Monday 28 July 2014

தமிழ் இனி மெல்ல 20:“நரேந்திரா! உன் தாயிடம்கூடத் தாய் மொழியில் பேசமாட்டாயா?”

தமிழ் இனி மெல்ல [19] சென்ற பதிவின் இறுதி
“மகிந்தரே! பாண்டிய நாட்டின் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களைச் சுமந்து கொண்டு அந்தக் கப்பல்கள் வந்திருக்கின்றன. அவை தற்பொழுது பாண்டிய நாட்டில் இருந்தால் சோழர்களின் கழுகுக் கண்களிலிருந்து தப்பாது. அவர்கள் எங்கள் பொக்கிஷங்களுக்காக நாயைப் போல மோப்பம் பிடித்துக் கொண்டு திரிகிறார்கள். அதை அவர்களுக்குத் தெரியாமல் இங்கு கொண்டு வந்திருக்கிறேன். பாண்டி நாட்டை அவர்களின் பிடியிலிருந்து மீட்டுக் கொண்டவுடன் நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என் பொக்கிஷங்களையே உங்களிடம் ஒப்படைக்கப் போகும் எனக்கு தங்கள் படைகளை உதவியாகத் தரலாம் அல்லவா?” என்று மனதில் எரிச்சலுடனும், உதட்டில் புன்னகையுடன் கேட்கிறான் அமரபுஜங்கன்.

“பாண்டிநாட்டுப் பொக்கிஷமா!” இலங்கை அரசனின் வாய் அவனையும் அறியாமல் இலேசாகப் பிளக்கிறது. “கப்பல் கப்பலாக அப்படி என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்?”

“மகிந்தரே! பரம்பரை பரம்பரையாகப் பாதுகாத்து வந்த எங்கள் நாட்டுப் பொக்கிஷத்தைதான் நாங்கள் கொணர்ந்திருக்கிறோம். இவற்றில் தலையாயது எங்கள் அரியணை, களப்பிரர்களை ஒழித்த எங்கள் கடுங்கோள்19 முதன்முதலாக ஏறிய அரியணை, அரிகேசரி மாறவர்மன் நின்றசீர் நெடுமாறன் தமிழ் பேசும் மூன்று நாடுகளையும் தனது ஒரு குடையின்கீழ் அமர்ந்து ஆட்சி செய்த அரியணை. ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாண்டியர்கள் அமர்ந்து யாருக்கும் தலைபணியாமல் ஆட்சி செய்து வந்த அரியணை. அந்த அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்ய அடிமையாகச் சோழனுக்குக் கப்பம் கட்டும் எனக்கு ஏது மகிந்தரே தகுதி இருக்கிறது? அது மட்டுமல்ல அவர்கள் பல போர்கள் செய்து பாண்டிநாட்டைப் பாதுகாத்து வந்த வீர வாட்கள் பல இருக்கின்றன. இவற்றிற்கும் தலையாய எங்களது பாண்டிநாட்டின் மணி மகுடமும் உள்ளது.20 இவை எங்கள் உயிருக்கும் மேலானவை. இவைகள் இல்லாத பாண்டிநாடு பாண்டிநாடே அல்ல. இருந்தாலும் அவை அனைத்தையும் உம் ரோகணத்திற்கு பாதுகாப்பிற்காகக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் உயிரிலும் மேலான எங்கள் பரம்பரைச் சொத்தை உம்மிடம் ஒப்பித்து அதைப் பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்ளத்தான் வந்திருக்கிறோம். நீர் எமக்குப் படை உதவி செய்யாவிட்டாலும் கவலை இல்லை என்று எங்கள் பரம்பரையில் வரும் ஒரு பாண்டியன் எப்பொழுது சுதந்திரமாக பாண்டிய நாட்டை ஆளுவானோ அப்பொழுது அவன் சிங்களநாட்டிலிருந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளுவான். வேறு எந்த உதவி செய்யாவிட்டாலும் இந்த உதவியைச் செய்யுங்கள் மகிந்தரே!” உணர்ச்சிப் பெருக்குடன் மகிந்தனை வேண்டிக் கொள்கிறான் அமரபுஜங்கன்.

“பாண்டியரே! என்மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கு எப்படி நான் நன்றி சொல்லப் போகிறேன்? என் உயிரைக் கொடுத்தாவது உம் நாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்!”  என்று வீரமாகப் பாண்டிய மன்ன்னுக்கு வாக்களிக்கிறான் மகிந்தன்

தமிழ் இனி மெல்ல 20 [தொடர்கிறது]


அரிசோனா மகாதேவன்


“மூன்று கப்பல்களில் பொக்கிஷங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை எனக்குப் படை திரட்டிக் கொடுக்க உமக்கு அன்பளிப்பாக அளிக்கிறேன். இன்னொன்றில் இருக்கும் எங்கள் பரம்பரைச் சொத்தைப் பாதுகாத்து வருவீராக. மூன்றாவதில் இருப்பதை எனக்குத் தேவைப்படும் காலத்தில் வாங்கிக் கொள்கிறேன். இந்த மூன்றையும் உம் அனுமதியின் பேரில் நாங்கள் நீங்கள் சொல்லுமிடத்தில் இறக்கி வைக்கிறோம். எங்கள் பொக்கிஷத்துடன் என் மெய்காப்பாளன் ஒருவனும் இருப்பான். அவனுக்கும், அவனது உதவியாளர்களுக்கும் தங்க வசதி செய்து கொடுப்பீராக. ஒரு கப்பலில் நானும், என் அந்தரங்கப் படையும், இன்னொரு கப்பலில் பாண்டிய வீரர்களும், படைத் தலைவர்களும் இருக்கிறார்கள். நீர் தரும் படைகளை நான் காலியாகும் மூன்று கப்பல்களில் ஏற்றிச் செல்வேன். நீரும் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் மேலும் படைகளை அனுப்பி வைத்தால், சமயம் பார்த்து பாண்டி நாட்டை மீட்டுக் கொள்வேன்,” என்று தன் திட்டத்தை மேலும் விவரிக்கிறான் அமரபுஜங்கன்.

அதற்குச் சம்மதிக்கிறான் மகிந்தன். சபை கலைந்து பாண்டியன் தன் பரிவாரங்களுடன் விருந்தினர் மாளிகைக்குக் கிளம்புகிறான். வலப்புறம் திருமாறனும், இடப்பக்கம் முருகேசனும் காவலாகக் குதிரையில் வருகிறார்கள்.

“முருகேசா! நீதான் பாண்டி நாட்டுப் பொக்கிஷத்திற்குக் காவலாக இருந்து வர வேண்டும்! உனக்குத் துணையாக நூறு சிறந்த பாண்டிய வீரர்கள் இருப்பார்கள். அதனால்தான் உன்னையும், அவர்களையும் குடும்பத்துடன் வரச்சொன்னேன். உன் அண்ணன் திருமாறன் என்னுடன் பாண்டியநாடு திரும்புவான்.” என்று தன் மகனின் பின்னால் நிற்கும் முருகேசனிடம் சொல்கிறான் அமரபுஜங்கன்.

“என் உயிரைக் கொடுத்து நம் பாண்டிநாட்டுப் பொக்கிஷத்தைக் காப்பேன்! இது மதுரை மீனாட்சி மீது ஆணை, அரசே!”  என்று பணிவுடன் பதில் சொல்கிறான் முருகேசன்.

“உன் பாட்டன் வெற்றிமாறன் மகாவீரன் முருகேசா! என் பாட்டனாருக்குக் கொடுத்த வாக்குறுதிக்காகத் தன்னுயிரைக் கொடுத்து ஆதித்த கரிகாலனை அழித்தான். அவனது போர்கள் அனைவரும் பாண்டிநாட்டு வீரர்கள் அல்லவா? உன் தமையன் வீரமாறன் என்னுடனும், இளவரசனுடன் திரும்புவான்.”

“தங்கள் ஆணை, அரசே!”  என்று தலை வணங்குகிறான் முருகேசன். பாண்டிய நாட்டுக்குத் திரும்பிச் செல்லவே முடியாது போய்விடும் என்று அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.

                                                                  * * *
                            சளுக்கியர் அரண்மனை, வேங்கை நாடு
                        சாதாரண, ஆனி 28 - ஜூலை 13, 1010

வேங்கை நாட்டின் தலைநகர் வெங்கியில் மன்னர் சக்திவர்மனின் தம்பி மகன் இராஜராஜ நரேந்திரனின் பிறந்தநாள் விழாவைச் சிறப்பாகக் கொண்டாட அரண்மனை விழாக்கோலம் கொண்டிருக்கிறது. இளவரசன் விமலாதித்தனின் முதல் மனைவியும், சக்கரவர்த்தி இராஜராஜ சோழரின் மகனும், இராஜேந்திர சோழனின் தங்கையுமான குந்தவியின் மகனான அவனுக்கு தாய்வழிப் பாட்டனார் இராஜராஜரின் பெயரைச் சூட்டியிருக்கிறான் விமலாதித்தன். தன்னிடம் அடைக்கலம் புகுந்த சக்திவர்மனுக்காக மேலைச் சாளுக்கியனான சத்யாஸ்ரயனைப் போரில் வென்று, வேங்கை நாட்டை மீட்டு, வேங்கை நாட்டை சக்திவர்மனுக்கே திரும்ப அளித்ததோடு மட்டுமல்லாமல் தனது மகளாக குந்தவியையும் அவனது தம்பி விமாதித்தனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தார். அந்த நன்றிக்காகவே, இராஜராஜனின் பெயரைத் தனது மகனுக்குச் சூட்டியிருந்தான் விமலாதித்தன்.

“நரேந்திரா, தாமதம் செய்து கொண்டிருக்காதே. நாம் உன் பிறந்த நாள் விழாவுக்குப் புறப்பட வேண்டும்!” என்று செல்லமாக அதட்டுகிறாள் குந்தவை.

“ஒக நிமிஷமண்டி, நேனு ஒஸ்தானன்டி.” தான் என்னதான் தமிழில் பேசினாலும், அவன் தெலுங்கிலேயே பதிலளிப்பது குந்தவைக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் தெரிந்த விமாதித்தனும் இப்பொழுது தெலுங்கிலேயே அவனுடனும் நரேந்திரனிடமும் பேச ஆரம்பித்து இருக்கிறான். ஆரம்பத்தில் தன்னுடன் தமிழில் பேசிவந்த விமலாதித்தன் வேங்கை நாட்டிற்குத் திரும்பி வந்ததும் ஏன் இப்படி நடந்து கொள்ள ஆரம்பிக்கிறான் என்று குழம்புகிறாள் குந்தவி.

தன் பேரன் தமிழில் பேசத் தெரியாமல் இருக்கிறான் என்று தெரிந்தால் தனது தந்தை என்ன நினைப்பார் என்று எண்ணினாலே மிகவும் வேதனையாக இருக்கிறது அவனுக்கு. முதலில் விமலாதித்தனுக்கு மேல் ஏற்பட்ட தனது காதலை அவர் விரும்பவில்லை. ஆயினும் அண்ணன் இராஜேந்திரன் தன் பக்கம் பேசியதால்தான் தன் காதல் திருமணமாகக் கனிந்தது என்றும் அறிவாள். இப்பொழுது அவனிடம், “உன் மருமகனுடன் பேசவேண்டுமென்றால் நீ தெலுங்கைக் கற்றுக்கொள்ள வேண்டும்!”  என்று எப்படிச் சொல்லமுடியும்?

மேலும், அவனது மகளான அம்மங்கைக்கு (அம்மங்கைத் தேவி) தனது மகனைத் திருமணம் செய்துவை என்று எப்படிக் கேட்கமுடியும்? நரேந்திரனுக்கும் பதினேழு வயது இன்று பிறக்கிறது. கோபக்காரனனான அண்ணன் இராஜேந்திரன் விஷயம் தெரிந்தால் என்ன செய்வானோ, எப்படிக் கத்துவானோ? தமிழ்த் திருமறைகளை தில்லைவாழ் அந்தணர்கள் மூலம் பரிசாகப் பெற்ற தனது தந்தை, அவரது பேரன் தமிழைப் பேச மறுக்கிறான் என்றறிருந்தால் சினத்தில் என்ன செய்வாரோ?

விமலாதித்தனுக்குத் தன்பால் ஈர்ப்பு குறைகிறது என்பதைத் திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே தெரிந்து கொண்டாள் குந்தவி. அவன் வேறொரு பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே மணந்தது அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் மன்னர்கள் பட்டத்து ராணியைத் தவிர மற்றவர்களையும் மணப்பதும் அவள் அறிந்ததுதான். இதற்குத் தன் தந்தையும், அண்ணனும்  விலக்கு அல்ல என்றும் அவள் அறிந்திருந்ததால் அதை ஒரு பெரிய குறையாகக் குந்தவி நினைக்கவில்லை. தவிர, விமலாதித்தன் குந்தவியிடம் காட்டிய அன்பையும், மரியாதையையும், மற்ற மனைவியிடம் காட்டவில்லை.

கிட்டத்தட்ட ஓராண்டு இடைவெளிக்குள்ளேயே மற்றவளுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது குந்தவிக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. விஜயாதித்தன்21 என்று பெயரிட்டு வளர்ந்த அந்தப் பையனிடமும் அன்பைத்தான் காட்டினாள் குந்தவி. இருந்தாலும் தன் மனக்கசப்பை இராஜராஜனிடமோ, இராஜேந்திரனிடமோ சொல்ல அவள் விரும்பவில்லை.
தமிழ்ச் சோழச் சக்கரவர்த்தியின் பேரனான நரேந்திரனுக்கு தெலுங்கு அறிஞரான நன்னய்ய பட்டாரகரை22 தெலுங்கைக் கற்பித்து வர விமலாதித்தன் ஏற்பாடு செய்ததனால், அவனுக்குத் தமிழைவிட தெலுங்கிலேயே ஈர்ப்பு அதிகமாகி வருவதையும் குந்தவியால் அறிந்து கொள்ள முடிகிறது.

 நரேந்திரனும், நன்னய்ய பட்டாரகரும், அடிக்கடி தெலுங்கிலேயே நிறைய தங்களுக்குள் பேசிக் கொள்வதையும் கவனித்திருக்கிறாள். நன்னய்யா சொல்வதற்கு நரேந்திரன் அடிக்கடி தலையாட்டுவதுதான் என்ன என்று தெலுங்கு தெரியாத அவளுக்குப் புரியவில்லை. தன் புகுந்தவீடு தமிழ் நாடாக இல்லாததாலும், தன் மகனே தாய்மொழியான தமிழை விடுத்துத் தெலுங்கிலேயே பேசிவருவதும் அவளுக்கு தான் தனித்து விட்டது போன்ற  ஓர்  உணர்ச்சியைத் தோற்றுவிக்கிறது.

திரிபுவனச் சக்கரவர்த்தியான இராஜராஜ சோழரின் ஒரே மகளான தான் இப்படித் தன் மகனைப் பற்றிக் கவலைப் படுவது அவளுக்கே சில சமயம் புரியாத புதிராக இருக்கும். சோழப் பேரரசின் வடகோடியில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளை உள்ளடக்கிய வேங்கை நாட்டிற்குத் தன்னைப் பட்டத்து ராணியாவதற்கு அனுப்பி வைத்தது தன் தகப்பனார் நன்கு சிந்தித்து எடுத்த முடிவுதான் என்றும் அவளுக்குப் புரியாமல் இல்லை.

ஆயினும் ஒரு சுட்டிக் குழந்தையாக, சிறுமியாக, பாவையாக, தஞ்சாவூர் அரண்மனையில் சுற்றி வந்ததும், தனது வாய் ஓயாத பேச்சு அங்கு எதிரொலித்ததையும், தான் விரும்பியதற்கு மாறாக பேசக்கூட யாருக்கும் துணிவு இல்லாததையும் நினைவு கூர்கிறாள். அப்படியிருந்த தான் வேங்கை நாட்டு அரண்மனையில் பேசாமடந்தையாகி வருவதையும், வாய்விட்டுச் சிரிப்பதைக்கூட வெகுவாக நிறுத்திவிட்டதையும், எப்பொழுதும் எதையோ பறிகொடுத்ததைப் போலவும், விடியாத தனிமையில் மாட்டிக் கொண்டது போலத் தவிப்பு ஏற்படுவதையும் எண்ணிப் பார்க்கிறாள்.
.
“ஏமண்டி அம்மகாரு, மீரு எந்துகு  சிந்த சேஸ்தாரு? ஒஸ்தாரா லேதா? (அம்மா, நீங்கள் என்ன யோசனை செய்கிறீர்கள்? வருகிறீர்களா, இல்லையா)” என்று நரேந்திரன் அவளை நிகழ்காலத்திற்குக் கொண்டு வருகிறான்.

“நரேந்திரா! உன் தாயிடம்கூடத் தாய் மொழியில் பேசமாட்டாயா?” என்று விரக்தியுடன் கேட்கிறாள் குந்தவி. அவள் கண்களில் நீர் கோர்த்து நிற்கிறது. தன் தாயின் கண்களில் நிறைந்து நிற்கும் கண்ணீரைப் பார்க்க நரேந்திரனுக்கு என்னவோ செய்கிறது.

“அம்மகாரு, மீரு...” என்று தெலுங்கில் ஆரம்பித்தவன், “அம்மா, நீங்க... அலாதண்டி. நாக்கு சால துக்கம் வர்தண்டி...” என்று தெலுங்கில் ஒரு சில தமிழ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறான். பதிலே பேசாமல் நடக்க ஆரம்பிக்கிறாள் குந்தவி.

“அம்மகாரு, அம்மகாரு!”  என்று அழைத்தபடியே அவளைப் பின்தொடர்கிறான் நரேந்திரன். “மீரு அல ஒத்தண்டி.” என்று தமிழும் தெலுங்கும் கலந்த மொழியில் பேசிக் கொண்டு அவளைப் பின் தொடர்கிறான்.

“நான் சோழச் சக்கரவர்த்தி இராஜராஜரின் ஒரே மகள். என் மகன் முன் ஒரு சாதாரணப் பெண்ணைப் போல அழமாட்டேன்!” என்று மனதைத் திடப் படுத்திக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறாள் குந்தவி. நான்கு குதிரைகள் பூட்டிய இரதம் தயாராக நிற்கிறது. அதில் ஏறிக்கொள்கிறாள். கதவைத் திறந்து விட்ட தேரோட்டிக்குக்கூட வழக்கமான புன்னகையைக்கூட உதிர்க்காமல், தனது கலங்கிய கண்களை தேரோட்டி பார்த்துவிடக்கூடாது என்று தலையைத் திருப்பிக்கொண்டு இரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். மகாராணி அடிக்கடி இப்படி நடந்து கொள்வது தேரோட்டிக்குப் பழக்கமான ஒன்றுதான். எனவே, அவன் மனதை அலட்டிக் கொள்ளவில்லை.

விழா மைதானத்தை அடையும் வரை குந்தவி வாயைத் திறக்கவே இல்லை. தாயின் இந்தப் போக்கு அவ்வப்போது நரேந்திரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தினாலும், அவன் உள்ளத்தில் அது ஒரு பெரிய கலக்கத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ், தமிழ் என்று தன் தாய் தன்னை வற்புறுத்துவது அவனுக்குப் பிடிப்பதில்லை. தன் தந்தையுடன் சிலசமயம் அதைப் பற்றிப் பேசியிருக்கிறான்.

விமலாதித்தன் அவனிடம் தெலுங்கில் சொன்னது இதுதான்:  “நரேந்திரா! இது ஆந்திர நாடு! நீ ஆந்திர அரசனாகப் போகிறாய்! அதற்கு தெலுங்கு தெரிவது மிகவும் முக்கியம். பெண்கள் எப்பொழுதும் தங்கள் முந்தானையில் ஆண்களைக் கட்டி வைக்கத்தான் முயலுவார்கள். அதற்கு நாம் அனுமதித்து விட்டால் அரசனாக அரசாட்சி செய்ய முடியாது. அவர்களின் கைப்பாவைகளாகத்தான் இருக்க முடியும். நமக்கு வேண்டுவதை நாம் பெண்களிடமிருந்து பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எனவே அவ்வப்பொழுது அவர்கள் சொல்வதற்குச் சம்மதிப்பதுபோல நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் உன் அம்மாவை நான் அடைந்திருக்கவே முடியாது. போகப்போக இதை நீ நன்றாகப் புரிந்து கொள்வாய்!”  என்று விஷமம் கலந்த குரலில் புத்தி சொல்வான். நரேந்திரனுக்கு அது புரிந்தது போலவும் இருக்கும், புரியாது போலவும் இருக்கும். தன்னிஷ்டப்படி நடந்து கொள்ளும்படி தந்தை சொல்கிறார் என்பது மட்டும் அவனுக்குப் புரியும்.

இரதம் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கும் மைதானத்திற்கு விரைகிறது.

விழாமேடையில் அரசர் சக்திவர்மனும், மகாராணியும் ஒரு பெரிய சிம்மாசனத்தில் ஒருவரருகில் ஒருவர் கம்பீரமாக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். பலவிதமான விளையாட்டுகளும், கேளிக்கைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு குந்தவி காணும் ஒரு காட்சி அவள் மனதைக் கசக்கிப் பிழிகிறது.
விமலாதித்தன் நடுவில் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அவன் இடது பக்கத்தில் உள்ள சிம்மாசனத்தில் அவனது இன்னொரு ராணியும், வலது பக்கத்து இருக்கையில் விஜயாதித்தனும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். இரதம் நிற்கிறது. கண்களில் பறக்கும் தீப்பொறிகளைக் கட்டுப் படுத்திக்கொண்டு கீழிறங்குகிறாள் குந்தவி.[வளரும்]
 -----------------------------------------------------------------------------------------------------------------------                                                        * * *
அடிக்குறிப்பு 
21விஜயாதித்தன் என்பது அவனுடைய பட்டப்பெயர்தான். அவன் இயற்பெயர் என்ன என்று தெரியாததால் இந்தப் பெயரே உபயோகிக்கப் படுகிறது.
22தற்காலத் தெலுங்கு எழுத்துக்களை வடிவமைத்தவரும், அம்மொழியை வளர்த்தவரும் நன்னய்ய  பட்டாரகர் ஆவார் என்று வரலாறு கூறுகிறது

No comments:

Post a Comment