிழர் வாழ்வில் பெற்றிருந்த முக்கியத்துவத்தை கூர்ந்து கவனித்துப் பதிவு செய்திருக்கிறது.சங்க இலக்கியத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கயிறுகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள்  காண்கிறோம் 

 பாசக்கயிறு:   தயிர் கடைவதற்கென்றே நிறுவப்பட்ட தூணில் ‘பாசம்’ என்றும் கயிறைச் சுற்றி, அதை மத்தினோடு இணைத்து மாறிமாறி இழுப்பர். இதனால் மத்து தேய்ந்துள்ளது என்ற கூறிய பார்வையைக் காட்டுகிறது  முல்லைக்கலி கூறுகிறது. 
மத்தோடு இணைக்கப்பட்ட கயிறை "மத்தம் பிணித்த கயிறு"(கலித். 110 : 10) என்கிறது முல்லைக்கலி. 
                                                    
" குழிசிப் பாசம் தின்ற தேய்கால் மத்தம்" (நற். 12: 2) தயிர்ப்பானையில் மத்து பாசக்கயிற்றால்  கடையப்படுவதையும், இதனால் மத்தின் கால் தேய்ந்துள்ளதையும் இப்பாடல் சுட்டுகிறது.   . கயிறு திரித்து விற்போரைச் சிலம்பு ‘பாசவர்’ என்கிறது (17)   

தாம்புக்கயிறு;       மாடு கட்டுவதற்காக முல்லைநில மக்கள் பயன்படுத்தும் கயிறு ‘தாம்பு’ எனப்பட்டுள்ளது. "தீம்பால் கறந்த கலம் மாற்றி ; கன்று எல்லாம் தாம்பின் பிணித்து"" (கலி. 111 : 1-2)என்ற பாடல் கன்று, மாடு முதலானவற்றை தாம்புக்கயிற்றால் தூணில் கட்டுவர் என்கிறது. மற்றொரு பாடல்,"""------ கன்றோடு செல்வேம்; எம்தாம்பின் ஒருதலை பற்றி" (கலி.116: 2)  மேய்ச்சலுக்காக கன்று, மாடு போன்றவை அழைத்துச் செல்லப்படும் பொழுது, அவை வழிமாறிப் போய் விடாமலிக்க அவற்றின் கழுத்தில் தாம்பு கயிற்றைக் கட்டி மறு பகுதியை கையில் பிடித்து இழுத்துச் சென்றிடுவர் ஆயர் என்கிறது. 

பெரிய வலைக்கயிறு :    பரதவர்கள் கடலில் பெரிய மீன்களைப் பிடிப்பதற்கேற்ற வகையில், முறுக்கிய நூலினால் செய்யப்பட்ட வலிமையான கயிற்றைக் கொண்டு வலை தயாரித்துள்ளனர். இத்தகைய  வலிமையான மெல்லிய கயிற்றை உருவாக்குவதற்கு ‘வடிக்கதிர்’ என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். "வடிக்கதிர் திரித்த வல் ஞாண் பெருவலை இடிக் குரற் புணரிப் பௌவத்து இடுமார்" (நற். 74) ‘பண்’ என்பது பாய்மரக்கயிறு என அழைக்கப்பட்டுள்ளது.     

             
சிமிலிக்கயிறு:      பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது.முனிவர்களால் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். பலவடமுடையபுரிநூலால்ஆனஉறியானது‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது." கரண்டைப்பல்புரிச் சிமிலி நாற்ற நல்கி வர"" (மதுரைக்காஞ்சி. 483-484) கரகம் என்பதுகரண்டையாகும் (சிறிய பானை).   

 காப்புக் கயிறு:  இறை வழிபாட்டிற்காகச் செல்பவர்கள் எடுத்துச் செல்லும் பூசைக்குரிய பொருட்களில் நூலும் இருந்தது.         """"கயிறும், மயிலும், குடாரியும்"" (பரி. 8 : 97-100)என பரிபாடல் வழிபடு பொருள்களில ஒன்றாக நூலும் இருந்துள்ளது எனக் கூறுகிறது.              """"கைந்நூல் யாவாம்"" (குறுந். 218. 2)    

 அணிக்கயிறு :    தேரில் குதிரை மற்றும் யானைகளைக் கட்டுவதற்காகப்  பயன்படுத்திய கயிறு ‘அணிக்கயிறு’ எனப்பட்டது. "யானை கயிற்று"(அகம். 128) "புரவி இழை அணி நெடுந்தேர்"(அகம். 254 : 12)   இதைத் தற்காலத்தில் கடிவாளக் கயிறு என அழைக்கிறார்கள். ."செல்க பாக! எல்லின்று பொழுதேவல்லோன் அடங்கு கயிறு அமைப்ப" (அகம். 224 : 2)குதிரையை அடக்கக் கூடிய வகையில் அதற்குக் கட்டப்படும் கடிவாளக் கயிற்றை ‘மத்திகை’ என்று பரிபாடல் கூறுகிறது  

 பூண்மணிக் கயிறு:  ஆயர் தொழுவத்தில் வளர்க்கும் மாடுகளுக்குக் கழுத்தில் நூலினால் கோக்கப்பட்ட மணிகளை அணிவித்துள்ளனர். இதை ‘பூண்மணிக்கயிறு’ என அழைத்துள்ளனர்.               """"புல்ஆர் கல்ஆன் பூண்மணி கொல்லோ?""(குறுந். 275: 4) கழுத்தில் பூட்டப்பட்ட மணி ‘பூண்மணி’ என்றும் அதை கட்ட உதவும் கயிறு ‘பூண்மணிக்கயிறு’எனவும் அழைக்கப்பட்டுள்ளது. ஒளிவீசக் கூடிய மணிகளைக் கொண்டு நூலினால் கோக்கப்பட்ட மாலைகளைக் கழுத்தில் தலைவன் அணிந்திருந்தான் என """"கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்"" (புறம். 88 : 4) எனத்  தலைவன் அணிந்த மாலையும் ‘நுண்பூண்’ என குறிக்கப்பட்டுள்ளது.   

ஊஞ்சல் கயிறு:                   ஊஞ்சல் பலகையானது, முறுக்குண்ட உறுதியான கயிற்றினால், மரக் கிளைகளில் கட்டப்பட்டுள்ளது. இக்கயிறு ‘புரிக்கயிறு’ எனப்பட்டுள்ளது. புரி என்பது ‘முறுக்கப்பட்ட கயிறு‘ ஆகும். பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிறு ஊஞ்சல் கயிறாகப் பயன்பட்டுள்ளது. பல புரிகளைக் கொண்டு முறுக்கப்பட்டப் பெரிய கயிற்றை ‘முரற்சி’ என்ற சொல்லாலும்  குறித்துள்ளனர்..""""வடுக் கொளப் பிணித்த விடுபுரி முரற்சிக் கை புனை சிறுநெறி வாங்கி"" (நற். 270: 10) என்ற தொடர் கையால் முறுக்கப்பட்ட பலபுரிகளுடைய கயிறு பற்றிக் கூறுகிறது.   

பூங்கயிறு :   ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரே பொம்மை யானை, குதிரை, தேர் முதலானவற்றை இழுத்து விளையாடுவர். அவர்களின் மெல்லிய கைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுவதே ‘பூங்கயிறு’ ஆகும். """"கவழம் அறியா நின் கைபுனை வேழம் புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி"" (கலி. 80 : 7-8)சிறுவர், கவளச் சோற்றை அறியாத கையால்  செய்யப்பட்ட  மரயானையை முறுக்கப்பட்ட மெல்லிய பூங்கயிற்றினால் கட்டி அதை இழுத்து விளையாடி மகிழ்ந்தனர் எனக் கலித்தொகை கூறுகிறது. 

 கோர்க்கும் நூல்:     முத்துமாலை, பொன்மாலை, பூமாலை போன்றவற்றைக் கோர்ப்பதற்கு நூலினாலாகிய சரடு பயன்பட்டுள்ளது. இச்சரடை ‘அடர்ந்த நூல்’ என அழைத்துள்ளனர்.  "நெகிழ் நூல் முத்தின்" (அகம். 289 : 11) என்றொருதொடர் அகநானூற்றில் வருகிறது. இப்பாடலில் நூலறுந்து விழும் முத்துகள் உவமையாக்க் கூறப்பட்டுள்ளன. எதற்கு?நூலறுந்து விழும் முத்துக்கள் போலத் தலைவியின் கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வந்ததாம். 
 மற்றொரு பாடலில் மூன்று வடத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை பற்றிக் கலித்தொகை கூறுகிறது.  "கயம் தலை மின்னும் கதிர்விடு முக்காழ்" (கலி. 80 : 2) என்பது ஒளி வீசுகின்ற மூன்று சரத்தினால் செய்யப்பட்ட முத்துமாலை என்பது இதன் பொருள்.அக்காலத்தில் இவ்வாறு நூலைக் கொண்டு பல  வகைகளில் முத்துமாலைகளை உருவாக்கியிருக்கின்றனர்.   

கிணற்றுக்கயிறு           கிணறுகளிலிருந்து நீர் இறைப்பதற்கு ஏற்றவகையில் கயிற்றினைப் பாத்திரத்தோடுக் கட்டி பயன்படுத்தியுள்ளனர். இதுவும் முறுக்குண்ட புரிநூலினால் ஆன கயிறு ஆகும்."சிரறு சில ஊறிய நீர் வாய்ப்பத்தல்கயிறு குறு முகவை" (ப.ப. 22 : 13-14)   

கூத்துக்கயிறு:   கயிறு கட்டி இரு மூங்கில் கழிகளுக்கு இடையே கட்டப்பட்ட அக்கயிற்றில் ஆடுமகள் நடந்து காட்டும் கூத்தே ஆரியர் கூத்து ஆகும். பொதுமக்கள் கூடுமிடங்களில் இக்கூத்தினை நிகழ்த்தி ஆடுமகள் பிழைப்பு நடத்தியதைக் குறுந்தொகை பதிவு செய்துள்ளது."ஆரியர் கயிறாடு பறையின்"" (குறுந். 7 : 4)என்ற பாடல் கயிற்றால் ஆடுமகள் நடக்கும் பொழுது பறைக் கருவியில் இசையெழுப்பி வேடிக்கைக் காட்டுவர் எனக் கூறுகிறது."------ ஆடுமகள் கயிறு ஊர் பாணியின்"" (குறி. பா : 193-194).   

வில்ஞாண்     வில்லின் இருபுறமும் கட்டுவதற்குரிய கயிறு ‘வில்ஞாண்’ எனப்பட்டது.""""கைபுனை வல்வில் ஞாண் உளர் நீயே"" (கலி. 7 : 6)மெல்லிய வலிமையான ஞாணாகிய கயிற்றைக் கொண்டு தலைவன், தன் கையினால் வில்லின் இருபுறமும் இறுகக் கட்டினான் என இப்பாடல் கூறுகிறது..

இடைஞாண் :இடையில் கட்டுவதற்கான மெல்லிய உறுதியான கயிற்றை இடைஞாண் என்றழைத்துள்ளனர்.  சிறுவர் இடையிலும் காலிலும் ஒலி எழுப்பும் கிண்கிணியை ஞாண் கொண்டு அணிந்திருந்தனர் என "கிண்கிணி ஆர்ப்போவாஅடி"" (குறுந். 148)என்ற அடிகள் மூலம் அறியலாம். 
                . 
நுண்கயிறு:     கட்டடக்கலை தொழில்நுட்பத்திலும் கயிறு பயன்படுத்தப் பட்டுள்ளது. பழங் காலத்தில் அரசியின் அரண்மனையைக் கட்டும் கட்டடக் கலை நுணுக்கம் அறிந்த தச்சர்கள், மிக நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்து அளவினைக் குறித்துக்கொண்டு பின்  கட்டிடம் கட்டியுள்ளனர்.    "நூல்அறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு..  .பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து"(நெல்நடு : 76-78)என  நெடுநல் வாடை குறிப்பிடுகிறது.  தமிழர்கள் பலவகையானக் கயிறுகளைக் கண்டுபிடித்து அதை பலவித பயன்களுக்குப் பயன்படுத்தியுள்ளனர்.இது போன்ற கயிறுகளை உருவாக்கும் தொழில் நுட்பத்தை அறிந்திருந்ததோடு. அவற்றை உருவாக்குவதற்குரிய கருவிகளையும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.