Sunday 20 July 2014

தமிழ் இனி மெல்ல தொடர்கிறது -11நாம கற்காலத்துக்குத் தள்ளப் பட்டிருக்கோம் ஸஹ்ஜ்!

அன்பர்கள் ஒவ்வொருவருக்கும் 

ந்தியாவில் வசிப்பவர் ஆயின் அஞ்சல்  மூலம் அச்சுப்புத்தகம் ஒன்றும் வெளிநாட்டில் வசிப்பவர் ஆயின் அவர் கூறும் இந்திய முகவரிக்கு அச்சுப்புத்தகம் ஒன்றும் இந்த நாவலை வெளியிட  இருக்கும் தாரிணி பதிப்பகம் இலவசமாக அனுப்பி வைக்கும் .விவரமான அஞ்சல் முகவரி அவசியம் என்று நாம் முன் பதிவில் அறிவித்திருந்ததை நினைவூட்டுகிறோம் 
தற்போது கடல் கடந்து வசிப்பவர் எவராயினும் அவருக்கு ஒரு மின்னூல் அனுப்பும் திட்டம் அமுலுக்கு வருகிறது. தாங்கள் செய்ய வேண்டியது ஒன்றே. இந்தப் பதிவைப் படித்தேன். பிடித்தது. பிடிக்கவில்லை.ஒரே ஒரு சொல் போதும்.  அதுவும் இயலவில்லையா? உங்கள் ஈமெயில் முகவரி மட்டும் பொத்தும்./ஒரு நூல் உங்களைத் தேடிவரும்.
சென்ற பதிவு பற்றி  C.R.Rajashree has left a new comment on your post "தமிழ் இனி மெல்ல...": Congrats good work of Dave Mahadevan  என்றுஒரு பாராட்டு அனுப்பிய  அவர்களுக்கு நன்றி  
   தமிழ் இனி மெல்ல தொடர்கிறது -11

அரிசோனா மகாதேவன் 

சென்ற பதிவின் இறுதியில் 
பெல்ட் அணிந்து கொண்டிருந்ததால் ஷிஃபாலி தூக்கி எறியப்படாவிட்டாலும், அவளது கணினி தூக்கி எறியப்படுகிறது. விமானத்தின் நிலை அவளை நடுங்க வைக்கிறது. இருக்கையின் கைகளை இறுகப் பற்றி கொள்கிறாள். விமானம் சுழன்றுகொண்டே கிடுகிடுவென்று கீழே இறங்குவது தெரிகிறது.

விமானம் பலமாகக் குலுங்குகிறது. திடுமென்று ஒரு பக்கம் சாய ஆரம்பிக்கிறது. அதைச் சரி செய்ய முயல்கிறார் தலைமை விமானி. திடுமென்று எல்லாக் கருவிகளும் இருண்டு போகின்றன. இடது பக்க எஞ்சினிலிருந்து வரும் சத்தமும் குறைந்து அதுவும் நின்று விடுகிறது. விமானத்தின் மூக்கு கீழிறங்க ஆரம்பிக்கிறது. கீழே அந்தமான் தீவுகள் புள்ளி போலத் தெரிந்து பெரிதாக ஆரம்பிக்கின்றன. எல்லா விளக்குகளும் மங்கி அணைந்து போகின்றன. கருவிகள் வேலை செய்யாததால் எவ்வளவு உயரத்தில் விமானம் பறக்கிறது என்றும் தெரியவில்லை. அவர் சுக்கானை இறுகப் பிடித்து விமானத்தை நிலைப்படுத்த முயல்கிறார். அவரது முயற்சிக்கு விமானம் கட்டுப்பட மறுக்கிறது.

எல்லா விமானங்களும் கம்பி மூலம் பறப்பதால் (Flown by wire controls) மின்சாரம் இல்லாமல் அவை வேலை செய்யாது. ஆகவே, அவசரத் தேவைக்காக மின்கலங்கள் இருக்கும். ஆனாலும் அவைகளும் வேலை செய்யாததால் சுக்கானால் விமானத்தின் இறக்கைகளை இயக்க முடியாது போகிறது. விமானத்தை சமநிலைப் படுத்தவோ, அதன் மூக்கை நிமிர்த்தி தண்ணீரில் இறக்கம் செய்யவோ முடியாது என்று உணர்கிறார் தலைமை விமானி.

