Thursday 23 October 2014

தமிழ் இனி மெல்ல [3:12] தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [3:11]சென்ற பதிவின் இறுதியில் 
“சிவாச்சாரியாரே! உம் மனதில் இழையோடும் எண்ணங்களை மறைப்பதில் வல்லவர் நீர்! ஏதோ உம்மையும் அறியாமல் என்னிடம் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொண்டீரா, அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகச் சிறிது அதைக் கோடி காட்டினீரா, நானறியேன். இருப்பினும் உமது கேள்விக்கான பதிலைச் சொல்லிவிடுகிறேன். எந்த வேலையைப் பற்றியும் கவலைப் பட்டு மட்டுமே அதை நிறைவேற்ற முடியுமா? ஆகவேதான் நான் எதற்கும் கவலைப் படுவதே கிடையாது. எல்லாவற்றையும் நான் வழிபடும் ஏகாம்பரநாதனிடம் விட்டுவிட்டு எனது சக்திக்கு இயன்றபடி முழுமனதுடன் செய்து விடுகிறேன்.  எனது ஒரே கவலை எனக்குள்ளேயே இருந்து  கொண்டு எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் பசித் தீக்கு எப்பொழுது ஆகுதி செய்வோம் என்பது தான்!” என்று அட்டகாசமாகச்சி ரிக்கிறார்.

அவரது சிரிப்பில் கலந்து கொண்டு அவருடன் நடக்கிறான் சிவாச்சாரி. விடுதியில் பசியாறிவிட்டுப் படுத்ததும் அவனது மனம் தனக்கும் இராஜேந்திரனுக்கும்  மூன்று திங்களுக்கு முன்னர் இடையில் நடந்த விவாதத்தை அசைப்போட்டுப் பார்க்கிறது…

….சேரநாட்டுக்கு ஆளவந்தானைப் படையெடுத்துச் செல்லும்படி அனுப்பிவிட்டு, அவனையும் இராஜாதிராஜனையும் இருத்திக் கொண்டுவிட்டுப் பேச ஆரம்பித்தான் இராஜேந்திரன்.

“சிவாச்சாரியாரே! நான் முன்பே உம்மிடம் சொல்லியிருக்கிறேன். எனது முப்பபாட் டனாருக்கும் முப்பாட்டனார் விஜயாலய சோழர் அடிக்கல் நாட்டிய சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு எனது தந்தையார் விரிவு படுத்த மிகப் பெரிய அடித்தளம் இட்டார். அதற்கு மேல் ஒரு பெரிய மாளிகையைக் கட்டவேண்டும்.  இல்லாது போனால், இந்த இராஜேந்திரன் ஒரு சாதாரணமான அரசனாகத்தான் ஆகிவிடுவான். வரலாறு என் முப்பாட்டனாரையும், என் தந்தையாரையும் போற்றும் அளவுக்கு என்னைப் போற்றாது.  அவர்களுக்குக் கிடைக்கப் போகும் மரபுப் பெருமை எனக்குக் கிட்டாது. எனது. வழித்தோன்றலான இராஜாதிராஜனுக்கும், அவனது சந்ததியாருக்கும் ஒரு முன்மாதிரியாக நான் விளங்காது போய்விடுவேன்.  எனவேதான் நான் கண்டு கொண்டிருக்கும் பெரிய கனவை நனவாக்க விரும்புகிறேன். எந்தத் தமிழ் மன்னனும் செய்யாத அளவுக்குத்  தமிழ்ப் பேரரசை பெரிதாக்க விரும்புகிறேன்.

“ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் என்று பாண்டியனையும், இமயவரம்பன் என்று நெடுஞ்சேரலாதனையும், மதுரையைத் தீயிட்டுக் கொளுத்திய பத்தினித் தெய்வத்திற்கு சிலையமைக்க இமயத்திலிருந்து வடபுல மன்னர்கள் தலையில் கல்லேற்றி வந்த என்று சேரன் செங்குட்டுவனையும் - காவியங்கள் உயர்த்திப் பாடுகின்றன.  இப்படிப் பாண்டியனும், சேரர்களும் புகழ்ந்து பாடப்படும்போது, எந்தச் சோழன் அவர்களுக்கு இணையாகப் பாடப் படுகிறான்? காவிரிக்குக் கரையமைத்த சோழரான கரிகால் பெருவளத்தான் கூட தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் தானே பெரும்பெயர் பெற்றார்! இப் பரந்த பாரத பூமியில் இமயம் வரை சென்று புகழ் பெறவில்லையே! அதைப் போக்க விரும்புகிறேன் நான். சிவபெருமான் தலையில் இருந்து பகீரதனால் பூவுலகுக்குக் கொண்டு வரப்பட்ட கங்கையின் நீரைக் கொணர்ந்து, நான் புதியதாக அமைத்து வரும் பெருவுடையார் கோவிலுக்குக் குடமுழுக்கைச் செய்வித்து, சோழர்களுக்கு வையகத்தில் பேரையும் புகழையும் ஈட்ட ஆர்வமான இருக்கிறேன். என் தந்தையாருக்கும், கதிரவன் வழிவந்த எனது சோழர் பரம்பரைக்கும்5 செய்யக்கூடிய சிறந்த பணி வேறொன்றும் இல்லை.” பெருமிதத்துடன் சொல்லி முடித்தான் இராஜேந்திரன்.
அவனது கண்கள் பளிச்சிட்டன. அவனது மனக்கண் முன்பு அவனது திட்டம் நிறைவேறுவதை அவனால் காண முடிந்தது.

அப்படியே பேச்சிழந்து நின்றுவிட்டான் சிவாச்சாரி. அவனது மனம் இதற்கு எவ்வளவு செலவாகும், எத்தனை வீரர்கள் உயிரிழப்பார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தது. சோழ நாட்டின் செல்வம்  இந்தச் செயலுக்காக எவ்வளவு விரயமாகும், அதனால் இராஜராஜரின் தமிழ்த் திருப்பணி எப்படித் தடைப்படும் என்று தான் அவனுக்குத் தோன்றியது.

தமிழ் இனி மெல்ல [3:12] தொடர்கிறது 

                                                                   
அரிசோனா மகாதேவன்
இராஜாதிராஜன் துள்ளி எழுந்தான்.  “ஆணையிடுங்கள் தந்தையே! எப்பொழுது என்று சொல்லுங்கள். எனது தினவெடுத்த தோள்களால் உங்கள் கனவை நனவாக்குகிறேன்.  எதிர்ப்பவர்களை எனது யானையில் காலில் நசுக்கி எமனுலகுக்கு விருந்தாக அனுப்புகிறேன்.” அவனது குரலில் உற்சாகம் கரை புரண்டது.

இராஜேந்திரன் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக இருக்கும் சிவாச்சாரியனை உற்று நோக்கினான்.

“சிவாச்சாரியாரே! நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேள்வி பிறந்தது அவனிடமிருந்து.

“தங்கள் சித்தம் எனது பாக்கியம்.” என்று கேள்வி பிறந்தது அவனிடமிருந்து.

“தங்கள் சித்தம் எனது பாக்கியம்.” என்று பணிவுடன் பதில் அளித்தான் சிவாச்சாரி.

“நீர் எனது ஆணைக்குக் கட்டுப் படுவீர் என்று நானறிவேன். நீர் என்ன நினைக்கிறீர் என்பதை ஒளிக்காமல் எமக்குச் சொல்லும். இது எமது ஆணை!” இராஜேந்திரனின் குரலில் சிறிது உஷ்ணம் இருப்பதை சிவாச்சாரி உணர்ந்து கொண்டான்.

“கோப்பரகேசரியாரே! நான் தங்களது ஓலைநாயகம், மற்றும் தமிழ்த் திருப்பணி ஆலோசகன். தங்களுக்குக் கருவூராரால் பணியாளனாக அளிக்கப்பட்டவன். அவ்வளவே! தங்களுக்கு ஆலோசனை சொல்லும் அமைச்சனோ, படைகளை நடத்திச் செல்லும் தண்டநாயகனோ அல்ல. எனவே, என்னை இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் நான் என்ன பதில் சொல்ல இயலும்! என்னைத் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கலாமா!” என்று இறைஞ்சும் குரலில் இராஜேந்திரன் கேள்வியிலிருந்து தப்பிக்கப் பார்த்தான் சிவாச்சாரி.

இராஜேநிதிரனோ அவனை விடுவதாக இல்லை.  “உமது பேச்சிலும் நியாயம் இருக்கிறது. எமக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமென்றால் உம்மை அந்த நிலையில் இருத்த வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் உமது உள்ளத்திலிருந்து பதில் வராது. எனவே, எனவே…” தனது நெற்றியில் விரல்களால் சில கணங்கள் தாளமிடுகிறான்.  அவனது முகம் உடனே மலர்ந்தது.

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள். உமது குறை, நீர் தண்டநாயகரோ அல்லது அமைச்சரோ இல்லை என்பது தானே! அந்த இரண்டு பதவியையும் உமக்குத் தந்துவிடுகிறோம். நீர் இனிமேல் எமது படைத்தலைவரில் ஒருவராவீர், அமைச்சரும் ஆவீர். உம்மை எமது பிரம்மராயராக நியமிக்கிறோம்!

“இராஜாதிராஜா, நீ இதற்குச் சாட்சி.  இவர் ஓலைநாயகமாக இருப்பதால் தன்னைத்தானே பிரம்மராயராக நியமித்து செப்பேட்டில் பதிவு செய்ய இயலாது. அதனால் உனக்கு அந்த ஓலைநாயகப் பதவியைத் தற்காலிகமாக அளிக்கிறோம்.  செப்பேட்டில் இவரை இராஜேந்திரசோழப் பிரம்மராயராக6 நியமித்தோம் என்று பதிவு செய்து விடுவாயாக!“ என்று முழங்கினான்.

செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டான் சிவாச்சாரி.
“ம் இனி தயக்கமில்லாமல் ஒரு அமைச்சனாகவும், தண்டநாயகனாகவும் எமக்குப் பதில் சொல்வீராக!” இராஜேந்திரனின் சொல் சிவாச்சாரியனைக் கிடுக்கிப் பிடியில் இறுக்கியது.

“சொல்கிறேன் கோப்பரகேசரியாரே, முதலில் ஒரு அமைச்சனாகப் பதில் சொல்கிறேன். பாதித் தொண்டை மண்டலமும், சோழ நாடும், பாதி பாண்டிய நாடும் உள்ளடங்கிய சோழ நாட்டின் செல்வாக்கையும் ஆற்றலையும் தமிழ்நாடு மட்டுமின்றி, கருநாட்டிலும், ஆந்திரத்திலும், இலங்கையில் பொலனருவை வரையும் விரிவுபடுத்தினார். தங்கள் தந்தையார். தாங்களோ இலங்கை முழுவதிலும் புலிக்கொடியைப் பறக்கச் செய்ததோடு மட்டுமில்லாமல், நக்காவரம், இலட்சத் தீவுகள் இவற்றிலும் சோழநாட்டின் செல்வாக்கைப் பரப்பியிருக்கிறீர்கள்.

“இச் செல்வாக்கை நிலைநிறுத்துவதுதான் தங்களது முதலான நோக்கமாக இருக்க வேண்டும். புதுத் தலைநகரை நிர்மாணிக்கும் இச்சமயத்தில் வடபாரதத்தில் படையெடுத்துச் செல்வதும், நம்முடைய நாட்டுச் செல்வத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், சோழவீரர்களுக்கு உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தும்.  குடமுழக்குக்கு கங்கை நீர் வேண்டுமென்றால் காசி அரசருக்கு பரிசுகளை அனுப்பித் திரிவேணி சங்கமத்திலிருந்தே நிறைய கங்கை நீரைக் கொண்டுவரலாம். காசிக்குச் சென்று திரும்பிய அந்தணர்கள் பலர் சோணாட்டில் இருக்கிறார்கள். அவர்களைத் தக்க துணையுடன் தங்கள் சார்பாக அனுப்பினால், இதை மிகக் குறைந்த செலவில் சாதித்துவிடலாம்.

“இப்பொழுது நமது கவனத்தை ஈழத்தின் பக்கம் அதிகமாகச் செலுத்த வேண்டும். நமது நாட்டைத் தாக்கித் தொல்லை கொடுக்க நினைப்பவர்களுக்கு அடை அடைக்கலமளிக்கும் இடமாக இருந்து வருகிறது. மகிந்தனின் மகன்6
து.
கசாபன் இன்னும் அங்கு மலைகளில் ஒளிந்து வாழ்ந்து வருகிறான். அவனைப் பிடித்து, அழித்து, தமிழை அங்கு பரப்பி, தமிழர் ஆட்சி நிலைக்கச் செய்ய வேண்டும். தமிழ் அங்கு பேசப்படாதவரை அங்கிருக்கும் தமிழர்களுக்கு என்றும் உயிரின்மீது அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். சேரநாட்டிற்குச் செல்லவிருக்கும் தங்கள் மகனுக்குத் துணையாக நான் செல்ல விரும்புகிறேன்.  பாண்டி நாட்டிற்குச் செல்லவிருக்கும் இளவரசருக்குத் துணையாக நிற்கப் படைவேண்டும்.

“கருநாட்டின் வட எல்லையான துங்கபத்திரையும், அது கலக்கும் கிருஷ்ணா நதியும் நமக்கு இயற்கை அரணாக நிற்கின்றன. ஆனால் வேங்கை நாடோ கிருஷ்ணலவுக்கும் கோதாவரிக்கும் நடுவில் மட்டுமல்லாமல், அதற்கு வடக்கிலும் எல்லை கொண்டு இருக்கிறது.  கிருஷ்ணாவிலும் கோதாவரியிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது நாம் அதைக் கடந்து செல்ல இயலாது என்று உணர்ந்து மேலைச் சளுக்கியர் வேங்கை நாட்டின்மீது படையெடுக்காமல் இருக்க நமது படைகளை அங்கு நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் குந்தவி தேவியாரின் கணவர் விமலாதித்தர் இறந்ததால் தற்பொழுது வேங்கைநாட்டின் நிலை மோசமாகி வருகிறது. மேலைச் சளுக்கியர்கள் விமலாதித்தரின் இரண்டாம் மனைவியின் மகன் விஜயாதித்தனுடன் சேர்ந்து கொண்டு அங்கு அரசுரிமைப் பிரச்சினையைக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். எனவே…”

அவனைக் கையமர்த்தி நிறுத்திய இராஜேந்திரன், “இதையெல்லாம் நாமும் யோசித்துத்தான் பார்த்தோம். அதனால்தான் உம்மை வேங்கை நாட்டிற்கு அனுப்பத் தீர்மானித்திருக்கிறோம்.  இராஜேந்திர சோழபுரத்தில் தண்டூண்டியிருக்கும் நமது படைகளுடன் வடமண்டலத் தண்டநாயகருடன் சேர்ந்து வெங்கிக்குப் படைகளை நடத்திச் சென்று வேங்கை நாட்டு அரியணையை நமது கைமீறாமல் பார்த்துக்கொள்வீராக. யாருக்கும், எதற்காகவும், பணிவு காட்ட வேண்டாம். நாம் உமக்குத் தகவல் அனுப்பும் வரை அங்கு இராஜராஜ நரேந்திரனைக் கவனித்துக்கொள்வீராக! நாம் உம்மை இங்கிருந்து அனுப்பும்வரை பெருவுடையாரின் கற்றளிப் பணியை விரைவு படுத்தத் திட்டம் தீட்டிச் செயல் படுத்துவீராக!” என்று அழுத்தம் திருத்தமாகத் தன் ஆணைகளைப் பிறப்பித்தான்.

அதிர்ந்து போனான் சிவாச்சாரி. தனக்கு இருக்கும் இரண்டு பதவிகள் போதாது என்று மேலும் இரண்டு முக்கியமான பதவிகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வேங்கை நாட்டின் அரியணைக் காத்துவரும்படி இராஜேந்திரன் தன்னை அங்கு ஏன் அனுப்புகிறான் என்று புரியாமல் தவித்தான். அங்கு செல்ல இராஜாதிராஜனையோ, அல்லது இரண்டாவது மகன் இராஜேந்திர தேவனையோ அனுப்பாமல் தன்னை ஏன் அனுப்புகிறான் என்றும் குழம்பினான். தன் மனதில் பட்டதைச் சொன்னதைக் கேட்டுக்கொண்ட போதிலும், அது பற்றி என்ன முடிவு எடுத்தான் என்று தெரியவில்லையே?

“ தங்கள் ஆணையைச் சிரமேற்கொள்வேன் கோப்பரகேசரியாரே! என் மனதில் இருப்பதைக் கேட்டறிந்தீர்கள். அது பற்றித் தங்கள் கருத்தைச்..” என்றவனை இடைமறித்து, “சிவாச்…இல்லை, பிரம்மராயரே! அமைச்சராக, தண்டநாயகராக எமக்குக் கருத்தைச் சொல்வதுடன் உமது கடமை முடிந்துவிட்டது. முடிவெடுப்பது எமது உரிமை. அதற்கு காரணத்தை நாம் உமக்குச் சொல்ல வண்டியதில்லை.” என்று வெடுக்கென்று பதில் சொன்னான் இராஜேந்திரன். அவன் குரலில் தென்படுவது குறும்பா?

“அரசராகப் பதில் சொல்ல வேண்டாம். நண்பராக…” என்று கேட்கிறான் சிவாச்சாரி. இவர்களின் உரையாடலின் முழுப் பொருளை அறியாவிட்டாலும் தனது தந்தை மனதில் ஏதோ திட்டத்தைத் தீட்டிவிட்டார், அதைப் பற்றி சிவாச்சாரியாரின் கருத்தை அறிந்து கொள்ள மட்டுமே விரும்புகிறார் என்றும், திட்டத்தைத் தகுந்த காலம் வரும்வரை இரகசியமாகவே வைத்திருக்க முடிவும் செய்துவிட்டார் என்றும் நினைத்தான் இராஜாதிராஜன்.

“நான் நண்பனாகத்தான் உமது கருத்தைத் கேட்டேன். பிரம்மாதிராயர் பதவியைப் பெறாமல் வாயைத் திறக்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துவிட்டீரே! இப்பொழுது மட்டும்…” என்று சிரித்த இராஜேந்திரன், “சொல்கிறேன். நீர் இன்னும் என் தந்தையார் உயிருடன் இருப்பதாகவே நினைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர். உம்மை தந்தையாரின் நிழலிலிருந்து எனது நிழவுக்கு மாற்றத்தான் செயல்பட்டு வருகிறேன்.  ஆயினும் அது மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது.

“நண்பனால் மட்டுமே அரசனுக்கும் மாறுபட்ட கருத்தைச் சொல்ல முடியும். நீர் என்றும் எனது நண்பர் என்பதால்தான் கடினமான அரசு விவகாரத்தில் உம்மிடம் அடிக்கடி மாறுபட்ட கருத்துக்களைக் கேட்கவும் விரும்புகிறேன்.  உமது கருத்திற்கு மிகவும் மதிப்புக் கொடுத்தாலும், அரசனாக இருப்பதால் உமது எல்லாக் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையும் இருக்கும். பல்வேறு காரணங்களால் உமக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம் என்ற முடிவையும் எடுக்க நேரிடுகிறது.

“உமது நெஞ்சில் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டு இருக்கிறது என்றும் எனக்கும் தெரிகிறது.  அதை தகுந்த சமயத்தில் அறிந்து கொண்டு அதற்கு அஞ்சனமும் இடுவேன். இப்போது அதற்கு இயலாத சூழ்நிலை என்று மட்டும் அறிந்துகொள்வீராக. உம்மிடம் இராஜாதிராஜன் அறிவுரையும், ஆலோசனையும் கேட்டுக் கொள்ளும் நிலைமையில் இருப்பதால்தான், அவனெதிரில் இந்த உரையாடலை நடத்தினேன். சேரநாட்டுத் தாக்குதலுக்காக ஆளவந்தானுக்கு நீர் தகுந்த ஆலோசனை சொல்லி அனுப்புவீராக. நான் இராஜாதிராஜனுடன் சில தனிப்பட்ட விஷயங்களைப் பேச வேண்டி இருக்கிறது.” என்று அனுப்பி விட்டான்…

உறக்கம் மெல்ல சிவாச்சாரியனை, இல்லை, இராஜேந்திர சோழ பிரம்மராயனைத் தழுவிக்கொள்கிறது.
                                                                           *** *** ***
                                    தம்பிரான் இல்லு, திருசிவப்பேரூர்
                         காளயுக்தி, மாசி 23 - மார்ச் 8, 1018

சீப்புச் சீப்பாகத் தொங்கும வாழைக் குலையைப் பார்க்கிறாள் நிலவுமொழி. ஒருவிதத்தில் பார்த்தால் அந்த வாழைமரமும் தானும் ஒன்றுதான் என்று அவனுக்குத் தோன்றுகிறது.  அவளுக்கு அடிக்கடி அப்படிப்பட்ட உணர்வு தோன்றுகிறது. அது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை. வயிற்றில் குழந்தை உதைப்பது அவளுக்குத் தெரிகிறது. தாய்மையை உணர்த்தும் அந்த நிகழ்ச்சியால் பெருமிதம் கொள்கிறாள் அவள்.

அவளருகில் வருகிறாள் சந்திரை. அக்கா!” இப்பொழுது அவள் நிலவுமொழியை அக்கா என்றுதான் அழைக்கிறாள. “எந்தா வலிய சிந்தனை?”
“ஒன்றுமில்லை சந்திரை. அந்த வாழை மரத்தைப் பார்த்தாயா?”

“அதைத்தான் பிரதி திவசமும் நோக்குன்னதானு. எந்தா விசேஷம்?" என்று கேட்கிறாள்.

“அதைப் பார்த்தால் சில சமயம் அந்த வாழை மரமாக நான் ஆகிவிட்டமாதிரி இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை.” என்று பெருமூச்செறிகிறாள் நிலவுமொழி.

“எனிக்கும் தெரியல்லா அக்கா. அம்மையை விளிச்சுக் கேட்கும். அம்மை, அம்மை! இவிட கொறச்சு வரும்!” என்று அங்கு தூணில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கும் தனது தாய் இந்துமதித் தம்பிராட்டியை உரக்க அழைக்கிறாள் சந்திரை.

கண்களைத் திறக்காமலேயே, “எந்தா சேதி மகளே! எனிக்கு களைப்பா இருக்கு.” என்று பதில் சொல்கிறாள் தம்பிராட்டி.

“அம்மை, நிலா அக்கா தான் வாழை மரமா ஆயிட்டதா சொல்லுன்னது. எனிக்கு புரியல்லா. நிங்ஙளுக்கு மனசில வந்தோ?” என்று கேட்கிறாள். அவள் சொல்வது தனக்குப் புரியாததால் அலுப்புடன் ஏதோ சொல்லிக்கொண்டு மெல்ல எழுந்து வருகிறாள் தம்பிராட்டி.

“என்னம்மா நிலா? எந்தா சேதி? எனிக்கு ஒண்ணும் மனசில ஆயி ல்லா.” என்று பரிவுடன் அவளைக் கேட்கிறாள்.

அவள் அருகில் வந்து நின்றதை உணர்ந்த நிலவுமொழி திடுக்கிடுகிறாள். சந்திரை கூப்பிட்டு தம்பிராட்டி தன்னருகில் வந்து நின்றது கூட தெரியாதபடி ஏதோ சிந்தனையில் முழுகியிருக்கும் அவர்ள அழைத்ததாகச் சொல்லவும், அவளுக்கு வெட்கமாகப் போய்விடுகிறது. மெல்லத் தனது உணர்வை தம்பிராட்டிக்கு விளக்குகிறாள் அவள்.

அவளிடம், “எந்த வாழை மரமானு?” என்று கேட்கிறாள். ஏனென்றால் அங்கு பத்துப் பதினைந்து வாழை மரங்கள் நின்று கொண்டிருக்கின்றன.

குலை தள்ளியிருக்கும் வாழைமரத்தைச் சுட்டிக் காட்டுகிறாள் நிலவுமொழி. அதைக் கண்ணுற்றதும் தம்பிராட்டியின் புருவங்கள் சுருங்குகின்றன. நெற்றிக் கோடுகள் ஏறி இறங்குகின்றன. சில கணங்கள் அமைதியாக இருந்துவிட்டு, “அது ஒண்ணும் இல்லா. நீ இப்போழ் ஒரு சிசுவை வயிற்றில் சுமக்குண்ணதானு. அது காரணம், குலையுடன் உள்ள வாழை மரத்தை நோக்கினப்போழ் ஆ மரமும் தானும் ஒண்ணுனு நீ நினைக்கின்னதானு. கொஞ்சம் இவிட இரு. ஞான் இதோ வரும்.” என்று விடுவிடென்று சென்று விடுகிறாள். அவள் அப்படி அவசரமாகச் சென்றதற்குக் காரணம் புரியாமல் குழம்புகின்றனர். இருவரும்.
வேகமாக இல்லின் வாயிலை அடைந்த தம்பிராட்டி, “எடோ, இவிட வா! என்று அங்கு வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரனை அழைக்கிறாள்.

உடனே தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, “எந்தா தம்புராட்டி?” என்று வினவியபடி அவளருகே வருகிறான் தோட்டக்காரன். அவனிடம் தணிந்த குரலில் பரப்பரப்புடன் ஏதோ கூறுகிறாள் தம்பிராட்டி. தலையைப் பலமாக ஆட்டுகிறான் தோட்டக்காரன்.

"இந்தா காசு. சீக்ரம் தம்புரானைக் கூட்டிக்கிட்டு, வடக்குநாதன் கோவிலுக்குப் போயி நம்பூதரிமாருகிட்டே விஷயத்தைப் பறைஞ்ஞு , பரிகாரம் கேட்டு வந்துக்கோ. போய்க்கோ, போய்க்கோ!" என்று விரட்டுகிறாள். ஓட்டமும் நடையுமாக இல்லைவிட்டு விரைகிறான் தோட்டக்காரன். பெருமூச்சு விட்டபடி அங்கிருந்த வேப்ப மரத்து நிழலில் அமர்கிறாள் தம்பிராட்டி.  மனதிற்குள், “வடக்குநாதா, நீதான் ஆ பெண்குட்டியை ரட்சிக்கணும். நல்லபடி சிசு பிறக்கணும் . ஆ பெண்குட்டி தீர்க்காயுசா இருக்கணும்.” என்று வேண்டிக் கொள்கிறாள்.
குதிரைக் குளம்பொலிகள் அருகில் வருவது கேட்கிறது.

“இதெந்தா! இவிட ஆராணும் குதிரையில் வருன்னது?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டு கைகளை ஊன்றி மெதுவாக எழுந்திருக்கிறாள் தம்பிராட்டி.  அவள் எழுவதற்குள்ளே பத்துப் பதினைந்து குதிரைகள் அவள் இல்லின் வாயிலில் வந்து நிற்கின்றன.

ஒரு பழுப்புக் குதிரையிலிருந்து தாடி மீசையுடன இருக்கும் ஒருவன் கீழே இறங்குகிறான். அவனுடைய குதிரைக்கு அருகில் இருக்கும் குதிரையில் அமர்ந்திருப்பது ஒரு சோழ அரசன் என்று புரிந்து கொள்கிறான் தம்பிராட்டி - காரணம், அவனது மணிமுடி, சோழர்களுக்குரிய உடைவாள், அரசர்களுக்குரிய கம்பீரம். மற்றொரு குதிரையில் புலிக் கொடியைப் பிடித்தவாறு விறைப்பாக அமர்ந்து கொண்டிருக்கிறான் ஒரு சோழ வீரன். இன்னொரு வீரன் அவளது தோட்டக்காரனை நெட்டித் தள்ளியபடி அங்கு வருகிறான். மற்றுமொரு வீரனுடன் சோமசுந்தரத் தம்பிரானும் வருகிறார். அவருடைய ஆள்காரர்களை கயிற்றால் கட்டி இழுத்து வருகிறார்கள் சில வீரர்கள்.
தம்பிராட்டிக்கு வயிற்றைப் பிசைகிறது. இதற்குள் இல்லிலிருந்து வெளிவர முற்படுகின்றனர் பெண்பிள்ளைகள். அவர்களைக் கண்களாலும், தலையசைவாலும் உள்ளே போகச் சொல்லி சைகை செய்கிறாள் தம்பிராட்டி. உடனே அனைவரும் உள்ளே செல்கின்றனர். ஆனால் புலிக்கொடியைக் கண்டதும் நிலவுமொழி சந்திரையின் கையைப் பிடித்துக்கொண்டு மெல்ல குதிரைவீர்ர்களை நோக்கி நடக்கிறாள்.

நிலவுமொழியைக் கண்டதும் தாடிமீசையுடன் இருக்கும் வீரனின் முகம் மலர்கிறது. “நிலா! நீ நலமாக இருக்கிறாயா?” என்றபடி வருகிறான்.  அவனைக் காடவன் என்று இனம் கண்டுகொண்ட நிலவுமொழி மகிழ்ச்சியுடனம அவனருகில் சென்று விம்முகிறாள்.

“இப்படி இளைத்துப் போய்விட்டீர்களே!” என்றவள் தொடர்ந்து விம்மி விம்மி அழுகிறாள். தம்பிராட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. காடவன் எப்படி இங்கு சோழ அரசர் ஒருவருடன் வந்திருக்கிறான்‘. சோழவீரர்களைப் பார்த்தால் போரிட்டு வந்திருப்பது போலத் தோன்றுகிறதே என்று கலக்கமுறுகிறாள்.  அங்கு காடவன் இருப்பதும், தனது தமையன் முகத்தில் கலவரம் இல்லாமல் இருப்பதும் சிறிது நிம்மதியையும் தோற்றுவிக்கிறது.

“இந்துமதி, இது சோழச் சக்கரவர்த்தி ராஜேந்திரதேவரோட மோன் மனுகுலசேரியானு. ஈ சக்ரவர்த்தி மகன் நம்மட இல்லுக்கு விஜயம் தந்தது நம்மட ஜன்ம பாக்யமானு. நமஸ்காரம் செய்துக்கோ!” என்று உரத்த குரலில் வந்திருப்பது யார் என்று கோடி காட்டுகிறார்.

உடனே “வரணும் ராஜாமாருங்க சோமசுந்தரத் தம்பிரான் இல்லுக்கு வரணும். ஸூஸ்வாகதம். இவிட நிங்ஙள் தாமசிச்சு பசியாறணும். வரும், வரும்!” என்று பற்கள் எல்லாம் தெரிய சிரிப்புடன் வரவேற்கிறாள் தம்பிராட்டி.

காடவன் குதிரையில் அமர்ந்திருக்கும் ஆளவந்தானைப் பார்த்துத் தலையசைக்கிறான். லாவகமாகக் குதிரையிலிருந்து இறங்குகிறான் ஆளவந்தான். அவன் காடவனைவிட நான்கு அங்குலம் உயரமாக இருப்பதும், தலையில் மகுடம் அணிந்திருப்பதும், அவனை மிகமிக உயரமாகக் காட்டுகிறது. அவன் இறங்கியதும், அவனது குதிரை கனைக்கிறது. அதை இதமாகத் தட்டிக் கொடுத்துவிட்டு மற்ற வீரர்களைப் பார்த்துக் கண்ணசைக்கிறான்.

அனைவரும் தத்தம் குதிரையிலிருந்து கீழே இறங்குகிறார்கள்.

சோமசுந்தரத் தம்பிரான் குழைந்து குழைந்து ஆளவந்தானை வரவேற்கிறார். வாயிலைத் தாண்டி முற்றத்திற்குள் நுழைகிறார்கள் அனைவரும்.  இதுவரை சேரநாட்டுப் பெரிய இல்களைக் கண்டிராத ஆளவந்தான் தன் கண்களால் அந்த வீட்டை அளவிடுகிறான்.  வீட்டிலிருக்கும் அத்தனை பெண்களும் அவன் கண்ணில் படாது - மறைந்து கொள்கின்றனர். அவன் கண்ணில் படும் மூன்று பெண்கள் தம்பிராட்டி, நிலவுமொழி, மற்றும் சந்திரை மட்டும்தான்.

“நிங்ஙள் இருக்காம்!” என்று மனையைப் பணிவுடன் சுட்டிக் காட்டுகிறாள் தம்பிராட்டி. இல்லுக்கு வந்ததிலிருந்து சோமசுந்தரத் தம்பிரான் பேசவே இல்லையே, தம்பிராட்டி பேசிக்கொண்டிருக்கிறாளே என்று நினைத்தவாறே மனையில் அமர்ந்துகொள்கிறான் ஆளவந்தான்.

கண்களாலேயே என்ன நடக்கிறது என்று காடவனை வினாவுகிறாள் நிலவுமொழி. சற்றுப் பொறுக்குமாறு திரும்பக் கண்களினாலேயே பதில் சொல்கிறான் காடவன். அனைவருக்கும் வெள்ளிச் செம்பில் இளநீர் கொடுக்கப் படுகிறது.

“எங்களுடன் வந்திருக்கும் ஆயிரம் வீரர்களுக்கு உணவு வேண்டும்!” என்று ஆரம்பிக்கிறான் ஆளவந்தான்.[வளரும்]
-----------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு 
6நரக்கன் கிருஷ்ணன் ராமன் என்ற அந்தணரை இராஜேந்திர சோழன் தனது தலைமைப் படைத்தலைவராக நியமித்து இராஜேந்திர சோழ பிரம்மராயன் என்ற பட்டத்தை அளித்தான் என்று சரித்திரம் கூறுகிறது 

No comments:

Post a Comment