Monday 13 October 2014

விளம்பர உலகம் :1. உடையது விளம்பேல்

சந்தக்கவிமணி சந்தர் சுப்பிரமணியம்
                      அவர்கள் எழுதும்
                       விளம்பர உலகம்  


1. உடையது விளம்பேல்

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லாச் செயல்களிலும் விளம்பரம் என்பது அத்தியாவசியத் தேவையாகவே இருந்துவருகிறது. இந்தப் பழக்கம் இக்காலத்தில் மட்டும் நிகழ்வதன்று; தொன்றுதொட்டு இருந்துவரும் பழக்கங்களில் விளம்பரம் என்பதும் ஒரு பழக்கமாகும். தான் இன்ன காரியத்தைச் செய்தேன் என்பதை ஒருவன் மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் செயலே விளம்பரம். காலத்தின் பொருட்டு, சொல்லும் இந்த விளம்பரங்களின் ஊடகங்கள் மாறிக்கொண்டே வரலாம். ஆயினும் விளம்பரம் என்னும் அந்தச் செயல் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

தமிழில் "விளம்பரம்" என்னும் சொல், ஏதோ ஒரு செய்தியை "விளம்பும்'/சொல்லும் செயலே ஆகும். "உற்றது விளம்பலுற்றேன்" என்கிறது சீவக சிந்தாமணி. உள்ள ஒரு பொருளை, வெளிப்படக்கூறுதல் "விளம்புதல்" என்ற பொருள்படுகிறது.

உண்ணல், உறங்கல் போன்ற அத்தியாவசியப் பணிகளைத் தவிர, மனிதன் செய்யும் மற்றைய பணிகள் யாவும், மற்றவர்களைக் கவர்வதற்காகவே பயன்படுகின்றன. ஆதிநாள் முதல், அவன் வாழ்வாதாரச் செயல்கள் செய்வதுபோக மீதமிருக்கும் நேரத்தில், தன் சுயகர்வத்தைப் பறைசாற்றவே அவன் செயல்கள் பெரிதுமாய்ப் துணைபோயுள்ளன. தன்னால் "இது முடிந்தது" என்பதைத் தெரிவிக்கவும். "இது முடியும்" என்பதை அறைகூவலிடவும், தனிமனித விளம்பரங்கள் உருவாயின.

உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க ஆதிமனிதன் வடிவமைத்த செயலே விளம்பரம். தனக்கு அவளைப் பிடிக்கும் என்பதை ஒருத்தியிடம் தெரிவிக்கவே மலரையும், கிளிஞ்சல் போன்ற மற்ற பொருள்களாலான மாலையையும் கொடுத்துத் தன்னை விளம்பரம் செய்துகொண்டான்.

இவ்வாறே, மதிப்பில்லாப் பொருள்களும், அதைக்கொடுக்கும் செயலின் மூலமான உணர்வுகளால், மதிப்பைப் பெறுகின்றன. இங்கு விளம்பரத்தின் மூலம், செயற்கையான ஒரு மதிப்பு, ஒரு பொருளின்மேல் ஏற்றப்படுகிறது. இதுவே இக்கால விளம்பரத்தின் மூல உக்தியாகும்.

விளம்பரம் - ஒரு வரையறை:

எனவே விளம்பரம் என்பது முடிந்த செயல்களைக்கூறும் அறிக்கையாகவோ, அல்லது நிகழப்போகும் செயல்களைக் கூறும் அறைகூவலாகவோ இருக்கவியலும். நோக்கம் எதுவாயினும், விளம்பரங்களில் பொதுவாக, சொல்லவரும் கருத்தைச் சற்று உயர்வாக விளம்பும் நிலையே உள்ளது என்பதே உண்மை. நிகழ்வின் கூறுகளோ அல்லது அந்நிகழ்வின் பயன்பாடுகளை நிரலிட்டோ விளம்பரங்கள் அமைகின்றன. சொல்லின் சுவை அது சொல்லும் கருத்தினூடே சொல்லப்படும் கற்பனையில்தான் என்பதால், விளம்பரங்களில் கற்பனை என்பது இயல்பான ஒன்றே.

ஆதிகாலத்தில் மலரைக் காட்டியே தன் அன்பை ஒருவன் பெண்ணிடம் உணர்த்தினான் என்பதால், அவ்வாறு ஒரு மலரைக் காட்டும் ஒவ்வொரு ஆணையும் அந்தப்பெண் விரும்ப இயலுமா? இல்லை. அவள் அவ்வாறு தன்னிடம் வருபவர்களை அவர்களின் கற்பனைத்திறன் மூலம் வேறுபடுத்திக்காண்கிறாள். ஏற்கப்படுவது வெறும் மலரல்ல, அதில் தெரியும் கற்பனைத்திறனே என்பதை அறிந்த ஒவ்வொரு ஆண்மகனும், அந்தச் செயலைத் தத்தம் திறன்களால் வேறுபடுத்திக்காட்டலாயினர்.

மலர்களைத்தொடுத்து மாலையாக அளித்தான் ஒருவன்; மலர்க்கீரீடத்தை அமைத்துக் கொடுத்தான் ஒருவன்; மலரோடு சங்கு போன்ற மற்ற பொருள்களையும் சேர்த்தளித்தான் ஒருவன்; தான் வலிமையானவன் என்பதைப் பறைசாற்ற, தான் வேட்டையாடிய விலங்குகளின் நகங்களைத் தொடுத்துக் கொடுத்தான் ஒருவன். இங்கு, கொடுக்கப்படும் பொருள் ஒன்றேயாயினும் கொடுக்கும் முறை வித்தியாசப்படுகிறது. அந்த வித்தியாசக்கோணமே, அத்தனை ஆண்களில் ஒருவனை அப்பெண் தேர்ந்தெடுக்க உதவும் கருவியாகவும் மாறுகிறது.

எனவே எங்கெல்லாம் போட்டியென்று ஆகின்றதோ அங்கெல்லாம் ஏதோ ஒருவகையில் விளம்பரம் தோற்றம் பெறுகிறது. "survival of the fittest" என்பது மனிதனின் வாழ்வில், மற்றெல்லா விலங்கினங்களையும்விட சற்று அதிகமாகவே ஆகிவிட்டது எனலாம். அதற்கான காரணம், மனிதனின் சிறப்புப்பண்பான பகுத்தறிவே ஆகும். அந்தப் பகுத்தறிவே அவன் செயல் ஒவ்வொன்றையும் சிறக்கச்செய்து உலகின் இன்றைய நிலைக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. தனிமனிதனின் “ego” எனப்படும் சுயகெளரவமே உலகின் அத்தனை உயர்வுக்கும் காரணம். அச்சுயகெளரவமே அவன் தன்னை மற்ற மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட, அவனை நகர்த்தும் காரணமாகவும் அமைகின்றது. இச்செயலின் வெளிப்பாடே விளம்பரம்.

விளம்பர உத்திகள்:
கற்பனைதான் தனிமனிதனை அடையாளங்காட்டுகிறது. அக்கற்பனையின் வெளிப்பாடுகளே உத்திகள். தன் அடையாளத்தை வெளிப்படுத்தவோ, அதை மேலும் வளர்க்கவோ, இத்தகைய கற்பனை உத்திகள் மிகவும் அவசியமாகின்றன.

கற்பனைக்குக் கரையில்லை. வானமும் அதற்கு எல்லை இல்லை. அது விரிந்து கொண்டேயிருக்கும் வாமனனின் வசீகரத் தோற்றம். நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருக்கும் அந்த கற்பகவிருட்சத்தின் கனிகள் கணக்கில. ஒவ்வொரு கற்பனையும் ஆயிரக்கணக்கான புதிய கற்பனைகளுக்கு விதைகளிட்டுச் செல்வதால், அதன் வளர்ச்சி பேரண்டத்தையும் விஞ்சக் கூடியது.

ஒவ்வொரு தனிமனிதனும், தான் வாழுங்காலத்திலும், வாழ்ந்து மடிந்த பின்னரும், அவன் செயல்களைப் பற்றிய செய்திகள் பலரை அடையவேண்டும் என்னும் விருப்பம் கொண்டவனாகவே இருக்கிறான். அதன் வழியே வந்தவைதாம் கல்வெட்டுக்களும், காவியங்களும். குலப்பெயர், பரம்பரை, வரலாறு, தர்மகாரியங்கள் இவை யாவும் தனிமனிதன் விட்டுச்செல்லும் விளம்பரங்கள் ஆகும்.


தஞ்சை கோவிலைக் கட்டியவன் இராஜராஜன் என்பதை அவன் கல்வெட்டுகளாலேயே அறிகின்றோம்; அவை இல்லாவிடின், இவ்வுண்மை அழிந்து போயிருக்கும். இன்றும் சோழர்களின் சிறப்பு இராஜராஜனின் காலத்தையே பறைசாற்றுகிறது. மேலும் கல்வெட்டுக்கள் அறியவருமாயின், இராஜராஜன் குறித்த விளம்பரங்களும் பெருகும்.
-
ஆக, தனிமனிதனின் சிறப்பு, பொதுமக்களைச் சென்றடைய வேண்டுமானால் அது விளம்பரங்களாலேயே நடக்கும். இது நடக்க, ஒவ்வொரு தனிமனிதனும், அவன் காலத்தில் பயன்பாட்டில் உள்ள அத்தனை ஊடகங்களையும் பயன்படுத்துகின்றான். கோவிலின் ஒவ்வொரு படிக்கட்டிலும் அதற்கான செலவை அளித்த அந்த முகந்தெரியாத தனிமனிதனின் பெயர், காலங்காலமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் அல்லவா?

அவ்வளவு ஏன்? ஒரு 40 ரூபாய் குழல்விளக்கைத் தானம் தந்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தைத் தடுக்கும் அளவுக்கு, "ட்யூப் லைட் உபயம் மன்னார்சாமி" என்று வர்ணத்தால் தன் பெயரை எழுதி, கோவில்களில் தன்னை விளம்பரப் படுத்திக்கொள்ளும் சிலரும் உள்ளர் அல்லவா?

இன்றைய காலத்தில் காணப்படும் காப்பிரைட் உரிம விளம்பரம், வெகுகாலத்திற்கு முன்பே பாடல்களின் பயின்றுவந்திருக்கின்றது என்றால் நம்புவீர்களா? உரிமம் வெறும் உருவம் உள்ள பொருள்களுக்கு மட்டுமின்றி, உருவமில்லாப் படைப்புகளுக்கும் பழங்காலத்திலிருந்தே இருந்துவருகின்ற என்றால் வியப்பாகவே உள்ளது. ஆம். உருது மொழி கஜல் பாடல்களில் "மக்தா" என்றழைக்கப்படும் இறுதிக் கண்ணியில் அக்கஜல்பாடலைப் பாடிய கவிஞரின் பெயர் (தகல்லுஸ்) கற்பனை நயத்துடன் வருவது இன்றியமையாதது ஆகும்.



ஏன் தியாகராஜர் பாடிய ஒவ்வொரு கீர்த்தனையிலும் அவர் பெயர் அடங்கியுள்ளது அல்லவா? அதைப்போலவே கர்நாடகக்கீர்த்தனைகளை இயற்றிய வேறுபல கவிஞர்களின் பெயர்கள் அவர்களது பாடல்களில் வருவதை அறிந்துள்ளோம். இவற்றை வெறும் விளம்பரம் என்பதை விட அப்பாடல்களின் அடையாளங்கள் என்றே கொள்ளல் வேண்டும். அதுவே அக்கால காப்பிரைட் உரிம அத்தாட்சி!


வெறும் கற்பனை மட்டுமே விளம்பரத்தின் வெற்றியாகுமா? இல்லை. தனித்துவம் இருக்கவேண்டும். அதுவே அக்கற்பனையைத் தூக்கிக்காட்டும் ஊக்கியாகும்.

திரைப்பட நடிகர் பார்த்திபன், தன் கவிதைநூலாகிய 'கிறுக்கல்கள்' குறித்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறிய கருத்து இன்னும் நினைவில் இருக்கிறது. 'கிறுக்கல்கள்' என்னும் அந்நூல், வித்தியாசமான அளவில், மற்றெல்லாச் சாதாரண அளவுகளைவிட சற்றே உயரமாக அமைந்திருந்தது. அது குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், அதன் உயரம் அந்நூலை, அது வைக்கப்பட்டுள்ள புத்தக அலமாரியில் உள்ள மற்ற நூட்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்றார். இது ஒரு யுக்தி. படிப்பவனைக் கவர்வது, அவன் அந்நூலை வாங்கியபின் நடக்கக்கூடிய செயலேயாகும்; ஆனால், அந்நூலைப் பார்ப்பவனை வாங்கத் தூண்டும் யுக்தி, அந்நூலின் வடிவம் அல்லவா? விளம்பரம், வெறும் வார்த்தைகளில் மட்டும் இல்லை.

விளம்பரக் கற்பனைக்கு ஒரு எல்லை உண்டா? இல்லையென்றே முன்னர்க் கண்டோம். என்றாலும், மனிதமுயற்சிக்கு எல்லை உண்டு. சிலநேரங்களில், இம்மனித முயற்சியின் எல்லையைத் தாண்டி விளம்பரங்கள் அமைவதும் உண்டு. காதலித்தவன் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துவைக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் தான் ஒரு உயரமான கட்டிடத்தின் மேலேறிக்கொண்டு விழ்ந்துவிடுவேன் என்று பயமுறுத்துவதும் இத்தகைய விளம்பரமே!

அமெரிக்காவின் அரிசோனா மாவட்டத்தில் உள்ள "Grand Canyon" என்றழைக்கப்படும் உயரிய மலைச்சிகரங்களை கயிற்றின் மீது நடந்து தாண்டி, தம்மை விளம்பரப் படுத்திக்கொள்ளும் பல நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம் அல்லவா? விஷப் பாம்புகளுடன் 30 நாட்கள் கண்ணாடிக் கூண்டில் வாழும் அந்தச் சாகசமும் ஒரு விளம்பர யுக்தியே. ஏன் தெருவோரங்களில் பார்க்கும் பிச்சைக்காரர்கள், தங்களின் மீது இரக்கம் ஏற்படவேண்டும் என்று, தங்கள் விரல்களையோ கைகளையோ வெட்டிக்கொண்டு பிச்சையெடுக்கும் நிலையை நாம் பார்க்கவில்லையா? எல்லா விளம்பர நிகழ்ச்சிகளும், ஒரு பயன்கருதியே நடத்தப்படுகின்றன என்பதே உண்மை.

நம் தமிழ்நாட்டுக்காதலர்கள், தன் இரத்தத்தில் தான் காதலிக்கும் பெண்ணின் பெயரை எழுதிக் காதலை யாசிப்பது இல்லையா? இங்கு, இரத்தம், ஊடகமாகச் செயல்பட்டு, அவர்களின் காதல் உணர்வைத் தெரியச் செய்கிறதில்லையா? காதலி/காதலின் பெயரைத் தன்னுடலில் பச்சைக்குத்திக்கொள்ளும் அந்த வழக்கமும், தத்தம் உணர்வுகளை விளம்பரப்படுத்தும் ஒரு செயலே ஆகும். ஆம். உணர்வுகளை ஏற்றிச் செல்லும் ஊடகங்களே விளம்பரங்கள்!

அன்றாட வாழ்க்கைச்சுமையை மெல்ல நகர்த்திக்கொண்டிருக்கும் மனிதன், கற்பனையில் வேறோர் உலகத்தைப் பார்க்கிறான்; துன்பமில்லாத, இன்பமொன்றே உள்ள உலகத்தை கற்பனை செய்துகொள்கிறான். இது அவனை, வாழ்வின் சுமைகளிலிருந்து சிறுகணங்களுக்கு விடுதலை அளிக்கிறது. இது "fantasy" எனப்படும் கனவு மாயை. விளம்பரங்களில் இத்தகைய உத்திகளும் கையாளப்படுகின்றன.



வெறும் 30 ரூபாய் சோப்பில் குளிப்பவனைச் சுற்றி திரையுலக கனவுக்கன்னிகள் 10 பேர் சூழ்ந்து இருப்பதைப்போல் கற்பனை செய்ய மட்டுமே இயலுமே ஒழிய நனவில் வருவதற்கான சாத்தியங்களே இல்லை. ஆனாலும், தனி மனிதனின் அந்தக் 'கனவு மாயை"யை மையமாகக் கொண்டு, வரும் விளம்பரம், தனிமனிதனின் உள்ளுணர்வை பிரதிபலிப்பதால், பிரபலமடைகிறது. இதுவொரு வகை உத்தி.

வாழ்க்கையில் சந்திக்க இயலாத நிலைகளைச் சாத்தியப்படுத்துவதாக அமையும் இவ்விளம்பரங்கள், தனிமனிதனின் ஆசாபாசங்களை உணர்ந்து அவற்றினால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய உக்தியாகும். இந்த யுக்தியைப் பயன்படுத்தி வரும் விளம்பரங்கள் பல. மிகவும் பிரபலமான திரையுலக நட்சத்திரத்துடன் சிற்றுண்டி என்பதாக வரும் விளம்பரங்கள் யாவிலும் இந்த யுக்தியே பயன்படுத்தப்படுகிறது.

சராசரி மனிதன் வாழ்வின் துன்பங்களிலேயே பிடிபட்டு இருப்பதால், அவன் கனவில் அந்த அமைதியான, துன்பமற்ற, நிதர்சன உலகம் இருந்துகொண்டே இருக்கிறது. இதை அறிந்தே விளம்பரங்கள், தனிமனிதனின் இந்தக்குறையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. நிம்மதியற்ற அந்தச் சராசரி தனிமனிதனின் கனவுகளைக்காட்டி அவனிடமிருந்தே காசைப் பறிக்கும் முயற்சி விளம்பரம் ஆகும் என்று கூறுதல் சரியாகுமா?


"30 நாட்களில் சிவப்புத்தோல் நிறம்", "2 சொட்டுகளில் வெள்ளைச் சலவை", "ஒற்றைத் தீற்றலில் ஆயிரம் பாத்திரங்கள் துலக்கும் சோப்பு" என்பன போன்ற சாத்தியமே இல்லாத செயல்களைக் காட்டும் விளம்பரங்கள் யாவும், தனிமனிதனின் யோசிக்கும் திறனை மழுங்கச்செய்யும் விளம்பரங்கள் ஆகும். ஒருவனின் பகுத்தறிவைச் சோதிக்கக்கூடிய இவ்விளம்பரங்கள் யாவும் அதுகூறும் பொருள்களின் பண்புகளை மிகவும் மிகையாக கூறுவது என்பதை தனிமனிதன் அறிதல் வேண்டும். இதுகுறித்த வேறுபல சிந்தனைகளை வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

பொதுவாக உண்மை என்பது உள்ளதை மட்டுமே சொல்லுதலாகும். ஆனால் விளம்பரங்களுக்கு இது பொருந்தாத விதியே ஆகும். கற்பனையைக் கூட்டிச்சொல்லுவதே விளம்பரம் என்ற நிலையில், "உடையதை' மட்டுமே விளம்புவது என்பது சாத்தியம் இல்லைதான். இதை அறிந்தோ என்னவோ, இக்கால விளம்பரங்களில் இறுதியாக, அவை கற்பனைதான் என்பதைப் பறைசாற்றும் டிஸ்கிளைமர் (disclaimer) என்னும் பகுதியையும் இணைந்தே வருகின்றன. இதனால்தான் ஆத்திசூடி, "உடையது விளம்பேல்" என்கிறதோ!
[வளரும் ]

No comments:

Post a Comment