Wednesday 6 November 2013

ஒரு பெண்ணின் பார்வையில் காதலை....

இது நிகழாது இருந்திருக்கலாம் - எனது (முதல்) பார்வையில்
காதல் காலந்தோறும் கவிஞர்களையும் கவிதைகளையும் வாரி வழங்கி வந்தாலும் பெண் கவிஞர்களை குறைவாகவே உருவாக்கி வந்திருக்கிறது. இது, காதலில் உருகுபவனும் சரி, காதல் தோல்வியில் வாடுபவனும் சரி அது ஆணாகத் தான் இருக்க முடியும் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்து விட்டது. பெண்களுக்குள்ளும் காதல் இருக்கிறது, அவர்கள் காதல் உணர்வும் ஆண்களுக்கு சளைத்தது அல்ல என்பதை பொதுவெளியில் பெண்கள் கவிதையாக பகிர்வதில் ஏனோ ஒரு சுதந்திரமான சூழல் இன்னும் இங்கு உருவாகவில்லை. 
இருப்பினும், அங்கொருவர் இங்கொருவராக பெண்களும் காதல் குறித்த தங்கள் உணர்வுகளை கவிதைகளாக வடித்து வருவதை படிக்கும் வாய்ப்பு கிடைக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் சமீபத்தில் நமது அனைவருக்கும் பரிட்சயமான தமிழ்ச்செல்வி அக்கா எழுதிய "இது நிகழாது இருந்திருக்கலாம்" கவிதைத் தொகுப்பு வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தமிழ்ச்செல்வி
இது முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் பார்வையில் காதலைச் சொல்லும் ஒரு கவிதைத் தொகுப்பு. கலையாத கனவுகள் என்று கவிதைத் தொகுப்பு எதைப் பற்றியது எனச் சொல்வதில் இருந்து, முதல் பார்வை, முதல் தீண்டல், முதல் முத்தம், ஊடல், காத்திருப்பு, பரிசு, குறுஞ்செய்தி, புறக்கணிப்பு, அணைப்பு, காமம் என காதலர்களுக்குள் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் பெண்ணின் பார்வையில் பெண்ணே சொல்வதால் வார்த்தைகள் யாவும் இயல்பாக பெண்ணின் உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளது.

கவிதைத் தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காதலின் ஏதாவது ஒரு படிநிலையை, மகிழ்வை, வருத்தத்தை என ஏதாவது ஒரு உணர்ச்சியை பிரதிபலிப்பதாக இருந்தாலும் நான் அதிகம் இரசித்த ஒரு கவிதையின் வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.  

குறுஞ்செய்தி என்னும் கவிதையில் வரும் வரிகளான
என்னால் அனுப்பப்படுகிற
ஒவ்வொரு குறுஞ்செய்தியும்
என் கவனம் உன்மேல்
என உறுதிபடுத்தத் தான்
பதில் வராத போதும் கூட
நான் நினைப்பதுண்டு
என் நினைவுக் கரைதலில்
நீ குறுஞ்செய்தியை
பார்க்க மறந்தாய் என்று.
என்பது காதலர்களின் இயல்பான மனநிலையான புறக்கணிப்பையும் காதல் என உருவகப்படுத்தும் தன்மையைக் காட்டுமிடத்தில் கவிஞராக/காதலராக நம் மனம் கவர்கிறார் ஆசிரியர்.

அதே கவிதையின் இறுதியில் முத்தாய்ப்பாய்
நம்பிக்கை ஒன்றில் தான்
காதலின் விதை
ஆழப் பதியப்படுகிறது
விருட்சமாய் உருமாற...
என்ற வரிகளில் காதலைப் பற்றிய தனது பார்வையை தெளிவாக எடுத்துரைக்கும் இடத்திலும் கவிஞர் மனம் கவர்கிறார்.

இந்த கவிதை மட்டுமல்ல கவிதைத் தொகுப்பில் இருக்கும் நாற்பத்தைந்து கவிதைகளிலும் இப்படி பெண்ணின் பார்வையில் காதலைக் காணுமிடத்து மனம் அந்த உணர்வுகளை எளிதில் உள்வாங்கி இரசிக்க முடிகிறது.
பல கவிதைகள் நன்றாக அமைந்திருந்தாலும் சில கவிதைகளை வாசிக்கும் போது இன்னும் சற்று இக்கவிதையை மெருகேற்றி இருக்கலாமோ என்ற எண்ணம் எழுந்தாலும் கவிஞருக்கு இது முதல் கவிதைப் புத்தகம் என்பதால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்; என்றாலும் வரும் படைப்புகளில் இன்னும் மேம்பட்ட அதே சமயம் கவிதை என்னும் போர்வாளை காதலுக்குள் மட்டும் அடைக்காது சமுதாயத்தின் அவலங்களையும் சீர்கேடுகளையும் சாடியும் சமகால சமூக நிகழ்வுகளை பிரதிபலித்தும் வீச வேண்டும் என்ற கோரிக்கையை கவிஞருக்கு முன்வைத்து இன்னும் பல கவிதை புத்தகங்களை எழுத வாழ்த்தி அமரும் அதே வேளையில் கவிஞராய் தமிழ்ச்செல்வி அக்கா மென்மேலும் பல உயரங்களைத் தொட இறையருள் என்றும் துணை நிற்க பிரார்த்திக்கிறேன்.
PRASATH

1 comment: