Sunday 12 October 2014

எதிரி நாட்டின் உட்புறத்தில் தன்னந்தனியே

கர்னல் கணேசன் 
                                                                          

1971-ம் ஆண்டு ஆரம்ப நாட்கள் மிக சாதாரணமாகத்தான் சென்று கொண்டிருந்தது. 24-02-1971 அன்று கணேசனின் நண்பரும் சக இராணுவ அதிகாரியுமான திருநாவுக்கரசு இராணுவத்தை விட்டு விலகி தனது பழைய வேலையான பொதுப்பணி துறைக்குத் திரும்பி விட்டார்.  அவர் 1961-62ம் ஆண்டுகளில் கணேசன் பொதுப் பணித்துறையில் பணியாற்றுகையில் அறிமுகமான நண்பர். இந்திய-சீன போருக்கு பின் இந்திய இராணுவம் விரிவுபடுத்தப்பட்ட பொழுது அரசாங்கப் பணியாளர்களாகிய இருவரும் இராணுவப் பணியில் விருப்பம் தெரிவித்து தேர்வும் ஆகி இருந்தனர். கணேசன் தொடர்ந்து இராணுவத்திலிருக்க விரும்பி நிரந்தரப் பணிக்குத் தேர்வானார். ஆனால், அவரது நண்பர் குறைந்த கால இராணுவப் பணிக்குப் பிறகு பொதுப்பணித் துறைக்கு திரும்ப விரும்பினார். அதன்படி சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியதும்  அவர் திரும்பி விட்டார். இராணுவப் பொறியியற் கல்லூரிக்கு அருகில் தான் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். எத்தனையோ நாட்கள் அவர்களது வீட்டில் கணேசன் உணவருந்தி தங்கி இருந்திருக்கிறார். உறவுகள் பிரிந்ததைப் போல நண்பர்களும் பிரிவது கண்டு கணேசன் மனம் வருந்தினார்.

மிகவும் நெருங்கிய நண்பர்களோ அல்லது பாசத்தைப் பொழிந்து ஈர்க்கும் உறவினர்களோ இல்லாத நிலையில் ஆண்டு முழுவதும் விளையாட்டிலும் படிப்பிலும் தான் கவனம் செலுத்தினார் கணேசன். கிராமப்புறத்தவரான தந்தை முதுமையை நெருங்கிக் கொண்டிருக்கையில் மூத்தவர்களான அண்ணன்கள் தம்பிக்குத் திருமணம் செய்விக்க முயற்சித்தனர். 

தமிழகத்தைப் பொறுத்தவரை இராணுவத்தில் பணியாற்றுபவருக்குப் பெண் கிடைப்பது அரிது. இராணுவப் பணி அவ்வளவு உயர்வாகக் கருதப்படவில்லை. சிவில் வாழ்க்கையில் நல்ல வேலை கிடைக்காதவர்கள் நன்றாகப் படிக்காதவர்கள் போன்றோர்களே இராணுவத்தில் சேருவதாக ஒரு கருத்து உருவாகி இருந்தது. மேலும் இராணுவத்தினர்கள் முரடர்கள், குடிகாரர்கள் போன்ற கருத்தும் பரவலாக இருந்தது. இந்நிலையில் நல்ல குடும்பத்தில் படித்த பெண்கள் இராணுவத்தினர்களை மணக்க முன்வராததில் வியப்பில்லை. திருமணத்திற்காகப் பெண் பார்க்கப் போன ஓரிரு இடங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்க@வ திருமணம் தற்போதைய அவசியமற்ற ஒரு பந்தம் என்ற முடிவுக்கு வந்தார் காப்டன் கணேசன்.

அந்த நிலையில்தான் “பங்களாதேஷ்” போர் உருவானது. கணேசனது அன்றைய மனநிலை, அவர் படைப்பிரிவை சேர்ந்த விதம் போன்றவை ஆசிரியரின் “எல்லைப் புறத்திலிருந்து ஒரு இதயத்தின் குரல்” என்ற நூலின் கடைசியில் பார்க்கலாம்.

