Saturday 11 October 2014

பாகவத லக்ஷணம்

               பாகவத லக்ஷணம்

 பாகவதம் எழுதிறத்தெனவென்று புராணங்களிற் கூறப்பட்டிருக்கின்றன. அவை இதிஹாசம், சம்மிதை, உபசம்மிதை, விஷ்ணுரகசியம், விஷ்ணுயாமளம், கௌதமசம்மிதை என்னும் ஏழினின்றும் போந்தனவாம்.

          அவற்றுள் முதல் இதிஹாஸ பாகவதம் 18000 சுலோகங்களாக வியாச மகரிஷியாற் செய்யப்பட்டது. அதில் சுருதி கீதை முதலிய 12 கீதைகளும், எம்பெருமான் திருவவதாரங்களில் விஸ்தாரமாக நான்கு திருவவதாரங்களின் சரிதங்களும் அடங்கியுள்ளன. இப்பாகவதம் சூர்ணிகைகளாலும், விருத்தங்களாலும், பத்தியங்களாலும், வாக்கியங்களாலும், தண்டகங்களாலும் நிறைந்த 200 அத்தியாயங்களாகப் பிரிந்த 12 ஸ்கந்தங்களை உடையது. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும், மத்தியிலும் பெரும்பாலும் அத்தியாய முடிவிலும் பகவத் ஸ்துதிகளுண்டு. நான்கு அரிபக்தர்கள் கதை இதில் விரிவாகச் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்கு வக்தா – சுக முனீந்திரர். சுரோதா – பரிக்ஷித்துராஜன். "புலவர் திலகராகிய ஆரியப் புலவரால் 4970 திருவிருத்தங்களாகத் தமிழில் மொழிபெயர்த்தருளப் பெற்றது இப்பாகவதமேயாம்"

         2. புராண பாகவதம் 36000 சுலோகங்களுடையது. இதுவும் வியாச பகவானாற் செய்யப் பட்டதே. இதற்கு மகா பாகவதம் என்று பெயர். இதில் 25 கீதைகளடக்கம். எம்பெருமான் திருவவதாரங்களில் ஆறு திருவவதாரங்களின் சரித்திரங்கள் விஸ்தாரமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பகவத்ஸ்துதி உண்டு. பெரும்பாலும் அநுஷ்டிப்பு சுலோகங்களாலும் பிறவற்றாலமைந்த அறுநூறு அத்தியாயங்களை உடையது. ஸ்கந்தம் என்னும் பகுப்பு இதில் இல்லை. தசாவதாரங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. இதற்கு வக்தா நாரத பகவான். சுரோதா உருக்குமணி பிராட்டியார். "இதுவே அட்டதசமகா புராணங்களுள் ஒன்றாகிய பாகவதம். இதனைச் சுமார் 350 வருஷங்களுக்கு முன் நெல்லிநகர் அருளாளதாசரென்னும் மதுரகவி வரதராஜ ஐயங்கார் 9000 பாடல்களாகத் தமிழில் மொழி பெயர்த்தருளினார்."

         3. சம்மிதா பாகவதம் பத்தியங்களாலும் , அநுஷ்டிப்பு சுலோகங்களாலும் நிறைந்த 50000 கிரந்தமுடையது. இது ஞான பூரிதமாயுள்ள 30 கீதைகளையும் 20 திருவவதாரங்களின் சரித்திரங்களையும், விசேஷமாய் 22 திருவவதாரங்களின் கதைகளையுமுடையதாய், வைராக்ய ரசமே நிறைந்த 1100 அத்தியாயங்களாய் விரிந்த 18 காண்டங்களாகப் பகுக்கப்பட்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் திவ்யமான பகவத் ஸ்துதிகளுண்டு. இதற்கு வக்தா வைசம்பாயன முனிவர். சுரோதா – ஜனமேஜயன்.

          4. உபசம்மிதா பாகவதம் பலவகை விருத்தங்களாலாகிய 7000 சுலோகங்கள் நிறைந்த 2000 அத்தியாயங்கள் அடங்கிய நூறு பரிச்சேதங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 32 கீதைகளும், 100 பாகவதர்கள் சரித்திரமும், மகாத்மாவாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய 32 திருவவதாரங்களின் சரித்திரங்களும் சொல்லப் பட்டிருக்கின்றன. பஞ்சபாதகங்களையும் நாசஞ்செய்யத்தக்க எம்பெருமான் ஸ்தோத்திரங்களும் அனந்தமுண்டு. இதற்கு வக்தா அகஸ்திய மகரிஷி. சுரோதா—சுதர்சனர்.

        5. விஷ்ணு ரகசியபாகவதம் – தண்டகங்கள் இடையிடையே கலந்த இலட்சம் சுலோகமுடையது. இது ஆயிரம் அங்கங்களாய், பகவத்ஸ்துதியே நிறைந்த 10000 அத்தியாயங்களாய் விரிந்தது. இதில் 50 கீதைகளும் 25 திருவவதாரங்களின் சரித்திரங்களும் உண்டு. விஷ்ணு சித்தாந்த ஸோபிதமான நூறு பாகவதர்களின் சரித்திரங்களும் அடங்கியிருக்கின்றன. இதற்குப் பரிசுத்தமாகிய விஷ்ணுபாகவதமென்று பெயர். இதற்கு வக்தா ஹாரிதமுனி சுரோதா காசிபரிஷி.

       6. விஷ்ணுயாமளபாகவதம் – 80000 சுலோகங்களை உடையது. இதில் பிரமகீதை, அயகீதை, ஹரிகீதை, சங்கரகீதை என்னும் பெயருள்ள 4 கீதைகளும், விஸ்தாரமாய் தசாவதாரங்களின் கதைகளும் சொல்லப் பட்டிருக்கின்றன. தருக்க சாத்திரமும், விசித்திர வித்தைகள் செய்யத்தக்க சாத்திரமும் மந்திர சாத்திரமும் வாக்கியரூபமாகச் சொல்லப் பட்டிருக்கின்றன. இது 8 ஸ்தானங்களாகப் பிரிக்கப்பட்ட 800 அத்தியாயங்களை உடையது. இதற்கு வக்தா பராசரமகரிஷி. சுரோதா – மைத்திரயர்.

      7. கௌதமசம்மிதாபாகவதம் 10000 சுலோகங்களடங்கிய நூறு அத்தியாயங்களை உடையது. இதில் மோட்சமளிக்கத்தக்க கிருஷ்ணசரித்திரம் மாத்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு வக்தா – கௌதமரிஷி சுரோதா கௌசிகரிஷி.

பயன்

முதல் பாகவதம் ஞானத்தையளிக்கும்

2-வது பாகவதம் பாவத்தை நீக்கும்

3-வது பாகவதம் பத்தியைக் கொடுக்கும்

4-வது பாகவதம் ரோகத்தைப் போக்கும்

5-வது பாகவதம் இச்சித்த பொருள்களைத்தரும்

6-வது பாகவதம் பத்தியைக் கொடுக்கும்

7-வது பாகவதம் மோக்ஷத்தையளிக்கும்.

         இவ்விதமாக 400000 சுலோகமுள்ள கௌதமசம்மிதையில் கிரந்தலட்சணகண்டத்தில் பாகவதலட்சணம் என்னும் பெயருள்ள முதலத்தியாயத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது.

       இத்தகைய ஏழுபாகவதங்களிக்குள்ளே முதலிரண்டு பாகவதமேயின்றி மற்றவை தமிழில் மொழிபெயர்க்கப் பட்டதாகத் தோற்றவில்லை.

நெல்லிநகர் அருளாளதாசர் என்னும் மதுரகவி ஸ்ரீ வரதராஜ ஐயங்கார் ஆவார். எமக்குக் கிடைத்துள்ள இந்நூலின் பதிப்பு 1923ல் பதிப்பிக்கப் பெற்றதாகும். திரிசிரபுரம் வித்துவத்ஜனசேகரர் கோவிந்தப்பப்பிள்ளை அவர்களாலும், பரங்கிப்பேட்டை இலட்சுமணப்பிள்ளை அவர்களாலும் பார்வையிட்ட பிரதிக்கிணங்க, காளப்பட்டி வித்துவான் வ.வெ. திருமலைகொண்ட நாயக்கர் அவர்களால் பரிசோதிக்கப்பெற்று 1923ல் சென்னையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. இதில் ஒரு சிறப்புப் பாயிரம் காணப்படுகிறது. 

அதில் கந்தூர்க் கந்தசாமிக் காவலனைப் பற்றிப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. அக்காலத்தில் இவர் கம்பராமாயணம், தொல்காப்பியம் சொல்லதிகாரம் காஞ்சிப்புராணம் முதலிய பற்பல புராணங்கள் பதிப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது. இப்பதிப்பில் நூலாசிரியரைப் பற்றிய குறிப்பு ஏதும் எழுதப் பெறவில்லை. முற்சொன்ன ஏழுவகைப் பாகவதங்களைப் பற்றிக் கூறியுள்ளாரே யொழிய இந்நூலாசிரியரைப் பற்றி ஏதும் கூறவில்லை.


No comments:

Post a Comment