Sunday 26 October 2014

பேயாழ்வார்

வைஷ்ணவ ஆசார்ய வைபவம் நூலிலிருந்து 
பேயாழ்வார் 
                                                                                                          பேயாழ்வார்                                                                   
உலகத்தின் பொதுமறை என்று போற்றப்படும் வான்புகழ் திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்குக் கோயில் அமைந்துள்ள ஊர் சென்னையைச் சார்ந்த மயிலாப்பூர் ஆகும். இதனைத் திருமயிலை என்றும் வழங்குவார்கள்.

பெருமையும் பல்வேறு சிறப்புகளும் பெற்றுத் திகழும் திருமயிலை எனும் இத்தலத்தில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி அருளாட்சி செய்து வருகிறார். அவர் உறைந்திருக்கும் அத்திருக்கோயிலின் திருக்கிணற்றில்தான் பேயாழ்வார் அவதரித்தார். 
                                                              
திருமயிலை  ஆதிகேசவப் பெருமாள்

செவ்வல்லி மலரில் துவாபர யுகத்தில் சித்தாத்திரி ஆண்டு ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் சுக்கில பட்சம் பொருந்திய தசமி திதியில் வியாழக்கிழமை சதய நட்சத்திரத்தில் அவர் தோன்றினார்.

பேயாழ்வார் திருமாலின் ஐம்படைகளில் ஒன்றான நாந்தகம் என்னும் வாளின் அம்சமாக மண்ணுலகில் தோன்றினார். பேயாழ்வார் இளமைக் காலம் தொட்டே கல்வி கேள்விகளில் நாட்டம் கொண்டிருந்தார். கற்ற கருத்துக்கள் எல்லாம் அவர் தம் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்தன. அவர் உள்ளமோ பெருமானின் திருவடிகளால் கவரப்பட்டு அங்கேயே நிலைத்துவிட்டது. மனம், மெய், வாக்கு ஆகியவற்றால் பேயாழ்வார் எந்த நேரமும் திருமாலையே நினைந்து நினைந்து இன்பம் அடையலானார்.

அதனால் அவர் எப்பொழுதும் செந்தமிழ்ப் பாக்கள் பாடி திருமாலின் புகழையே எண்ணி எண்ணி உருகினார். இறைவனையே வாய்கூற மனம் நினைக்க ஞானக்கண் காண களிப்பு கொண்டு ஆடியும், பாடியும் அவர் திரியலானார். அவரை அனைவரும் வணங்கலாயினர்.

பேயாழ்வார் தாம் பாடிய மூன்றாம் திருவந்தாதியில் திருமாலின் திருவடிகளே நமக்குப் பற்றுக் கோடாகும். துன்பம் வந்த காலத்து ஆதிமூலமே என விளித்த யானையைக் காக்க முதலையை சக்கரப் படையால் அழித்தவன் அன்றோ நம்பெருமான் என்று அவர் பிரமாணம் காட்டுகிறார்.

“தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துக்
கோள்முதலை துஞ்சக் குறித்தெழுந்த சக்கரத்தான்
தாள்முதலே நங்கட்குச் சார்வு”
                                                                            
திருவரங்கம்

என்பது அவர் அருளிச் செயல் ஆகும். பேயாழ்வார் திருவரங்கம், திருக்குடந்தை, திரு விண்ணகர், திருமாலிருஞ்சோலை, திருப்பாடகம், திருவெஃகா, திருவல்லிக்கேணி, திருக்கடிகை, திருவேங்கடம், திருப்பாற்கடல் ஆகிய திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள திருமாலின் புகழைப் பாடித் துதித்துள்ளார்.

“பேயன்எழில் தாளியிணை பெருநிலத்தில் வாழியே”
[வளரும்]






No comments:

Post a Comment