எந்த விதமான உறவின் பிடியும் இன்றி சுதந்திரப் பறவையாகத் திரிந்து கொண்டிருந்த கணேசன் “போர்” அறிகுறி தென்பட்டவுடனே மிகவும் மகிழ்ந்தார். படைப்பிரிவைச் சேர்ந்த  முதல் நாள் முதல் போர்கால நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்ன. இளம் அதிரியாக 1965-ம் ஆண்டு இந்திய - பாகிஸ்தானிய போர்க்களத்தில் ஸியால்@காட் பகுதியில் பங்கு கொண்டவராகையால் இப்பொழுது கிழக்கு பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டார். ஆனால், அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவர் என்பதும் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் எல்லாரும் அறிந்ததே! போர்க்கால சூழ்நிலை கலைந்த பிறகு கணேசன் திரும்பவும் கல்லூரி சென்றுவிடுவார் என்பதாலும், படைப்பிரிவில் புதியவர் என்பதாலும் படைப் பிரிவின் தலைவர் கணேசனுக்கு அதிகப் பொறுப்பு தரவில்லை. மேலும்“முக்தி பெஹனி”  என்ற கிழக்கு பாகிஸ்தானிய சுதந்திரப் படைவீரர்கள் பல இடங்களிலும் உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி நாசம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.

பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் யாஹ்யா கான் , 01-12-1971 போரை அதிரடியாக ஆரம்பித்து வைத்தார். கிழக்கு பாகிஸ்தானில் ஏராளமான ஆறுகள் குறுக்கும் நெடுக்குமாகப் போவதால் போக்குவரத்து சில குறிப்பிட்ட சாலைகளுக்குள் அடங்கியது. இந்திய இராணுவத்தினர் 25 பவுண்டர்  என்ற சிறிய பீரங்கிகளை ஜீப் வண்டிகளின் துணையுடன் இழுத்துச் சென்று இலக்குகளைத் தாக்கத்  திட்டமிட்டனர். நடைபாதை போன்ற சில ஒற்றையடிப் பாதைகளின் நிலையைக் கண்டு அதன் வழியாக ஜீப் போக முடியுமா? என்று பார்த்துவரப்   பொறியாளர் பிரிவைச் சேர்ந்த காப்டன் கணேசனுக்கு உத்தரவிடப்பட்டது. 

அது 06-12-1971. போர் ஆரம்பித்து நாலைந்து நாட்களாகி விட்டிருந்தன. கிழக்கு பாகிஸ்தான் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் முடக்கப்பட்டு விட்டது. பாகிஸ்தானிய இராணுவத்தில் ஒரு சில விமானங்களே கிழக்கு பாகிஸ்தானில் இருந்தது. போர் ஆரம்பித்த ஓரிரு நாட்களிலேயே அந்த விமானங்கள் வீழ்த்தப்பட்டன. இந்திய கடற்படை வங்காள விரிகுடாவை ஆக்கிரமித்து பாகிஸ்தானிய கடற்படை உள்ளே நுழையாதவாறு செய்து விட்டது. மேலும், இந்திய மேற்குக் கடற்கரையான அரபிக் கடலில் போர் சூழ்நிலை காரணமாக கடற்படை 24 மணிநேர ரோந்து பணியில் இருந்தது. இதனால் கிழக்கு பாகிஸ்தானிய இராணுவம் பலவிதமான நெருக்கடிக்கு உள்ளானது. அவர்களது படைப்பிரிவுகள் போதிய பாதுகாப்பின்றி எல்லைப் புறத்திலிருந்து பின் வாங்க ஆரம்பித்தனர். 

டாக்கா தலைநகரை விட இந்திய எல்லைப்புறத்திலிருந்து சுமார் 20 - 25 கி.மீ தொலைவில் உள்புறமாக உள்ள கொமில்லா, ஹில்லி  போன்ற இடங்களை, அவர்கள் வசதியான இராணுவ தளங்களாக மாற்றி அமைத்திருந்தனர். பெரிய பெரிய தளங்களை பூமிக்குக் கீழே அமைத்து மிகவும் பாதுகாப்பாக அதிக கனம் வாய்ந்த காங்கிரீட் கூரைகள் போட்டிருந்தனர். இதனால், எவ்வளவு பெரிய பீரங்கிக் குண்டோ அல்லது வான்படையின் குண்டுகளோ அவற்றை சிதைக்க முடியாது. போர் ஆரம்பித்த ஓரிரு நாட்களுக்குள் கிழக்கு பாகிஸ்தானின் இந்திய எல்லை முழுவதும் அதாவது மேற்கு வங்காளம், அஸ்ஸாம், திரிபுரா போன்ற எல்லைப் புறங்களிலிருந்த இந்திய படைகள் தாக்க ஆரம்பித்தனர். கணேசனின் படைப் பிரிவினர் திரிபுரா பக்கமிருந்து டாக்கா தலைநகரை நோக்கி போரை ஆரம்பித்திருந்தனர். மேலும், கிழக்கு பாகிஸ்தானிய சுதந்திரப் படைவீரர்களான முக்தி பெஹ்னி படைவீரர்கள் பாகிஸ்தானிய படைவீரர்களைக் காணும் இடங்களிலெல்லாம் மிகக் கொடூரமாக வெட்டிக் கொன்று வந்தனர். இதுபோன்ற காரணங்களினால் அவர்கள் எல்லையை விட்டுப் பின்வாங்கி பாதுகாப்பான கண்@டான்மெண்ட்  பகுதிகள் நோக்கி நகர்ந்தனர்.

இந்நிலையில் தான் காப்டன் கணேசன் சுமார் 15 கி.மீ தொலைவு கிழக்கு பாகிஸ்தானுக்குள் சென்று சாலை பற்றிய விபரம் சேகரித்து வர உத்தரவிடப்பட்டார். பொதுவாக இதுபோன்ற வேலைகளில் தனித்துப் போவதா அல்லது பாதுகாப்பாக இரண்டு மூன்று படைவீரர்களுடன் போவதா என்பது ஒரு விவாதத்திற்குரியதே! தனித்து சென்றால் அதிகச் சலசலப்பின்றி இரகசியமாக சென்று வரலாம். ஆனால், பாதுகாப்பில்லை. பாகிஸ்தானியர் கண்டுபிடித்து விட்டால் மிக சுலபமாகத் தனியாளான கணேசனைக் கொன்று விடலாம். அல்லது சிறைப்பிடித்து விடலாம். ஆனால், இரண்டு மூன்று பேர்களுடன் பாதுகாப்பாக சென்றால் ரகசியமாக செல்வது கடினம். ஆனால், பாதுகாப்பு இருக்கும். போரில் பாதுகாப்பு முக்கியமல்ல. வெற்றிதான் முக்கியம். ஆகையினால், தனித்துச் சென்று வருவதே நல்லது என்று முடிவு செய்து புறப்பட்டார். இராணுவ உடையில் ஸ்டென் கன்  என்ற சிறிய வகை துப்பாக்கியும் அதில் நிரப்பப்பட்ட 28 குண்டுகளும் கூடவே  தனியாக 28 குண்டுகளுடனும் புறப்பட்டார்.

      எதிரி நாட்டின் உட்புறத்தில் தன்னந்தனியே 
    
போர் ஆரம்பித்து இந்திய துருப்புகள் கிழக்கு பாகிஸ்தான் எல்லை தாண்டி புரிசாங் என்ற கிராமத்தை ஆக்ரமித்து இருந்தனர். கணேசனின் மற்ற படைப்பிரிவினர் சாலைப் பாதுகாப்பு, தண்ணீர் வழங்குதல் போன்ற வேலைகளில் இருந்தனர். தனி ஆளாக மாலை 3 மணியளவில் கணேசன் எல்லைதாண்டி வருவது கண்டு மற்ற அதிகாரிகள் அவரை மேலே போக வேண்டாம் என்று தடுத்தனர். பாகிஸ்தானிய போர்வீரர்கள் சற்று தூரத்திலேயே இருப்பதாகவும் கணேசன் அதிக தொலைவு எதிரிகளுக்கிடையில் போவது ஆபத்து என்றும் எச்சரித்தனர். 

இதைப் படைப்பிரிவு அதிகாரி உணர்ந்திருக்க வேண்டும். அதைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் கணேசன் எதிரி நாட்டின் உட்புறம் சுமார் 15 கி.மீ வரை   சென்று சாலைகள் பீரங்கி வண்டிகள் போகக் கூடியதாக இருக்கிறதா என்று கண்டு வரச்சொல்லி இருக்கிறார். இப்பொழுது கணேசன் திரும்பிப் போய் எதிரிகள் நடமாட்டம் இருக்கிறது, அதனால் போக முடியாது என்று சொன்னால் அது ஒரு கோழைத்தனம் இல்லையா? கணேசன் சற்றே யோசிக்கிறார் ஒரு போர்க்காலக் காட்சி அவர் மனதில் ஓடுகிறது.

வீரத்திற்கும் தன்மான உணர்வுகளுக்கும் பண்டைய தமிழர்களின் போர்க்களங்கள் ஏராளமாக உதாரணங்களை முன்வைக்கிறது. பகை கொண்டு ஒரு மன்னன் மற்றொரு நாட்டை ஆக்ரமிக்க முனைவது ஒரு புறமிருந்தாலும் இருமன்னர்கள் மிகச்சிறந்த தமிழ்மொழி ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் எந்தவிதமான உட்பகை காரணங்களுமில்லாமல் போரிட்டது உலக வரலாற்றில் அதுவும் பண்டைய தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. அதியமான் என்ற குறுநில மன்னன் தமிழ் புலவர்களின் பேராதரவாளன் “தகடூர்” என்ற நாட்டை (இன்றைய தர்மபுரி) சீரும் சிறப்புடனும் ஆண்டு வருகிறான். அருகாமையில் தமிழக மூவேந்தர்களின் ஒருவரான சேர மன்னனின் பெருநாடு இருக்கிறது. அதை பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன் ஆண்டு வருகிறான். மரணமில்லாத பெருவாழ்வு தரக்கூடிய நெல்லிக்கனியை தமிழ் மூதாட்டி ஔவைக்கு ஈந்து பெருமை கொண்டவன் அதியமான் என்றால் பெருஞ்சேரல் இரும்பொறை அதற்கு எந்த விதத்திலும் குறையாத தமிழ்ப் பற்றுடையவன். 

முரசு கட்டிலில் அறியாது துயில் கொண்ட புலவர் மோசிகீரனாரை. சிரச்சேதம் செய்யும் மன்னர் பரம்பரையான பெருஞ்சேரல் இரும்பொறை கவரிகொண்டு வீசி புலவருக்கு ஆழ்துயில் கொள்ள வைக்கிறான். அரச தர்மத்தின்படி மாமன்னர் பெருஞ்சேரல் தனது படையின் ஒரு பிரிவினரை தகடூரில் நிலை கொள்ள அதியமானுக்கு செய்தி அனுப்புகிறான். தகடூர் நாடு தனக்குரியது என்ற உறுதி பூண்ட அதியமான். சேரன் படையை ஏற்கவோ அரசு மரபுப்படி திறை செலுத்தவோ முடியாது என்று மறுக்கிறான். அதியமான் மாவீரன். அவனது ஆண்மை வீறு சேரனுக்கு அடிபணிய மறுக்கிறது. புகழ்மிக்க தமிழ் புலவர்கள் இரு மன்னர்களிடமும் மீண்டும் மீண்டும் சென்று போர் வேண்டாம் என்று வேண்டுகின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கும் பெருமைக்கும் ஆக்க வேலைகளுக்கும் உழைக்க வேண்டிய நற்குடியினரான ஆடவர் பலரும் இப்படித் தம்முள் ஒருவரை ஒருவர் வெட்டி மாய்த்துக் கொள்ள போர்ப்பறை ஒலிக்கிறார்களே என்று வருந்துகின்றனர். போர் வந்தால் பெரும்படையை உடைய சேரன் வெற்றி பெறுவதும் மாவீரனானாலும் அதியமான் குறுநில மன்னன் என்பதால் அவர் வீழ்ந்துபடுவதும் உறுதி.

இந்நிலையில் போர் ஆரம்பமாகிறது. தகடூர் வீரர்கள் தன்மான உணர்வோடு தங்களது நாட்டின் ஓரடி மண்ணையும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று போரிடுகிறார்கள். அதியமான் தன் படை வீரர்களை ஒன்றுதிரட்டி பெரும்சோறிட்டு அவர்கள் நாடி நரம்பெல்லாம் முறுக்கேறும் விதமாக உந்து சக்தியை ஊட்டி விட்டிருந்தான். தகடூர் வீரர்கள் சேரனின் பெரும் படைக்குள் சூறாவளி என புகுந்து போரிடுகிறார்கள். சேர வீரர்கள் சிதறி ஓடுகிறார்கள். அணி அணியாக சேர வீரர்கள் வந்து மோதிய போதும் மானம் பெரிதெனச் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கும் தகடூர் வீரர்கள் அந்த அணிகளை சிதறடிக்கின்றார்கள். போர் மிகவும் உக்கிரமாக இருப்பதால் தமது படை முற்றிலும் அழிந்து விடுமுன் பின் வாங்குவதுதான் சிறந்தது என்று பரிந்துரைக்கிறான் சேரன் ஒருவன். 

அதற்குச் சேரர் படைத் தலைவன் என்ன சொல்லுகிறான் பாருங்கள். மனித வாழ்வில் உயிரானது உடற்கூட்டிலேயே என்றென்றும் நிலைத்திருக்க கூடியது என்றால் அதை காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தப் பழியினையும் ஏற்று இன்று பின்வாங்கி விடலாம். ஆனால் போர்க்களத்தில் இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்த உயிர் உடலை விட்டு தன்னாலேயே போய் விடக்கூடியது தான். ஆகையினால் உயிரைக் காத்துக் கொள்வதற்காக பின் வாங்குவது முறையல்ல. போர்க் களத்தில் நுழைந்தபின் வெற்றி அல்லது வீரமரணம் என்பது தான் வீரர்களுக்கு அழகு. தீராத பழிசேர்க்கும் புறமுதுகிடுதலை செய்வது சிறப்பாகாது. அந்தப்பழி நம்மை மட்டுமல்லாது நமது சந்ததியினரையும் தொடரும் என்று அறிவுரை  கூறி வீராவேசத்துடன் மீண்டும் போரில் நுழைக என்கிறான்.

தற்கொள் பெரவிரல் வேந்த வப்பத் தானவற்கு
ஒற்கத் துதவினா னாகுமாற் - பிற்பிற்
பலர் ஏத்தும் செம்மல் உடைத்தாற் பலர் தொழ
வானுறை வாழ்க்கை இயையுமால் அன்னதோர்
மேன்மை இழப்பப் பழிவருப செய்பவோ
தாமேயும் போகும் உயிர்க்கு (புறத் - 1315)

சரித்திரப் புகழ்பெற்ற “தகடூர் முற்றுகை” வரலாற்றில் அழியாத இடம் பெற்றது. 

நாற்புறமும் குண்டு வெடிச்சத்தங்களும் புகை மண்டலமும் கொழுந்து விட்டெறியும் சில குடிசைகள் - பாதுகாப்பு அரண்களும் சூழ்ந்த வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்த காப்டன் கணேசனது மனதிலே “தகடூர் முற்றுகை” நினைவில் ஓடியது. சாலைகள் பற்றிய விபரங்களை அறிந்து வாருங்கள் என்று படைத் தலைவர் உத்தரவிட்ட பிறகு அதை நிறைவேற்றுவது தான் தனது கடமை என்று. உடன் பணியாற்றுவோரின் எச்சரிக்கையை புறம் தள்ளி தான் உள்ளே போய் வருவதே நல்லது என்று மேலே நடந்தார்.
சுமார் 2-3 கி.மீ உட்புறம் நடந்திருந்தார். அங்கு பல இடங்களில் பாகிஸ்தானிய போர்வீரர்கள் பதுங்குக்குழிகள் அமைத்திருந்து சற்று நேரம் முன்பே காலி செய்திருந்தனர். சில இடங்களில் ஏதோ உணவு சமைத்து விட்டு அல்லது சூடாக டீ ஏதாவது போட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள். பூரிŒõங் கிராமம் காலியாகக் கிடந்தது. ஒரு சில சிவிலியர்கள் அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தார்கள். கணேசன் அவர்களில் ஒருவரை அணுகி முக்தி பெஹ்னி போர் வீரர்கள் முகாமுக்கு வழிகாட்ட முடியுமா? என்று கேட்டார். கணேசன் இந்திய இராணுவத்தினர்கள் அணியும் ஆலிவ் பச்சை  சீருடையில் இருந்தார். அதைப் பார்த்த அந்த ஆள் “நீங்கள் இந்திய இராணுவ அதிகாரியா?” என்று கேட்டார். கணேசன் “ஆம்” என்று சொல்லி, தான் சுமார் 10-15 கி.மீ உட்புறம் சென்று வர வேண்டிய அவசியமிருப்பதாகச் சொன்னார்.

                                 என் உடை ஏற்று சீருடை மாற்று..

அதற்கு அந்த ஆள் பாகிஸ்தானிய இராணுவத்தினர் சற்று முன்புதான் அந்த இடங்களைக் காலி செய்துவிட்டுப் பின்வாங்கி கொமில்லா  நகர்ப் புற கண்@டாண்ட்மென்ட்  ஆன “மைனாமட்டி” என்ற பாதுகாப்பு முகாமுக்கு போய்க் கொண்டு இருப்பதாகவும் ஆலிவ் பச்øŒச் சீருடையில்கணேசனைக் கண்டால் உடனே கொன்று விடுவார்கள் என்றும் எச்சரித்தார். தன்னுடன் வந்து வேறு உடைமாற்றிக் கொள்ளும்படி அழைத்தார். பாகிஸ்தானிய இராணுவத்தினரின் கொடுமை தாங்காமல் பல கிழக்கு பாகிஸ்தானிய மக்கள் தாமாகவே முன்வந்து இந்திய இராணுவத்திற்கு உதவினர். அதனால் அந்த ஆள் சொல்லியது ஏற்றுக் கொள்ளக்கூடியதே என்று கணேசன் அவர் பின்னே சென்றார். ஒரு வீட்டின் உட்புறம் சென்று ஒரு லுங்கியும் வெள்ளை சட்டையையும் கொடுத்தார். கணேசன் தனது சீருடையைக் களைந்தார். தனது இராணுவ அடையாள அட்டையை காலனியின் உள்ளே வைத்துக் கொண்டார். லுங்கியைக் கட்டிக்கொண்டு அந்த சட்டையும் போட்டுக் கொண்டார். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு உபரியாக இருந்த துப்பாக்கிக் குண்டுகளை இடுப்பில் செருகிக் கொண்டார். 

பின்னர் அந்த ஆள் ஒரு சைக்கிள் ரிக்ஷா இளைஞனிடம் கணேசனை அறிமுகப்படுத்தி அவரைமுக்தி பெஹ்னி முகாம் ஒன்றுக்கு அழைத்துப் போகச் சொன்னார். அந்த முகாம் சென்று அதன் தலைவரை சந்தித்து தான் வந்த வேலையைப் பற்றி கணேசன் எடுத்துச் சொன்னார். அன்று இரவு அல்லது மறுநாள் இந்திய இராணுவம் சிறிய பீரங்கிப் படை உதவியுடன் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தைப் பிடிக்கவும் பின்னர் “கோம்தி” என்ற நதியைக் கடந்து கொமில்லா-டாக்கா  நெடுஞ் சாலையைத் துண்டித்து பாகிஸ்தானிய துருப்புகள் டாக்கா நகருக்குள் நுழைவதைத் தடுக்கவும் திட்டமிட்டு இருப்பதைச் சொல்லி அதற்கான சில விபரங்களை பார்க்க வேண்டி தான் வந்திருப்பதாகவும் சொன்னார். முக்தி பெஹ்னியைச் சேர்ந்த ஒரு நபர் துணையுடன்அதே சைக்கிள் ரிக்ஷா  வில் எல்லா இடங்களையும் பார்த்தார். அதற்குள் இரவு நேரமாகி இருட்டி விட்டது. பின்னர் அங்கிருந்து திரும்பும் வழியில்இந்திய இராணுவத்தின் ஒரு காலாட்படைப் பிரிவு அன்று இரவு தாக்க வேண்டிய இலக்கு நோக்கி வந்து கொண்டிருந்தனர். கணேசன் அந்த படைப் பிரிவின் தலைவரை சந்தித்து சில விபரங்கள் சொல்லிவிட்டு புரிசாங் கிராமம் வந்தடைந்தார்.

இரவு 11-12 மணியாகி விட்டது. அவர் விட்டுச் சென்ற சீருடையும் அவருக்கு முதன் முதல் அறிமுகமான ஆளும் அங்கிருந்தனர். தனது நாட்டிற்காக இந்திய இராணுவம் எவ்வளவு பாடுபடுகிறது என்ற நன்றியோடு அந்த ஆள் சூடான டீ தயாரித்து கொடுத்தார். அதைப் பருகிவிட்டு சீருடைக்கு மாற்றிக் கொண்டு அந்த இருட்டில் தனது முகாம் நோக்கித் தனியாக நடந்து வந்தார். என்னே இறைவனது செயல் !போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு இராணுவ அதிகாரி எதிரி நாட்டினுள் தனியாளாக நுழைந்து 15 கி.மீ தொலைவு சென்றுவிட்டு திரும்பியது ஒரு கனவு போன்றிருந்தது கணேசனுக்கு. இடையில் பாகிஸ்தானிய இராணுவத்தினரில் ஓரிருவர் அவரைக் கண்டிருந்தாலும் ஒரு குருவிக்குஞ்சு போல் அவரை சுட்டு வீழ்த்தி உடலைத் தூக்கி எறிந்து விட்டுப் போயிருப்பார்கள்.

மறுநாள் இந்திய இராணுவம் எதிர்பார்த்தபடியே “கோம்தி” நதியைக் கடந்து கொமில்லா- டாக்கா  சாலையை இடையில் ஆக்ரமித்து பாகிஸ்தானிய இராணுவ முகாம் களை இரண்டாகப் பிரித்தது. அதேசமயம் கணேசனது படைப்பிரிவினர் அங்கு ஒரு பகுதியைத் தனித்து விட்டு விட்டு மீதி பேர் நாட்டின் உட்புறமுள்ள பிரஹ்மான் பரியா என்ற இடத்திற்கு நகர்ந்தனர். இந்திய இராணுவத்தினர் பல இடங்களில் பாகிஸ்தானிய இராணுவத்தினருடன் போரிடாமல் அவர்களை முடக்கி விட்டனர். அப்படித் தனித்தனி கூட்டமாக அவர்களைப் பிரித்து காவலுக்கு இருக்க மீதி இராணுவம் வான் மார்க்கமாக டாக்கா நகருக்கருகில் இறங்கி விட்டனர்.
                                                                   

புதிய இடத்திற்கு வந்த கணேசனின் பொறியாளர் பிரிவினர் பெரும் மிதவைகள் கட்டி அதில் 130 மி.மீ கனரக பீரங்கிகளை ஏற்றி “மேகனா” என்ற நதி வழியே “நரசிங்டி” என்ற டாக்காவுக்கு அருகிலான கிராமம் சென்று அங்கிருந்து பீரங்கி இயக்கப்பட்டது. முதல் குண்டு டாக்கா விமான தளத்தில் வீழ்ந்தது. போர் மிகவும் முன்னேற்றமடைந்து கிழக்கு வங்கம் முழுவதும் இந்திய இராணுவத்தினரால் சூழப்பட்டு விட்டது என்பதை அறிந்து கொண்ட பாகிஸ்தானிய இராணுவத் தளபதிஏ.ஏ.கே. நியாஜி சரணடைய ஒப்புக் கொண்டார். 16-12-1971ம் நாள் அவர்கள் சரணடைந்தார்கள்.

இந்திய இராணுவத்தினரில் ஒரு பகுதி உடனடியாக மேற்கு பாகிஸ்தானிய எல்லைக்கு மாற்றப்பட்டனர். கணேசன் ஒரு மிலிடெரி ஸ்பெஷல் ரயில் தலைவராக அஸ்ஸாமில் உள்ள அவர்களது போருக்கு முந்தைய முகாம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

வாழ்க்கைப் பெருவெளியில் எவ்வளவோ மாற்றங்கள் நடந்துவிட்டன. 

“மெய்யாய் இருந்தது நாட்செல 
  நாட்செல வெட்ட வெறும் 
 பொய்யாய்ப் பகற்கனவாய் மெல்லப் போனதுவே” என்பது போல் கலைந்து போயின. உற்றார் உறவுகள் சுற்றம் என்று கணேசன் பின்னியிருந்த பாசவலை இந்த இரண்டு போர்க்களங்களின் அனுபவத்தால் சிதைந்து போயின. பாய்ந்தோடும் காலவெள்ளம் சில பசுஞ்சோலைகளை அழித்து விடுகின்றது. சில பாலை வனங்களைப் பசுஞ்சோலைகளாக மாற்றி விடுகின்றது. தனது வாழ்க்கை இதில் எத்தகையது என்பது பற்றி கவலைப்படாமல் காலம் காட்டும் திசையில் அவர் தயங்காமல் சென்று கொண்டிருந்தார்.

அஸ்ஸாமில் ரங்கபாரா நார்த்  என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு வந்த ஓரிரு நாட்களுக்குள் அவர் விட்டுச் சென்ற பி.டெக்  படிப்பைத் தொடர இராணுவத் தலைமையகம் உத்தரவிட்டிருந்தது. இதனால் 09.02.1972 அவர் இராணுவப் பொறியியற் கல்லூரி வந்தடைந்தார்.

உலக வரலாற்றில் கிழக்கு வங்கத்தில் நடந்த இந்திய பாகிஸ்தானிய போர் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 14-15 நாட்களுக்குள் ஒரு நாடு விடுதலை யடைந்தது. ஏராளமான பாகிஸ்தானிய இராணுவத்தினர் போரிட விரும்பவில்லை. அவர்கள் சுற்றி வளைக்கப்பட்ட பொழுது எதிர்ப்பை தெரிவிக்காமல் தங்களது முகாமுக்குள் அடங்கிப் போய்விட்டனர். காப்டன் கணேசன் என்பவரின் தனிமனித வாழ்விலும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. உறவு என்ற பிடிப்பு தளர்ந்தது. போர் நடந்து கொண்டிருந்த நாட்களில் கூட அவரின் அண்ணன், அக்காள், தம்பிகள், தங்கை என்று எவருமே அவர் உயிருடன் இருக்கிறாரா என்று தெரிந்து கொள்வதற்காகக் கூடக் கடிதம் எழுதவில்லை. உறவுகள் பொய் என்ற தன் விளக்கம் ஏற்பட்டது. அவருடைய எண்ணங்களுக்கு ஏற்ப இருந்தது இந்த தாயுமானவர் பாடல்.

ஊர் அனந்தம்; பெற்றபேர் அனந்தம்; சுற்றும்
உறவு அனந்தம்; வினையினால்
உடல் அனந்தம்; செய்யும் வினை அனந்தம்; கருத்
தோ அனந்தம்; பெற்ற பேர்
சீர் அனந்தம்; சொர்க்க நரகமும் அனந்தம் ; நல்
தெய்வமும் அனந்தம்; பேதம்
திகழ்கின்ற சமயமும் அனந்தம்; அதனால் ஞான
சிற் சக்தியால் உணர்ந்த
கார் அனந்தம் கோடி வருஷித்தது என அன்பர்
கண்ணும் விண்ணும் தேக்கவே,
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலை, நம்
கடவுளைத் துரிய வடிவைப்
பேர் அனந்தம் பேகி மறை அனந்தம் சொலும்
பெரிய மௌனத்தின் வைப்பப்
பேசரும் அனந்த பதஞான ஆனந்தம் ஆம்
பெரிய பொருளைப் பணிகுவம்.

இப்படிப்பட்ட பாடலை படித்துணரும் போது ஊர், உறவு, உற்றார், பெற்றோர் எல்லாம் பிறவிதோறும் வரும் பிணைப்புகள் என்பதை கணேசன் உணர்ந்தார். அதன் இறுகிய பிடிக்குள் சிக்கி விடக்கூடாது என்ற முடிவெடுத்தவர் ஒரு இராணுவ அதிகாரிக்கே உரிய உடல் நலனும் மனநலனும் பெற்று கல்லூரிப் பாடங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.[வளரும்]





1 comment: