Sunday 19 October 2014

சங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -2

சங்க காலத்தில் போரும் அமைதியும் பாகம் -2
ஜவஹர் பிரேமலதா 


அப்புலவர் மன்னனை நேரிடையாகவே கொள்ளை மேவலைஎன்று அவன் செயலை கொள்ளையடிப்பதோடு ஒப்பிட்டுக் கூறுகின்றனர். மக்களுக்கு தீங்கு தரும் செயல்களையெல்லாம் செய்து துன்பம் விளைவிப்பவனை மக்கள் வெறுப்பர். அவன்பால் வெறுப்பு கொண்டு உள்ளம் நொந்து சொல்லும் வன்சொற்கள் மன்னனுக்குப் பெருங்கேடு விளைவிக்கும். எனவே, போர் என்ற பெயரில் அவன் செய்ய நினைப்பது ஊர் கொள்ளையே ஆகும்என்பதை வெளிப்படையாகவே அச்சம் சிறிதுமின்றி துணிந்து கூறுகிறார்.

 பகைமை என்ற பெயரில் போர்த் தொழிலை மேற்கொள்பவர், கொலைஞரினும் கொடியன் ஆவார். கொள்ளையடிப்பவனாலும், கொலை செய்பவனாலும் ஊரே அழிவதில்லை. ஆனால், பகை என்ற பெயரில் மன்னர்கள் நிகழ்த்தும் போரினால் பொருள் அழிவு, நாடு அழிவு, உறவு அழிவு உள்ளிட்ட பல அழிவுகள் நிகழுகின்றன. இதை உணர்ந்துதான் புலவர்கள் போர் நிகழா வண்ணம் தடுக்க, தன்னுயிரையும் பொருட்படுத்தாது மன்னர்களிடம் போரின் விளைவுகளை எடுத்துரைத்துதடுத்து நிறுத்த பாடுபட்டுள்ளனர்.

 சில மன்னர்கள் தன் வலியறியாது, பிற மன்னர்கள் மேல் போர் தொடுக்க முயன்றுள்ளனர். தன்னைவிட வலிமை குறைந்தவர் மேல் படையெடுத்தாலும், தன்னைவிட வலிமை மிகுந்தவனிடம் படையெடுத்தாலும் இறுதியில் இழுக்கே நேரும் என்பதை புலவர்கள் அவர்களிடம் தயங்காமல் எடுத்துரைத்துள்ளனர்.

தன்னொத்த வேந்தரோடு பொருந்தி வாழாமல், தன்னை வியந்து பிற மன்னர்களைப் பகைத்து, அவர்களை எளிதில் வென்று விடலாம் என மண்ணாசை கொண்டு போரிட முயன்ற நன்மாறன் என்னும் மன்னனைக் கண்டு, காரிக்கண்ணனார் உண்மையை உணர்த்திப் போரை நிறுத்துகிறார்.
                         

""வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
கடிமரம் தடிதல் ஓம்பு நின்
நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே"" (புறம்-57)

கல்வியில் வல்லவராக இருப்பவரும், இல்லாதவரும் மன்னர்களிடம் பரிசு பெறுவதற்காக அவனைப் பல பட பாராட்டிப் புகழ்வர். இப்புகழ் மொழிகளில் உண்மையும் இருக்கும். மிகையும் இருக்கும். இவற்றில் எது உண்மை, எது மிகை என்பதை மன்னன் உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் பழியே மிஞ்சும் என்கிறார். சில புலவர்கள் பொருளுக்காக நன்மாறனை மிகவும் வியந்து பாராட்டியதால், செருக்குற்ற நன்மாறன், பக்கத்து நாட்டு மன்னனோடு போரிட முயன்றான். 

ஆனால், அம்மன்னனோ நன்மாறனைப் போல் படைபலமில்லாதவன். எளிதில் வெல்லக்கூடியவன். இத்தகையவன் மீது போர்த் தொடுப்பதால் அவனை எளிதாக வென்று விட முடியும் என நன்மாறன் நினைத்தே போரிட முயற்சிக்கிறான். ஆனால், தனக்கு இணையான வலிமையற்ற அவனை வெல்வதும்  ஒரு வீரமா? இது நன்மாறனுக்கு அழகா? இதுவெல்லாம் ஒரு பெருமையா? எனப் புலவர் காரிக்கண்ணனார் அவன் முகத்திற்கு நேராகவே சென்று கேட்கிறார்.
                         
இப்போரினால் விளைவது என்ன? வலிமையற்ற ஒரு நாட்டின் மீதும் மக்களின் மீதும்  போர்த் தொடுக்க விரும்பினால்,  பகை நாட்டு கழனிகளைக் கவர்ந்து கொள்ளலாம்.பொருட்களைச் சூறையாடலாம்.  எதிரியின் ஊர்களை  எரித்து விடலாம். எதிரிகளாக நினைப்பவர்களை  அழித்து விடலாம். அவ்வூரின் பெருமை மிகுந்த  காவல் மரங்களை, யானைகளைக் கட்டும் கட்டுத் தறிகளாகவும் மாற்றி விடலாம். இவையெல்லாம் நடத்திவிடக் கூடியவைதான். ஆனால், நன்மாறனின் பகைவன் நாட்டில் உள்ள மரங்களோ யானைகளைத் தாங்கும் வலிமை கூட இல்லாதவை. அத்தகைய காவல் மரங்களில் கட்டுவது நன்மாறனின் யானைக்குப் பெருமையைத் தருவது அல்லவே. எனவே, யானைக்கு இழுக்கைத் தரும் அச்செயலைச் செய்யாதே என அறிவுரை கூறுகிறார். இப்போர் யானைக்கே இழுக்கு என்றால் அம்மன்னனுக்கு மட்டும் பெருமை தந்து விடுமா என்ன?  இதன்மூலம், உள்ளதை உள்ளவாரே உரைத்து, இப்போரினால் நன்மாறனுக்கு புகழோபெருமையோ கிடைக்கப் போவதில்லை என்பதால் போரே தேவையற்றது என்று உணர்த்துகிறார். நன்மாறனும் படையெடுப்பை நிறுத்தி விடுகிறான். நாட்டில் அமைதி நிலவுகிறது. அழிவுகள் தவிர்க்கப்படுகின்றன. மனிதம் காக்கப்படுகிறது. ஒரு அறிவுரையைக் கேட்டதால், மன்னன் நன்மாறனும்  வரலாற்றில் நிலைத்த புகழ் பெற்று, இன்று வரை பாராட்டைப் பெற்று வருகிறான். அதுமட்டுமின்றி அதுவரை மாறன் என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவன் புலவர்களால் நன்மாறன் என அழைக்கப்படலானான்.


No comments:

Post a Comment