Thursday 1 November 2012

பர்வத மலை

பர்வத மலை
பர்வத மலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிவசக்தி சொரூபமாக நின்று அருளைச் சுரந்து கொண்டிருப்பன திருஅண்ணாமலையும், பர்வத மலையும். நாடி வரும் ஞானத்தபோதனர்களை வருக வருக என்றழைத்து ஆன்மீக அருளும் அடைக்கலமும் தருவன இவ்விரு தெய்வீக மலைகள்.

ஸ்ரீ பூண்டி மகான் இவ்விரு மலைகள் பற்றி பல்வெறு விபரங்களை பல காலகட்டங்களில் தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக பர்வத மலை பற்றிய பல அற்புதங்களை ஸ்ரீ பூண்டி மகான் வெளியிட்டுள்ளார்கள். இந்த தெய்வீக பர்வத மலையில் ஸ்ரீ பூண்டி மகான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கி இருந்து தவம் செய்ததாகவும், இம்மலையிலேயே ஸ்ரீ பூண்டி மகானுக்கு ஆன்மீக அருள் கிட்டியதாகவும், ஒரு கருத்து அவருடன் பழகிய சாதுகளுக்கும், அன்பர்களுக்கும் உண்டு. மேலும் இம்மலையை சுற்றியுள்ள பல கிராமங்களில், ஸ்ரீ பூண்டி மகான் தங்கி இருந்து தவம் செய்த விபரங்களை அனைவரும் அறிவர். இது பற்றிய விபரங்களையும் ஸ்ரீ பூண்டி மகான் பல காலகட்டங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்த பர்வத மலை பற்றிய விபரங்கள் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது

பர்வதமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் வட்டத்தில் போளூரிலிருந்து தென்மேற்கே 20 கிமீ தூரத்திலும், செங்கத்திலிருந்து வடகிழக்கே 30 கிமீ தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து வடமேற்கே 30 கிமீ தூரத்திலும் உள்ளது "பர்வதமலை". போளூரிலிருந்து செங்கம் செல்லும் சாலையில், தென் மாதிமங்கலம் (தென் மகாதேவமங்கலம்) என்ற ஊரிலிருந்து கடலாடி என்ற ஊர் வரை செல்லும் சாலை அருகாமையில் மேற்கே இம்மலை வியாபித்துள்ளது. இம்மலைக்கு கிழக்கே தென் மாதிமங்கலம் என்ற தென் மகாதேவமங்கலம் கிராமும், தெற்கே கடலாடி என்ற கிராமமும், மேற்கே காந்தம்பாளையம் என்ற கிராமமும், வடக்கே மூலக்காடு என்ற கிராமமும் அமைந்துள்ளன. இம்மலையின் உயரம் சுமார் 4,500 அடிகள். இம்மலை சுமார் 5,500 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. இம்மலைக்கு 7 சடைப்பிரிவுகள் உள்ளன. இம்மலைக்கு நவிர மலை, திரிசூல கிரி, பர்வத கிரி, தென்கயிலாயம் என்ற பெயர்களும் உண்டு. இம்மலையின் உச்சியில் உள்ள பெரிய சமதள பாறையின் மீது அழகிய கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் மல்லிகார்சுனேஸ்வர சுவாமியும், பிரம்மராம்பிகை அம்மனும் எழுந்தருளி உள்ளார்கள். இம்மலையின் உச்சியில், உள்ள மற்றொரு பாறையின் மீது கடலாடி மௌன யோகி சுவாமிகளின் ஆசிரமம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

பர்வதமலையும், அதன் மேற்கே அமைந்துள்ள ஜவ்வாது மலைத் தொடரும் மற்றும் இம்மலைளை சுற்றி உள்ள பகுதிகளும் பண்டைகாலத்தில் "பலகுன்றக் கோட்டம்" என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை "பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்" என்ற மன்னன் "செங்கண்மா" என்ற நகரிலிருந்து ஆண்டதாக அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த செங்கண்மா என்ற நகரம் தற்போது மறுவி "செங்கம்" என்று அழைக்கப்படுகின்றது. இது திருவண்ணாமலைக்கு மேற்கே சுமார் 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இம்மன்னன் காலத்தில், பர்வதமலை மேல், சிங்கக் கிணறு என்ற இடத்துக்கு அருகில் ஒரு கோட்டை கட்டப்பட்டதற்கான அடையாமாக மதில் சுவர் உள்ளது. மலையுச்சியில் உள்ளதால், இக்கோட்டை பகைவர்களிடமிருந்து பாதுகாப்பிற்காக பயன் படுத்தப்பட்டு இருக்கலாம்.

ஆசிரமம் அமைந்துள்ள பாறையை கடந்து சென்றால், மற்றுமொரு செங்குத்தான பெரிய பாறை அமைந்துள்ளது. பர்வதமலையின் உச்சியாக அமைந்துள்ள இப்பாறையின் மேல், அழகிய கோயில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் நன்னன் என்ற மன்னன் காலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்று நம்பப்படுகின்றது. இக்கோயிலில் மல்லிகார்சுனேஸ்வர சுவாமியும், பிரம்மராம்பிகை அம்மனும் எழுந்தருளி உள்ளார்கள். இக்கோயிலில் விநாயகர், முருகர், வீரபத்திரர் மற்றும் போகர் ஆகியோரது திருஉருவச்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள சிவனுக்கு "காரியுண்டிக் கடவுள்" என்ற பெயரும் உண்டு. கரிய நிறமுடைய விஷத்தை உண்டதால் இப்பெயர் வழங்கப்படுகின்றது. இதுவே தற்போது மருவி ஸ்ரீகாளகண்டீஸ்வரர் என்றும், ஸ்ரீகரைகண்டீஸ்வரர் என்றும் வழங்கப்படுகின்றது.



சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் இம்மலையில் அரூபமாக உள்ளனர். இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சரிவுகளும், உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியத்தையும் உற்ச்சாகத்தையும் தரும் மூலிகைகளும், மூலிகை காற்றும், மலையில் ஆங்காங்கே அமைந்துள்ள குகைகளும், தவத்தில் ஈடுபட அவர்களுக்கு பெரிதும் உதவுகின்றது. மலையேறிச்செல்லும் பக்தர்கள் பலருக்கு இவர்களின் தரிசனமும், அருளும் இன்றும் கிட்டுவதாக பலர் தெரிவித்துள்ளனர். இம்மலையின் உச்சியில், கற்பக விருட்சம் சோதிப்பிரகாசமாய் உள்ளதாகவும், அது இன்றும் பல பக்தர்களுக்கு காட்சி அளிப்பதாகவும் நம்பப்படுகின்றது.

இம்மலையில் பல அற்புதமான அரிய மூலிகைகள் உள்ளன. ஆள் விரட்டி, பேய் விரட்டி, கருந்துளசி, கருநொச்சி, கருஊமத்தை, கருநெல்லி, சிவனார் வேம்பு, ஐந்து மற்றும் அதற்கு மேலும் இலை அடுக்குகலை உடைய மகாவில்வம், வெள்ளெருக்கு மற்றும் ஓரிதழ் தாமரை ஆகிய அறிய மூலிகைகள் இன்றும் இம்மலையில் கிடைக்கின்றது. கோடை மற்றும் வறட்சி காலங்களில் கூட தன் இலைகளில் நீரைச் சொட்டிக்கொண்டிருக்கும் "சொட்டு நீலி" என்ற அறிய மூலிகையும், வாயில் போட்டு மென்ற உடன் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செல்லும் சக்தியை தரும் "மணி" என்ற அறிய மூலிகையும் இம்மலையில் உள்ளது. நாட்டின் பல பாகங்களில் இருந்து இம்மூலிகைகளை தேடி பல சித்த வைத்தியர்களும், மந்திரவாதிகளும், ஆராச்சியாளர்களும் இந்த பர்வதமலைக்கு வருவதை இன்றும் காணலாம்.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் திருவடிக்கே சரணம்

2. பர்வத மலை பற்றி ஸ்ரீ பூண்டி மகான் வெளியிட்ட கருத்துகள்

திரு. பரணிதரன் அவர்கள் "அருணாசல மகிமை" என்ற ஆன்மீக கட்டுரை தொடரை ஆனந்த விகடனில் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. திருவண்ணாமலை மற்றும் அதனை சார்ந்த ஆன்மீக விவரங்களை நேரில் கண்டு இந்த தொடரில் திரு. பரணிதரன் எழுதி வந்தார்கள். ஒரு முறை பூண்டி திருத்தலத்தில் ஸ்ரீ பூண்டி மகானை தரிசித்துவிட்டு, கடலாடி என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்த போது, சாலைக்கு மேற்கே கம்பீரமாக காட்சியளித்த பரவதமலையை கவனிக்க நேர்ந்தது. பின்பு அம் மலை பற்றிய விவரங்களை சேகரித்த திரு. பரணிதரனும் அவரது நண்பர்களும், ஒரு முறை பர்வதமலையில் ஏறிப் பார்த்து விட்டு வந்து விடுவது என்று முடிவு செய்தனர்.

ஒரு நாள் திரு. பரணிதரனும் மற்றும் அவரது நண்பர்களும் பர்வதமலையில் ஏறுவதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டனர். பர்வதமலையில் ஏற இறங்குவது என்பது மிகவும் கடினமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும் என்று எல்லோரும் ரொம்பவும் பயமுறுத்தி வைத்திருந்ததால், ஸ்ரீ பூண்டி மகானை தரிசித்துவிட்டு, அவரது ஆசியையும் பெற்றுக் கொண்டு, மேலே செல்வது என்று தீர்மானித்து, பூண்டிக்கு சென்றனர்.

ஸ்ரீ பூண்டி மகானை தரிசித்த பின், "பர்வத மலையிலே ஏறிப் பார்க்கலாம்னு வந்திருக்கோம். போய் வரலாமா?" என்று கேட்டார் திரு. பரணிதரன்.

"நல்லது. போய் வாப்பா"என்றார் ஸ்ரீ பூண்டி மகான்.
"அங்கே என்னல்லாம் பார்க்கணும்?" என்றார் திரு. பரணிதரன் அடுத்தபடியாக.

"பச்சையம்மா கோயில். சிவராத்திரி விசேஷம். அன்னாபிஷேகம். ரத சப்தமி. அன்னிக்கு நான் அங்கேயிருந்தேன்"என்றார் ஸ்ரீ பூண்டி மகான்.

மலையின் மீது சிவன் கோயில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். ஆனால் ஸ்ரீ பூண்டி மகான் பச்சையம்மன் கோயில் என்கிறார். மனதில் குழப்பம் ஏற்பட்டாலும் குறுக்குக் கேள்வி கேட்காமல் ஸ்ரீ பூண்டி மகான் கூறியவற்றைப் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார் திரு. பரணிதரன்.

"சாமி அந்த மலை ஏர்றது ரொம்பக் கஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்களே. சௌக்கியமா போய் வர்றத்துக்கு நீங்க ஆசிர்வாதம் செய்யுங்க."

"போய் வாப்பா. பெரிய தண்டவாளம், சின்ன தண்டவாளம், சின்ன கடப்பாறை... எல்லாம் ஜம்ப்பர் வேலை"என்றார் ஸ்ரீ பூண்டி மகான்.

திரு. பரணிதரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் வாயை மூடிக் கொண்டிருந்தார்.

"கடலாடிக்குப் போய் மணியக்காரர் நாகேச்வர ஐயரைப் பார்த்துட்டுப் போலாம்னு இருக்கோம்."

"நேரம் கடந்து போச்சு..."என்றார் ஸ்ரீ பூண்டி மகான்.

"ராத்திரி மலை மேலே தங்கலாம்னு நினைச்சுக் கிட்டிருக்கோம். அங்கே சித்தர்கள் நடமாட்டம் இருக்கும்னு சொல்றாங்களே... அந்தக் காட்சிகள் எல்லாம் எங்களுக்குக் கிடைக்குமா?"

"போய் வாப்பா. ஆக்கமும் ஊக்கமும் இருந்தா எல்லாம் கிடைக்கும்" என்றார் ஸ்ரீ பூண்டி மகான்.

ஸ்ரீ பூண்டி மகானிடம் விபூதிப் பிரசாதம் பெற்றுக் கொண்டு பர்வத மலை ஏறுவதற்கு கடலாடியை அடைந்தனர் திரு. பரணிதரனும் அவரது நண்பர்களும்.

பர்வத மலையேறி விட்டு வந்ததிலிருந்து, அங்கு இரவு தங்க முடியாமல் போய் விட்டதைக் குறித்து திரு. பரணிதரனுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு சக்தி தன்னை அங்கே தங்கவிடாமல் அழைத்து வந்து விட்டதை உணர்ந்தார். 'ஆக்கமும் ஊக்கமும் இருந்தா எல்லா காட்சிகளையும் காணலாம்' என்று மலையேறுவதற்கு முன் ஸ்ரீ பூண்டி மகான் தன்னிடம் கூறியதை நினைத்துக் கொண்டார். தனக்கிருந்த ஆக்கமும் ஊக்கமும் போத வில்லையோ? ஸ்ரீ பூண்டி மகானிடம் அதைப் பற்றிக் கூறினால் ஏக்கம் ஓரளவு தணியலாம் என்ற எண்ணத்துடன் ஒரு வாரம் கழித்து ஸ்ரீ பூண்டி மகானை தரிசிக்க சென்றார் திரு. பரணிதரன். மலையில் ஏறியதை பற்றியும் அங்கு கண்ட காட்சிகளையும் கூறினார். அங்கு எடுத்தப் படங்களையும் காட்டினார். 'சர்தான்' 'சர்தான்' என்ற படியே எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டார், பார்த்தார் ஸ்ரீ பூண்டி மகான்.

"இரவு மலை மேலே தங்கலாம் என்ற எண்ணத்தில்தான் போனேன். ஆனால், தங்காமலே திரும்பி வந்துவிட்டேன். பல அற்புதக் காட்சிகளைக் காணலாம் என்று கனவு கண்டேன். 'ஏனோ' நான் நினைத்தபடி நடைபெறவில்லை. அடுத்த முறை எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா?" என்று அவரிடம் கேட்டார் திரு. பரணிதரன்.
அதைக் கேட்டு ஸ்ரீ பூண்டி மகான் புன்னகை புரிந்தார்.
அந்தப் புன்னகையின் பொருள் அவருக்குத்தான் தெரியும்!

ஒரு முறை ஸ்ரீ பூண்டி மகானை தரிசிக்க சென்ற போது, பர்வத மலை பற்றிய விவரங்களை கேட்டார் திரு. பரணிதரன். "சாமி. நீங்க பர்வத மலைக்குப் போய் வந்ததைப் பற்றி ஏதாவது சொல்லுங்க"
"அங்கெல்லாம் தெருவுங்க... ஒட்டல் கடையெல்லாம் இருக்குது. நான் மாடி மேலே ஏறிப்போய் கதவைத் தட்டினேன். உள்ளே பன்னண்டு பேர் உட்கார்ந்து கிட்டிருந்தாங்க. சரி, காலம், நேரம், சூழ்நிலை சரியில்லேன்னு நான் இறங்கி வந்துட்டேன்" என்றார் ஸ்ரீ பூண்டி மகான்.

சம்பந்தமில்லாத அந்த பேச்சில் ஆழ்ந்த பொருள் புதைந்திருப்பதாக திரு. பரணிதரனுக்கு தோன்றியது.

பர்வத மலையைப் பற்றிய வேறேந்த கேள்விக்கும் ஸ்ரீ பூண்டி மகான் பின்பு பதிலே கூறவில்லை.


பல அதிசயங்களும், அற்புதங்களும், மனதுக்கு இதமளிக்க கூடிய இயற்கை காட்சிகளும் நிறைந்த இம்மலையை காண்பதற்கும், மலைமீது எழுந்தருளியுள்ள ஈசனையும், அம்மனையும் தரிசிப்பதற்காகவும் மலை ஏறிச்செல்வதற்கு இரண்டு பாதைகள் உண்டு. மலைக்கு கிழக்கே அமைந்துள்ள தென் மாதிமங்கலம் என்ற கிராமத்தில் இருந்து ஒரு பாதையும், தெற்கே அமைந்துள்ள கடலாடி என்ற கிராமத்தில் இருந்து மற்றொரு பாதையும் மலையுச்சிக்கு செல்லுகின்றன. இதில் தென் மாதிமங்கலத்தில் இருந்து செல்லும் இலகுவான ஒற்றையடி பாதையே பெரும்பாலான மக்களால் உபயோகப்படுத்தப்படுகின்றது. பாறைகள் மற்றும் அடர்ந்த காட்டு மரம் செடி கொடிகளுக்கு ஊடே செல்லும் இந்த பாதையில் தற்போது படிக்கட்டுகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றது. விரைவில் இப்பணிகள் முடியும் பட்சத்தில், மலையேறி செல்லும் பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தெற்கே அமைந்துள்ள கடலாடி என்ற கிராமத்தில் இருந்து செல்லும் மற்றொரு பாதையும் மக்களால் உபயோகிக்கப்படுகின்றது. இப்பாதை கடலாடியில் அமைந்துள்ள மௌன யோகி சுவாமிகளின் ஆசிரமத்திற்கு அருகாமையில் இருந்து புறப்பட்டு, மலையின் மத்திய பகுதியில் பாதி மண்டபம் என்ற இடத்துக்கு மேற்புறத்தில், தென் மாதிமங்கலத்திலிருந்து வரும் மலைப் பாதையோடு சேருகின்றது. அதன் பிறகு ஒரே பாதையாக மலை உச்சிக்கு செல்லுகின்றது. கடலாடியில் இருந்து மலையேறும் இந்தப் பாதை பல பாறைகள் ஊடே செங்குத்தாக சொல்லுவதால், மலையேறுவது சற்று சிரமமாக இருக்கும். இப்பாதையில் செல்லும் பக்தர்களுக்கு கடலாடியில் அமைந்துள்ள மௌன யோகி சுவாமிகளின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறுவதற்கு வசதிகள் உண்டு. மேலும் இவ்வாசிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.

பொரும்பான்மையான மக்களால் உபயோகிக்கபடுவதும், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு ஏறுவதற்கு இலகுவானதுமான தென் மாதிமங்கலத்தில் இருந்து செல்லும் பாதையின் வழியே மலையேறும் போது காணும் காட்சிகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

போளூர் - செங்கம் சாலையில் போளூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில், பர்வதமலையின் கிழக்கே அமைந்துள்ளது தென் மாதிமங்கலம் என்று அழைக்கப்படும் தென் மகாதேவமங்கலம். இவ்வூராட்சிக்குட்பட்டே மலையின் பெரும் பகுதியும், மலையின் மேல் உள்ள கோயிலும் உள்ளது. பஸ் போன்ற பொது போக்குவரத்து மூலம் வரும் அன்பர்கள், இக்கிராமத்தில் இறங்கிக்கொள்ளவேண்டும். இங்கிருந்து மலையடிவாரம் வரை செல்லும் பாதையில், சுமார் இரண்டு கி.மீ. தூரம் சென்றால், முதலில் காண்பது பச்சையம்மன் கோயில். பர்வதமலை பற்றி குறிப்பிடும் போது, ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளும் இந்த பச்சையம்மன் கோயில் பற்றி குறிப்பிட்டுள்ளார். பசுமையான இயற்கையே இவ்வுலகின் உயிர் நாடி என்பதாலும், இம்மலையை சுற்றிலும் பசுமையான காடும் வயல்களும் அமைந்துள்ளதாலும், சக்தியான அம்மனுக்கு பச்சையம்மன் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது போலும். 
இக்கோயிலுக்குள் செல்லும் முன், வெளி முற்றத்தில் பல வண்ணங்களில் ஏழு முனீஸ்வரர்களின் கம்பீரமான தோற்றத்தில் உள்ள சிலைகளை காணலாம். இவர்கள் முறையே வரமுனி, கருமுனி, விலங்கு முனி, செம்முனி, முத்து முனி, ராடை முனி மற்றும் வேத முனி என்று அழைக்கப்பட்டனர். இம்முனிகளை தரிசித்துவிட்டு, கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்கலாம். அம்மனை தரிசித்து விட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வரும் போது, மேற்புறத்தில் பர்வதமலை உச்சியின் கம்பீரமான தோற்றத்தையும், அதன் மேல் அமைந்துள்ள கோயில் மற்றும் ஆசிரமத்தையும் காணலாம். இந்த பச்சையம்மன் கோயிலில் இருந்து காட்டு இலாக்காவின் முழு பொறுப்பில் உள்ள காட்டு பாதை தொடங்குகின்றது. இந்த பச்சையம்மன் கோயில் வரை தனியார் வாகனங்களான கார் மற்றும் வேன்கள் செல்லலாம். கோயில் வளாகத்தில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கும் வசதிகள் உண்டு.

வீரபத்திரர் தோற்றம்: ஈசனின் தேவியான பார்வதி தனக்கு மகளாகப் பெறவேண்டி, தக்கன் கடும் தவம் செய்து அவ்வாறே வரமும் ஈசனிடம் இருந்து பெற்றான். தக்கனுக்கு தாம் அளித்த வரத்தினைபற்றி தெரிவித்த ஈசன், உமையின் கலைகளில் ஒன்றைத் தக்கனின் மகளாகத் "தாட்சாயிணி" என்ற பெயரில் தோன்றுமாறு ஏவினார். மேலும் தக்க காலம் வரும் போது, தாமே நேரில் வந்து, உமையை மணமுடிப்பேன் என்று கூறியருளினார். அவ்வண்ணமே, தக்க தருணத்தில், ஈசன் தாட்சாயிணியை மணம் புரிந்து கொண்டார். இத்திருமணத்தை தக்கன் விரும்பாததால், ஈசன் மீது சினம் கொண்டான். பின்பு ஒருமுறை தக்கன் யாகம் செய்யும் போது, ஈசனுக்கு யாகத்தின் அவிர்பாகத்தை அளிக்க மறுத்துவிட்டான். இதனால் ஈசன் கோபம் கொண்டார். அத்தருணத்தில் ஈசனின் கோபக்கினியில் சொட்டிய வியர்வையினின்று தோன்றியவறே வீரபத்திரர். இறைவனை வணங்கிச்சென்ற வீரபத்திரர், தக்கன் யாகத்தை அழித்து, அவன் தலையை கொய்தார். இவ்வீரபத்திரரே பர்வதமலையின் காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ளார்.

பச்சையம்மனை தரிசித்து விட்டு மேலும் பயணத்தை தொடரும் போது, சுமார் 100 மீ தூரத்தில் ஒரு சிறிய ஆஞ்ச நேயர் கோயிலை காணலாம். புதியதாக செப்பனிட்டு கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் ஆஞ்சிநேயரை தரிசித்து விட்டு, மேலும் பயணத்தை இயற்கை எழில் சூழ்ந்த அழகிய காட்டு பாதை வழியே தொடர்ந்தால், சுமார் இரண்டு கி.மீ. தூரத்தில் வீரபத்திரசுவாமி கோயிலை அடையலாம். கம்பீரமான பர்வதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் எழுந்தறியுள்ள ஸ்ரீவீரபத்திரசுவாமியே இம்மலையின் காவல் தெய்வமாக போற்றி வணங்கப்படுகின்றார். இக்கோயிலில் தினப்பூசைகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய விஷேச நாட்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானமும் சிறப்பாக வழங்கப்படுகின்றது.

வீரபத்திரர் கோயிலுக்கு அருகாமையில் வடமேற்கே அமைந்துள்ளது சப்த கன்னியர் கோயில். கோடைகாலத்திலும் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் ஓர் அழகிய ஓடை இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. அடர்ந்த மரம், செடி, கொடிகள் சூழ்ந்த இவ்விடத்தில் ஓர் அலாதியான ஆன்மீக அமைதி நிறைந்துள்ளதை அனுபவிக்கலாம். சிறிது நேரம் இங்கு தியானத்தில் அமர்ந்திருந்தால், எந்த ஒரு சலனப்பட்ட மனமும் அமைதி பெறும். இவ்விடத்தை விட்டு அகலுவதற்கே மனம் இடம் தராது.

வீரபத்திரர் கோயிலுக்கு மீண்டும் வந்து, மலையேறும் பயணத்தை மேற்கே தொடர்ந்தால், அடுத்து நாம் தரிசிப்பது, பர்வத ஆற்றின் கரையில் அமைந்துள்ள வனதுர்க்கை மற்றும் ரேணுகாம்பாள் கோயில். இதன் அருகில் அமைந்துள்ளது சிதைந்த நிலையில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில். முற்காலத்தில் மிகச் சிறப்பான நிலையில் இருந்தற்கான அடையாளமாக தற்போது இடிந்த நிலையில் இரண்டடி உயரமுள்ள கல் சுவரும், கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமும், அச்சிவலிங்கத்தை காவல் காக்கும் ஓர் பெரிய நந்தியும் மட்டுமே உள்ளது. இந்நந்தியின் பின்னே நின்று சிவலிங்கத்தையும் பர்வதமலை உச்சியில் உள்ள கோயிலையும் நேர்கோட்டில் தரிசிக்கலாம். இக்கோயில்களை தரிசித்துவிட்டு, தெற்கே சென்றால் மலையேறும் படிக்கட்டுகள் ஆரம்பமாகின்றன.

படிக்கட்டுகளில் சிறிது தூரம் ஏறிச்சென்றால், முதலில் நாம் தரிசிப்பது அண்ணாமலையார் பாதம். ஒருமுறை சிவன் திருவண்ணாமலை வரும் போது, தனது ஒரு காலடியை பர்வதமலையிலும், மற்றொரு காலடியை திருவண்ணாமலையிலும் வைத்ததாகவும் செவிவழிச் செய்திகள் தெரி¢விக்கின்றன. பர்வதமலையில் சிவன் பதித்த திருவடிகள் இங்குள்ள பாறையில் இன்றும் காணப்படுகின்றது. முழு நம்பிக்கையோடு பக்தர்கள் இத்திருவடியை தரிசித்துவிட்டு மலையேறும் பயணத்தை தொடர்கின்றனர். இந்த பாறையில் இருந்து பர்வதமலை உச்சியின் கம்பீரமான தோற்றத்தையும், அதன் மேலுள்ள கோயிலையும் கண்டு மகிழலாம்.

அண்ணாமலையார் பாதத்தை தரிசித்து விட்டு, மேலும் படிக்கட்டுகளில் சிறிது தூரம் ஏறிச்சென்றால், சலசல என்ற இனிமையான சப்தத்தோடு மலை அருவியில் தெளிந்த நீர் கொட்டிக்கொண்டிருப்பதை காணலாம். மூலிகைகள் ஊடே தவழ்ந்து வரும் இந்த அருவி நீர், நிறைந்த மருத்துவ குணங்கள் உடையதால், இந்த அருவி நீரில் குளிப்பது மலையேறும் களைப்பை உடனே போக்கி மேலும் மலையேறிச் செல்வதற்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் சுருசுருப்பையும் தரும்.

மலை அருவிகள்: பர்வதமலையின் பல அற்புதங்களில் ஒன்று இந்த மலை அருவிகள். மழைக் காலங்களில் ஒரு பகுதி மழை நீர் நேரடியாக மலைச் சரிவுகளில் வடிந்து சிறுசிறு ஓடைகள், அருவிகள் மூலமாக மலையடிவாரத்தில் பர்வத ஆற்றில் வந்து கலக்கின்றது. மற்றோர் பகுதி மழை நீர் மலையில் உள்ள குகைகள் மற்றும் பாறைபிளவுகள் இடையே தேங்குகின்றது. இவ்வாறு மலையில் தேங்கிய மழை நீர், மழைக்காலம் முடிந்த பிறகு, பாறைகளுக்கு இடையே உள்ள பிளவுகள் வழியாக கசிந்து, சிறுசிறு ஓடைகளாகவும், அருவியாகவும் ஓடி இறுதியில் பர்வத ஆற்றில் கலக்கின்றது. மலையில் தேங்கியுள்ள நீர் வடியும் வரை இந்த ஓடைகளையும், அருவியையும் மழைக்காலம் முடிந்த சில காலம் வரை காணலாம். பிறகு இந்த ஓடைகளும், அருவியும் வறண்டு விடுகின்றன.

பளிங்கு போன்ற நீரோடு சலசலத்தோடும் அருவியை கடந்து மேலும் சிறிது தூரம் மலையேறிச்சென்றால், சரிந்த நிலையில் உள்ள ஓர் அகன்ற கற்பாறையை காணலாம். "உரல் பாறை" என்று அழைக்கப்படும் இந்த பாறையில், உரல் போன்ற குழி ஒன்று உள்ளது. இந்த பாறையின் கீழ்பகுதியில் நீரூற்று ஒன்றும் உள்ளது. மழைக் காலங்களிலும் மற்றும் அதை தொடர்ந்த சில காலங்களிலும், இந்த நீரூற்றில் தெளிந்த நீர் கொட்டிக்கொண்டிருப்பதை காணலாம். நீரூற்று உள்ள காரணத்தால், முற்காலத்தில் மலையேறிச்செல்லும் பக்தர்கள் இவ்விடத்தில் தங்கி, உணவு சமைத்து இறைவனக்கு படைத்து தாமும் உண்டு வந்தனர். 
இங்குள்ள உரல் போன்ற குழி நெல் குத்துவதற்கும், உணவு தயார் செய்வதற்கும் பயன் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இம்மலையில் உள்ள சித்தர்களும், மருத்துவ சோதனைக்காக மூலிகை தேடி வரும் சித்த மருத்துவர்களும், உரல் போன்ற இந்த குழியில் மூலிகைகள் அரைத்து பயன் படுத்தி வந்துள்ளனர். இந்த பாறையை சுற்றிலும், பல்வேறு மூலிகை செடி, கொடி, மரங்கள் உள்ளதை காணலாம். நீரூற்று பெறுக்கெடுத்து அருகில் உள்ள அருவியில் தெளிந்த நீர் ஓடிக்கொண்டிருக்கும் காலங்களில், இப்பாறையை சுற்றிலும் பசுமையான ஓர் அற்புத சூழலை காணலாம். இப்பாறையின் அடியில் வெளிவரும் நீ£ரூற்று தான் மலைப்பாதையில் குறுக்கிடும் கடைசி நீரூற்று. எனவே மலையேறிச் செல்லும் பக்தர்கள், இங்குள்ள நீரை எடுத்துச்செல்லுவது வழக்கம். இப்பாறையின் ஓரத்தில், தற்போது ஓர் மணி கம்பிகளுக்கிடையே கட்டப்பட்டுள்ளது. மலையேறிச்செல்லும் பக்தர்கள் இம்மணியை அடித்து இறைவனை வணங்கிவிட்டு தொடர்ந்து மலையேறிச் செல்லுவது தற்போது வழக்கமாக உள்ளது. எனவே இந்த பாறை "மணிப்பாறை" என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது. இந்த உரல் பாறை வரை சற்று சருவலாக வந்த மலைப் பாதை, இனி செங்குத்தாக செல்லும். எனவே மலை ஏறுவது சற்று சிரமமாக இருக்கும்.

உரல் பாறையை கடந்து சிறிது தூரம் சென்றால், பாதி மண்டபம் என்று அழைக்கப்படும் ஓர் பாழடைந்த மண்டபத்தை காணலாம். மலையின் பாதியில் இம்மண்டபம் உள்ளதால், இதற்கு பாதி மண்டபம் என்ற பெயர் வந்தது. இம்மண்டபத்தின் அருகாமையில் பரந்த நிலையில் உள்ள ஒரு பெரிய கற்பாறையை காணலாம். மென்மையான குளிர்ந்த மூலிகை காற்று வீசும் இந்த இடத்தில், சிறிது நேரம் அமர்ந்திருப்பது மனதுக்கு மிகுந்த அமைதியை தரும். இங்கிருந்து நாட்புறமும் மலையின் எழிலார்ந்த, பசுமையான தோற்றத்தை காணலாம்.

இம்மண்டபத்தை கடந்து மேலும் மலையேறிச்செல்லும் போது, அடர்ந்த செடிகள், கொடிகள், மரங்கள் வளர்ந்துள்ள காட்டு பாதையை கடக்க நேரிடும். பகலிலும் இருள் கவிந்துள்ள இந்த காட்டுப் பாதையில், ஓர் அலாதியான அமைதி நிலவுவதையும், மனம் ஒடுங்கி ஒன்று படுவதையும், மெல்ல வீசும் தென்றல் காற்றில் மென்மையான நறுமணம் வீசுவதையும் உணரலாம். மலையின் உன்னதமான ஓர் பகுதி இது. இங்கு பாதையின் இடையே அமைந்துள்ள கற்பாறைகள் ஒன்றில் அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் இருப்பது மிகுந்த மன அமைதியை தரும்.

இவ்வடர்ந்த காட்டு பாதையை அடுத்து செங்குத்தாக மலையேறும் பாதை உள்ளது. அதன் முடிவில், தென்திசையில் இருந்து ஒரு ஒற்றையடிப் பாதை இங்கு வந்து சேர்கின்றது. இப்பாதை கடலாடியில் அமைந்துள்ள மௌன யோகி சுவாமிகளின் ஆசிரமத்திற்கு அருகாமையில் இருந்து வருவதாகும். இங்கிருந்து இரண்டு பாதைகளும் இணைந்து மலையுச்சி நோக்கி செல்கின்றது. இது மிகவும் செங்குத்தாக உள்ளதால், குமரி நெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இந்த செங்குத்தான பாதையின் இரு புறங்களும், கண்ணுக்கினிய பசுமையான இயற்கை காட்சிகள் நிறைந்திருப்பதை காணலாம்.

குமரி நெட்டு என்னும் இந்த செங்குத்தான பாதை, செங்குத்தான பிரம்மாண்ட பாறைகள் உடைய மலையின் அடியில் சென்று முடியும். இப்பகுதி கடப்பாறை நெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இங்கிருந்து மலையுச்சியில் உள்ள கோயில் வரை பிரம்மாண்டமான பாறைகளை கடந்து செல்ல வேண்டும். இதற்கு சரியான பாதை என்று ஏதும் கிடையாது. செங்குத்தான பாறைகளில் ஆங்காங்கே இரும்பு கடப்பாறை கம்பிகளும், அவைகளை இணைக்க சங்கிலிகளும், இரு பாறைகளுக்கு இடையே கடந்து செல்ல இரும்பு ஏணிப்படிகளும் பொருத்தப்பட்டுள்ளது. இவைகளை பிடித்துக்கொண்டு தான் இந்த பாறைகளை கடந்து செல்ல வேண்டும். இவை ஏதும் இல்லா இடத்தில், பாறைகளை கைகளால் பிடித்துக்கொண்டு தவழ்ந்து செல்ல வேண்டும். மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த பாறைகள் ஊடே செல்லும் கடினமான பாதையை இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டே இலகுவாக இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்து செல்லுகின்றனர். இந்த பாதையை கடந்து செல்லும் போது, தம்முடன் எடுத்தச்செல்லும் பொருட்களை ஒரு பையில் அடைத்து முதுகில் வைத்து சுமந்து செல்லுதல் நல்லது. அப்போது தான் இரு கைகளாளும் கம்பிகளையும், பாறைகளையும் பிடித்துக்கொண்டு மேலே ஏறிச்செல்ல முடியும்.

கடப்பாறை நெட்டு என்ற இந்த செங்குத்தான பாறையை ஆங்காங்கே நடப்பட்டுள்ள இரும்பு கடப்பாறை கம்பிகளையும், அவைகளை இணைக்கும் சங்கிலிகளையும் பிடித்துக்கொண்டு இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக்கொண்டு மெல்ல ஏறிச்செல்ல வேண்டும். அச்சத்தை தரக்கூடிய இந்த செங்குத்தான பாறையில் ஏறிச்செல்லும் போது, பின்புறம் திரும்பிப்பாராமல், இரண்டு கைகளையும் மாற்றி மாற்றி கம்பிகளை பிடித்துக் கொண்டு மேலே ஏறுதல் வேண்டும். பின்னால் திரும்பிப் பார்த்தால், கிடுகிடுவென கீழே இறங்கும் மலைச்சரிவுகள் மனத்தில் அச்சத்தையும், நடுக்கத்தையும் ஏற்படுத்தும். கூடிய வரை மலை உச்சயில் உள்ள கோயிலை சென்று அடையும் வரை திரும்பிப்பாராமல் செல்வது நல்லது.

இந்த கடப்பாறை நெட்டு என்னும் பாதையை கடந்து சென்றால், இரு பெரும் பாறைகளை இணைக்கும் இரும்பு ஏணிப்படிகள் வரும். முற்காலத்தில் இந்த பாறைகள் இரண்டும் ஒன்றாக இருந்ததாகவும், இந்த இடத்தில் இடி விழுந்ததால், மலை பிளந்து இரு பெரும் பாறைகளாகி விட்டதென்றும் கூறுகின்றனர். இந்த ஏணிப்படிகளில் ஏறிச்செல்லும் போது கீழே குனிந்து பார்ப்பது அச்சத்தையும் கலக்கத்தையும் விளைவிக்கும். குறிப்பாக முதன்முறையாக செல்லும் போது, இதை தவிர்க்கமுடியாது. எனவே தான் இப்பகுதியில் மலையேறும் போது, பக்கத்திலும் கீழேயும் குனிந்து பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் எல்லாம்வல்ல இறைவனை ஆழ்ந்த தூய்மையான மனத்தோடு வணங்கி, இறைவன் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டு சென்றால் எதையும் கடந்து செல்லலாம்.

இந்த ஏணிப்படிகளை கடந்து சென்றால், வட்டவடிவிலான அமைப்பில் உள்ள இருபெரும் பாறைகளுக்கு இடையே சுற்றியவாறு மேல் நோக்கிச் செல்லும் வண்ணம் அமைந்துள்ள பாறை வரும். இந்த பாறை வழியே ஒருவர் பின் ஒருவராக பாறையை பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். சுற்றிச்செல்லுகின்ற காரணத்தால், இப்பாறைக்கு சுழல் பாறை என்று பெயர்.

சுழல் பாறை பாதையின் முடிவில் தீட்டுக்காரி மண்டபம் என்ற பெயரில் ஒரு மண்டபம் உள்ளது. பர்வத மலையை காண்பதற்கும், இங்கு கோயில் கொண்டுள்ள இறைவனை தரிசிப்பதற்கும், பல வயதுக்குட்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மலையேறி வருகின்றனர். பெண்கள் மலையேறிச் செல்லும் போது வீட்டு விலக்காகி விடும் வாய்ப்பு உண்டு. அந்நிலைமையில் அவர்கள் மேலும் மலையேறிச் சென்று இறைவனை வழிபடுவது தூய்மையானது அல்ல என்ற காரணத்தால், பயணத்தை நிறுத்தி விட்டு இந்த மண்டபத்தில் தங்கிக்கொள்வர். அதனால் இம்மண்டபத்துக்கு இப்பெயர் ஏற்பட்டது.

நன்னன் ஆட்சி: பர்வதமலையும், அதன் மேற்கே அமைந்துள்ள சவ்வாது மலை தொடரும் மற்றும் இம்மலைளை சுற்றி உள்ள பகுதிகளும் பண்டைகாலத்தில் "பலகுன்றக் கோட்டம்" என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை "பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்" என்ற மன்னன் "செங்கண்மா" என்ற நகரிலிருந்து ஆண்டதாக அகநானூற்றில் கூறப்பட்டுள்ளது. இந்த செங்கண்மா என்ற நகரம் தற்போது மறுவி "செங்கம்" என்று அழைக்கப்படுகின்றது. இது திருவண்ணாமலைக்கு மேற்கே சுமார் 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

இம்மண்டத்தை கடந்து மேலே செல்லும் போது, நன்னன் என்ற மன்னன் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இங்கு இருந்தற்கான அடையாளமாக இடிந்த நிலையில் கல் சுவர் கோட்டை பகுதி சுற்றிலும் உள்ளது. மலை உச்சிக்கு சற்று கீழே அமைந்துள்ள சுமார் அரை ஏக்கர் பரப்பளவு உள்ள சமவெளிப்பகுதியில் இக்கோட்டை கட்டப்பட்டதற்கான அடையாளங்கள் இங்கு உள்ளது. மலையேறிச் செல்ல கடினமான பாதையை உடைய இந்த பர்வத மலையின் மேல் பகைவர்களிடமிருந்து சிறந்த பாதுகாப்பை கருதி இக்கோட்டை கட்டப்பட்டு, படுத்தப்பட்டு இருக்கலாம். இம்மன்னன் ஆட்சிக்காலத்தில் தான், மலை உச்சியில் உள்ள கோயில் சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பு கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.

இக்கோட்டை திட்டுக்கு நேர் எதிரே, "சிங்கக் கிணறு" என்ற சுனை ஒன்று உள்ளது. இச்சுனையில் உள்ள மூலிகை கலந்த தெளிந்த சுனை நீரில் கை, கால், முகம் கழுவி பின்பு தாகம் தீர அந்த சுனை நீரை அருந்தினால், மலை ஏறிச்சென்ற களைப்பு நீங்கி புதிய உற்சாகம் பிறக்கின்றது. இந்த சிங்கக் கிணறு சுனையின் உள்புற சுவற்றில் ஏற்பட்ட விரிசல்களை சில ஆண்டுகளுக்கு முன் அடைக்க முற்பட்ட போது, சுனை நீர் உள் வாங்கி கிணறு வற்றி வறண்டு விட்டதாக கூறப்படுகின்றது. தற்போது மழை காலங்களை தவிர மற்ற காலங்களில் இந்த சிங்கக் கிணறு வறண்டே காணப்படுகின்றது. இந்த கிணற்றின் உள்ளே சுற்றுக்கரையின் ஒருபுறம் பெரிய வளைவு ஒன்று உள்ளதாகவும், அந்த வளைவில் குனிந்து பார்த்தால் ஒரு குகையை போல் பாதை உள்ளே செல்லுவதாகவும் நம்பப்படுகின்றது. அந்தக் குகையின் உள்ளே சென்றால், அங்கே தாமரைக் குளம், வாழைத் தோப்பு, பலாத் தோப்பு மற்றும் நந்தவனம் போன்றவை உள்ளதென்றும், அங்கு தான் பல சித்த மகா புருஷர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வாசம் செய்து வருவதாகவும், அவர்களே மலைப்பகுதிக்கும், மலை மேல் உள்ள கோயிலுக்கும் வந்து செல்லுகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. பொதுவாக கண்ணுக்கு புலப்படாத இந்த சித்த மகா புருஷர்கள், பலருக்கு காட்சி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிங்கக் கிணற்றை கடந்து செங்குத்தாக செல்லும் பாறைகள் வழியே தொடர்ந்து மேலே சென்றால், சமதளமாக உள்ள ஒரு வட்டப்பாறையில், பாதங்கள் பதிக்கப்பட்டிருப்பதையும் அதன் அருகில் திரிசூலம் ஒன்றையும் காணலாம். "அண்ணாமலையார் பாதம்" என்று அழைக்கப்படும் அந்த திருப்பாதங்களை தரிசித்து விட்டு தொடர்ந்து சென்றால், சுமார் முப்பது அடி தூரத்திற்கு இரும்பு வேலி ஒரு புறம் அடைக்கப்பட்ட குறுகலான பாதையை கடக்க நேரிடும். பெரும் பாறையின் இடைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதையை கடக்கும் போது, இடப்பறம் திரும்பி மூவாயிரம் அடிக்கு மேல் ஆழம் உள்ள பல்லத்தாக்கை பார்க்க நேர்ந்தால், எதற்கும் கலங்காத உறுதியான நெஞ்சம் கொண்டவர் இதயம் கூட அச்சத்தால் உறைந்துவிடும். இறைவனின் திருநாமத்தை இடையறாது மனதில் உச்சரித்துக் கொண்டே சென்று வலப்புறம் திரும்பினால், இரு பெரும் பாறைகளுக்கிடையே ஒரு பிளவு செல்வதையும், அதன் ஊடே சிறுசிறு கற்களை கொண்டு அமைக்கப்பட்டு மேலே செல்லும் படிக்கட்டையும் காணலாம். ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய இந்த படிக்கட்டுகளை கடந்து மேலே சென்று இடப்புறம் திரும்பினால், "பிள்ளையார் நெட்டு" என்று அழைக்கப்படும் செங்குத்தான நெட்டு பாறையையும், அங்கு செதுக்கப்பட்டுள்ள பிள்ளையாரின் முழு உருவையும் காணலாம். இந்த பிள்ளையார் நெட்டை கடந்து சென்றால் மலையின் உச்சியை அடையலாம்.

பர்வதமலையின் சிகரம் சம உயரம் கொண்ட இருபெரும் மலைப்பிரிவுகளை கொண்டது. மலையேறிச்செல்லும் மலைப்பாதை சென்றடையும் முதல் மலைப்பிரிவின் உச்சியில், "கடலாடி மௌன யோகி" ஆசிரமத்தை காணலாம். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த ஆசிரமக் கட்டிடத்தில், மலையேறிச் செல்லும் பக்தர்களுக்கு அன்னதானமும், இளைப்பாறுவதற்கு இடவசதியும் எந்த நேரமும் அளிக்கப்படுகின்றது. இம்மலைப்பிரிவின் அருகிலுள்ள சிறு பாறைகள் மீது அமர்ந்து மலைச்சரிவுகளையும், கீழே பூமிப்பகுதியையும் காணும் போது, வானுலகத்திற்கே வந்து விட்ட ஒரு எண்ணம் தோன்றி, மனதில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கருத்த மழை மேகங்களும், பஞ்சுபோல் காட்சியளிக்கும் வெண் மேகங்களும், காற்றால் உந்தப்பட்டு, கூட்டம் கூட்டமாக நகர்ந்து நம்மை தழுவிச் செல்லும் கண்கொள்ளாக்காட்சி, காணக்கிடைக்காத ஒன்று. அந்த மேகக்கூட்டங்களின் அருகாமை, நாம் தேவலோகத்துக்கே வந்து விட்ட உணர்வை தருவதோடு, அவைகளின் இதமான தழுவலும், சில்லென்று வீசும் மென்னையான காற்றும், நம் உடலில் ஒருவித சிலிர்ப்பையும், இன்பத்தையும் தோற்றுவிக்கும். இரவு வேளையில், இங்குள்ள சிறு பாறைகளில் அமர்ந்திருந்து மலையை சுற்றி கவனித்தால், சித்தர்கள் ஒளி ரூபத்தில் நகர்ந்து செல்வதையும், அதே ஒளி ரூபத்தில் மலையை வலம் வருவதையும் காணலாம் என்று நம்பப்படுகின்றது.

ஆசிரமம் அமைந்துள்ள முதல் மலைப்பிரிவை கடந்து சென்றால், இரண்டாவது மலைப்பிரிவையும் அதன் சமதள உச்சியில் அமைந்துள்ள அழகிய கோயிலையும் காணலாம். இக்கோயில் அமைந்துள்ள மலையுச்சியை அடைய சிறுசிறு பாறை கற்களை கொண்டு படிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிகளை கடந்து சென்று உச்சியை அடைந்தால், கோயிலின் முழு தரிசனத்தையும் காணலாம். இக்கோயில் நன்னன் என்ற மன்னன் காலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது என்று நம்பப்படுகின்றது. இரு வாசல்களை கொண்ட இக்கோயிலின் உள்ளே, இடப்புறம் உள்ள வாசல் வழியே செல்ல வேண்டும். உள்ளே சென்றால், முதலில் நாம் தரிசிப்பது விநாயகப் பெருமானையும் அவர் அருகே உள்ள வள்ளி-தெய்வயானை சமேத ஆறுமுகனையும். அவர்களுக்கு பின்புறம் உள்ளறையில் வீரபத்திரரும் துர்க்கை அம்மனும் எழுந்தருளி உள்ளார்கள். இதற்கு அடுத்து வலப்புறமாக உள்ள சிறிய மண்டபத்தில் மல்லிகார்சுனேஸ்வர சுவாமியும், அதற்கு அடுத்து வலப்புறமாக உள்ள மற்றுமொரு சிறிய மண்டபத்தில், பிரம்மராம்பிகை அம்மனும் எழுந்தருளி உள்ளார்கள். இம்மண்டபத்தின் முன் தாழ்வரையில் போகரும், கோயிலின் வெளிச்சுற்றில் நந்தியும் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு எழுந்தருளியுள்ள சிவனுக்கு, "காரியுண்டிக் கடவுள்" என்ற பெயரும் உண்டு. கரிய நிறமுடைய விஷத்தை உண்டதால் இப்பெயர் வழங்கப்படுகின்றது. இதுவே தற்போது மருவி "ஸ்ரீகாளகண்டீஸ்வரர்" என்றும், "ஸ்ரீகரைகண்டீஸ்வரர்" என்றும் வழங்கப்படுகின்றது. இந்த பர்வதமலையை சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள சிவன் கோயில்களில், லிங்கவடிவில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கும் ஸ்ரீகரைகண்டீஸ்வரர் என்ற பெயரே வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


இம்மலைமீது உள்ள கோயிலின் கருவறையில் இறைவன் லிங்கவடிவில் காட்சி அளிக்கின்றார். மண்ணாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விண்ணாகி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த பரம்பொருளை, விண்ணை முட்டும் இந்த பர்வதமலையில் லிங்கவடிவில் வணங்குவது மனதுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் தருகின்றது. இக்கோயிலில் பூஜை செய்வதற்கு என்று தனியாக எவரும் கிடையாது. சாதி, மத, மொழி, இன பேதங்களின்றி இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்படி கோயிலுக்கு வரும் பக்தர்களே நெஞ்சார்ந்த உண்மை பக்தியுடன் தம் கைகளாலேயே அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளை தாங்களே செய்து தெய்வங்களை வணங்கலாம். நெரிசல் மிக்க கூட்டமோ, நீண்ட வரிசையோ இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அமைதியாக இருந்து தெய்வங்களுக்கு தாமே அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளை செய்து வழிபடுவது மனதுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கின்றது.

இறைவனை நெஞ்சார்ந்த உண்மை பக்தியுடன் வணங்கிவிட்டு, கோயிலுக்கு வெளியே வந்து, சிறிது நேரம் அங்குள்ள பாறைகளில் அமர்ந்திருப்பது மனதுக்கு இதமளிக்கும். பலமாக வீசுகின்ற காற்றை அனுபவித்துக் கொண்டே மலை உச்சியிலிருந்து சுற்றியுள்ள கிராமங்களின் செழுமையான இயற்கை வளத்தை காணலாம். நீரின்றி பாம்பை போல் நெளிந்து வளைந்து செல்லும் செய்யாற்றையும், லிங்கத் திருமேனியாக தூரத்தே காட்சி தரும் திருவண்ணாமலையையும், கோட்டை அரண் போல் நீண்டு நெடிதுயர்ந்து செல்லும் ஜவ்வாது மலைத் தொடரையும், மலை உச்சியில் இருந்து காணும் போது எல்லையற்ற மகிழ்ச்சியை தரும். மேலும் மலையை சுற்றிலும் கொலு பொம்மைகளை போல் அமைந்திருக்கும் பல்வேறு மலைகளையும், வனப்புமிகு இயற்கை வளங்களையும், நாள் முழுவதும் கண்டு களித்துக் கொண்டிருந்தாலும் அலுப்பேதும் தோன்றாது.

No comments:

Post a Comment