Friday 1 August 2014

தமிழ் இனி மெல்ல [23] வேதங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உச்சரிப்புகூடப் பிறழாமல் இன்னும் ஓதப்பட்டு வருவது எதனால்?

சென்ற பதிவின் [22]இறுதியில் 
தலைமை மெய்காப்பாளன் அங்கிருந்த புலியின் சிலையின் வாயில் கைவிட்டு எதையோ முடுக்குகிறான். உடனே அங்கு ஆளுயரத்திற்கு வரையப்பட்டிருந்த தஞ்சைப் பெருவுடையார் கோவில் ஓவியம் அதன் சட்டங்களுடன் விலகி சுரங்கப் பாதையின் வாசலைக் காட்டுகிறது. உள்ளே தீவட்டியுடன் மெய்காப்பாளர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். 
தலைமை மெய்க்காப்பாளன் தலைசாய்த்து, “சக்கரவர்த்திகளே! செல்லலாமே!” என்று கையைக் காட்டுகிறான். முதலில் இராஜராஜர் சுரங்கத்தில் நுழைகிறார். 
அவரைப் பின்பற்றி இராஜேந்திரன், சோழமகாதேவி, குந்தவைப் பிராட்டியார் நுழைகின்றனர். கடைசியாகத் தலைமை மெய்காப்பாளனும், இதர காப்பாளர்கள் பத்துப் பேரும் உள்ளே செல்கின்றனர். உடனே ஓவியம் திரும்ப வந்து சுரங்க வாசலை மூடிக்கொள்கிறது.
சுரங்கம் கிட்டத்தட்ட ஏழு அடி உயரமும் ஐந்தடி அகலமாகவும் இருக்கிறது. இந்தச் சுரங்கப்பாதை வழியாகத்தான் அரச குடும்பத்தினர் பெருவுடையார் கோவிலுக்கு ரகசியமாகச் செல்வார்கள். பெரும்பாலும் இராஜராஜரும், இராஜேந்திரனும்தான் அந்தச் சுரங்கப் பாதையை உபயோகப் படுத்துவார்கள். ஈரக்கசிவு கால்களைத் தாக்காத வண்ணம் தேக்கு மரப் பலகைகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. உள்ளே ஒரு பல்லக்கு இருக்கிறது. அதில் சோழ மகாதேவியும், குந்தவைப் பிராட்டியும் அமர்ந்து கொள்கின்றனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள் அப் பல்லக்கைத் தூக்கிக் கொள்கிறார்கள். முன்னே இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு நடக்கின்றனர். 
அவர்களை நான்கு மெய்க்காப்பாளர்கள் உருவிய வாளுடன் பின் தொடர் கின்றனர். அவர்கள் பின் இராஜராஜரும், இராஜேந்திரனும் செல்கின்றனர். பல்லக்கு அவர்களைப் பின் தொடர்கிறது. அவர்கள் பின்னால் நான்கு மெய்க்காப்பாளர்களும், அவர்களைத் தொடர்ந்து இருவர் தீப்பந்தங்களைப் பிடித்துக் கொண்டு வந்த வழியில் யாராவது வருகிறார்களா என்று  அடிக்கொரு தடவை திரும்பிப் பார்த்தவாறே செல்கிறார்கள்

தமிழ் இனி மெல்ல [23] தொடர்கிறது

இவர்களின் அணிவரிசை பெரிய இரும்புக் கதவுகள் உடைய ஒரு பெரிய கருங்கல் அறையைத் தாண்டுகிறது. சோழ அரசின் இரகசியக் கருவூலம் அந்தச் சுரங்கத்தில் உள்ள கருங்கல்லால் கட்டப்பட்ட இந்த அறையில்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அறையைக் காத்து நிற்கும் எஃகுக் கதவின் நான்கு பூட்டுகளின் சாவிகள் இராஜராஜர், இராஜேந்திரன், சோழ சாம்ராஜ்ஜியக் கருவூல அதிகாரி, மகாராணி சோழமகாதேவி, மற்றும் குந்தவைப் பிராட்டியாரிடமும் உள்ளன. ஒவ்வொரு பூட்டும் இந்த ஐந்து சாவிகளைக் கொண்டு குறிப்பிட்ட முறைப்படி திறந்தால்தான் திறக்கும். அந்த வரிசையின் இரகசியம்

கருவூல அதிகாரிக்கு மட்டுமே தெரியும். அந்த வரிசையின் முறை ஒரு ஓலையில் எழுதப் பட்டு சோழமகாதேவியின் அந்தப்புறத்தில், அவருக்கு மட்டுமே தெரிந்த இரகசியமான இடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறது. இராஜராஜர் கடைக்கண்ணால் அந்த அறையின் நான்கு பூட்டுகளைத் துணியினால் சுற்றி வைக்கப்பட்ட அரக்கு முத்திரை அப்படியே இருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறார். அந்த அறைக்குப் பாதுகாவலாக கருங்கல் திண்ணையின் அருகில் நிற்கும் ஆறு காவலர்கள் அரச ஊர்வலத்தைக் கண்டதும், உருவிய வாளை உறையில் இட்டு, மண்டியிட்டுத் தலை வணங்குகிறார்கள். இவர்கள் நான்கு மணி நேரத்திற்கு ஓருமுறை மாறுவார்கள். தாங்கள் செய்யும் வேலையை கனவில்கூட யாரிடமும் சொல்லாமல் இருக்கும் அளவுக்கு விசுவாசமான ஊழியர்கள் இவர்கள். இவர்களுக்காக நிறைய மானியங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

கையை உயர்த்தி அவர்களை நோக்கிப் புன்னகை செய்தவாறு இராஜராஜர் மேலே நடக்கிறார். இராஜேந்திரன் ஒரு கணம் அவர்களை நெருங்கி அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்து விட்டுச் செல்கிறான். அவர்களின் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக அது விளங்கும்.

