Saturday 27 September 2014

தமிழ் இனி மெல்ல 3:5[தொடர்கிறது]

தமிழ் இனி மெல்லதமிழ் [ 3:4  ]    சென்ற பதிவின் தொடர்ச்சி 
“முதல் கேள்விக்குப் பதில் சொல்வதானால் நான் முதல் முறையாக உங்களைக் கருவூராருடன் சந்தித்த நாளுக்குச் செல்ல வேண்டும்!” என்றபடி அங்கு இராஜேந்திரனுக்கும், இராஜராஜருக்கும் நடந்த சிறு பூசலைச் சுட்டிக் காட்டுகிறான்.

“அப்பொழுது அங்கு உங்களுக்கும், சக்ரவர்த்தியாருக்கும் இடையில் ஒரு திரை விழுந்த மாதிரி எனக்குத் தோன்றியது. அது எனக்கு மட்டும் தோன்றவில்லை, கருவூராருக்குமே தோன்றியது என்பதை அவர் தமிழ்த் திருப்பணியைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டுப் புறப்பட்டதிலிருந்து தெரிந்து கொண்டேன். அதுமட்டுமல்ல...” என்று மேலே தொடர்ந்து கருவூரார் இராஜேந்திரனும், இராஜராஜரும் பாண்டியருடன் உறவை மறுத்ததைப் பற்றியும் விளக்குகிறான்.

“அது கருவூராரின் மனதை மிகவும் பாதித்து விட்டது. எனவேதான், அவர் திருக்கயிலைக்குச் செல்லத் தீர்மானித்து தஞ்சையை விட்டு நீங்கி விட்டார். மேலும், நீங்களாகக் கேட்காவிடில், நான் அவரது மன ஓட்டத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் ஆணையிட்டுவிட்டார். பாண்டியருடன் நாம் இணைந்தால்தான் தமிழ்த் திருப்பணி நிறைவேறும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

“தாங்கள் என்னை தமிழ்த் திருப்பணி ஆலோசகனாக நியமிக்கும்படி பரிந்துரைத்தது திருப்பணிக்கு மிகவும் உதவியது. ஆயினும் பாண்டியன் அமரபுஜங்கனுடன் சக்ரவர்த்தி அவர்கள் நடத்திய வாட்போர் அவரது உடல் நலத்தை மிகவும் பாதித்து விட்டது. திருப்பணி ஒரு நல்ல நிலைக்கு வருமுன்னரே தன் இறுதிக் காலம் நெருங்கி விட்டதே என்று வருந்தினார். அவர் கேட்டுக்கொண்டதால் தங்களுக்குச் சொன்ன இந்த உண்மையை அவருக்குச் சொன்னேன்.

“கருவூராரின் திருக்கயிலைப் பயணத்தின் காரணம் அவரை மிகவும் செயலிழக்கச் செய்து விட்டது. அவரின் கம்பீரம், தன்னம்பிக்கை, எதற்கும் அஞ்சாச் சிங்க நெஞ்சம் - கொஞ்சம் கொஞ்சமாகப் பொலிவிழந்து வருவதை தினமும் கண்டுவந்த நான் மிகவும் கலங்கினேன். என்னைத் திருமந்திர ஓலைநாயகமாக நியமித்தது என்னைத் தமிழ் திருப்பணியில் முழுதும் ஈடுபடவிடாமல் என் கவனத்தைத் திருப்பியது. அவரிடமே இதுபற்றிப் பேசிவந்தேன். அதைச் சரிசெய்ய முயன்ற பொழுதுதான் நான் இளஞ்சேரனிடம் பிடிபட்டுத் திரும்பினேன். அவரின் காலமும் முடிந்துவிட்டது.

“அந்த ஆற்றாமைதான் என்னை நிலைகுலைய வைத்து என் மகள் சிவகாமியிடம் தாங்கள் அனுமதிக்கும்வரை திருப்பணியைச் செய்வேன் என்று சொல்லவும் வைத்தது. என்றும் இல்லாத அதிசயமாக அவள் நான் பேசியதைத் தங்களிடம் சொல்லிவிட்டாள். அது தங்கள் மனதில் எப்படிப் பதிந்ததோ என்று இன்னும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தாங்கள்தான் அதைப் பற்றி என்னிடம் சொல்ல வேண்டும்.

“மேலும், சக்ரவர்த்தியாரின் மறைவிற்குப் பின்னர் தாங்கள் என்னை மேலும் மேலும் மற்ற அரசுப் பணிகளில் ஈடுபடுத்த ஆரம்பித்தீர்கள். எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்துத் தாங்கள் எடுத்த முடிவு ஆகும் அது. என்னுடைய ஓலை நாயகத்தின் பதவி உரிமையைக் கொண்டு சக்ரவர்த்தியாரின் இறைவனடிமைத் திட்டத்தை நிறைவேற்றி விட்டேன். கோவில்கள் தோறும் இறைவனடிமைப் பெண்கள் தமிழ்க் கலைகளை வளர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு கொடுத்திருக்கும் அங்கீகாரமும், அந்தஸ்தும் பலரையும் இறைவனடிமைத் திட்டத்திற்கு ஈர்த்து வருகிறது.

“தங்களது மூத்த மகனான ஆளவந்தானுக்கும் சோழநாட்டின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று உண்மையாக நம்பினேன். அவன் மூலமாகவே சேரநாட்டில் தமிழ் உருமாறிவரும் நிலையைத் தடுக்கத் திட்டம் தீட்ட ஆரம்பித்தேன். அதற்காகவே அவனுக்கு “மனுகுலகேசரி” என்ற பட்டத்தைத் தாங்கள் அளிக்குமாறு இடைவிடாது கோரினேன்.” சிறிது நேரம் சிந்தனை ஓட்டத்தை ஒருங்குபடுத்திவிட்டு மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் சிவாச்சாரி.

தமிழ் இனி மெல்ல 3:5[தொடர்கிறது]
அரிசோனா மகாதேவன் 


                                                  அத்தியாயம் 5
                             செயங்கொண்ட சோழபுரம்
                            பிங்கள, வைகாசி 24  -  ஜூன் 9, 1017
கூரைக்கு மேலே வண்டுகள் ரீங்காரமிட்ட வண்ணம் இருக்கின்றன. முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் சிவாச்சாரி சொல்வதை காதுறுகிறான் இராஜேந்திரன். அவனது மனம் சிவாச்சாரி சொற்களில் உள்ள உண்மைகளையும், அதன் விளைவுகளையும் எடை போடுகிறது.

ஆளவந்தானுக்கு சிவாச்சாரி ஆதரவு தருவதாகச் சொல்வதும், நிலைவுமொழியையும் ஒரு வைணவனுக்கு மணமுடிக்கத் தூண்டியதும் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. அவனுடைய ஆழ்ந்து சிந்திக்கும் திறனிலும், தொலைநோக்குப் பார்வையிலும் இராஜேந்திரனுக்கு நிறைய நம்பிக்கை உண்டு.

தந்தையார் இராஜராஜரும் சிவாச்சாரி மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்றும் அறிவான். கடைசிக் காலத்தில் அவனைக் கருவூராக எண்ணி அவன் கையைப் பிடித்துக் கொண்டுதானே உயிரை விட்டார்! அவனது மன ஓட்டம் சில சமயம் தன் மன ஓட்டத்திற்கு முரணாக இருப்பதையும் அவன் கவனித்துக் கொண்டுதான் வந்திருக்கிறான். இருப்பினும், தான் என்ன ஆணையிட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு முகம் சுளிக்காமல் முழுமனதுடன் நிறைவேற்றி வருவதும் அவனுக்குத் தெரியாமலில்லை. அவனே எல்லா விவரங்களையும் சொல்லட்டும் என்று காத்திருக்கிறான்.

“அரசே! சிவாச்சாரியனான நான் வைணவரான சேதுராயருக்கு முக்கியத்துவம் அளிப்பது சோழநாட்டின் மேன்மையைக் கருதித்தான். சைவமும், வைணமும் அதன் இரு கரங்கள், இரு கண்கள், இரு கால்கள், இரு செவிகள். அவை சேர்ந்து இயங்கினால்தான் சோழ நாடு சிறப்பாக இருக்கும். அவை வெவ்வேறு பக்கம் சென்றால் சோழ நாட்டின் வலிமை குறைந்துவிடும். சேதுராயர் மனம் குளிர்ந்தால்தான் அவரும், அவரது சந்ததியாரும், மற்ற வைணவக் குறுநில மன்னர்களும் சோழநாட்டின் மேன்மையைத் தாங்கும் தூணாக இயங்குவார்கள்.

“அதை எப்படி நிரூபிப்பது? ஆளவந்தானுக்கு அங்கீகாரம் கொடுப்பதன் மூலம்தான். “கேசரி” என்ற பட்டத்தை அளிப்பதன் மூலம் ஆளவந்தான் சோழப் பேரரசரின் வழித்தோன்றல் என்பது உறுதிப் படுத்தப்படுகிறது. அதே சமயம், சக்ரவர்த்தி அவர்களின் ஆணையும் மீறப்படாமல் இருக்கிறது. அவனது தாய்க்குக் கிடைக்காத அங்கீகாரம் - சேதுராயரின் மகளுக்குக் கிடைக்காத அங்கீகாரம் - அவரது மகள் வயிற்றுப் பெயரனுக்குக் கிடைக்கிறது. அடுத்தடுத்து நாம் செய்வதும் அதை உறுதிப்படுத்தும் வகையில் சேதுராயரின் பரம்பரை சோழநாட்டின் காவலர்களாக விளங்கும்.

“காடவன் ஒரு சிறந்த கல்விமான். தமிழறிவு மிக்கவன். வடமொழியும் அறிந்தவன். அவனைச் சேரநாட்டிற்கு தமிழ்த் திருப்பணிக்கு அனுப்புவது சிறந்தது. அவனது வடமொழித் திறன் அங்குள்ள நம்பூதிரி அந்தணர்களிடம் மதிப்பை ஈட்டும். அத்துடன் அவனுக்கு அரசியல் செயல் நயமும் அதிகம்.

“அவனுக்கு உறுதுணையாகச் செல்லத்தான் நான் நிலவுமொழியைத் தேர்ந்தெடுத்தேன். இராஜராஜ நரேந்திரன் அவளிடம் முறைதவறி நடந்தவுடன் அவள் தனது முதன்மையான தமிழ்ப் பணியை விட்டுவிட நேர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவள் திருமயிலையில் வெதும்பிப் புழுங்கிக் கொண்டிருந்ததும் என் மனத்தை வருத்தியது. அவள் அப்படி இருக்கக் கூடாது, அவள் மணவாழ்வையும் தொடங்கவேண்டும், அதே சமயம் தமிழ் திருப்பணிக்கு உதவியாகவும் இருக்க வேண்டும், இதெற்கென்ன வழி என்று சிந்தித்தேன். அவளையும், காடவனையும் இணைத்தால் அதுவே சிறப்பானது என்ற முடிவுக்கும் வந்தேன். எனவே, தங்களிடம் அவர்கள் திருமணம் பற்றி சேதுராயரிடம் பேசும்படி வேண்டிக்கொண்டேன். தில்லைக்கூத்தனின் அருளால் எல்லாமே நன்கு நிறைவேறியது.” என்று நிறுத்துகிறான் சிவாச்சாரி.

“அதெப்படி சைவப் பெண்ணையும், வைணவனையும் இணைக்கத் திட்டம் தீட்டினீர்?” என்று வினவுகிறான் இராஜேந்திரன்.

“தாங்கள்தான் முன்னோடியாக அமைந்திருக்கிறீர்களே அரசே!” என்று புன்னகைத்தவாறே பதிலிருக்கிறான் சிவாச்சாரி.

“அது சரி. தலைநகரைத் தஞ்சையிலிருந்து மாற்றுவது தேவையில்லை என்ற காரணம்?”

“இதற்கு நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது.” என்றபடி துவங்குகிறான் சிவாச்சாரி. “ஓலைநாயகமாக இருந்த அனுபவத்தால் நான் எடுத்த முடிவு இது. நகரை நிர்மாணிப்பது மட்டும் பெரிதல்ல. அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், மற்றும் வணிகர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாது, அங்கு நிறுவப்படும் பள்ளிகள், தொழிற்சாலைகள், கலைக்கூடங்கள் இவற்றை நிரப்பவும் மக்கள் குடிபெயர வேண்டும்.

“அவர்கள் பெரும்பாலும் தஞ்சையிலிருந்தே குடிபுக நேரிடும். இதனால் தஞ்சை தன் மக்களை இழந்து பொலிவிழக்க நேரிடும். இடம் பெயர்வது அந்த மக்களுக்கு இன்னலை உண்டாக்கும். மேலும் நிறையப் பொருள் தேவைப்படும்.

“நமக்குத் தொல்லை தரவேண்டும் என்பதற்காகவே நமது வணிக நாவாய்களைத் தாக்குவதை சிங்களவர்கள் ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருப்பதால் தாங்கள் கடற்படையை மூன்று மடங்கு விரிவு படுத்தத் தீர்மானித்திருக்கிறீர்கள். மேலும் தமிழ்த் திருப்பணிக்கும் நிறையப் பொருள், மக்கள் பலம் தேவைப்படுகிறது. தாங்கள் பெருவுடையாருக்குப் புதிய தலைநகரில் தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்கு இணையாக ஒரு கற்றளி அமைக்க இருப்பதாகவும்
எனக்குச் செய்தி கிட்டியுள்ளது. இதற்கும் ஏராளமான பொன்னும் பொருளும் தேவைப் படுமே!

“சக்கரவர்த்தி அவர்கள் விட்டுச் சென்ற பேரரசை உறுதிப் படுத்தவதே தலையாய பணி என்று எனக்குப் படுகிறது. அவர் பேரரசு முழுவதையும் தமிழ் கூறும் நல்லுலகு ஆக்க வேண்டும் என்று கனவு கண்டார். கருநாட்டார்கள் தங்கள் மொழியான கன்னடத்தை வளர்க்க முற்பட ஆரம்பித்து விட்டார்கள். கன்னடம் தமிழுக்கு அடுத்தபடியாகச் சிறந்து விளங்க ஆரம்பித்திருக்கிறது. அங்கு தமிழைப் பரப்புவதென்றால், அங்கிருப்பவர்கள் கன்னடத்தை விடுத்து தமிழைக் கற்க நாம் ஆவன செய்ய வேண்டியிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு பொருளாசை காட்டுவதே சாலச் சிறந்தது என்பது எனது துணிபு. இதற்கு வேண்டிய செல்வத்தை புதிய தலைநகரை நிர்மாணிக்கும் திட்டம் திசை நிரப்பும் என்று எனக்குப் பட்டது.

“வெங்கியையும், ஆந்திரத்தையும் எடுத்துக் கொண்டால், அங்கு தெலுங்கு பேசப்பட்டு வருகிறது. தங்கள் மைத்துனர் விமலாதித்தர் நமது தமிழ்த் திருப்பணியை முறியடிக்கத் தன் மகன் மூலம் ஆவன செய்து வருகிறார். அவனுக்குச் சிறுவயதிலேயே தெலுங்கைப் புகட்டி தமிழைப் பேசவிடாமல் அடித்தார். இருப்பினும் நிலவுமொழியின் மீது ஏற்பட்ட மயக்கத்தால் அவன் தமிழைக் கற்றுக் கொண்டான். அவன் கொண்ட மயக்கம் தவறானது என்றதால் அவனது தமிழ்க் கல்வியும் தடைபட்டது. அதிலிருந்து அவன் தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டான் என்று தங்களது தங்கையார் மூலம் எனக்குத் தகவல் வந்தது.

“அவன் திருப்பணிக்கு என்ன முட்டுக் கட்டை போடுவான் என்று நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. விக்கிரம சிம்மபுரி(நெல்லூர்)க்கு வடக்கேயும், மேற்கேயும் இருக்கும் சோட மன்னர்களுக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அங்கு தமிழ் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் சைவ, வைணவக் குழப்பமும், உட்பூசலும் தலையெடுக்க வேண்டாம் என்றுதான் சேதுராயரை திருப்தி செய்யும் முயற்சி மேற்கொண்டேன்.

“இவ்வாறு பலவிதமான முதன்மையான செயல்கள் நிறைவேற்றப்பட வேண்டிய இத்தருணத்தில் நமது ஈர்ப்பை வேறு பணியில் திருப்ப வேண்டாம் என்றும், புதுத் தலைநகரை உருவாக்கும் செலவிலும், நேரத்திலும் மிகமிகச் சிறிய அளவிலேயே தஞ்சையை இன்னும் பெரிய, வனப்புள்ள நகராக்கி விடலாம் என்றும் தோன்றியது. எனவேதான் புதிய தலைநகரம் தேவையற்றது என்று அரசவையில் ஒரே எதிர்ப்புக் குரலாக எனது குரலைப் பதிவுசெய்ய வேண்டிய அவப்பேறும் எனக்கு ஏற்பட்டது. மற்றவர்களும் வெவ்வேறு ஊர்களையே புதிய தலைநகராக்கும் வண்ணம் பரிந்துரை செய்ததிலிருந்தே அவர்களும் புதிதாக ஒரு தலைநகரை நிர்மாணிக்க வேண்டாம், இருக்கும் ஒரு ஊரையே சிறப்புடையதாக்கலாம் என்று, தங்களையும் அறியாமல் என் கருத்தையே வலிவு செய்தார்கள் என்றும் எனக்குத் தோன்றுகிறது.

“தங்கள் வினாக்களுக்கு என் மதியில் எட்டியதை மறைக்காமல் விளக்கி உள்ளேன். என் கருத்து எப்படி இருந்தாலும், தங்கள் ஆணைக்கு என்றும் நான் கட்டுப் பட்டவன். ஒரு கணமும் யோசியாமல் சோழ நாட்டிற்காக என் உயிரையும் கொடுக்கத் தயங்காதவன் நான். அந்த உறுதியை தில்லைக் கூத்தனார் சாட்சியாக நான் தங்களுக்கு அளிக்கிறேன்.” சொல்லி முடிக்கிறான் சிவாச்சாரி.

அவனது பதிலைக் கேட்டு இரண்டு முறை தலையசைத்த இராஜேந்திரன் தனது விழிகளை மூடிக் கொள்கிறான். கண்களைத் திறவாமலேயே, “மிக்க நன்றி சிவாச்சாரியாரே! உமது உண்மையான பதில் எனக்குப் பல உண்மைகளை உணர்த்துகிறது. சில நாள்கள் நான் உமது சொற்களின் பொருளை அசை போட்டுப் பார்க்கிறேன். சிறிது நேரம் எனக்குத் தனிமை தேவைப்படுகிறது. எனக்குத் தொந்தரவில்லாமல் இங்கு காவலிருக்கும்படி எனது மெய்க்காப்பாளர்களை பணித்து விட்டு, நீர் உமது பணிகளைக் கவனிக்கச் செல்லும். தேவையிருந்தால் நான் சொல்லி அனுப்புகிறேன்.” என்று கூறுகிறான்.

சிவாச்சாரி மெல்ல அங்கிருந்து நகர்கிறான். இராஜேந்திரன் தன் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிப் போக்கையும் காட்டாததால், தன் கூற்று இராஜேந்திரனின் உள்ளத்தில் தன்னைப் பற்றி எந்தவிதமான முடிவைத் தோற்றுவித்தது என்பதை அவனால் அறிந்து கொள்ள இயலவில்லை. அரசுப் பொறுப்பை ஏற்றதும் தனது உணர்ச்சிகளைத் திரையிட்டு மறைத்துக் கொள்ள நன்றாக இராஜேந்திரன் கற்றுக்கொண்டிருக்கிறான் என்பதை அவனது அருகிலிருந்து கவனித்துக் கொண்டுதானே வருகிறான் சிவாச்சாரி!

ஏதோ ஒரு பெரிய திட்டம் அவனது மனதில் உருவாகி வருகிறது என்பதும், விரைவிலேயே அவன் அதை நிறைவேற்றுவது பற்றித் தெரிவிக்கப் போகிறான் என்பது மட்டும் சிவாச்சாரியனுக்குப் புலனாகிறது.

சிவாச்சாரி அங்கிருந்து சென்றதும், இராஜேந்திரன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை மலர்கிறது. கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்ட அவன் அப்படியே உறங்கிப் போகிறான்.
* * *
                                           ரோகணம், இலங்கை
                           பிங்கள, ஐப்பசி 8 - அக்டோபர் 23, 1017

கைகள் களைத்துப் போகின்றன முருகேசனுக்கு. அதைப்பற்றி அவனது உடல் தெரிவிக்க முயன்றாலும், அவனது மனமும், மூளையும் அதைத் திரை போட்டுத் தடுத்து விடுகின்றன. இதுவரை எத்தனை சோழவீரர்களை மாரியம்மனுக்குக் காணிக்கையாக்கினோம் என்ற கணக்கை நினைத்துப் பார்க்கவும் நேரமில்லாது போகிறது அவனுக்கு. அவனது ஒரே நோக்கம் - பாண்டியப் பொக்கிஷங்களைக் கவர்ந்து செல்ல வந்திருக்கும் சோழர்களைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே. வேறு எந்த நினைப்பும் - உடல் சோர்வோ, வலியோ, களைப்போ, தன் உயிரின் மீது பற்றோ, குடும்ப நினைப்போ - அவனுக்கு இல்லவே இல்லை...

...கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் முன்னர் விக்கிரம பாண்டியன் அவனைச் சந்தித்து, பாண்டியப் பொக்கிஷத்தைக் காப்பாற்ற அவனுக்குத் துணையாக மூவாயிரம் பாண்டிய வீரர்களை விட்டுச் சென்றதும், பொக்கிஷத்தைக் காபாபாற்ற அவர்கள் துணைகொண்டு ஒரு பெரிய காப்புக் கட்டுமானம் செய்ததுதான் அவன் முதலாவதாகச் செய்த பணி.
---------------------------------------------------------------------------------------------------------------------------
[வையவன் படைப்புக்களை
 இதய ஒளி ப்ளாகில் காணலாம் 
blog address http // idhayaoli.Blogspot.in]
--------------------------------------------------------------------------------------------------------

நூறடி விட்டமும், இருபத்தைந்தடி ஆழமும் உள்ள ஒரு பெரிய பள்ளம் தோண்டி, அதற்குச் செல்ல சிக்கலான ஒரு வழி அமைத்தான். அந்தப் பள்ளத்திற்கு கருங்கற்களால் சுவர்களும், தரையும், மேல் தளமும் கட்டி, நடுவில் பதினைந்தடி அகலத்தில் ஆறு பட்டை உள்ள ஒரு அறை கட்டி, அந்த அறையில் பாண்டியப் பொக்கிஷங்களை வைத்து மறைத்தான். ஓரொரு பட்டையிலும் வெளியே செல்ல சுரங்க வழிகள் அமைத்தான். அந்த அறையில் மேல் தளத்தில் ஒரு சிறிய சிவன் கோவில் அமைக்கப்பட்டது. பொக்கிஷ அறை கீழே இருப்பது தெரியா வண்ணம்.

அந்தச் சுரங்கப் பாதைகள் ஒன்றை ஒன்று மூன்று முறை சுற்றி வந்து பிறகு தனித் தனியாக வெவ்வெறு திசையில் பிரிந்து சென்றன. சில வழிகள் ஒன்றோடு ஒன்று பதினைந்து அடிக்குப் பதினைந்து அடி அகலமான அறைகளில் சந்தித்தன. கடைசியில் இரண்டே வழிகள் வெளியில் வந்தன. ஒன்று முருகேசனின் குடிசைக்கும், இன்னொன்று, ஒரு சிறிய மண்டபத்தின் இரகசிய அறைக்கும் சென்றன. வழி தெரியாதவர் சுரங்கப் பாதையில் நுழைந்தால் வழி தவறித் திண்டாட வேண்டும் என்றே குழப்பான வகையில் அவை கட்டிப்பட்டிருந்தன.

சுரங்கப் பாதையும், ஒருவர் செல்லும் அளவுக்கே இருந்தபடியால் உள்ளே வருபவர் எவராக இருந்தாலும், சுரங்கப் பாதைகள் சந்திக்கும் அறையில் தாக்கிக் கொல்லப்படுவது எளிது. அது மட்டுமன்றி சுரங்கப் பாதையை அடைத்துக் கொண்டு காவலாக நின்று விட்டால், அவர்களைத் தாக்கிக் கொன்று கீழே வீழ்த்தினால்தான் மேலே செல்ல இயலும். கடைசியில் அவர்கள் மேலே செல்ல இயலாதவாறு வழியும் அடைக்கப்பட்டு விட ஏதுவாகும். எனவே, நூற்றுக்கும் குறைவான வீரர்களே கடைசி நிலையில் பொக்கிஷத்தை நன்கு காவல் காக்க முடியும்.

இந்த அமைப்பைக் கட்டி முடிக்க பதிமூன்று மாதங்கள் ஆயிற்று. விக்கிரம பாண்டியன் ஆறு மாதங்கள் முன்பு வந்து பார்த்து விட்டு, முருகேசனைப் பாராட்டி விட்டுச் சென்றிருந்தான். அப்பொழுது அவன் முகத்தில் கவலைக் கோடுகள் நிறைய இருந்ததைப் பார்த்துக் கவலையுற்ற முருகேசன் அவனிடம் விசாரித்த போது சுரத்தில்லாமல்தான் பதிலளித்தான் விக்கிரமன்.

“முருகேசா, இராஜேந்திரன் இலங்கையின் மீது படையெடுத்து வரத் தீர்மானித்து விட்டான். கிட்டத்தட்ட முந்நூறு நாவாய்கள் ரோகணத்தைச் சுற்று வளைத்துக் கொள்ளும் என்று தெரிகிறது. தொண்டித் துறைமுகம் நமது கைவிட்டுப் போய் விட்டது. தொண்டிக்கு நான்கு கல் தூரத்திற்கு முன்னரே அனைவரும் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். இப்பொழுது கொற்கைதான் நமது கைவசம் இருக்கிறது. அதை முதலில் கைப்பற்ற இராஜேந்திரன் திட்டம் தீட்டியே நாவாய்களை அமைத்து வருகிறான் என்று ஒற்று கூறுகிறது.

“கொற்கை பிடிபட்டால் பாண்டி நாட்டிலிருந்து இலங்கை வருவது குதிரைக் கொம்பாகி விடும். சேரத் துறைமுகமான விழிஞத்திலிருந்துதான் வர இயலும். எனவே இராஜேந்திரன் கொற்கையைத் தாக்க முற்பட்டால் அங்கு குவிந்திருக்கும் பாண்டியப் படை முழுவதும் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். உனது கடமை நமது பரம்பரைச் சொத்து இருக்குமிடத்தை மிகவும் இரகசியமாக வைத்திருப்பதுதான். நீ நிறைவேற்றி இருக்கும் பாதாள அரணமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று பொக்கிஷ அறையில் மேல் தளத்தில் இருந்த சிவன் கோவிலில் வழிபட்டுவிட்டு, மேலும் இரண்டாயிரம் பாண்டியவீரர்களையும் விட்டுவிட்டுச் சென்றான்.

தன் அரசனைச் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக அது அமைந்து விடுமோ என்று முருகேசன் அஞ்சியபடியே நடந்து விட்டது.

இராஜேந்திரனின் ஒற்றர்கள் தவறான தகவலை அனுப்பி பாண்டிய ஒற்றர்களைக் குழப்பி இருந்ததால் பாண்டியப் படை கொற்கையில் கட்டிப் போடப்பட்டது. நாகைப்பட்டினத்திலிருந்து திரிகோணமலைக்கு இருநூறு நாவாய்கள் மூலம் நிறைய சோழவீரர்களை அனுப்பி ரோகணத்தைத் தாக்கினான் இராஜேந்திரன்.

அவனுடன் தோள் கொடுத்து சோழப் படைவீரர்களுடன் முன்னிருந்து வீரப் போர் புரிந்தான் இராஜாதிராஜன். தனக்குப் பிடித்த யானைப் படைகளை அணிவகுத்துப் போர் புரிந்து சிங்களப் 

படைகளைச் சின்னா பின்னாமாக்கினான். பாண்டியர்களின் பரம்பரைச் சொத்தைக் கைப்பற்றி சோழ நாட்டிற்குக் கொண்டு வருவதும், வணிக நாவாய்களைக் காப்பாற்ற இலங்கையிலிருந்து தாக்கும் கடல் கொள்ளைக்காரர்களைப் பூண்டறுப்பதும் சோழர்கள் திட்டமாக இருந்தது.
[வளரும்]
[வையவன் படைப்புக்களை இதய ஒளி ப்ளாகில் காணலாம் blog address 
idhayaoli.Blogspot.in]

No comments:

Post a Comment