Tuesday 29 July 2014

தமிழ் இனி மெல்ல... [21] மதுராந்தகா! கத்தியை மட்டும் சுழட்டினால் போறாதப்பா

தமிழ் இனி மெல்ல[20] சென்ற பகுதியின் இறுதியில் 

விழா மைதானத்தை அடையும் வரை குந்தவி வாயைத் திறக்கவே இல்லை. தாயின் இந்தப் போக்கு அவ்வப்போது நரேந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவன் உள்ளத்தில் அது ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ், தமிழ் என்று தன் தாய் தன்னை வற்புறுத்துவது அவனுக்குப் பிடிப்பதில்லை. தன் தந்தையுடன் சிலசமயம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறான்.

விமலாதித்தன் அவனிடம் தெலுங்கில் சொன்னது இதுதான்:  “நரேந்திரா! இது ஆந்திர நாடு! நீ ஆந்திர அரசனாகப் போகிறாய்! அதற்கு தெலுங்கு தெரிவது மிகவும் முக்கியம். பெண்கள் எப்பொழுதும் தங்கள் முந்தானையில் ஆண்களைக் கட்டி வைக்கத்தான் முயலுவார்கள். அதற்கு நாம் அனுமதித்து விட்டால் அரசனாக அரசாட்சி செய்ய முடியாது. அவர்களின் கைப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். நமக்கு வேண்டுவதை நாம் பெண்களிடமிருந்து பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே அவ்வப்பொழுது அவர்கள் சொல்வதற்குச் சம்மதிப்பதுபோல நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் அம்மாவை நான் அடைந்திருக்கவே முடியாது. போகப்போக இதை நீ நன்றாகப் புரிந்து கொள்வாய்!”  என்று விஷமம் கலந்த குரலில் புத்தி சொல்வான். நரேந்திரனுக்கு அது புரிந்தது போலவும் இருக்கும், புரியாது போலவும் இருக்கும். தன்னிஷ்டப்படி நடந்து கொள்ளும்படி தந்தை சொல்கிறார் என்பது மட்டும் அவனுக்குப் புரியும்.

இரதம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கும் மைதானத்திற்கு விரைகிறது.

விழாமேடையில் அரசர் சக்திவர்மனும், மகாராணியும் ஒரு பெரிய சிம்மாசனத்தில் ஒருவரருகில் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பலவிதமான விளையாட்டுகளும், கேளிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு குந்தவி காணும் ஒரு காட்சி அவள் மனதைக் கசக்கிப் பிழிகிறது.

விமலாதித்தன் நடுவில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் இடது பக்கத்தில் உள்ள சிம்மாசனத்தில் அவனது இன்னொரு ராணியும், வலது பக்கத்து இருக்கையில் விஜயாதித்தனும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரதம் நிற்கிறது. கண்களில் பறக்கும் தீப்பொறிகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு கீழிறங்குகிறாள் குந்தவி.

தமிழ் இனி மெல்ல...தொடர்கிறது [21] 

அரிசோனா மகாதேவன் 
                                           அத்தியாயம் 3

                 
    சோழர் அரண்மனை, தஞ்சை
   சாதாரண, ஆனி 28 - ஜூலை 13, 1010

டுமீன் ஓட, உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல இராஜேந்திரனுக்கும், சிவசங்கர சிவாச்சாரியனுக்கும் இடையில் நடந்த வாட்சண்டையையும், இராஜேந்திரன் வாளைக் கோபமாகத் தூக்கி எறிந்ததையும், கடைசியில் சிவாச்சாரியனுடைய விளக்கத்தைக் கேட்டுவிட்டு, அவனை நண்பனாக ஆக்கிக் கொண்டு, தனக்கு நன்றி சொல்லி வணங்கியதையும் முகத்தில் எந்தவித சலனமுமில்லாமல் பார்த்து ரசித்த கருவூர்த்தேவர், கையை உயர்த்தி இராஜேந்திரனுக்கு ஆசி வழங்குகிறார்.

ஒருவழியாக யாருடைய இரத்தமும் சிந்தாமல் நல்லபடியாக முடிந்ததற்கு தஞ்சைப் பெருவுடையாருக்கு மனதிலேயே நன்றி செலுத்துகிறாள் சோழமகாதேவி. வழக்கம்போல மௌனமாகப் புன்னகைத்தபடியே கருவூராரின் நாடகத்தைக் கண்டு ரசிக்கிறார் இராஜராஜர். காரணமில்லாமல் எந்தக் காரியத்தையும் அவர் செய்யமாட்டார் என்பது இராஜராஜருக்கு நன்றாகவே தெரிந்திருந்ததால் இந்த நாடகத்தை நடத்தியதற்கும் காரணத்தை அவராகவே சொல்லட்டும் என்று காத்திருக்கிறார்.

ஒரு அந்தணன் இவ்வளவு திறமையாக வாட்போர் வீரனான இராஜேந்திரனை வாட்போரிலேயே தடுத்து நிறுத்தும் திறன் பெற்றிருப்பதைக் கண்டு வியக்கிறாள் குந்தவைப் பிராட்டி. இவனை இராஜேந்திரனுக்கு நண்பனாகத் தந்தது சோழநாட்டிற்கு நன்மை தரும் செயல் என்றும் மனதில் மகிழ்வு கொள்ளுகிறாள். இந்தப் பிள்ளை பலகாலம் சோழநாட்டிற்குத் தொண்டாற்றவேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறாள்.

“மதுராந்தகா, இந்தக் கட்டை உனக்குக் கொடுத்த பணியாளனை உன் நண்பனாக ஏற்றுக்கொண்டு என்னைச் சிறப்பித்துவிட்டாய்!” என்று இராஜேந்திரனை வாழ்த்திய கருவூரார் சிவாச்சாரியனை நோக்கி, “சிவனே! ஒரு அரசனுக்கு உண்மையான நண்பன் பணியாளனாகத்தான் இருக்க வேண்டும். அவன் உன்னிடம் மகிழ்வு கொண்டு தருவது செல்வம், நிலம், பதவியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் அவனுக்கு மகிழ்வுடன் உன் உயிரையும் தர சித்தமாக இருக்கவேண்டும். இதையும் நீ கற்ற நன்னூல்கள் மூலம் அறிந்திருப்பாய். நீங்கள் இறுதிவரை நண்பர்களாக இருந்து சோழநாடு செழிக்க, சைவம் வளர நற்பணி ஆற்றுங்கள்!” என்று ஆசி நல்குகிறார்.

பிறகு இராஜராஜர் பக்கம் திரும்பி, “அருள்மொழி! நீ எனக்கு அளித்த பணியின் உருவாக்கம்தான் இப் பேழையில் இருக்கிறது” என்று சிவாச்சாரி தன்னிடம் கொடுத்த நீண்ட பேழையைச் சுட்டிக் காட்டுகிறார் கருவூரார்.

“மிக்க மகிழ்ச்சி ஐயா! என்னுடைய நீண்ட காலக் கனவுதான் நான் உங்களுக்கு அளித்த திருப்பணி. அதை நிறைவேற்ற என்ன வழி என்று அறியாமல் நான் உங்களை நாடினேன். நான் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்ததற்கு இப்பொழுது தங்களிடமிருந்து விடை கிடைத்திருக்கிறது. இப்பேழையில் என்ன கொணர்ந்திருக்கிறீர்கள்?” என்று கனிந்த குரலில் கேட்கிறார் இராஜராஜர்.

கருவூராரின் விழிச்சுட்டைக் கவனித்த சிவாச்சாரி அவரிடமிருந்து பேழையை வாங்கி, அதைத் திறந்து, அதன் உள்ளே இருந்த குழலை எடுத்து, மிகப் பணிவுடன் கருவூராரிடம் கொடுக்கிறான்.

அதை இராஜராஜரிடம் நீட்டுகிறார் கருவூரார். இறையருளைப் பெறும் உணர்வுடன் எழுந்து, அதைப் பணிந்து பெற்றுக் கொள்கிறார் இராஜராஜர்.

செம்பினால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டதால் பளபளவென்று மின்னிய அதில் கருவூரார் தன்னிடம் ஒரு குழலை அளிப்பது போல வரிவுருவப் படம் தீட்டப்பட்டிருக்கிறது. அதற்குக் கீழே “திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜராஜ சோழ தேவருக்கு அவரது குரு கருவூர்த் தேவர் இப்புவியெங்கும் தமிழ் வளர்க்கத் தீட்டிக் கொடுத்த மடலைத் தன்னுள் தரித்த காப்பு” என்று எழுதியிருக்கிறது. அதைப் படித்த இராஜராஜர் முகம் மலர்கிறது. அந்தக் குழலைத் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறார். உடனே அவரது கண்கள் பனித்துக் கண்ணீர் முத்துக்கள் இரண்டு வழிந்து கன்னத்தில் கோடாக இறங்குகின்றன. அவரது உதடுகள் இலேசாகத் துடிக்கின்றன.

மெதுவாகக் கருவூரார்முன் மண்டியிட்ட இராஜராஜர், நன்றி ததும்பும் குரலில், “ஐயா, என் பிறவிப் பயனை அடையும் தருவாய்க்கு என்னைக் கொண்டு சேர்த்தமைக்கு எப்படி நன்றி சொல்லப்போகிறேன்? நான் சோழ சாம்ராஜ்ஜியத்தைத் தென் குமரி முதல் துங்கபத்திரை வரை விரிவாக்கியது பெரிதல்ல, பெருவுடையாரான சிவபெருமானுக்குத் தென்னாட்டிலேயே மிகப் பெரிய கற்றளி அமைத்து சைவம் நிமிர்ந்து நிற்க சிவத்தொண்டு செய்ததே பெரிது என்று நினைக்கிறேன். அதைப்போல ஒரு சாலச் சிறந்த பணி, தமிழ் அன்னைக்குச் செய்ய வேண்டிய பணி என்று உணர்த்திய தாங்கள் எனக்குக் கொடுக்கும்  உடைவாள் இது என்று சிரமேற் கொள்கிறேன்.” என்று அக்குழலை மீண்டும் தன் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்.

ஒரு தகப்பன் தன் செல்லக் குழந்தையின் தலையைப் பாசத்துடன் நீவி விடுவது போல இராஜராஜரின் தலையைப் பரிவுடன் நீவி விடுகிறார் கருவூரார். குனிந்து இராஜராஜரின் தோள்களைப் பற்றித் தூக்கி நிறுத்துகிறார்.
இராஜராஜர் சொன்னது அனைவருக்கும் புரிந்தாலும், அவர் எதைச் சொல்கிறார், அப்படி என்ன பெரிய திருப்பணிக்கான திட்டம் அக்குழலுக்குள் இருக்கிறது என்று மற்றவருக்குப் புரியவில்லை. இதுவரை இராஜராஜரின் கண்களில் வீரத்தையும், பக்தியையும், அருளையும், கோபத்தையும் மட்டுமே பார்த்தவர்கள், அவர் கண்களில் கண்ணீரைப் பார்த்ததே இல்லை. ஆகவே, அக்குழலில் அவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது என்ற ஆர்வம் இருந்தாலும், அவரது கண்ணீர் மற்றவர்களின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

“அருள்மொழி! உள்ளே என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே இப்படி உணர்ச்சி வசப்படுகிறாயே! அதில் இருப்பதை நான் நிதானமாக உனக்கு விளக்கவேண்டும். நீ பல கேள்விகளைக் கேட்டு, அதற்கு நான் விளக்கம் தந்தபின்னர் நீ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும். உட்கார்!”  என்று கனிந்த குரலில் இராஜராஜரை நிகழ்காலத்திற்குக் கொண்டுவருகிறார்.

தன் இருக்கையில் அமர்ந்த இராஜராஜர், “ஐயா, இத்திருப்பணியை முடிக்க எத்தனை காலம் தேவைப்படும்?” என்று குழந்தையைப் போல கருவூராரிடம் வினவுகிறார். அவர் குரலில் துடிப்பு இருக்கிறது.

“சொல்லத்தான் போகிறேன் அருள்மொழி! மதுராந்தகனின் துணையும் அதற்குத் தேவை. அதுமட்டுமல்ல, அவனது வழித்தோன்றல்களும், அவர்களின் வழித்தோன்றல்களும் இத் திருப்பணியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும். மதுராந்தகா! நீயும் அமர்ந்து கொள்!”  என்று இராஜேந்திரனை அமரச் சொல்கிறார் கருவூரார்.

திருப்பணியா, தமிழுக்குத் திருப்பணியா என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டபடியே அமர்கிறான் இராஜேந்திரன்.

“கருவூர்த் தேவரே! நானும் மகாராணியாரும் பெருவுடையாரைத் தரிசனம் செய்து வரக் கிளம்புகிறோமே!”  என்று எழுந்திருக்கிறாள் குந்தவைப் பிராட்டி. தான் இருக்கவேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை குந்தவைப் பிராட்டி நாசூக்காகக் கேட்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட கருவூரார் மெல்லப் புன்னகைக்கிறார்.

“ஏனம்மா பிராட்டியாரே! நீ இல்லாமல் இந்தச் சோழ சாம்ராஜ்ஜியத்தில் எதுவும் நடக்குமா? உன் தயவு இருந்தால்தானே இந்தக் கிழவன் அருள்மொழியை எதுவும் செய்யச் சொல்ல முடியும்? பெருவுடையாருக்குக் கோவில் கட்ட ஒரு தூண்டுகோலாக மட்டும் இல்லாமல் அதில் நீ காட்டிய உற்சாகத்தை யாரால் மறக்க முடியும்? மகாராணியாரே! தாங்களும் இப் பணியில் அருள்மொழிக்கு உறுதுணையாக இருந்து வருவதுதான் சாலவும் சிறந்தது.” என்று இருவரையும் அங்கேயே இருக்குமாறு பணிக்கிறார்.

“என்னை மிகவும் புகழவேண்டாம் கருவூர்த் தேவரே! இதைச் செய்யம்மா என்று ஆணை இடுங்கள்!” “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்று திருமூலரும் இயம்பி உள்ளாரே! ஆக, தமிழன்னைக்குச் செய்யும் தொண்டு சைவத்துக்குச் செய்யும் தொண்டல்லவா? அருள்மொழி செய்யப் போகும் இந்தத் தமிழ்த் திருப்பணிக்கு நான் என்றென்றும் துணை நிற்பேன்!”  என்று திரும்ப இருக்கையில் அமர்ந்து கொள்கிறாள் குந்தவைப் பிராட்டி.

“ஐயா! என் இறைவன் எவ்வழி அவ்வழி நானும். இது தாங்கள் அறிந்ததுதானே!” என்று தன் சம்மதத்தையும் தெரிவிக்கிறாள் சோழமகாதேவி.

இத்தனை பேர்களையும் தன்வசம் ஈர்க்கிறாரே கருவூரார், தன்னை மாட்டிவிடாமல் இருக்க வேண்டுமே என்று மனதிற்குள் வேண்டிக்கொள்கிறான் இராஜேந்திரன்.

“மதுராந்தகா! இந்தத் திருப்பணிக்கு எத்தனை காலம் வேண்டும் என்று அருள்மொழி கேட்டான். நீயும் அதற்கு இந்தக் கட்டையின் பதிலைக் கேட்டுக் கொள். இந்தப் பணிக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெரிய பணியையோ, திட்டத்தையோ சாதித்து நிலைநிறுத்தவேண்டும் என்றாலும் இந்தக் காலம் தேவைப்படும்.” என்று அவன் மனதில் கேட்டது தன் காதில் விழுந்தது போல இராஜேந்திரனிடம் சொல்கிறார் கருவூரார்.

“ஐயா, தங்களுக்குத் தெரியாது ஒன்றும் இல்லை. இருந்தாலும் என் மனதில் ஒரு சிறய ஐயம் தோன்றுகிறது.””” என்று இழுக்கிறார் இராஜராஜர்.

“உன் ஐயம் மதுராந்தகனுக்குச் சொல்லப்படும் பதிலில் தீர்ந்துவிடும் அருள்மொழி” என்றவர் மேலே தொடர்கிறார். “நமக்குச் சிறு வயதிலிருந்து பல விஷயங்கள் போதிக்கப்படுகின்றன. இருந்தாலும், பதினாறு வயதிலிருந்து இருபது வயது வரையில்தான் நாம் சிந்தித்து வாழும் வழி இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று முடிவை எடுக்கிறோம். ஆகவே, ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து இருபது வயதுவரை எதைக் கற்றுக் கொள்ளுகிறதோ அதன்படியே நடக்கிறது. அந்தக் குழந்தை பெரிதாகி, இளைஞனாகவோ, இளைஞியாகவோ ஆனவுடன், பொதுவாக இருபது வயதில் அதற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைக்கும் இவர்களுக்கு முன்னம் கற்றுக் கொடுக்கப்பட்டதே கற்றுக் கொடுக்கப்பட்டால், அந்தக் குழந்தையும் தனது இருபதாவது வயதில் முன்னர் கற்றுக் கொடுக்கப் பட்டதையே பிடித்துக் கொள்ளும். ஆக இரு தலைமுறைகளாகத் தொடர்ந்து எது கற்பிக்கப்படுகிறதோ, அதுதான் நிலைத்து நிற்கும். ஒரு சமுதாயத்தில் என்ன மாறுதலைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை இரு தலைமுறைகளுக்குத் தொடர்ந்து செய்தால்தான் அந்த மாறுதல் நிலைத்து நிற்கும்...” என்று நிறுத்தி இராஜராஜரைப் பார்த்து விழிகளை உயர்த்துகிறார் கருவூரார்.

“ஐயா! எனக்குப் புரிந்தது. இந்தத் திருப்பணி முடியக் குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகள் வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதாவது, நாற்பது ஆண்டுகள்...” என்று இழுத்த இராஜராஜர் முகத்தில் கவலை படிகிறது. “இந்தத் திருப்பணியை என் காலத்தில் முடித்துவிட முடியாதா?”

“அருள்மொழி! நாம் இந்தப் பூத உடலில் எத்தனை நாட்கள் இருக்கப் போகிறோம் என்பது முக்கியமல்ல. எண்பது வயதுக் கிழவன் மாமரம் நடுவது தனக்காகவா? இல்லையே! அது தனது வழித்தோன்றல்களுக்குத்தானே! நீ கட்டுவித்த பெருவுடையார் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உன் சைவப் பணியை உலகுக்குக் காட்டி நிற்கத்தானே போகிறது! இறை அருள் இருந்தால் உன் பணியை நிறைவேறுவதைக் காணமுடியாமலா போகும்? உன் கையில் இருக்கும் குழலைத் திற. அதில்தான் உன் திருப்பணியை எப்படித் தொடர்வது என்று எழுதியிருக்கிறது!”  என்று கருவூரார் இயம்பியதும் தன் மடியில் உள்ள குழலைத் திறக்கிறார் இராஜராஜர்.

அதிலிருந்து பத்து அங்குல நீளமும், நான்கு அங்குல விட்டமும் உள்ள தங்கச் சுருள் வெளிவருகிறது. இரு கைப்பிடிகளில் ஒன்றில் நிறையவும், மற்றொன்றில் குறைவாகவும் சுருள் சுற்றப்பட்டிருக்கிறது.

“அருள்மொழி! இந்தச் சுருளில்தான் நமது திருப்பணி முயற்சி என்ன, அது எப்படி நிறைவேற்றப்பட வேண்டும் என்று இந்தக் கட்டை சொல்லியதை இந்தச் சிவன் விரிவாக எழுதியிருக்கிறான்.” என்று சிவாச்சாரியைச் சுட்டிக்காட்டுகிறார் கருவூரார்.

“இதை பொன் சுருளில் எழுதக் காரணம் இருக்கிறது. தில்லை மூவாயிரவர் திருமுறைகளைக் காப்பாற்றி உனக்குக் கொடுத்தாலும், முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அவை சிதிலமாகத் தொடங்கி இருந்ததை நீ பார்த்தாயே! உடனே அவற்றை பல கைப்பிரதிகள் எடுக்கப் பணித்தாயல்லவா! இன்னும் பல நூறு ஆண்டுகள் வெளிவராதிருந்தால் அந்த ஓலைச் சுவடிகள் முழுவதும் அழிந்தல்லவா போயிருக்கும்? ஓலையில் எழுதினால் காலப் போக்கில் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது. செப்பு ஏடுகள் கனமாக இல்லாவிட்டால் காலப்போக்கில் பச்சை பூத்து அழிந்து விடும். வெள்ளியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், கருத்துப் போய்விடும். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் அழியாமல் நமது சந்ததிகளுக்கு உனது இந்தத் திருப்பணியின் திட்டம் கிடைக்க வேண்டும். அதனால்தான் மெல்லிய பொன் சுருள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் திருப்பணித் திட்டம் போக நிறைய இடம் மிச்சமாகவே விடப்பட்டிருக்கிறது...” தான் சொல்வது அனைவரின் மனத்திலும் பதியச் சிறிது நேரம் கொடுத்தவர், மீண்டும் தொடர்கிறார்.

“இது வாழும் திருப்பணி. நீ சோழ சாம்ராஜ்ஜியத்தை துங்கபத்திரையின் தென்பகுதி வரைதான் விரிவு படுத்தியுள்ளாய். சிங்களத் தீவும் பாதிக்கும் சிறிது மேலாகத்தான் உன்வசம் வந்திருக்கிறது. இதில் வடவேங்கடத்திலிருந்து தென்குமரிவரையிலும், ஈழத்தின் வடபகுதிகளிலும்தான் தமிழ் பேசப்படுகிறது. கருநாட்டில்23 கன்னடமும், துளுவும், ஆந்திரத்தில் தெலுங்கும், நடு, மற்றும் தென் ஈழத்தில் சிங்களமும்தானே வழக்கில் உள்ளது? இதிலும் நம்பூதிரிப் பிராமணர்கள் மேற்குச் சேரநாட்டில் மணிப்பிரவாளம் என்று ஒரு வழக்கைத் துவங்கி உள்ளார்களாம். அவர்கள் சோழ, பாண்டி நாட்டு அந்தணர்கள் போலத் தமிழ்ப் பற்று உள்ளவர் அல்லர். அவர்கள் கொடுந் தமிழில் நிறைய வடசொற்களோடு மட்டுமல்லாமல், வடமொழியின் வினைச் சொற்களையும் தமிழ்ப்படுத்திக் கையாளுகிறார்களாம். இப்படியே போனால் கேரளத்தில் அந்த மணிப் பிரவாளமே வேறு தனிமொழியாகும் வாய்ப்பும் ஏற்படும் போல இருக்கிறது. ஆகவே உனது திருப்பணியைத் தொடங்கத் தகுந்த காலம் இதுதான்.”

இராஜேந்திரனுக்குத் தலை சுற்றியது. தந்தை இது என்ன புதுமாதிரிப் பணியில் ஈடுபட முயல்கிறார்? கருவூரார் வேறு இரண்டு தலைமுறை, தான், தனது வழித்தோன்றல்கள், ஆயிரம் ஆண்டுகள் தொடரும் திருப்பணி என்று குழப்புகிறாரே! அரசர்கள் நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதிலும், தங்கள் புகழ் நிலைக்குமாறு பெரிய கற்றளிகள், சாலைகள் என்று கட்டுமானங்களில் ஈடுபடாமல், தமிழ்ப் பண்டிதர்கள் மாதிரி தமிழைக் கற்றுக்கொடுக்க கருநாடு, ஆந்திரம், தென் ஈழம், மேற்குச் சேரநாட்டுக்குச் செல்லுங்கள் என்கிறாரா என்று சிந்தித்தால், அவனுக்கு ஒன்றும் புரிபடவில்லை.

“மதுராந்தகா! கத்தியை மட்டும் சுழட்டினால் போறாதப்பா. அதைவிடச் சிறந்த ஆயுதமான புத்தியையும் சுழற்றவேண்டும். வாளினால் வெல்லமுடியாத வீரனையும் அணங்குகள் தன் கயல் விழிகளின் கூரிய பார்வையால் கட்டிவிடுவார்கள் என்பது உனக்கு தெரியாததா?” என்று குறும்புடன் இராஜேந்திரனிடம் திடுமென்று அவர் சொன்னது மற்றவருக்குப் புரியவில்லை, அவனுக்குத்தான் புரிந்தது. தன்னைச் சீண்டுவது தன் சிந்தனையை அலைபாய விடாமலிருக்க அவர் கையாளும் தந்திரம்தான் என்று அறிந்ததும் உடனே கடகடவென்று நகைக்கிறான் இராஜேந்திரன்.

“நீங்கள் சொல்வது எனக்கு முழுவதும் விளங்கவில்லை ஐயா! இந்தத் திருப்பணியின் நோக்கம் என்ன என்று தெளிவாகச் சொன்னால் என்போன்ற வீரர்களுக்கு சுலபமாக இருக்கும். முதலில் இது தந்தையின் திருப்பணி என்றும், அவர் இத் திருப்பணியைச் செய்வதற்காக நான் அரசுப்பட்டம் ஏற்கவேண்டும் என்றும் சொன்னீர்கள். அதற்குப்பிறகு இது இரண்டு தலைமுறைப் பணி என்றீர்கள். கடைசியில் இது ஆயிரமாயிரம் ஆண்டும் தொடரக்கூடிய வாழும் திருப்பணி என்றும் உரைக்கின்றீர்கள். எனக்குத் தெளிவு தேவை ஐயா, தெளிவு தேவை!”  என்று தன் குழப்பத்தை எடுத்து உரைக்கிறான் இராஜேந்திரன்.

“மதுராந்தகா! சைவத் திருப்பணி என்று ஆரம்பித்தது? அது எப்பொழுது முடியப் போகிறது?” கேள்வி பிறக்கிறது கருவூராரிடமிருந்து.

“பெரிய பாட்டனார் விஜயாலய சோழர்...” என்று இழுத்த இராஜேந்திரனை இடைமறித்த இராஜராஜர், “அது எப்பொழுது தொடங்கியது என்று சொல்ல இயலாது, இராஜேந்திரா! அது தலைமுறை தலைமுறையாகத் தொடர்கிறது. அது உன்காலத்திலும் தொடரும், உன் வழித் தோன்றல்கள் காலத்திலும் தொடரத்தானே போகிறது!”  என்கிறார்.

“பாண்டியர்களையும், சேரர்களையும், சாளுக்கியர்களையும், இன்னும் இந்தப் பாரத மண்ணில் தோன்றிய எத்தனை எத்தனை மன்னர்களையும், தமிழ்நாட்டின் நாயன்மார்களையும், சமய குரவர்களையும் விட்டுவிடலாமா?” என்று தொடர்கிறார் கருவூரார்.

“சைவப்பணி வாழும் திருப்பணி. சைவம் மட்டுமல்லாமல், வைணவ, சமண, புத்த சமயங்களும் தமிழ்ப்பணி செய்து வருகின்றன. தமிழில் எத்தனை பக்திப் பாடல்கள், பிரபந்தங்கள், காவியங்கள், இலக்கணங்கள் எழுதப்பட்டு வருகின்றன? இவை எல்லாம் தமிழ்ப் பணிதானே! புலமை பெற்ற மன்னர்களும் இருக்கிறார்கள், புலவரை ஆதரிக்கும் மன்னர்களும் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அருள்மொழியின் நோக்கு தொலைநோக்கு. இப்பொழுது தமிழ்நாட்டிலேயே தமிழ் சுருங்கும் நிலையைத் தவிர்த்து, சோழ பேரரசு முழுவதும் தமிழ்கூறும் நல்லுலகமாக ஆக்குவதே அவனது திருப்பணியாகும். அவன் குறிக்கோள் சோழ பேரரசு மட்டுமல்ல, இப்பாரதமே தமிழ் கூறும் நல்லுலகம் ஆகவேண்டும், ஆக்கப்படவேண்டும் என்பதுதான். இப்பொழுது புரிகிறதா மதுராந்தகா?”

“புரிகிறது ஐயா! ஆனால் வாளெடுத்துப் போர்புரிந்து சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பரப்புவது போல மக்களைக் கத்தியைக் காட்டி, மிரட்டி, தமிழ் பேச வைக்கமுடியுமா? எனது மருமகன் நரேந்திரனே தமிழைச் சரியாகப் பேசுவதில்லை என்று தங்கை குந்தவி புகார் செய்து சேதி அனுப்பியிருக்கிறாள்!” என்று விவாதம் செய்கிறான் இராஜேந்திரன்.

“அந்த நிலையைத் தவிர்ப்பது எப்படி, தமிழை நிலைநாட்டுவது மட்டுமன்றி அவளை அனைவரும் தாயாக வரிப்பது எப்படி என்றுதான் நாம் இப்பொழுது விவாதிக்கிறோம், இராஜேந்திரா! ஆகவே நீ அமைதி காப்பாய்!” என்று புன்னகையுடன் இராஜராஜர் சொன்னாலும், அவர் தன்னைக் கன்னத்தில் அறைந்தது போலத்தான் உணர்ந்தான் இராஜேந்திரன். சோழ சாம்ராஜ்ஜியத்திற்குச் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்போவதற்குச் சம்மதித்துவிட்டு, சிறிது நேரம் சென்று நம்மை இத்தனை பேர் முன்னால் ஒரு சிறுவனைப் போல் நடத்துவதா...?

அமைதியாகிவிட்டான் இராஜேந்திரன். அவன் முகத்தில் இதுவரை இருந்த ஆர்வம், உற்சாகம், பங்குபெறும் தன்மை எல்லாம் மறைந்துவிடுகிறது. தன் சொற்களுக்கு மதிப்பு இல்லையா, தனக்குப் பேசத் தெரியாது என்று தந்தைக்கு நினைப்பா, அல்லது அவரது திருப்பணியைத் தான் விரும்பவில்லை என்று நினைத்துக் கொண்டு தன்னை அடக்க முயற்சிக்கிறாரா என்று நினைத்தால் அவனுக்கு ஆத்திரமும், எரிச்சலும் உண்டாகிறது.

அவன் அதை என்னதான் அடக்கிக்கொண்டாலும் அவனது முகவாட்டம் குந்தவைப் பிராட்டிக்கும், கருவூராருக்கும் தெரியாமல் போகவில்லை. என்னதான் பிள்ளையானாலும், மற்றவர்முன் சட்டென்று “அமைதி காப்பாய்!” என்று சொல்வது “வாயை மூடிக்கொள்!” என்பதற்கு ஈடாகாதா, இப்படிச் சொல்லக்கூடாது என்பதை எப்படி சோழ ராஜ்ஜியச் சக்கரவர்த்தியான தனது தம்பிக்கு இத்தனைபேர் முன்பு எடுத்து உரைப்பது என்று கலங்குகிறாள் குந்தவைப் பிராட்டி.

அங்கு ஒரு சங்கடமான அமைதி நிலவுகிறது.

வாய்விட்டுச் சிரித்து அந்த அமைதியைக் கலைக்கிறார் கருவூரார்.

“அருள்மொழி! தந்தை என்ற முறையில் உனக்கு இருக்கும் உரிமையைவிட, தமிழ்த் திருப்பணியை மதுராந்தகன் தொடர்ந்து நிறைவேற்றுவது அதைவிட முக்கியம் அல்லவா? வருங்காலச் சோழச் சக்கரவர்த்தி தனது தந்தையின் ஆசானிடம் திருப்பணியை நிறைவேற்றுவதில் உள்ள இடையூறுகளை எடுத்து உரைப்பது அவனது கடமை அல்லவா?”

மீண்டும் தொடர்ந்து சிரிக்கிறார் கருவூரார்.

“அனைவரும் நன்கு உண்டு உறங்கி ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். நாளை மதிய ஆராதனைக்குப் பிறகு பெருவுடையார் கோவில் மண்டபத்துக்கு அருகில் இருக்கும் இந்தக் கட்டையின் குடிசையில் நமது திருப்பணியைப் பற்றித் தொடர்ந்து பேசுவோம். மதுராந்தகா! இரவு முழுவதும் நன்கு சிந்தித்து உன்னுள் எழும் இன்னும் பல ஐயங்களையும் கொண்டுவா. அவைகளைக் களைவது பற்றியும் விவாதிப்போம்!” எழுந்து கொண்டு இராஜராஜரிடம் கைகளை நீட்டுகிறார்.

தயக்கத்துடன் தங்கச் சுருளை குழலில் செருகி, குழலின் வாயை மூடி, கருவூராரிடம் கொடுக்கிறார் இராஜராஜர். கருவூரார் பதிலே பேசாமல் அதைப் பேழையில் வைத்து, அதைச் சிவாச்சாரியிடம் கொடுத்துவிட்டு நடக்கிறார்.

இராஜராஜரையும், இராஜேந்திரனையும் பணிந்த பிறகு, மகாராணி, குந்தவைப் பிராட்டி இவர்களுக்குத் தலை சாய்த்துவிட்டு கருவூராரைப் பின்தொடர்கிறான் சிவாச்சாரி.

வெண்ணெய் திரண்டு வரும்பொழுது தாழி உடைகிறதோ என்று கவலை கொள்கிறார் இராஜராஜர். இராஜேந்திரன் அருகே சென்று அவன் தோளில் கையை வைத்து இலேசாக அழுத்துகிறார். அவரைத் திரும்பிப் பார்க்கிறான் இராஜேந்திரன். இருவரின் உதடுகளும் துடிக்கின்றன, கண்கள் மௌனமாகப் பேசிக்கொள்கின்றன, ஒலியெழுப்பாமல்...

“இராஜேந்திரா! நான் என்றுமே உன்னை எனது சிறுவனாக நினைத்து வந்து விட்டேனடா. அது தவறுதான்!”

“இல்லை தந்தையே! நான் தனியாக இருக்கும் பொழுது என்றும் உங்களுடைய சிறுவன்தான்!”

“இந்தத் திருப்பணியின் ஆர்வத்தில் அது எனக்குச் சற்று மறந்து போய்விட்டதடா!”

“அது எனக்கும் தெரியும் தந்தையே! அன்னையும், அத்தையாரும், அரசகுருவும் எனக்கு உங்களைப் போலத்தான். இருந்தாலும் சிவாச்சாரி முன்னிலையில்...”

“தெரியுமடா கண்ணா! ஆர்வத்தில் அவனை மறந்து விட்டேன்!”

“தெரிந்து கொண்டேன் தந்தையே!”

“நீ என் கண்ணின் மணியடா, இராஜேந்திரா!”

“அறிவேன் தந்தையே!”

“இந்த மோசமான நிலைமையை மறந்து விடுவோமடா!”

“அப்படியே தந்தையே!”

இராஜராஜர் தன் தோளில் வைத்த கையின்மேல் தன் கையை வைத்து அழுத்துகிறான் இராஜேந்திரன். இருவரும் சிறிது நேரம் அப்படியே இருந்து விட்டு ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்கிறார்கள்.

குந்தவைப் பிராட்டி அவர்கள் இருவரையும் தழுவிக் கொள்கிறாள். சோழமகாதேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரள்கிறது.
இராஜேந்திரன் அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அரண்மனையில் தன் வளாகத்திற்கு செல்கிறான்.

இராஜராஜரின் தமிழ்த் திருப்பணியில் இருந்த ஆர்வமும் உற்சாகமும் திடுமென்று அவனுக்கு சற்றுக் குறைந்திருப்பது தன் தந்தை மற்றவர்முன் “அமைதி காப்பாய்!” என்று சொன்னதனாலா என்று நினைத்துப் பார்க்கிறான். இப்போது இருக்கும் மன நிலையில் அதைப் பற்றிச் சிந்திப்பதைவிட, தனக்கு நண்பனாகக் கிடைத்த சிவாச்சாரியை எதிர்காலத்தில் எப்படித் தனது திட்டங்களில் பங்குபெறச் செய்யலாம் என்பதில் சிந்தனையைச் செலுத்துவதே நல்லது என்று எண்ணியபடி தன் வளாகத்தை அடைகிறான்.

“தந்தையே! இவ்வளவு விரைவில் திரும்பிவிட்டீர்களே! கருவூர்த் தேவரும், அத்தையாரும் உங்களுடன் சென்றதால் நீங்கள் நெடுநேரம் அவர்களுடன் இருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்.” என்ற மகள் அம்மங்கையின் குரல் அவனை நிகழ்காலத்திற்கு ஈர்க்கிறது.

எட்டே வயதான இரண்டாம் மகளைக் கண்டதும் அவன் முகம் மலர்கிறது. கைகளை நீட்டுகிறான். ஓடிவந்து அவனைக் கட்டிக்கொள்கிறாள் அம்மங்கை.

“கருவூரார் எங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வு கொடுத்துவிட்டாரம்மா! நாளை மதிய வழிபாட்டுக்குப் பின்னர் அவரை மீண்டும் சந்திக்கச் செல்லப் போகிறோமம்மா!” என்று அவளது கன்னத்தை நிமண்டியபடி பதில் சொல்கிறான் இராஜேந்திரன்.

“அதுசரி, உன் அக்கா நங்கை எங்கே?” என்று கேட்கிறான். மூத்தமகளின் முழுப்பெயர் அருள்மொழி நங்கை என்றாலும், தந்தையின் பெயரைச் சொல்வது மரியாதை இல்லை என்பதால் நங்கை என்று மட்டுமே சுருக்கி விளிக்கிறான்.

“அக்காவைப் பற்றிக் கேட்காதீர்கள், தந்தையே! எப்பொழுது பார்த்தாலும் தேவாரம், திருவாசகம் என்று பாடிக்கொண்டு, சிவபூசை செய்துகொண்டு இருக்கிறாள். அரசகுமாரியாக மட்டும் இல்லாவிட்டால் கோவிலே கதியாகக் கிடப்பாள். நீங்கள் அவனுக்கு ஒரு சிறிய சிவன் கோவில் கட்டிக் கொடுத்துவிட்டால் நல்லது என்று எனக்குப் படுகிறது!” குறும்பாகப் பதில் கூறுகிறாள் அம்மங்கை.

“இப்படியெல்லாம் பேசக்கூடாது மங்கை! பதினேழு வயதான அவளுக்கும் திருமண வயது வந்து விட்டது. தமக்கை என்ற மரியாதையைக் காட்ட வேண்டும், நீ!” என்று மகளைச் செல்லமாகக் கடிந்து கொள்கிறான்.

“நீங்கள் கொஞ்சம் அக்காவைக் கட்டுப்பாட்டில் வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவள் ஒரு சிவனடியாரைத் திருமணம் செய்து கொண்டு, அரசவாழ்வை விட்டாலும் விட்டுவிடுவாள்!” என்று குறும்பாகச் சொன்னது இராஜேந்திரனின் மனத்தில் சிறிய கலக்கத்தை உண்டு பண்ணுகிறது. நங்கையைப் பற்றி அவள் தாயான இளையராணி பஞ்சவன் மாதேவியிடத்தில் பேசவேண்டும் என்று முடிவு செய்து கொள்கிறான்.

“தந்தையே! அண்ணன்மார்கள் இருவரும் வந்திருக்கிறார்கள். அன்னையார் அவர்களிடம் பேசிக் கொண்டு உள்ளார்கள்.” என்று தெரிவிக்கவும், இராஜேந்திரனின் இரு புதல்வர்களும் அவர்கள் எதிரில் வரவும் சரியாக இருக்கிறது.

“வணக்கம் தந்தையே!” என்று தலை சாய்த்து வணங்குகின்றனர் இருவரும். பதினைந்து வயதான இராஜாதிராஜனையும், பன்னிரண்டு வயதான இராஜேந்திர தேவனையும் கைகளுக்கு ஒருவராகத் தழுவிக் கொள்கிறான் இராஜேந்திரன்.

போர்ப்பயிற்சிக்காகச் சென்றிருந்த இருவரும் விடுமுறையில் அரண்மனைக்கு வந்திருப்பது அவனுக்கு மகிழ்வைத் தருகிறது. அவர்களைப் பார்த்து கிட்டத்தட்ட ஒரு ஆண்டு ஆகிவிட்டது. பெருவுடையார் கோவில் குடமுழுக்குக்கூட அவர்களால் வர இயலாது போய்விட்டது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் அவர்களும் சோழப் பேரரசின் தூண்களாக நின்று தனக்கு உதவியாகப் போரிடுவார்கள் என்பதை நினைக்கும்போது அவனுக்குப் பெருமையாகவே இருக்கிறது.

அவர்களைப் பார்த்தவுடன் அவனுக்கு சற்றுமுன் ஏற்பட்ட மனக்கலக்கம்கூட நீங்க ஆரம்பிக்கிறது. இவர்களை ஒருகாலும் தான் நடத்தப்ட்டதைப்போல நடத்தமாட்டேன் என்று மனதிற்குள் உறுதி செய்து கொள்கிறான்.

“வெற்றி மாது என்றும் உங்கள் துணையாக இருப்பாளாக!”  என்று வாழ்த்தியவன், “உங்களது போர்ப் பயிற்சி எவ்வாறு இருந்தது? என்னென்னவெல்லாம் கற்றுக் கொண்டீர்கள்?”  என்று கேட்கிறான்.

“தந்தையே! கடந்த ஒரு ஆண்டாக உங்கள் சொற்படி நாங்கள் கடற்படையில் பயிற்சி பெற்றோம். நக்காவரம்24 வரை சென்று வந்தோம். கடல் நீச்சல், நாவாய்ப் போர், கயிறு மூலம் ஒரு கப்பலிலிருந்து மறு கப்பலுக்குச் செல்லுதல், கடலுள் முக்குளித்து நெடுநேரம் நீஞ்சிச் செல்லுதல், கப்பல் ஓட்டுதல், இரண்டு மூன்று நாள்கள் கடலையே நம்பி மீன்பிடித்து அவற்றையே உணவாகக் கொண்டு உயிர்வாழ்தல் முதலியவற்றைக் கற்றோம்!” என்று பதிலளிக்கிறான் இராஜேந்திர தேவன். மூத்தவன் இராஜாதிராஜன் அதிகம் பேசாதவன் ஆதலால், தம்பியையே பெருமை பேசிக்கொள்ள விட்டுவிடுகிறான்.

“அய்யே! பச்சை மீன்களையாக தின்று உயிர்வாழ்ந்தீர்கள்? வ்வே, நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு வயிற்றைப் புரட்டுகிறது!” என்று மூக்கைச் சுளிக்கிறாள் அம்மங்கை.

“மீனைப் பாண்டியர்களின் தலைகள் என்று நினைத்துக் கொண்டோம் தந்தையே!” அப்பொழுது பச்சை மீனை உண்கிறோமே என்ற அருவருப்பு தெரியவில்லை!” என்று பெருமையுடன் சொல்கிறான் இராஜேந்திர தேவன்.


பதினைந்தும், பன்னிரண்டு வயதும் உள்ள தன் புதல்வர்கள் பேசும் வீரப் பேச்சு இராஜேந்திரனுக்குப் பெருமிதத்தை வரவழைக்கிறது.[வளரும்]
-----------------------------------------------------------------------------------------------------------------------அடிக்குறிப்பு 

23பழங்காலத்தில் தற்பொழுதைய கர்நாடக மாநிலத்தைக் “கருநாடு” என்று தமிழர்கள் அழைத்தனர்.
24 தற்பொழுதைய அந்தமான், நிக்கோபார் தீவுகளுடைய சோழர்காலப் பெயர்.
25மீன் பாண்டியர்களின் அடையாளம் ஆனதால், அது பாண்டியர்களுக்கு ஒப்பிடப் படுகிறது.

No comments:

Post a Comment