Sunday 27 July 2014

இடைப்பாடி அமுதன் எழுதிய கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ'

தாமஸ் மன்றோ 
பற்பல வகை நூல்கள் பிறக்கின்றன. ஆசிரியர்களின் கடும் உழைப்பால் உருவாகின்றன. ஆனால் சில நூல்கள் மட்டுமே காலத்தைக் கடந்து அழியாத வரலாற்றுப்பெட்டகத்தில் மணியாரங்களாக நிலைத்து நிற்கிற நூல்கள் வெகு வெகு சொற்பம். அவற்றிலும் வரலாற்று ஆய்வுகளாக உள்ளவைகளை விரல் விட்டு எண்ணி விடலாம் .
                                                       
 இடைப்பாடி அமுதன்

அத்தகைய வரலாற்று ஆய்வுகளில் தனி மிடுக்கோடு தலை தூக்கி நிற்கும் நூல் தான் இடைப்பாடி அமுதன் எழுதிய 'கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ'கொங்கு நாட்டுத் தொழில் வேந்தர் டாக்டர் .நா.மகாலிங்கம் அவர்கள் இந்நூலைப் பற்றி, வரலாற்றுப்புதையல் என்று மனமாரப் பாராட்டி நுண்மை, உறுதி, அழகு, உழைப்பு ஆகிய பிரிகளை ஊடாகவும் பாவாகவும் போட்டு நெய்த விலைமதிப்பற்ற பட்டினை இடைப்பாடி அமுதன் தந்தமைக்கு கொங்கு நாடு மட்டுமல்ல , தமிழகமே பெருமை கொள்ளும் என்று பாராட்டியிருக்கிறார்.

                                                     
டாக்டர் .நா.மகாலிங்கம் அவர்கள்
அரசியல் நிர்ணய சபை உறுப்பினரும் நாடாளு மன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான டி .எம்.காளியண்ணன் அவர்களோ இளங்கோவடிகள் காப்பிய நாயகி கண்ணகியை வேட்டுவ வரியில் இவளோ!கொங்கச்செல்வி!குடமலையாட்டி எனப்புகழ்ந்து கண்ணகியைக் கொங்கு நாட்டின் செல்வி எனக்காட்டுவது போல அமுதனும் மன்றோவைக் கொங்கு நாட்டு மண்ணில் முன்னிறுத்துகிறார். கொங்குநாட்டின் வர்ணனைகள் என்ற வர்ணஜாலங்களுடன் இந்நூல் மிளிர்கிறது என்று கூறி 'வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட தந்தை, மகன் மன்றோவை இந்தியாவுக்கு அனுப்ப , நாட்டைப் பிரிந்து குடும்பத்தைப் பிரிந்து  இங்கேயே தங்கி கடமையே மூச்சாக வாழ்ந்து மறைந்த மன்றோ தமிழ் விவசாயிகள் மற்றும் நெசவாளிகளின் வரிகளைக் குறைக்கத் தன் மேலதிகாரிகளிடம் போராடிவர். 
கிடைத்த வருமானத்தில் நிறைவு கொண்டு கையூட்டு மயக்கத்திற்கு ஆளாகாதத் தகைமையாளர் என்று அமுதன் நிலை நிறுத்திக் காட்டியதைப் போற்றி எழுதியிருக்கிறார். 
டி.எம்.காளியண்ணன் 

உலகெங்கும் தம் நகைச்சுவை எழுத்து ஆற்றலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ள ஜ.ரா.சுந்தரேசன்[அப்புசாமி சீதாப்பாட்டி] என்ற கொங்குநாட்டுக்காராரோ[ஜலகண்டபுரத்தில் பிறந்து சேலத்தில் படித்தவர்],திருமணம் செய்துகொள்ளக்கூட நேரமில்லாது உழைத்த மன்றோ தம் 53வது வயதில் தன்னை விட 30 வயது இளைய பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டதை அமுதன் உயர்த்திக்காட்டுவதைப் போற்றுகிறார். 
காலரா பரவியிருந்த நேரத்தில் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் அஞ்சாமல் சென்று அந்தக் கொடிய நோய்க்கு எவ்விதம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று கண்காணிக்கச் சென்று அதனாலேயே அதே காலராவுக்கு இரையாகி மடிந்து இந்திய மண்ணிலேயே அடக்கம் செய்யப்பட்ட மன்றோவின் கதையைக் கூறும் இந்த நூல் மன்றோவைத்துதி பாடுவதற்காக எழுதப்பட்ட நூல் அல்லவே அல்ல; படிக்கப் படிக்க துடிக்கும் தேசிய உணர்வுகளை ஓசைப்படாமல் தட்டி எழுப்பி இந்திய மக்களைச் சற்றே திரும்பிப் பார்க்கவைக்கிறது என்று புகழ்கிறார்.
                                                       
ஜ.ரா.சுந்தரேசன்
நூலாசிரியர் அமுதன், தேடிவந்த கவர்னர் ஜெனரல் பதவியை 'வேண்டாம்' என்று மறுத்த மன்றோ எழுத்து, போர்த்திறன், நேர்மை, கடின உழைப்பு, கடமை, சுய முன்னேற்றம் போன்ற அறிய குணங்களின் முன்மாதிரி சான்றுகள் என்று காட்டி நிறுவும்போது இது வெறும் வரலாற்று நூல் மட்டுமல்ல என்ற உணர்வு நமக்குள் எழுகிறது. இத்தனைப் பெருமக்கள் கூறியது எவ்வளவு சரி என்பதை, ஒரு முறை நூலை வாசித்தவர் உணர்வார்கள்.
இந்த நூலை எழுதியதோடு மட்டுமின்றி நாட்டின் கரங்களில் இது தவழவேண்டும் என்று, தம் சொந்தக் காசைச் செலவழித்து அற்புதமான முறையில் வெளிக்கொணர்ந்துள்ள அமுதன் அவர்களுக்கு நாம் செய்யக்கூடிய பாராட்டும் நன்றியும் அந்த நூலை விலைக்கு வாங்கிப் படிப்பது தான்.

நூல் பெயர்: கொங்குநாட்டில் தாமஸ் மன்றோ 
ஆசிரியர்: இடைப்பாடி அமுதன் 
அளவு: டெமி 
பக்கங்கள்:304
விலை:145/=
பதிப்பகம்: அனுராதா பதிப்பகம் 
                   9, ஜலகண்டபுரம் ரோடு,
                   இடைப்பாடி-637101
தொடர்பு எண் :9487323457
                                                        

No comments:

Post a Comment