Tuesday 2 September 2014

நட்சத்திரக் காதலிகள்-1

நட்சத்திரக் காதலிகள்-1

கவிதாயினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி 
                                    எழுதும் புதிய சமூகத் தொடர் நாவல்                               

1

ரெயில்வே ஸ்டேஷன்.கல்யாண கலாட்டா முடிந்து காலியாக இருக்கும் கல்யாண மண்டபம் போல அமைதியாக இருந்தது. தாய் வீட்டிலிருந்து விடைபெறப் போகும் மணப்பெண் போல ஒரே ஒரு ரயில் பத்து பிளாட்பாரம் உள்ள அந்த ஸ்டேஷனில் புறப்படாமல் யோசிக்கிறமாதிரி காத்திருந்தது. இது இனிமேல் நம் சொந்த வீடு இல்லை 


அந்த ரெயில் இளைப்பாறியிருந்தது சிறிது நேரம். சட்டென்று ஒரு பெருமூச்சோடே புறப்பட ஆயத்தமான பாவனையில். பயணிகள் தங்கள் தேவைகளுக்காக இரயிலில் இருந்து இறங்கிய படியும் ஏறியபடியும் இருந்தார்கள்.

வாயிலின் அருகாமை இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள். அவள் மடியில் ஒரு லேப்டாப். கவனம் எங்கோ வெளிப்புற காட்சிகளின் லயிப்பில். கண்கள் ஒவ்வொரு காட்சியின் அமைப்பையும் படம் பிடிக்கும் பாவனையோடு.

காற்று அவள் கேசத்தை கலைத்து விளையாடியது. முன் வந்து விழுந்த முடியை காது புறமாய் ஒதுக்கியபடி வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் கண் சிமிட்டின அவளைப்பார்த்து. பிளாட்பாரத்திற்கு எதிர் சாரி இருக்கையில் அமர்ந்திருந்ததால் அங்கிருந்த மின்சார விளக்குகளின் வெளிச்சம் நட்சத்திரங்களை கொள்ளை அடிக்காதிருந்தது.

நட்சத்திரக்  கூட்டத்தின் மகுடம் சூடா ராணியாக மையம் கொள்ள ஆசை அவளுக்கு. அந்தக்  கணங்களின் அருகாமையில் அவனும் வேண்டும் அவளோடு . அவள் தேடிக்கொண்டிருக்கும் அந்த கற்பனை காதலன்.

மெல்லச்  சிரித்துக்கொண்டாள். ஆசையை நிறைவேற்றினால் என்ன என்று தோன்றியது.   எண்ணத்தின்  இறக்கைகளை  விரித்து ஏகாந்த வெளிக்கு பயணப்பட இருந்த அவளைப்  பிடித்து இழுத்து நிறுத்தினான் அவன்.

"என்ன கனவா?" என்றான்

"ஆம்" என்றாள் அவள்

"இந்தக்  கனவு அவசியமா?"

'அவசியம் கருதி மட்டும் கனவுகள் வருவதில்லை.அதோ அந்தப் பறவைகள் போன்று அவை தன்னிச்சையானவை.நீ நிஜத்தில் வரும் வரை, என் கண்கள் உன்னை காணும் வரை இப்படிக்  கனவுகள் வந்துகொண்டே இருக்கும்" என்றாள் கல்பனா.

அவன் அருகில் வந்தமர்ந்தான். அவன் தோளில் அவள் தலை சாய்த்துக்கொண்டாள். அவன் கைக்குள் தன் கையைக் கோர்த்துப்  பிடித்தபடி.

"நான் உன் வாழ்க்கைல வந்துட்டா என்ன பண்ணுவடா?"

"ஒரு பையனும்  ஒரு பொண்ணும்  பெத்துக்கிட்டு வீட்டோட பொண்டாட்டியா செட்டில் ஆயிடுவேன்!"

"ச்சீச்சீ!" என்று நினைவுகளை அழித்தாள் கல்பனா

திரும்பவும் அவன் கேட்டான் "நான் உன் வாழ்க்கைல வந்துட்டா என்ன பண்ணுவடா?"

