Monday 21 July 2014

செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளுகிறாள்-12


அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி 
    தமிழ் இனி மெல்ல தொடர்கிறது ... 12

அரிசோனா மகாதேவன் 

      
முன்பதிவு இறுதி நினைவூட்டல் 
ஈஸ்வரன் தமிழ் பேசுவதைப் பற்றி ஏகாம்பரநாதன் அவனிடம் பெருமையுடன் கிசுகிசுக்கிறான். அதனால் ஈஸ்வரனிடம் ஒரு இனப் பாசம் ஏற்பட்டாலும் லேசான பொறாமை உணர்வு தோன்றுகிறது. அப்படிப்பட்ட உணர்வுக்கு ஏன் இடம் கொடுக்கவேண்டும் என்று தன்னைத் தானே அடக்கிக் கொள்கிறான். ஒருவேளை நிமிஷா அவனைப் பார்த்த விதமாக இருக்குமோ என்று அவனுக்குத் தோன்றுகிறது. இருந்தாலும் ஒரு எடுபிடியான ஈஸ்வரன் மீது உரிமைக்குடிமகளான நிமிஷாவுக்கு எந்த விதமான ஈர்ப்பும் வர நியாயமில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறான். ஏன் ஒரு உரிமைக் குடிப்பெண் ஒரு தமிழ் பேசும் எடுபிடி ஆண்பால் ஈர்க்கப்படக்கூடாது என்ற கேள்வியையும் தனக்குள்ளே கேட்டுக் கொள்கிறான்.
காமாட்சி, அழகேசன், ஏகாம்பரநாதன் இவர்களுக்கும் ஈஸ்வரனை அறிமுகம் செய்து வைத்துவிட்டு மறுநாள் காலைப் புறப்பாட்டிற்கு முன்னால், தன்னுடைய உதவியாளர்களிடம் கலந்துரையாடல் செல்ல வேண்டும் என்று ஷிஃபாலி புறப்படுகிறாள்.
“ஈஸ்வ், விருந்து முடிந்ததும் நீ உடனே கிளம்பி விடாதே. நான் உன்னிடம் பேச வேண்டும்” என்று சொல்லி விடை பெறுகிறாள்.[இனி இந்தப பதிவு]

                   விண்வெளி ஆராய்ச்சி மையம்,  காரைகட்
                    பிரஜோற் பத்தி, ஆடி 6 - ஜூலை 20, 2411


   சூ ரிய கிரகணத்திற்கும், நீ சொல்லுவதற்கும் என்ன சம்பந்தம், சோம்த்?” என்று சீறுகிறார் ஸோஹன்லால். “உன்னால் எனக்கு அரசாங்கத்தில் எவ்வளவு கெட்ட பெயர் தெரியுமா? பெரிசா “புலி வருது, புலி வருது” கதை மாதிரிப் பண்ணி விட்டாயே! நாடு முழுவதையும், ஏன் உலகம் முழுவதையும் பயமுறுத்திவிட்டு, இப்ப ஒண்ணுமில்லைன்னா எப்படி? இப்ப சூரிய கிரகணம் உன் குழப்பத்துக்கு பதில் சொல்லும்னு வேற சொல்றியே! உனக்கு ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடலாமான்னு தோண்றது!” என்று இரைந்தார்.

ஏற்கனவே ஸோஹன்லாவைக் கண்டால் சோம்காந்துக்கு ஒரு இனம் புரியாத பயம். இப்பொழுது இன்னும் அந்த பயம் பலமடங்கு அதிகமாகிறது. இருந்தாலும் தான் ஒரு நிபுணன், ஸோஹன்லால் வெறும் மேலிடத்து அதிகார வர்க்கம்தான் - அதட்டுவதோடு சரி, தன்னைவிட வான ஆராய்ச்சியில் பெரிய நிபுணர் ஒன்றும் இல்லை என்பதையும் நினைவு கூர்கிறார். இப்படி அதட்டி அதட்டிப் பேசித்தானே ஸோஹன்லால் முன்னுக்கு வந்திருக்கிறார்? அப்படிப்பட்ட அவரை எதிர்த்துப் பேசி என்ன சாதித்துவிட முடியும்?

தன்னைச் சமாளித்துக் கொண்டு உலகப் படத்தில் சூரிய கிரகணத்தின் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார் சோம்காந்த். “சார், இதுவரை சரித்திரத்திலேயே சூரியக் கதிர்வீசல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதே இல்லை. அதுவும் நாம் பார்த்தது மிகவும் கடுமையான கதிர்வீசல். அது தவிர இரண்டாம் நிகழ்ச்சி திடுமென்று மறைந்து போனதுக்கான காரணமும் தெரியலை. என் உள் மனசு இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நடக்கத்தான் போகின்றன என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கு.

“ஏதோ ஒரு சக்தி சூரியக் கதிர்வீசலைத் தாற்காலிகமா மறைக்குது அப்படீன்னு நான் நம்பறேன். கிரகணத்தின் போது, சூரியனின வெளிச்சம் முழுசா மறைஞ்சு போகும். ஏன்னா, நாளைக்கு முழு சூரிய கிரகணம்தான் நடக்கப் போறது. அந்த சமயம் நமக்கு இப்ப ஏற்பட்டிருக்கிற சந்தேகங்கள் தீர்ந்து போய் நல்ல விடை கிடைக்கும்னு நம்பறேன். அதுக்கு சூரிய கிரகணத்தை நான் முழுக்க முழுக்க தொடர்ந்து கண்காணிக்கணும். கிரகணம் நாளைக்கு காலை இந்திய நேரம் ஆறு மணிக்கு பிலிப்பீன்ஸிலே ஆரம்பமாகி, தஞ்ஜு, மத்ரா, கொச்சி வழியாகச் செல்கிறது. பிலிப்பீன்ஸ்லே க்வேசான், தாய்லாந்திலே பாங்காக், மற்றும் அந்தமானின் போர்ட் ஸாவர்க்கர் (போர்ட் ப்ளேர்) வான்நோக்கு மையங்கள் மூலம் எனக்குத் தகவல் வரணும். தயவு செய்து எனக்கு அனுமதியும், இந்த மையங்களின் உதவியையும் வாங்கிக் கொடுங்க!” என்று அழாக் குறையாகக் கெஞ்கிறார் அவர்.
                                             *   * *
                                            அத்தியாயம் 6
                       ஓட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜ், தஞ்ஜு
                     பிரஜோற்பத்தி ஆடி 6 - ஜூலை 21, 2411
ஊஞ்சலில் ஆடிக்கொண்டே பாடுகிறாள் நிமிஷா. அதே சமயம் அவளது ஊஞ்சல் மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. அவளது உடை பலவண்ணப் பிளாஸ்டிக் துணிகளால் செய்தமாதிரி இருக்கிறது. அவள் முகத்தில் அதே மாதிரி பலவண்ணத்தில் சிறியதாக பறவைகள், இனம் தெரியாத அமைப்புகள் பச்சை குத்தியமாதிரி இருக்கின்றன. அவள் அதை ஒட்டிக் கொள்வதைப் பார்த்த ஏகாம்பரநாதனுக்கு சிரிப்பு வருவதைப் பார்த்ததும் காமாட்சி கண்களாலேயே அவனைக் கண்டிக்கிறாள்.

அவன் தன்னை வெறித்து வெறித்துப் பார்ப்பதைக் கண்ட நிமிஷா அவனுக்கும் சிறிதாக இரண்டு பச்சைகளைக் கன்னங்களில் ஒட்டி விட்டுத்தான் தனது விருந்துக்கு வந்திருக்கிறாள். அவளின் விருந்தைப் பார்க்க வேண்டும் என்று ஏகாம்பரநாதன் தன் தமக்கையின் காதைக் கடிப்பதைப் பார்த்த நிமிஷா, அவனைக் கூட்டிச் செல்வதாகச் சொன்ன பொழுது அதை மறுப்பதா, இல்லை சம்மதிப்பதா என்று குழம்பிய காமாட்சிக்கு ஷிஃபாலிதான் விடையளிக்கிறார்.

“காம்ஸ்! கேஷும், ஈஸ்வும் கீழேதான் நிம்ஸுடன் இருப்பாங்க. நீயும் அவங்களுக்கு உதவிக்குப் போகணும். நிம்ஸ் இஷ்டப்படறாரு. அதுனால உன் தம்பியும் வந்துட்டுப் போகட்டுமே! தனியா இங்கே இருந்து என்ன பண்ணப் போறான்?” என்று ஏகாம்பரநாதனையும் அழைத்துச் செல்லும்படி அனுமதி கொடுக்கிறாள்.

அப்பொழுதுதான் தானும் கீழே போகவேண்டும் என்று தெரிகிறது காமாட்சிக்கு. அவர்களுடன் குதித்துக் கொண்டு கிளம்புகிறான் ஏகாம்பரநாதன். ஈஸ்வரனுக்கும், அழகேசனுக்கும் தமிழ் தெரியும் என்பதால் வாய் ஓயாமல் அவர்களுடன் பேசி தன் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறான். கடைசியில் அவர்களே தங்களுக்கு வேலை இருப்பதாகவும், விருந்தில் நடக்கும் ஆட்டங்களை உட்கார்ந்து ரசிக்கும்படி சொல்லி ஓரிடத்தில் அவனை உட்கார்த்தி வைக்கிறார்கள்.

காமாட்சி ஈஸ்வரனுக்கு உதவியாக சாப்பாடு ஏற்பாடுகளைக் கவனிக்கிறாள். அதற்காக ஹோட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜின் தமிழ்ப் பெண் உடையை அணிய வேண்டியிருக்கிறது அவனுக்கு. இல்லாவிட்டால் அங்கு அவள் பரிமாறவோ, சாப்பாடு ஏற்பாடுகளைக் கவனிக்கவோ முடியாது என்று தெரிவிக்கிறான் ஈஸ்வரன். அரை மனத்துடன் அவளது நிறத்தில் உள்ள ரவிக்கை மீது மார்புக் கச்சைகளைஅணிந்து கொண்டு, கீழ் உடைகளையும் உடுத்திக் கொள்கிறாள் காமாட்சி. இயல்பாகவே அவனுக்கு அடர்த்தியான கருங்கூந்தல் இருப்பதால் அதை அள்ளி முடிந்து கொண்டை போட்டுக் கொள்வது சுலபமாகவே இருக்கிறது. இருப்பினும் கவர்ச்சியான உடையணிந்து நடமாடுவது அவளுக்கு வெட்கத்தை வரவழைக்கிறது. எனவே, மறைந்து மறைந்து நடமாடும் அவள், நிமிஷா வயதை ஒத்த இளைஞர்கள் மட்டும் விருந்தில் கலந்து கொள்வார்கள் என்பதால் மனதை ஒருவாறு சமாதானப்படுத்திக் கொள்கிறாள். அங்கு பணியாற்றும் மற்ற ரஷ்யப் பெண்களும் ஹோட்டல் முகப்பில் வரையப்பட்டிருக்கும் ஓவியம் மாதிரியும், பாவை விளக்கு மாதிரியும் காமாட்சி இருப்பதாகச் சொல்லி அவளைப் புகழ்கிறார்கள். அவர்களது புகழ்ச்சி காமாட்சியை இன்னும் நாணப்படுத்துகிறது.

அழகேசன் காவலர்களுக்கான உடுப்பை அணிந்துகொண்டு அங்கு வரும் நிமிஷாவின் நண்பர்களை மிடுக்காக வரவேற்று அவர்கள் தேவைகளையும், அவர்கள் அணிந்து கொள்வதற்கான சிறப்பான ஆடைகளையும் எடுத்துக் கொடுத்து அவர்களை உடை மாற்றும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறான். அவனது மிடுக்கைக் கண்டு ஈர்க்கப் படுகிறாள் காமாட்சி.

ஏகாம்பரநாதனுக்கு நிமிஷா பாடுவது புரியாவிட்டாலும், அது எந்த மொழி என்று தெரியாவிட்டாலும், அந்த இசையின் தாளத்தை, சுருதியைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதில் நடுநடுவில் கலந்திருக்கும் அபஸ்வரங்களைப் புரிந்து கொள்ளவும் செய்கிறான். கைகளும் கால்களும் அந்த இசைக்குத் தகுந்தபடி தாளம் போடுகின்றன.

திடுமென்று நிமிஷா உட்கார்ந்திருக்கும் ஊஞ்சல் குலுங்கி நிற்கிறது. உடனே மூன்று நான்கடிகள் தொப்பென்று கீழிறங்குகிறது அந்த ஊஞ்சல். அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத நிமிஷா கெட்டியாக அதைப் பிடித்துக்கொண்டு வீறிடுகிறாள். அறையில் இருக்கும் விளக்குகள் திடுமென்று சில விநாடிகள் அணைந்து மீண்டும் ஒளிருகின்றன. என்னவோ ஏதோவென்று பயந்துகொண்டு ஓடி வந்த ஈஸ்வரன் நிமிஷாவைப் பிடித்துக் கொள்கிறான். அவன் அப்படி வேகமாக இருட்டில் பாய்ந்து வந்தது நிமிஷாவுக்கே வியப்பாக இருக்கிறது. தன்னைச் சமாளித்துக்கொண்டு அவனுக்கு நன்றியைத் தெரிவிக்கிறாள். முதலில் பயந்த அனைவரும் ஊஞ்சல் விழுந்ததும், விளக்குகள் அணைந்து மீண்டும் எரிய ஆரம்பித்ததும் விருந்தின் சிறப்பான ஏற்பாடு போலிருக்கிறது என்று கைதட்டுகின்றனர். 

“மீண்டும் ஒருதரம், மீண்டும் ஒருதரம்!” என்று கூச்சல் எழுகிறது.

ஐந்து நிமிடங்களில் மீண்டும் மூன்று தடவை அவ்வாறு நிகழ்கிறது. இதை எதிர்பார்க்காத நிமிஷாவுக்குச் சிறிது அச்சமாகிவிடுகிறது. இம்மாதிரி ஏன் நிகழ்கிறது என்று அழகேசனைக் கேட்கச் சொல்கிறாள். மின் துண்டிப்பினால் இம்மாதிரி பயமுறுத்தும் நிகழ்ச்சிகள் தனது விருந்தில் நடப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

அழகேசனும், ஈஸ்வரனும் இம்மாதிரி மின்துண்டிப்புக்குக் காரணம் விசாரிக்கிறார்கள். ஹோட்டல் நிர்வாகம் தங்களுக்கும் காரணம் தெரியாது என்று கைவிரிக்கிறது. அவர்கள் தஞ்ஜு மின் மையத்திற்கு புகார் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். தவிர, இம்மாதிரி மின்துண்டிப்பு கடந்த இருநூறு ஆண்டுகளாக நிகழ்ந்ததே இல்லை என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமில்லாமல், தானியங்கும் மின்கலங்களும் வேலை செய்யாதது மிகவும் வியப்பாக இருக்கிறது. எனவே அந்த மின்கலங்களைச் சோதிக்க ஆளனுப்பி உள்ளதாகவும் தகவல் வருகிறது.

இதனால் நிமிஷாவையும், அவளது கூட்டாளிகளையும், ஊஞ்சலில் ஆடவேண்டாம் என்று தடுத்து விடுகிறான் அழகேசன். அது நிமிஷாவுக்குப் பிடிக்காவிட்டாலும், ஷிஃபாலியும் அழகேசன் சொல்வதை ஆமோதித்ததால் ஊஞ்சல்கள் நிறுத்தப்படுகின்றன. உடலை வளைத்து வளைத்து பாம்பு மாதிரி ஒரு நாட்டியம் ஆடுகின்றனர். அதைப் பார்க்கும் ஏகாம்பரநாதனுக்கு ஒரே சிரிப்பாக இருக்கிறது. அவனும் தான் இருக்கும் இடத்திலேயே நின்று கொண்டு வளைந்து வளைந்து ஆடுகிறான். தன் தம்பியின் ஆட்டத்தைப் பார்த்து பொங்கிப் பூரித்த காமாட்சி அனைவருக்கும் குடிக்க பழச்சாறும், தின்பண்டங்களும், சாப்பாடும் கொடுத்த வண்ணம் இருக்கிறாள். அவ்வப்பொழுது தன் தமக்கைக்கு உதவிக்கு வருகிறான் ஏகாம்பரநாதன்.
“ஏகாம்பரம். நீ சும்மா இருடா. என் தலையெழுத்துதான் இப்படி உடுப்பு மாட்டிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டிருக்கேன். நீ நல்லா எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டு இவங்க ஆடறதை சந்தோசமா பார்த்துக்கிட்டிரு.” என்கிறாள்.

தன் தமக்கையை ஏற இறங்கப் பார்த்தவாறே, “அக்கா, உன்னைப் பார்த்தா ஒரு தேவதை மாதிரி இருக்கு அக்கா! இந்த ஓட்டல் வாசல்ல வச்சுருக்கற பொம்மை மாதிரி அழகா இருக்கே அக்கா. தினமும் இந்த மாதிரி உடுப்பு போட்டுக்கோ!” என்று உள்ளன்புடன் சொல்கிறான். உடனே காமாட்சிக்கு மனது நெகிழ்ந்து விடுகிறது.

“இந்தக் கண்ராவியை நான் தினமும் வேறு மாட்டிக்கணுமாக்கும்!” என்று செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளுகிறாள். விருந்து தொடர்ந்து நடக்கிறது.[வளரும்]

No comments:

Post a Comment