Sunday 27 July 2014

தமிழ் இனி மெல்ல 19 :என் உயிரைக் கொடுத்தாவது உம் நாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்!


சென்ற [18] பதிவின் இறுதியில்
தன் விருப்பப்படி கட்டைவாளை உபயோகிக்கத் தன்னை அனுமதித்ததுடன், தன்னுடைய எதிர்பார்ப்புப்படி, இராஜேந்திரனும் கட்டைவாளை எடுத்துக் கொண்டது சிவாச்சாரியனுக்கு இரட்டிப்பு மகிழ்வை அளிக்கிறது. தான் கட்டைவாளைத் தேர்ந்தெடுத்ததனால் இராஜேந்திரனின் தாக்குதல் வலிமையைத் தனக்கு வரவிடாமல் தடுக்க இயலும் என்றாலும், கட்டைவாளைத் தேர்ந்தெடுத்தால் தனது வாட்போர் வேகத்தையும் இழக்கப் போகிறோம் என்பதை இராஜேந்திரனும் அறிந்திருந்தாலும், அதை அவன் முகம் வெளியில் காட்டிவிடாமல் மறைத்துக் கொள்வதையும் தெரிந்து கொள்கிறான்.

இருவரும் அருகிலிருக்கும் பெரிய முற்றத்திற்குச் செல்கிறார்கள். வாளைத் தூக்கி நெற்றியில் வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒரு கணம் சிவபிரானைத் துதித்த சிவாச்சாரி, கண்களைத் திறந்து தலைசாய்த்து இராஜேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு இருகைகளாலும் வாளை உயர்த்திப் பிடிக்கிறான்.

உடனே தன் இருகைகளாலும் வாளை உயர்த்திக் கொண்டு மதம் பிடித்த யானையைப் போல சிவாச்சாரி மேல் பாய்கிறான் இராஜேந்திரன். ஒன்று தன் பாய்ச்சலிலிருந்து விலகுவான், அல்லது தாங்கமுடியாமல் தடுமாறி விழுவான் என்று நினைத்த இராஜேந்திரனுக்குப் பெரிய அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.

ஒரு குட்டிச் சுவரில் முட்டிக்கொண்டது போல அவனது வேகம் தடுத்து நிறுத்தப்படுகிறது. அவனது வாளை எதிர்நோக்கித் தனது வாளைச் சற்று சரித்து அகலமான அதன் நடுப்பகுதியில் வாங்கிய சிவாச்சாரி, கையை லாவகமாகச் சற்று சுழற்றி, இராஜேந்திரனின் வாளைத் தன் வாளின் அடிக்கு வரவைக்கிறான். அந்த வழுக்கலில் இராஜேந்திரனின் வேகம் அரை விநாடிக்குள் குறைத்து நிறுத்தப்படுகிறது. உடனே தன் வாளை விடுவித்து ஓரடி பின் வாங்கிவிட்டு, அதற்கு மேலே இராஜேந்திரனை எதிர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் நிற்கிறான் சிவாச்சாரி.

அவன் ஏன் வெறுமனே நிற்கிறான் என்று திகைத்த இராஜேந்திரன், தானும் ஒரு அடி பின்வாங்கி மறுபடி தாக்குகிறான். அவன் எப்படித் தாக்கினாலும் அதைத் தடுத்து நிறுத்திவிடுகிறான் சிவாச்சாரி. ஆனால், எந்தவிதமான எதிர்த்தாக்குதலும் செய்யாமல் நின்று விடுகிறான். இது ஏன் என்று தெரியாமல் எரிச்சல் படுகிறான் இராஜேந்திரன்.

இரண்டடி பின்னால் எடுத்து வைத்து, “ஓய் சிவாச்சாரி! உமக்கு தடுப்பதைத் தவிர எந்தப் பயிற்சியும் கிடையாதா?” என்று கத்திக் கொண்டே தனது தாக்குதலின் வேகத்தை அதிகரிக்கிறான். சிவாச்சாரியின் வாட்போர்த் திறனை அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மறைந்து அவனைத் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணமே இராஜேந்திரனுக்கு எழுகிறது.

