Sunday 26 October 2014

எல்லாக் காதல்களும் வலிகளையே தோற்றுவிக்கின்றன


நினைவூட்டல்                                                
                           முன்னுரையில் .....
            எல்லாக் காதல்களும் வலிகளையே    தோற்றுவிக்கின்றன

நான் எழுதும் காதல் கவிதைகளில் காமம் இழையோடுவதாகப் படித்தவர்கள் சொன்னார்கள். காமம் இல்லாமல் காதல் உயிர் வாழுமா என்று வினா எழுப்பினால் இல்லை என்பது தான் பதில். காமம் இல்லாத ஒரு நேசம் நட்பின் பரந்த வெளிக்குள் பயணப்படுகிறது.

காமம் பேசாப் பொருள் என்றால், இயற்கை ஆணும் பெண்ணுமாக பிரிந்து பரிணமிக்க வேண்டிய அவசியமில்லை. பேசக்கூடாது என்று மறைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரிடத்திலும் காதல் மலரவே செய்கிறது. தங்கள் உள்ளத்தின் எண்ண நிர்வாணங்களை தங்களுக்கான துணைகளிடம் பகிர்ந்த பின்பே கடந்து செல்கிறார்கள் மனிதர்கள். காதல் புதுப்பிக்கப்படாத போது வேறு துணை தேடி பிரிந்து செல்கிறார்கள்.

பருவ மங்கை ஒருத்தியின் காதல் கனவுகளோடு பயணப்படுகிறது என் கவிதைகள். கனவுக் காதலனுக்கும் நிஜத்தில் இருப்பவனுக்கும் உள்ள வேறுபாடு சுடுகிறது அவளை. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கற்பனைத் துணை இருக்கவே செய்கிறது.

                                                                 

கற்பனையில்  வரும் துணை கேள்வி கேட்பதில்லை. கற்பனை செய்துகொள்ளும் அவரின் இச்சைப்படியே நாயகன் அல்லது நாயகியின் பதிலும் செயல்களும் இருக்கும். நிஜத்தில் பயணப்படுகிற துணைகளின் கருத்து வேறுபாடுகள் ஒரு புறம் பிரிவுப் பாதைக்கு வழி வகுக்கும் என்றால், சமூகச் சூழல்கள் அவர்களுக்கு கசப்பு அனுபவத்தையே தருகிறது.

உணர்ச்சிவசப்பட்டு இருவருமாகக்  கலந்து உயிராகும் போதும் இயற்கை பெண்ணுக்கு எதிராகவே நின்று அழிச்சாட்டியம் செய்கிறது. இந்தியப் பண்பாட்டின் சூழலில் ஆவலாகக் காதலிக்கத் துவங்கும் ஒரு பருவ மலரின் தொடர்ப்பயணம்தான் இந்த கவிதைத் தொகுப்பு.

எல்லாக் காதல்களும் வலிகளையே தோற்றுவிக்கின்றன. காதல் ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படுமானால், ஒரு பெண்ணிற்கு நண்பன் காதலன் கணவன் என்ற முப்பரிமாணங்களை அவளின் துணைவனால் தரமுடியுமானல், இருபாலிடத்திலும் நேசம் மரணத்தின் இறுதி வரை இழையோடுமானால், அன்று ஒரு செம்மையான சாட்சியான சமுதாயத்தில் வாழ்கிறோம் என்று நாம் மார்தட்டிக்கொள்ளலாம்.

இது எனது முதல் கவிதைத் தொகுப்பு நூல்.இது வெளிவரக் காரணரான திரு. சி.ஜெயபாரதன் அவர்களுக்கும், இந்த கவிதை நூலைப் பதிப்பித்து வெளியிடும் திரு. வையவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த கவிதை நூலுக்கு அணிந்துரை தந்து உயிர்ப்பித்த‘வல்லமை வலையிதழ்’ நிர்வாக ஆசிரியர்,திருமதி. பவள சங்கரி அவர்களுக்கும் மற்றும் கவிஞர் திரு. மகுடேஸ்வரன் அவர்களுக்கும் என் அன்பின் பணிவு நன்றிகள்.

ஜி. ஜே . தமிழ்ச்செல்வி

அக்டோபர் 1, 2013



No comments:

Post a Comment