Saturday 26 July 2014

தமிழ் இன் மெல்ல.. 18 ஓய் சிவாச்சாரி! உமக்கு தடுப்பதைத் தவிர எந்தப் பயிற்சியும் கிடையாதா?”

தமிழ் இனி  மெல்ல.. 18
 

அரிசோனா மகாதேவன் 

சென்ற பதிவின் நினைவூட்டல் 
கருவூரார், இராஜராஜர், குந்தைவைப் பிராட்டியார், சோழமாதேவி இவர்களை வணங்கிவிட்டு, தன் அருகில் பணிவுடன் வந்து வணங்கி நின்ற சிவாச்சாரியைப் பார்த்து, “சிவாச்சாரியாரே! உம்மை எனக்குப் பணியாளனாக ஆசான் கருவூரார் அளித்தாலும், நீர் சிவனடியார் என்பதாலும் வேதங்களும், மறைகளும் கற்றுத் தேறிய அறிவாளர் என்பதாலும் உம்முடைய சிவப் பணிக்கும், உமது அறிவுக்கும் தலைசாய்க்கிறேன். உம்முடைய இறை அறிவு என் அத்தையாருக்கும், அன்னையாருக்குமே தேவைப் படலாம். வேண்டுமென்றால், சிவத்தொண்டில் சிறந்த எனது அத்தையார் அதைப்பற்றிச் சோதித்து அறிந்து கொள்ளட்டும். போர்வீரனாகிய எனக்கு உம்முடைய அரசியல் அறிவிலும், மறத்திலும்தான் விருப்பம். அதையே சோதித்து அறிய விரும்புகிறேன்!” என்று இராஜேந்திரன் கணீரென்ற குரலில் தெரிவிக்கிறான்.
“தங்கள் சித்தம், என் பாக்கியம் இளவரசே! உலகத்தில் இருக்கும் எல்லா அறிவையும் தன்னுள் அடக்கிய கலைமகளே இன்னும் கற்கும் பொழுது, மறத்தையே ஒரு கலையாகப் பயின்று, அதை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டும் ராஜதந்திரியான, மாவீரரான, உங்களின் கேள்விக்கு என்னால் இயன்ற அளவு பதில் இயம்புகிறேன். குற்றம், குறையிருப்பின், பெரியோரான தாங்களும், சக்கரவர்த்தி அவர்களும், எனது குருதேவரும் பொறுத்தருளி, குறைநீக்கி அருள வேண்டுமாறு பிரார்த்திக்கிறேன்!” அவனது குழைவு இயல்பானதா, அல்லது கிண்டலா என்று அவனது முகபாவத்திலிருந்து இராஜேந்திரனால் கண்டிபிடிக்க இயலவில்லை. ஆயினும், அரசவையில் பேசத் தெரிந்திருக்கிறான் என்று அவன்பால் தெளிவு பிறக்கிறது.
நிமிர்ந்து, இவர்களின் சொற்போரின் துவக்கத்தை உற்சாகத்துடன் கவனிக்கிறார் இராஜராஜர்.

இந்தப் பதிவு[18] தொடர்கிறது 

‘ஒரு நாடு எப்படி இருக்கவேண்டும்? அதன் இலக்கணம் என்ன? தகுந்த சான்றுடன் விளக்கும் சிவாச்சாரியாரே!” முதல் கேள்விக் கணையைத் தொடுக்கிறான் இராஜேந்திரன்.

“உண்பதற்கு எதுவும் இல்லையே, அப்படியிருக்க அடுத்த வேளைக்கு எதை உண்ண இயலும் என்று குடிமக்களை வருத்தும் பசி, அடங்காமல் மக்களை துன்புறுத்தும் பிணிகள், அச்சுறுத்தும் பகை ஆகிய இவை யாவும் இல்லாமல், சுதந்திரமாக இருப்பதற்கு மற்ற எந்த வெளிநாடுகளின் துணையும் தேவைப்படாது இயங்குவது எதுவோ அதுதான் நாடு எனப்படுவது என்று செந்நாப் புலவர் தனது திருக்குறளில் இயம்பியுள்ளார், அரசே!” என்று பளிச்சென்று பதிலளிக்கிறான் சிவாச்சாரி.

“அரசன் ஒற்றரிடமிருந்து வரும் செய்தி உண்மையா என்று எப்படி அறிவது?” அடுத்த கேள்வி பிறக்கிறது.

“ஒரு ஒற்றனை எந்தச் செய்தியை அறிந்துவர அனுப்புகிறோமோ, 
அதே செய்தியை அறிந்து வர, அந்த ஒற்றனுக்குத் தெரியாமலேயே மற்றொரு ஒற்றனை அனுப்பித் தெரிந்து கொள்வதே முறை என்று வள்ளுவப் பெருமான் ‘கண்ணோட்டத்’தில் அறிவுறுத்தி இருக்கிறார்!”

“அரசனிடம் ஒரு பணியாளன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”

“அரசனிடம் உண்மையே பேசவேண்டும். அரசன் விரும்புவதை மட்டுமே செய்ய வேண்டும். எப்பொழுதும் அரசனின் நன்மை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். அரசனைச் சுற்றி நடப்பதைக் கண்டும் காணாத குருடனாகவும், அரச இரகசியங்களைக் கேட்டாலும் காதில் விழாத செவிடனாகவும், அரசர் செய்வது தகாத செயலாகவே இருந்தாலும் அதைக் காணாத குருடனாகவும் இருக்கவேண்டும் என்று பஞ்ச தந்திரம் தெரிவிக்கிறது.”

“அரசனிடம் ஒரு பணியாளன் எப்படிப் பழக வேண்டும்?”

“ஒரு நெருப்புடன் பழகுவதைப் போல, அரசே! நெருப்பின் கதகதப்பும், உணவைச் சமைக்கும் திறனும், ஒளியும் தேவைப்பட்டாலும், அந்நெருப்பை மிகவும் நெருங்கிவிட முடியாதல்லவா? நெருங்கினால் சுட்டுவிடுமல்லவா? அதைப் போலத்தான் அரசனின் உறவும் ஒரு பணியாளனுக்கு இருக்க வேண்டும்.”

“ஒரு அரசனின் அறிவு எப்படி இருக்கவேண்டும்?”

“ஒரு அரசனுக்கு பலரிடமிருந்தும் பலவிதமான தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். அவற்றின் பொருள் எப்படி இருந்தாலும், அவை ஏன் சொல்லப் படுகின்றன, எப்படிச் சொல்லப் படுகின்றன. எந்த விளைவை எதிர்நோக்கி அவை சொல்லப்படுகின்றன, அந்தச் செய்திகளை தெரிவிப்பதானால் தெரிவிப்பவருக்கு ஆதாரம் என்ன, அந்தச் செய்திகளின் அடிப்படையில் செயல்புரிந்தால் அதன் விளைவுகள் என்ன என்று பலவாறு ஆராய்ந்து, அதன் உண்மையான நோக்கத்தைத் தெரிந்து கொள்வதுதான் அரசனுடைய அறிவாகும்.”

“ஒரு அரசன் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?”

“கடவுள் பற்றின்மை, பொய்மை, சினம், கவனமின்மை, ஒத்திப் போடுதல், கற்றோரைப் புறக்கணித்தல், சோம்பேறித்தனம், ஐம்புலன்களுக்கு அடிமையாதல், செல்வத்தின்பால் மோகம், வழியறியாத ஈனர்களின் அறிவுரை, முடிவெடுத்த செயல்களை நிறைவேற்றாமை, இரகசியங்களைக் கட்டிக் காப்பதில் கவனக் குறைவு, நன்னெறியைப் பின்பற்றாமலிருத்தல், தராதரம் இல்லாதவர்களுக்கு மரியாதை அளித்தல் என்ற இந்தப் பதினான்கையும் ஒரு அரசன் தவிர்க்கவேண்டும் என்று இராமாயண மகாகாவியத்தில் இராமர் தன் இளையோனான பரதனுக்கு அறிவுரை கூறுகிறார்!”

கிட்டத்தட்ட ஒரு நாழிகை நேரம் இராஜேந்திரனின் கேள்விகளும், அதற்கு சிவாச்சாரியுடைய பதில்களும் தொடர்கின்றன. அனைவருக்கும் நேரம் செல்வதே தெரிவதில்லை. கடைசியில் இராஜேந்திரனின் முகத்தில் புன்னகை மலர்கிறது.

“சிவாச்சாரியாரே! உம்முடைய அரசியல் அறிவுக்கு நான் சிரம் தாழ்த்துகிறேன். நீர் அரசியலைக் கரைத்துக் குடித்தவராகவே தென்படுகிறீர். நான் இனி போர்த் தந்திரம் பற்றி கேள்விகளைத் தொடர விரும்புகிறேன்!” என்று ஆரம்பிக்கிறான்.

இராஜேந்திரன் சிவாச்சாரி இருவரின் மேலும் இராஜராஜருக்கு மதிப்பு வளர ஆரம்பிக்கிறது. தான் வளர்த்த சோழ சாம்ராஜ்ஜியத்தை வளரவைப்பான், சோழர்தம் புகழைப் பரப்புவான் தன் மைந்தன் என்ற மகிழ்ச்சி அவர் நெஞ்சத்தை நிரப்புகிறது.

“சிவாச்சாரியாரே! போர் அணிவகுப்பை எப்படி நடத்திச் செல்லவேண்டும்? எந்தெந்தப் படைகள் எங்கெங்கு நிறுத்தப்படவேண்டும்?” இது இராஜேந்திரனின் முதற்கேள்வி.

“இளவரசே! அது போர் நடக்கும் இடத்தையும்! எதிரியின் போர்த்திறனையும் பொறுத்தது. சமவெளியில், சமமான படையுடன் போரிட்டால், முதலில் வில்லாளிகளை வைத்து சரமாரியாக அம்பெய்து எதிராளிக்கு அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தவேண்டும். அதன் பின் நம் படைகள் முன்னேறும் பொழுது ஈட்டியெறிபவர்கள் மூலம் பகைவரின் அணிவகுப்பை நிலைகுலையச் செய்யது சிறந்தது. அதன் பின்னர், யானைப் படைகள் எதிராளிகளின் காலாட்படைகளையும், அதற்குத் துணையாக வரும் குதிரைவீரர்களையும் துவம்சம் செய்யவேண்டும். நம் யானைப் படைகளுக்கிடையில் குதிரை வீரர்களும், காலாட்களும், அணி வகுத்திருக்க, வில்லாளர்கள் சற்றே பின்வாங்கி அவர்களுக்கு உதவியாக சரமாரியாக அம்பெய்து, எதிரிகளின் அணிவகுப்பில் குழப்பத்தை உண்டாக்கி, அவர்கள் சிதறி ஓடும்பொழுது, அவர்களுடைய ஏனாதிகளைத் தந்திரமாகக் கொல்ல வேண்டும். அதனால் எதிரிப் படை தலைவர்களில்லாமல் தடுமாறும்.” 

இராஜராஜருக்கே சிவாச்சாரியனின் அணிவகுப்பு முறை விந்தையாகப் படுகிறது.

அதை எதிர்பார்த்தது போல, “இது நான் சீன நாட்டின் மிகப் பெரிய படைத்தளபதி ஒருவரின் ‘போர்க்கலை’யிலிருந்து எடுத்து, நாம் நாட்டிற்கு உகந்தபடி மாற்றிச் சொல்லியிருக்கிறேன்.” என்று விளக்கம் கொடுக்கிறான்.
“இது விந்தையாகத்தான் இருக்கிறது. ஏதாவது ஒரு படையெடுப்பில் இதைப் பயன்படுத்திப் பார்க்கவேண்டும். அது போகட்டும். நீர் பல சாத்திரங்களும் கற்றுத் தேர்ந்தவர் என்று தெரிந்து கொண்டேன். நீர் வெறும் பேச்சுப் புலியா அல்லது, பேச்சைச் செயல்படுத்தும் திறன் உடையவரா என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு உம் வாள்வீச்சுத் திறமையைக் காட்டும்!” என்று சுவற்றில் மாட்டியிருந்த இரண்டு வாள்களை எடுத்து, ஒன்றை சிவாச்சாரியிடம் தூக்கி வீசுகிறான் இராஜேந்திரன்.
* * *
                                                       அத்தியாயம் 2
                                      தஞ்சை அரண்மனை, தஞ்சாவூர்
                                    சாதாரண, ஆனி 28 - ஜூலை 13, 1010
ருவரும் சிவாச்சாரியை இராஜேந்திரன் வாட்போருக்கு அழைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. “மதுராந்தகா, இதென்ன விளையாட்டு? மரியாதைக்குரிய சிவாச்சாரியாரை வாட்போருக்கா அழைப்பது!” என்று உரிமையுடன் கண்டிக்கிறாள் குந்தவைப் பிராட்டி.

“மகனே! விஷப்பரிட்சை வேண்டாமய்யா! உனக்குச் சமமாக வாட்போரிட யார் இருக்கிறார்கள்? சிவபூஜை செய்யும் அந்தணரின் குருதியை, சிவபெருமானைப் போற்றும் திரிபுவனச் சக்கரவர்த்தியின் இந்த மாளிகையில் சிந்தலாமா? சக்கரவர்த்திகளே! கருவூர்த் தேவரே! இந்த வேண்டாத சோதனையை நிறுத்துங்கள்!” என்று மன்றாடுகிறாள் பட்டத்து ராணி சோழமகாதேவி.

ஏதோ சொல்ல வாயெடுத்த இராஜராஜரைக் கையை உயர்த்தித் தடுத்து நிறுத்துகிறார் கருவூரார்.

“அருள்மொழி! பணியாளனைச் சோதித்துப்பார் என்று சொன்னது இந்தக் கட்டைதான்.” என்று தன்னைச் சுட்டிக் காட்டிக்கொண்டவர், “ஆசிரியன் சொல்லைத்தானே இளவரசன் மதித்து நடக்கிறான்? வாட்போர் செய்யும் திறனில்லை என்றால் சிவன் சொல்லிவிடட்டுமே! மதுராந்தகன் விட்டுவிடப்போகிறான்!” என்று புன்னகையுடன் பதில் அளிக்கிறார். அவர் மனதில் ஓடுவதை அனைவரும் உடனே புரிந்து கொள்கின்றனர்.

இராஜேந்திரன் தன்னிடம் எறிந்த வாளை அதன் பிடியில் சரியாகப் பிடித்திருந்த சிவாச்சாரி, வாளைக் கீழிறிக்கி, அனைவருக்கும் தலைசாய்த்து வணக்கம் தெரிவிக்கிறான். “குருதேவரே!  சக்கரவர்த்திகளே! இளவரசரின் இந்தச் சோதனைக்கு உட்பட எனக்கு அனுமதியும், அதில் இளவரசர் மனம் மகிழவும் எனக்கு ஆசி அருளுங்கள்!  மகாராணியாரே!  பிராட்டியாரே!  தங்கள் கனிவு எனக்குக் கிடைப்பது என் முன்னோர்கள் செய்த நல்வினைதான். இளவரசர் என்னைக் கொல்லும் நோக்கத்துடனா அழைக்கிறார்?  அவரது நாட்டுக் குடிமகனான என்னைக் காப்பது அவர் பொறுப்பு என்று தெரியாதா?”

கருவூராரும், இராஜராஜரும் “நடக்கட்டும்!” என்பது போலக் கைகளை உயர்த்துகிறார்கள்.

இராஜேந்திரனைத் தலைசாய்த்து வணங்குகிறான் சிவாச்சாரி. “இளவரசே!  இந்தச் சோதனைக்கு வேறுவிதமான வாளைத் தேர்ந்தெடுக்கத் தங்கள் அனுமதி வேண்டும்!” என்று பணிவுடன் வேண்டுகிறான்.

அதற்குத் தலையசைத்த இராஜேந்திரன், “சிவாச்சாரியாரே!  நான் தந்த வாளிடம் என்ன குறை என்று எமக்குச் சொல்லிவிட்டு வேறு வாளைத் தேர்ந்தெடும்!” என்கிறான். சிவாச்சாரியனுக்கு வாட்போர் மட்டுமல்ல,  வாள்களைப் பற்றியும் அறிவு இருக்கிறது என்பதை அறிந்து அவனுக்கு மகிழ்வாக இருக்கிறது.

“இளவரசே! குறையுள்ள எந்த வாளையும் தாங்கள் எனக்குத் தருவீர்களா?  இந்த வாள் தாக்குவதற்கான...” என்றவன், “என் அதிகப் பிரசங்கித்தனத்திற்கு மன்னிக்க வேண்டும். தங்கள் திறமைக்குமுன் என்னைத் தற்காத்துக் கொள்ள எனக்கு வேறு விதமான வாள் வேண்டும்.” என்று தூணில் மாட்டியிருந்த வேறொரு வாளை எடுத்து வருகிறான்.

அந்த வாள், மற்ற வாள்கள் மாதிரி அகலம் குறைந்து கொண்டே வந்து நுனி கூர்மையாக முடியாமல் முடிவில் பட்டையாக இருக்கிறது. கைப்பிடியிலிருந்து அகலம் அதிகமாகிக் கொண்டே வந்து நடுவில் மூன்று மடங்கு பெரிதாகி முடிவில் கைப்பிடி அகலத்தை விட இரண்டு பங்கு அதிகமாகவே இருக்கிறது. இரண்டு கைகளாலும் பிடித்து போரிடவேண்டிய கனமான கட்டைவாளான அதற்கு வளைவும் அதிகமாகவே இருக்கிறது.

.
இராஜேந்திரனின் விழிகள் பெரிதாகின்றன. 

அந்த வாளை சிவாச்சாரி எடுத்ததின் நோக்கம் அவனுக்குப் புரிகிறது. தன்னைவிட உயரமும், தோள்வலியும் சிறிது குறைந்த சிவாச்சாரி தன்னுடைய பலத்திற்கு ஈடுகொடுக்க, தன் தந்திரத்தால் வாளின் மூலம் தனது அதிகத் திறனைக் குறைக்க முயல்கிறான் என்றும் அறிந்து மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான். தன்னுடைய தாக்குதல் வேகத்தை முழுவதும் கைகளுக்குக் கொண்டுவராமல் குறைக்கும் வாள் என்று தெரிந்துதான் அதைத் தேர்ந்து எடுத்திருக்கிறான் என்றும் புரிந்துகொள்கிறான். உண்மையிலேயே இவன் போர்த்தந்திரம் தெரிந்தவன், இவனைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று முன்ஜாக்கிரதைப் படுத்திக் கொள்கிறான்.

அவனின் தந்திரம் அவனுக்கு முழுவதும் உதவக்கூடாது என்பதற்காக, “சிவாச்சாரியாரே! நீர் சொல்லியபடி உம்மைத் தாக்கிச் சாய்க்கக்கூடிய வாளை எடுக்காமல் நானும் நீர் தேர்ந்தெடுத்த கட்டைவாள் மூலமே உமது திறமையைத் தெரிந்து கொள்கிறேன். 

இளவரசன் என்று தயங்காமல் உமது முழுத்திறமையையும் காட்டும். என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும்.” என்றபடி தானும் சிவாச்சாரி தேர்ந்தெடுத்த மாதிரி தானும் ஒரு கட்டைவாளையே எடுத்துக் கொள்கிறான்.

தன் விருப்பப்படி கட்டைவாளை உபயோகிக்கத் தன்னை அனுமதித்ததுடன், தன்னுடைய எதிர்பார்ப்புப்படி, இராஜேந்திரனும் கட்டைவாளை எடுத்துக் கொண்டது சிவாச்சாரியனுக்கு இரட்டிப்பு மகிழ்வை அளிக்கிறது. தான் கட்டைவாளைத் தேர்ந்தெடுத்ததனால் இராஜேந்திரனின் தாக்குதல் வலிமையைத் தனக்கு வரவிடாமல் தடுக்க இயலும் என்றாலும், கட்டைவாளைத் தேர்ந்தெடுத்தால் தனது வாட்போர் வேகத்தையும் இழக்கப் போகிறோம் என்பதை இராஜேந்திரனும் அறிந்திருந்தாலும், அதை அவன் முகம் வெளியில் காட்டிவிடாமல் மறைத்துக் கொள்வதையும் தெரிந்து கொள்கிறான்.

இருவரும் அருகிலிருக்கும் பெரிய முற்றத்திற்குச் செல்கிறார்கள். வாளைத் தூக்கி நெற்றியில் வைத்து கண்களை மூடிக்கொண்டு ஒரு கணம் சிவபிரானைத் துதித்த சிவாச்சாரி, கண்களைத் திறந்து தலைசாய்த்து இராஜேந்திரனுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு இருகைகளாலும் வாளை உயர்த்திப் பிடிக்கிறான்.

உடனே தன் இருகைகளாலும் வாளை உயர்த்திக் கொண்டு மதம் பிடித்த யானையைப் போல சிவாச்சாரி மேல் பாய்கிறான் இராஜேந்திரன். ஒன்று தன் பாய்ச்சலிலிருந்து விலகுவான், அல்லது தாங்கமுடியாமல் தடுமாறி விழுவான் என்று நினைத்த இராஜேந்திரனுக்குப் பெரிய அதிர்ச்சிதான் காத்திருக்கிறது.

ஒரு குட்டிச் சுவரில் முட்டிக்கொண்டது போல அவனது வேகம் தடுத்து நிறுத்தப்படுகிறது. அவனது வாளை எதிர்நோக்கித் தனது வாளைச் சற்று சரித்து அகலமான அதன் நடுப்பகுதியில் வாங்கிய சிவாச்சாரி, கையை லாவகமாகச் சற்று சுழற்றி, இராஜேந்திரனின் வாளைத் தன் வாளின் அடிக்கு வரவைக்கிறான். அந்த வழுக்கலில் இராஜேந்திரனின் வேகம் அரை விநாடிக்குள் குறைத்து நிறுத்தப்படுகிறது. உடனே தன் வாளை விடுவித்து ஓரடி பின் வாங்கிவிட்டு, அதற்கு மேலே இராஜேந்திரனை எதிர்க்க எந்த முயற்சியும் செய்யாமல் நிற்கிறான் சிவாச்சாரி.

அவன் ஏன் வெறுமனே நிற்கிறான் என்று திகைத்த இராஜேந்திரன், தானும் ஒரு அடி பின்வாங்கி மறுபடி தாக்குகிறான். அவன் எப்படித் தாக்கினாலும் அதைத் தடுத்து நிறுத்திவிடுகிறான் சிவாச்சாரி. ஆனால், எந்தவிதமான எதிர்த்தாக்குதலும் செய்யாமல் நின்று விடுகிறான். இது ஏன் என்று தெரியாமல் எரிச்சல் படுகிறான் இராஜேந்திரன்.

இரண்டடி பின்னால் எடுத்து வைத்து, “ஓய் சிவாச்சாரி! உமக்கு தடுப்பதைத் தவிர எந்தப் பயிற்சியும் கிடையாதா?” என்று கத்திக் கொண்டே தனது தாக்குதலின் வேகத்தை அதிகரிக்கிறான். சிவாச்சாரியின் வாட்போர்த் திறனை அறிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மறைந்து அவனைத் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணமே இராஜேந்திரனுக்கு எழுகிறது.

பத்து மணிக்கூறுகள் பத்து விநாடிகளாக ஓடிப் போகின்றன. என்னதான் மாற்றி மாற்றித் தாக்கினாலும், சிவாச்சாரி தடுத்துக் கொள்கிறானே தவிர, இராஜேந்திரன் மீது எந்தத் தாக்குதலும் நடத்தவே இல்லை.[வளரும்]

No comments:

Post a Comment