Monday 25 November 2013

குடியைக் கெடுக்கும் கடன்


Credit Cards on a White Background
கடன் அட்டை
கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு பத்து ரூபாய் கடன் வாங்கவேண்டுமென்றாலும் மொத்தக் குடும்பமே வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து – கையொப்பமிட்டுக் கொடுத்தால்தான் கடன் கிடைக்கும்எனும் நிலை இருந்தது. அதனடிப்படையில் கடன் கொடுத்தவர்கள் காலப்போக்கில் அந்தவெற்றுப்பத்திரத்தில் தாம் விரும்பிய வகையில் எழுதி, கடன் பெற்றவர்களின் வீடு – நிலபுலன்களையும் அநியாயமாக அபகரிப்பாகர்கள். இப்படி இழந்த குடும்பங்கள் எத்தனைஎத்தனையோ! இன்றைய நவீன வாழ்க்கைச்சூழலில்கூட காலனிகள், சேரிகள், பிளாட்பாரங்களில் வாழ்ந்து – தொழிலும்செய்து பிழைப்பவர்கள்கூட ‘தண்டல்கடன் மூலம் பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். வாங்கும்கடனுக்கு மாதவட்டியாக 10 வீதமும், இன்னொருவகையில் தினந்தோறும் செலுத்தப்படும் முறையின்மூலம் மாதத்திற்கு 30 வீதவட்டியும் கட்டிவருகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியாத கணக்காகும். தண்டல் கடன் வாங்காத சேரி, காலனி மக்களோ, பிளாட்பார, நடைபாதை, நடைவண்டி வியாபாரிகளோ இல்லை எனும் அளவு அவர்களின் சமூகப் பொருளாதாரத்தைக் கடன்கள் நீக்கமறச் சூறையாடி வருகின்றன.
இத்தண்டல் முறைக் கடன் அரசினால் தடைசெய்யப்பட்டதும் மீறினால் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும். ஆனால், அதிகமாக உள்ள சட்டப்பிரிவுகளில் அதிகம் மீறப்படுவது இந்தச்சட்டம்தான் என்பது புள்ளி விவரம். இச்சட்டத்தின்படி கைது செய்யப்படுபவர்கள் மிகமிகக் குறைந்த அளவினர் கூட இல்லை என்பது வேதனைக்குரிய உண்மையாகும். இதற்கு மிகமிக முக்கியமான காரணம், இந்தத் ‘தண்டல்’ தொழிலில் ஈடுபட்டுவரும் அநேகம்பேர் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் பொறுப்புகளிலும் இருந்துகொண்டு அவர்கள் செல்லும் கார்களில் கட்சிக்கொடியை மாட்டி, பாதுகாப்பைத் தேடிக் கொள்வதுதான்.
தண்டல்காரர்களிடம் கடன் பெற்றுத் திருப்பிக்கட்ட முடியாமல் மனைவியையும் மகள்களையும் இழந்த குடும்பங்களும் உள்ளன என்பது வெட்கக்கேடானது. அது மாத்திரமில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதும் பரபரப்பான செய்திகளாக அரங்கேற்றப்படாமல் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் முன்னேற்றம், சமூகத்தின் வளர்ச்சி என்பதெல்லாம் 20% வீதமக்களுள் நடைபெறும் பரமபத விளையாட்டு மட்டுமே. 80% வீத மக்களின் நிலைமை எல்லாவகையிலும் கேள்விக்குறியே. இப்படியான பழைய பேய்களைச் சமாளிப்பதே சிரமமாக இருக்கும் நிலையில், தற்போது புதியப் பேயாகக் கடன் அட்டைகள் நுழைந்துள்ளன. 18 வயதிற்கும் 28 வயதிற்குமிடைப்பட்ட இளைய தலைமுறையினர் அதை எப்படிக் கையாள்வதென்றே தெரியாமல் பல கடன் அட்டைகளைப் பெற்றுத்தம் குடும்பத்தை விழிபிதுங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சம்பளப்பணம் வட்டியாகவே பறிபோகிறது.
credit1
கடன் அட்டை


ரொக்கமாக நூறுரூபாய் கொடுத்தால் கிடைக்கக்கூடிய ஒரு பொருளை, கடன் அட்டை உபயோகித்து வாங்க முன்னூறு ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இப்படிப் பலவகைகளிலும் தங்களது உழைப்பையும் ஊதியத்தையும் இழக்கிறார்கள்.
கடன் அட்டையைக் கன்னாபின்னா என்று பயன்படுத்திவிட்டு, அந்தப்பணத்தைக் கட்டாமல் இருப்பவர்களின் வீடுதேடி வங்கிக்காரர்கள், வசூல் என்ற பெயரில் குண்டர்களை அனுப்ப, கடன்அட்டை வாங்கியவர்கள் ஓடிஒளிந்து, வேலையும் பறிபோய், குடும்ப நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.
நெஞ்சு நிமிர்த்திச் சொல்வேன். என்னிடம் பணியாற்றுபவர் எவரும் சீதனம் வாங்கமாட்டார்கள்; கடன் வாங்க மாட்டார்கள். தமது ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு, செலவினங்களையும் சேமிப்பையும் வரையறுத்து வாழ்ந்து உயர்ந்து வருகிறார்கள்.
பலர் திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது கடன் வாங்காமல் முடியாதே என்ற ஒரு மன அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு, அதன் காரணமாகவே அடமானம் வைத்துக் கடன் வாங்கிச் செலவு செய்து விட்டு, கடனைத் திருப்பிச்செலுத்த முடியாமல் ஏற்படும் அவமானங்களையும், அவலங்களையும் சுமக்கிறார்கள். அத்துடன், திருமணம்மூலம் இவ்வளவு கடன் சுமையாகிவிட்டதே எனமணமக்கள் பரிதவித்து, இல்லற அமைதியைச் சீர்குலைவு செய்து கொண்டவர்கள் ஏராளம். திருமணச் செலவென்பது மொய் எவ்வளவு வரும் என்பதை அளவுகோலாகக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய ஒரு நிகழ்வேதவிர வேறொன்றுமில்லை.
எங்களுக்கான சம்பிரதாயமுறையும் காலம்காலமாக அதனையே சொல்லிவருகிறது.
பொதிகையில் ‘வெளிச்சத்தின் மறுபக்கம்’ நிகழ்ச்சியினை நான் நடத்தி வந்தபோது ஒரு பெண்மணியைப் பேட்டிக் காண நேர்ந்தது. அவர் ரூ. 600 சம்பளத்திற்கு ஒரு சத்துணவுக் கூடத்தில் பணிபுரிந்து வருபவர். அவரது கணவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி. கையில் கிடைக்கும் பணத்தையெல்லாம் மதுவுக்கே செலவழித்துவிட்டு மயங்கிக்கிடப்பவன். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள்.
முதல்பெண்ணுக்கு 20 வயது, இன்னொன்றுக்கு 18 வயது, கடைசிப்பெண்ணுக்கு 16 வயது. எப்படித்தம் பெண்களைக் கரையேற்றப் போகிறோம் என்றதவிப்பு அந்தப்  பெண்மணிக்கு. வரன் கிடைத்தாலும் அவர்கள் கேட்டதும், கல்யாணச்செலவுக்கும் சேர்த்து 12 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. இவர்களைப் போன்றவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக ஆரம்பத்தில் தெரிவது தண்டல் வட்டிக்காரர்கள்தான்
.
கை நீட்டுகிறாள்.
கடன் கேட்கிறாள்.
கிடைத்து விடுகிறது.
பெருத்த வட்டி.
இதைப்பற்றிக் கவலைகொள்ளும் நிலையில்அவளில்லை.
அவள் முதல்மகளின் திருமணம் சுற்று வட்டாரம் மெச்ச, நடந்தேறுகிறது. வாங்கிய கடனுக்கு  வட்டிகூடக் கட்டமுடியாமல் மாதங்கள் உருள்கின்றன. ஆறு மாதங்களைத் தாண்டிவிட்டதால் தண்டல்காரன் பொறுமை இழந்து போகிறான். அவனது நடவடிக்கைகள் பயத்தை வரவழைப்பதாக மாறிவருகிறது. இன்னும் இரண்டு பெண்களைக் கரையேற்ற கையில் வைத்துக்  கொண்டிருக்கும் பதைப்பு ஒருபுறம். கட்டவேண்டிய கடன், வட்டியுடன் சேர்ந்து 18 ஆயிரம் ரூபாயாக உயர்ந்த விட்ட திகில் மறுபுறம். விரைந்து முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்… எடுத்துவிட்டாள், தற்கொலை செய்துகொள்வது என்று. ஆனால் விதி, பக்கத்து வீட்டுப்பாட்டி உருவத்தில் வந்து கடனை அடைக்க வழிகாட்டியது. புரோக்கர்மூலம் ஒரு மருத்துவ மனையில் தனது கிட்னியை விற்றுக் கடனை அடைக்கநேரிட்டது.
பாவம்! இன்னும் மூச்சிரைக்க, நடக்க முடியாமல் சத்துணவுக் கூடத்துப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டு, பாதி உயிரோடு வாழ்ந்து வருகிறாள்.
ஜப்பான் நாட்டில் ஒருவர் கடன் அடைக்காமல் இறந்து போனால் கடன் கொடுத்த அனைவரும் ஒரு வேனில் வந்து அவர் வீட்டுக்கு முன்னால் காரில் பொருத்தியிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம் அவர் கடன் தொகையை அறிவிப்பார்கள். அந்தக் கடனை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் பிணம் அடக்கம் செய்யப்படும்.
போர்க்களத்தில் சகோதரர்கள், சொத்து, சுகம், நாடு என அனைத்தையும் இழந்து நிற்கிறான் இராவணன். கோபலகிருஷ்ண பாரதியார் தாம் எழுதிய இராமநாடகக் கீர்த்தனைகள் என்ற நூலில்
“கடன் பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்று குறித்துள்ளார்.
அப்படியானால் கடன் எவ்வளவு கொடுமையானது என்பதை இதைவிட எவர் சொல்லிவிட முடியும்?
உலகிலேயே மிகப் பெரியதுன்பமாக  இராமாயணம் கடனைத்தான் குறிப்பிடுகிறது. கடன் பட்டுத்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற மனநிலையிலுள்ள மனிதர்கள் காலப்போக்கில் கடனுக்காக ஏந்திய கைகளைப் பிச்சைக்காக ஏந்தி நிற்பார்கள்.
இதில் இன்னொருவகை, நன்றிக்கடன். இதனால் புழுங்கி வாழ்ந்து வரும் எத்தனையோ மேதைகளை, வெற்றியாளர்களை நான் அறிவேன். இன்றைய மிகப்பெரிய இசையமைப்பாளர் 30 வருடங்களுக்கு முன்னால் வெடித்துக் கிளம்பிய இசை ஞாயிறு. அவர் வெற்றி அடைந்தவுடன் ஒரு பாடகி, பத்திரிகையொன்றில் பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்..
.
“இவர்கள் சோற்றை மாத்திரம் அவித்து வைத்து விட்டுச்  சாம்பாருக்கும் ரசத்திற்கும் எங்கள் வீட்டிற்கு வந்து தட்டேந்தியவர்கள்”
இவ்வாறான அவமானங்கள் பல பேரது வாழ்க்கையில் கூனிக்குறுக வைத்துக் கொண்டிருக்கிறது.
பாத்திரமறிந்து பிச்சையிடு என்பார்கள். ‘பிச்சையிடுபவனை அறிந்து பாத்திரம் ஏந்து’ என்பதை வாழ்வில் புரிந்து கொள்ள வேண்டும்.
வங்கிகள் கடன் தருகின்றனவே… பெற்றுக் கொள்ளக்கூடாதா என்ற நினைப்பு தேவையில்லை. அவைதகுதி அடிப்படையில் தரப்படும் மூலதனமாகும். வீட்டுக்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் என்று வங்கிகளிடமிருந்து கடன்பெற்று உங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள நீங்கள் உரிமை பெற்றவர்கள்தான்.வங்கிகளில் பெறும் கடன் அட்டைக்கடன், தனிப்பட்ட கடன்களைக் கட்டாவிட்டால் அப்புறம் அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வேறுகடன்அட்டை, தனிப்பட்டகடன் மாத்திரமல்லாது வீட்டுக்கடன், வாகனக்கடன், வர்த்தகக்கடன்கூடக்   கிடைக்காது என்பதைக் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒன்றே ஒன்றுதான்.
நாணயம் தவறாமல் இந்தக்கடன்களைத் திருப்பிச்செலுத்தினால் வங்கிகளைவிட வேறு எந்தப்பெரிய மனிதனும் உங்களுக்கு உதவிவிட முடியாது.
வங்கிக்கடன், தோழமை கொண்டமூலதனம்.  நன்றிக்கடன், தேள்கள்கொட்டும் ஆறாரணம்.


No comments:

Post a Comment