Sunday 19 October 2014

2. விளம்பரத்தின் வரலாறு

                              2. விளம்பரத்தின் வரலாறு
சந்தக் கவிமணி சந்தர் சுப்பிரமணியன் 
                                
இன்றைய ஊடகங்களில் பயிலும் விளம்பரங்களின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, இவை ஏதோ 19-ஆம் நூற்றாண்டில் திடீரென மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அரியதொரு கருவி என்று நினைப்பது தவறு. விளம்பரம் என்பது, தனிமனித வாழ்விலும், வணிகவியலிலும் பண்டைகாலம் முதலே வெகுவாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு கலையாகும்.

தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் குணம் மனிதனுக்குப் பலகாலமாய் இருந்துவருவதை இன்றும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லோவியங்களால் அறிந்துகொள்ள இயலும். வெறும் ஓவியம் மட்டுமே ஊடகமாக இருந்திருக்கவில்லை; கூவி அழைத்து, தன் பொருள் குறித்த பெருமைகளைப் பறைசாற்றியபடி விற்றுச்செல்லும் வணிகர்களைப் பற்றிய குறிப்புகள் உலகின் வெவ்வேறு இடங்களின் இருந்தது சான்றுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. தொழில்குறித்த குறிப்புகளாக, "கொல்லன்", "குயவன்", "தையற்காரன்" என்று தாம் செய்யும் தொழில் களை உணர்த்தும் வகையில், பதாகைகளை மனிதன் பயன்படுத்தி இருப்பதும் உலகின் பல்வேறு நாடுகளின் நிலவிய வழக்கமெனத் தெரிய வருகிறது.

                                                                 

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பாபிலோனியாவில், செருப்புத்தொழிலாளி, தன் வீட்டின் முன்னர் ஒரு செருப்பைத் தொங்கவிட்டு, அவ்வழியே வருவோரின் கனைத்தைக் கவரும் பழக்கம் இருந்ததை வரலாறு தெரிவிக்கிறது.

ஒரு எகிப்தியக  கல்லறையில் (Tomb of Qenamen, a mayor of Thebes, lived during the reign of the Egyptian Pharaoh Amenhotep III (1402 - 1364 b.c.)) உள்ள ஓவியத்தில் கிமு 14-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்காட்சியில், ஒரு துறைமுகத்தில், நீர்த்துறையின் ஓரம், வணிகர்கள் அமர்ந்து பல்வேறு பொருட்களை விற்பதுபோலவும், அப்பொருட்களை வாங்க, அந்நாட்டவரும், வேறு நாட்டவரும் வந்து இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விற்கப்படும் துணி, ரொட்டி போன்ற பொருட்களை உயரத்தில் தொங்கவிட்டு, பார்ப்போரின் கவனைத்தைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ள செய்தி, விளம்பரத்தின் தொன்மையை இன்றும் காட்டி வருகிறது.
                                                                 

முதலில் வெறுங்குழுக்களாக வாழ்ந்த மனிதன், பிறகுழுக்களுடன் போட்டியிட்டே வாழவேண்டியிருந்தது. அவ்வாறு வாழ்ந்த காலத்தில், தன் மூதாதையரின் வெற்றிகளை விளம்பரப்படுத்திக் கொள்வதில் அவன் ஆர்வம் செலுத்தலாயினான். அதன் வெளிப்பாடே குலப்பெயர்களும், பரம்பரை பெயர்களும். தான் செய்யும் தொழிலைத் தன் பெயர் மூலமாகவே தெரியப்படுத்தும் வகையில், குலப்பெயர்கள் அவரவர் தொழில்களைத் தாங்கியபடி வரப்பெற்றது. இம்முறை உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு பழக்கமாகும். இதுவே பின்னர் குலப்பெயராகவும், surname என்றழைக்கப்படும் குழுமப்பெயராகவும் மாற்றம் கண்டது. பின்னர் ஒரு குழுவின் தலைவன் பெற்ற வெற்றிகள் தன் வாழ்விலும் பயன்தரவேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவையே பரம்பரைப்பெயர்கள்.

சோழ அரசன் ஒவ்வொருவனும் தன் பெயருடன் சோழன் எனும் பரம்பரைப்பெயரைச் சேர்த்துவைத்துக் கொள்வதுபோன்ற பழக்கமும் உலகில் பரவலாக காணப்பட்டது. அதுவே நாளடைவில் குடும்ப உரிமையாய் மாறி, அரச பரம்பரையாய் நிலைத்துநின்றது. அவ்வாறான அரச பரம்பரைகளிலும், ஒவ்வொருவனும், தத்தம் முன்னோர் பெற்ற வெற்றிகளைப் பறைசாற்றியபடியே தன்னையும் விளம்பரப்படுத்திக்கொள்வது என்பது இயல்பான ஒரு பழக்கமாயிற்று.

முடியாட்சி முற்றிலும் மறைந்துபோன இந்தநாளிலும், இங்கிலாந்தில், இராஜபரம்பரையே முதல் குடிமக்களாக இருப்பதும் இந்தக் கலாசாரத்தின் விழுமமே ஆகும்.

வெறும் வெற்றிகளை மட்டும் விளம்பரப்படுத்திக்கொள்வதில் மனிதமனம் திருப்தி அடையவில்லை; அவனது வித்தியாசங்களையும் விளம்பரப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். ஒரு கூட்டத்தோடு கூட்டமாய் நடந்து செல்லும்போது தன்னை மட்டும் தனித்துக்காட்ட, தலைப்பாகையோ அல்லது தலைக்கிரீடத்தையோ அணிய ஆரம்பித்தான். இத்தகைய அணி, அவனைக் குழுமியுள்ளவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. இவ்வேறுபாடு தன் குழுமத்திற்குள்ளான ஒன்றே! மற்ற குழுமங்களிலிருந்து தன் குழுமத்தை வேறுபடுத்திக்காட்ட, குறியீடுகளையும், கொடிகளையும் கண்டுபிடித்தான். கொடியின் மூலம் தாம் இன்ன குழுவின் உறுப்பினன் என்பதை தூரத்திலிருந்து உணர்த்தவே இந்த அமைப்பு.

தத்தம் மதங்களை அடையாளங்காட்ட வேறுபட்ட அடையாளங்களைக் காட்டியும், அவ்வடையாளங்களுக்குள்ளே, பல்வேறு நிலைகளையும் தோற்றுவித்தான். அவையே மதச்சின்னங்களும், அதற்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளும் ஆயின. இத்தகைய வேறுபாடுகள், அவர்களைப் பிறருக்கு அடையாளங்காட்டும் விளம்பரங்களாயின. மதபோதகர்களின் வெள்ளையுடையும், இந்திய முனிவர்களின் சடாமுடியும் இதுபோன்ற சின்னங்களே ஆகும். பின்னாளில் அவ்வுடைகளினால் அவர்களின் பல்வேறு நிலைகளை அடையாளங்காட்டும் வகையில் வித்தியாசங்களைப் புகுத்தினான்.

அடையாளங்காட்டும் இந்த யுக்திகள் பிறதுறைகளிலும் பரவ ஆரம்பித்தது. குறிப்பாக இராணுவ வீரர்கள் தத்தம் பதவிக்கு ஏற்ப, அவர் உடைகளில் சின்னங்களைத் தாங்கி வருவது என்பது உலகெங்கிலும் பரவியது. இதன்மூலம், ஒருவனது பதவி, அவன் சொல்லாமலே மற்றவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. அதுவே தற்போது அவ்வதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களிலும் புகுத்தப்பட்டுள்ளது. இன்றைய இந்திய காவல்துறையினரின் உடைகளில் பயன்படுத்தப்படும் நட்சத்திரம், அசோக சின்னம், வாள் போன்றவை பல்வேறு நிலைகளை உணர்த்தும் குறியீடுகளே ஆகும். ஒரு நட்சத்திரம், துணை உதவி ஆய்வாளர், இரு நட்சத்திரங்கள், துணை ஆய்வாளர், மூன்று நட்சத்திரங்கள் ஆய்வாளர் என்பதுபோல் குறியீடுகளின் மூலம் நாம் அவர்களின் பதவியை அறிந்துகொள்ளலாம்.

சின்னங்களால் பதவிநிலைகளை வேறுபடுத்திக்காட்டும் இவ்வழக்கம் நாளடைவில், செவிலியர், விமான/வாகன ஓட்டுநர்கள் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்தப் படலாயிற்று.

வேறுபடுத்த மட்டுமே விளம்பரங்கள் அவசியமா? ஒன்றுபடுத்த உதவாதா? உதவும். அத்தகைய முயற்சியே சீருடைகள். கல்விச்சாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வரும் சீருடைகள், எல்லோரும் சமம் என்னும் கருத்தை உணர்த்தும் விளம்பரங்களே ஆகும் அல்லவா? விளம்பரம் வெறும் வார்த்தைகளால் மட்டுமே ஆனதன்று; குறிப்பாலும் உணர்த்தப்படும்.

சீனாவில், கிபி 748 ஆம் ஆண்டிலேயே செய்தித்தாள் பதிப்பாகும் வழக்கம் இருந்ததாகத் தெரியவருகிறது. அது பின் அராபியர்கள் மூலமாக ஐரோப்பாவைச் சென்றடைந்தது. எகிப்து நாட்டில் பேப்பிரஸ் என்னும் காகிதத்தில், தத்தம் வணிகம் குறித்த இன்றைய நாளில் போஸ்டர் என்றழைக்கப்படும் வகையில், விளம்பரங்கள் பயன்படுத்தப்பட்டன. கிபி 59 - யிலேயே ரோம் நகரின் "இன்றைய செய்தி (Acta Diurna)" என்னும் வகையில் கையால் எழுதப்பட்டு, நகரின் பிரதான வீதிகளில், பொதுமக்கள் படிப்பதற்கு வசதியாக ஒட்டப்படும் வழக்கம் இருந்திருக்கிறது. இதில் மன்னனின் கட்டளைகளும், இராணுவச் செய்திகளும் இடம்பெற்றன.
                                                           
"இன்றைய செய்தி (Acta Diurna)"

பிற்காலத்தில், கல்வி என்பது ஒரு அத்தியாவசியப் பழக்கமானபோது, அச்சு முதலிய பலவிதமான ஊடகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு ஊடகத்தையும், விளம்பரத்திற்காக மனிதன் முழுதும் பயன்படுத்த ஆரம்பித்தான். முதன்முதலில் அச்சு, வெறும் மதப்பிரசார எந்திரமாகவே பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவே, துண்டுப்பிரசுரங்களில், மதங்குறித்த குறிப்புகளைப் பரப்ப உதவியது. இக்காலத்திலேயே, மதத்திலிருந்து சற்றே விலகி, வணிகத்துக்கும் இத்துண்டுப்பிரசுர யுக்தி கையாளப்பட்டது. நாளடைவில் இது மிகப்பெரிய வெற்றியையும் தந்தது.

18-ஆம் நூற்றாண்டில் அச்சு எந்திரங்கள் வெகுவாரியாகப் பரவத் தொடங்கின. பெரும்பாலும் இவை ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்த ஏனைய நாடுகளில் மதப்பிரசாரம் செய்ய உதவும் கருவிகளாக உலகெங்கும் புற்றீசல் போலப் பரவின. நாளடைவில், அச்சு எந்திரங்கள் மதம் விடுத்த மற்ற துறைகள் குறித்த கருத்துகளைத் தாங்கி வர ஆரம்பித்த காலத்தில் செய்தித்தாளின் வடிவம் தோன்றலாயிற்று. இக்கண்டுபிடிப்பே விளம்பரத்தை உச்சாணிக்கிளையில் ஏற்றி வைத்தது எனலாம்.

வெறும் வார்த்தைகளால் மட்டுமே திருப்தி அடையாத மனிதன், ஓவியம் என்னும் ஊடகத்தின் மூலம், தன் பிரதாபங்களை அடுத்த பரம்பரைக்கு எடுத்துச் செல்லும் வகையில் சித்திரங்களை எழுதி வைக்க ஆரம்பித்தான். தான் பெற்ற வெற்றிகளையும், அதன் முக்கிய சாராம்சங்களையும், சித்திரங்களாக எழுதி தன்னைப் பற்றிய பிம்பம், பின்வரும் தலைமுறைகளையும் சென்றடையும் வண்ணம் செய்தான். இவையாவும் தனிமனித விளம்பரங்களே ஆகும்.

ஆனாலும் இத்தகைய படங்களின் தாக்கம், அப்படங்களை வந்து பார்ப்பவர்க்கே ஏற்படும். ஆகவே விளம்பரங்களைப் பொதுசன மக்களுக்குக் கொண்டுசெல்ல ஒரு ஊடகம் தேவைப்பட்டது. இதில் செய்தித்தாள் வெகுவாரியாக உதவினாலும், கற்றவர் மட்டும் செய்திகளை அறிந்துகொள்ளும் ஒரு எல்லையிலேயே இவ்வூடகம் செயல்பட்டது. இதை உடைத்து வந்ததுதான் வானொலி. வானொலியின் தாக்கம், விளம்பரங்களைப் பட்டிதொட்டிகளிலெல்லாம் பரவச் செய்தது.
                                                                     
பின்னாளில் உலகை விழுங்கத்தொடங்கிய திரையுலகமும், இணையவலைகளும், இந்நாளில் உலகை ஆட்டிபடைக்கும் தொலைபேசி வழி இணையமும், விளம்பரத்தைத் தொடமுடியாத எல்லைகளையெல்லாம் தொடவைத்தன.

இன்றைய உலகில் விளம்பரம் இல்லாத எந்தச்செயலுமே இல்லை என்னும் நிலை உருவாகியுள்ளது. அங்கீகாரத்துக்கும், தத்தம் வலிமையைப் பறைசாற்றுவதற்குமான போட்டிகள் நாளுக்குநாள் எல்லாத் துறைகளிலும், எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும், எல்லா வயது வரம்பினரிடையேயும் பயில்வதைக் காண்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை, விளம்பரங்களால் ஆட்டிவைக்கப்படும் எந்திரமாக மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.
                                                         
[வளரும்]

No comments:

Post a Comment