Monday 21 July 2014

தமிழ் இனி மெல்ல... 14 -“இது ஒரு பெரிய புதையல், அழகேசா!”

சென்ற பதிவின்[13] இறுதியில் 
என்ன நினைச்சுக்கிட்டிருக்கே? உம் மனசுலே? நீ என்ன ராசகுமாரியா? நாங்க எல்லாரும் உன்னோட வேலைக்காரங்களா? நம்மளச் சுத்தி நடக்கறது தெரியாம உன் கண்ணு என்ன அவிஞ்சா போயிடுச்சு? இங்கேயே கெட, பல்லாக்கு வந்து உன்னையத் தூக்கிக்கிட்டுப் போகும்!” என்று கத்திவிட்டு ஏகாம்பரநாதனின் கையைப் பிடித்துக்கொண்டு விடுவிடுவென்று படியிறங்குகிறாள் காமாட்சி. ஈஸ்வரனும் அழகேசனும் அவள் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள், தாங்கள் இனிமேல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கின்றனர்.

“சலோ நை, காம்ஸ். முஜே சோட்கே நோ கோ மேரி தீதீ. துஜே வித்தவுட் ஐ வாட் கரூன்? (போகாதே காம்ஸ். என்னை விட்டுப் போகாதே என் அக்கா. நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்)” என்று அழுதவாறே ஓடி படியிறங்கி வந்து காமாட்சியைக் கட்டிக்கொள்கிறாள். அவளைத் தன்னுடன் அணைத்துக் கொள்கிறாள் காமாட்சி. அவளது அதிர்ச்சி வைத்தியம் உடனே பயனளித்ததைப் பார்த்து நிம்மதியடைந்தவாறே படியிறங்க ஆரம்பிக்கின்றனர் ஈஸ்வரனும் அழகேசனும்.

ஹோட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜை விட்டுக் கிளம்பிய ஐவரும் ஈஸ்வரன் வீட்டில் அடைக்கலம் புகுகின்றனர். அழகேசன் அங்கும் இங்கும் ஓடி அலைந்து, கடைசியில் தஞ்ஜு விமான நிலையத்திற்கு நடந்து சென்று, ஷிபாலி சென்ற விமானம் மட்டுமன்றி வானில் பறந்த எல்லா விமானங்களும் விழுந்து நொறுங்கி விட்டன என்பதை அறிந்து வருந்துகிறான். செய்தி அறிந்த நிமிஷா கதறித் துடிக்கிறாள். பிறகு தனக்குக் குடும்பம் என்று தனியாக ஒன்றும் கிடையாது. ஈஸ்வரனின் குடும்பம், காமாட்சி, ஏகாம்பரநாதன், அழகேசன் இவர்கள்தான் தனது உறவினர்கள் என்று தெரிந்து கொள்கிறாள்.

ஒரு வாரம் சென்றவுடன் தஞ்ஜுவிலிருந்து அறுபது கிலோமீட்டர்கள் தள்ளி உடையார் பாளையத்திற்கு அருகில் இருக்கும் தங்கள் கிராமத்திற்குச் சென்று விடலாம் என்று ஈஸ்வரனின் அப்பா சங்கரன் அறிவிக்கிறார். அங்குதான் மின்சாரம் இல்லாமல் காலம் தள்ள முடியும், தனக்குப் பூர்வீகச் சொத்தாக ஒரு நிலம் இருக்கிறது. அங்கு ஒரு சிறிய ஓட்டு வீடும் இருக்கிறது. அங்கு சாப்பிட அரிசி, பருப்பு முதலியவற்றை சேமித்து வைத்திருப்பதாகவும், அங்கு எல்லோரும் வாழ்வது எளிது என்றும் தீர்மானிக்கிறார். மூட்டையைக் கட்டிக் கொண்டு அனைவரும் நான்கு நாள் பயணத்திற்குப் பிறகு கிராமத்தை அடைகின்றனர். அவர்கள் வாழ்வு அங்கே தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல... 14[தொடர்கிறது]

அரிசோனா மகாதேவன் 


                                 ஈஸ்வரனின் கிராமம், தக்கண்கண்ட்
                          ஈஸ்வர, ஆடி 12 - ஜூலை 27, 2417

  று ஆண்டுகள் ஓடிப் போகின்றன. உலகம் முழுவதும் மின்சக்தி இல்லாது போய்விட்டதால், மக்களின் வாழ்வு பதினெட்டாம் நூற்றாண்டின் அளவுக்குப் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. செய்தித் தொடர்பு அடியோடு அற்றுப் போனதாலும், மின்சாரத்திலும், மின்னணுக்களாலும் இயங்கும் சாதனங்கள் வேலை செய்யாததாலும், விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.

பெரும்பாலோர் உண்ண உணவின்றி, உடுக்க மாற்றுத் துணியின்றி, நோய்க்கு மருந்தின்றி நலிந்து இறக்கின்றனர். 

கிட்டத்தட்ட நூறு வருடங்களாக பாரதத்தில் குற்றமே அற்றுப் போனதால் முதலில் பெரிய அளவில் நாட்டில் அமைதியின்மை வரவில்லை. பிறகு பசிக்கொடுமையால் குற்றங்கள் சிறிது சிறிதாகத் தோன்ற 
ஆரம்பிக்கின்றன. குற்றங்களைத் தவிர்க்க மக்கள் ஆங்காங்கு சிறிய அளவில் ஒன்றுகூடி தங்களைக் காத்துக் கொள்ள ஆட்களை நியமித்துக் கொள்ள ஆரம்பிக்கின்றனர். சுருங்கச் சொன்னால் பழையபடி கிராமப் பஞ்சாயத்து மாதிரியான அமைப்புகள் தோன்றி வளருகின்றன.

மேல்தட்டு மக்கள், எடுபிடிகள் என்ற நிலைமை வெகுவாக மாறிவிடுகிறது. இந்தி பேசத் தெரிந்தவர்களால் தமிழ் பேசத் தெரிந்தவர்களோடு சேர்ந்து இயங்க முடியவில்லை. இரண்டு மொழியாரும் தனித்தனியாகப் பிரிந்து வாழ்கின்றனர். உடம்பு சார்ந்த வேலைகளை தமிழ் தெரிந்த எடுபிடிகள் செய்து வந்ததால் அவர்களுக்கு ஓரளவு விவசாயம், காய்கறி வளர்த்தல், நூல் நூற்றல், தைத்தல் முதலிய தொழில்களைச் செய்து வயிற்றைக் கழுவுவது எளிதாக இருக்கிறது.

ஆனால், இந்தி பேசுபவர்கள் மின்சக்தியை உபயோகித்தும், மூளைகொண்டு நாற்காலியில் அமர்ந்து செய்யும் வேலைகளையே நம்பி இருந்ததால் அவர்களால் இந்த மாற்றத்தை வெகு எளிதில் அனுசரித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. தவிரவும் அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வசிப்பது என்பது இயலாமல் போகிறது. தண்ணீருக்கும், மற்ற வசதிகளுக்கும் எங்கு போவது? இத்தனை மாடிகள் எப்படி ஏறி இறங்குவது?
எனவே, மக்கள் தொகை அதிகமுள்ள பெரிய பட்டினங்களில் இருந்து வாழ்க்கையைத் தள்ளுவது முடியாது போகிறது. இந்த மாற்றத்தை பெரும்பாலோரால் தாங்கமுடியாது போகிறது. நிறையப் பேர் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாது இறந்து போகின்றனர். மக்கள் நகரங்களிலிருந்து இடம் பெயர்ந்து வாழ வழிகொடுக்கும் கிராமங்களை நோக்கி நகருகின்றனர். இதனால் பெரிய நகரங்கள் களையிழந்து எலும்புக்கூடாக மாறுகின்றன.

நிமிஷாவின் வாழ்க்கையில் இந்த ஆறு ஆண்டுகள் நிறைய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. அவள் நன்றாகத் தமிழ் பேசக் கற்றுக்கொண்டு விடுகிறாள். அவளுக்கு ஈஸ்வரன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு காதலாக மாறுகிறது. இதை மெதுவாக அவன் அப்பா சங்கரன் காதில் போடுகிறான் அழகேசன். உடனே அங்கிருந்த சிறு கோவிலில் ஒரு ஆண்டு முன்பு அவர்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறார் சங்கரன். அதற்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே காமாட்சி-அழகேசன் திருமணமும் நடந்து விடுகிறது. ஏகாம்பரநாதன் அரும்பு மீசை துளிர்க்கும் இளங்காளையாகப் பரிணமிக்கிறான்.

அவ்வப்போது அங்கு சுற்று வட்டாரத்திலிருக்கும் கோவில்களுக்கெல்லாம் சென்று அதிலிருக்கும் கல்வெட்டுகளைப் படித்து எழுதிக்கொண்டு வந்து பழந்தமிழர் வரலாற்றை வீட்டிலிருப்போருக்குச் சொல்வது ஈஸ்வரனின் வழக்கம். பொதுவாக அவனுக்குத் துணையாகச் சென்று வருகிறான் ஏகாம்பரநாதன். அறுவடைக்காலம் முடிந்துவிட்டதால் அன்று மட்டும் அழகேசனும் அவர்களுடன் செல்கிறான். அவர்கள் வீட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சென்று கோவில் பிரகாரத்தின் கல்வெட்டுகளைப் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலைமையில்தான் அவர்கள் யாரும் எதிர்பாராத ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கிறது. திடுமென்று இரண்டு நிமிஷங்கள் பலத்த நிலநடுக்கம் ஏற்படுகிறது. அவர்கள் கண்முன் கோவிலின் கருவறைக்கு வெளிச்சுவரில் ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டு இரண்டு கற்கள் ஆடி ஆடிக் கீழே விழுகின்றன. மேற்கிலிருந்த சூரிய வெளிச்சம் பட்டு அந்த ஓட்டையின் உள்ளே ஏதோ தகதகப்பது ஏகாம்பரநாதனின் கண்ணைப் பறிக்கவே அவன் ஈஸ்வரனையும், அழகேசனையும் அழைக்கிறான்.

ஏறிப்பார்த்தால், உள்ளே ஒரு சிறிய அறை இருப்பது தெரிகிறது. ஈஸ்வரன் உள்ளே எட்டிப் பார்க்கிறான். அந்த அறையில் ஒரு உலோகக்குழல் பளபளவென்று சூரிய ஒளியில் மின்னுகிறது! அங்கு ஏதோதோ பெட்டிகள் பூட்டப்பட்டு இருக்கின்றன. இந்தக்குழல் மட்டும் ஒரு பெட்டியின் மேல் சாய்ந்து நிற்கிறது. அது இந்த நில அதிர்ச்சியில் மேலிருந்த ஒரு மாடத்திலிருந்து உருண்டு விழுந்திருக்கிறது என்றும், விழுந்ததால் அதில் படிந்திருந்த தூசி விழுந்து சூரிய ஒளியில் மின்னியிருக்கிறது என்றும் தெரிந்து கொள்கிறான்.

கிட்டத்தட்ட ஒண்ணரை அடி நீளமும், ஐந்தங்குலத்திற்கு எட்டங்குல அளவில் நீள்வட்ட வடிவில் அக்குழல் இருக்கிறது. அந்தக் குழலைக் கையில் எடுக்கிறான். அதன் கனம் அவனுக்கு வியப்பாக இருக்கிறது? உள்ளே அப்படி என்னதான் இருக்கிறது? அந்தக் குழல் செம்பினால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தங்க முலாம் போய் செம்பில் களிம்பு பிடித்திருக்கிறது. அதில் ஒரு படம் செதுக்கப்பட்டிருக்கிறது. 

தாடியுடன் கூடிய ஒரு முதியவரும், அவரருகில் கம்பீரமான ஒரு நடுத்தர வயதுக்காரரும் இருப்பதை அப்படம் சித்தரிக்கிறது. இருவரின் முடியும் கொண்டையாகப் போடப் பட்டிருக்கிறது. படத்தின் கீழே எழுத்துக்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அதைப் படித்த அவன் கண்கள் பெரிதாக விரிகின்றன.

“ஈஸ்வரா! என்ன அது?”  என்றபடி அவனருகில் ஏறி வருகிறான் அழகேசன். அவனிடம் அந்தக் குழலை நீட்டுகிறான் ஈஸ்வரன். அதன் கனத்தைப் பார்த்துத் திகைக்கிறான் அழகேசன். அதை எடுத்துக் கொண்டு கீழே இறங்குகிறான். அவனைத் தொடர்ந்து ஈஸ்வரனும் கீழே இறங்குகிறான்.

“இது ஒரு பெரிய புதையல், அழகேசா!”  என்று பெருமிதத்துடன் கூறுகிறான் ஈஸ்வரன்.

“கடவுளே நமக்காக இப் புதையலை அளித்திருக்கிறார். ‘திரிபுவனச் சக்ரவர்த்தி இராஜராஜ சோழத் தேவருக்கு அவரது குரு கருவூர்த் தேவர் இப் புவியெங்கும் தமிழ் வளர்க்கத் தீட்டிக் கொடுத்த மடலைத் தன்னுள் தரித்த காப்பு’ என்று இந்தக் குழலில் எழுதியிருக்கிறது. இதனுள்ளே ஒரு பெரிய தங்கச் சுருள் இருக்கிறது. நாம் மிகமிகக் கொடுத்து வைத்தவர்கள். நமக்கு பழந்தமிழ் மாமன்னரின் குரு தமிழை வளர்க்கத் தீட்டிக் கொடுத்த திட்டம் இப்பொழுது நம் கையில் கிடைத்திருக்கிறது. ஆயிரத்து நானூறு ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த அரிய கருவூலத்தை - தமிழ் அன்னையே இப்புவியைச் சிலிர்க்கவைத்து - இந்தக் கற்களைப் பெயர்த்தெடுத்து எறிந்து - நம் கையில் கொடுத்திருக்கிறாள். பார், என் மயிர்கால்கள் சிலிர்க்கின்றன. என் இதயம் பூரிக்கிறது. நான் அந்த நாளுக்கே செல்கிறேன் நண்பா!” என்று உரக்கக் கத்துகிறான் ஈஸ்வரன். அவனையும் அறியாமல் அவன் செந்தமிழில் பேசுவதைக் கண்டு அழகேசன் மலைக்கிறான்.

“ஈஸ்வரா! கொஞ்சம் எனக்கும் புரியும்படி சொல்லு. ஏன் இந்தக் குழல் இந்தக் கனம் கனக்குது? இதில் அப்படி என்ன இருக்கு? இதை ஏன் பொக்கிஷம்னு சொல்றே? உன் உடம்பு ஏன் இந்த நடுக்கம் நடுங்குது? கொஞ்சம் விவரமாச் சொல்லு. நீதான் தமிழ் நல்லாப் படிச்சவன். எனக்கு எழுத்துக்கூட்டி மெதுவாகத்தான் தமிழ் படிக்க வரும். என் ஆத்தா அடிச்சு அடிச்சுச் சொன்ன பாடம் கூட மறந்து போக ஆரம்பிச்சிருச்சு. புரியும்படிதான் சொல்லேம்ப்பா!”  என்று ஈஸ்வரனைக் கேட்கிறான்.

“முதல்ல இந்த ஓட்டையை மூடுவோம். யார் கண்ணுக்கும் இந்த ரகசிய அறை தெரியக்கூடாது!” என்று அழைக்கிறான். நீள்வட்டக் குழலை அருகிலுள்ள மேடையில் வைத்து விட்டு, மூவரும் கீழே விழுந்த இரண்டு கற்களையும் தூக்கி கருவறையின் ஓட்டையை அடைக்கிறார்கள். ஈஸ்வரன் பிறகு இலேசாகத் தட்டித் தட்டி குழலின் மூடியைத் திறக்கிறான். உள்ளே ஒரு தங்கச் சுருள் இருக்கிறது. அது இரண்டு கைப்பிடிகளில் சுருட்டப் பட்டிருக்கிறது. பாதிக்கு மேலே ஒரு பக்கம் உள்ள கைப்பிடியிலும், மிச்சமிருப்பது இன்னொரு கைப்பிடியிலும் சுற்றப்பட்டிருக்கிறது. 

மூடியினால் மெதுவாகக் குழலை மூடுகிறான் ஈஸ்வரன்.

மூவரும் செப்புக் குழலை எடுத்துக்கொண்டு துடிக்கும் இதயத்துடன் வீட்டை நோக்கிக் கிளம்புகிறார்கள். அவர்கள் அந்த வீட்டை அடையும் பொழுது சூரியன் மேற்கில் சாய ஆரம்பிக்கிறான்.


“அக்கா, நாங்க என்ன கொண்டு வந்திருக்கோம் பாரு!” என்றபடி உள்ளே குதித்துக் கொண்டே வீட்டுக்குள் ஓடி நுழைகிறான் ஏகாம்பரநாதன். தன் தந்தை சங்கரனிடம் விவரத்தைத் தெரிவிக்கிறான் ஈஸ்வரன். அப்படியே நெகிழ்ந்து போகிறார் சங்கரன். கருவூர்த் தேவர் ராஜராஜ சோழச் சக்ரவர்த்திக்கு அளித்த தமிழ் வளர்க்கும் திட்டம் உள்ள குழல் கிட்டத்தட்ட ஆயிரத்து நானூறு ஆண்டுகள் கழித்து, கடைசியில் அவரது பரம்பரையில் வழிவந்த தோன்றலாகிய ஈஸ்வரன் கையிலேயே கிடைத்துவிட்ட அதிசயம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லைதான்!
 ராஜராஜ சோழச் சக்ரவர்த்தி

சங்கரன் சொற்படி பூசை மாடத்தில் அதை வைக்கிறான் ஈஸ்வரன். நிமிஷா அவனுக்குப் பிடித்த சாப்பாட்டைப் பரிமாறியது, அவன் அது பிடித்திருக்கிறதா என்ற கேள்விக்கு ஒன்றுமே பதில் சொல்லாமல் ஏதோ ஒரு கனவுலகில் இருப்பது போல எழுந்து கையைத கழுவிக் கொண்டு வந்தது கூட அவனுக்கு நினைவில் இல்லை.

எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்துக் கொண்டு தென்னாடுடைய இறைவனை பயபக்தியுடன் வணங்கிவிட்டு குழலைத் திறக்கிறான் ஈஸ்வரன். உள்ளே இருக்கும் தங்கச் சுருளை மிகவும் கவனத்துடன் பிறந்த குழந்தையைத் தூக்குவது போல எடுத்து மெதுவாகப் பிரிக்கிறான். சுருள் விரிகிறது. அவனது கண்கள் அச்சுருளில் எழுதியிருப்பதை இனங்கண்டு கொள்கின்றன. உதடுகள் பிரிகின்றன. நா அசைகிறது. குரல் கம்பீரமாக எழுகிறது.

வீட்டில் அனைவரும் அவன்முன் அமர்ந்து அவன் படிப்பதைக் கேட்கின்றனர். ஈஸ்வரனின் குரல் அவர்களை ஆயிரத்து நானூறு ஆண்டுகள் பின்னால் இழுத்துச் செல்கிறது.
* * *

(முதல் பாகம் முற்றும்)

No comments:

Post a Comment