Tuesday 15 July 2014

தமிழ் இனி மெல்ல :-8ஓட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜ், தஞ்ஜூ

                                    

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி அவர்கள் தமது முகவரியைத் தரவில்லை. இந்தப் பதிவை அவர்கள்  கண்டால் அன்புகூர்ந்து தம் முகவரி வழங்கி எங்கள் வாக்குறுதியை நாங்கள் காப்பாற்ற ஒரு வாய்ப்பளிக்க வேண்டுகிறோம் 
                               ஓட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜ், தஞ்ஜூ
                                  பிரஜோற்பத்தி, ஆடி 5 - ஜூலை 19, 2411
தொடர்கிறது தமிழ் இனி மெல்ல 

அரிசோனா மகாதேவன் 

நினைவூட்டல்:சென்ற பகுதியின் இறுதியில் 

ஸஹஜா தன் மேஜையில் உள்ள குமிழ்களைத் திருகி
 அருகில் உள்ள கண்ணாடியில் சில வட்டங்களைத் 
தொட்டு இழுக்கிறாள். அவர்கள் பார்க்கும் முப்பரிமாணப்
 படங்கள் மாற ஆரம்பிக்கின்றன. சூரியனின் சிவப்பு நிறம்
 ஒருவித ஊதா நிறமாக மாறுகிறது. சூரியப் புள்ளிகள் 
தென்படவே இல்லை. இந்த விபரப்படி பார்த்தால் இத்தனை 
நாட்கள் அவர்களைப் பயப்படுத்திய நிகழ்ச்சிகள் வெறும் மாயை 
என்றே தோன்றுகிறது.

தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொள்கிறார் சோம்காந்த். 
மேலிடத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்தின் பல நாடுகளுக்கும் 
இந்நிகழ்ச்சிகளைப் பற்றிக் கடுமையாக எச்சரிக்கை செய்து விட்டு, 
பின்னால் இவை காற்றுப் போன பலூன்கள் என்று எப்படித் தெரிவிப்பது? 

இதற்குள் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று சேர்ந்தமாதிரி பத்து இணைப்புகள் அலறுகின்றன. காரைகட் வான் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரின் தொடர்பை முதலில் இணைக்கிறார் சோம்காந்த்.

“சோம்த், எனக்கு சீனாவிடமிருந்து செய்தி வந்திருக்கு. நீங்கள் 
தேவையில்லாமல் உலகத்தையே பயப்பட வைக்கப் பார்க்கறீங்கன்னு.
 எனக்கு அவமானமா இருக்கு! உடனே என் ஆபீஸுக்கு வந்து
 நம் ஆராய்ச்சி மையத்துக்கு வந்த குழப்பத்தை நீக்க உதவி செய்யுங்க!” 
என்று தலைவர் ஸோஹன்லால், சோம்காந்த்தின் மேலதிகாரியான 
சுந்தரேச சாஸ்திரியின் மேலதிகாரி, மிகவும் தணிந்த குரலில் 
உறுமிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார். சோம்காந்த்துக்கு 
சிங்கமே தன் வாய்க்குள் தலையை விடச் சொல்லி தன்னை 
அழைப்பது போல இருக்கிறது.

“ஸஹ்ஜ், நான் ஸோஹன் ஸார் ஆபீஸுக்குப் போகிறேன். 
முக்கியமான விஷயம். நான் திரும்பி வரும்வரை இந்த 
நிகழ்ச்சிகளில் உன் கண்ணை வைத்திரு. வெளியே 
எங்கும் போகாதே. ஏதாவது முக்கியமாகத் தெரிந்தால் 
என்னை உடனே கூப்பிடு. என்னை ஈஸ்வரன் காப்பாற்றட்டும்!” 
என்று நெற்றியில் துளிர்த்த வியர்வைத்துளிகளைத் 
துடைத்துக் கொண்டு விரைகிறார் சோம்காந்த். 

என்ன விஷயம் என்று தெரியாமல் குழம்புகிறாள் ஸஹஜா

   “ஓட்டல் சக்ரவர்த்தி ராஜ்ராஜ்” ஒரு முப்பத்தைந்து மாடிக் கட்டிடம். தஞ்ஜுவிலேயே மிகப் பெரிய ஓட்டல் அதுதான். நுழைவாயிலில் இரண்டு ஆள் உயரமான, வெண்கலத்தில் செய்யப்பட்ட பெரிய பாவைச் சிலைகள் நுழைவோரைக் கைகூப்பி வரவேற்கின்றன.

தேர் மாதிரி அலங்கரிக்கப்பட்ட நுழைவாயிலுள் நுழைந்து உள்ளே சென்றால், பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்கள் மாதிரி உடையணிந்த ரஷயப் பெண்கள் வரவேற்கிறார்கள். அவர்கள் மார்புக் கச்கையும், இடுப்புக்குக் கீழே கணுக்கால் வரை தொங்கும் பின்குஞ்சம் உள்ள சேலையையும் உடுத்தியிருக்கிறார்கள். கருப்பாய், வில்லாய் வளைந்த புருவங்கள் ஒட்டப் பட்டிருக்கின்றன. காதுகளைக் குழைகள் அலங்கரிக்கின்றன. மூக்கில் மூக்குத்தி, புல்லாக்கு, கழுத்தில் மார்பு வரை தொங்கும், தங்கத்தினாலும் கல்லாலும் இழைக்கப் பட்ட சங்கிலிகள், கைகளில் கல் வளையல்கள், முழங்கைகளுக்கு மேலே வங்கி, மற்றும் நாகொத்து என்று ஏகப்பட்ட பழந்தமிழ் நகைகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கூந்தலுக்கு கருஞ்சாயம் பூசப்பட்டிருக்கிறது. தமிழ்ப் பெண்களின் கூந்தல் மாதிரி கருப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக.

தமிழே கூற்று மொழியாக ஆகிவிட்டாலும், ராஜராஜ சோழச் சக்கரவர்த்திக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் அந்த இரண்டு பெண்களும், “வணக்கம், வருக!” என்ற இரண்டு தமிழ்ச் சொற்களை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லி, நுழைபவர்களை இன்முகத்துடன் வரவேற்கின்றனர். 

வரவேற்பறை ஒரு அரசவை மாதிரி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. 

வருபவர்கள் உட்காருவதற்காக சிறிய சிம்மாசனங்கள் போடப் பட்டிருக்கின்றன. அவற்றில் சிங்கங்களுக்குப் பதிலாக, புலிகள் வாயைத் திறந்து உறுமியவாறு தென்படுகின்றன. தேரின் தொம்பைகள் போல ஆங்காங்கு பெரிய தொம்பைகள் தொங்கவிடப் பட்டிருக்கின்றன.
தன்னை “வணக்கம், வருக!” என்று அழைத்த ரஷ்யப் பெண்களைப் பார்த்துத் திகைத்துப் போகிறான் அழகேசன்.

“வணக்கம்மா! நல்லா இருக்கீங்களா?” என்று அவன் தமிழில் கேட்டது புரியாமல் விழிக்கின்றனர் அப் பெண்கள். எந்த ஒரு எடுபிடியும் இந்த ஓட்டலில் தங்க, நுழைவாயில் வழியாக வரமாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு மொழிமாற்றுக் கருவி கொடுக்கப் படாததே அதற்குக் காரணம். பின்னர் தங்களைச் சமாளித்துக் கொண்டு, மீண்டும் அவனைப் பார்த்துப் புன்னகைத்து, “வணக்கம், வருக!” என்று கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, கை கூப்புகின்றனர். பிறகு அவனை வரவேற்பறைப் பக்கம் செல்லுமாதிரி கை காட்டுகின்றனர்.

அவர்களது வெண்மை நிறத்தைப் பார்த்து வியக்கிறான் அழகேசன். “இப்படியும் வெளுத்த பொம்பளைங்க இருக்காங்களா? இவங்க எப்பவும் இருட்டிலேயே இருந்ததால சோகை பிடிச்சவங்க மாதிரி இருக்காங்களே! ஒருவேளை வெண்குஷ்டமோ இவங்களுக்கு?” என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.

“ஏமாந்து போயிட்டேன். உங்களுக்குத் தமிழ் தெரியாதா? பின்னே எப்படி... ?” என்று உரக்க அவர்களிடம் கேட்டுவிட்டு வரவேற்பு அரங்கத்தில் மேஜைக்குப் பின்னால் இருக்கும், தமிழ்ப் பெண் மாதிரி உடை அணிந்திருக்கும் மற்றொரு ரஷ்யப் பெண்ணிடம் ஷிஃபாலி தன்னிடம் கொடுத்திருந்த கடிதத்தைக் கொடுக்கிறான்.

பஞ்சாபிப் பெண்கள் தற்பொழுது இம்மாதிரி சிறிய வேலைகளுக்கு வருவதை நிறுத்தி விட்டதால், ரஷ்யப் பெண்கள் அந்த வேலைகளில் நிறைந்து இருப்பது வழக்கமாகிவிட்டது. அவனைக் கொஞ்ச நேரம் நாற்காலியில் அமர்ந்து பொறுத்திருக்கும்படி கைகாட்டுகிறாள் அப்பெண். கால்மேல் கால் போட்டுக் கொண்டு, நாற்காலியில் அமர்ந்து, புலிகளின் வாயில் விரலை விட்டு, அவற்றின் பற்களின் கூர்மையை சோதனை செய்தவாறே அங்கு வருவார் போவோரைக் கவனிக்கிறான் அழகேசன். அந்தப் பெரிய, நான்கு மாடி உயரமான வரவேற்புக் கூடத்திலிருக்கும் அனைத்தையும் அளவெடுக்கிறது அவன் கண்கள்.

தமிழ்ப் பெண்மாதிரி உடையணிந்திருந்த ஒரு ரஷ்யப்பெண் அவனை அணுகி, “என்னுடன் வா. உன்னை மிஸ். ஷிஃபாலியிடம் அழைத்துப் போறேன்.” என்று இந்தியில் சொல்கிறாள். அவள் சொல்வது புரியாமல் விழித்த அழகேசன், தன் சட்டைப் பையில் இருந்து மொழி மாற்று கருவியைக் காதில் அணிந்து கொள்கிறான். அதைப் பார்த்தவுடன் அவன் எடுபிடிதான் என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்தாலும், அவனது கம்பீரம் ஒருவிதமான மரியாதையைக் கொடுக்கும்டி அவளைத் தூண்டுகிறது.

“ம், இப்பொழுது சொல்!” என்பது போல அவளைப் பார்க்கிறான் அழகேசன். அங்கு அவள் மாதிரி பணி புரியும் எல்லாப் பெண்களும் ரஷ்யப் பெண்களாகவே இருப்பதையும், அவர்கள் பழங்காலத் தமிழ்ப் பெண்கள் மாதிரி உடை அணிந்திருப்பதையும் அவன் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.
“என்னுடன் வா!” என்று அவனை அழைத்து விட்டு, முன்னே நடக்கிறாள் அப் பெண். பதில் பேசாமல் அவள் பின்னழகை ரசித்தவாறே அவளைப் பின் தொடர்கிறான் அழகேசன். அவர்கள் முப்பதாவது மாடியை அடைந்தபின ஷிஃபாலி இருக்கும் அறையின் கதவின் நடுவில் இருக்கும் சதுரப் பட்டையில் கையை வைக்கிறாள் அந்தப் பெண். சில விநாடிகளில் ஷிஃபாலி கதவைத் திறக்கிறாள். ஒரு புன்னகையுடன் அவளைக் கைகூப்பி வணங்கி அழகேசனைக் காட்டி, “உங்களைப் பார்க்க இவர் வந்திருக்கிறார்.” என்று தெரிவித்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறாள்.
“வணக்கம்மா!” என்று கைகூப்புகிறான் அழகேசன்.

“உள்ளே வா கேஷ்!” என்று அழைத்து விட்டு அறைக்குள் நுழைகிறாள் ஷிஃபாலி.

அவளைப் பின் தொடர்ந்த அழகேசன் அந்த அறையைப் பார்த்து பிரமித்து விடுகிறான். தரையிலிருந்து கூரைவரை விளங்கும் கண்ணாடிச் சுவர் தொலைவில் இருக்கும் தஞ்சைப் பெரிய கோவிலின் கோபுரத்தைக் காட்டுகிறது. தன்னையும் அறியாமல், “தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! நமச்சிவாய! நமச்சிவாய! என்று சொல்லி கோபுரத்தை நோக்கித் தலைசாய்த்து கைகூப்புகிறான்.

புரியாமல் அவனைப் பார்த்து கண்களால் வினாவுகிறாள் ஷிஃபாலி.

“அம்மா, எதிரே சிவன் கோவில் கோபுரம் தெரியுது. உங்ககிட்ட வேலை பார்க்க வந்திருக்கற என்னை சிவபெருமானே வாழ்த்தறமாதிரி தோணிச்சு. அதுதான் அவரைக் கும்பிடறதா நெனைச்சு கோபுரத்தைக் கும்புட்டேன்!” என்று பணிவுடன் பதில் சொல்கிறான் அழகேசன்.

அவனுடைய கடவுள் பக்தி அவளுக்குச் சரியாகப் புரியவில்லை. அவள் இதுவரை கடவுளைப் பற்றி நினைத்துப் பார்த்தது கிடையாது. தன் மகளுக்கும் அது பற்றி சொல்லிக் கொடுத்தது கிடையாது. தஞ்சைப் பெரிய கோவிலை ஒரு சுற்றுலாத் தலமாகத்தான் அவள் பார்த்திருக்கிறாள். அணுகியிருக்கிறாள். அந்தக் கோவிலில் இருக்கும் பிரகதீஸ்வரின் லிங்க வடிவம் அவளுக்குள் எந்த பக்தி உணர்ச்சியையும் தோற்றுவித்ததில்லை.

இருப்பினும் மத்ராவிலிருந்து வந்த ஒரு மல்யுத்த வீரன் தஞ்ஜூ கோவில் கோபுரத்தைக் கண்டு நெகிழ்ந்து போவது அவளுக்கு வியப்பாகவும், புதிராகவும்தான் இருக்கிறது. அது பற்றி பின்னால் பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொள்கிறாள்.

“கேஷ், இப்ப என் மகளையும், மற்றவங்களையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்.” என்று சொல்லி விட்டு, அங்கு இருந்த இன்னொரு கதவைத் தட்டுகிறாள்.

கதவைத் திறந்து கொண்டு வந்த நிமிஷாவைப் பார்த்த அழகேசன், அவள் பின்னால் வந்த காமாட்சியையும், ஏகாம்பரநாதனையும் கண்டு அதிர்ச்சி அடைகிறான். இவர்களைப் பார்த்தால் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பார்கள் போலத் தெரிகிறதே! அதே உணர்வு அவர்கள் கண்களிலும் பளிச்சிடுகிறது. ஷிபாலி நிமிஷாவை முதலில் அழகேசனுக்கு அறிமுகப்படுத்துகிறாள்.

“கேஷ்! இதுதான் என் மகள் நிமிஷா. நான் நாளை மறுநாள் சீனா போகப் போறேன். திரும்பி நான் வரும்வரை நீதான் என் மகனுக்கும், காம்ஸ், ஏக்ஸ் இவர்களுக்குத் துணையா, பாதுகாப்பா இருக்கணும். காம்ஸ் எங்க வீட்டிலே ஒத்தாசையா இருக்கா. இது அவள் தம்பி ஏக்ஸ்.

“இவங்க உன் பாஷைதான் பேசறாங்கன்னு நினைக்கறேன். நிமிஷா எங்கே வெளியே போணும்னு சொன்னாலும் நீ கூடப் போகணும். காம்ஸால செய்ய முடியாத, கஷ்டமான வீட்டு வேலை ஏதாவது இருந்தா நீ அதைச் செய்யணும். என்னை அவசரமாக் கூப்பிடணும்னு தோணினா, இதோ இந்த காலிங் டிரான்ஸ்பான்டரை (இச்டூடூடிணஞ் கூணூச்ணண்ணீணிணஞீஞுணூ) உபயோகி.” என்று சொல்லி, அந்தக் கருவியை இயக்கும் விதத்தை அவனுக்குக் கற்று கொடுக்கிறாள்.

“அதே மாதிரி ஏதாவது மிக முக்கியமான விஷயம் இருந்தா நான் உன்னைக் கூப்பிடுவேன். தினமும் காலைலே பத்துமணிக்கு சாதாரண ஹோலோ-போனிலே நான் கூப்பிட்டு விசாரிச்சுப்பேன். அதுனால சாதாரணமான விஷயத்துக்காக காலிங் டிரான்ஸ்பாண்டரை யூஸ் பண்ணாதே, சரிதானா?” என்று வினவுகிறாள்.

“சரிம்மா, நீங்க சொன்னபடி கட்டாயம் செய்யறேம்மா!” என்று பணிவுடன் ஷிபாலியிடமிருந்து காலிங் டிரான்ஸ்பான்டரை வாங்கி வைத்துக் கொள்கிறான் அழகேசன். அவனுடைய பணிவிலும் ஒரு கம்பீரத்தைக் காண்கிறாள் ஷிஃபாலி.

அழகேசனை ஏற இறங்க அளவெடுக்கின்றனர் மூவரும். அவனுடைய ஆஜானுபாகுவான தோற்றம் ஒருவித மரியாதை கலந்த பயத்தை உருவாக்குகிறது. அதே சமயம் அவனது பணிவு இவன் நம்பத் தகுந்தவன், ஒரு நண்பன் என்ற அருகாமையும் ஒருமிக்கத் தோன்றுவிக்கறது. காமாட்சிக்கு அவன் சொன்ன பதில்கள் மொழிமாற்று கருவி மூலம் தமிழில் ஒலித்தாலும், பார்த்தால் தமிழன் மாதிரி தோன்றியதாலும், அவள் மொழிமாற்றுக் கருவியை அணிந்திருந்ததால் அவன் பேசியது தமிழா, அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் மொழிமாற்றுக் கருவி அணிந்து கொள்ளாத ஏகாம்பரநாதனுக்கு அந்தச் சந்தேகம் தோன்றவே இல்லை! அவன் காதில் அழகேசன் பேசிய தமிழ் தேனாக இனித்தது.

“அண்ணாச்சி, உங்களைப் பார்த்ததுமே எனக்கு ரொம்பச் சந்தோஷம் அண்ணாச்சி! இதுவரை எங்க அக்கா தவிர, யாரு பேசினாலும் எனக்குப் புரிய மாட்டேங்குது, அண்ணாச்சி! ஏன்னா நீங்கள்ளாம் காதுலே வைச்சிருக்கிற மெசின் எங்கிட்ட இல்லே. ஆனா நீங்க பேசினது எனக்குப் பளிச்சுனு புரிஞ்சுது, அண்ணாச்சி. நீங்க யாரு, அண்ணாச்சி?” என்று உற்சாகமாக அழகேசனிடம் தனக்கே உரித்தான குழந்தைத் தன்மையுடன் நூறு முறை அண்ணாச்சி போட்டுப் பேச ஆரம்பிக்கிறான் ஏகாம்பரநாதன்.

எல்லோரும் தாங்கள் செய்வதை விட்டுவிட்டு அவன் பக்கம் திரும்புகிறார்கள். காதிருந்தும் செவிடனாகத்தான் இருந்து வந்திருப்பதைத் தனக்கே உரித்தான பாணியில், அதை ஒரு புகாராகச் சொல்லாமல், அழகேசனின் வருகை தனக்கு எத்தனை மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்று அவன் சொல்வது எல்லோருக்கும் பிடித்து விடுகிறது. ஷிஃபாலியின் முகத்தில் ஒரு சிறிய புன்னகை மலருகிறது. கூடவே அவன் மீது ஒரு பரிதாபமும் பிறக்கிறது. அவன் அருகில் வந்து அவன் தலையை மெதுவாக வருடுகிறாள்.

“நிம்ஸ், என்னோட உதிரி டிரான்ஸ்லேட்டர் ஒண்ணு நம்ம ஃப்ளாட்லே இருக்கே, அதை ஏக்ஸுக்கு கொடுத்துடு. நான் சீனாலே வேறே வாங்கிக்கறேன். காம்ஸ், உன் தம்பி கிட்ட இந்த விஷயத்தைச் சொல்றியா?” என்று சொல்லிவிட்டு அழகேசன் பக்கம் திரும்புகிறாள் ஷிஃபாலி. அதற்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும் என்று ஷிஃபாலிக்குத் தெரியவில்லை!

“கேஷ்! இன்னிக்கு சாயங்காலம் நிம்ஸுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செஞ்சுருக்கேன். அவளோட ஃப்ரன்ட்ஸ் எல்லாம் இங்கே வருவாங்க. அதுக்காக இந்த ஹோட்டல்லே ஒரு ஹாலை வாடகைகு எடுத்திருக்கேன். நீ அதைக் கொஞ்சம் மேற்பார்வை பார்த்துக்கோ. நிம்ஸ், காம்ஸ், ஏக்ஸ் மூணு பேரும் உன்னோட அந்த ஹாலுக்கு வருவாங்க. நிம்ஸுக்கு எப்படி வேணுமோ, அப்படி அந்த ஹாலை அலங்காரம் பண்ணச் சொல்லு. நாளை புறப்படறதுனால எனக்கு சாமான்கள்ளாம் எடுத்து வச்சுக்கணும். ஓகே?!”

“சரிங்கம்மா!” என்று அதே பணிவுடன் பதிலளித்த அழகேசன், “கண்ணுங்களா, போகலாமா?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்கிறான். உடனே ஓடிவந்து அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான் ஏகாம்பரநாதன்.[வளரும்]

No comments:

Post a Comment