Saturday 2 August 2014

தமிழ் இனி மெல்ல:25சிவாச்சாரியனாக இருந்தாலும், அவனது உடல்கட்டைப் பார்த்தால்

தமிழ் இனி மெல்ல[24] சென்ற பதிவின் நினைவூட்டல் 
சித்து விளையாட்டில் சிறந்த கருவூரார் எப்படி நடக்கவேண்டும் என்று விரும்பினாரோ, அப்படித்தான் இதுவரை நடந்துவருகிறது என்பதை இராஜராஜர் எப்படி அறிவார்? இராஜராஜரின் தமிழ்த் திருப்பணியில் இராஜேந்திரனை ஈடுபடுத்த வேண்டுமானால் அவன் விரும்பும் ஒருவன்தான் அப்பணியில் தலையாய பங்கேற்க வேண்டும் என்பது கருவூராரின் விருப்பம். எனவேதான் இத்திருப்பணியின் நுணுக்கங்களை நன்குணர்ந்த சிவாச்சாரியனே ஆலோசகனாக வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகவே, அவனை இராஜேந்திரனுக்குப் பணியாளனாக அளித்தார். இராஜேந்திரன் எப்படிச் செயல்படுவான் என்பதை நன்கு உணர்ந்த அவர், அவன் சிவாச்சாரியைத்தான் ஆலோசகனாக முன்மொழிவான் என்றும் அறிவார். அதற்கு இராஜராஜர் எப்படி பதிலளிப்பார் என்றும் அவர் ஊகிக்க முடிந்ததால் அனைத்தும் அவர் எதிர்பார்த்தபடியே நடந்தேறியது. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.

“இறைவன் விருப்பம் சிவன் தமிழ்த் தொண்டு செய்யவேண்டும் என்று இருந்தால் இக் கட்டைக்கு அதுவும் சம்மதம்தான்!” என்று இராஜராஜருக்கு அறிவித்த கருவூரார் சிவாச்சாரியனை நோக்கி “சிவனே! யாருக்கும் கனவிலும் கிட்டாத சிறந்த வாய்ப்பு உனக்குக் கிட்டியுள்ளது. திரிபுவனச் சக்கரவர்த்திக்கே தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக, அதுவும் இந்த இளம் வயதிலேயே நியமிக்கப்படுவது என்றால் அது உன் முன்னோர்கள் செய்த தவப்பயனேயன்றி வேறு எதுவுமில்லை. ஆகவே என்றும் அவருக்கு நிலை பிறழாது பணி செய்வாயாக!” என்று கையை உயர்த்தி ஆசி நல்குகிறார்.

தழுதழுத்த குரலில், “ஐயனே! இதுவும் அம்பலவாணனின் அருளே அன்றி வேறொன்றுமில்லை. ஒரே நாளில் நான் கோவில் சிவாச்சாரியப் பணியிலிருந்து திரிபுவனச் சக்கரவர்த்திகளின் தமிழ்த் திருப்பணிக்கு இளவரசரால் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதையும், அதைச் சக்கரவர்த்திகள் ஏற்றுக்கொண்டிருப்பதையும் வேறு எப்படிச் சொல்வது? மேலும் என்னுடன் நட்புறவு தொடர விழைந்து திரிபுவனச் சக்கரவர்த்திகளிடமே அதற்கு அனுமதி பெற்ற இளவரசரின் கருணைக்கப் பாத்திரமானதை எண்ணினால் என் மெய் சிலிர்க்கிறது. இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டிருக்கிறேன். என் பணியில் எவ்விதக் குறை இருப்பினும் அதைப் பொறுத்து, என்னை நல்வழிக்கு நடத்திச் செல்லுமாறு திரிபுவனச் சக்கரவர்த்திகளிடம் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். என் இறைவா...” என்ற சிவாச்சாரியனால் அதற்கு மேல் தொடர்ந்து பேச இயலவில்லை. அவனது இரு கண்களிலிருந்தும் கண்ணீர் முத்துக்கள் அரும்பி நிற்கின்றன.

“சிவாச்சாரியாரே! உமது உணர்ச்சிப் பெருக்கு எம் உள்ளத்தைத் தொடுகிறது. தேவர் பெருமானின் நிழலில் வளர்ந்த நீர் உமது கடமையைச் சரியாக நிறைவேற்றுவீர் என்பதும் அவர் உம்மைத் திருப்பணி திட்டத்தை வரையத் துணை கொண்டதிலிருந்தும், உம்மை இராஜேந்திரன்பால் அனுப்பியதிலிருந்தும் அறிகிறோம். நீர் எமக்கு மட்டுமின்றி, இராஜேந்திரனுக்கும் நூறு ஆண்டுகள் தமிழுக்கு மட்டுமல்லாது சோழநாட்டுக்கும் பணி செய்து வரவேண்டும் என்பதுதான் எமது விருப்பம். பெருவுடையாரின் கருணை என்றும் உம்பால் இருக்கவேண்டிப் பிரார்த்திக்கிறோம். இதைப் பெற்றுக் கொள்ளும்.” என்று தனது முத்திரை மோதிரத்தை சிவாச்சாரியரிடம் அளிக்கிறார் இராஜராஜர்.

எழுந்து அவர்முன் மண்டியிட்டு, இடது கைமேல் வலதுகையை வைத்து அவரிடமிருந்து முத்திரை மோதிரத்தைப் பெற்றுக் கொள்கிறான் சிவாச்சாரி. இனி அவன் சோழப் பேரரசின் எந்த இடத்திற்கும் தங்கு தடையின்றிச் செல்லமுடியும், அவனை இராஜராஜரின் உத்தரவின்றி யாரும் தடுத்து நிறுத்தவும் கூடாது. வெகு சிலரிடமே உள்ள இராஜராஜரின் முத்திரை மோதிரத்தை அவர் கையாலேயே பெறுவது எவ்வளவு பெருமை!

“சிவாச்சாரியாரே! நாளை மதியம் நமது அரண்மனையில் உம்மை இராஜேந்திரனுடன் சந்தித்து மேற்கொண்டு நடக்கவேண்டியதைப்
பற்றிக் கலந்து ஆலோசிப்போம். தேவர் பெருமானே! இத் திருப்பணிக்குழவின் காவலர் யாரென்று அறிந்து கொள்ள யாம் விருப்பமாக உள்ளோம்.” என்று இன்னும் அரசகட்டளைத் தொனியிலேயே பன்மையில் பேசுகிறார் இராஜராஜர்.

“சக்கரவர்த்திகளிடம் திருப்பணிக்குழலைக் கொடுத்ததோடு இந்தக் கட்டையின் கடமை முடிந்துவிட்டது. அதை எப்படிப் பராமரிப்பது என்பதை ஆலேசகரிடமே கேட்டுக் கொள்ளவேண்டும்!” என்று சிரித்தபடி கருவூரார் சொன்னதும் சிவாச்சாரியனுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. அடுத்த கணமே இராஜராஜரின் பார்வை அவன்மேல் நிலைக்கிறது. அவரது விழிகள் அவனை என்ன பதில் என்று வினாவுகின்றன. சக்கரவர்த்திக்கு ஆலோசகர் என்று ஆனவுடன் அவர் அவனைக் கேட்கும் முதல் கேள்வி இது.

“கூத்தபிரானே! என் நாவில் நீ அமர்ந்து சரியான பதிலை அவருக்குச் சொல்ல வைப்பாய், ஐயனே!” என்று தில்லை நடராஜரை மனதில் வேண்டிக் கொண்டு, “திரிபுவனச் சக்கரவர்த்திகளே! திருப்பணிக் குழல் உங்கள் சொத்து. அதைப் பராமரிக்கத் தாங்கள் யாரை வேண்டுமானால் நியமிக்கலாம். தவிர, இது வாழும் திருப்பணி என்பதால் தங்கள் சொத்தான இது வழிவழியாக சோழச் சக்கரவர்த்திகளுக்குச் செல்லப் போகிறது. இருப்பினும் ஆண்டுதோறும் அதில் திருப்பணி நடப்புகளைப் பதிந்து அரச முத்திரையைப் பெற்று வரவேண்டும் என்று தேவர் பெருமான் பணித்திருப்பதைத் தாங்கள் ஏற்று இருப்பதால், ஆலோசகனுக்கு இக்குழலை அணுகவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ஆகவே திருப்பணி ஆலோசகர்களே இக்குழலுக்குக் காலம் காலமாகக் காவலர்களாக இருந்து வரவேண்டும் என்று என் சிற்றறிவுக்குப் புலப்படுகிறது. அதை உயிருக்கும் மேலாகக் காப்பதும் ஆலோசகனின் கடமையாகும். அதைக் காத்து வைத்திருக்கும் இடம் சக்கரவர்த்திகளுக்கும், அவரது வழித்தோன்றலான இளவரசருக்கும் தெரியவேண்டும், தாங்கள் கேட்கும்பொழுது இந்தத் திருப்பணிக் குழல் தங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தாங்கள் மற்ற யாரையாவது தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு குழல் காக்கும் இடம் தெரியப்படுத்தப்படலாம். தங்கள் ஆணைக்குக் காத்திருக்கிறேன். சக்கரவர்த்திகளே!” என்று முடித்தான்.

ஒரு புன்சிரிப்பைப் பதிலாகக் கொடுத்த இராஜராஜர், “சிவாச்சாரியாரே! எமது முதற் கேள்விக்கு யாம் நினைத்த பதிலைச் சொல்லி இருக்கிறீர். இது தற்செயலாக நிகழ்ந்ததே என்று நம்புகிறோம். ஆயினும் எப்பொழுதும் அம்மாதிரிச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. உமது மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதைச் சொல்லும். முடிவு சரியென்றால் யாம் சம்மதிப்போம். ஐயமிருந்தால் யாமே கேட்டுத் தெரிந்து கொண்டு மாற்று முடிவு எடுப்பதாக இருப்பினும் அதையும் உம்மிடம் சொல்லுவோம்.” என்றதும் சிவாச்சாரியனுக்குச் சரியானபடி மூச்சு வர ஆரம்பித்தது.

