Sunday 20 July 2014

ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள் ...தமிழ் இனி மெல்ல.. 13

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி 
தமிழ் இனி மெல்ல.. 13தொடர்கிறது

அரிசோனா மகாதேவன் 


[சென்ற பதிவின் இறுதியில்]
“மின்காந்தப் புயலோட தாக்கம் சிலநாள்ல போயிடுமில்லையா? அப்படியிருக்கறச்சே கற்காலத்துக்குப் போயிடுவோம்னு ஏன் சொல்றீங்க. சோம்த்?”  அவள் குரலில் நடுக்கம் இருக்கிறது.

“காரிலே நான் வச்சிருந்த திசைகாட்டியைப் பாரு, அது எந்தத் திசையைக் காட்டுது? காரு கிழக்கே பாக்க இருக்கு, ஆனா அது வடக்கேன்னு சொல்லுது, இப்பப் பாரு, அது மெல்லக் கத்துது. இது ஏன் தானா கத்தணும்? பூமியோட காந்த சக்திக்கு ஏதோ மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. பெரிய அளவுல மாற்றம் வந்தா, முறையான காந்த சக்தியே இல்லாம போயிடும். அப்ப ஜெனரேட்டர் மூலமா மின்சக்தி உண்டு பண்ண முடியாது. அதைவிடு நம்ம கடிகாரங்கள்லே சின்ன பாட்டரி இருக்கு. அதுவே காந்த சக்தி மாற்றத்தாலே மின்சார சேமிப்பை இழந்துடுச்சு. இனிமே நாம் இதுவரைக்கும் செஞ்சுக்கிட்டு வந்த வேலையைச் செய்ய முடியாது.

“வீட்டுக்குப் போய் வருங்காலத்துலே என்ன பண்ணறதுன்னு யோசிப்போம். நல்லவேளையா எனக்குத் தனிவீடு இருக்கறதுனால பெரிய கஷ்டம் ஒண்ணும் இருக்காதுன்னு நினைக்கிறேன். மூணு கிலோமீட்டர் நடப்பே இல்லையா?” என்று நடக்க ஆரம்பிக்கிறார் சோம்காந்த்.

அவர் சொன்ன அதிர்ச்சியான செய்திகளை மனதில் ஜீரணிக்க முயன்று கொண்டே அவருடன் மெதுவாகத் தன் கையை இணைத்துக் கொண்டு தன் பயத்தை ஒருவாறு மறைக்க முயன்றவாறே நடக்கிறாள் ஸஹஜா.

இந்தப் பதிவு ...
[நிமிஷாவுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையில் நடக்கும் ஒருவிதமான பிணைப்பை .....]

                               ஹோட்டல் ராஜ்ராஜ், தஞ்ஜு

  ஹோட்டலில் எங்கும் ஒரே கூச்சல், குழப்பம், தடுமாற்றம் - மின்சாரம் நின்று போனதாலும், அவசரத் தேவைக்காக இருந்த மின் உற்பத்தி இயந்திரங்கள், பாட்டரிகள் வேலை செய்யாததாலும் விளக்குகள் அணைந்து போய் எல்லாவிடமும் ஒரே இருட்டு. அதனால் மாடியேறவும் இறங்கவும் முடியாமல் லிஃப்டுகள் நின்று விடுகின்றன. ஆகவே அவற்றில் மாட்டிக் கொண்டவர்கள் தகர டின்னில் மாட்டிக் கொண்டு, வெளியேற முடியாது தவிக்கும் எலிகள் மாதிரித் தவிக்கிறார்கள்.

வரவேற்புக்கூடத்தில் ஒரே பரபரப்பு - மின்வெட்டுதான் இவை எல்லாவற்றுக்கும் காரணம் என்று மின் இலாகாவுடன் தொடர்பு கொள்ள முயல்பவர்களுக்கு அமைதிதான் பதிலாகக் கிடைக்கிறது. அவர்களால் யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

அழகேசன், ஏகாம்பரம், ஈஸ்வரன் மூவரும் சாப்பாட்டு வண்டியைத் தள்ளிக் கொண்டு லிஃப்ட்டின்முன் நிற்கும் பொழுது இந்த மின்வெட்டு ஏற்படுகிறது. முதல் நாளே சில சமயங்கள் விளக்குகள் அணைந்து போனது அவர்கள் நினைவுக்கு வருகிறது. எனவே சிறிது நேரம் சென்றால் மின் இணைப்பு மீண்டும் கிடைக்கும். மேலே செல்லலாம் என்று பொறுமையுடன் காத்திருக்கிறார்கள். சற்றுத் தள்ளி வரவேற்புக்கூடத்திலும், வாசலிலும் குழப்பத்துடன் கூக்குரல்கள் கேட்கவே, அவர்களைச் சிறிது நேரம் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அழகேசன் வாசல் நோக்கி விழைகிறான். நேரில் சென்று என்னவென்று பார்க்கலாம் என்று வெளியில் வந்தவனை வியப்புக்குள்ளாக்குகிறது அங்கு தெருவில் அவன் காணும் காட்சி!

தெருவில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டிகள் அனைத்தும் நின்று போயிருக்கின்றன. ஒரேயடியாக இப்படி ஆகிவிட்டதே என்று வண்டியிலிருந்து மக்கள் வெளியே வந்து திகைப்புடன் பார்க்கிறார்கள். சில வண்டிகள் மோதிக்கொண்டு தாறுமாறாகக் கிடக்கின்றன. ஒன்றன்மேல் ஒன்று ஏறியதால் சில இடங்களில் வண்டிக் குவியல்களும் தெரிகின்றன. அதனால் காயம்பட்டோரின் கூச்சலையும், உடைந்த வண்டிகள் தாறுமாறாகக் கிடப்பதையும் பார்த்து, ஹோட்டலிலிருந்து வெளியே வந்தவர்கள் திகைக்கிறார்கள். கருநீலவானமும் மெதுவாக வெளிற ஆரம்பிக்கிறது. சிவப்பும் வெள்ளையுமாகத் தெரிந்து வந்த மின்னொளிச் சிதறல்களும் மறைய ஆரம்பிக்கினறன.

எந்த வண்டியையும் ஓட்டத் தெரியாவிட்டாலும் (எடுபிடிகளுக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுக்கக்கூடாது என்பது சட்டம்) எல்லா வண்டிகளிலும் மோதலைத் தவிர்க்கும் சாதனங்கள் உள்ளன என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே தெருவில் ஒட்டு மொத்தமாக எல்லா வண்டிகளும் நின்று விட்டிருப்பது மட்டுமல்லாமல் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டிருப்பதற்கு மனிதச் சக்திக்கு அப்பாற்பட்ட நிகழ்வே காரணம் என்று உணர்ந்து கொள்கிறான் அழகேசன். அந்த நிகழ்வுதான் மின்வெட்டை இப்பொழுது உருவாக்கியிருக்கிறது என்றும் அவனது தற்காப்பு உள்ளுணர்வு உணர்த்துகிறது.

அவன் தன்னுடைய இளம் வயதில் முழு சூரிய கிரகணத்தைப் பார்த்திருக்கிறான். அப்பொழுது இருட்டுமே தவிர இம்மாதிரி, கருநீல வானத்தையோ, சூரியனிடமிருந்து கிளம்பிய சிவப்பும் வெள்ளையுமான பொறிச் சிதறல்களையோ அவன் கண்டதில்லை. ஆகவே இந்த நிகழ்வுகளும் இயற்கையின் ஒரு சீற்றமே என்று புரிந்து கொள்கிறான். மனம் மத்ரா நகர்த் தெய்வமான மீனாட்சியையும், மாரியம்மனையும் துணைக்கு அழைக்கிறது. தன்னைப் பத்திரமாக வைத்திருக்கும்படி ஒருகணம் வேண்டுகிறது.

மறுகணம் அவனுக்கு ஹோட்டலில் முப்பதாவது மாடியில் இருக்கும் நிமிஷா, காமாட்சி இவர்களின் நினைவு வருகிறது. அவர்களுக்கு என்ன ஆயிற்றோ, அவர்கள் தன்னந்தனியாக அல்லவா மாட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டியதல்லவா நமது கடமை என்ற நினைவு வந்தவுடன் உடனே ஈஸ்வரனும், ஏகாம்பரநாதனும் இருக்குமிடத்திற்கு ஓடுகிறான்.

வேகமாக ஓடிவரும் அவனைப் பார்த்துத் திகைக்கின்றனர் இருவரும். என்னவாயிற்று என்று அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “ஏதோ கெட்டது நடந்து போச்சு! உடனே நாம மேல போயி காமாச்சியையும், நிமிசாம்மாவையும் பார்க்கணும். வாங்க, மேல்மாடிக்குப் போகலாம்!” என்று அழைக்கிறான் அழகேசன்.

“லிப்டுதான் அப்படியே நின்னு போச்சுதே! எப்படி மேல்மாடிக்குப் போறதாம்?” என்று கேட்ட ஈஸ்வரனுக்கு கோடியில் இருக்கும் மாடிப்படிகளைச் சுட்டிக்காட்டுகிறான் அழகேசன்.

ஈஸ்வரனின் கண்கள் அழகேசன் சொல்வதை நம்பாமல் விரிகின்றன. “நாம முப்பது மாடி ஏறிடலாம். ஏகாம்பரம் எப்படி முப்பது மாடி ஏறுவான்?” என்று கேட்கிறான்.

“உனக்கு இப்ப எப்படி சொகுசைப் பத்தின நினப்பு வரலாம்?” என்று உறுமுகிறான் அழகேசன். “இங்க பாரு ஈஸ்வரா? சிபாலியம்மா திரும்பி வர்ற வரைலே அந்தப் பெண்ணுங்க ரெண்டு பேரும் இந்தப் பையனும் என் பொறுப்பு. அந்தப் பொண்ணுங்க ரெண்டு பேரும் தனியா என்ன திண்டாட்டம் திண்டாடறாங்களோ, யோசிச்சுப் பாரு. அவங்களுக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சன்னா நான் சிபாலியம்மாவுக்குச் செய்து கொடுத்த உறுதிமொழி என்ன ஆறது?  இந்தப் பையனுக்கு காலு வலிச்சா, இவனை நான் முப்பது மாடியும் தூக்கிட்டே போவேன். அவுங்க பசியா இருப்பாங்க. சாப்பாடு சட்டிகளைத் தூக்கிக்கிட்டு என்னோட வா!”

ஈஸ்வரன் தலையை ஆட்டுகிறான். “நீ சொல்றது ரொம்ப சரி அழகேசா! எடுபிடியிலேயேயும், கடைப்பிடியாகத் தள்ளப்பட்ட என்னைக் கைதூக்கி விட்டவங்க ஷிபாலியம்மா. அவங்களுக்கு நாம் நன்றியா இருக்கத்தான் வேணும். உனக்கு இருக்கற பதட்டம்தான் எனக்கும் இருக்கு. நீ சொல்றபடி அவங்க பட்டினியா இருப்பாங்க... சரி போவோம் வா. தம்பி ஏகாம்பரம், வாப்பா! மேலே போயி உங்க அக்காவைப் பார்க்கலாம்!” என்று அழகேசனையும் ஏகாம்பரநாதனையும் பார்த்துப் பதில் சொல்கிறான். ஆளுக்கு இரண்டு சாப்பாட்டுப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மூவரும் மாடிப்படி ஏறுகின்றனர்.

நான்கைந்து மாடி ஏறியவுடனேயே ஏகாம்பரநாதனுக்குக் கரம் வலிக்க ஆரம்பிக்கிறது. வியாதியிலிருந்து மீண்ட பூஞ்சை உடம்பு அவனுக்கு. அவள் நிலைமையைப் புரிந்து கொண்ட அழகேசன் அவனைத் தன் தோள்களின் மீது ஏற்றிக்கொள்கிறான். முப்பதாவது மாடியை அவர்கள் அடையும்போது இருபத்தைந்து நிமிஷங்கள் கழிந்து விடுகின்றன. ஈஸ்வரனுக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகிறது. சாப்பாட்டுப் பாத்திரங்களைத் தூக்கி வந்ததனால் கைகள் விண்விண்ணென்று வலித்துத் தெறிக்கின்றன. கால்கள் ஈயத்தால் செய்யப் பட்டதைப் போல கனமாகி வலிக்கின்றன. சட்டை வியர்வையினால் தொப்பலாக நனைந்து விட்டிருக்கிறது. ஆனால் அழகேசனோ ஏதோ கடற்கரையில் நடந்துவிட்டு வந்ததைப் போல சாதாரணமான மூச்சுடன், கைகளிலிருக்கும் சாப்பாட்டுப் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு ஏகாம்பரநாதனையும் இறக்கி விடுகிறான்.

இருவரும் அறைக்கதவைத் தட்டி, “காமாச்சி, நிமிசாம்மா!” என்று கூப்பிடுகின்றனர்.

ஏகாம்பரநாதனும் “அக்கா, அக்கா, நிமிசாக்கா, நாங்க சாப்பாடு கொண்டு வந்திருக்கோம்! கதவைத் திறங்க!”  என்று கத்துகிறான்.

காமாட்சியை அவர்களது கூச்சல் மகிழ்ச்சியான அதிர்வடைய வைக்கிறது. அவள் உடனே எழுந்திருந்து நிமிஷாவை எழுப்பி, நிம்மதியான பெருமூச்சுடன், ”நிமிசாம்மா,  நம்ம மனிசங்க வந்துட்டாங்க. அழகேசனும், ஈஸ்வரனும் கதவைத் தட்டறாங்க!”  என்று மகிழ்வுடன் கூறுகிறாள்.

“எங்களால கதவைத் திறக்க முடியலை. தாப்பாள் திறக்க மாட்டேங்குது. நீங்கதான் எப்படியாவது கதவைத் தொறந்து விடணும்.” என்று காமாட்சி கத்துவது வெளியில் இருப்பவர்கள் காதில் விழுகிறது.

அங்குமிங்கும் பார்த்த அழகேசன் ஒரு மேஜையில் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வெண்கலப் பாவைவிளக்குச் சிலையை எடுத்து வருகிறான்.

“ஈஸ்வரா, கொஞ்சம் நகந்துக்க,” என்று ஈஸ்வரனையும், ஏகாம்பரநாதனையும் கைகளால் நகர்த்தியவள், “காமாச்சி, நான் கதவை உடைக்கப் போறேன், ரெண்டு பேரும் தள்ளி நின்னுக்கங்க!”  என்று கத்திவிட்டு, கதவின் பூட்டு இருக்குமிடம் எது என்று ஊகித்து பாவைவிளக்கால் ஓங்கி ஓங்கி இடிக்கிறான். அவன் புஜங்கள் புடைத்து எழுகின்றன. ஐந்து நிமிஷங்களில் கதவு உடைந்து கொண்டு திறந்து கொள்கிறது. மூவரும் உள்ளே நுழைகின்றனர்.

தம்பியைப் பார்த்த காமாட்சி, அழுதுகொண்டே அவனைக் கட்டிக்கொள்கிறாள். அவள் கண்கள் அழகேசனையும், ஈஸ்வரனையும் பார்த்து நன்றிக் கண்ணீர் வடிக்கின்றன.

“பஹூத் ஷீக்ரியா கேஷ், ஈஸ்வ். ஹம் போத் வெரி டர் கயே! நவ் ஹமே ஃபிர் ஜிந்தகி கம். (மிக்க நன்றி, நாங்கள் இருவரும் மிகவும் பயந்துவிட்டோம்! இப்பதான் பழையபடி உயிர் வந்தது)” என்று நன்றி தெரிவிக்கிறாள்.

அவள் நன்றி தெரிவிக்கிறாள் என்று அழகேசனுக்குப் புரிந்தாலும், அவள் என்ன சொல்கிறாள் என்று தெரியாமல் விழிக்கிறான். காதில் இருக்கும் மொழிமாற்றுக்கருவி ஏன் வேலை செய்யவில்லை என்று திகைக்கிறாள். உடனே புரியாத மொழியில் ஈஸ்வரன் நிமிஷாவுக்கு பதில் சொல்வது கேட்கிறது.

ஈஸ்வரன் இந்தியில் பேசுவது நிமிஷாவுக்கும், காமாட்சிக்கும் மட்டுமல்லாது, ஏகாம்பரநாதனுக்கும் வியப்பைத்தருகிறது.

“ஈஸ்வரண்ணே! ஒங்களுக்கு நிமிசாம்மா பாசை தெரியுமா?” என்று வியப்புடன் கேட்கிறாள் காமாட்சி.

“ஈஸ்வ், வாட் தும் ஹிந்தி அன்டர்ஸ்டான்ட்? (உனக்கு இந்தி தெரியுமா?)” என்ற இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியில் கேட்கிறாள் நிமிஷா. அவள் கண்களில் பளிச்சிட ஒளி ஈஸ்வரனை என்னவோ செய்கிறது.

தெரியும் என்பது போலத் தலையை ஆட்டுகிறான் ஈஸ்வரன்.

அப்படியே அவன் கைகளைப் பிடித்த நிமிஷா, அவனைச் சேர்த்து அணைத்துக் கொள்கிறாள். ஈஸ்வரன் உடலில் மின்சாரம் பாய்கிறது. சில கணங்கள் கழித்து வெட்கத்துடன் தன் அணைப்பை விடுகிறாள்.

அழகேசனின் கழுகுக் கண்கள் இதைக் கவனிக்கத் தவறவில்லை. அவனது மூளை நிமிஷாவுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையில் நடக்கும் ஒருவிதமான பிணைப்பை இரண்டு நாள்களாகப் பதிவு செய்து கொண்டுதான் இருக்கிறது. அதைப் பற்றி ஈஸ்வரனிடம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொள்கிறான்.
“அக்கா! நாங்க உங்களுக்காக முப்பது மாடி ஏறி சாப்பாடு கொண்டு வந்திருக்கோம். அழகேசண்ணன்தான் என்னைத் தூக்கிக்கிட்டு படியேறி வந்தாரு!” என்று பெருமையாகக் காமாட்சியிடம் சொல்கிறான் ஏகாம்பரநாதன். அழகேசனை நன்றியுடன் பார்க்கிறாள் காமாட்சி. அவர்கள் இருவருக்குள்ளும் மௌனமான ஒரு உரையாடல் நடக்கிறது.

இருவரும் மேசையில் உணவை எடுத்து வைக்கிறார்கள்.

“நிமிசாம்மா. உங்களுக்கு ரொம்ப பசியா இருக்கும். சாப்பிடுங்க!” என்று அழைக்கிறாள் காமாட்சி. தன்னுடன் மேஜையில் அமர்ந்து சாப்பிடும்படி அவளின், ஏகாம்பரநாதனின் கைகளைப் பற்றி இழுத்து அமர்த்துகிறாள் நிமிஷா. ஈஸ்வரனிடம் அவனையும், அழகேசனையும் தங்களுடன் சாப்பிட அமருமாறு இந்தியில் அழைக்கிறாள்.

முதலில் தயங்கினாலும், அவளுடைய கட்டாயத்தினால் இருவரும் சாப்பிட அமர்கின்றனர். ஒன்றும் பேசாமல் உணவை உண்ண ஆரம்பிக்கின்றனர்.

ஹோட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜில் தங்குவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயம் என்று ஈஸ்வரனுக்கும், அழகேசனுக்கும் சாப்பிட்டு முடித்தவுடனேயே புரிந்து போகிறது. பதனப் படுத்திய காற்று (ஏ.சி.) இல்லாததால் நிமிஷத்துக்கு நிமிஷம் காற்றுப் போகாத அந்த அறையில் வெப்பம் ஏறுகிறது. நிலைமை மோசமாவதற்குள் வெளியேற வேண்டும் என்று தெரிகிறது இருவருக்கும். அதைப் பற்றி கலந்துரையாடி ஈஸ்வனின் வீட்டிற்குச் செல்வது என்று தீர்மானிக்கிறார்கள்.

மன்றாடி, கெஞ்சிக்கூத்தாடி, ஒருவழியாக நிமிஷாவை அவர்களின் முடிவுக்குச் சம்மதிக்க வைக்கிறார்கள். நிமிஷாவுக்கு நிலைமையின் அதிர்ச்சியினால் சரியாகச் சிந்திக்கக்கூட முடியவில்லை. தினமும் ஷிபாலியைப் பற்றி ஹோட்டலில் வந்து விசாரிக்கலாம் என்று ஈஸ்வரன் தனக்குத் தெரிந்த இந்தியில் கூறி அவளைச் சமாதானப்படுத்துகிறான். வேறு வழியில்லை என்றறிந்த நிமிஷா அதற்குச் சம்மதிக்கிறாள்.

காமாட்சியின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. “ஈஸ்வரண்ணா! எங்களால் எங்க அப்பாவையும், அம்மாவையும் பார்க்க முடியுமா? எனக்கு ரொம்பப் பயமா இருக்குதுண்ணா? இப்படி ஒரேயடியா இருளாயிப் போயிருச்சே! என்ன ஆச்சு? நிலைமை பழையபடி மாறுமா?” என்று அழுகிறாள். இதுவரை நிலைமையை ஒரு விளையாட்டாக நினைத்து வந்த ஏகாம்பரநாதன், தமக்கையின் கண்ணீரைக் கண்டு பொறுக்காமல் கதற ஆரம்பிக்கிறான்.

“எங்களுக்கு மட்டும் என்ன தெரியும்? வெளியே இருக்கற நிலைமையைப் பார்த்தா நீங்க பயந்து போயிருவீங்க! ஒரே புரியாத கூத்தா இருக்கு. எல்லா இடத்திலேயும் இதே கஷ்டம்தான். எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு சாமியை வேண்டிப்போம் காமாச்சி! இப்ப உங்க எல்லாரையும் ஒரு நல்ல இடத்திலே கொண்டு வைக்கறதுதான் எங்க பொறுப்பு. இனிமே பொத்தானை அமுக்கினா எதுவும் நம்மத் தேடிக்கிட்டு வராது. தம்பி அழறான் பாரு. நீ அவனுக்குச் சமாதானம் சொல்லிட்டு, கிளம்பற வழியைப் பாரு.” என்று அவளைத் தேற்றுகிறான் ஈஸ்வரன்.

சிறிது நேரம் அழுது ஓய்கிறாள் காமாட்சி. எல்லோரும் புறப்படுகின்றனர். லிஃப்ட் கிடையாது. படியில் இறங்கித்தான் கீழே செல்ல வேண்டும் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியுறுகிறாள் நிமிஷா. கொஞ்சம் சண்டித்தனம் செய்கிறாள். என்ன செய்வது, எப்படி நிமிஷாவைச் சமாதானப் படுத்துவது என்று ஆண்கள் இருவரும் தவிக்கும் போது எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்கிறாள் காமாட்சி.

“ஏய், நிமிசா!” என்று அதட்டுகிறாள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறாள் நிமிஷா.

“என்ன நினைச்சுக்கிட்டிருக்கே? உம் மனசுலே? நீ என்ன ராசகுமாரியா? நாங்க எல்லாரும் உன்னோட வேலைக்காரங்களா? நம்மளச் சுத்தி நடக்கறது தெரியாம உன் கண்ணு என்ன அவிஞ்சா போயிடுச்சு? இங்கேயே கெட, பல்லாக்கு வந்து உன்னையத் தூக்கிக்கிட்டுப் போகும்!” என்று கத்திவிட்டு ஏகாம்பரநாதனின் கையைப் பிடித்துக்கொண்டு விடுவிடுவென்று படியிறங்குகிறாள் காமாட்சி. ஈஸ்வரனும் அழகேசனும் அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், தாங்கள் இனிமேல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

“சலோ நை, காம்ஸ். முஜே சோட்கே நோ கோ மேரி தீதீ. துஜே வித்தவுட் ஐ வாட் கரூன்? (போகாதே காம்ஸ். என்னை விட்டுப் போகாதே என் அக்கா. நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்)” என்று அழுதவாறே ஓடி படியிறங்கி வந்து காமாட்சியைக் கட்டிக்கொள்கிறாள். அவளைத் தன்னுடன் அணைத்துக் கொள்கிறாள் காமாட்சி. அவளது அதிர்ச்சி வைத்தியம் உடனே பயனளித்ததைப் பார்த்து நிம்மதியடைந்தவாறே படியிறங்க ஆரம்பிக்கின்றனர் ஈஸ்வரனும் அழகேசனும்.

ஹோட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜை விட்டுக் கிளம்பிய ஐவரும் ஈஸ்வரன் வீட்டில் அடைக்கலம் புகுகின்றனர். அழகேசன் அங்கும் இங்கும் ஓடி அலைந்து, கடைசியில் தஞ்ஜு விமான நிலையத்திற்கு நடந்து சென்று, ஷிபாலி சென்ற விமானம் மட்டுமன்றி வானில் பறந்த எல்லா விமானங்களும் விழுந்து நொறுங்கி விட்டன என்பதை அறிந்து வருந்துகிறான். செய்தி அறிந்த நிமிஷா கதறித் துடிக்கிறாள். பிறகு தனக்குக் குடும்பம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. ஈஸ்வரனின் குடும்பம், காமாட்சி, ஏகாம்பரநாதன், அழகேசன் இவர்கள்தான் தனது உறவினர்கள் என்று தெரிந்து கொள்கிறாள்.

ஒரு வாரம் சென்றவுடன் தஞ்ஜுவிலிருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி உடையார் பாளையத்திற்கு அருகில் இருக்கும் தங்கள் கிராமத்திற்குச் சென்று விடலாம் என்று ஈஸ்வரனின் அப்பா சங்கரன் அறிவிக்கிறார். அங்குதான் மின்சாரம் இல்லாமல் காலம் தள்ள முடியும், தனக்குப் பூர்வீகச் சொத்தாக ஒரு நிலம் இருக்கிறது. அங்கு ஒரு சிறிய ஓட்டு வீடும் இருக்கிறது. அங்கு சாப்பிட அரிசி, பருப்பு முதலியவற்றை சேமித்து வைத்திருப்பதாகவும், அங்கு எல்லோரும் வாழ்வது எளிது என்றும் தீர்மானிக்கிறார். மூட்டையைக் கட்டிக் கொண்டு அனைவரும் நான்கு நாள் பயணத்திற்குப் பிறகு கிராமத்தை அடைகின்றனர். அவர்கள் வாழ்வு அங்கே தொடர்கிறது.[வளரும்]

No comments:

Post a Comment