Monday 7 July 2014

தமிழ் இனி மெல்ல அத்தியாயம் 4


தமிழ் இனி மெல்ல  
நினைவூட்டல்: சென்ற பதிவின் முடிவு 
சரி சார். நீங்களே இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் ஏன் 
உங்களைப் பற்றி புகார் செய்யப் போகிறேன்? நீங்கள் உங்கள்
 அலுவலகத்திற்கு தகவல் சொல்லுங்கள். நான் அந்த எடுபிடிப் 
பையனை உங்களிடம் மன்னிப்பு கேட்க அனுப்பி வைக்கிறேன்
. இன்னும் ஒரு விஷயம். இவள்தான் சீனா போய்விடுவாளே 
என்று அந்த எடுபிடியைப் பின்னால் அதட்டி உருட்ட மாட்டீர்கள் 
என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” 
மீண்டும் ஒரு கொக்கியைப் போட்டு அவர் குடுமியைத் தன்கையில் 
வைத்துக் கொண்டிருப்பதாக மறைமுறைமாக அவரிடம் எச்சரித்ததபடி,  
அவர் சொல்வதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.அவர் தன் அலுவலகத்துடன் 
தொடர்பு கொண்டு ஈஸ்வரனின் பதவி நீக்கத்தை ரத்து செய்தவுடன் ஷிஃபாலி 
எழுந்து வந்து அவருடன் கைகுலுக்கினாள்..
...“மத்ரா வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்குவதற்குத் 
தயார் செய்து கொள்ளுங்கள்!” என்று ஒரு இனிய பெண்குரல் 
ஷிஃபாலியை நிகழ்காலத்திற்குக் கொணர்கிறது.

                                                                     அத்தியாயம் 4

                                                      ஷிஃபாலியின் குடியிருப்பு, ஷெனாய்
                                      பிரஜோற்பத்தி, ஆடி 1 - ஜூலை 15,  2411
  யத்துக்கு மெருகேற்றித் தடவியது போல, நிமிஷா அணிந்திருந்த உடை பளபளக்கிறது. “உனக்குப் பிடித்திருக்கிறதா காம்ஸ்?” என்று அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை காமாட்சி.

ஒவ்வொரு தடவையும் அதிர்ச்சி தருகிற மாதிரிதான் நிமிஷா உடை அணிந்து கொள்கிறாள். இந்த லட்சணத்தில் அந்த உடையை அணிந்து பார்க்கும்படி காமாட்சியையும் வற்புறுத்துகிறாள். அவளுக்கு இந்தமாதிரி உடுப்புகளைப் பார்க்கக்கூடப் பிடிக்காது. அப்படியிருக்க இம்மாதிரி உடைகளை அணிந்து கொள்வதைப் பற்றிக் கனவில்கூட நினைக்க மாட்டாள். இருந்தாலும் சிரித்துக்கொண்டே மழுப்பி,  மறுத்து வருகிறாள்.

“என்ன காம்ஸ்,  நான் கேட்டதுக்குப் பதிலே சொல்ல மாட்டேங்கறே?” என்று அவளை உசுப்புகிறாள் நிமிஷா. அதற்கு வெறும் புன்னகையையே பதிலாகத் தருகிறாள் காமாட்சி.

“நீங்க எதைப் போட்டுக்கிட்டாலும் நல்லாத்தான் இருக்கும் நிமிசாம்மா! எனக்கு இதைப் பத்தி என்ன தெரியுமின்னு என்னைக் கேக்குறீங்க? நான் என்ன கண்டேன் உங்க உடுப்பைப் பத்தி? எனக்குத் தெரிஞ்சதெல்லாம் புடவையும், ரவிக்கையும்தான்!” என்று சமையல் செய்வதில் முனைகிறாள்.

அவள் தம்பி ஏகாம்பரநாதன் பளபளக்கும் பிளாஸ்டிக் காகிதங்களைத் தான் செய்த தேரில் ஒட்டிக் கொண்டிருக்கிறான். முதல் நாள் இரவு காமாட்சி சொன்ன கதையில் வந்த தேரின் வர்ணனையை நினைவுபடுத்தி உருவாக்கிக் கொண்டிருக்கிறான் அவன். அவனது இந்த முயற்சி நிமிஷாவுக்கு மிகவும் பிடித்திருப்பதால், தன்னிடமிருக்கும் வழவழப்பான வண்ணக் காகிதங்கள், துணிகள், நுரை அட்டைகள் (thermacole foam boards) இவற்றை அவனுக்குத் தாராளமாக எடுத்துத் தந்து கொண்டிருக்கிறாள். அதனாலேயே ஏகாம்பரநாதனுக்கு நிமிஷாவை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது.

“எப்பவும் நீ இப்படித்தான், காம்ஸ்! நான் என்ன கேட்டாலும் ஒழுங்காகப் பதில் சொல்லவே மாட்டே! நான் போட்டிருக்கிறது நல்லா இருக்கா இல்லையான்னு எப்படித்தான் தெரிஞ்சுக்கறதாம்?” 

பொய்க் கோபத்துடன் காமாட்சியை அதட்டுகிறாள் நிமிஷா.

“நிமிசாம்மா, உங்க கூட்டாளிங்களுக்குத்தான் இதெல்லாம் தெரியும். அவங்கதான் உங்க மாதிரி உடுப்பு போட்டுக்குவாங்க இல்லையா? அவங்களுக்குத்தானே நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியும்? நானென்ன கண்டேன், ஒங்கமாதிரி பெரிய மனுசங்க சமாசாரத்தை?” என்று நழுவுகிறாள் காமாட்சி.

கடந்த பத்து நாள்கள் ஒன்றாகத் தங்கியதில் அவர்கள் இருவர் மீதும் ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு இருக்கிறது நிமிஷாவுக்கு. அதுவும் ஏகாம்பரநாதன் மீது அவளுக்கு ஒரு அலாதியான பாசம் உண்டாகி வருவதை உணர்கிறாள். அவள் கண்டபடி இரைத்துவிட்டுச் செல்வதையெல்லாம் அழகாக அடுக்கிவைப்பான் அவன்.

இதுதவிர, அவள் வேண்டாம் என்று எறிவதையெல்லாம் கலைப் பொருள்களாக மாற்றிவிடுவான். அட்டைகள், கொண்டை ஊசிகள், 
ஜிகினாத் தாள்கள், தகடுகள், நூல்கள், இப்படி எது கிடைத்தாலும் சரி, அவன் கண்களுக்கு அவை ஒரு கலைப் பொருளின் பகுதியாகத்தான் தெரியும். அவன் அப்படிச் செய்து தனக்குத் தந்து வரும் கலைப் பொருள்களைத் தன் நண்பர்களுக்குப் பரிசாகவும் அளித்து வருகிறாள் நிமிஷா. 

ஒன்றுக்கும் உதவாததைக் கண்கவரும் காட்சிப் பொருளாக மாற்றமுடியும் என்பதைப் பார்க்கும்பொழுது அவளது நண்பர்கள் அசந்து போய் விடுகிறார்கள். அதைப்பற்றி காமாட்சியிடம் பெருமையாகச் சொல்லி பெருமைப்படுவாள்.
இதற்குள் சமையல் முடிந்து விடுகிறபடியால் எல்லாவற்றையும் மேஜையில் நடுவில் எடுத்து வைக்க ஆரம்பிக்கிறாள். கேட்காமலேயே காமாட்சிக்கு உதவி செய்ய ஆரம்பிக்கிறான் ஏகாம்பரநாதன். அக்காளுக்கும், தம்பிக்கும் இடையே நடக்கும் இப்படிச் சொல்லற்றை செய்கைகள் நிமிஷாவுக்கு வியப்பை ஊட்டுகிறது. இந்தமாதிரி தனக்கும் தன் அன்னைக்கும் இடையும் ஏன் ஒரு பொழுதும் நிகழ்வதில்லை என்று எண்ணிப் பார்க்கிறாள் அவள். இது எதனால் நடக்கிறது?

“காம்ஸ், உன்னை நான் ஒண்ணு கேப்பேன், மழுப்பாம எனக்குப் பதில் சொல்றியா?” என்று கனிந்த குரலில் கேட்கிறாள் நிமிஷா.

இவ்வளவு கனிவாகத் தன்னுடன் நிமிஷா இதுவரை பேசியது கிடையாது என்பதை உணர்ந்த காமாட்சி, சட்டென்று அவளைத் திரும்பிப் பார்க்கிறாள். அவள் புருவங்கள் வில்லாய் வளர்ந்து ஏனென்று கேட்கின்றன.

“நான் பத்து நாளா உன்னையும், ஏக்ஸையும் பாத்துக்கிட்டு வர்றேன். சில சமயம் நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டேங்கறீங்க. ஆனாலும்,   பேசிக்கிட்ட மாதிரி காரியத்தை மட்டும் செய்யறீங்களே,  அது எப்படி?” நிமிஷாவின் கேள்வி காமாட்சிக்கு வியப்பூட்டுகிறது.

இந்த மாதிரி ஒரு கேள்வியை நிமிஷாவிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை அவள். தன்னையும் தன் தம்பியையும் எப்படி உன்னிப்பாக கவனித்திருக்கிறாள் என்பதைப் பற்றி சிந்தித்தால் அவளால் நம்பவே முடியவில்லை. எடுபிடிகளான தங்களிடம் இருக்கும் ஒரு பழக்கத்தை அறிந்த கொள்ள மேல் தட்டைச் சேர்ந்த இவளுக்கு விருப்பமா? 

மனது நெகிழ்ந்து போகிறது காமாட்சிக்கு.

“எங்க அம்மாவும், அப்பாவும் இப்படி நடந்துக்கறதை குறிப்பறிஞ்சு செய்யறதுன்னு சொல்வாங்க. எப்பவும் நம்பளச் சுத்தி இருக்கவறங்களக் கவனிச்சுக்கிட்டே இருக்கணும்னு சொல்லுவாங்க. அதோட மட்டுமில்ல,  அவங்களுக்கு என்ன வேணும்னும் கவனிக்கணும்பாங்க. நான் சமையலை முடிச்சிட்டேன். எல்லாத்தையும் கொண்டு வந்து மேசைலே வைக்கறத என் தம்பி பாத்துக் கிட்டேதானே இருக்கான்! அக்கா தனியா இம்புட்டு வேலையச் செய்ய வேணாம்புட்டுதான் எனக்கு ஒதவியா சித்து வேலை செய்ய,  கூட வந்துட்டான். இதே மாதிரிதான் நீங்க கீழே போட்டுட்டுப் போறதை எடுத்து அடுக்கி வைக்கறான். ஒங்களுக்கு என்ன வேண்டாம்னு தெரிஞ்சிக்கிட்டு, அதை எடுத்து பொம்மைங்க செய்யறான். இதெல்லாம் எங்களுக்கு ரத்தத்துலேயே ஊறிப்போன விசயம்மா. நீங்களும் அதே மாதிரி ஒங்க அம்மாவைக் கவனிச்சுப் பாத்தீங்கன்னா அவுங்களுக்கு என்ன வேணும்னு சுலபமா தெரிஞ்சுக்கிட முடியும். அவுங்களும்...” 

சொல்ல வந்ததைச் சொல்லாமல் நிறுத்திக் கொள்கிறாள் காமாட்சி.

“ஏன் நிறுத்திட்டே காம்ஸ்?”

“ஒண்ணுமில்லே நிமிசாம்மா. எதுவரைக்கும் பேசணும்னு தெரியாமக் கொஞ்சம் மேலேயே பேசிப்புட்டேன். மன்னிச்சுக்கிடுங்கம்மா.” பேசாமடந்தையாகி விடுகிறாள் காமாட்சி. அதன் பொருள் தெரியாமல் குழம்புகிறாள் நிமிஷா.

“எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன். சாப்பிட வாங்கம்மா!” என்று அழைப்பு வருகிறது. 

நாற்காலியில் அமர்ந்து சாப்பாட்டைக் கொறிக்க ஆரம்பித்த நிமிஷா,  “ஏக்ஸ்,  நீயும் என்னோட சாப்பிட வா!” என்று அழைக்கிறாள்
.
ஏகாம்பரநாதன் மாட்டேன் என்று தலையை ஆட்டுகிறான்.

“காம்ஸ், ஏக்ஸை என்னோட ஒக்காந்து சாப்பிடச் சொல்லேன்,   மாட்டேங்கறான் பாரு” என்று காமாட்சியை உதவிக்கு அழைக்கிறாள் நிமிஷா.

“நிமிசாம்மா,  அவனைக் கட்டாயப் படுத்தாதீங்கம்மா. யாரு யாரு, யாரோட ஒக்காந்து சாப்பிடறதுன்னு ஒரு வரைமுறை இருக்கு. அதை நாங்க மீறாம இருக்கறதுதான் எங்களுக்கும் நல்லது. ஒங்களுக்கு அழகு.” என்று அறிவுரை கூறும் குரலில் பதில் கிடைக்கிறது அவளுக்கு. 

புரியாமல் காமாட்சியை ஏன் என்று கண்களால் வினவுகிறாள்.

“ஒங்களுக்கு ரொம்ப நல்ல மனசு நிமிசாம்மா. அப்படியே அதைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கறவரைக்கும் இருந்துட்டுப் போயிடறோம்மா. இதுக்கு மேலே என்னை எதுவும் கேக்காதீங்கம்மா. அதுக்கு ஒங்களுக்குப் புரியறபடி நான் பதில் சொல்லறது நல்லா இருக்காதும்மா.” 

மேலே ஒன்றுமே பேசாமல் நிமிஷாவுக்குப் பரிமாறி முடித்துவிட்டு,  அங்கிருந்து தம்பியை அழைத்துச் செல்கிறாள் காமாட்சி.

காமாட்சி கடைசியாகச் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டதின் பொருள் நிமிஷாவுக்கு விளங்கவே இல்லை. புரியாத குழப்பத்துடன் சுவையான அந்தச் சாப்பாட்டை ரசித்துச் சாப்பிட ஆரம்பிக்கிறாள் நிமிஷா.

[வளரும்]

No comments:

Post a Comment