வெளியே மிகப் பெரிதாகத் தரை தெரிய ஆரம்பிக்கிறது. சுழன்று சுழன்று கீழே இறங்கும் விமானம் சில விநாடிகளில் தரையைத் தாண்டிச் சென்று கடலில் விழுந்து நொறுங்குகிறது                                  


              ஓட்டல் ராஜ்ராஜ் , தஞ்ஜு

 “அம்மாவிடம் அவ்வளவு தைரியமாகப் பேசினீங்களே, நிமிசாம்மா! ஏன் இப்ப இப்படி அழறீங்க? இதோ பாருங்க, நீங்க இப்படி அழக்கூடாது. இன்னும் கொஞ்ச நேரத்திலே அழகேசனும், ஈஸ்வரனும் வந்துடுவாங்க. நாம பெரிய கோவிலைப் பார்த்துட்டு வரலாம். நேத்தி ராத்திரி முழுக்க என்னமா ஆட்டம் ஆடினீங்க, ரொம்பக் களைப்பா இருக்கும் உங்களுக்கு! ஓய்வு எடுத்துக்குங்க. வேணும்னா கொஞ்ச நேரம் துங்குங்க. நான் உங்களுக்கு நல்ல சாப்பாடு கொண்டு வரச் சொல்லியிருக்கேன். ஈஸ்வரனும், ஏகாம்பரமும் கீழே போயிருக்காங்க, அதைக் கொண்டுவரத்துக்கு.” என்று நிமிஷாவைத் தேற்றிகொண்டிருக்கிறாள் காமாட்சி. அவள் கண்கள் கண்ணாடிச் சுவருக்கு வெளியே தெரியும் கருநீல வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, கைவிரல்கள் நிமிஷாவின் முதுகை வருடுகின்றன.

“பாரு காம்ஸ், மம்மிக்குத் தன்னோட வேலைதானே முக்கியமாப் போச்சு, என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாங்க!” என்று பொங்கிப் பொங்கி, விம்மி விம்மி அழுகிறாள் நிமிஷா. அவளது கண்ணீர் தலையணையை நனைக்கிறது.

“நிமிசாம்மா, இப்படி அழுதா உடம்புக்கு ஆகாது. நீங்கதானே அம்மாவை சிரிச்சுக்கிட்டே வழி அனுப்பி வைச்சீங்க? இப்ப அவங்கமேலே ஏன் குறை சொல்லறீங்க?” என்று கேட்கிறாள் காமாட்சி. அவளுக்கு நிமிஷாவின் மனது புரிந்தாலும், ஏதோ ஒரு குறை அவள் மனதை அரிக்கிறது என்று மட்டும் நன்றாகத் தெரிகிறது.

“காம்ஸ், நான் சிரிச்சாலும், அழுதாலும் எங்கம்மா சீனா போய்த்தான் இருப்பாங்க. நான் சிரிச்சதுனாலேதான் நீயும், ஏக்ஸும் எங்கூட இருக்கீங்க. நான் அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிருந்தா, மம்மி என்னை ஏதாவது கேர்ல்ஸ் ஹாஸ்டல்ல தள்ளியிருப்பாங்க. அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. நீயாவது துணைக்கு இருக்கே. நீயும் ஏக்ஸும் கூட இருக்கறது எனக்கு எவ்வளவு ஆறுதலாத் தெரியுமா இருக்கு? எப்பவும் நான் தனியாகத்தான் வீட்டிலே இருப்பேன்.

“முதல்ல உன்னை எனக்குப் பிடிக்காது. உன்னை என்கூடத் துணைக்கு விட்டுட்டு தஞ்ஜு போறேன்னு மம்மி சொன்னதுக்குக்கூட நான் வேண்டாம்னுதான் சொன்னேன். அப்புறம்தான் - நீங்க என்கூட இருக்க இருக்கத்தான் - கொஞ்சம் கொஞ்சமா உங்கமேலே எனக்கு ஒரு பாசம், அன்பு வர ஆரம்பிச்சுது. அதுவும் ஏக்ஸ் என்கிட்ட எவ்வளவு பாசமாப் பழகறான்னு பார்த்தவுடன்தான், இப்படித் தனியா இருக்கோமே, ஒரு அக்கா, தம்பி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு அடிக்க தோண ஆரம்பிச்சுது. அதுனாலதான் மம்மி சீனா போறேன்னு சொன்னவுடன், நீயும், ஏக்ஸும் என்கூட இருக்கணும்னு பிடிவாதம் பிடிச்சேன். அவங்களும் ஒத்துக் கிட்டாங்க. அவங்களைப் பத்தி உனக்குத் தெரியாது. வேலை முன்னேற்றம்தான் முக்கியம்னு என் அப்பா பேரைக்கூட எனக்குச் சொல்ல மாட்டேங்கறாங்க..” பெரிதாக அழ ஆரம்பித்து விடுகிறாள் நிமிஷா.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவளைத் தன்னுடன் அணைத்துக் கொள்கிறாள் காமாட்சி. கொஞ்ச நேரம் அழுதுவிட்டுத் தானாகவே சிறிது சிறிதாக விம்மலைக் குறைத்து நிறுத்துகிறாள் நிமிஷா. பிறகு கடகடவென்று சிரிக்கிறாள்.