“நீர் ஏன் இப்படி மனநடுக்கப் படுகிறீர்? இராஜேந்திரனுடன் வாட்போர் புரியும்போது இல்லாத நடுக்கம் இப்போது ஏன் உம்மிடம் தென்படுகிறது? நேற்று எப்படி இருந்தீரோ அப்படியே இருந்து வாரும். நாளை இரண்டாம் சாமத்தில் எம்மை அரண்மனையில் வந்து பாரும்.” என்று கடகடவென்று சிரிக்கிறார் இராஜராஜர்.

தனது மனநிலையை அவர் எப்படிப் புரிந்துகொண்டு உடனே அதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறார் என்று வியக்கிறான் சிவாச்சாரி.

“ஐயா! நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.” என்று கருவூராரை நோக்கிக் கைகூப்பினார் இராஜராஜர்.

அவர் சக்கரவரத்திப் பீடத்திலிருந்து இறங்கி விட்டதை அறிந்த கருவூரார், “அருள்மொழி! மிக்க மகிழ்கிறதப்பா இக்கட்டை! நீ எனக்கு விடைகொடுக்க வேண்டும். இக்கட்டை மூச்சு இருக்கும்போதே திருக்கைலாயத்திற்குச் செல்லவேண்டும் என்ற அளவை நிறைவேற்றிக் கொள்ள விரும்புகிறது. உன் திருப்பணி செழிக்க உமையொரு பாகனை ஏத்துகிறதப்பா இக்கட்டை.” என்று தெரிவிக்கிறார்.

தமிழ் இனி மெல்ல[25] தொடர்கிறது 


அரிசோனா மகாதேவன் 

னைவரும் அதிர்ந்து போகிறார்கள். கருவூரார் இல்லாத சோழநாட்டை யாராலும் நினைத்தும் பார்க்க முடியவில்லை. தாயைப் பிரியப்போகும் கன்றின் நிலைக்குத் தள்ளப் பட்டது போல உணருகிறார் இராஜராஜர்.

“ஐயா! இப்படி என்ன திடீர் முடிவு? தாங்கள் இன்னும் பல்லாண்டு இங்கு இருந்து சோணாடு செழிக்க, சைவமும், தமிழும் வளர எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்க வேண்டாமா?” இராஜராஜரின் குரலில் இருந்த உணர்ச்சிப் பெருக்கத்தை அனைவராலும் உணர முடிகிறது.

குந்தவைப் பிராட்டியாரிடமிருந்து பெரிதாக ஒரு விம்மல் கிளம்புகிறது. “தேவரே! ஏன் இப்படி ஒரு கூரிய ஈட்டியை எங்கள் அனைவரின் நெஞ்சிலும் செலுத்துகிறீர்கள்? சோழநாடு உங்களுக்கு என்ன தீமை செய்தது? தமிழ்த் திருப்பணி நிறைவேறுவதைத் தாங்கள் காணவேண்டாமா? இன்னும் எவ்வளவு பெரிய பணிகள் தாங்கள் சொல்லி தாங்கள் நிறைவேற்றவேண்டும்! தாங்கள் இல்லாத இந்தச் சோழவள நாடு கதிரவனில்லா வானமாகத்தானே இருக்கும்?” என்று கேவ ஆரம்பிக்கிறாள்.

“ஏனம்மா பிராட்டியே! இந்தக் கிழவன் ஒருவேளையாக ஒழியப் போகிறானே என்று மகிழ்ச்சி அடையாமல் இது என்ன அழுகை?”

என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறார் கருவூரார். “கீழ்க் கன்றுகள் தோன்றும் போது குலை தள்ளிய வாழை மரங்கள் வெட்டப் படவேண்டியவைதானே! பெரிய மரம் இருந்தால், கீழே சிறிய மரங்கள் வளர்ந்து பெரிதாக முடியுமா? இந்தக் கட்டையின் உலகப் பொறுப்புக் முடிந்துவிட்டன. எம்பெருமான் உமையொரு பாகனின் காலடியில் போய் சேரவிரும்பும் இந்தக் கட்டையைத் தடுக்கும் வழி யாருக்கும் வரக்கூடாது. மகிழ்வுடன் விடை கொடுங்கள்!”  என்று முகமலர்ச்சியுடன் கேட்கிறார் கருவூரார்.

இராஜராஜரின் இமைகள் பனிக்கின்றன. முடிவெடுத்துவிட்டால் கருவூராரை மாற்ற யாராலும் இயலாது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆகையினால் அவரைத் தடுத்துப் பேசுவது தனக்கு அழகல்ல என்று புரிந்து கொள்கிறார். பேசினால் குரல் தடுமாறுமோ என்று சிறிது நேரம் தயங்குகிறார். பின்னர், “ஐயா! தாங்கள் திருக்கைலாயம் செல்லத் துணையாக சோழ நாட்டு வீரர்களையும், இரதத்தையும், தங்களுக்கு உணவு ஆக்க தவசுப் பிள்ளைகளையும் அனுப்புகிறேன்,” என்று மேலே பேச முயன்ற இராஜராஜரைக் கையை உயர்த்தித் தடுக்கிறார் கருவூரார்.

“இந்தக் கட்டை சிவனருளைத் தேடிச் செல்லும் பொழுது காரைக்கால் அம்மையாரை முன்மாதிரியாகக் கொள்ளாது, அரசனைப் போலச் செல்லுவது முறையா, அருள்மொழி? சோழநாட்டில் இருக்கும்வரை பேரரசனான நீ இக்கட்டையைக் காத்து வந்தாய்! இக்கட்டையும் அதை ஏற்றுக் கொண்டது. இக்கட்டையை அவனிடத்தில் அழைத்துக் கொள்ளும்வரை இனி என் அப்பன் அம்பலவாணன் காப்பாற்றுவான். இக்கட்டை வாழ்ந்து வர நீ கொடுத்த குடில் இனி உன்னது. இக்கட்டையை இனியும் தடைசொல்லாதே!” என்று இராஜராஜரின் தலையில் கையை வைத்து ஆசி நல்கிவிட்டு இராஜேந்திரன் பக்கம் திரும்பி, “மதுராந்தகா! நீ உலகம் போற்றும் மிகப் பெரிய பேரரசனாக விளங்குவாய். உனக்கு சிவன் இறுதி மூச்சு இருக்கும் வரை பணி செய்வான். அம்மா பிராட்டியே! மகாராணியாரே! இறைவனருள் என்றும் உங்களையும் இச் சோழநாட்டையும் காத்துவரும்!” என்று கிளம்புகிறார்.

அனைவரும் அமைதியாகப் பேச்சற்று நிற்கின்றனர்.

கட்டிய காவி உடையுடன், ஒரு கையில் கமண்டலத்துடனும், மறு கையில் தண்டத்துடனும், காலில் பாதணிகூட இல்லாமல் விறுவிறுவென்று வடக்கு நோக்கி நடக்கிறார். அனைவரின் தொண்டையிலும் பெரிதாக ஏதோ ஒன்று அடைக்கிறது. சோழப் பேரரசுக்கே முதல்வரான இராஜராஜருக்கே ஆசானாக இருந்தும், கருவூரார் இக்குடிலைத் தவிர வேறு எதிலும் இருந்ததில்லை, வசித்ததும் இல்லை. தரையில் படுத்துத் தூங்க ஒரு கோரைப் பாயும், சிறிய பனையோலைத் தலையணையும், நடந்து செல்ல மரக்கட்டைப் பாதணிகளும்தான் அவரது சொத்தாக இருந்தன. இப்பொழுது அவைகளையும் விட்டுவிட்டு வெறுங்காலுடன் செல்லும் கருவூராரையே பார்த்தபடி நிற்கிறார்கள். பெருகும் கண்ணீர் அவர் உருவத்தையும் மங்கச் செய்கிறது. அவரது உருவம் சிறிது சிறிதாகி மறைகிறது.
                                                         * * *
                                     மதுரை அரண்மனை
            விரோதிகிருது, புரட்டாசி 18 - அக்டோபர் 3, 1011
கூண்டிலடைக்கப்பட்ட சிங்கத்தைப் போலச் சுற்றிச் சுற்றி நடக்கிறான் பாண்டிய மன்னன் அமரபுஜங்கன். சோழக் கப்பல்கள் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, ஈழத்திலிருந்து பயணித்து, கொல்லத்தில் கப்பலிறங்கி, மாறுவேடத்தில் இரவில் மட்டுமே மலைக்காடுகள் வழியாகச் சென்று, முதல் நாள்தான் மதுரை வந்து சேர்ந்திருக்கிறான்.
அவனை அன்று காலை எதிர்கொண்டது புதிதாக இராஜராஜர் இட்ட ஆணைதான். இனிமேல் பாண்டி நாட்டு வட்டெழுத்துக்கள் நடைமுறையில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாவாம்.30  சோழ நாட்டுக் கிரந்த எழுத்துகளில்தான் கல்வெட்டுகளும், ஓலைச் சுவடிகளும் எழுதப்பட வேண்டுமாம். வட்டெழுத்தில் எழுதப்பட்ட பழைய கல்வெட்டுகள் செல்லாவாம். அவற்றை மீண்டும் புது கிரந்த எழுத்தில் வெட்டிக் கொள்ள வேண்டுமாம். சோழ எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க சோழநாட்டுத் தமிழாசிரியர்கள் ஐநூறு பேர் அனுப்பப் படுவார்களாம். அவர்களிடம் கல்வெட்டுவோரும், தமிழ் கற்போரும் புது எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளவேண்டுமாம். அதைக் கண்காணிக்க ஐந்து கண்காணிகள் வருவார்களாம். அதற்காகும் செலவைப் பாணடிய நாடு ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இரத்தம் கொதிக்கிறது அமரபுஜங்கனுக்கு. மூச்சு ஒரு பேரிரைச்சலாக வெளிப்படுகிறது.

“சங்கம் வளர்த்தவர் நாம்! தமிழ் இலக்கியம் வளர்த்தது பாண்டிநாடு. நாம் சோற்றால் உருட்டி வைத்த சோனாட்டின் எழுத்துக்களுக்கு அடிமையாக வேண்டுமா? சொக்கநாதா! உன்னால் ஆளப்பட்ட பாண்டிநாட்டிற்கா இந்தக் கொடுமை? அன்று நக்கீரனை எரித்தாயே, அப்படியே இந்தச் சோழர்களையும் எரித்துவிடக்கூடாதா!” என்று தனது ஆற்றாமையைப் புலம்பலாக வெளிப்படுத்துகிறான்.

“இந்தச் செய்தி எப்பொழுது வந்தது? நான் மதுரையில் இல்லையே என்று சோழ நாய்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்ததா?” என்று தனது அமைச்சரைக் கேட்கிறான்.

“இருபத்தைந்து நாள்கள் முன்புதான் இத்தகவல் வந்தது. யாரோ ஒரு சிவாச்சாரி இராஜராஜரின் முத்திரை மோதிரத்துடனும், அவரது இலச்சினை பதிக்கப்பட்ட செப்பேடுடனும் வந்து சேர்ந்தான். அவனுக்கு சோழவீரர்கள் அளித்த மரியாதை என்ன, பணிவு என்ன, அவனது தடபுடல் என்ன? தாங்கள் குற்றாலநாதரைத் தரிசிக்கச் சென்றதாகச் சொல்லிவிட்டதால் அவர்களுக்கு தாங்கள் இல்லாதது சந்தேகமாகவே படவில்லை, அரசே! அவன்தான் ஒருநாள் முழுவதும் எங்களுக்கு விவரமாக தகவல் சொன்னது மட்டுமல்லாமல், இந்த எழுத்து மாற்றம் பற்றி நாம் என்ன செய்கிறோம் என்று மாதம் ஒருமுறை அவனுக்குத் தகவல் அனுப்பவேண்டும் என்று சொல்லிவிட்டும் சென்று விட்டான்.” என்கிறார் அமைச்சர்.

அமரபுஜங்கனுக்கு மீசை துடிக்கிறது. எழுத்து மாற்றம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? பாண்டிய அரசனான தான் மதுரையில் இல்லை என்று தெரிந்திருந்தும், தானே ஒரு அரசன் போலப் பாண்டிய அமைச்சருக்கு ஆணையிட்டுச் சென்றிருக்கிறானா? என்ன துணிவு கோவிலில் மணியாட்டும் சிவாச்சாரியனுக்கு?

“அமைச்சரே, நீங்கள் கூறும் சிவாச்சாரி யார்? புதிதாக எங்கிருந்து முளைத்தான் அவன்? இராஜராஜனின் முத்திரை மோதிரத்தைப் பயன்படுத்தும் அளவுக்குச் செல்வாக்குப் படைத்த அவனைப் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லையே! அவன் தங்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளும்படியா விட்டீர்கள்? அவன் தலையைத் துண்டித்திருக்க வேண்டாமா?” என்று உறுமுகிறான் அமரபுஜங்கன்.

“அரசே! அச் சிவாச்சாரியனின் பெயர் சிவசங்கரன். அவன் பெயரளவில் சிவாச்சாரியனாக இருந்தாலும், அவனது உடல்கட்டைப் பார்த்தால் ஒரு பெரிய போர்வீரன் மாதிரித்தான் எனக்குத் தோன்றியது. அவன் மிகவும் மரியாதையாகத்தான் எங்கள் அனைவரிடமும் நடந்து கொண்டான். மதுரைக்கு வந்தவுடன் சொக்கநாதர் ஆலயத்திற்குச் சென்று வணங்கிவிட்டுத்தான் எந்தப் பேச்சையும் ஆரம்பித்தான். பூசையின் போது நமது தலைமை சிவாச்சாரியர் ஆகம முறையில் ஏதோ பிழை செய்துவிட்டார் என்றுகூட எடுத்துக் காட்டினான். அவன் மனமுருகி ஓதிய தேவாரத்தை நாள் முழுக்கக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

“தங்களைக் காணமுடியாது போனதைப் பற்றியும் மிகவும் வருத்தம் தெரிவித்தான். எதைச் சொன்னாலும் “இது திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஆணை” என்று சொன்னானே தவிர, இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஆணையிடவில்லை. சேரநாட்டிற்கு அவசரமாகச் செல்ல வேண்டும் என்பதால் மதுரையில் இருந்து தங்களைக் காணமுடியாது போய்விட்டதே என்று குறைபட்டுக் கொண்டான்.” என்று சொல்லிக் கொண்டே போகிறார் அமைச்சர்.

“அமைச்சரே! ஏன் நீர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகறீர்? முதலில் தடபுடல் செய்தான் என்றீர். பின்னர் மிகவும் மரியாதையாக நடந்துகொண்டான் என்கிறீர். எது உண்மை? முதலில் நீர் சொல்வதைப் பார்த்தால் உம்மை அதிகாரம் செய்து ஆணையிட்டான் என்றல்லவா நினைக்கத் தோனிற்று?” என்று அமைச்சரை அதட்டினான் அமரபுஜங்கன்.

“அரசே! விளக்கமாகச் சொல்லாதது என் பிழைதான். அவன் மிகவும் பணிவாகத்தான் நடந்து கொண்டான். அதே சமயம் சோழச் சக்கரவர்த்தி இராஜராஜரின் ஆணை இது, அவருடைய தமிழ்த் திருப்பணி இது, உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாண்டிய மன்னருக்குத் தெரிவியுங்கள், இராஜராஜர் மாதாமாதம் தன் ஆணை நிறைவேற்றப்படும் நிலைமையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்றுதான் சொன்னான். அவன் பேசுவதிலிருந்து இராஜராஜர் அவனுக்கு நிறைய அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனென்றால் இராஜராஜரின் முத்திரை மோதிரம் அவனிடம் இருந்தது. தவிரவும் இராஜராஜரின் ஆணைகள் எழுதப்பட்ட செப்பேடுகளைக் கொண்டுவந்து அதையும் எங்களுக்குக் காட்டி, அதன் நகல்களையும் விட்டுச் சென்றிருக்கிறான். சோழ எழுத்துக்களைப் படிக்கத் தெரிந்த நம் அரண்மனைப் பண்டிதர்களும் அவன் சொல்லியபடி பட்டயத்தில் எழுதியிருப்பதாகத்தான் சொன்னார்கள். அவன் வந்தது. அவன் நடந்து கொண்டது, அவனைச் சோழ வீரர்களும், ஒரு ஏனாதியும் விழுந்து விழுந்து உபசரித்ததைதான் நான் தடபுடல் என்று சொன்னேன். நமது ஒற்றர்களுக்குக்கூட இவனைப்பற்றித் தெரியவில்லை. அவன் செய்யப்போவது எல்லாம் ஒரே மூடுமந்திரமாகத்தான் இருக்கிறது.” என்கிறார் அமைச்சர்.

“அவன் கப்பம் கேட்டு வரவில்லையா? நான் எங்கிருக்கிறேன் என்று தூண்டித் துருவிக் கேட்கவில்லையா? எனக்கு மிகவும் சந்தேகமாக இருக்கிறது.” என்கிறான் அமரபுஜங்கன்.

“அவன் அதைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை அரசே! அவன் எழுத்து விவகாரம் பற்றி மட்டுமே பேசினான். கோவில்களுக்குத் திருப்பணிகள் நன்றாக நடக்கின்றனவா, கடவுளர்களுக்கு அணிகலன்கள் வேண்டுமா, ஆறுகால பூசைகள் நன்றாக நடக்கின்றனவா, தேவாரம், திருவாசகம் கோவில்களில் ஓதப் படுகின்றனவா, தமிழ்ப் பள்ளிகள் எத்தனை இருக்கின்றன, அவை போதுமானவையா, தமிழாசிரியர்கள் தேவைப்படுகிறார்களா, அதற்கு இராஜராஜரிடம் என்ன விதமான உதவியை நாம் எதிர்பார்க்கிறோம் என்று தான் கேட்டான். நீங்கள் குற்றால நாதரைத் தரிசிக்கச் சென்றிருக்கிறீர்கள் என்றதும், தானும் குற்றால நாதரைத் தரிசிக்க இயலாது போய்விட்டதே என்றுதான் வருத்தப்பட்டான். தங்களுக்கு அவனது வணக்கங்களையும் தெரிவிக்கச் சொன்னான்.”

“அதெல்லாம் இருக்கட்டும். நீர் சோழநாட்டு எழுத்தை நாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிடுவதுதானே! ஏன் வெறுமனே தலையை ஆட்டினீர்?” என்று எரிந்து விழுகிறான் அமரபுஜங்கன்.

“அரசே! நான் கூடியவரை இதமாகத்தான் சொல்லிப் பார்த்தேன். அவன் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை. தங்களிடம் இராஜராஜரின் ஆணையைத் தெரிவிக்கும்படிதான் சொன்னான். எதற்கெடுத்தாலும் அவர் பெயரைத்தான் பயன்படுத்தினான். அவரை மீறித் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்றும் தெரிவித்துவிட்டுச் சென்றான். அவன் ஒரு புரியாத புதிராகத்தான் இருந்தான். ம்ம்...” என்றும் இழுக்கிறார் அமைச்சர்.

“என்ன அமைச்சரே! ஏன் இழுக்கிறீர்? அப்படி என்ன நடந்தது?” என்று கேட்கிறான் அமரபுஜங்கன்.

“ஒன்றுமில்லை அரசே! சிவபூசையிலும், தமிழிலும் மிகவும் ஆர்வம் காட்டிய அவன் அரண்மனையில் காட்சிக்கு வைத்திருந்த ஆயுதங்களை அருகில் சென்று பார்த்தான். சிலவற்றைக் கையில் எடுத்துக் கவனமாக ஆராய்ந்தான். பிறகு கோட்டைச் சுவர்களையும், மதில்களையும், அகழிகளையும் சுற்றிப் பார்த்தான். ஆனால் ஒன்றுமே சொல்லவில்லை. அவன் நடந்து கொண்டதைப் பார்த்தால்...”

“அவன் நடந்து கொண்டதைப் பார்த்தால் இராஜராஜனின் ஒற்றனோ என்று உமக்குத் தோன்றுகிறதா?” என்று கேட்கிறான் அமரபுஜங்கன்.

“ஒரு ஒற்றனுக்கு நமது தலைமைச் சிவாச்சாரியரின் ஆகம முறைகளில் குறை கண்டுபிடிக்கும் அளவுக்கு ஆற்றல் இருக்காது அரசே! அவன் வேதங்களையும் கோவில் சிவாச்சாரியாருடன் சேர்ந்து கணீரென்ற குரலில் ஓதினான். எனவே, அவன் ஒரு சிவாச்சாரி என்பதில் ஒருவிதமான ஐயமும் இல்லை. இருந்தாலும் ஆயுதங்களில் அவன் அவ்வளவு அக்கரை காட்டியது. கோட்டையைச் சுற்றிப் பார்த்தது - இந்தச் செயல்கள்தான் அவன் போர்முறைகளைக் கற்று அறிந்திருப்பானோ என்று ஐயத்தை எனக்குத் தோற்றுவித்தது. தவிர அவன் குதிரையில் லாவகமாக ஏறிச் சவாரி செய்ததுதான் என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது.” என்று நிறுத்துகிறார் அமைச்சர்.

“நீர் இப்பொழுது என்னை மிகவும் குழப்புகிறீர். ஒரு சிவாச்சாரியனுக்கு ஆயுதங்களைப் பற்றியும், குதிரையேற்றமும் எப்படித் தெரியும்? வாளைக் கண்டாலே நடுங்குபவர்கள் ஆயிற்றே அந்தணர்கள்! அதுபோகட்டும், அவனுக்கு வயது எத்தனை இருக்கும்?” ஆவலுடன் அமைச்சரை வினாவுகிறான் அமரபுஜங்கன்.

“முப்பது முப்பத்தொன்று இரு... நினைவுக்கு வந்துவிட்டது. நமது சிவாச்சாரியார் அவன் பெயரில் சொக்கநாதருக்கு அருச்சனை செய்யக் கேட்டபோது, அவன் தனக்கு முப்பத்தோரு வயதென்றும், தனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்றும் சொன்னான். குழந்தைகள் இருப்பதாகச் சொல்லவில்லை.” என்று பதில் சொல்கிறார் அமைச்சர்.

“எந்த ஊர்க்காரன் என்று சொன்னானா?”

“தில்லைக்கருகில் ஏதோ ஒரு ஊர் என்று சொன்னான். ஆனால் தான் தில்லை மூவாயிரவரில் ஒருத்தன் இல்லை என்றும் சொன்னான். அவன் சிகை முடிந்திருந்தது சிவாச்சாரி மாதிரித்தான் இருந்தது. தில்லை அந்தணர் மாதிரி இல்லை. தலைப்பாகை எதுவும் அணியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் மிகவும் எளிமையாகத்தான் உடை அணிந்திருந்தான்.”

“அவனை இவ்வளவு கவனித்திருக்கிறீரே! நாம் சோழ எழுத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும் என்று சொன்னானா, ஏதாவது அச்சுறுத்தினானா?”

“இல்லை அரசே! அது பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை. இராஜராஜர் ஆணையைத் தங்களிடம் தெரிவிக்குமாறுதான் சொன்னான். அவன் சொன்ன ஒரு மாதக் கெடு இன்னும் நான்கு நாள்களில் முடிகிறது.” என்கிறார் அமைச்சர்.

“கெடுவா?”

“அவன்தான் மாதாமாதம் தகவல் அனுப்ப வேண்டும் என்று சொன்னானே! அதைத்தான் கெடு என்று சொன்னேன்.” என்கிறார் அமைச்சர்.

“அமைச்சரே! நீர் ஒன்றும் தகவல் அனுப்பவேண்டாம். அவன் எங்கெல்லாம் ஆசிரியர்களை அனுப்பியிருக்கிறானே, அந்தச் சோழ ஆசிரியர்களை அடித்து விரட்டுங்கள். சங்க இலக்கியங்களை எழுதிய நமது எழுத்துக்களை மாற்ற நமது  இறைவனே அனுமதிக்க மாட்டார்.” என்று முழங்குகிறான் அமரபுஜங்கன்.

‘அரசே! நாம் இன்னும் படை திரட்டி முடியவில்லை. அதற்குள்ளே தேவையில்லாமல் சோழர் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டுமா?” என்று நாட்டு நிலைமையை மன்னனுக்கு எடுத்துரைக்கிறார் அமைச்சர்.

“ம்...,” என்று சிறிது நேரம் யோசித்த அமரபுஜங்கன், “இராஜேந்திரன் எங்கு இருக்கிறான் என்று நமது ஒற்றர்கள் சேதி கொண்டு வந்திருக்கிறார்களா?” என்று வினாவுகிறான். அவனது விரல்கள் அரியாசனத்தின் கைகளில் இலேசாகத் தாளமிடுகின்றன.

“தஞ்சையில் பெரிய படையைத் திரட்டிக் கொண்டு வேங்கை நாட்டுக்கு பத்து நாள்கள் முன்னதாகத்தான் புறப்பட்டுச் சென்றிருக்கிறான் அரசே! அவனது மைத்துனன் விமலாதித்தனின் அண்ணன் சக்திவர்மன் வேங்கை நாட்டில் இறந்து விட்டானாம். சக்திவர்மனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் விமலாதித்தனுக்கே அரசுப் பட்டம் சூட்டவேண்டும், மேலைச் சாளுக்கியர்கள் மூலம் அரசுரிமைப் போட்டி வரக்கூடாது என்று இராஜராஜர் அனுப்பி வைத்திருக்கிறாராம். அவன் விமலாதித்தனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, சோழர் ஆதரவு அவனுக்கு இருக்கிறது என்று காட்டிவிட்டுத் திரும்ப இன்னும் மூன்று நான்கு மாதங்கள் ஆகும் அரசே!”  என்று ஏளனமாகப் பேசிக் கொண்டு போகிறார் அமைச்சர்.

“நிறுத்தும் அமைச்சரே! இந்த நல்ல செய்தியை முதலில் சொல்லாமல் ஏதோ சிவாச்சாரி வந்தான், சோழ எழுத்துக்களை நம்மீது புகுத்தக் கெடு வைத்து விட்டான் என்று கதை அளக்க ஆரம்பித்து விட்டீரே! நான் இலங்கைக்குச் சென்று வந்ததின் நோக்கம் உமக்குப் புரியாதா? சோழர் கண்ணில் எப்படி மண்ணைத் தூவி விட்டுச் சென்று வந்திருக்கிறேன்! எதற்காக? இராஜேந்திரன் எப்படியும் வேங்கை நாட்டுக்கு தங்கையின் கணவனுக்கு முடிசூட்டச் செல்வான் என்பதற்காகத்தானே! கீழைச் சாளுக்கியர்கள் சோழர்களின் உதவியில்தானே அரசாண்டு கொண்டிருக்கிறார்கள்! சோழ ஆதரவு என்ற தூணை எடுத்து விட்டால் அவர்களது அரசு மேலைச் சாளுக்கியர்களின் தாக்குதலில் சரிந்து விழுந்துவிடாதா! இப்படி ஒரு நல்ல சேதியை எதிர்பார்த்துத்தானே நான் பாண்டி நாட்டிற்கு ஆதரவு திரட்டி வந்திருக்கிறேன்! நமது ஒற்றர்கள் திறமையாக வேலை பார்த்து வருகிறார்களே, அந்தமட்டில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. யார் அந்த ஒற்றன்? அவனுக்கு நல்ல பரிசளிக்க வேண்டும்!”  என்று உற்சாகமாகப் பேசினான் அமரபுஜங்கன்.

“அது அவனல்ல அரசே, அவள்!”  என்று பதில் சொன்னார் அமைச்சர்.

“அவளா?” வியப்புடன் வினவினான் அமரபுஜங்கன்.

“ஆம் அரசே! ஆதித்த கரிகாலனை ஒழித்துக் கட்ட உங்கள் பாட்டனார் வீரபாண்ய மகாராஜாவின் மெய்காப்பாளன் வெற்றிமாறனுக்கு உதவிய இரவிதாச பிரம்மராயர் குடும்பத்தையே சொத்தைப் பிடுங்கிக்கொண்டு இராஜராஜர் விரட்டினார் அல்லவா, அப்பொழுது நமக்கு பயன் படட்டும் என்று அவர்களுக்கு ஆதரவு அளித்து வந்தார் தங்கள் பாட்டனாரின் அமைச்சரான எனது தகப்பனார். அவர்கள் நலம் பேணுமாறு வெற்றிமாறனின் புதல்வர்கள் பணிக்கப்பட்டார்கள். ரவிதாசனின் பிள்ளை வயிற்றுப் பேத்தி கமலம்மை தன் பாட்டனாரை ஓட்டாண்டி ஆக்கிய சோழ நாட்டிற்கு எதிராக எந்த உதவியையும் செய்கிறேன் என்று நம்மை நச்சரித்து வந்தாள். அரண்மனைப் பணிப் பெண்களுடன் நட்புகொண்டு, நடந்து வருவதை அவ்வப்பொழுது நமக்குத் தெரிவிக்கும்படி அவளைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்தேன். அவளிடமிருந்து நம்பகமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.”

“அவள் தனது தடங்களை மூடி மறைத்துக் கொண்டிருக்கிறாள் அல்லவா?”

“அவள் அனுப்பும் செய்திகள் மூன்று கைமாறி நமக்கு வருகிறது அரசே! ஆகவே, நமக்குச் செய்தி கொண்டு கொடுப்பவனுக்கு செய்தியின் மூலம் எது என்று தெரியாது.” என்று பெருமையாகப் பதிலளிக்கிறார் அமைச்சர்.
----------------------------------------------------------------------------------------------------------------------
அடிக்குறிப்பு :
30சோழர்களால் 11ம் நூற்றாண்டில் பாண்டிய நாடு வெல்லப் படும் வரை சேர, பாண்டிய நாடுகளில் வட்டெழுத்துகளே வழக்கில் இருந்தன. பின்னர் அந்தச் சோழ எழுத்துகளே சில நூற்றாண்டுகளில் மாற்றத்துடன் இன்றைய தமிழ் எழுத்துகளாக வடிவெடுத்தன - ஐராவதம் மகாதேவன், "Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D.'' -2003

No comments:

Post a Comment