Thursday 31 July 2014

வைணவ ஆசார்ய வைபவம்-2:இராமபிரானும் இந்திரனும்




                        இராமபிரானும் இந்திரனும்

                      வளவ துரையன் வழங்கும் 

வைணவ ஆசார்ய வைபவம்-2:
தாதை ஏவியதானத்தாயுரை கொண்டு இராமபிரான் சீதையும் இலக்குவனும் தொடர வனம் புகுந்தார். வனத்தில் விராதனை வதம் செய்தபின் மூவரும் முனிவர்கள் வாழ்கின்ற மரங்கள் நிறைந்துள்ள சோலையை அடைந்து தங்கினர்.

அந்தச் சோலையில் உள்ள ஆசிரமத்தில் சிறந்த தவத்தை உடைய முனிவரான சரவங்கர் தங்கியிருந்தார். பிரமதேவன் கட்டளைப்படி சரவங்களுக்கு அருள் செய்ய அவரை பிரமலோகம் அழைத்துவர இந்திரன் அங்கு வந்தான்.ஆனால் சரவங்கனோ “நான் எப்பொழுதும் அழியாமல் இருக்கின்ற பரமபதத்தை அடையவே பெரிதும் விரும்புவேன்” என்று கூறினான்
.
அச்சோலையில் இந்திரன் வந்து பேசிக் கொண்டு இருப்பதை அறிந்த இராமபிரான், சீதையையும் இலக்குவனையும் சோலைக்கு வெளியே நிறுத்தி விட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றார். இந்திரன் இராமபிரானைப் பார்த்தான்.

இந்திரன் இராமரைப் பார்த்ததைக் “கண்தாம் அவை ஆயிரமும் கதுவ, கண்தாமரை போல் கரு ஞாயிறு எனக் கண்டான்” என்று கம்பர் பாடுவார். இராமபிரான் அழகைக் கம்பன் இல்பொருள் உவமையாக அதாவது உலகில் இல்லாத பொருளுக்கு உவமையாக்குவார்.

இராமபிரான் ஒரு கருப்புச் சூரியன் போல் ஒளிவீசுகிறார். அதே நேரத்தில் அவர் கண்கள் இரண்டும் தாமரை மலர்கள் போல் உள்ளன என்பது கம்பர் வாக்கு. “ஏரார்ந்த கருநெடுமால் இராமனாய்” என்று குலசேகர ஆழ்வார் அருளிச் செய்வார்.

இராமபிரானின் தற்போதைய தோற்றம் கண்டு மனம் வருந்திய இந்திரன் அவரைப் போற்றித் துதிக்கத் தொடங்கினான்.

“எல்லாப் பொருள்களிலும் கலந்தும் கலவாமலும் விளங்கும் ஒளியே! பெருங்கருணைக் கடலுக்கு இருப்பிடமானவனே! வேதங்களின் வழியே ஆராய்ந்து கண்ட மெய்யறிவினால் அறியப்படும் மெய்ப்பொருளே! எம் தந்தையே” என்று வணங்கும் இந்திரன்.

“இருநிலத்தவோ நின் இணை அடித்தாமரைதாம்” எனத் துதிக்கிறான். எமக்கு உதவி செய்யும் பொருட்டு உன்னுடைய திருவடிகளாகிய இரு தாமரைகள் இப்பெரிய நிலத்தில் பொருந்தியுள்ளன என்பது இவ்வடிகள் மூலம் விளக்கப்படுகிறது.

இதே உவமையைப் பயன்படுத்தி “வானவர் கைதொழும் இணைத் தாமரையடி எம்பிரான்” (1+8+3) என்று மங்கை மன்னன் பாடுவார். இதையே ‘அடித்தாமரை” (96) என்று பேயாழ்வாரும் “செந்தாமரையடிகள்” (2-5-1) என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்வர்.

மேலும் ‘கருங்கடலில் கண் வளர்ந்தோய்’ என்று இந்திரன், இராமபிரானைத் திருமாலின் வடிவமாகவே போற்றுவதாகக் கம்பர் பாடுவார். 
---------------------------------------------------------------------------------------------------------------------

   ஒரு முக்கிய அறிவிப்பு: கடலூர் மாவட்ட எழுத்தாளப் பெருமக்களுக்கு 
                   வரும் ஆகஸ்ட் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை 
                    கடலூர் மாவட்டச சிறப்பிதழ்  மாதமாக  நமது 
                   இணையவெளி கொண்டாடத் தீர்மானித்துள்ளது. 
                   இதில் கவிதை கட்டுரை, சிறுகதை, பயணக்
                   கட்டுரை, சிறப்புச் செய்திகள், நேர்முகங்கள், 
                    புகைப்படங்கள்  என எதைவேண்டுமானாலும் 
                     எழுத்தாளப்பெருமக்கள் எழுதியனுப்பலாம் . 
                  பிரசுமாகும் ஒவ்வொரு படைப்புக்கும் ரூ.100/-பரிசு 
நூலாக விரும்பினால் நூலாகவோ பணமாகவோ 
அனுப்பி வைக்கப்படும் புகைப்படமும் அனுப்பலாம். 
ஒரே ஒரு வேண்டுகோள் 
             அன்புகூர்ந்து பிற வலைத்தளங்களில் இருந்து பிரதி 
எடுத்து அனுப்பிவைத்து விடாதீர்கள். கண்டுபிடிக்கப்படும். 
அனுப்பியவர் வருந்த நேரிடும் 
                எந்த ஒரு படைப்பும் யுனிகோட்[ஒருங்குறி] வடிவில் 
               மட்டுமே இருக்க வேண்டும்  vaiyavan.mspm @ gmail.com 
              என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம் 
           மிகச் சிறந்தவை தொகுக்கப்பட்டு சென்னை தாரிணி 
           பதிப்பகத்தாரால் நூலாக்கப்படும் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
பெருமாள் பாற்கடலுள் அறிதுயில் கொள்வதை “கடலுள் நெடுங்காலம் கண்வளர்ந்தான்” என்று பெரியாழ்வாரும், “பாற்கடலுள் கண்துயிலும்” என்று (2-6-6) குலசேகரப் பெருமாளும் “வெள்ளத்தின் மேல் கள்ள நித்திரை கொள்கின்ற” (5-1-7) என்று பெரியாழ்வார் மீண்டும் அருளிச் செய்கிறார்கள்.

“உனக்குப் பகைவர், நண்பர் இல்லை; ஒளி, இருள் இல்லை; மேல், கீழ் இல்லை; இளமை, முதுமை இல்லை; முதலும் இடையும் முடிவும் இல்லை; முன், பின் இல்லை; நீ எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பெருமை உடையவன்” என்கிறான் இந்திரன்.

“மேலும் நீ நான்முகனைத் தோற்றுவித்தாய், அந்த நான்முகன் பல உலகங்களைப் படைத்தான். அந்த உலகங்களை அளவுகருவியாகக் கொண்டு அளந்தாலும் உன் குணங்களுள் ஒன்றைக் கூட அளவிட முடியாது” என்று போற்றுகிறான் இந்திரன்.மேலும்,

‘தாழி தரைஆக தண்தயிர் நீர்ஆக
தடவரையே மத்துஆக தாமரைக் கை நோவ
ஆழி கடைந்து அமுதல் எங்களுக்கே ஈந்தாய்’ என்று

‘பூமியே தயிரை உடைய பானையாகவும், பாற்கடலின் நீரே குளிர்ந்த தயிராகவும், பெரிய மந்தர மலையே கடைகின்ற மத்தாகவும் கொண்டு, தாமரை மலர்கள் போன்ற கைகள் வருந்த கடல் கடைந்து அமுதம் தந்தாயே” என்று பொருளில் இந்திரன் வணங்குவதாக கம்பர் எழுதுகிறார்.

“அமரர்க்கு அமுது ஈந்த ஆயர் கொழுந்தை” (1-7-9) என்று நம்மாழ்வாரும் “வலிமிக்க வாள் வரை மத்தாக வலிமிக்க வாணாகஞ் சுற்றி மறுகக் கடலைக் கடைந்தான்” (மூன் 46) என்று பேயாழ்வாரும் அருளிச் செய்துள்ளது இங்கு நினைவு கூறத் தக்கது.

இந்திரன் இராமபிரானை நோக்கி “நீ ஆதி காலத்தில் ஒன்றாக இருந்தாய்; பின்பு பல்வேறு வடிவங்கள் ஆகிறாய்; ஊழிக்காலம் பெரும் பிரளயத்தால் முடியம்போது முதலில் இருந்த ஒன்றாகும் நிலைபெறுகிறாய்” என்று திருமாலின் அலகிலா விளையாட்டைக் கூறிப் போற்றுகிறான்.

“ஊழிகளாய் உலகு ஏழும் உண்டான்” என்று நம்மாழ்வாரும் ‘ஊழி ஏழுலகு உண்டு உமிழ்ந்தானே” (திரு-71) “(5-1-2) என்று பெரியாழ்வாரும் அருளிச் செய்வர்.

இவ்வாறு பலவாறாகப் பெருமாளாகிய இராமபிரானைப் போற்றிய இந்திரன் விடைபெற்று தேவலோகம் போனான். சரவங்க முனிவர் இராமபிரானை வரவேற்றார். இராமபிரான் சீதையுடனும் இலக்குவனுடனும் அந்த இரவை ஆசிரமத்தில் கழித்தார்.

மறுநாள் சரவங்கர் தன் மனைவியுடன் பிறப்பு நீங்கி பரமபதம் அடைந்தார்.
[மீண்டும் வரும்]

No comments:

Post a Comment