இருபது நிமிஷங்களில் அந்தச் சுரங்கம் முடிவடைகிறது. இதற்குள் மூன்று நான்கு இடங்களில் அந்தச் சுரங்கத்திலிருந்து வேறு சில சிறிய பாதைகள் பிரிந்து செல்கின்றன. அவை எங்கு செல்லும் என்பது இராஜராஜர், இராஜேந்திரன், மற்றும் மெய்காப்பாளர்கள், இன்னும் முக்கியமான ஊழியர்கள் சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

தீவட்டியைப் பிடித்த காவலர்கள் அவர்களுக்கே தெரிந்த குறியீட்டு முறைப்படி கதவில் தட்டுகின்றனர். திரும்ப வெளியிலிருந்து வேறொரு குறியீட்டு முறைப்படி தட்டும் சத்தம் கேட்கிறது. அதற்குப் பதில் தெரிவிக்கும் வகையில் காவலர்கள் மீண்டும் கதவைத் தட்டியதும் கதவு திறக்கப் படுகிறது. அனைவரும் அக் கதவைத் தாண்டி ஒரு கருங்கல் அறையில் நுழைகின்றனர்.

அவர்கள் சுரங்கத்திலிருந்து வெளிவந்ததும், அந்தக் கதவு சாத்தப் படுகிறது. தீவட்டியைப் பிடித்த காவலர்கள் சுரங்கத்தினுள்ளேயே சென்று உட்பக்கமாகத் தாளிட்டுக் கொள்கின்றனர். உடனே ஒரு பெரிய மரத்தட்டி சுரங்கக் கதவை மறைத்து வைக்கப்படுகிறது. அது கோவிலின் பூசைச் சாதனங்கள் வைக்கப்படும் அறை. வெள்ளி நந்தி, திருக்கைலாயம், தங்கக் குதிரை, வெள்ளி அன்னம், தாமரை இவைகளோடு பஞ்சலோகத் திருஉருவங்களை அலங்கரிக்கும் சாதனங்கள் என்று நிறைய ஒரு பெரிய மேடையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இரும்புக் கம்பிகளால் ஆன சுவர் அவைகளையும், சுரங்கச் சுவரையும் பிரிக்கிறது. காவலர் அந்த இரும்புக் கதவைத் திறந்து விடுகின்றனர். இராஜராஜர் உட்பட அனைவரும் அந்த அறையின் திறக்கப்பட்ட வெளிக்கதவின் மூலம் ஒரு பெரிய மண்டபத்திற்குள் நுழைகின்றனர்.

மண்டபத்தில் அரசப் பிரதிநிதிகள் காத்திருக்கின்றனர். அரசியாரின் பணிப் பெண்கள் பூத்தட்டுகளை வைத்துக் கொண்டு நிற்கின்றனர். அரச குடும்பத்தினர் நடந்து வர கால்விரிப்பு விரிக்கப்படுகிறது. பெருவுடையார் கோவிலுக்கு மண்டபத்திலிருந்து இறங்கி நடக்கிறார்கள். அரச குடும்பம் வருகிறது என்பதால் மற்றவர்களை கோவில் பெரிய நந்தி அருகிலேயே நிறுத்தி விட்டிருக்கின்றனர். இது இராஜராஜருக்குப் பிடிக்காவிட்டாலும், தனது பாதுகாப்பிற்காகவே செய்யப்பட்டிருக்கிறது என்று அந்த ஏற்பாட்டிற்குக் கட்டுப்படுகிறார்.

பூரண கும்ப வரவேற்பு நடக்கிறது. வேத கோஷங்கள் விண்ணைத் துளைக்கின்றன. இராஜராஜரும், இராஜேந்திரனும் தங்கள் மகுடங்களையும், உடை வாள்களையும் தங்கள் மெய்க்காப்பாளர்களிடம் கொடுத்துவிட்டு, பூரண கும்ப வரவேற்பை ஏற்றுக் கொண்டு பெருவுடையார் சன்னதிக்கு நடக்கின்றனர்.

சிறப்பு முழுக்கும், அலங்காரமும் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட நாற்பது நிமிஷங்கள் நடந்த அந்த வழிபாடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. பூசை முடிந்ததும் தேவாரங்கள் ஓதப்படுகின்றன. கண்மூடி இறைவனைத் தொழுத இராஜராஜர் தன் தமிழ்த் தொண்டு இனிது நிறைவேற இறைஞ்சி வேண்டுகிறார். கோவிலின் தலைமை அர்ச்சகர் அவருக்கு திருநீறும், குங்குமமும் இறைவனின் நீராட்டுப் பிரசாதமும் வழங்குகிறார். பயபக்தியுடன் அவற்றைப் பெற்றுக் கொள்கிறார் இராஜராஜர்.
---------------------------------------------------------------------------------------------------------------
ஒரு முக்கிய அறிவிப்பு: கடலூர் மாவட்ட எழுத்தாளப் பெருமக்களுக்கு 
                   வரும் ஆகஸ்ட் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை 
                    கடலூர் மாவட்டச சிறப்பிதழ்  மாதமாக  நமது 
                   இணையவெளி கொண்டாடத் தீர்மானித்துள்ளது. 
                   இதில் கவிதை கட்டுரை, சிறுகதை, பயணக்
                   கட்டுரை, சிறப்புச் செய்திகள், நேர்முகங்கள், 
                    புகைப்படங்கள்  என எதைவேண்டுமானாலும் 
                     எழுத்தாளப்பெருமக்கள் எழுதியனுப்பலாம் . 
                  பிரசுமாகும் ஒவ்வொரு படைப்புக்கும் ரூ.100/-பரிசு 
நூலாக விரும்பினால் நூலாகவோ பணமாகவோ 
அனுப்பி வைக்கப்படும் புகைப்படமும் அனுப்பலாம். 
ஒரே ஒரு வேண்டுகோள் 
             அன்புகூர்ந்து பிற வலைத்தளங்களில் இருந்து பிரதி 
எடுத்து அனுப்பிவைத்து விடாதீர்கள். கண்டுபிடிக்கப்படும். 
அனுப்பியவர் வருந்த நேரிடும் 
                எந்த ஒரு படைப்பும் யுனிகோட்[ஒருங்குறி] வடிவில் 
               மட்டுமே இருக்க வேண்டும்  vaiyavan.mspm @ gmail.com 
              என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம் 
           மிகச் சிறந்தவை தொகுக்கப்பட்டு சென்னை தாரிணி 
           பதிப்பகத்தாரால் நூலாக்கப்படும் 
---------------------------------------------------------------------------------------------------------------
“சக்கரவர்த்திகளே! மகாராணியாரே! இளவரசே! பிராட்டியாரே! உங்கள் அனைவரையும் ஒருங்கே பார்ப்பது எம்பெருமானும் பெருமாட்டியும் குமரக்கடவுளுடனும், திருமகளுடனும் இங்கு வந்தாற்போல இருக்கிறது!” என்று புகழாரம் சூட்டுகிறார் தலைமை அர்ச்சகர்.

“இப்புகழ்ச்சிக்கு நான் தகுதியற்றவன். இறைவனின் தொண்டன் நான்.” என்று பணிவாகப் பதிலிருந்து விட்டு சோழமகாதேவியைப் பார்க்கிறார் இராஜராஜர். அவர் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட மகாராணி தன் கழுத்திலிருந்து ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து அர்ச்சகரின் தட்டில் இடுகிறாள். அர்ச்சகரின் வாயெல்லாம் பல்லாக மலர்கிறது. மீண்டும் பெரிதாக அரசகுடும்பத்தை வாழ்த்துகிறார்.

அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு கோவில் தோட்டத்திலிருக்கும் கருவூராரின் குடிலை நோக்கி நடக்கிறார் இராஜராஜர். குடில் கண்ணில் பட்டதும் கையை அசைத்து சைகை செய்கிறார். அவர்களின் முக்கிய மெய்க்காப்பாளர்கள் அறுவரைத் தவிர மற்றவர்கள் வரிசையாக அணிவகுத்து நின்று விடுகிறார்கள்.

குடிலின் வாயிலில் சிவாச்சாரி அவர்களை எதிர்நோக்கி நிற்கிறான். குடிலுக்கு ஐம்பது தப்படி தொலைவிலேயே குடிலைச் சுற்றிக் காவலாக மெய்க்காப்பாளர்கள் நின்று விடுகிறார்கள். நால்வரையும் வரவேற்கிறான் சிவாச்சாரி.

குடில் பதினைந்தடிக்குப் பதினைந்தடி சதுரமாக இருக்கிறது. மூங்கில் தூண்களாலும், விட்டங்களாலும் கட்டப்பட்ட அந்தக் குடிலுக்கு இரட்டை வரிசையாகத் தென்னை ஓலைக் கூரை வேயப்பட்டிருக்கிறது. சுவர்களும் தென்னை ஓலைகளே. வெளிச்சத்திற்காக நான்கு பக்கத்திலும் மூங்கிலால் செய்யப்பட்ட சாளரங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் தேக்கு மரங்களால் செய்யப்பட்ட பலகைகளும், சிறிய சாய்வு மேசைகளும் இருக்கின்றன. நிறைய ஓலைச் சுவடிகள் அந்த சாய்வு மேசைகளில் அடுக்கப்பட்டிருக்கின்றன. மேற்குப் பக்கத்தில் சிறிய சிவலிங்கம், அதன் பக்கத்தில் உமையவள், வடக்கே ஐந்து உலோகத்தில் செய்த சிறிய நடராஜர் சிலையும், சமய குரவர்கள் நால்வரின் பதுமங்களும் தெற்கே பார்த்தவண்ணம் இருக்கின்றன. சிலைகளின் கீழே பூக்கள் நிறைந்து கிடக்கின்றன. நந்தா விளக்கு சிறியதாக எரிந்து கொண்டிருக்கிறது. அறையின் ஒருமூலையில் ஒரு கோரைப்பாய் சுருட்டி நிறுத்தப் பட்டிருக்கிறது. அரசகுருவான கருவூரார் எவ்வளவு எளிமையாக வாழ்ந்து வருகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது அக்குடில்.

“வா அருள்மொழி! மதுராந்தகா, அருள்மொழி நங்கை எப்படி இருக்கிறாள்? அவள் சிவபுராணம் ஓதிக் கேட்கவேண்டும் என்ற இந்தக் கட்டைக்கு மட்டில்லா ஆவல். அவளைச் சந்திக்க விரும்புகிறது இக்கட்டை. இரவு அனைவரும் நன்றாக உறங்கினீர்களா?” என்று அன்புடன் வரவேற்கிறார் கருவூரார்.

“சிவனே! அனைவருக்கும் இருக்கைகளை எடுத்துப் போடுவாயாக. அரண்மனையின் மெத்தென்ற இருக்கைகள் இங்கு இல்லை மகாராணி, பொறுத்தருளவேண்டும்!”  என்று சோழமகாதேவியை மட்டும் நோக்கி கருவூரார் சொன்னதற்குக் காரணம் மகாராணியின் பதிலில் தெரிந்தது.

“தேவர் பெருமானே! தாங்கள் அளித்த அஞ்சனத்தால் எனது மூட்டு வலி குணமாகிவிட்டது. என்னால் பஞ்சணையில்லாத இருக்கையில் அமர முடிகிறது!” என்று நன்றி கலந்த குரலில் சொல்லிவிட்டு ஒரு பலகையில் அமர்ந்து கொள்கிறாள்.

“நாம் ஒரு இனிய திருப்பணியைப் பற்றிப் பேசப் போகிறோம். எனவே, இனிப்பாக அதைத் தொடங்குவோம்!” என்று சிவாச்சாரியை நோக்குகிறார் கருவூரார். ஒரு சம்புடத்தை எடுத்து அதைத் திறந்து, அதிலிருக்கும் ஊறவைத்த நெல்லிக்கனிகளை பூவரச இலைகளில் ஒவ்வொன்றாக வைத்து அனைவருக்கும் கொடுக்கிறான் அவன்.

“இவை உடலையும் மனதையும் குளிர வைக்கக் கூடியவை. பழங்கால சித்த மருத்துவத்தில் குறிப்பிட்ட மூலிகைச் சாற்றில் தேனைக் கலந்து ஊறவைக்கப் பட்டவை. களைப்பை நீக்கக் கூடியது இது.” என்று கனிவுடன் கூறுகிறார் கருவூரார்.
நெல்லிக்கனி மிகவும் சுவையாக இருக்கிறது. மூலிகைச் சாறின் சுவை தெரியாதவாறு கனியின் புளிப்பும், தேனின் இனிப்பும் மறைக்கிறது. கனி உள்ளே சென்ற சில விநாடிகளிலேயே அதை உண்டவர்களின் மனதில் இனம் தெரியாத ஒரு அமைதி பிறக்கிறது.

“சிவனே! திருப்பணிக் குழலை அருள்மொழியிடம் கொடுத்து விட்டு நீயும் அமர்ந்து கொள்!” என்று பணிக்கிறார் கருவூரார்.

“மதுராந்தகன் நேற்று கேட்ட கேள்வி மிகவும் சரியான ஒன்று. அதற்குப் பதிலைச் சொல்லிவிட்டு மேலே தொடருவோம்.” என்று இலேசாகப் புன்னகை செய்த கருவூரார், “மதுராந்தகா! வாளெடுத்துப் போர்புரிந்து சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பரப்புவது போல மக்களைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, தமிழ் பேசவைக்கமுடியுமா என்றும், உனது மருமகன் நரேந்திரனே தமிழைச் சரியாகப் பேசுவதில்லை என்று தங்கை குந்தவி புகார் செய்து சேதி அனுப்பியிருக்கிறாள் என்றும் நீ கேட்டது ஒரு நல்ல கேள்விதான்! கத்தியைக் காட்டி, மிரட்டி கைப்பற்றும் நாடுகள் அந்தக் கத்தி வேறு பக்கம் திரும்பிய உடன் நமக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிடும். ஆகவே எப்பொழுதுமே ஓங்கிய வாள் உறைக்குள் வரவே முடியாது.

“இது மொழியைப் பரப்புவதற்கும் பொருந்தும். குந்தவி புகார் செய்தாளே தவிர, தன் மகனுக்கு தமிழ்ப் பற்று வருவதற்கு என்ன செய்தாள்? விமலாதித்தன் தெலுங்கு கற்றுக் கொடுக்க நன்னய்யரை ஏற்பாடு செய்தானே, அந்த மாதிரி தமிழாசிரியர் யாரையும் ஏற்பாடு செய்தாளா? இல்லையே! கொட்டிய பாலின் கீழ் கூவியழுவதால் ஏற்படப் போவதென்ன?
“ஆகவே, வேறு ஒரு விதமாகத்தான் திருப்பணியைத் துவக்கவேண்டும். உங்களைப் பெருவுடையார் கோவிலுக்கு மதிய பூசைக்கு அனுப்பியதும் ஒரு காரணமாகத்தான். பூசை எந்த மொழியில் நடந்தது?” என்று இராஜேந்திரனைக் கேட்கிறார் கருவூரார்.

“வடமொழியில்தான்!”

“வடமொழியை யார் பேசுகிறார்கள்? அது வழக்கிலிருக்கிறதா?”

கேள்வி பிறக்கிறது.

“தங்களுக்கு தெரியாததா தேவரே! வடமொழிதான் வழக்கொழிந்து போய் நெடுங்காலமாகி விட்டதே!”

“இருப்பினும் அதைச் சாக விடாமல் உயிருடன் வைத்திருப்பது எது?”

சிறிது நேரம் யோசித்து, “தேவரே! நான் போர்வீரன், மொழி ஆராய்ச்சியாளன் அல்ல!”  என்று பதில் சொல்லிவிட்டு அமைதியாகி விட்டான் இராஜேந்திரன்.

“அந்த மொழியின்மீது பற்று வைத்திருப்பவரின் உற்சாகம்தான் அது, மதுராந்தகா! நாம் தமிழ்ச் சங்க இலக்கியங்களையும், திருமுறைகளையும் ஓலைச் சுவடியில் எழுதி வைத்துவிட்டு அதை மறந்துவிடுகிறோம். ஆனால் வேதங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, உச்சரிப்புகூடப் பிறழாமல் இன்னும் ஓதப்பட்டு வருவது எதனால்? கேரளத்தில் தமிழையே வேறு மொழியாக நம்பூதிரி அந்தணர்கள் மாற்ற முயல்வது எதனால்? வடமொழியின்மீது இருக்கும் பற்றால்தான்! இமயம் முதல் குமரி வரை கற்றவர்கள் உரையாடத் தேர்ந்தெடுத்திருக்கும் மொழி எது? வடமொழிதானே! அத்தகைய பற்று தமிழின் மீது இருந்தால் போதுமானது, மதுராந்தகா. தமிழ் என்றென்றும் அனைவரின் வாயிலாகவும் இந்தப் பரந்த பாரதநாட்டில் ஒலித்துக் கொண்டிருக்கும்.”

“தமிழை மனுஷ்ய பாஷை என்றும், வடமொழியை தேவபாஷை என்று சொல்லித்தான் கோவிலில் வடமொழியில் பூசை செய்கிறார்கள் தேவரே! அதில்தான் சாத்திரங்களையும், தத்துவங்களையும் எழுதுகிறார்கள்! கேரளத்தில் தமிழராகப் பிறந்த நம்பூதிரி வேதியரான சங்கரர் வடமொழியில்தானே வேதங்களில் தத்துவ விளக்கத்தை எழுதினார்!” குந்தவைப் பிராட்டியாரிடமிருந்து ஒரு கணிப்பு புறப்படுகிறது.

“தேவபாஷை, தேவபாஷை என்று வடமொழி பரப்பப்பட்டு வருகிறது. நான் மறுக்கவில்லை. ஆனால் மனிதமொழி என்று தமிழை இளக்காரமாகச் சொல்வதை நாம் எளிதில் நமக்கு ஆதரவாகப் பயன்படுத்திக்கொள்ள இயலும் அம்மா. கடவுளர் இயம்பும் மொழி வடமொழி, அவர்களுக்குச் செய்யும் அருச்சனை வடமொழியில் இருக்கவேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டால், மனிதர்கள் மொழி தமிழ் என்பதால் மாந்தர்கள் அனைவரும் தமிழில் பேசவேண்டும் என்ற வாதத்தை நாம் ஏன் முன்வைக்கக்கூடாது? வேத பாடசாலைகள் போல தமிழ்ப் பள்ளிகள் ஏன்  திறக்கப் படக்கூடாது? தமிழில் சாத்திரங்களை எழுதுவோர்க்கு மானியங்கள் ஏன் அளிக்கக்கூடாது?” என்று குந்தவைப்பிராட்டிக்கு பதிலிருத்த கருவூரார், இராஜராஜரை நோக்கினார்.

“அருள்மொழி! நீ ஏன் அமைதி ஆகிவிட்டாய்? உன் மனதில் எந்தவிதமான கேள்விகளும் பிறக்கவில்லையா?”

“ஐயா! இத்தனை நேரமும் நீங்கள் கொடுத்த விளக்கம் எனக்குள் எழும் கேள்விகளுக்கும் விடை அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. என் மனம் இந்தக் குழலின் உள்ளே இருக்கும் திருப்பணித் திட்டத்தையே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. இனிப்பான தின்பண்டம் தன் முன் இருந்தும், அதைத் தின்ன இயலாதவாறு கைகள் கட்டிப் போடப்பட்ட குழந்தையின் நிலையில்தான் நான் இருக்கிறேன்.” என்று தன் மனதில் பட்டதை அப்படியே எடுத்துரைக்கிறார் இராஜராஜர்.

“அருள்மொழி! நீங்கள் அனைவரும் இந்தக் கட்டையின் குழந்தைகள். உங்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் போது எல்லோரையும் ஒன்றாக அழைத்துச் செல்லவேண்டியது தலையாய கடமையல்லவா? அதனால்தான் அனைவரின் மனதில் எழும் ஐயங்களையும் நீக்க வேண்டியிருக்கிறது. தேவியாரே! உங்கள் மனதில் ஏதாவது... ?” என்று சோழமகாதேவியை வினவுகிறார் கருவூரார்.

“தேவர் பெருமானே! நீங்கள் என்ன செய்தாலும் அது இந்தச் சோணாட்டின் நன்மைக்குத்தான் என்று தெரிந்துமா என் மனதில் ஐயம் எழும்? நான் இந்தத் திருப்பணிக்கு ஒரு சாட்சிதான். என் இறைவனைத் தொடர்ந்து பணி புரிவதுதான் என் தலையாய கடமை!” அடக்கத்திற்கே உருவமான சோழமகாதேவியிடமிருந்து பதில் வருகிறது.

“ஒரு ஆணின் வெற்றிக்குப் பின் இருப்பது ஒரு பெண் என்ற பழமொழிக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டம்மா!” என்று கனிவுடன் சொல்கிறார் கருவூரார். அனைவரையும் ஒருமையில் விளித்தாலும், சோழமகாதேவியை மட்டும் பன்மையிலேயே விளிப்பார். ஏனென்று கேட்டால், மகாராணியார் உமையவளின் அம்சம் என்று சொல்லிவிடுவார்.

“அப்படியென்றால் உடனே விஷயத்திற்கு வருவோம். அருள்மொழி! இந்தக் குழலுக்குள் இருக்கும் தங்கச் சுருளில் இருப்பது இந்த ஓலைக் கட்டிலும் எழுதப்பட்டுள்ளது” என்று தன் முன்னால் இருக்கும் சாய்வுமேசையில் இருக்கும் ஓலைச் சுவடியை எடுக்கிறார் கருவூரார். சிறிது நேரம் கண்களை மூடி சிவபெருமானை வணங்கிவிட்டு, சிவாச்சாரியிடம் ஓலைச் சுவடிக் கட்டைக் கொடுத்து கண்களால் சைகை செய்கிறார். உடனே தென்திசையை நோக்கும் நடராஜரின் காலில் வைத்து வணங்கி, அவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டு, அருகில் அமர்ந்து கொள்கிறான் சிவாச்சாரி
.
“மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி. ஆகவே, மன்னர்கள் மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பைச் சுமக்க வேண்டும். தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால் இரண்டுவிதமான எழுத்துக்கள் உள்ளன. ஒன்று நாம் எழுதும் கிரந்த எழுத்து, இரண்டாவது பாண்டியர்களும், சேரர்களும் எழுதும் வட்டெழுத்து29. ஆக தமிழ் கூறும் நல்லுலகத்திலேயே இரண்டு விதமான எழுத்துக்கள் நம்மைப் பிரிக்கின்றன. சீனத்தில் பல மொழிகளும் ஒரே விதமான ஓவிய எழுத்துக்களையே பயன்படுத்துவதால் , சீன ஒற்றுமை ஓங்கியிருப்பதாக சீனப் பயணி ஒருவர் விட்டுச் சென்ற ஆதாரம் நமக்குத் தெரிவிக்கிறது. இந்த உண்மை நமக்கு விளக்குவது என்ன? மக்களை இணைக்க எழுத்துகளும் ஒருவழி என்பதுதானே? எனவே, முதல் திருப்பணி தமிழகத்தில் ஒரே விதமான எழுத்துக்களே புழங்கப்படவேண்டும் என்ற உத்திரவைப் பிறப்பித்து அதை நிறைவேற்றுவதாகும். அருள்மொழி! நீதான் அதைச் செய்ய வேண்டும்!”  என்ற கருவூரார்க்குத் தலையசைத்துத் தன் சம்மதத்தைத் தெரிவிக்கிறார் இராஜராஜர்.

“இன்னொன்று, நாம் மற்ற மன்னர்களுடன் மண உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் இதனால் தேவையற்ற போர்கள் தவிர்க்கப்படும். தமிழ் பரப்பப்படும். உதாரணமாக, கீழைச் சாளுக்கியனான விமலாதித்தனுக்கு குந்தவியை மணமுடித்தது ஒரு நல்ல இராஜதந்திரமான செயலே ஆகும். இதனால் சாளுக்கியர்களுடன் போர் தவிர்க்கப்பட்டது.” என்று தன்னுடைய திட்டத்தை விளக்க ஆரம்பித்தார் கருவூரார்.

“மதுராந்தகா! நீ என்னைக் கேட்பதற்கு முன்னரே பதிலளிக்கிறேன். எந்த ஒரு மொழியும் தாய் மூலமாகவே சிசுவிற்குச் செல்கிறது. எனவே பேசும் மொழியைத் தாய்மொழி என்று ஆன்றோர் அழைக்கிறார்கள். இருப்பினும், தாயின் செல்வாக்கு குறையும் பொழுதோ, மற்ற மொழியினர் இடையில் வளர்ந்தாலோ, தாய்மொழி பேசும் பழக்கம் குறைவதால், பேசிவரும் மற்றமொழி கட்டாயத்தால் தாய்மொழியாகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இதற்குத் தலையாய காரணம் தாயின் கவனக்குறைவு என்றே சொல்லலாம். அது பலவிதத்தால் ஏற்படலாம். உன் தங்கை குந்தவிக்கு அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டதால்தான் நரேந்திரன் தெலுங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டான். குந்தவியுடன் தமிழ் பேசும் தாதியரையும் செவிலியர் பலரையும் அனுப்பி, தமிழ் கற்பிக்க தமிழ் ஆசிரியரையும் அனுப்பியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்றே சொல்லலாம். ஆகவே, நரேந்திரனின் சந்ததிகள் தமிழில் பற்றுவைக்கும்படியான சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்!” என்று பொருட்செறிந்த பார்வையுடன் இராஜேந்திரனை நோக்குகிறார் கருவூரார்.

“தேவரே, நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள்?”

“மதுராந்தகா! அம்மங்கை உன்னைப்போல் மிகவும் உறுதியான மனம் படைத்தவள். அவளுக்கு தமிழ்ப் பற்றை வளர்த்து அவளை நரேந்திரனுக்கு மணமுடித்து வேங்கை நாட்டின் வருங்காலப் பட்டத்து ராணி ஆக்கு. அது மட்டுமின்றி, அவளுடன் நிறையத் தமிழ் ஆசிரியர்களை அனுப்பு. அவளது சந்ததிகள், உன்னுடைய பேரன் பேத்திகள், தமிழையே தம் தாய்மொழியாக வரிக்கும்படி செய்யவேண்டியது உன் பொறுப்பு.” கருவூரார் அன்புக் கட்டளையிடுகிறார்.

“அது நடக்கும் என்று உறுதியளிக்கிறேனய்யா!”  என்று தன் சம்மதத்தை அவருக்கு அளிக்கிறான் இராஜேந்திரன்.

“நமது அரசகுமாரிகளைச் சேரர், பாண்டியர்களுக்கு மணமுடித்து அவர்களையும் நம் உறவாக்கிக் கொள்ளவேண்டும். இது தமிழகத்தில் உள்நாட்டுப் போரைத் தவிர்க்கும். அவர்களும்...”

அவர் மேலே தொடர்வதற்குள், “தேவரே! என் பெரிய தகப்பனைக் குரூரமான முறையில் கொன்ற பாண்டியப் பதர்களுடன் மண உறவா? நீங்கள் என்ன சொன்னாலும் நான் அமைதியாக காப்பேனா என்று என்னை விளையாட்டாகச் சோதிக்கும் முறையா இது?” இராஜேந்திரன் தன்னுடைய ஆத்திரத்தை மிகவும் கட்டுப் படுத்திக்கொண்டு தன் விருப்பமின்மையைத் தெரவிக்கிறான்.

“நானும் இதில் என் மகன் பக்கம்தான் ஐயா!”  என்று இராஜராஜர் கூறியது இராஜேந்திரனுக்கு வியப்பை அளிக்கிறது. தன் கருத்தை அப்படியே அவர் ஒப்புக்கொள்வது இதுதான் முதல் முறையாகும். அவரிடம் மதிப்பு பெருகுகிறது.

“அருள்மொழி, மதுராந்தகா! உங்களிடமிருந்து இப்படிப்பட்ட குறுக்கீடு வரும் என்று தெரிந்தேதான் இதைச் சொல்லவேண்டியிருந்தது. காழிப் பிள்ளையாரான திருஞான சம்பந்தர் தனது ஆலவாய்ப் பதிகத்தில்,

“மங்கையர்க்கரசி வளவர் கோன் பாவை
வரிவளர்க் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாயாவதும் இதுவே!"என்று இயம்பியுள்ளாரே! பாண்டி நாடே சமணர்கள் பிடியில் சிக்கி, சைவம் தவியாய்த் தவித்தபோது ஆளுடைய பிள்ளையாரை மதுரைக்கு வரவழைத்து, சைவத்தைத் தழைக்கச் செய்த செல்வியான மங்கையர்க்கரசி சோழநாட்டு இளவரசி என்பதை என்ன அருமையாக வளவர்கோன் பாவை என்றதோடு மட்டுமல்லாமல் பாண்டிமாதேவி என்றும் அழைத்திருக்கிறாரே! சிவபெருமானையும், உமையவளையும் தவிர யாரையும் பாடாத தமிழ்ஞான முனிவர் மனிதப் பிறவிகளான மங்கையர்கரசியாரையும், அவரது அமைச்சர் குலச்சிறையையும் பற்றி ஒரு பதிகமே பாடியுள்ளார் என்றால் அவர்கள் மீது அவர் எந்த அளவுக்கு மதிப்பு வைத்திருக்க வேண்டும்! பாண்டிய நாட்டை சமணர்கள் வசமிருந்து ஒரு சோழநாட்டு இளவரசிதானே மீட்டாள்? அப்படியிருக்க தமிழை வளர்க்கச் சோழ இளவரசிகளால் இயலாது என்றா நினைக்க வேண்டும்?

“தவிர, பாண்டியர்கள் யார்? சங்கம் மூன்று அமைத்துத் தமிழை வளர்த்தவர்கள். களப்பிரர்கள் கையில் சிக்கித் தவித்த தமிழ்நாட்டில் பாதியை மீட்டுத் தந்தவர்கள் அல்லவா? அதுமட்டுமா? மதுரைப் பாண்டிய இளவரசியான அங்கயற்கண்ணியை சொக்கநாதரான சிவபெருமான் மணந்து பாண்டியநாட்டையே சீதனமாகப் பெறவில்லையா?

“இப்பொழுது இருக்கும் மன நிலையில் இந்தக் கட்டையின் கூச்சல் உங்கள் மனதில் பதிவது எளிதில்லைதான். இதை மேற்கொண்டு வளர்த்து உங்கள் கருத்தைத் தடிகொண்டு கனியவைக்க இந்தக் கட்டை விரும்பவில்லை. வேறு திட்டங்களுக்குச் செல்வோம்.

“தமிழ்ப் பள்ளிகள் ஊர்கள் தோறும் திறக்கவேண்டும். முதலில் சேரநாட்டிற்கும், பின்னர் சாளுக்கிய நாட்டிற்கும் தமிழ் ஆசிரியர்களை அனுப்பி குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுத்தர ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் அறிந்தால் மட்டுமே அரசில் பணி கிடைக்கும் என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்தைச் சோழப் பேரரசின் தலைசிறந்த சட்டமாக்கவேண்டும். தவிர வைணவர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது. வைணவக் கோவில்களில் வடமொழியில் பூசைகள் நடந்தாலும், தமிழ்ப் பிரபந்தங்களைப் பட்டாச்சாரியர்களே ஓதுகிறார்கள். சாற்றுமுறை என்று அதை மதிக்கிறார்கள். ஆக தமிழ் கருவரையில் திருமாலுக்கு அர்ப்பணமாகிறது. அப்படியிருக்க, சிவன் கோவில்களில் நாம் தமிழை கருவரைக்கு வெளியில் அனுப்பிவிட்டோம். ஓதுவார்கள் கருவரைக்கு வெளியில் நின்று தமிழ் வேதமாம் தேவாரத்தை ஓத ஆரம்பித்திருக்கிறார்கள், அதுவும் நீ ஆணையிட்ட பின்னர். இது ஏன்? சிவாச்சாரியர்களே ஏன் தேவாரத்தை ஓதக் கூடாது? திருமால் ஏற்றுக்கொள்ளும் தமிழை தென்னாடு மற்றுமின்றி என்னாட்டவர்க்கும் இறைவனான முக்கண்ணன் ஏற்கமாட்டாரா? யோசித்துப் பாருங்கள்.”

சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு கருவூர்த்தேவர் மீண்டும் பேசத் துவங்குகிறார்.

“இதுவரை கருநாட்டார் மூலமாகத்தான் நமக்கு நிறைய இடையூறு வந்திருக்கிறது. காவிரியின் போக்கை அடைக்க முற்பட்டவர்கள் அவர்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு எதிரிகளாக இருந்து வருகிறார்கள். அவர்களை இப்பொழுது சோழ நாட்டின் கீழ் கொண்டு வந்திருக்கிறீர்கள். அவர்களை தமிழை ஏற்றுக் கொள்ளும்படி செய்தால் கருநாடும் தமிழ்நாடாகும் அல்லவா? உன் பேரரசில் அமைதி பரவுமே!

“இதற்காக உடனே தமிழ் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் பயிற்சி பெறவேண்டும். சாளுக்கிய நாட்டிற்கும், கருநாட்டிற்கும் நிறையப் பேர் அனுப்பப்பட வேண்டும். தமிழ் கற்றுக் கொள்ளுவோருக்கு மானியம், வரிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும். இதைக் கண்காணிக்க உங்களுக்கு நம்பகமான ஒற்றர்கள், அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்க்கல்வி கட்டாயம் என்று அறிவிக்கப்பட வேண்டும். சோழப் பேரரசின் அரசு மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும். வடமொழியில் உங்களுக்குத் திருமுகம் வருவதை நிறுத்த வேண்டும்...”[வளரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
29எட்டாம் நூற்றாண்டில் பல்லவர்களும், சோழர்களும் தமிழைக் கிரந்த எழுத்துக்களில் எழுத ஆரம்பித்தார்கள். இதில்  சில வடமொழி எழுத்துக்களான, “ஸ, ஷ, ஹ, ஜ” முதலானவை சேர்க்கப்பட்டன. ஆரம்பத்தில் பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் வட்டெழுத்துக்களே வழக்கத்தில் இருந்தன. - ஐராவதம் மகாதேவன், "Early Tamil Epigraphy from the Earliest Times  to the Sixth Century A.D.” - 2003

1 comment:

  1. ( ஒரு முக்கிய அறிவிப்பு: கடலூர் மாவட்ட எழுத்தாளப் பெருமக்களுக்கு வரும் ஆகஸ்ட் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை) சேலம் மாவட்டத்திற்கும் நடத்தினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete