Saturday 2 February 2013

றெக்கை கட்டி நீந்துபவர்கள்

நூலக அலமாரி 



றெக்கை கட்டி நீந்துபவர்கள் 

ஆசிரியர்:பாரதி பாலன் 
[சிறுகதைத்தொகுதி]
பக்கங்கள்:136
அளவு:டெம்மி 
விலை.ரூ.95/=

வெளியீடு 

சந்தியா பதிப்பகம் 
புதிய எண் .77,53வது தெரு,9வது அவன்யூ,
சென்னை-600083
தொ.பே.044-24896979




"இறக்கிவைப்பதற்கும் இளைப்பாறுவதற்கும் ஒரு இடமோ, ஒரு கிளையோ தேவையாகத்தான் இருக்கிறது எல்லோருக்கும்!
தலைச் சுருமாட்டை, நழுவவிட்டதும் வாங்கிக்கொள்ள
சுமைதாங்கிகள் தயாராகத்தான் இருக்கின்றன.சுகமோ துக்கமோ நெஞ்சை நெருக்கும்போது நெஞ்சுக்குச் சிறிது விடுதலை வேண்டுமாகத்தான் இருக்கிறது.
வாங்கிக்கொள்ள  மட்டுமல்ல வருடிக் கொடுக்கவும்!
இந்தக் கொடுக்கல் வாங்கலில்தான் உயிர்களும் நெளிகின்றன.
எல்லோரும் ஏதோ ஒரு மொழிவழக்கோடு வாழ்ந்தாலும் அவரவருக்கான உயிர்மொழி தனியாகத்தான் இருக்கிறது.வாழ்ந்து தொலைத்ததை நினைத்து ஏங்கியும், நிகழ்வாழ்வில் தட்டுப்படாததைத் தேடியும் மனசுக்குள்ளே புழுங்கிப் புழுங்கிப் புழங்குகிறது
எல்லோரிடத்திலும் ஒரு கதை!
இணையத்தளங்களில் , மின் அஞ்சல், குறுஞ்செய்திகள் , வலைப் பூக்கள் , இணையக்குழுக்கள் , கைபேசி அழைப்புகள்  ஃபேஸ்புக்,ட்விட்டர், இன்னும் என்னென்னவோ...
எல்லைகடந்து, எல்லோரிடமும் எப்போதும் ‘எதுவும்’பேச்சாகத்தான் இருக்கிறது.வீட்டிலும், எதிர்வீட்டிலும் பக்கத்துச் சீட்டிலும் வார்த்தை களற்ற மௌனம் தடித்துவிடுகிறது.உலகம் நம் கைப்பிடிக்குள் வந்துவிட்டது.
ஆனால் நமக்கான உலகம் நம்கையை விட்டுப் போய் விட்டது!
ஒவ்வொரு கலைவடிவங்களும் தனக்கான வடிவத்தைத் தாமே தேர்ந்தெடுத்து விடுகின்றன.அப்படி நேர்ந்துவிடுவதைத்தான் ‘நேர்த்தி’ என்கிறோமோ!
எங்கள்  ஊர் குசச் செட்டியார், மரத்தச்சன் நெசவாளர், பூட்டு
செளிணிகிறவர், பாம்பாட்டிவித்தைக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர்,அவருக்கான உடையை உருவாக்கியவர், நகை செய்கிறவர்,இவர்களின் கலை நேர்த்திக்கு முன்னால்?
‘‘குத்தின ஒரலுக்குப் பஞ்சம் தெரியாது
அளக்கிற நாழிக்கு அகவிலை தெரியாது!
இன்னும் இருக்கிறது.தீர்ந்தபாடில்லை சொல்வதற்கும் கேட்பதற்கும்!
என்னிடம் எப்படியோ வந்து சேர்ந்தவர்களை விதைத்திருக்கிறேன்."






பனிரெண்டு சிறுகதைகள் அடங்கிய 'றெக்கை கட்டி நீந்துபவர்கள்' என்ற இந்தச் சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் ஆசிரியர் திரு.பாரதி பாலன் எழுதியுள்ள வரிகளில் கொஞ்சம் தான் மேலே உள்ளது .தொலைந்துபோய் விட்டதும், சிறுகச் சிறுகத் தொலைந்துகொண்டிருப்பதுமான சின்னச் சின்னச் சந்தோஷங்களைச்சிப்பி திறந்து எடுத்துப்பார்த்து இழந்துபோனதற்காகப் புழுங்காமல் இன்னும் நிலைத்திருக்கிற  அந்த நினைவின் மீதங்களைப் போற்றும் பக்குவம் பாரதிபலனுக்கு கை வந்தது.பாரதி பாலனுக்குள் ஒரு மிக நுண்மை உணர்வுகள் கொண்ட கவி சின்னஞ்சிறு தூக்கணாங்குருவி அளவில் நேசத்தின் ஒலிக்குறிப்புகளைக் காட்டி அவ்வப்போது எட்டிப்பார்க்கிறான்.
இதோ கொஞ்சம்....

"கோமதி டீச்சர் என்றவுடன் கூடும் மனச்சித்திரமும்,டீக்கடை முருகன் என்றவுடன் முகம் காட்டும் உணர்வுகளும்மாடசாமி, வீரணன், செல்லப்பா, கோபாலு என்கின்றபோது உயிர் பெறும் காட்சிகளும் அடையாளமாக மட்டுமா? உறவாகவும் உயிர் பெறுகிறதே! இதுதானே மனுசன் உயிரோட இருக்கிறான்என்பதற்கான அடையாளமாக முடியும்!"

நடந்து கொண்டிருக்கும் ஈவிரக்கமற்ற பணவேட்டைப் பந்தயத்தில் பின் தொடரவும் முடியாமல்,உடன் ஓடவும் இயலாமல் ஓர் உத்தம கிராமத்து இதயம் துடிக்கிற துடிப்பு நமக்குள் தண்ணீரில் சிந்திய மைத்துளியாக இழைபிரிந்து விரவுகிறது

‘மண்டயப் பொளக்குற வெயில்லெ ஆடாத கழுதயகளா; அம்ம கிம்ம கண்டுறப் போவுது’னு பெரிசுக ஆத்த மாட்டாப்புலெபுலம்புங்க. அதெல்லாம் எங்க அப்ப காதுலெ ஏறிச்சு? அப்ப
வெல்லாம் இந்த வெயில்லெ ஆடாதா ஆட்டமா, போடாதகூத்தா? அப்புறம் அதெல்லாம் எப்படி நழுவிப் போச்சுனேநெனவுலெ இல்லெ!'
வட்டார வழக்கில் ஒலிக்கிற இளசுகள் குறித்த பெரிசுகளின் மனப்பதிவு.
"மணியக்காரருக்கு வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை.என்னா இன்னும் கொஞ்சத் தூரம் தானே! குளத்தத் தொட்டுப்பிட்டா அப்புறம் சொகம்தேன். புளிய மர நிழல பராக்குப் பாத்துக்கிட்டே வெரசா போயிடலாம். சோமு ஆசாரிஇருந்தார்னா பாட்டுப்பாட ஆரம்பிச்சிடுவார்; இப்படி
இருமருங்கிலும் புளியமரங்கள்  அடர்ந்த நிழல்; இப்பத்தான்,வண்டி, காரெல்லாம் எத்தன கோடி சனங்க இந்த வழியா போயிருக்கும்; வந்திருக்கும். நமக்கே எம்பது வயது; தாத்தன் பூட்டன்   காலத்து மரங்க!
என மரங்களின் வயசைக்கணக்கிட யார் முன்வருவார் என யோசிக்கும் ரசனை.
"இது பழைய காலத்து அபார்ட்மெண்ட்! முப்பது வயசு!ஆனாலும் அது உட்கார்ந்து இருக்குமிடம் அப்படி. கலாசேத்ரா ரோடு! பஸ் ஸ் டாப் பக்கம். மார்க்கெட் பக்கம். மருந்தீஸ்வரர்கோவிலுக்கு நடைதூரம்.  எதிர் திசையில் சர்க்கரை அம்மன்.
ஒரு தெரு தாண்டினால் பாம்பன் சுவாமிகள் கோவில்.நடக்கலாம் என்று நடந்தால் ‘பீச்’ பக்கம். காலை நேர நடைக்கு கலாசேத்ரா. போர் வாட்டருக்கும் பஞ்சமில்லை. அபார்ட்மெண்ட்டும் பாதுகாப்பு. எல்லாம் ஐயர்கள் தான். அடி தடிரகளை ஒன்றும் இருக்காது! வடாம் போடுவது. பூஜை மணி சப்தம் சாயி பாபா பஜனை. நெய் வாசம் என்று இருக்கிற அபார்ட்மெண்ட்! ' 
என்று ஒரு குடியிருப்பின்  நினைவுகளைப் புலன்கள் படம்பிடிக்கும் அனுபவம்.இப்படிப் பன்னிரண்டு கதைகளிலும் சாரங்கி வாத்யத்தின் மெல்லிய மனம் உருக்கும் இசை எழுகிறது.
பொதுவாக சமீபத்திய சிறுகதைகளில் காணக்கிடைக்காத பல நெஞ்சங்களில்  நெகிழ்வின் அலைகளைப் பதிய வைத்திருக்கும் ஒரு கலா நேர்மை.
பாரதி பாலன் கதைகளை ஒரே மூச்சில் படித்துவிட முயல்வது சரியல்ல.ஒரு முழுமையின் முக்குளிப்பிற்கு அது இடையூறாகிவிடும்.
அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ள அற்புதமான சிறுகதைத் தொகுதி ஒன்றை தமிழுக்கு அளித்திருக்கிற பாரதி பாலனின் அடுத்த படைப்பு எப்போது என்று ஆவல் எழுகிறது.

நியூ ஜெர்ஸி நிர்மால்யா