பத்து மணிக்கூறுகள் பத்து விநாடிகளாக ஓடிப் போகின்றன. என்னதான் மாற்றி மாற்றித் தாக்கினாலும், சிவாச்சாரி தடுத்துக் கொள்கிறானே தவிர, இராஜேந்திரன் மீது எந்தத் தாக்குதலும் நடத்தவே இல்லை

தமிழ் இனி மெல்ல 19 [தொடர்கிறது]
அரிசோனா மகாதேவன் 

திடுமென்று தனது வாளைத் தூக்கி எறிகிறான் இராஜேந்திரன்.

“என்னையா சிவாச்சாரி! என்னை முட்டாள் என்றா நினைக்கிறீர்? வாட்போர் செய் என்றால், வெறுமனே என் தாக்குதலைத் தடுத்து நிறுத்தி விட்டுச் சும்மா நிற்கிறீரே! நான் சொல்வது உம் காதில் விழவில்லையா? எனக்கு என்னவோ வாட்போர் செய்யத் தெரியாத மாதிரியும், அதனால் எனக்கு விட்டுக் கொடுப்பது மாதிரியும் நடந்து கொள்கிறீரே! நீர் செய்வது என்னைச் சிறுபிள்ளையாக நடத்துவதுபோல இருக்கிறது!” என்று உரத்த குரலில் புலியாக உறுமுகிறான். அனைவரும் அதிர்ந்து போகிறார்கள். தன் இருக்கையைவிட்டு ஒரு கணம் எழுந்த இராஜராஜர், கருவூர்த் தேவரின் கண்ஜாடையைப் பார்த்துவிட்டுத் திரும்ப அமர்ந்து கொள்கிறார்.

உடனே தன் வாளை அவன் காலடியில் போட்டுவிட்டு, அவன்முன் மண்டியிடுகிறான் சிவாச்சாரி.

“இளவரசே! உங்களை எரிச்சல் படுத்தியதற்கு என்னை மன்னித்து விடுங்கள்! இந்தச் சோழ வளநாட்டிற்குக் காவல் தெய்வமாக விளங்கும் தங்களை அவமானப் படுத்த என் கனவில்கூட நினைப்பேனா? தங்கள் சொல்லையும் மீறி என் தாக்குதல் திறமையை உங்களிடம் காட்டாததற்கு ஒரு காரணம் இருக்கிறது!”

இராஜேந்திரன் பதில் பேசாமல் நிற்கவே, “தங்கள் மீது தாக்குதல் நடத்த என்னால் எப்படி இயலும்? உங்கள் தாக்குதலால் எனது இரத்தம் சிந்தக்கூடாது என்று சோழ மகாதேவியார் விரும்பினார்கள். அப்படியிருக்க, உங்கள் இரத்தத்தை அவரெதிரில் என்ன, எவர் எதிரிலும் சிந்தலாமா? நாட்டைக் காக்கும் நெறி தவறாத மன்னனின் இரத்தத்தைச் சிந்தவைத்து மீளாத நரகத்திற்கு நான் செல்லவேண்டுமா இளவரசே? அதனால்தான் எளிதில் மற்றவர் இரத்தத்தைச் சிந்தவைக்கும் வாளை விடுத்து, மதயானைத் தாக்குதல் உடைய, புலியின் வேகம் உடைய தங்களின் வாள் வீச்சு வேகத்தைச் சமாளிக்கத்தான் கட்டைவாளைத் தேர்ந்தெடுத்தேன். தாங்களும் கட்டைவாளை எடுத்தது என் வேலையைச் சுலபமாக்கியது

இருந்தாலும் நம் இருவரின் இரத்தம் சிந்தக்கூடாது என்று தற்காப்பாகச் சண்டையிட்டது தங்களுக்கு சினத்தை வரவழைத்தது. எனவேதான் தங்களது ஆணையை மீறவேண்டிய பாவியானேன். தங்கள் ஆணையை மீறி,  தங்களைக் கோபம் அடையச் செய்த என்னை இனி தாங்கள் எப்படிப் பணியாளனாக எடுத்துக்கொள்ள இயலும்? நான் அதற்குத் தகுதி இல்லாமல் போனேன்!” இராஜேந்திரனின் காலடியிலேயே கண்ணீர் சிந்துகிறான் சிவாச்சாரி.

“நீர் சொன்னது சரிதான் சிவாச்சாரியாரே! உமது செயலால் எனது பணியாளனாக ஆகும் தகுதியை நீர் இழந்துவிட்டீர்..” இராஜேந்திரன் குரலில் கோபம் தொனித்தது.

உடனே குரலைக் கனிவாக மாற்றிக் கொண்டு, “உம்மைப் பணியாளனாக ஏற்க நான் ஒரு முட்டாளா? பொன் கங்கணத்தைக் காலில் அணியும் மதிப்பறியாக் குருடனா? இனி நீர் என் நண்பன் சிவாச்சாரியாரே, நீர் என் நண்பன்! எழுந்திரும். உம்மை எனக்கு நண்பனாக அளித்த ஆசான் கருவூராருக்கு நன்றி தெரிவிப்போம்” என்று அவனைத் தூக்கி நிறுத்திவிட்டு, இராஜராஜர், கருவூரார் அவர்களைப் பணிகிறான் இராஜேந்திரன். அவனைப் பின்தொடர்ந்து பணிகிறான் சிவாச்சாரி.

தன் கண்ணில் துளிர்த்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நிம்மதியான பெருமூச்சு விடுகிறாள் குந்தவைப் பிராட்டி, மெல்ல சோழமகாதேவியாரின் கைகளைப் பிடித்து அழுத்துகிறாள். பதிலுக்கு அழுத்தித் சோழமகாதேவியும் தன் நிம்மதியை பிராட்டிக்குத் தெரிவிக்கிறாள்.
* * *
                    மகிந்தன் அரண்மனை, ரோகணம், இலங்கை
                    சாதாரண, ஆனி 28 - ஜூலை 13, 1010
  ரோகணத்தின் தலைநகர அரண்மனையில் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் தன் அரியணையில் அமர்ந்திருக்கிறான். அவரருகில் உள்ள மற்ற ஆசனங்களில் அவனை ரகசியமாகச் சந்திக்க வந்திருந்த பாண்டிய மன்னனும், ஆதித்த கரிகாலனால் கொல்லப்பட்ட வீரபாண்டியனின் பேரனும் ஆன அமரபுஜங்கனும், அவனது மகனும் அமர்ந்திருக்கிறார்கள். பாண்டியர்களின் பின்னால் அவர்களது மெய்காப்பாளர்களில் முதன்மையானவர்களான திருமாறனும், அவனது தம்பி முருகேசனும் விறைப்பாக நிற்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் பாண்டியர்களின் மொழிபெயர்ப்பாளரும், மகிந்தனின் பின்னால் அவனது மொழிபெயர்ப்பாளரும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

சிங்களத்துச் சிங்காரிகள் தங்கக் கோப்பைகளில் பழரசத்தை ஊற்றிக் கொடுக்கிறார்கள். மூவரும் ஒன்றும் பேசாமலேயே பழரசத்தை அருந்துகிறார்கள். யார் பேச்சை ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருக்கிறது.

தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பிக்கிறான், அமரபுஜங்கள். அவன் பேசப்பேச மகிந்தனின் மொழிபெயர்ப்பாளன் சிங்களத்தில் மொழிபெயர்க்க ஆரம்பிக்கிறான். “மகிந்தரே, பாண்டிநாட்டின் சிறந்த நண்பரே! போரில் என் பாட்டனுக்குத் தோள் கொடுத்தவர் உங்கள் தந்தை. அவர்களைப் போல நாமும் நமது நட்பைத் தொடர்வது எனக்கு மகிழ்ச்சியே! உம்மைச் சந்திக்க நானும் என் மகனும் சோழர் கண்களில் படாமல் ரோகணத்திற்கு வந்துள்ளோம். உமக்கும், எமக்கும் பொது எதிரிகள் இராஜராஜ சோழனும், அவனது மகன் இராஜேந்திரனும்தான். நமது ஒற்றர்கள் இராஜேந்திரன் அவனது தங்கை குந்தவியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இன்னும் சில காலம் சென்று வேங்கைநாட்டுக்கு (வெங்கி) செல்லக்கூடும் என்று தகவல் கொண்டுவந்திருக்கிறார்கள்.

“வேங்கை நாட்டுக்கு எதிராக மேலைச் சாளுக்கியர்கள் வேலை செய்கிறார்களாம். அந்த நேரத்தில், சேரனும், தாங்களும் உதவி செய்தால் பாண்டிய நாட்டில் நாங்கள் எங்கள் நிலைமையை வலுப்படுத்திக் கொள்ளலாம். பாண்டிய நாட்டுக்கு வரவேண்டி பொலனருவையில் இருக்கும் சோழப்படைகள் வடக்கு நோக்கித் திரும்பும். இந்தக் குழப்பத்தில் தாங்கள் பொலனருவையைத் திரும்பப் பெற்றுவிடலாம். சேரனும், நாங்களும் தங்களுக்கு உதவி செய்வோம்.”

அதற்குப் பதிலே சொல்லாமல் சிறிது நேரம் அமர்ந்திருக்கிறான் மகிந்தன். நாலாம் மகிந்தன் இறந்ததும் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் அனுராதபுரத்தை விட்டு பொலனருவைக்கு ஓடிய அவன் ஆதித்த கரிகாலன் இறந்ததால் ஈழத்தை விட்டு இராஜராஜ சோழர் திரும்பச் சென்றதால் மீண்டும் அனுராதபுரத்தைத் திரும்பப் பெற்றதும், பதினான்கு ஆண்டுகள் கழித்து17 திரும்பப் படையெடுத்து வந்து இராஜராஜர் தன்னை ரோகணத்துக்கு விரட்டியதும் நினைவுக்கு வருகிறது. இப்படி உயிருக்குப் பயந்து ஓடி, தென்பகுதியான ரோகணத்தில் உட்கார்ந்து, பாண்டிய அரசனுடன் அருந்தும் பழச்சாறு விஷமாக அவனுக்கு கசக்கிறது. தந்தை நாலாம் மகிந்தனின் அளவுக்கு வீரமும் இல்லை, சூழ்ச்சி செய்து திட்டம் தீட்டவும் திறனில்லை - இருக்கும் இடத்தில் குறுநில மன்னனாக நிம்மதியாக ஆட்சி செய்து வரும் தன்னிடம் இவர்கள் உதவி கேட்டு வந்திருக்கிறார்களே!
.
“மகிந்தரே, என்ன இப்படிச் சிந்தனையில் ஆழ்ந்து விட்டீர்கள்? பாண்டியர்களும், சிங்கள            மன்னர்களும்    எத்தனை  தலைமுறைகளாக
நண்பர்களாக, உறவினர்களாக இருந்து வந்திருக்கிறோம்? பாண்டியரும், சேரரும், சிங்களவரும் சேர்ந்தால் சோழனால் எப்படித் தாக்குப் பிடிக்கமுடியும்? நீங்களும் தயங்காது எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்.” என்று மீண்டும் மகிந்தனை வற்புறுத்துகிறான் அமரபுஜங்கன்.

“பாண்டியரே! உம் பேச்சில் உள்ள நியாயம் எனக்குப் புரியாமல் இல்லை. நான் தயங்குவதற்குக் காரணம் வேறு. கடந்த பதினான்கு ஆண்டுகளாகச் சிங்கள நாடு சோழர்கள் ஆதிக்கத்தில் இருக்கும் போது பேசாமல் இருந்துவிட்டு, சிங்களப் படைகளைப் பாண்டியநாட்டுக்கு உதவியாகப் போர்செய்ய அனுப்பினால் இங்கு மக்கள் எனக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த மாட்டார்களா? யோசித்துப் பாருங்கள்!” என்று தன் பக்கத்து நியாயத்தை பாண்டியனுக்கு எடுத்து உரைக்கிறான் மகிந்தன்.

“மகிந்தரே! இலங்கையைத் தவிக்கவிட்டுவிட்டு பாண்டியநாட்டுக்கு உதவினால் உங்கள் மக்கள் சினமடையலாம். ஆனால் நம்மைத் தனித்தனியாக ஆக்கிவிட்டுதானே சோழன் நம் எல்லோரையும் வென்றிருக்கிறான்? நாம் ஒன்று சேர்ந்தால்தானே சோழனை அவனது நாட்டிற்கு ஓட்ட முடியும்? வேங்கை நாட்டிற்கு அவனது படைகளும், இராஜேந்திரனும் செல்லும் பொழுது, நாம் ஒன்று சேர்ந்து பாண்டிய நாட்டை ஆக்கிரமித்திருக்கும் அவனது படைகளைத் தாக்கினால், அவர்களுக்கு உதவியாக இங்கிருக்கும் சோழப் படைகள் பாண்டிய நாட்டிற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்தசமயம் பார்த்து, சேரனுடைய படைகள் உங்களுடன் சேர்ந்து பொலனருவையைத் தாக்கி வசப்படுத்திக் கொள்ளலாம். இராஜராஜனுக்கு வயதாகிவிட்டது. இப்பொழுது அவனால் முன்பு போல போரிட இயலாது. யார் கண்டது, அவனை எமனுலகுக்கு அனுப்பினால், தஞ்சைகூட விழ வாய்ப்பு இருக்கிறது!” உற்சாகமாகப் பதில் சொல்கிறான் அமரபுஜங்கன்.

அவனது உற்சாகம் மகிந்தனையும் கொஞ்சம் தொற்றிக் கொள்கிறது.

“நீர் சொல்வதைக் கேட்கக் கேட்க எனக்கும் இந்தத் திட்டத்தில் ஆர்வம் ஏற்படுகிறது. கடந்த பதினான்கு ஆண்டுகள் என்னைச் சும்மா விட்டதனால் இதுவரை ஐம்பதாயிரம் சிங்களவர்கள் படையும், வேலைக்காரப் படைகள்18 முப்பதாயிரமும் திரட்டி உள்ளேன். இப்படைகளில் பாதிப் பேரை உங்கள் உதவிக்காக பாண்டி நாட்டுக்கு அனுப்பத் தயாராக உள்ளேன். இருந்தாலும்...” என்று இழுத்து நிறுத்துகிறான்.

“மகிந்தரே! பொங்கும் பாலில் தண்ணீரை ஊற்றியது போல உமது உற்சாகம் குறைகிறதே! அது என்ன இருந்தாலும் என்று இழுக்கிறீர்?”

 பாண்டியனுக்குக் கவலை பற்றிக் கொள்கிறது. இந்தச் சிங்களவனை நம்புவது மண்குதிரையை நம்புவது மாதிரித்தானா? இவன் அப்பனை நம்பித்தானே எனது பாட்டனார் உயிர் இழந்தார் என்று நினைத்தவுடனேயே அவனுக்கு அடிவயிற்றில் பகீர் என்று ஏதோ ஒன்று குடைகிறது.

சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு யோசித்த மகிந்தன், கண்களைத் திறக்காமலேயே கேட்கிறான், “பாண்டியரே! நான் என் படைகளை உதவிக்கு அனுப்பலாம். ஆனால், ரோகணத்திற்கு வடக்கிலிருந்து சோழர் படைகள் குவிந்து கிடக்கின்றனவே! இது தவிர, சோழர்கள் கிட்டத்தட்ட நானூறு கப்பல்களை இலங்கையைச் சுற்றிக் காவலாக நிறுத்தி வைத்திருக்கிறார்களே! இப்படி இருக்கும் போது, படைகளை அவர்கள் கண்ணில் படாமல் எப்படி நான் பாண்டிய நாட்டிற்கு அனுப்ப இயலும்?”

“இவ்வளவுதானா? நான் ஏதோ என்னவோ என்று பயந்து விட்டேன்!” என்று சிரிக்கிறான் அமரபுஜங்கன். “மகிந்தரே! நாங்கள் சோழர்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஐந்து பெரிய கப்பல்களை கொற்கைத் துறைமுகத்திலிருந்து கொண்டு வரவில்லையா? எங்களுக்குத் தெரிந்த அராபியர்களின் கொடிகளைக் கப்பல்களில் பறக்கவிட்டுக் கொண்டு வந்து சேர்ந்தோம். அதற்காகவே, அராபிய கூலிப் படைகளும் எங்களிடம் சிலநூறு பேர் இருக்கிறார்கள். நீர் இதைப்பற்றி ஏன் கவலைப் படுகிறீர்? உம் படைகள் பத்திரமாகப் பாண்டிநாட்டுக்குப் போய்ச் சேர நான் உத்திரவாதம் கொடுக்கிறேன்.”

“அதுசரி பாண்டியரே! ஐந்து பெரிய கப்பல்களா? நான் பார்க்கவில்லையே! போகட்டும், அப்படி அதில் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?” இப்படி அப்பாவித்தனமாக மகிந்தன் கேட்டதும் அமரபுஜங்கனுக்கு பற்றிக்கொண்டு வருகிறது.

இவன் இப்படிக் கையாலாகாதவனாக இருப்பதால்தானே, அனுராதபுரத்தை மட்டுமல்லாமல், பொலனருவையையும் கோட்டைவிட்டான் என்று தனக்குள்ளாகவே நினைத்துக் கொள்கிறான். இவன் மட்டும் சரியான தலைவனாக இருந்து சோழர்களுக்கு அவ்வப்பொழுது தலைவலி கொடுத்துக் கொண்டிருந்தால், பாண்டிநாட்டைச் சோழர்களின் கிடுக்கிப் பிடியிலிருந்து எப்பொழுதோ மீட்டிருக்கலாமே என்றும் எண்ணிப் பார்க்கிறான். இவனது படைகள், காரணம் கேட்காமல் வெறியுடன் போரிடும் இவனது படைகள் இருந்தால் மட்டும் போதும், பாண்டிநாட்டில் தனது ஆட்சியை விரிவுபடுத்தலாம் என்று தன் எரிச்சலை அடக்கிக் கொள்கிறான்.

“மகிந்தரே! பாண்டிய நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களைச் சுமந்து கொண்டு அந்தக் கப்பல்கள் வந்திருக்கின்றன. அவை தற்பொழுது பாண்டிய நாட்டில் இருந்தால் சோழர்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பாது. அவர்கள் எங்கள் பொக்கிஷங்களுக்காக நாயைப் போல மோப்பம் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். பாண்டி நாட்டை அவர்களின் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டவுடன் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என் பொக்கிஷங்களையே உங்களிடம் ஒப்படைக்கப் போகும் எனக்கு தங்கள் படைகளை உதவியாகத் தரலாம் அல்லவா?” என்று மனதில் எரிச்சலுடனும், உதட்டில் புன்னகையுடன் கேட்கிறான் அமரபுஜங்கன்.

“பாண்டிநாட்டுப் பொக்கிஷமா!” இலங்கை அரசனின் வாய் அவனையும் அறியாமல் இலேசாகப் பிளக்கிறது. “கப்பல் கப்பலாக அப்படி என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

“மகிந்தரே! பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வந்த எங்கள் நாட்டுப் பொக்கிஷத்தைதான் நாங்கள் கொணர்ந்திருக்கிறோம். இவற்றில் தலையாயது எங்கள் அரியணை, களப்பிரர்களை ஒழித்த எங்கள் கடுங்கோள்19 முதன்முதலாக ஏறிய அரியணை, அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் தமிழ் பேசும் மூன்று நாடுகளையும் தனது ஒரு குடையின்கீழ் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை. ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாண்டியர்கள் அமர்ந்து யாருக்கும் தலைபணியாமல் ஆட்சி செய்து வந்த அரியணை. அந்த அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய அடிமையாகச் சோழனுக்குக் கப்பம் கட்டும் எனக்கு ஏது மகிந்தரே தகுதி இருக்கிறது? அது மட்டுமல்ல அவர்கள் பல போர்கள் செய்து பாண்டிநாட்டைப் பாதுகாத்து வந்த வீர வாட்கள் பல இருக்கின்றன. இவற்றிற்கும் தலையாய எங்களது பாண்டிநாட்டின் மணி மகுடமும் உள்ளது.20 இவை எங்கள் உயிருக்கும் மேலானவை. இவைகள் இல்லாத பாண்டிநாடு பாண்டிநாடே அல்ல. இருந்தாலும் அவை அனைத்தையும் உம் ரோகணத்திற்கு பாதுகாப்பிற்காகக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் உயிரிலும் மேலான எங்கள் பரம்பரைச் சொத்தை உம்மிடம் ஒப்பித்து அதைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம். நீர் எமக்குப் படை உதவி செய்யாவிட்டாலும் கவலை இல்லை என்று எங்கள் பரம்பரையில் வரும் ஒரு பாண்டியன் எப்பொழுது சுதந்திரமாக பாண்டிய நாட்டை ஆளுவானோ அப்பொழுது அவன் சிங்களநாட்டிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளுவான். வேறு எந்த உதவி செய்யாவிட்டாலும் இந்த உதவியைச் செய்யுங்கள் மகிந்தரே!” உணர்ச்சிப் பெருக்குடன் மகிந்தனை வேண்டிக் கொள்கிறான் அமரபுஜங்கன்.

“பாண்டியரே! என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு எப்படி நான் நன்றி சொல்லப் போகிறேன்? என் உயிரைக் கொடுத்தாவது உம் நாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்!”  என்று வீரமாகப் பாண்டிய மன்ன்னுக்கு வாக்களிக்கிறான் மகிந்தன்.[வளரும்]
----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்புகள்:
17பொது ஆண்டு 983ல் இராஜராஜ சோழன் நாலாம் மகிந்தனை ரோகணத்திற்கு விரட்டியதாக சரித்திரம் கூறுகிறது
18இலங்கை மன்னர்கள் கூலிப் படைகள் திரட்டி சோழர்களுக்கு எதிராகப் போர் செய்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவர்கள் “வேலைக்காரப் படைகள்” என்று அழைக்கப் பட்டார்கள்.
19தமிழ்நாட்டை முந்நூற்று ஐம்பது ஆண்டுகள் அடக்கி ஆண்ட களப்பிரர்களிடமிருந்து குமரியிலிருந்து காவிரிவரையான பகுதிகளை மீட்டவன் கடுங்கோன் பாண்டியன் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
20பாண்டியர்கள் தங்களது பரம்பரைப் பொக்கிஷங்களை ஐந்தாம் மகிந்தனிடம் ஒப்படைத்ததாகவும்!” அதை பின்னர் இராஜேந்திர சோழன் கைப்பற்றி, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு கொண்டு சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment