Friday 24 October 2014

தமிழ் இனி மெல்ல தொடர்கிறது 3.13


தமிழ் இனி மெல்ல 3.12 சென்ற பதிவின் இறுதியில் 
காடவன் குதிரையில் அமர்ந்திருக்கும் ஆளவந்தானைப் பார்த்துத் தலையசைக்கிறான். லாவகமாகக் குதிரையிலிருந்து இறங்குகிறான் ஆளவந்தான். அவன் காடவனைவிட நான்கு அங்குலம் உயரமாக இருப்பதும், தலையில் மகுடம் அணிந்திருப்பதும், அவனை மிகமிக உயரமாகக் காட்டுகிறது. அவன் இறங்கியதும், அவனது குதிரை கனைக்கிறது. அதை இதமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மற்ற வீரர்களைப் பார்த்துக் கண்ணசைக்கிறான்.

அனைவரும் தத்தம் குதிரையிலிருந்து கீழே இறங்குகிறார்கள்.

சோமசுந்தரத் தம்பிரான் குழைந்து குழைந்து ஆளவந்தானை வரவேற்கிறார். வாயிலைத் தாண்டி முற்றத்திற்குள் நுழைகிறார்கள் அனைவரும்.  இதுவரை சேரநாட்டுப் பெரிய இல்களைக் கண்டிராத ஆளவந்தான் தன் கண்களால் அந்த வீட்டை அளவிடுகிறான்.  வீட்டிலிருக்கும் அத்தனை பெண்களும் அவன் கண்ணில் படாது - மறைந்து கொள்கின்றனர். அவன் கண்ணில் படும் மூன்று பெண்கள் தம்பிராட்டி, நிலவுமொழி, மற்றும் சந்திரை மட்டும்தான்.

“நிங்ஙள் இருக்காம்!” என்று மனையைப் பணிவுடன் சுட்டிக் காட்டுகிறாள் தம்பிராட்டி. இல்லுக்கு வந்ததிலிருந்து சோமசுந்தரத் தம்பிரான் பேசவே இல்லையே, தம்பிராட்டி பேசிக்கொண்டிருக்கிறாளே என்று நினைத்தவாறே மனையில் அமர்ந்துகொள்கிறான் ஆளவந்தான்.

கண்களாலேயே என்ன நடக்கிறது என்று காடவனை வினாவுகிறாள் நிலவுமொழி. சற்றுப் பொறுக்குமாறு திரும்பக் கண்களினாலேயே பதில் சொல்கிறான் காடவன். அனைவருக்கும் வெள்ளிச் செம்பில் இளநீர் கொடுக்கப் படுகிறது.

“எங்களுடன் வந்திருக்கும் ஆயிரம் வீரர்களுக்கு உணவு வேண்டும்!” என்று ஆரம்பிக்கிறான் ஆளவந்தான்.
--------------------------------------------------------------
தமிழ் இனி மெல்ல தொடர்கிறது 3.13
                                                 
                                          அரிசோனா மகாதேவன் 


                                              அத்தியாயம் 10
                 சளுக்கியர் அரண்மனை, வேங்கை நாடு
                         சித்தார்த்தி, சித்திரை 12 - ஏப்ரல் 25, 1019
சுவரைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் இராஜராஜ நரேந்திரனின் எதிரில் அமர்ந்திருக்கிறான் இராஜேந்திர சோழ பிரம்மராயன் கிருஷ்ணன் ராமன் சிவாச்சாரி. இருவரும் சில நேரமாக வலுத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நரேந்திரனின் குரல் உரக்கத் தொனிக்கிறது.

“சிவாச்சாரிகாரு! வெங்கி தேசமு நாதி பிதாவுது. இப்புடு ஈ  தேசமு நாதே! ஏமி மீரு சிம்ஹாசனமு நாக்கு  இவ்வெ  தானிக்கி  சிந்தனா சேசுதாரு? (வேங்கை நாடு என் தந்தையது. இப்பொழுது இந்த நாடு என்னுடையது. நீங்கள் எனக்கு அரியணைத் தர ஏன் யோசிக்கிறீர்கள்)” என்று உறுமுகிறான். அவன் பேசிய தெலுங்கு சிவாச்சாரியனுக்கு நன்றாகவே புரிகிறது.

அது மட்டுமல்ல, தமிழ் பேசத் தெரிந்தாலும் தன்னிடம் வேண்டுமென்றே தெலுங்கில் பேசுகிறான் என்றும் அறிந்து கொள்கிறான் சிவாச்சாரி.  தனக்கு அரியணையைத் தரமறுக்கும் திருப்பணி ஆலோசகனை அமதிப்பது, தமிழ் தெரிந்தாலும் வேற்று மொழியில் பேசுவது தான் என்று தீர்மானித்தே அவன் இப்படிச் செய்கிறான் என்றும் புரிந்துகொள்கிறான்.  இருப்பினும் இராஜேந்திரனின் தங்கை மகன், நாளை அவனது மருமகனாகப் போகிறவன், வேங்கை நாட்டிற்கும் மன்னனாகப் போகிறவன் என்பதால் தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டு, அமைதியான குரலில் தமிழில் பதில் சொல்கிறான்.

“இளவரசே! தங்கள் சகோதரர் விஜயாதித்தர் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டால் தாங்கள் வெங்கியை விட்டு நீங்கி, இராஜேந்திர சோழபுரத்தில் தஞ்சம் புகுந்தீர்கள். சோழப் பேரரசின் வடபுலப் படையுடன் தங்களுடன் வெங்கிக்கு வந்து, தங்களின் அம்மானான கோப்பரகேசரியாரின் பிரதிநிதியாக, தங்கள் முன்னிலையில் விஜயாதித்தருடன் பேச்சு வார்த்தை நடத்தினேன். அரியனைக்கு உரிமை கொண்டாடாமல் அரண்மனையிலிருந்து நீங்க வேண்டும், அப்படியில்லாவிட்டால் கோப்பரகேசரியாரின் சீற்றத்திற்கு ஆளாகவேண்டும் என்பதை எடுத்துரைத்தேன். அரியணை பற்றி கோப்பரகேசரியார் தான் முடிவு எடுப்பார் என்றும் இயம்பினேன்.

“விஜயாதித்தருக்கு அது பிடிக்காவிட்டாலும், சோழப் பேரரசுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்து, கோப்பரகேசரியாரின் ஆணையை ஒப்புக்கொண்டு வேங்கை நாட்டைவிட்டு நீங்கியதும் தங்களுக்குத் தெரிந்ததே. அவரிடம் அப்படிச் சொல்லிவிட்டு அரியணையைத் தங்களிடம் ஒப்படைப்பது தங்கள் அம்மானின் சொல்லை மீறுவதாகாதா? என்னுடைய நிலைமையைச் சற்று புரிந்து கொள்ளுங்கள்!”

“சிவாச்சாரிகாரு, நீர் என் மாமன் பெயரைச் சொல்லி என்னைக் கட்டிப் போடுகிறீர்! விஜயாதித்தனுக்குப் பதிலாக நான் அரியணை ஏறியிருந்தால் இப்படிச் செய்திருப்பீரா?” என்று இரை கிறான்.

“இளவரசே! இந்தக் கேள்வியிலேயே விடையும் இருக்கிறதே! மன்னர் விமலாதித்தர் உங்கள் பட்டத்து இளவரசராக அறிவித்திருந்தால் எவ்விதக் குழப்பமும் இருந்திருக்காது. அவரது திடும் மரணமும், அதைத் தொடர்ந்து தங்கள் அன்னையார் உடன்கட்டை ஏறியதும், அதனால் தாங்கள் வருத்தமுற்று இருந்ததும், விஜயாதித்தருக்குச் சாதகமாய்ப் போய்விட்டது. அரியணை அபகரிக்க முற்பட்டார்.

“தாங்களும் வெங்கியை அவரிடம் விட்டுக்கொடுத்து விட்டு, இராஜேந்திர சோழபுரத்திற்கு வந்துவிட்டீர்கள். அரசு உரிமைத் தகராறில் தலையிட விரும்பாததாலும், வியாதித்தர் சோழப் பெரரசிற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தாததாலும், வடபுலத் தண்டநாயகர் வாளவிருக்க நேரிட்டது.  கோப்பரகேசரியாரின் ஆணையுடன் நான் வந்ததால் அவர் படையுடன் வெங்கி வந்து சேர்ந்தார். நல்லவேளையாக விஜயாதித்தர் முடிசூட்டிக் கொள்வதற்கு முன்னர் நான் வந்து சேர்ந்து விட்டதால் ஒரு மன்னரைப் பதவியிறக்கம் செய்யும் அவச் செயல் எனக்கு ஏற்படாது போயிற்று.

“அவர் தற்பொழுது மேலைச் சளுக்கியரின் உதவியை நாடி வேங்கை நாட்டிலிருந்தே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்திருப்பதால் கோப்பரகேசரியார் எப்படியும் தங்களைத்தான் வேங்கை நாட்டின் மன்னராக்குவார் என்று நம்புகிறேன். அவரது முடிவுக்காக இன்னும் கொஞ்சநாள் காத்திருங்களேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்றே நினைப்போமே!” என்று நரேந்திரனைச் சமாதானப்படுத்த முயல்கிறான்.

“நமது எதிரிகளை நாடிச் சென்றிருக்கும் விஜயாதித்தனை சோழப் பேரரசின் எதிரியாக அறிவித்துவிட்டு என்னை மன்னாக்கி விட்டால் எனது மாமன் மறுக்கவா போகிறார்?” மீண்டும் தன் உரிமைக் கோரிக்கையை நியாயப்படுத்திப் பேசுகிறான் நரேந்திரன்.

“நீங்கள் கேட்பதை அளிக்கும் உரிமை கோப்பரகேசரியாருக்குத்தான் இருக்கிறது. இளவரசே! அதை மீறி அரியணையை நான் தங்களிடம் ஒப்படைத்தால் - விஜயாதித்தரை கோப்பரகேசரியாரின் பெயரைச் சொல்லி ஏமாற்றியது, கோப்பரகேசரியாரின் ஆணையை மீறி நடந்து கொள்வது என்ற  இரண்டு அரசத் துரோகங்களுக்காக எனக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அதையா தாங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்கிறான் சிவாச்சாரி.

“நான் அப்படி விரும்பினால்?...” நரேந்திரன் கேட்கும் கேள்வி சிவாச்சாரியனை சாட்டையால் அடிபட்டது போலச் சிலிர்க்க வைக்கிறது. அவனை உற்று நோக்குகிறான் சிவாச்சாரி. அவனது பார்வையில் இருந்தது கோபமா, வெறுப்பா, அருவறு ப்பா, துயரமா என்று அனுமானிக்க முடியாமல் திணறுகிறான் நரேந்திரன். ஒரு விதத்தில் தன்னைப் புழுவைப் பார்ப்பது போலப் பார்க்கிறானே என்றும் தோன்றுகிறது அவனுக்கு.

“தங்கள் விருப்பத்தை எனக்குத் தெரிவித்ததற்கு மிக்க மகிழ்ச்சி இளவரசே! இதை என்றும் நினைவில் வைத்திருப்பேன். தாங்கள் தங்களது விருப்பத்தைத் தெரிவித்ததால் நானும் எனது முடிவைக் கோப்பரகேசரியாரின் பிரம்மராயனாகத் தெரிவிக்கிறேன். அவர் இப்படிப்பட்ட பதவிக்கு எதனால் என்னைத் தேர்ந்தெடுத்தார் என்று எனக்குத் தெரியும். அவர் என்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தால், எத்தனையோ பெரியவர்கள் இருப்பினும் வயதில் சிறிய எனக்கு இப்பதவியைக் கொடுத்திருக்கிறார் என்பதையும் நான் அறிவேன். அவரது நம்பிக்கையைப் பொய்யாக்கும் வகையில் எப்போதும் நான் நடந்து  கொள்ள மாட்டேன்.  அதைவிட இறப்பே எனக்குச் சிறப்பானது.  கோப்பரகேசரியாரிடமிருந்து - அறியணை உரிமை பற்றித் தகவல் வரும் வரை அதைப் பற்றித் தங்களுடன் உரையாடுவதற்கு ஒன்றும் இல்லை. வேறு ஏதாவது இருந்தால் நாம் தொடர்ந்து உரையாடலாம்.”

அவனது குரலில் இருந்த உறுதி, நான் என்னதான் கரடியாகக் கத்தினாலும் இவன் அதைக் கேட்கமாட்டான் என்பதை நரேந்திரனுக்கு நன்கு விளக்குகிறது. தன்னைக் கன்னத்தில் அறைந்து, “சிறுவா, உன்னிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை. வெளியே போ!” என்று சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது. 

எனவே அப்படிபட்ட பாம்பாகச் சிறுகிறான் நரேந்திரன். சிவாச்சாரி சொல்லில் இருக்கும் நியாயமோ, அவனை எதிரியாகப் பகைத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்கிறோமே என்று எதையும் நினைத்துப் பார்க்கும் நிலையில் இல்லாத நரேந்திரனின் காதில் விழாது போகிறது.

“தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் சாமத்திற்குச் சாமம் கொட்டிப் பார்க்குமாம். என் மாமனின் பிரம்மராயராக இருப்பதால் உம்மைச் சும்மா விடுகிறேன். இல்லாவிட்டால் என்னை அவமதித்துப் பேசும் உம்மை எனது வாளுக்கு இரையாக்கி விட்டிருப்பேன். போகட்டும். உம்மை என் மாமனிடம் சொல்லிக் கவனித்துக்கொள்கிறேன். இதற்கெல்லாம் நீர் பிற்காலத்தில் பதில் சொல்லத்தான் போகிறீர்!” என்று  வேகமாக எழுந்து நடக்கிறான் நரேந்திரன். தன் தந்தையின் அரியணையை, அதுவும் தனக்கு எரிகிறது.  தனது கோபத்தைக் கதவை மீது காட்டி அறைந்து சாத்திவிட்டுச் செல்கிறான்.

இவனால் சோழப் பேரரசுக்கு என்னென்ன தலைவலிகள், இடையூறுகள் பிற்காலத்தில் ஏற்படப் போகின்றவோ என்று மனம் வருந்துகிறான் சிவாச்சாரி.

                                சோழர் பாசறை, வேங்கை நாடு
                      சுபானு, சித்திரை 12 - ஏப்ரல் 25, 1043
சூடு தாங்காமல் மேலாடையால் விசிறிக் கொள்கிறான், இல்லை, விசிறிக் கொள்கிறார் இராஜேந்திரசோழ பிரம்மராயர், சிவசங்கர சிவாச்சாரியார். அனுபத்திமூன்று வயதான அவரை சிவாச்சாரி என்று அழைக்காமல் பிரம்மராயர் என்றே இனி குறிப்பிடலாம்.

எழுபத்திமூன்று வயதாகிவிட்ட சோழச் சக்கரவர்த்தி இராஜேந்திரருக்கு தற்பொழுது போர்க்களத்திற்குச் செல்ல உடல்நிலை இடம் கொடுக்காததால், வேங்கை நாட்டை விஜயாதித்தனின் பிடியிலிருந்து காப்பாற்ற பிரம்மராயரைத் தன் சார்பாக அனுப்பியிருக்கிறார். கட்டாக உடலை வைத்துக்கொண்டிருக்கும் அவரை அறுபத்திமூன்று வயதானாலும் எவரும் ஐம்பத்தைந்து வயதுகூட மதிக்கமாட்டார்கள். போர் என்று வந்தால் இன்னும் அவரது தலைமையை சோழப் படைகள் விரும்பி ஏற்கின்றன.

எனவே, “பிரம்மராயரே! (வங்கத்தை வென்று வங்கமன்னரின் தலையில் கங்கை நீர் நிறைந்த பொற்குடத்தை ஏற்றி வந்ததைச் சிறப்பிக்கும் வகையில் இராஜேந்திரரும் அவரை அப்படித்தான் அழைத்து வருகிறார்) யாரிடமும் இரக்கம் காட்டவேண்டாம். மேலைச் சளுக்கியர்கள் இனி வேங்கை நாட்டைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட அஞ்ச வேண்டும். இலங்கை சென்றிருக்கும் இராஜாதிராஜன் திரும்பி வரும்வரை சமாளித்துக் கொள்ளும். மருத்துவர் எமது கரத்தைக் கட்டிப் போட்டால்தான் உம்முடன் எம்மால் கிளம்பிவர இயலாது போய்விட்டது. நீர் எமக்காக, யாருக்கு வேண்டுமானலும், எந்த ஆணை வேண்டுமானாலும் இடலாம். எமது இலச்சினை மோதிரத்தை எடுத்துச் செல்லும்.  வேங்கை நாட்டைப் பொறுத்தவரை நீர்தான் எமது பிரதிநிதி, உம்மை எதிர்த்துச் செயல்படுவது அரசத் துரோகமாகும். சென்று வரும்” என்று அவரை வேங்கை நாட்டுக்குச் சிறிய படையுடன்தான் அனுப்பி இருக்கிறார் இராஜேந்திரர்.

பருவ மழை மூலம் வெள்ளம் பெருக்கிடும் முன்னரே கோதாவரி ஆற்றைக் கடந்து இராஜமகேந்திரபுரத்தை அடைந்து விடவேண்டும் என்பது பிரம்மராயரின் திட்டம்.  ஆற்றின் வடகரையில் விஜயாதித்தன் தனது படைகளை குவித்திருப்பதையும், அவனுக்குத் துணையாக மேலைச் சளுக்கியன் சோமேஸ்வரன் கிருஷ்ணாவுக்கும், கோதாவரிக்கும் நடுவில் தனது படைகளை நிறுத்தி வைத்திருப்பதையும் அறிந்தால், எதிரிப் படைகளின் எண்ணிக்கையையும், வலிமையையும் தெரிந்து வர அனுப்பியிருந்த ஒற்றர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். 7

இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன் அவா? என்ன நினைத்தாரோ அதுதான் நடந்து வருகிறது.  இராஜராஜ நரேந்திரனால் சோழப் பேரரசுக்குத் தலைவலி மிகுந்ததுதான் மிச்சம்.  அவனால் சோழநாட்டின் வடகிழக்கு எல்லை காக்கப் படுவதற்குப் பதிலாக அவனது நாட்டைக் காக்கச் சோழர்களின் படைகளும், செல்வமும் அழிந்து வருவதைக் கண்கூடாகக் கண்டு உள்ளுக்குள் வருத்தி வருகிறார்.  அவனால் இராஜேந்திர சோழருக்கும் கடந்த இருபத்தி நான்கு ஆண்டுகளாக மனவலிதான் பெருகிவருகிறது என்பதை அறிந்தும் அனுதாபப் படுவதைத் தவிர வேறு எதுவும் அவரால் செய்ய இயலவில்லை.

வேங்கையின் மைந்தனான இராஜேந்திரரைத் தவிர வேறு எவராலும் இத்தனை மனவலியுடன் சோழப் பேரரசின் செல்வாக்கையும், ஆற்றலையும் இந்த அளவுக்குப் பெருக்கி இருக்க இயலாது.  தன் கனவை எத்தனை மன வலிமையுடன் நனவாக்கி இருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது பிரம்மராயிருக்கு இதயம் நெகழ்கிறது. முப்பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் துளிர்த்த அவர்களது நட்புதான் எப்படிப்பட்ட பெரிய ஆலமரமாக  விழுதூன்றித் தழைத்து இருக்கிறது.  என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது பிரம்மராயருக்கு இதயம் நெகிழ்கிறது.  முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன் துளிர்த்த அவர்களது நட்புதான் எப்படிப்பட்டபெரிய ஆலமரமாக விழுதூன்றித் தழைத்து இருக்கிறது என்பதை நினைவுகூர்ந்தால் அவரது நெஞ்சம் விம்முகிறது.  இராஜேந்திரரை நிமிர்ந்து பார்த்துப் பேசவே அனைவரும் அஞ்சும் பொழுது, தன் இதயத்தில் இருப்பதைச் சற்றும் மறைக்காமல் பங்கு கொள்ளவும், அவரை இடித்துரைத்து அறிவுரை கூறவும் சோழநாட்டில் இப்பொழுது தனக்கு மட்டுமே உரிமை அளிக்கப் பட்டிருக்கிறது என்பதை நினைத்தால், அது தனது கருநாதரான கருவூரார் இட்ட பிச்சை என்றுதான் அடக்கம் அடைய வேண்டியிருக்கிறது.

காலடிச் சத்தம் கேட்டுத் திரும்புகிறார் பிரம்மராயர்.

“அய்யா, உடல் சூடு தணிய பசு மோர் கொண்டு வந்திருக்கிறேன்.” என்று பணிவுடன் ஒரு மண் குடுவையை நீட்டுகிறான் அவரது சமையற்காரன் சுப்பன். கடந்த பத்து ஆண்டுகளாக அவர் செல்லுமிடமெல்லாம் சென்று அவரது உணவுத் தேவையை அவன்தான் கவனித்துக் கொள்கிறான்.  அவன் நளனிடம்தான் சமையற்கலை-பயின்று வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொள்கிறார் பிரம்மராயர்  அவனது கைமணம் அப்படி.


குடுவையை வாங்கி அதிலிருக்கும் மோரை அருந்துகிறார் சாதாரண மோரில்கூட எதையோ கலந்து எவ்வளவு மணமுள்ளதாகச் செய்து விடுகிறான் இவன் என்று அவனை மனதிற்குள்ளேயே பாராட்டுகிறார் அவர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 

7.இராஜராஜ  நரேந்திரனால் கோதவரி ஆற்றின் வடகரையில் வேங்கை நாட்டிற்குத் தலைநகராக உருவாக்கப்பட்டது இராஜமகேந்திரபுரம்.  பின்னர் அதுவே ராஜமுந்திரி என்று மறுவி அழைக்கப் பட்டு வருகிறது.  தற்பொழுது இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் பெரிய நகரங்களில் அதுவும் ஒன்று.

No comments:

Post a Comment