Thursday 16 October 2014

சங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -1

முனைவர் ஜ.பிரேமலதா,
                                                                         

முனைவர் ஜ.பிரேமலதா,
தமிழ் இணைப் பேராசிரியர்,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம்-636 007.

 சங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -1
போரை விரும்புபவர்களை ஆதரிப்பவர்களை இந்த உலகம் விரும்புமா? உண்மையில், மனிதர்களை கொன்று குவிக்கும் போரை நல்ல உள்ளம் படைத்தவர்கள்   யாரும் விரும்ப மாட்டார்கள். எனவேதான் பாரதிதாசன் ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்‘ என்றார். போரில் கெடுதலைத் தவிர விளைவது எதுவுமில்லை. மக்கள் நலன் புறக்கணிக்கப்படும். மாண்டவர் தொகையோ பெருகிப்போகும். உறுப்புகள் இழந்தவர்களை எண்ணமுடியாது. தந்தை இழந்த குழந்தைகள்,கணவன் இழந்த அபலைப் பெண்கள்,மகனை இழந்த வயது முதிர்ந்தோர், உறுப்பிழந்தவர்களின் எதிர்காலப் போராட்டம் எனப் போர் திசையெங்கும் துக்கம் ஒன்றையே தந்து நிற்கும். இப்போரினால் விளைவது மனசாட்சி அழிவும், மக்கள் அழிவும் தான் வேறொன்றுமில்லை.  

தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமாக விளங்குகின்ற புறநானூறு போர் குறித்த ஒரு நூல்தான் என்றாலும், சிறந்த அறநூலாகவும் திகழ்ந்து வருகிறது. பழந்தமிழர்களின் போர்களையும், வீரத்தையும், கொடையையும், விருந்தோம்பல் பண்பையும் கூறுகின்ற நூலாக இருந்தாலும்,  சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்ற, மக்கள் நலனைப் பாதிக்கின்ற போரே வேண்டாம் என்று பல அறவுரைகளையும் கூறுகிறது.
                        

சங்க காலத்தில், களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனேஎன்று கடமையுணர்வு ஊட்டப்பட்ட இளைஞர்கள், போர் எப்போது வரும் என்று காத்துக் கிடந்துள்ளனர்.  பகைவரின் இரத்தம் காணத்  துடித்துக் கொண்டிருந்தனர். போர்க்களத்தில் சென்று வீரம் விளைவித்து பகைவரது வாளாலும், வில்லாலும், அம்பினாலும் விழுப்புண்படும் நாளே பயனுடைய நாள்கள், மற்ற நாள்களெல்லாம் பயனற்ற வீண் நாள்கள் என்ற உணர்வோடு வாழ்ந்துள்ளனர். இதை திருவள்ளுவர் , ‘விழுப்புண்படாத நாள் எல்லாம்வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து‘ என்ற குறளில் கூறுகிறார்.

போர் மறவர்கள், பகைவரை ‘இன்னவாறு செய்யத் தவறுவேனாயின் இன்னது ஆகக்கடவேன்‘ என்று வஞ்சினம் கூறிய பின்னரே போருக்குச் சென்றுள்ளனர். கருதியது முடிக்கும் தகைமையுடையவர்களாகச் சங்கத் தமிழ் மறவர்கள் திகழ்ந்துள்ளனர். பெண்களும் வீரத்தில் சளைத்தவர்கள் அல்லர். தந்தையையும் கணவரையும் அடுத்தடுத்த நாள்களில் போரில் இழந்த ஒரு பெண், மூன்றாவது நாள் ஒலித்த போர் முரசம் கேட்டு, விளையாடிக் கொண்டிருந்த, தலைஉச்சியில் சிறுகுடுமி உடைய தன் மகனை அழைத்து கையில் வேல் கொடுத்துப் போருக்குச் செல் என அனுப்பி வைக்கிறாள். இதைக் கண்ட பெண் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் அம்மறக்குடிப் பெண்ணின் வீரத்தை ,கெடுக சிந்தை கடிது இவள் துணிவே (புறம்-312) என்று வியக்கிறார்.

""ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை"" (புறம்-70)

என்ற வரிகள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும், சாடுவதும்,பழிவாங்குவதும் உலகத்து இயற்கை தானே என்று போரை ஆதரிக்கும் இதேநூலில், போரே தேவையில்லை என்ற  குரல்களும் ஒலிக்கவே செய்கின்றன. மனிதன் விலங்கிலிருந்து தானே தோன்றினான் என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும், ஒருவரை ஒருவர் பழிவாங்குவதும் வெட்டிச் சாய்ப்பதும், வீரம் என்ற பெயரில் கொன்று குவிப்பதும் ஏற்புடையதுதானா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று மன்னர்களை நோக்கி வினவுகின்ற கேள்விகளும் ,போரை நிறுத்து என்று கூறுகின்ற குரல்களும்  சற்று உயர்ந்தே ஒலிக்கவும் செய்கின்றன. .

                    

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘என்று உலக மக்கள் அனைவரையும் ஒரே கூரைக்குள் கொண்டு வந்து, அனைவரையும் உறவினர் என்று கொண்டாடிய கணியன் பூங்குன்றனார் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்திலேதான், தமிழர்கள் தங்களுக்குள் பல காரணங்களுக்காகப் பலமுறை போரிட்டுக்கொண்டுள்ளார்கள். 
மன்னர்கள் போர் என்ற பெயரில் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டும், மண்ணாசையின் பொருட்டு மக்களின் நலனை காற்றில் பறக்கவிட்டுக் கொண்டும் இருந்ததை இப்புலவர்கள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்களா? இல்லவே இல்லை. தங்களால் இயன்ற வரை தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாது மன்னர்களை ஒன்றிணைக்க முயன்றிருக்கிறர்கள். சங்கப் புலவர்களின் பாடல்களில், ஒருபுறம் போரைப் புகழ்ந்துரைப்பது போலத் தோன்றினாலும், அதன் உள்ளீடாகப் போரினால் ஏற்படும் அவலங்களை எடுத்துரைத்துக்கும் பாங்கும்  நிறையவே உள்ளன. மன்னர்களைத் தக்க சமயத்தில் சந்தித்து, போரைக் கைவிடச் சொல்லி அறிவுரை கூறும் துணிவும் சிறப்பும் உடைய வர்களாகவும் இப்புலவர்கள் இருந்துள்ளனர். தன் அதிகார பலம், ஆணவம், படைபலம், சுயநலம்,மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் விடுத்து சான்றோர்களின் குரலுக்கு மதிப்பு கொடுத்து இறையாண்மையைக் காப்பாற்றியுள்ளார்கள். சங்க கால மன்னர்கள் புலவர்களைத் தம்மினும் மேலாகக் கருதினார்கள். கற்றறிந்த சான்றோர்களை உயர்வாகப் போற்றினார்கள். அவர்களின் சொற்களிலிருந்த உயிரிரக்கத்தைப் புரிந்து கொண்டு, தம் தவறுகளை உணர்ந்து பெருந்தன்மையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள்.  மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள இச்சான்றோர்களின் சிறப்பறிந்த காரணத்தினாலேதான் அதியமான் நெடுமான் அஞ்சி, நெடுநாள் வாழும் நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்துள்ளான்.

இலக்கியத்தின் இன்றியமையாத நோக்கம் மனிதம். சகமனிதர்களை ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கச் செய்துஅமைதியைமகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதும்தனிமனிதர்களின் பகை உணர்ச்சிகளைசெயல்களை அவர்களின் வாழ்விலிருந்து அகற்றுவதும்

இலக்கியத்தின் இன்றியமையாத நோக்கம் மனிதம். சகமனிதர்களை ஒருவரோடு ஒருவர் ஒத்துழைக்கச் செய்து, அமைதியை, மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் செய்வதும், தனிமனிதர்களின் பகை உணர்ச்சிகளை, செயல்களை அவர்களின் வாழ்விலிருந்து அகற்றுவதும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். இலக்கியம் படைக்கும் புலவர்கள் இதை இலக்கியங்களில் சொல்வதோடு நின்றுவிடாமல், சமூக நடப்புகளை உற்றுக் கவனித்து தக்க சமயத்தில் மனிதம் காக்க முன்வரவும் வேண்டும்.  புறநானூற்றில் சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடிய வகையில் பல போர்கள் நிகழ்த்தப்பட இருந்த சமயத்தில், தமிழ்ப்புலவர்கள் குறுக்கிட்டு தம் சொல்வன்மையால் தடுத்து நிறுத்திய குறிப்புகள் நிறைய உள்ளன.

அக்கால அரசர்கள் அறம்பாடிய புலவர்களைத் தங்களினும் மேலானவர்களாகக் கருதியவர்கள். புலவர் கூறும் அறக்கருத்துக்களை ஏற்று அதன்படி நடந்தவர்கள். இருப்பினும், சமூக விரிவாக்கத்தின் காரணமாகவோ, மண்ணாசை, பெண்ணாசை, புகழாசை காரணமாகவோ போர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. விழுப்புண் படாத நாளையெல்லாம் பயனற்ற வீண் நாட்கள் என்றே மக்களும் கருதி வாழ்ந்துள்ளனர். மண்ணாசை காரணமாக ஒரு மன்னன் மற்றொரு மன்ன்ன் மீது போர் தொடுக்கும் நிலையில், தன் நாட்டைக் காக்க வேண்டிய சூழலில் அறம் பாடிய புலவர்கள் மறத்தையும் பாடியுள்ளனர். எனினும், தங்களால் இயன்ற அளவிற்குப் போர்கள் நிகழா வண்ணம், மன்னர்களுக்கு அறவுரைகளைக் கூறிப் பல போர்களைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இவ்வாறு போரைத் தடுத்து நிறுத்திய புலவர்களாகக் கருங்குழலாதனார், ஔவையார், கபிலர், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார், புல்லாற்ற்றூர் எயிற்றியனார், உறையூர் ஏணிச்சோரி முடமோசியார் போன்ற புலவர்களைக் குறிப்பிடலாம்.

இப்புலவர்கள் போரினால் மக்கள் பட்ட துன்பங்களைக் கண்டவர்கள்.நெஞ்சம் கசிந்தவர்கள். போருக்குப் பின்னரும் வாழிடம் தேடி அலையும் மக்கள் படும் துன்பங்களை அறிந்தவர்கள் போரில் தோற்ற நிலையில், தோல்வியுற்ற நாடுகளின் நிலை குறித்துப் புலவர்களின் சில பாடல்கள் இவ்வாறு பதிவு செய்துள்ளன.

""ஈன்றோள் நீத்த குழவிபோல"" (புறம்-230)
""மண் முழா மறப்ப பண் யாழ் மறப்ப
இருங்கண் குழிலி கவிழ்ந்து இழுது மறப்ப"" (புறம்-65)

தாயினால் கைவிடப்பட்ட உண்ணாத குழந்தையைப் போல இருந்த நாட்டில், முரசு, யாழ் கருவிகள் இசைக்கப்படாமலிருந்தது. பாலின்மையால் தயிர் பானைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. உழவர் உழவுத்தொழில் செய்யாது நீங்கினர். வெற்றி பெற்ற மன்னர்கள் பகைவர் நாட்டில் புகுந்து மக்கள் வாழும் மனைகளைப் பாழாக்குவதும், விளைந்த வயலைக் கைப்பற்றி எறியூட்டுவதும், கொள்ளையடிப்பதும் நிகழ்த்தினர்.  கழுதைகளை பூட்டி வயலில் உழச் செய்து விளை நிலங்களை பாழாக்கினர். (புறம்-15)

மக்கள் பயன்படுத்தும் நீர்த்துறைகளையெல்லாம் களிறுகளை விட்டு அழித்தனர். (புறம்-16)

எறியூட்டப்பட்ட மனைகளிலிருந்து தீயின் ஒளி எங்கும் பெருகியது. (புறம்-7) மக்கள் வாழ முடியாதபடி, பகைவர் நாட்டை முற்றிலும் பாழாக்கிய நிகழ்ச்சிகளை இப்படிப் பல பாடல்கள் சுட்டுகின்றன. புலவர்கள் வெற்றி பெற்ற மன்னர்களைப் பாராட்டும் அடிப்படையில் இச்செய்திகளைக் கூறிச் சென்றாலும், போரின் அவலங்களையும் இதனால் மக்கள் படும் துயரங்களையும் மறைமுகமாகச் சுட்டுகின்றனர்.

""கடும்பின் கடும்பசி தீர"" (புறம்-163)

கடும்பசி கலக்கிய இடும்பை (புறம்-230) போன்ற பாடல்கள் பசிக்கொடுமையைப் பற்றிக் கூறுவதால் தொடர்ந்த போர்களால் மக்கள் நிலையற்ற வாழ்க்கையில் கடும்பசிக்கு ஆளான நிலையினை அறியலாம்.
இதனால் போர்கள் நிகழாவண்ணம் தடுக்கப் பல வகைககளிலும் புலவர்கள் பாடுபட்டுள்ளனர். கருங்குழலாதனார் என்னும் புலவர் சோழன் கரிகாற் பெருவளத்தானை நேரடியாகவே பார்த்துக் கூறுகிறார் ""மன்னனே நீ கொள்ளையை விரும்பினாய். இதனால் பிறர் நாடுகள் இனி நல்லவற்றையெல்லாம் இழந்து போகும்"" (புறம்-7) என்கிறார்.[வளரும்]

1 comment:

  1. Dear Madam,
    Soldiering had been great activity of yesteryears youth force.No doubt that "Purananooru" is the best book to understand yesteryears warfare.I became an Army Officer accidetly and lucky to have participated in two great wars India fought in 1965,71.Ishall post you my war experience book "Ellaippuranthil idhayithin kural".It may be of some use to you.
    Great analyse.Please continue.

    ReplyDelete