“உன்னைப் பயமுறுத்திட்டேனா காம்ஸ்? ஏதோ என்னையும் அறியாம அழுகை வந்திடுச்சு”, என்று மெதுவாகத் தன்னை அவளிடமிருந்து விடுவித்துக் கொள்கிறாள்.

“இதென்ன, ஏதாவது திருவிழாவா? ஏன் இப்படி வாணவேடிக்கை நடக்குது? வானம் ஏன் ஒருமாதிரியா இருக்கு?” என்று அவள் கேட்டதும் காமாட்சி திரும்பிப் பார்க்கிறாள்.

கருநீல வானத்தில் சிவப்பும் வெள்ளையுமாக மின்னல் கொடிகள் பறந்து கொண்டிருக்கின்றன. அறையின் கண்ணாடிச் சுவர் மேற்குப் பக்கமாக இருந்ததால் அவர்களால் சூரியனைப் பார்க்க முடியவில்லை. நிமிஷா தன் கட்டில் அருகே உள்ள சிறு மேஜையில் (tஞுச்ணீணிதூ)  உள்ள பொத்தானை அமுக்குகிறாள். பதில் வந்தவுடன் வானம் ஏன் கருநீலமாக இருக்கிறது. வாணவேடிக்கை நடக்கிறதே, என்ன விழா நடக்கிறது என்று கேட்கிறாள். சூரிய கிரகணத்தினால் அவ்வாறு நடக்கிறது, ஒளிபரப்பைப் பார்த்தால் சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம் என்று பதில் வருகிறது. உடனே அடுத்த பொத்தானை அமுக்குகிறாள் நிமிஷா. சுவர்க் கண்ணாடியில் தெரிந்த நீலவானமும், தஞ்சைப் பெரிய கோவிலும், வாணவேடிக்கைகளும் மறைந்து, ஒளி பரப்பு தொடங்குகிறது.

“இதுவரை சூரியகிரகணத்தின் பொழுது இந்தமாதிரி நிகழ்ந்ததே இல்லை. சூரியனே வெடித்துச் சிதறுவதுபோல இருக்கிறது!  பார்வையாளர்கள் நன்றாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நாங்கள் காரைகட் வான ஆராய்ச்சி மையத்திலிருந்து இணைப்பு கொடுத்திருக்கிறோம். மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சோம்காந்த் இப்பொழுது வரமுடியாத நிலையில் உள்ளதால் அவருடைய உதவியாளர் ஸஹஜா நம் கேள்விகளுக்கு பதில் சொல்வார்.”

ஒளிக்காட்சி பாதி சூரிய கிரகணத்தையும், பாதி ஸஹஜாவையும் காட்டுகிறது. ஸஹஜாவின் முகத்தில் ஒருவிதமான கலவரம் இருப்பதும், அவள் அதை மறைத்துக் கொண்டு பேசுவதும் உன்னிப்பாகக் கவனித்தால் தெரிகிறது. பேட்டியாளரின் முகமும் தெரிகிறது.

“ஸஹஜா, நீங்கள் இந்த சூரியகிரகணத்தைப் பற்றியும், வானம் கருநீலமாயிருப்பதைப் பற்றியும், வாணவேடிக்கை நடப்பது மாதிரி ஆகாயம் முழுவதும் மின்னல் கொடிகள் தெரிவதைப் பற்றியும் விளக்கிச் சொல்கிறீர்களா?” என்று கேள்வி பிறக்கிறது.

“இது சூரியனின் மேல்பரப்பில் ஏற்படும் புதுவிதமான கதிர்வீசலால் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். சூரியன் கிரகணத்தில் மறையும்போது பொதுவாக வானம் கருக்கும். சூரியனின் ஒளிக்கதிர் நிலவின் மீது பட்டுச் சிதறி, மினகாந்தப் புயலுடன் சேர்ந்து பூமியின் காற்று மண்டலத்தில் ஊடுருவதால் இப்பொழுது கருநீலமாகத் தெரிகிறது என்றும் நினைக்கிறோம். சூரியனின் மின்காந்தக் கதிர்வீசலே இப்படிப்பட்ட வாண வேடிக்கையாகத் தெரிகிறது. மழை, புயல் அடிக்கும் போது இடியுடன் மின்னல் மின்னுவதில்லையா, அதுமாதிரிதான்!”

