Thursday 28 August 2014

தமிழ் இனி மெல்ல[41] நீ செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல வேண்டும்.

தமிழ் இனி மெல்ல[40] சென்ற பதிவின் இறுதியில் 

மெல்லத் தொண்டைச் செருமிச் சரிசெய்து கொண்டு மெதுவாகத் துவங்குகிறார் இராஜராஜர். “சிவாச்சாரியாரே, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக விடை காணாது ஒரு நிகழ்ச்சி என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது. உமக்கு அதற்கு விடை தெரிந்திருக்கலாம் என்று என் உள்மனம் இப்பொழுது அடிக்கடி கூறுகிறது.”பீடிகையுடன் துவங்குகிறார் இராஜராஜர்.

“உமக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திருப்பணியைப் பற்றி உற்சாகமாக உரையாடி வந்த கருவூரார், சற்றும் எதிர்பார்க்காத நிலையில், திடுமென்று திருக்கயிலைக்குச் செல்வதாகப் புறப்பட்டு விட்டார். சாதாரணமாக அப்படிச் செல்வதானால் என்னிடம் அதுபற்றி முன்கூட்டியே பேசி, செல்லும் நாளையும் உடன்பாடு செய்திருந்திருப்பார். அப்படிச் செய்யாமல் தமிழ் இனி மெல்ல [சென்ற பதிவின் இறுதியில்]
திடுமென்று அவர் புறப்பட்டுச் சென்றது ஏதோ ஒரு வலுவான காரணத்தால்தான் என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது.

“தமிழ்த் திருப்பணிக்குத் திட்டம் தீட்டித் தந்த கருவூரார், அதற்கு எந்தவிதமான இடையூறுகள் வரக்கூடும் என்று சிந்திக்காமல் இருந்திருக்க மாட்டார். எனவே, அந்த இடையூறுகளை எதிர்நோக்கி, அவை வரும் நேரத்தில், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று அறிவுரையும் தந்திருப்பார். கற்களே இல்லாத தஞ்சையில் பெருவுடையாருக்கு கற்றளி கட்ட கற்களை எப்படிக் கொணர்வது என்பதோடு மட்டுமல்லாமல், கோபுர உச்சியிலிருக்கும் பெருங்கல்லை மேலே கொண்டு செல்லவும் வழி வகுத்துக் கொடுத்தவர் அவர். அப்படியிருக்கையில் ஒரு மாபெரும் திருப்பணிக்குத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்தவுடன், கையைத் தட்டிக் கொண்டு எழுந்து சென்றிருக்க மாட்டார்.

“அப்படிச் சென்றதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. அச்சமயம் அவருக்கு வலக்கையாக விளங்கிய உமக்கு அவரது திடீர் முடிவின் காரணம் தெரியாமல் இருந்திருக்காது. அதே மாதிரி, திருப்பணிக்கு என்னென்ன இடையூறுகள் வரக்கூடும் என்பது பற்றியும் உம்மிடம் உரையாடாமல் இருந்திருக்க மாட்டார். எனவே, உமக்கு அந்த உண்மைகள் தெரிந்திருந்தால், அதை எமக்குத் தெரிவிக்குமாறு சோழப் பேரரசின் சக்கரவர்த்தியாக அல்ல - திருப்பணி நிறைவேற வேண்டுமே என்று துடிக்கும் நான் - உமது மனைவியின் பாட்டனாக - உம்மைக் கேட்கிறேன். முன்னறிவிப்பின்றி என் ஆசான் என்னை விட்டு நீங்கியதின் வலியைச் சுமந்து கொண்டிருக்கும் நான், அதன் காரணம் தெரியாது இந்த உலகை விட்டு நீங்க விரும்பவில்லை. அது எதுவாக இருந்தாலும், அதை நீர் எமக்குச் சொல்லவேண்டுமாறு உம்மை மன்றாடுகிறேன்!”

தழுதழுத்த இராஜராஜரின் குரலைக் கேட்டுப் பதறிவிடுகிறான் சிவாச்சாரி. பழையாறை மாளிகையில் அருள்மொழிநங்கையிடம் எந்த உண்மையை இராஜராஜர் கேட்பாரா என்று காத்திருப்பதாகச் சொன்னானோ, அந்த உண்மையை இரண்டு நாழிகைப் பொழுதுக்குள் அவரே கேட்பது அவனுக்கு நிம்மதியைத் தருகிறது. இருப்பினும் அந்தக் கசப்பான உண்மையை எப்படிச் சொல்வது?

“தயங்காதீர், சிவாச்சாரியாரே! நான் அனுமானித்தது சரியென்று உமது முகமே தெளிவாகப் பறை சாற்றுகிறது. உண்மைகளை உம் மனதிலிருந்து வெளியேற்றுவது உமது மனதையும் இலேசாக்கும் அல்லவா! அவைகளை உடனே சொல்லும்!” இப்பொழுது இராஜராஜரின் குரலில் சிறிது அதிகாரத் தொனியும் கலந்திருப்பதை சிவாச்சாரியனால் உணர முடிகிறது. இராஜராஜரை நோக்குகிறான் அவன். அவன் கண்களில் நீர் கோத்து நிற்கிறது.

“உமது கண்களைப் பார்த்தால் நீர் சொல்லப் போவது என் மனதிற்குத் துன்பம் விளைவிக்கும் என்று நீர் கருதுகிறீர் போல இருக்கிறது. எதையும் மறைக்காமல் சொல்லும். சில சமயம், உடலைத் துன்புறுத்தும் நோவைக் கசப்பான மருந்தை உண்டு நீக்குவதே சிறந்ததாகும் என்று நானும் அறிவேன்.” அவனை வற்புறுத்துகிறார் இராஜராஜர்

தமிழ் இனி மெல்ல[41] தொடர்கிறது 

அரிசோனா மகாதேவன் 

“எல்லாவற்றையும் சொல்கிறேன், சக்கரவர்த்தி அவர்களே,” என்று ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி. “நீங்களாகக் கேட்டால் ஒழிய நானாக எதையும் சொல்லக் கூடாது என்று என்னைப் பணித்து விட்டார் குருதேவர். அது மட்டுமல்ல, தாங்கள் கேட்காவிட்டால், குருதேவர் சொன்னது என்னுடன் அழிந்துவிட வேண்டும் என்றும் என்னை உறுதியிட்டுச் சொல்லச் சொன்னார். எனவே, தாங்கள் வினவியது என்னை அந்த உறுதியிலிருந்து. இனி எதையும் ஒளிக்காமல் உள்ளபடியே உரைக்கின்றேன்.

“குருதேவருடன் திருப்பணியைப் பற்றித் திட்டமிட நிறைய நாள்கள் செலவிட்டிருக்கிறேன். குருதேவர் திட்டத்தில் என்னவிதமான குறைபாடுகள், நழுவல்கள், தடங்கல்கள், ஓட்டைகள் இருக்கின்றன என்று என்னைக் கூர்ந்து கவனித்து விவாதிக்கும்படி பணித்தார். எனவே, அவர் என்னைத் தன்னுடன் தங்களைச் சந்திக்க அழைக்கச் செல்லும்போது மிகுந்த உற்சாகத்துடன் அவருக்குத் துணையாக தங்கச் சுருள் உள்ள குழலை எடுத்து வந்தேன். தங்கள் அரண்மனையில் நடந்ததுதான் தங்களுக்குத் தெரியுமே! அங்கு தங்களுக்கும், கோப்பரகேசரியாருக்கும் இடையில் ஏற்பட்ட சிறிய மனப் பிணக்கு... அதைக் கண்டதும், குருதேவர் உடனே கிளம்பி விட்டதையும் தாங்கள் அறிவீர்கள்.” சிறிது நிறுத்தியவன் மீண்டும் தொடர்கிறான். சொல்ல விரும்பாத - வேப்பங்காய்க் கஷாயமாகக் கசக்கும் நிகழ்ச்சிகளை நினைப்பவன் போல அவன் இராஜராஜருக்குத் தென்படுகிறான்.

“சக்கரவர்த்தி அவர்களே! அரண்மனையிலிருந்து நெடுநேரம் அமைதியாக நடந்து வந்த குருதேவர் தனது மனநிலையை என்னுடன் பகிர்ந்து கொண்டார். “சிவனே! அருள்மொழியும், மதுராந்தகனும் இத்திருப்பணி வண்டியை ஒன்றாக இழுக்கமாட்டார்கள் போலத் தோன்றுகிறது. எனவே, உன்னை மதுராந்தகனுக்குப் பணியாளனாக ஆக்கியதும் ஒருவிதத்தில் நன்மையைப் பயக்கும் என்று தோன்றுகிறது. மதுராந்தகனை அருள்மொழியின் பக்கம் கொணர வேண்டியது உனது பொறுப்பு!” என்று அறிவித்தவர் மேலும் பல விஷயங்களைப் பற்றி விவாதித்தார்.

“அவர் முக்கியமாகச் சொன்னது இதுதான்: ‘சிவனே, இதுவரை சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் போர் நடக்கவே இல்லை என்று சொல்ல முன் வரவில்லை. வென்றவர் தோற்றவருக்குத் திரை செலுத்துவதும் வழக்கம்தான். இருப்பினும், பாண்டியருக்கும், சோழருக்கும் இடையே மண உறவு இருந்து வந்தது. ஆகவே, அதனால் பகை அவ்வளவாக வளரவில்லை...

“அதை முறிக்கும் வகையில் நடந்தது, ஆதித்த கரிகாலனின் செயல். அருள்மொழியின் தமையன் ஆதித்தன் பாண்டியர்களை மிகவும் தகாத முறையில் அவமதித்துவிட்டான். அவன் வீரபாண்டியனின் தலையைக் கொய்து காக்கைகளுக்கும், கழுகுகளுக்கும் இரையாக்கியது மன்னிக்க முடியாத தவறாகும். போரில் வீழ்ந்த மன்னன் ஒரு வீரனே ஆவான். அவனுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதுதான் வீரர்களான சோழர்களுக்கு அழகு. அதைப் புறக்கணித்தது சோழர்களுடன் இதுகாறும் நட்புறவுடன் பழகிய பாண்டியரை ஜன்ம விரோதிகள் ஆக்கிவிட்டது. இதனாலேயே அவன் வீரபாண்டியனைக் கொன்று பத்து ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவனை ஒரு தீய கொலைபாதகனைப் போல் தூக்குக் கயிற்றில் ஏற்றிக் கொன்று பழி தீர்த்தான் பாண்டியனின் மெய்க்காப்பாளன். இது இன்னும் பகையை வளர்த்தது. அருள்மொழி சோழ அரியாசனத்தில் அமர்ந்திருக்காவிட்டால் விளைவு மிகவும் பயங்கரமாகவே இருந்திருக்கும்.”

 “இப்பகை நீங்க வேண்டும், சிவனே, இப்பகை நீங்க வேண்டும். இல்லாவிட்டால் குமுறி எழப்போகும் எரிமலையின் மீது வீடு கட்டுவது போலத்தான் சோழ நாட்டின் நிலைமை இருக்கும். இலங்கைக்குப் போகும் வழியில் உள்ளது பாண்டிநாடு. மேலும், சிங்களவருடன் மணவினை செய்து வருகின்றனர், பாண்டிய மன்னர். இப்படியிருக்கையில், நிலமும், கடலும் பிரித்து வைத்திருக்கும் இலங்கையைப் பாண்டியர் உறவில்லாமல் எப்படி தன்வசப் படுத்தி வைக்க இயலும்? ஓயாத கடலலைகள் போல பாண்டியரின் பகை சோழநாட்டின் மீது அடித்துக் கொண்டுதான் இருக்கும் என்று இக்கட்டைக்குத் தோன்றுகிறது.

“எனவே, புனிதமான திருப்பணியை மேற்கொள்ளும் அருள்மொழி பகையை மறந்து, பாண்டியர்களுக்கு நட்புக் கரம் நீட்ட வேண்டும் என்று நாளை கேட்டுக் கொள்ளப் போகிறது, இந்தக் கட்டை!” என்று தன் மனநிலையைத் தெரிவித்தார் குருநாதர்.”

தான் இதுவரை சொன்னது இராஜராஜரிடம் எந்த விதமானமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கவனிக்கிறான் சிவாச்சாரி.

கருங்கல் சிலையில்கூட ஏதாவது உணர்ச்சியைப் பார்க்கலாம், ஆனால் இராஜராஜரின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் அவனால் காணமுடியவில்லை. அவரது வலது கை அவனை மேலே தொடருமாறு பணிக்கிறது. இடது கை விரல்கள் அவரது சிந்தனையைக் காட்டும் விதத்தில் மூடிமூடித் திறக்கின்றன.

“அதைக் கேட்டு நான் அதிர்ந்தே போய்விட்டேன் சக்கரவர்த்திகள் அவர்களே! குருநாதர் வாயிலிருந்தா இப்படிப் பட்ட சொற்கள் வருகின்றன என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர் மேலே விளக்க விளக்க என் மனத்திலும் அவர் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது. பாண்டியர்களுடன் நட்பு தொடருமா, இது பகற்கனவு ஆகாதா என்று கேட்டேன். குருநாதர், “இந்தக் கட்டைக்கு அருள்மொழி மீது நம்பிக்கை இருக்கிறது, சிவனே! இதுவரை அருள்மொழி இந்தக் கட்டையின் சொற்களுக்கு மதிப்பு வைத்தே வந்திருக்கிறான். இவ்வளவு சிறப்பான பணியைத் தொடரப் போகும் அவன், பணி நன்கு நிறைவேறுவதற்காக, தான் விரும்பாததையும் செய்வான்.” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

“எந்த நாணயத்திற்கும் இருபக்கம் உண்டு அல்லவா! ஒருவேளை சக்கரவர்த்தி அவர்கள் பாண்டியர்களுடன் நட்புறவு கொள்ள மறுத்து விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். அதற்கும் ஒரு முடிவு இருப்பதாகச் சொன்னார் குருதேவர். ‘இந்தக் கட்டை வெகுகாலமாக திருக்கயிலைக்குச் செல்ல வேண்டும், அதுபற்றி அருள்மொழியிடம் பேச வேண்டும் என்று நினைத்து வருகிறது. அவன் சம்மதித்தால் திருக்கயிலைப் பயணத்தை இந்தக் கட்டை சிறிது காலம் ஒத்திவைக்க வேண்டி வரும். அவன் மதிப்புக் கொடுப்பான் என்றே நம்பலாம். இக்கட்டை சோணாட்டில் இருப்பது எவ்வளவு நாள் என்பதை அருள்மொழிதான் தீர்மானிக்க வேண்டும்! என்று சொன்னார்.”

சிவாச்சாரியனின் குரல் சிறிது கம்முகிறது.

கண்களை மூடிக் கொண்டிருக்கிறார் இராஜராஜர். அவரது மனக்கண்முன் கருவூராருக்கும், சிவாச்சாரியனுக்கும் இடையில் நடந்த உரையாடல் நிழலாகப் படமெடுக்கிறது. அவரது கண்களில் ஓரத்தில் இருப்பது கண்ணீரா? எதற்குமே அஞ்சாத புலியான இராஜராஜரின் கண்களில் கண்ணீர் வருமா?

“மேலும், குருநாதர், ‘சிவனே, எது எப்படி நடந்தாலும் உனது உயிர் இருக்கும் வரை சோழநாட்டின் மேன்மைக்கும், தமிழ்த் திருப்பணிக்கும் உழைக்க வேண்டும்! மதுராந்தகன் உன்னைச் சோதனை செய்த போது நீ பதில் சொன்ன மாதிரி அரசனிடம் உண்மையே பேசவேண்டும், அரசன் விரும்புவதை மட்டுமே செய்ய வேண்டும். எப்பொழுதும் அரசனின் நன்மை பற்றி மட்டுமே சிந்திக்கவேண்டும். அரசனைச் சுற்றி நடப்பதைக் கண்டும் காணாத குருடனாகவும், அரச இரகசியங்களைக் கேட்டாலும் காதில் விழாத செவிடனாகவும், அரசன் செய்வது தகாத செயலாகவே இருந்தாலும் அதைக் காணாத குருடனாகவும் இருக்கவேண்டும். நெருப்புடன் பழகுவதைப் போலத்தான் அரசனின் உறவும் ஒரு பணியாளனுக்கும் இருக்கவேண்டும்.

“எனவே தானாகக் கேட்காதவரை நம் உரையாடலைப் பற்றி அருள்மொழிக்குத் தெரிவிக்காதே! உன் இதயத்தில் வைத்துப் பூட்டிவிடு. மதுராந்தகன் உன்னை நண்பனாக வரித்ததால் அவனுக்கு ஆலோசனை சொல்லி வா, ஒரு போதும் நமது இந்த உரையாடல் அவனுக்குத் தெரியக் கூடாது. திட்டம் தீட்டிக் கொடுப்பதும், அதற்கான வழிமுறைகளைச் சொல்லுவதும்தான் உனது பொறுப்பு. நீ அவர்களுக்குக் கருவியே தவிர திருப்பணிக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்தான். இதை என்றுமே மறக்காதே! என்றும் எனக்கு ஆணையிட்டு விட்டார்.

“திருப்பணித் திட்டத்தை விவரிக்கும் போது குருநாதர் பாண்டியருடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்று சொன்னபோது கோப்பரகேசரியாரும் தாங்களும் மறுதளித்து விட்டீர்கள். அவரும்தான் முதல் நாள் என்னிடம் இயம்பிய வண்ணம் திருக்கயிலைக்குப் பயணமாகிவிட்டார். குருநாதர் சொல்லிய முதல் திட்டமான எழுத்து மாற்றத்தை நிறைவேற்றி விட்டீர்கள். சேரநாட்டைத் தமிழன்னையின் மடியை விட்டு நீங்காமல் காப்பது தங்கள் கையில்தான் இருக்கிறது சக்கரவர்த்தி அவர்களே!” என்று முடிக்கிறான் சிவாச்சாரி.

இராஜராஜர் கண்ணில் நீர் பெருகுகிறது. “கருவூராரே, கடைசியில் நீங்கள் மனம் ஒடிந்துதான் திருக்கயிலைக்குச் சென்றீர்களா? உங்கள் சொல்லைக் கேளாதவர்கள் நடுவில் இருப்பது மரியாதைக்கு உகந்ததல்ல என்று நினைத்து சோழ நாட்டை விட்டே நீங்கி விட்டீர்களா? உங்கள் மனதில் எவ்வளவு வருத்தம் இருந்ததோ? என்மீது நம்பிக்கை இழந்து, தன் சொல்லை மதிக்காத மன்னன் அரசாலும் நாட்டில் இருக்க வேண்டாம் என்று கிளம்பினீர்கள் என்றால் தாங்கள் எவ்வளவு மனம் வெதும்பியிருப்பீர்கள்! நான் பாண்டியனுடன் நட்புறவு கொள்ளாதது மட்டுமல்ல, அவனைச் சிறைப்பிடித்து, அவமானப்பட்டு உயிர் விடுமாறு செய்து விட்டேனே! பெருந்தன்மையாக அவனை விடுவித்திருந்தால் பாண்டியர் மனம் மாறியிருக்குமோ? இராஜேந்திரனிடம் செங்கோலைக் கொடுத்து விட்டேனே, இனி எப்படி நான் அவனுக்கு ஆணையிட இயலும்? என் நெஞ்சே கனக்கிறதே! உங்கள் ஆசியை இழந்து நான் எப்படி திருப்பணியை நிறைவு செய்வேன்?” என்று பல்வேறாகச் சிந்திக்கிறார். ஒரு பெருமூச்சு அவரிடமிருந்து வருகிறது.

“சிவாச்சாரியாரே! இத்தகைய உண்மைகளைச் சுமந்து கொண்டு நீர் எவ்வளவு துன்புற்றிருப்பீர் என்று என்னால் அறிய முடிகிறது. கருவூரார் பாண்டியருடன் நட்புக் கரம் நீட்டவேண்டும் என்று விரும்பியதை அறிந்தும், உமது விருப்பு வெறுப்பைத் துறந்து எம் பொருட்டு பாண்டியரை வெல்லத் திட்டம் வகுத்துக் கொடுத்தீரே! என் இதயத்தில். மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்து விட்டீர்!

“இன்னும் கருவூரார் என்மீது முழுவதும் வெறுப்புறவில்லை என்பதை உம்மை அளித்துச் சென்றதன் மூலம் அறிந்து நிம்மதி கொள்கிறேன். திருப்பணி நன்கு நடக்க உம்மைத்தான் நம்பி இருக்கிறேன். உமது இலக்கு திருப்பணிதான். இராஜேந்திரன் உம்மீது மிகவும் நட்பும், அன்பும், மரியாதையும் வைத்துள்ளான். அவனுக்கு வலது கையாக இருந்து வருவீராக. வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அவனுக்கு திருப்பணியை நினைவு படுத்திக்கொண்டே இருப்பீராக.

“நான் தனியாக இருக்க விரும்புகிறேன். நீலமலைப் பயணம் உமக்கு வெற்றியைத் தேடித் தரட்டும். கொங்கு நாடு தமிழையே பேசி வரட்டும்!”  என்று இராஜராஜர் தனது கண்களை மூடிக்கொள்கிறார். அவரது உதட்டுத் துடிப்புகளிலிருந்து அவர் மிகுந்த வருத்தத்திலும், கழிவிரக்கத்திலும் இருக்கிறார் என்று உணர்ந்த சிவாச்சாரி அவரை வணங்கிவிட்டு அங்கிருந்து அகல்கிறான்.

அரண்மனை வாயிலில் அவனை எதிர்கொள்கிறாள் குந்தவைப் பிராட்டியார். முகத்தில் இருக்கும் உணர்ச்சிகளை துணியால் துடைத்த மாதிரி மறைத்து விட்டு அவளை வணங்குகிறான் சிவாச்சாரி. “சிவாச்சாரியாரே! அருள்மொழியிடமா பேசிக் கொண்டிருந்தீர் இதுகாரும்? ஏதாவது முக்கியமான விஷயம் உண்டா?” என்று வினவுகிறாள்.

“அதைச் சொல்ல எனக்கு அதிகாரமில்லை பிராட்டியாரே. என்னை மன்னித்து விடுங்கள்.” என்றபடி விடுவிடுவென்று நடக்கிறான் சிவாச்சாரி. என்றுமே இல்லாத அதிசயமாக இருக்கிறதே இவனது போக்கு. என்ன ஆயிற்றோ என்று எண்ணியவாறு உள்ளே நுழைகிறாள் குந்தவைப் பிராட்டியார்.

தனது தம்பி கண்களை மூடிக்கொண்டு மஞ்சத்தில் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அவள், அருகில் சென்றதும் அதிர்ந்து போகிறாள். இன்னும் இராஜராஜரின் கண்களில் நீர் வழிந்து கொண்டிருக்கிறது. அவரது வாய், “குருநாதரே! என் பிழையப் பொறுப்பீராக! திருக்கயிலையில் எம்பெருமானைச் சந்திக்கும் பொழுது என்னையும் தங்கள் கருத்தில் கொள்வீராக!”  என்று முணுமுணுக்கிறது.

                                                          * * *
                               அத்தியாயம் 16
                 இளஞ்சேரன் மாளிகை, உதகை
               பிரமாதீச,  புரட்டாசி 5 - செப்டம்பர் 20, 1013
ரத்தமாகச் சிவந்திருந்த வானத்தில் மலைகளுக்கு இடையில் மறைய ஆரம்பிக்கிறான் குங்குமப் பிழம்பாய் ஒளிரும் கதிரவன். குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிய இராஜராஜ நரேந்திரன், வந்த வழியைத் திரும்பிப் பார்க்கிறான். இளஞ்சேரன் பாஸ்கர ரவிவர்மனின் மாளிகை மலையுச்சியில் புள்ளியாகத் தெரிகிறது. ஊதல் காற்று சுழற்றி அடிக்கிறது. மழை மேகங்கள் தூரத்தில் தெரிகின்றன. எப்படியும் இரவில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அவனது மனம் சொல்கிறது. நீலமலையின் குளிர் அவனுக்குத் தாங்கமுடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் மழை வேறு பெய்தால் குளிரை எப்படித் தாங்குவது என்று மனது அடித்துக் கொள்கிறது.

மேலும், மலையிறங்கி தஞ்சைக்குத் தனியாக செல்ல வேண்டும் என்பதை நினைத்தாலே அவனுக்கு மலைப்பாக இருக்கிறது. இந்த மலைப்பாதையில் வழி எப்படித் தெரியும்? சமவெளியில் எந்த ஊருக்காவது சென்றால்தானே இலச்சினை மோதிரத்தைக் காட்டி உதவி பெற இயலும்! ஒரு மரத்தடியில் அமர்கிறான் அவன். குதிரை சற்று தூரத்தில் புல் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்கள் பார்த்தாலும், அவன் மனம் அன்று பிற்பகலில் நடந்த நிகழ்ச்சியை அசைபோட்டுப் பார்க்கிறது . . .

...இளஞ்சேரன் பாஸ்கர ரவிவர்மனின் மாளிகையில் சிவாச்சாரியனுடன் நுழைந்த இராஜராஜ நரேந்திரன் சேரநாட்டுப் பெண்களின் அழகையும், அவர்களது இனக் கவர்ச்சியையும், அவர்களது கொஞ்சம் தடித்த கொவ்வைப் பழமான உதடுகளையும், அவற்றைத் திறந்து செய்த மயக்கும் புன்னகையையும், அதனால் தெரிந்த வெள்ளை வெளேரென்ற பற்களையும் எண்ணிப் பார்த்துக் கொண்டே நுழைந்தான்.

அவர்கள் அடர்த்தியாக கருங் கூந்தலை ஒன்றாகச் சேர்த்து தலைக்கு மேல் கொண்டையாக அள்ளி முடிந்திருந்த பாங்கும், அதில் சுற்றியிருந்த மலர்ச் சரங்களும், வட்டமான முகமும், பெரிய கரிய விழிகளும், வெண்ணிற ஆடையும், பளபளக்கும் கன்னங்களும், எண்ணைப் பசையில் ஒளிர்ந்த உடலும் அவனைக் கிறங்க வைத்திருந்தன
.
அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நிலவுமொழியின் அமைதியான அழகு அவனுக்குச் சாதாரணமாகவே தெரிந்தது.நிலவுமொழிக்காகப் பித்தாக அலைந்தோமே என்று தனக்குள்ளேயே வெட்கினான்.

ஆனால் அவர்களைக் கண்டு சிவாச்சாரியனின் முகத்தில் எந்தவிதமான மாற்றமும் தெரியாததைக் கண்டு, “இவன் மனிதன்தானா, இல்லை கல்லா?” என்றும் நினைத்துப் பார்த்தான்.

“சோழநாட்டு ஸ்ரீமந்த்ர பத்ரப்ரதானிக்கு (திருமந்திர ஓலைநாயகருக்கு) எங்கள் ஸுஸ்வாகதங்கள் (வரவேற்புகள்)!’ என்று வடமொழி கலந்த கொடுந் தமிழில் வரவேற்றார் இளஞ்சேரனின் அமைச்சரான நம்பூதிரி அந்தணர்.

அவரையும், இளஞ்சேரனையும் வணங்கிவிட்டு அவர்கள் காட்டிய இருக்கையில் அமர்ந்துகொண்டான் சிவாச்சாரி.

தன்னை வரவேற்கவில்லையே என்ற கோபத்துடன் விறைப்பாக அவனருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் நரேந்திரன்.

ஓலைநாயகமே வணக்கம் தெரிவிக்கும் பொழுது கூட வந்திருப்பவன் விறைப்பாக இருக்கிறானே என்று மனதிற்குள் சினந்த இளஞ்சேரன். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், நரேந்திரனையே உற்று நோக்கினான். பதிலுக்கு அவனை கண்ணிமைக்காமல் நோக்கினான் நரேந்திரன்
.
“சேரமானுக்கு திரிபுவனச் சக்கரவர்த்திகள் இராஜராஜரிடமிருந்தும், கோப்பரகேசரியார் இராஜேந்திரரிடமிருந்தும் பரிசுப் பொருள்கள் கொணர்ந்துள்ளேன். சேரமான் கருணைகூர்ந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு எங்களைப் பெருமைப்படுத்த வேண்டுமாறு கோருகிறேன்” என்று பணிவாகச் சேரனின் கவனத்தைத் திசை திருப்பினான் சிவாச்சாரி.

இளஞ்சேரனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. தனது பெரிய மீசையை ஒருமுறை நீவி விட்டுக் கொண்டவாறே, “பரிசுப் பொருள்களுக்கு சக்கரவர்த்திகளுக்கும், அவரது மைந்தருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிப்பீராக! ஓலைநாயகத்திற்கு எங்கள் விடுதியில் வசதிகள் நன்றாக இருந்ததா? உதகையின் குளிர் நடுக்கி எடுக்கவில்லையே!”  என்று இராஜேந்திரனை “அவரது மைந்தர்” என்று மரியாதைக் குறைவாகவும், “குளிர் நடுக்கி எடுக்கவில்லையே?” என்று உட்பொருள் நிறைந்த சொற்களையும் வீசிய சேரன், “உடன் வந்திருக்கும் இளைஞன் யாரோ?” என்று நரேந்திரனைப் பார்த்துத் தன் பெரிய விழிகளை உருட்டி விழித்தவாறு கேட்டான்.

அவனுக்குப் பதில் சொல்ல வாயெடுத்த நரேந்திரனைத் தன் பார்வையால் அடக்கிய சிவாச்சாரி இளஞ்சேரனிடம், “உடன் வந்திருப்பது இளைஞராக இருந்தாலும், வேங்கைநாட்டின் இளவரசர். திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களின் போர், கோப்பரகேசரியாரின் மருகர், எனக்குத் துணையாக வந்திருக்கிறார். அவரைத் தங்கள் அமைச்சர் முதலில் வரவேற்காது என்னை மட்டும் வரவேற்றதுதான் ஒரு குறை. மற்றபடி சேரமானின் விருந்தோம்பலில் குறைகாண நாங்கள் என்ன பித்தர்களா? கண்களுக்கும், வயிற்றுக்கும் கிடைத்த நல்ல விருந்துக்கு நன்றி!

“சோழப் பேரரசின் மாமன்னரான கோப்பரகேசரியார் இராஜேந்திரரை அவரது பட்டத்தைச் சொல்லி குறிப்பிடாது “அவரது மைந்தர்” என்று தாங்கள் குறிப்பிட்டதால் என் உடலில் ஏறிய சூட்டின் வெப்பத்தைவிடவா உதகையின் குளிர் நடுக்கும் தன்மை வாய்ந்தது?” என்று அவனது இரட்டைப் பொருள்கொண்ட பேச்சு தனக்கும் புரிந்தது என்று காட்டிக் கொண்டு பதிலிருத்தான்.

ஒருகணம் அவனது அறிவுத் திறமை நரேந்திரனை வியக்க வைத்தது. இளைஞன் என்று தன்னைச் சொன்னதற்கு மட்டுமே கோபம் கொண்டோமே, இளஞ்சேரன், தன்னை மட்டுமன்றி, தன் மாமனையும் சாடியிருக்கிறான் என்று அறிந்து கொள்ளாமல் போனோமே என்று சிந்தித்துப் பார்த்தான்.

சிவாச்சாரியனின் பேச்சு அம்பு போல இளஞ்சேரனைத் தைக்கிறது. சிலிர்த்து எழுகிறான் அவன் “ஓலைநாயகரே! கோப்பரகேசரியார் திரிபுவனச்சக்கரவர்த்தியாரின் மைந்தர்தானே? பின் ஏன் நீர் அதைப்பற்றி விமர்சிக்கிறீர்? மேலும், வேங்கை நாட்டு இளவரசர் இளைஞர்தானே? எதற்கெடுத்தாலும் உடம்பில் சூடேறும் நீர் எமது சேரநாட்டு மருத்துவர்களிடம் உமது உடலைக் காட்டிச் சோதனை செய்து கொள்ளுவதே சாலச் சிறந்தது! வந்த வேலையை விட்டு, உமது நிலையறியாது பேசாமலிருப்பதே நல்லதாகும்.” அவனது வார்த்தைகளில் குத்தல் இருக்கிறது.

சிவாச்சாரியனின் உதடுகள் துடிக்கின்றன. தற்பொழுது தூதுவனாக வந்திருப்பதால் துடித்து எழுவதில் பயனில்லை என்று உணர்ந்து, தன் மனத்தில் எழும் சினத்தை அடக்கிக் கொண்டு, “சேரமான் அவர்களே! இன்று உமது நாள் நல்ல நாள்! ஆகவே நான் தூதுவனாக வந்தது உமக்கு சாதகமாகப் போய்விட்டது! கோப்பரகேசரி திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்களின் மைந்தர்தானே என்று கேட்ட உம்...” சில விநாடிகள் வாளாவிருந்துவிட்டு, “இந்த ஆண்டுத் திரையை நீர் ஏன் ஆறு திங்களாக அனுப்பவில்லை என்று விளக்கம் கேட்டு அறிய கோப்பரகேசரி என்னை அனுப்பியிருக்கிறார். அதை உடனே எங்களுடன் அனுப்பி வைக்கச் சொல்லி அவர் உத்தரவிட்டிருக்கிறார். இனி சேர நாட்டுப் பட்டயங்களில் வடமொழியான சம்ஸ்கிருதத்தை விடுத்துத் தமிழை எழுதவும் ஆணை பிறப்பித்திருக்கிறார். சேர நாட்டில் ஆட்சி மொழியாகத் தமிழே கையாளப் படவேண்டும் என்பதும் அவரது கட்டளையாகும்...”

அவனை இடைமறித்துப் பேச ஆரம்பிக்கிறார் சேரனின் அமைச்சர். “நிறுத்தும் பத்ரப்பிரதானீ! சேரமானின் திவசங்களைக் கணிக்க ஜோதிஷ வ்யாக்ரர்களான (புலிகளான) நாங்கள் இருக்கின்றோம். நீர் என்ன பெரிய சிம்ஹமா, உம்மைப் பார்த்து ராஜா பயப்பட? அவர்  பெரிதாக விடும் ஸ்வாஸம் பரிணமித்தாலே நீர் நிர்மூலமாகி விடுவீர். நீர் சிவ க்ஷேத்திரத்தில் பூஜையும், ஹோமமும் செய்வதை விடுத்து, ராஜாங்க விஷயங்களில் ஏன் பிரவேசிக்கிறீர்? உம்முடைய துர்வசனத்திற்கு உம்மை ஹஸ்தி (பெண் யானை)யின் காலால் இடறச் செய்திருப்பார் எங்கள் ராஜா. தூதனாக இருப்பதால் உம்முடைய ஜீவன் இன்று சேஷமாய் இருக்கிறது.” என்று பாதி வடமொழியும், பாதி தமிழுமாக அவனைப் பார்த்துச் சீறுகிறார்.

“ஆமாத்யரே, நான் உம்மிடம் பேசவில்லை. சேரமானிடம் பேசுகிறேன். நீர் குறுக்கிடாமல் இருப்பதுதான் உமக்கு அழகு. அரசர் கேட்கும்போது ஆலோசனை சொல்பவர்தான் அமைச்சர். தவிரவும், அரசரின் உரையாடலில் குறுக்கிட்டுப் பேசுவதும் உமக்கு அழகல்ல. நான் என்ன பதவியில் இருக்கவேண்டும் என்பதை திரிபுவனச் சக்கரவர்த்தி அவர்கள் தீர்மானித்திருக்கிறார்கள். அவர்களைவிட உமக்கு என் அறிவுகூர்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை.” என்று அவரை அடக்குகிறான். அவனது துணிச்சலைப் பார்த்து வியக்கிறான் நரேந்திரன். தனது பாட்டனாருக்காகவும், மாமனுக்காகவும், சேரனையும், அவனது அமைச்சனையும் அவர்கள் அரசவையிலேயே எதிர்த்து உரையாடும் துணிச்சலைப் பார்த்து அதிர்ந்தே போகிறான். அவனது வீரம் நரேந்திரனுக்கு அவன் பால் மரியாதையை விளைவிக்கிறது. அதே சமயம், சிவாச்சாரியிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது.

கடகடவென்று கிட்டத்தட்ட ஒரு நிமிடம் சிரிக்கிறான் இளஞ்சேரன். அவன் சிரிப்பை நிறுத்தியதும் அவையே அமைதியாக இருக்கிறது.

“ஓலைநாயகமே! எனக்காக சம்பாஷிக்க நான் எனது மந்த்ரியை நியமிக்கிறேன். உம்முடன் வந்திருக்கும் வேங்கை நாட்டு இளவரசனை அவருடன் பேசச் சொல்லும்!” ஏதோ நகைச்சுவையாகச் சொல்லிவிட்டதைப் போலப் பெரிதாக நகைக்கிறான்.

நரேந்திரனுக்கு உடனே கோபம் பீரிட்டுக்கொண்டு வந்தது. தன்னை அவமதிப்பது போல நடந்து கொள்ளும் சேரமானை சரிக்குச் சரி அவமதிக்கவேண்டும் என்று மனம் கொதித்தது. ஆனால் சேரமானின் மாளிகைக்குள் நுழைவதற்குமுன் சிவாச்சாரி, “இளவரசே, சேரமான் மிகவும் எகத்தாளமாகப் பேசுவதில் வல்லவர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களை வம்புக்கு இழுக்க முயலுவார். எது நடந்தாலும் தாங்கள் சாட்சியாக மட்டுமே இருங்கள். வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.” என்று கூறிய அறிவுரை நினைவுக்கு வரவே தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டான்.

தன் மனத்தில் எழும் உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் அமைதியான முகத்துடன், சேரமான் அவர்களே! கோப்பரகேசரியாரின் ஆணைகளை எடுத்துத் தங்களுக்கு உரைக்க வேண்டியதும், அதற்கு நீங்கள் சொல்லும் பதிலை - அது எப்படி இருந்தாலும், அதைக் காதில் வாங்கிக் கொண்டு கோப்பரகேசரியாருக்குக் கொண்டு சேர்ப்பதும் ஓலைநாயகமாக வந்திருக்கும் எனது கடமை. அவரது ஆணைக்குத் தலை சாய்த்தால், தாங்கள் தரும் திரைப் பொருள்களுடன் மகிழ்வுடன் திரும்பிச் செல்வேன். மாறாக இருந்தால் முடிந்தவரை தங்கள் கருத்தை மாற்ற முயற்சி செய்வேன். அதன் பிறகும் தங்கள் விருப்பம் வேறாக இருந்தால் அதை கோப்பரகேசரியாருக்கு எடுத்துச் செல்வேன். என் கடமை அவ்வளவே!

“சேரமானின் அமைச்சர், அவருடைய பிரதிநிதியாகச் சொல்லும் பதிலை ஏற்றுக்கொண்டு திரும்பிச் செல்வது எனது கடமையல்ல. அதற்காக கோப்பரகேசரி நீலமலை நாட்டின் இயற்கை அழகை ரசிக்கவுமே என்னுடன் வந்திருக்கிறார். சோழநாட்டு அரசு விவகாரங்களில் சேரநாட்டு அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த அவர் வரவில்லை. ஆகவே, தங்களுடைய பதிலைத் தாங்கள் எடுத்து உரைக்கும்படி கோருகிறேன். அருள்கூர்ந்து, இதை நகைக்கும் விஷயமாகத் தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம்! அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கும்படியும் தங்களைக் கோருகிறேன்!’ என்று பணிவான குரலில் தெரிவித்தான்.

அமைச்சரின் முகமும், சேரமானின் முகமும் ஒருசேரச் சிவந்து போயின. “தூர்த்த (கொடியவன்) பத்ரப்பரதானீ! சேரமானை அவரது ஸபாவில் தூஷணை செய்த ஸ்வானமே(நாயே)! உன்னை சிரச்சேதம் செய்யும் உத்தரவை சேரமான் சாஸனம் செய்யும்படி பாஷிக்கிறேன்!’ என்று அமைச்சர் இறைந்து கத்தினார்.

அதற்குச் சற்றும் கலங்காமல், “ஓய், ஆமாத்யரே! ஒன்று தமிழில் பேசும். இல்லாவிட்டால் வடமொழியான சம்ஸ்கிருதத்தில் பேசும். நீர் பேசுவதைப் பார்த்தால் எந்த மொழியும் தெரியாத அரைகுறை மாதிரி இருக்கிறது,” என்று தமிழில் சொன்ன சிவாச்சாரி, “என்னை நாய் என்று சொன்ன உமது நாவைத் துண்டாடி விட்டிருப்பேன்! ஆனால் அது தூதுவனுக்கு அழகல்ல என்றும், சேரமானுக்காவும் உம்மைச் சும்மா விடுகிறேன். சேரமானின் நிழலில் மறைந்து கொண்டு ஊளையிடும் கழுதைப் புலியே! உம்முடைய குடலைக் கிழித்து மாலையாக்கிக் கொள்ளும் நரசிம்மரின் வலிமை எனக்கு இருக்கிறது! வாயை மூடும்!” என்று சம்ஸ்கிருதத்தில் மிகவும் தெளிவாக அவரிடம் சொன்னான்.

அவனது தெளிவான் சம்ஸ்கிருத உச்சரிப்பில் அயர்ந்து போன அமைச்சர் வாயை மூடிக் கொண்டார். திடுமென்று அவன் சம்ஸ்கிருதத்தில் பேசவே அயர்ந்து போன மற்றவர்கள் - சேரமான் உட்பட - அவன் என்ன சொன்னான் என்று தெரியாமல் திகைத்து விழித்தார்கள்.

பிறகு சேரமானிடம், “சேரமான் அவர்களே! தங்கள் அவையில் தங்கள் அமைச்சரிடம் இப்படி அனைவருக்கும் புரியாத வடமொழியில் பேசியதற்கு என்னை மன்னியுங்கள். எனக்கு வேறு வழி தெரியவில்லை!”  என்று பணிவாகச் சொன்னான்.

மெதுவான குரலில் இளஞ்சேரன் தனது அமைச்சரிடம் சிவாச்சாரி என்ன சொன்னான் என்று வினவினான். அமைச்சர் சிவாச்சாரி சொன்னதை சேரமானின் காதில் தெரிவித்தார். அதைக் கேட்ட இளஞ்சேரன் தனது அரியணையிலிருந்து விருட்டென்று எழுந்திருந்தான். அவன் எழுந்ததைக் கண்ட அனைவரும் எழுந்தார்கள்.

வேகமாக நடந்து வந்து சிவாச்சாரியனின் கன்னத்தில் பளீரென்று அறைந்தான் இளஞ்சேரன். அந்த அறையில் ஒலி அரசவை முழுவதும் எதிரொலித்து அவையையே திகைக்க வைத்து விட்டது. தூதுவனை மரியாதைக் குறைவாக நடத்தியது மட்டுமின்றி, அவனது கன்னத்திலும் அறைவது இதுவரை யாரும் கண்டிராத காட்சியாக இருந்தது.

ஆடாமல் அசையாமல், இளஞ்சேரனையே கண்வாங்காமல் பார்த்தபடி நின்றான் சிவாச்சாரி. நரேந்திரன் கை உடைவாளை நோக்கிச் சென்றது. சட்டென்று அவன் கையைத் தனது இடது கையால் உடும்புப் பிடியாகப் பிடித்தான் சிவாச்சாரி.

“சோழ நாயே! எனது அமைச்சரைக் குள்ளநரி என்று தரக்குறைவாகப் பேசுவாயா இனிமேல்?” என்று அரசவையே அதிரும்படி மறுமுறை அறைந்தான். “நன்றாய்த் தெரிந்துகொள்! நான் உன் மன்னனுக்குத் திரை செலுத்த மாட்டேன்! மனித பாஷையான உனது பாஷையைப் பட்டயங்களில் எழுத மாட்டேன். நீ செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல வேண்டும். தூதனாக வந்ததால் உன்னை வாழ்நாள் முழுவதும் கடுஞ் சிறையில் கழிக்கும் தண்டனையை வழங்குகிறேன். யாரங்கே! இருவரையும் விலங்கு மாட்டிச் சிறையில் தள்ளுங்கள்!”  என்று கர்ஜித்தான்.

சபையே அதிர்ந்து போயிற்று. அனைவரும் சோழப் பேரரசின் வலிமையை நன்கு அறிவார்கள் ஏதாவது சாக்கு சொல்லி, பாதி பொருள்களையாவது கொடுத்தனுப்புவதை விட்டுவிட்டு, ஒரு தூதுவனை, அதுவும், சோழப் பேரரசின் உயர் அதிகாரியை, அனைவருக்கும் முன்னே கன்னத்தில் அறைவது என்ன விளைவை ஏற்படுத்துமோ என்னும் அச்சம் அவையோர் அனைவரையும் சூழ்ந்து கொண்டது.

சிறிதும் கலங்காமல், தலை குனியாமல் சேரனை விழித்துப் பார்த்தபடி பதிலளித்தான் சிவாச்சாரி. “சேரமான் அவர்களே! மூவேந்தர் பரம்பரையில் வந்த தாங்கள் சேரர் குலத்திற்கே அழியாப் பழியைத் தேடிக்கொடுத்து விட்டீர்கள்! ஒரு தூதுவனை இப்படியா நடத்துவது? தங்கள் அமைச்சர் என்னை நாயே என்று அழைத்ததைத் தடுத்து நிறுத்தாமல், தாங்களும் என்னை நாயே என்று விளித்தீர்கள்! அதுவும் என் பிறந்த பொன்னாட்டைக் கேவலப் படுத்தும் வகையில்!

“தங்கள் அமைச்சரைக் கழுதைப்புலி என்று அழைத்ததற்காக என்னைத் தாங்கள் சிறைப்படுத்தலாம். ஆனால் வேங்கை நாட்டு இளவரசர் அரசவையில் ஒரு சொல் கூட பேசவில்லை. அவரைத் திரும்பச் செல்லவிடுங்கள்! சிறந்த சேரர் குலத்திற்கு அவமானம் தேடிக் கொள்ளாதீர்கள்!”  அத்துடன் நரேந்திரனின் கையையும் மெல்லத் தளர்த்தினான்.[வளரும்]

No comments:

Post a Comment