திடுமென்று அவள் முகம் மாறுகிறது. காமிரா அவனுக்கு வலது பக்கம் திரும்புகிறது. சோம்காந்த், அங்கு ஓடி வருகிறார். அவரைத் துரத்திக் கொண்டு சில காவலாளர்களும் அவர் பின்னால் வருகிறார்கள். சோம்காந்தைக் கண்டதும் ஸஹஜாவின் முகத்தில் ஒரு நிம்மதி பிறக்கிறது. மைக்கிற்காகக் கை நீட்டுகிறார் அவர். அவரிடம் அவசர அவசரமாகத் தன் மைக்கை நீட்டுகிறாள் ஸஹஜா.

“இந்த உலகத்திற்கே மாபெரும் விபத்து காத்திருக்கிறது! உலகின் பல பாகங்களிலிருந்து நமக்கு செயற்கைக் கோள் அலைபரப்பு வருவது நின்று விட்டது. நீங்கள் யாரும் எங்கும் பயணம் செய்ய வேண்டாம்! வெளியே வராதீர்கள்! சூரியினிடமிருந்து கிளம்பிய மிகப் பெரிய மின்காந்தப் புயல் இன்னும் எட்டு நிமிஷங்களில் பூமியைத் தாக்கப் போகிறது. அதன் விளைவு மிக மிக பயங்...”

இதற்குள் காவலர்கள் அவரிடமிருந்து மைக்கை பிடுங்கிவிடுகிறார்கள். சோம்காந்த் அதற்கு மேலே சொல்வது கேட்கவில்லை. ஒரு காவலர் ஒளிபரப்புக் காமிராவின் முன்னால் வந்து மறைத்துக்கொண்டு நிற்கிறார். அதனால் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. சில விநாடிகளுக்குப் பிறகு “தடங்கலுக்கு வருந்துகிறோம்” என்ற ஒரு அறிவிப்பு மட்டுமே தெரிகிறது.

அதே சமயம் நிமிஷாவும், காமாட்சியும் இருக்கும் அறையின் விளக்குகள் அணைந்து அணைந்து எரிகின்றன. சிறிது நேரத்தில் விளக்குகள் ஒரேயடியாக அணைந்து போகின்றன. சுவற்றில் தெரியும் ஒளிபரப்பு மறைந்து கருநீலவானம் தெரிய ஆரம்பிக்கிறது.
* * *

இது தான் நாவலாசிரியர் விவரிக்கும் எதிர்கால ஹோட்டல் ராஜ்ராஜ் 

                                             அத்தியாயம் 7
                          ஹோட்டல் ராஜ்ராஜ் , தஞ்ஜு
                      பிரஜோற்பத்தி, ஆடி 7 - ஜூலை 22, 2411
“என்ன ஆச்சு காம்ஸ்? விளக்கெல்லாம் ஏன் அணைஞ்சு போச்சு? மின்காந்தப் புயல் என்ன செய்யும்?” என்று கவலையுடன் விசாரிக்கிறாள் நிமிஷா. அவள் சொல்வது இந்தியும் ஆங்கிலமும் கலந்த மொழியாகத்தான் “க்யா ஹாப்பன்ட் காம்ஸ்? க்யோன் லைட் பந்த்? எலெக்ட்ரோ மாக்னடிக் தூஃபான் வாட் கரேகா?” என்று காமாட்சியின் காதில் ஒலிக்கிறது. நிமிஷா கேட்பது ஏன் தனக்குத் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படவில்லை என்று புரியாமல் காதில்இருக்கும் மொழிமாற்று கருவியைத் தட்டித் தட்டிப் பார்க்கிறாள் காமாட்சி.

“நிமிசாம்மா, நீங்க சொல்றது ஒண்ணும் புரியலேம்மா? என்னம்மா கேக்குறீங்க?” என்று அவளைத் தொட்டு விசாரிக்கிறாள் காமாட்சி. அவள் பேசும் தமிழும் நிமிஷாவின் மொழிமாற்றக் கருவியால் மொழிபெயர்க்கப் படாததால், அது நிமிஷாவுக்கு விளங்கவில்லை என்பது அவளது முகபாவத்திலிருந்து தெரிகிறது. இருவர் முகத்திலும் கவலை படிகிறது.
உடனே தன் கட்டில் அருகே சிறிய மேஜையில் இருந்த ஒரு பொத்தானை அமுக்கி ஹோட்டல் வரவேற்பாளர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறாள் நிமிஷா.
-----------------------------------------------------------------------------------------------------------------------

 Tamil novel based on scientific facts of futurology 



ஆனால் ஒருவிதமான பலனும் ஏற்படவில்லை. காதுக் கருவியில் ஒரு அமைதி. தன் சட்டைப் பையிலிருந்து முப்பரிமாணத் தொடர்புக் கண்ணாடியை அணிந்து கொண்டு அழகேசனுடன் தொடர்பு கொள்ள முயன்று தோல்வியைத் தழுவுகிறாள். எந்தவிதமான கம்பியில்லாத் தொடர்பும் வேலை செய்யவில்லை. இனம் தெரியாத பயம் அவளைக் கவ்வுகிறது.

“காம்ஸ். முஜே ஃபியர் லக்தா. ஹம் பாஹர் கோ, ஆர் வாட்?” (காம்ஸ், எனக்குப் பயமா இருக்கு. வெளியே போவோமா என்ன?) என்று கேட்கிறாள். அது காமாட்சிக்கு வெறும் பொருளற்ற சத்தமாகத்தான் ஒலிக்கிறது.

“நிமிசாம்மா, என்ன கேக்கறீங்க? எனக்கு ஒண்ணும் புரியலையே? அளகேசனைக் கூப்பிடுங்கம்மா! தம்பி ஏகாம்பரம் வேற ஈசுவரன் அண்ணன் கூடப் போயிருக்கானே? என்ன ஆச்சுன்னு தெரியலியேம்மா?” என்று புலம்புகிறாள்.

நிமிஷா அறைக்கதவைத் திறக்கப் பொத்தானை அமுக்குகிறாள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. உடனே கதவில் இருக்கும் கைப்பிடியைச் சுற்றித் திறக்க முயற்சிக்கிறாள். மின்னணுக்களால் பூட்டப்பட்ட பூட்டின் கைப்பிடி சுழன்றாலும், மின் தொடர்பு கிடைக்காததால் கதவு திறக்க மறுக்கிறது. என்னதான் முயற்சி செய்து கைப்பிடியைச் சுழற்றிச் சுழற்றி ஆட்டிப் பார்த்தாலும் கதவைத் திறக்கமுடியவில்லை. அவளுக்கு பயத்தால் ரத்தம் உறைந்துவிடும் போல இருக்கிறது.

“காம்ஸ், தர்வாஜா ஓபன்ஸ் நாட், க்யோன் (கதவு திறக்கலையே, ஏன்)?” என்று அழ ஆரம்பிக்கிறாள். அவள் வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பதுபோன்ற ஒரு உணர்வு...

“நிமிசாம்மா, என்னம்மா நடக்குது இங்கே? ஏம்மா அழறீங்க? நீங்க அழறதைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பயம்மா இருக்கும்மா? என்ன ஆச்சும்மா? உங்களோட பேச்சு எனக்குப் புரியலையேம்மா! என் பேச்சாவது உங்களுப் புரியுதாம்மா? இங்கே மாட்டிக்கிட்டு நாம என்னம்மா செய்யப் போறோம்?” என்று கம்மிய குரலில் அவளைக் கேட்கிறாள் காமாட்சி.

திடுமென்று அவர்களுக்குள் ஒரு இரும்புத் திரை விழுந்து விட்டமாதிரி, இருவருக்குமே காது கேட்காமல் போய்விட்டமாதிரியான ஒரு உணர்ச்சி அவளுக்குள் எழுகிறது. இருவருக்குமே அடி வயிற்றை ஏதோ ஒன்று பிசைவது மாதிரி இருக்கிறது. இருந்தாலும் கதவைத் தட்டித் தட்டிப் பார்க்கிறாள், யாராவது கதவைத் திறந்து விடுவார்களா என்ற நப்பாசையில். காமாட்சியின் கைகள் சிவந்து வலித்ததுதான் மிச்சம். கதவை யாரும் திறந்துவிடவில்லை.

விளக்குகள் எரியவில்லை, தொலைக்காட்சி தெரியவில்லை, தங்களின் மொழிமாற்றுக்கருவிகள் வேலை செய்யவில்லை, முப்பரிமாணக் கண்ணாடி மூலம் யாருடனும் தொடர்பு கொள்ளமுடியவில்லை, இப்பொழுது அறைக்கதவும் திறக்கவில்லை - ஏன் எதுவுமே வேலை செய்யவில்லை என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறாள் நிமிஷா.

அவள் மூளையில் “மின்சாரம்” என்று பதில் திடுமெனப் பளிச்சிடுகிறது. அது சரி, மின்சாரம் இல்லாததால் விளக்குகள் எரியவில்லை, தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. அறைக்கதவு திறக்கவில்லை - சரிதான். ஆனால் மொழிமாற்றுக்கருவி ஏன் வேலை செய்யவில்லை என்று சிந்திக்கிறாள்.

“மின்கலம், பாட்டரி” என்று கத்துகிறது அவள் மூளை. அப்படியானால் பாட்டரிகளும் வேலை செய்யவில்லையா என்று கேட்டுக்கொள்கிறாள். அது சரியில்லையே. பாட்டரி வேலை செய்ய வெளியிலிருந்து மின்சாரம் தேவையில்லையே, அவைகளில் மின்சக்தி சேமித்து வைக்கப் பட்டிருக்கிறதே என்று நினைத்துப் பார்க்கிறாள். சோபாவில் உட்கார்ந்து மூளையைக் கசக்கிச் சிந்திக்கிறாள். அவளது மூளை விடையளிக்க இயலாமல் திணறுகிறது.

அவளருகிலேயே அமர்ந்த காமாட்சியையும் கவனிக்காமல், ஆழ்ந்த யோசனையில் ஆழ்கிறாள்.

அப்படியானால், அலைபரப்புகள் (wireless transmissions) நின்றுவிட்டிருக்கலாம் என்று அவளது அறிவு அவளுக்குப் புலப்படுத்துகிறது. ஆக, இப்பொழுது வெளித்தொடர்பு இல்லாமல் தனி ஆகிவிட்டோம், தாங்கள் இருக்கும் அறையே தங்களுக்கு ஒரு சிறை ஆகிவிட்டது. தன் அருகிலிருக்கும் காம்ஸிடம்கூட தன்னால் பேச முடியாது, தன் கருத்துகளை அவளுக்குத் தெரிவிக்கவோ, அவள் சொல்வதைத் தன்னால் புரிந்து கொண்டு அவளுடன் உரையாடவோ முடியாது, 

வாயிருந்தும் ஊமைகள்தான், காதிருந்தும் செவிடுகள்தான் என்று புரிந்து கொள்கிறாள்.

அப்பொழுதுதான் தன் முதுகைக் காமாட்சி இதமாகத் தடவிக் கொண்டிருப்பதைத் திடுக்கிட்டு உணர்கிறாள். பேசமுடியாது போனாலும் தன்னைச் செய்கை மூலம் தன்னைத் தேற்றுகிறாள் காமாட்சி என்பதை அவள் வருடிக் கொடுப்பது உணர்த்துகிறது. அப்படியே மனம் நெகிழந்து போய், “காம்ஸ், தூ மேரீ தீதீ! தூ மேரி டியர் ஸாத்தீ (நீ என் அக்கா, நீ என் அருமைத் தோழி)” என்று சொல்லி காமாட்சியைச் சேர்த்து இறுகக் கட்டிக் கொள்கிறாள். அவள் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்து காமாட்சியின் தோளை நனைக்கிறது.
“அழாதீங்க நிமிசாம்மா! பயப்படும்படி ஒண்ணும் ஆகாது. படிச்ச நீங்களே இப்படி இடிஞ்சு உக்காந்தா, எடுபிடியான நான் என்னம்மா செய்யறது?” என்று தனக்குத்தானே புலம்புகிறாள். நேரம் ஆமையாக ஊர்கிறது.
                                                     * * *
                                வான் ஆராய்ச்சி மையம், காரைகட்
சோம்காந்த்தை காவலாளர்கள் கழுத்தைப் பிடித்துத்தள்ளாத குறையாக வெளியேற்றியவுடன் அவரைப் பின்தொடர்கிறாள் ஸஹஜா. கலைந்த தலையுடனும், கைகலப்பினால் கிழிந்த சட்டையுடனும் இருக்கும் அவரைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது ஸஹஜாவுக்கு.

“ஏம்மா ஸஹ்ஜ், என்னுடன் வந்துட்டே? உன் எதிர்காலத்தை ஏன் வீணாகப் பாழாக்கிக்கறே?” என்று கேட்கிறார்.

“சோம்த். இன்னும் எட்டு நிமிஷத்தில் ஏதோ பயங்கர விளைவுன்னீங்களே! அது என்ன? நீங்க இங்கே இல்லைன்னா விஷயத்தை எப்படி நான் எல்லோருக்கும் சொல்றது? மேலேயும் உலகத்துக்கே பெரிய ஆபத்து ஏற்படறச்சே எனக்கு என்ன எதிர்காலம் இருக்கப் போறது?”

“நான் எதிர்பார்த்தது நடக்க ஆரம்பிச்சாச்சு. ஈஸ்வரா, நீதான் இந்த உலகைக் காப்பாத்தணும்! சீக்கிரம் வெளியே போனால் நமக்கு நல்லது.” என்று முனகியவாறே வாசல் கதவைத் திறக்கிறார்.

“நீங்க என்ன எதிர்பார்த்தீங்க, சோம்த்? நீங்க சொல்றதைக் கேட்டால் பயமா இருக்கு.” என்று அவர் கையைப் பிடித்துக் கொள்கிறாள் ஸஹஜா. அவர்கள் வாசல் படியிறங்கி வருவதற்குள்ளேயே தூரத்தில் மையத்தின் பெரிய டிரான்ஸ்ஃபார்மர் பலமான சத்தத்துடன் வெடித்துச் சிதறிப் புகைய ஆரம்பிப்பது அவர்கள் கண்ணுக்குத் தெரிகிறது. மின்சாரம் நின்றுபோவதால் வாசல் புல்தரைக்கு நடுவில் இருக்கும் பெரிய நீரூற்று நின்று போகிறது.

அதைச் சுற்றியிருக்கும் அலங்கார விளக்குகள் அணைந்து போகின்றன. “காரைகட் வான் ஆராய்ச்சி மையம்” என்று எழுதியிருக்கும் குழல்விளக்கு மங்கி நின்று போகிறது.

“முதல் கட்டமாக மின்சாரம் நின்னு போச்சு பார்த்தாயா? அதிகமான பூமி தூண்டிய மின்னோட்டத்தால் (Ground induced current - GIC) டிரான்ஸ்ஃபார்மர்கள் புகைந்து போய் மின்சார ஓட்டம் நின்று போயிருக்கு. இதுக்கு முன்னாலேயே ஸாட்டலைட் அலைபரப்பு நின்னு போயிருக்கணும். அதுனால ஆகாய விமானங்களால பறக்கறத்துக்கு வழிகாட்டி இல்லாம போயிடும். அது ரொம்ப ஆபத்து. நிறைய விமானங்களை சரியானபடி வழிநடத்த முடியாம போக வாய்ப்பு இருக்கு. மேலேயும், மின்காந்தப் புயல் அதுகளை ஒழுங்கா வேலை செய்யமுடியாம தடுத்தாலும் தடுக்கலாம். கரண்ட் இல்லாததுனால என் வீட்டிலேயும் ஒரே களேபரமா இருக்கும். போய் என்னனு பார்க்கணும். என்னோட வரியா, இல்லை உன் ஹோட்டலுக்குப் போறியா?” என்றவாறே தனது காரை நோக்கி நடக்கிறார் சோம்காந்த்.

“இருண்டு கெடக்கற ஹோட்டலுக்குப் போய் நான் என்ன செய்யப் போறேன், சோம்த்? உங்ககூட வரேன்.” என்று அவருடன் நடக்கிறாள் ஸஹஜா.

கார்ச் சாவியை எடுத்து கதவைத் திறக்கும் பொத்தானை அமுக்குகிறார் சோம்காந்த். கதவு திறக்கவில்லை. 

“பாட்டரி தீர்ந்து போச்சா?” என்று சொல்லிக் கொண்டே சாவியினால் கதவைத் திறந்து அமர்ந்து கொள்கிறார். பக்கத்து இருக்கையில் சாய்கிறாள் ஸஹஜா. காரை ஸ்டார்ட் செய்யும் பொத்தானை அவர் பலமுறை அமுக்கியும் ஒன்றுமே நடக்கவில்லை.

“என்ன ஆச்சு இந்தக் காருக்கு? காலைலே வர்றபோது ஒழுங்காகத்தானே இருந்தது?” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவரின் கவனம் “டாஷ்போர்டி”ன் நடுவில் இருக்கும் கடிகாரத்தின் பக்கம் செல்கிறது. அது அணைந்து போயிருக்கிறது. இலேசான எரிச்சலுடன் தனது கைக் கடிகாரத்தைப் பார்த்தவர் திடுக்கிடுகிறார். அவரது கடிகாரத்தின் ஒளிரும் எண்கள் அணைந்து விட்டிருக்கின்றன.

“ஸஹ்ஜ், டைம் என்ன, சொல்லு?” என்று கேட்டவரை ஒருமாதிரியாகப் பார்த்துக் கொண்டு தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “சோம்த், என் கடிகாரம் நின்னு போச்சு.” என்று, “அப்ப உங்க கடிகாரம்...” என்று இழுக்கிறாள்.

“நான் எதிர்பார்த்ததுக்கு மேலே மோசமா இருக்கு, ஸஹ்ஜ்! இங்கே ஒட்டுமொத்தமா மின்சாரம் நின்னு போச்சு. அதுனாலதான் கார் ஸ்டார்ட் ஆகலே. ஆகவே, காரோட கடிகாரம் மட்டுமல்லே,மின்சாரத்துலே ஓடற நம்ம கடிகாரங்களும் நின்னு போச்சு...” என்றவரின் முகம் திடுமென்று பேயறைந்த மாதிரி ஆகிறது. அதைப் பார்த்து ஸஹஜா பயந்து போய்விடுகிறாள்.

“என்ன சோம்த், என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என்று பதட்டத்துடன் கேட்கிறாள் ஸஹஜா.

“இப்ப நடந்திருக்கிறது கடிகாரத்தோடயும், காரோடையும் போற விஷயமில்ல ஸஹ்ஜ்! நீயும் நானும் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவங்க. ஓடாத காரிலே ஒக்கார்ந்து இருக்கறதுனால, அமைதியா இதைப் பத்திப் பேச முடியுது. யோசிச்சுப்பாரு. சாலைலே போற கார்கள், ரயில்கள் என்ன ஆகும்? எல்லாம் நின்னு போகும். பிரேக் சரியாப் பிடிக்காதுனால ஒண்ணோட ஒண்ணு இடிச்சுக்கிட்டு பெரிய விபத்துகள் நடக்கும். ஆகாசத்துல பறக்கற விமானங்களோட இன்ஜின்கள் மின்சாரம் இல்லாட்டா ஓடாம நின்னுடும். அதைகளை இயக்கற கன்ட்ரோல் ஒண்ணுமே வேலைசெய்யாது. எல்லா விமானங்களும் பொத்துப் பொத்துனு கீழே விழுந்துடும்.

“நாம உபயோகிக்கிற எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் ஐட்டம்ஸ் எதுவுமே வேலை செய்யாது. யாரோடயும் டெலிகம்யூனிகேஷன்ஸ் பண்ண முடியாது. நேரிலே பேசினாத்தான் உண்டு. அரசாங்கம் ஒழுங்கா நடக்காது. யாருக்கும், எதுவும் சுலபமாகக் கிடைக்காது. சில நாள்லே சாப்பாட்டுக்கே வழியில்லாம, ஏன் சமைக்கக்கூட வழியில்லாம போயிடும். நம்ம நாட்டு, ஏன் உலகத்தின் எதிர்காலத்தை நினைக்க நினைக்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு! சுருக்கமாச் சொன்னா நாம கற்காலத்துக்குத் தள்ளப் பட்டிருக்கோம் ஸஹ்ஜ்!”  அவர் குரல் கம்முகிறது.

“மின்காந்தப் புயலோட தாக்கம் சிலநாள்ல போயிடுமில்லையா? அப்படியிருக்கறச்சே கற்காலத்துக்குப் போயிடுவோம்னு ஏன் சொல்றீங்க. சோம்த்?”  அவள் குரலில் நடுக்கம் இருக்கிறது.

“காரிலே நான் வச்சிருந்த திசைகாட்டியைப் பாரு, அது எந்தத் திசையைக் காட்டுது? காரு கிழக்கே பாக்க இருக்கு, ஆனா அது வடக்கேன்னு சொல்லுது, இப்பப் பாரு, அது மெல்லக் கத்துது. இது ஏன் தானா கத்தணும்? பூமியோட காந்த சக்திக்கு ஏதோ மாற்றம் வந்துக்கிட்டு இருக்கு. பெரிய அளவுல மாற்றம் வந்தா, முறையான காந்த சக்தியே இல்லாம போயிடும். அப்ப ஜெனரேட்டர் மூலமா மின்சக்தி உண்டு பண்ண முடியாது. அதைவிடு நம்ம கடிகாரங்கள்லே சின்ன பாட்டரி இருக்கு. அதுவே காந்த சக்தி மாற்றத்தாலே மின்சார சேமிப்பை இழந்துடுச்சு. இனிமே நாம் இதுவரைக்கும் செஞ்சுக்கிட்டு வந்த வேலையைச் செய்ய முடியாது.

“வீட்டுக்குப் போய் வருங்காலத்துலே என்ன பண்ணறதுன்னு யோசிப்போம். நல்லவேளையா எனக்குத் தனிவீடு இருக்கறதுனால பெரிய கஷ்டம் ஒண்ணும் இருக்காதுன்னு நினைக்கிறேன். மூணு கிலோமீட்டர் நடப்பே இல்லையா?” என்று நடக்க ஆரம்பிக்கிறார் சோம்காந்த்.

அவர் சொன்ன அதிர்ச்சியான செய்திகளை மனதில் ஜீரணிக்க முயன்று கொண்டே அவருடன் மெதுவாகத் தன் கையை இணைத்துக் கொண்டு தன் பயத்தை ஒருவாறு மறைக்க முயன்றவாறே நடக்கிறாள் ஸஹஜா.[வளரும்]

No comments:

Post a Comment