"நாம ரெண்டு பேருமா  சேர்ந்து இந்த உலகத்தை அன்பினால் நிரப்பப்போகிறோம்"

"என்னடி சொல்ற?"

"ம் ஆமாம் அன்பினால் தான் நிரப்பப்போகிறோம். காதலின் பிரவாகத்தினால் மூழ்கடிக்கப்போகிறோம். இதற்கு முன்னும் இதற்குப்  பின்னும் யாரும் காதலிக்காத அளவிற்கு இந்தப்  புவி காதலில் மிதக்கப்போகிறது"

"ஹா ஹா ஹா" என்று சிரித்தான் அவன். உற்சாகம் கடல் அலை நுரை கால்கள் மீது பளீரென்று அறைவது போல் ஓர் உணர்வு 

"ஹலோ மேடம்!" என்று அவள் முகத்திற்கு நேராக பெருவிரலையும் நடுவிரலையும் சொடக்குப்போட்டு  கல்பனாவின் நினைவை கலைத்தான் ராஜீவ்

"கொஞ்சம் அடக்க ஒடுக்கமா உட்கார்றது. இப்படி பெப்பரபேன்னு பரப்பிக்கிட்டு  உட்கார்ந்தா நாங்க எப்படி உட்கார்றதாம்.?"அவன் புருவம் சுருக்கி கேட்ட தோரணை அழகாய் இருந்தது. அந்தச் சிவந்த  உதடுகள் அவளை வெகுவாய் ஈர்த்தன . 

அவளின் கதாநாயனுக்கும் சிவந்த உதடுகள் தான். அந்த உதடுகளைப் பார்க்கும்போது இவற்றுக்கு லிப்ஸ்டிக் போட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை கிளர்ந்தது. இல்லை. லிப்ஸ்டிக்கே போடாத இந்த உதடுகளுக்கு இருக்கும் கவர்ச்சி லிப்ஸ்டிக் போட்டால் போய்விடும். 

உதடுகள் வீணை மாதிரி. அவை அசைவது இசை எழுவது மாதிரி 

லிப்ஸ்டிக் அதற்குப் போட்ட உறை. இது ஓர் அழகு.  அது ஓர் அழகு 

 இந்தப்  புருவம்? அட..இது நினைவூட்டிய வில் மன்மதனின் கரும்பு வில்லுக்கு  வழி விடச்சொல்கிறது 

'இது என்ன? ஆண் தான் இப்படி பெண்ணை வர்ணிப்பான். நான் பெண். இவன் வர்ணிக்க நான் கேட்பது போய், இவனையும் இவ்வளவு கலாரசனையின் கச்சிதத்தோடு இவனைப் படைத்த  இறைவனையும் துதி பாடிக்கொண்டிருக்கிறேன்'
மறுபடியும் அவன் கண்களின் எதிரில் விரல்களால் சொடக்குப் போட்டான். 

கனவு மீள் கண்கள் பேந்தப் பேந்த  விழிக்க என்ன என்று விழிகளிலும் தலையின் சிறு உலுக்கலிலும் ஒரு கேள்வி கேட்டான்  ராஜீவ்

ஒன்றுமில்லை என்பதாக உதடு பிதுக்கித் தலையசைத்து, இருக்கையின் நுனிவரை கால்கள் அகற்றி உட்கார்ந்திருந்தவள். பின் தள்ளி சற்றே ஒடுங்கிச் சரியாய் அமர்ந்தபடி சாரி என்றாள். 

காதுகளில் தொங்கிய பிளாஸ்டிக் காதணிகள் அசைந்தது அவன் ரசனைக்குத் தீனி ஆனது.

அவன் கண்கள் அவற்றின் ஊசலாட்டத்தில் மிதந்தன.

'சரி தான்! இப்போது இவன் முறை.ரசிக்கிறான். ரசிக்கட்டும்' .

அப்போது அவளின் எதிர் இருக்கையில் அமர்ந்தவன் , "மேடம் கொஞ்சம் இந்த பேகை பார்த்துக்கோங்க' என்றபடி கீழிறங்கிப் போனான் .

கல்பனா தலையாட்டினாள்.சந்தன நிறத்தில் கருப்புக்  கோடு போட்ட சர்ட், கரு நிற பேண்ட். 'நல்ல மேட்ச். ம்.. ரசிகன் தான்!'.தனக்குள் சொன்னாள் 

"உன் கற்பனைக்  காதலனுக்கு இந்த டிரெஸ்ஸைப் போட்டுப்பாரேன்!" அவளுக்குள்ளே மறுகுரல், அதன்படி அந்த க.காவுக்கு  அணிவித்து அழகுப் பார்த்தாள். 

உயரம் உடல் வாகு, பேசும் கண்கள் என்று அனைத்தும் ஒத்துப்போக மனதிற்குள்ளாக சிரித்துக்கொண்டாள்.

அப்படி ஒருவனைத் தேடும் யாத்திரையில்  இன்னும் எத்தனை அழகன்களை சைட் அடிக்க வேண்டி இருக்குமோ?

இந்த எண்ணம் உதித்ததும் கையில் ஒரு பிரம்பைத் தட்டியபடி சமூகம் வந்து நின்றது.
கண்ணியம்... கண்ணியம்..என்று அது செய்த எச்சரிக்கையில் முகத்தில் ஒரு கண்ணிய மேக்கப் போட்டுக்கொண்டாள் 

சிரிப்பு வந்தது. 'எத்தனை மேகப்டீ போடுவே கல்பனா?' என்று ஒரு கிண்டல் குரல்.
'வெவ்வவவே' அழகு காட்டினாள்.

அந்தக் க.காவுக்கு அவள் அப்படி அழகு காட்டுவது பிடிக்கும். உதடுகளைச சுருக்கி முறுக்கி இடம் வலமாக அசைத்து ஒரு அபிநயம் செய்வது கூட.

அடடா! இப்படி எத்தனை சின்னச் சின்ன ரசனைச் சுருள்களில் தவ்வித்தவ்வி மிதப்பதில் என்ன ஒரு சுகம்! 

கவனத்தை வேறுபக்கம் கொண்டு போனவளின் பார்வையில் அந்த குழந்தை தென்பட்டது. அழகாய் லாலிபாப்பை வாயில் வைத்து சப்பியபடி, மஞ்சள் நிற பேண்ட்டும் சிவந்த நிற ப்ராக்குமாக சிரித்தது.

"இங்க வா" என்று தலையசைத்தாள்

அந்த குழந்தை தன் அம்மாவின் சேலைக்குள் முகம் மூடி பின் அவளைப் பார்த்துச்  சிரித்தாள்.

குழந்தையின் தாயும் கல்பனாவைப் பார்த்து சிநேக பாவத்திற்கு மாறினாள் 

"எங்க போறீங்க?" என்றாள்.

"திருவள்ளுர்"

"வேலைக்கா?"

"இல்லை..கல்யாணத்துக்கு"

"எந்த மண்டபம்?"

"மண்டபத்துல இல்ல, வீரராகவ பெருமாள் கோயில் சன்னதியில"

ஓ! என்று புன்னகைத்துவிட்டு குழந்தையின் மேல் கவனமானாள்

அதற்குள் வெளியே போனவன் திரும்பி வந்தான் 

கைகளில் மாசா. ஒன்றல்ல  இரண்டு 

. "மாசா குடிப்பிங்க இல்ல!" என்று நீட்டினான்.

லேசாய் தோள்களை குலுக்கி வேண்டாம் என்பதாக தலையசைத்தாள். மாசா குடிப்பவள் தான் இன்று ஏனோ டீ குடிக்கத்  தோன்றியது. காற்று சில்லென்று வீச, இரயில் தடக் தடக் தடக் சப்தத்தோடு காற்றை கிழித்து சீறத் துவங்கியது.

டீக் குடிக்கனும் போல இருக்கு என்றாள்.

"சாரி "என்றான் அவன்

"ஏன்?"

"நீங்களும் மாசா குடிப்பீங்கன்னு நானா நெனச்சதுக்கு "என்று சிநேகமாகச்  சிரித்தான்.

அவன் இதழ்களோடு அவன் கண்களும் அந்தச் சிரிப்பில் இணைந்தன.த்தது

"டீ சார் டீ டீ!" இருக்கைகள் இருக்கையாய் நிற்காமல் நகர்ந்து வந்தவன் அவர்கள் எதிரில் நின்றான் தேநீர் விற்பவன்

'ஒண்ணு!" ஒற்றை விரல் காட்டிச்சொன்னபடி ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டினாள் ..

"எனக்கில்லையா?" என்றான் ராஜீவ்

"நீங்க கேப்பீங்கன்னு  நானா முடிவெடுக்க மாட்டேன் உங்களுக்கு வேணுமின்னா வாங்கித்தரேன்!" என்றாள் கல்பனா!

வேண்டாங்க.நானே வாங்கிக்கறேன் என்று எழுந்து பின் புறபாக்கெட்டில் இருந்த பர்ஸ் எடுத்து  ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை உருவினான்.

"சார் சில்லறை   இல்லிங்களே !"

இருங்க என்கிட்ட இருக்கு என்று கல்பனா இன்னொரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள்

ராஜீவ் சிரித்தபடி "திருவள்ளுர் வந்ததும் நான் உங்களுக்கு சேன்ஜ் மாத்தி தந்துடுவேன் !".

"நீங்க மாசா வாங்கும் போது என்கிட்டே இருந்து  பணம் வாங்கிடம்னு நெனச்சீங்களோ "என்று தலையை ஒரு புறம் சாய்த்துக் கேட்டாள் 
அவள் முக அசைவு காந்தமாய் அவனை ஈர்த்தது. பார்வையை ஒரு நிமிடம் புறம் விலக்கியனான்.

"நல்லா கேட்ச் பண்றீங்க!" சிரித்தான்.

மீண்டும் பர்சை பின்புறப் பாக்கெட்டில் வைக்கப் போனான்

"என்னங்க பர்சை யாராவது பேக் பாக்கெட்ல வைப்பாங்களா? நீங்க நடக்கும் போது பாதி பர்ஸ் வெளிய வந்துடுது!" என்றவள் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டாள்.

'இது என்ன முன் பின் அறிமுகமாகதவனிடம் ஒரு தனி உரிமை! என்ன நினைப்பான் தன்னைப் பற்றி !"

தன பார்வையும் ஏன் அங்கு போக வேண்டும்?

அவன் அதைப் பொருட்படுத்தாமல்  சிரித்தபடியே பர்சை பேகிற்குள் வைத்துக்கொண்டான்.

"சார்  மொதல்ல டீய கையிலே  வாங்குங்க "  டீ விற்பவன்.

இருவரும் சிரித்தபடி டீயை வாங்க.  அவள் கை அவன் கையோடு இடிக்க கல்பனாவின் தி டீ சிறிது அவனது திறந்திருந்த லேப்டாப்பில் சிந்தியது.

அச்சோ என்று அவன்  பதறி லேப்டாபை எடுத்து அவன். தன் கர்ச்சீப்பால் டீயைத் துடைத்தான்.

அந்த லேப்டாப்பில் ப்ளாக் ஒன்று ஓபன் ஆகியிருந்தது.

இணையவெளி

"வாவ் இணையவெளி படிப்பிங்களா நீங்க?" என்றான்

"ம்ம்  " என்று முறுவல் பூத்தாள் அவள்

"எனக்கும் பிடிக்குங்க நானும் தொடர்ந்து இணையவெளி படிச்சுட்டு இருக்கேன்!" என்றான்.

"அது வையவன் சாரோட ப்ளாக்!" என்றாள் கல்பனா

"ம்ம்ம்…வையவன் எழுதின பாடிப் பறந்த குயில் நாவல் படிச்சிங்களா?"

"ஓ படிச்சிருக்கேனே என்றவள் அதுல தியாகராஜன்னு ஒரு கேரக்டர் வருங்க அவன் ஜீவன்னு கூப்பிடுவான் அப்ப ஜீவானந்தத்துக்குள்ள ஏற்படுற உணர்வை எழுதி இருப்பாரு பாருங்க!" என்று அவள் விழிகள் விரித்து கூறுவதை வியந்து பார்த்தவன்.

அவன் ஜீவன் என்று அழைக்கும்போதெல்லாம் அவனுடைய உள்ளத்தின் மென்மையான பாகத்தில் வீற்றிருக்கும் அந்த மகத்தான துக்கம் மெதுவாக ஞாபகப்படுத்துகிறது “ஜீவன்”அவள் தான் அப்படி அழைப்பாள் என்று மனப்பாடமாகக்  கூறினான் ராஜீவ்.

அவள் ஸ்தம்பித்தாள். எப்படி அவனால் அத்தனை துல்லியமாக நாவலின் வரிகளை கூறமுடிகிறது.

அவள் முகத்தில் தோன்றிய வியப்புக் குறிகளையும் ஆச்சர்ய பாவனைகளையும் அவன் ரசித்தான்.

"ஒரு பத்து முறையாவது அந்த நாவலை படிச்சிருப்பேங்க! துக்கம்ன்னு சொல்லாம மகத்தான துக்கம்ன்னு துக்கத்தையே புனிதப்படுத்தியிருப்பாரு பாருங்க!" என்றான் ரசனையோடு ராஜீவ்.

"நான் கூட ப்ளாக் வச்சிருக்கேங்க!" என்றான் அவன்

"என்ன ப்ளாக்?"

"வாசக யாத்ரீகன்" என்றான் அவன்

"உங்க பேர் ராஜீவ்!" என்று விரல் ஒன்றை டக்கென்று நீட்டிச் சுட்டினாள் அவள்.

அவன் சிரித்தான் 

"என் ப்ளாக்கும் படிப்பிங்களா?".

அவள் பதில் புன்முறுவலிலும் ஒரு கொஞ்சலான தலையாட்டலிலும் வெளிப்பட்டது 


வாசக யாத்ரீகன் அருமையான ப்ளாக், அவள் விடாது தொடர்ந்து படிப்பாள். அதில் வரும் காதல் கதைகளுக்கும், உலகிற்கு அறிவுரைகளாக வந்து விழும் படைப்புகளும்  வாசிக்கும் அனுபவம் அவளுக்கு மிகவும் அலாதியானது.


"தொடர்ச்சியா படிப்பிங்களா?"

"ஆமாம்!" என்றாள் ஆமோதிப்பாய்.

"உன் வெற்றிட இதயத்தில்
தங்கிக்கொள்ள அனுமதிக்கொடு – ன்னு ஒரு கவிதை எழுதியிருக்கீங்க பாருங்க எனக்கே எழுதின மாதிரி  அதுலே ஒரு பெர்சனல் பீலிங் இருந்ததுங்க" என்றாள் தன்னை மறந்து.

"ஏங்க அது? அவங்கவங்க படிக்கும் போது அவங்கவங்களுக்கு எழுதினதுமாதிரி தாங்க இருக்கும்" என்றான் அவன்.

அவளின் முகம் கொஞ்சம் சுணங்கியது. அவள் கற்பனை வாதி. ஒவ்வொரு கவிதையிலும் தன்னைக்  கதாநாயகி ஆக்கிக்கொள்வது அவள் இயல்பு. தனக்கு வரப்போகும் ஆண் துணைப் பற்றி ஆயிரம் கனவுகள் இருந்தது கல்பனாவிற்கு. பார்வையை அவன் மீது ஓடவிட்டவள் அவன் தானோ இவன் ?

அவளது எண்ண ஓட்டத்திற்கு ஒரு ப்ரேக் போட்டாள் 

இப்படி  ஒவ்வொருவனிடம் பேசும் போதும் இவன் தானோ ..இவன் தானோஎன்றொரு எதிர்பார்ப்பு வந்துவிடுவது சாதாரணம் 

அம்மா ஆயிரம் மாப்பிளைகளை நிற்க வைத்த போதும், காதலித்து தான் திருமணம் என்று கூறிவிட்டாள். பெற்றோருக்கு ஒரே மகள் என்பதால் இருவருக்கும் கரிசனை இருந்தது கல்பனா மீது.

கல்பனாவிற்கு நீண்ட முகம், கூர்மையான மூக்கு, அந்த மூக்கைப் பார்க்கும் போது நிச்சயம் அநேகருக்கு நடிகை அனுஷ்காவின் நினைவு வரும், அனுஷ்காவிற்கு கூந்தல் விவரம் தெரியாது. ஆனால் கல்பனாவிற்கு நீண்ட கருங்கூந்தல். நல்ல உயரம், ஒல்லியான உடல் வாகு. பேசும் கண்கள், புன்னகை தொற்றி நிற்கும் இதழ்கள். அவள் கட்டியிருந்த சந்தன நிற சேலையில் சிவந்த மலர்கள் அழகாய் சிரித்தன.

அவள் கண்கள் நேராய் அவன் கண்களோடு உறவாடின  அவன் பார்வை அவள் பார்வையில் நிலைத்து  முகம் பார்த்து பேசியது. அந்த விழிகள் வேறு எங்கும் அலைபாயவில்லை.  அநத விழிகளின் கண்ணியத்தில் லயித்தாள்.


அவள் அவனை ஆராய்வதை அவன் உணர்ந்துகொண்டான் என்பது அவள் முகத்தில் செம்மைப் படரச் செய்தது. அந்த செம்மையை கண்ட அவன் விழிகள் வேறு புறம் திரும்பின சரியான அசடு என்று எண்ணிக்கொண்டான்.

பெண்கள் தைரியமாய் இருக்கவேண்டும் என்பது அவன் எண்ணம். தன் நிலையில் உறுதியாய் நிற்க வேண்டும் . ஒரு ஆணைப் பார்த்தவுடன் வெட்கப்பட என்ன இருக்கிறது இங்கே! என்று எண்ணினான். 

ஒரு ஆணை அறிவோடு நெருங்காமல், உணர்வோடு ஏன் நெருங்குகிறார்கள் இந்த பெண்கள். பார்ப்பவரிடம் எல்லாம் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தால் பெண்களின் நிலை என்ன?

நான் கொஞ்ச நேரம் பேஸ்புக் பார்க்னுங்க என்றபடி அவனுடைய லேப்டாப்பை ஆன் செய்து பேஸ்புக்கிற்குள் லாகின் ஆக அங்கே ரோஜாவனம் ஆன்லைனில் இருந்தாள்.

ரோஜாவனம் என்பது ஒரு ப்ளாகின் பெயர். அங்கு பெரும்பாலும் காதல் கவிதைகளே நிரம்பி வழியும். ரோஜாவனத்தில் எழுதப்படும் கவிதைகள் ரோஜாவின் மென்மையும் கம்பீரமும் திகழ்வதாகவே இருக்கும்.

அன்றும் ஒரு கவிதை பதிவிட்டிருந்தாள் அவள்

'உன் தோளில் சாய்ந்த நொடி
உள் அடர்ந்த பாதுகாப்பின் கானகம்

அன்பு வழி தேடி அலையும் மனதில்
காதல் வித்திட்டது உன் அருகாமை

நம் ஸ்பரிசங்கள் தீராவெளியில்
மிதக்கிறது நம் உணர்வு மிதவைகள்

நாம் அற்றுப் போகும் நிகழ்காலத்தில்
உயிர்த்துவிடுகிறது ஓர்மை எனும் பாங்கு!'

"வாவ்!" என்றான் ராஜீவ்

"என்ன?" என்றாள் கல்பனா

"உங்க பேர் என்ன?"

அட இப்பவாவது கேட்கத் தோணுச்சே.. ஆனா சஸ்பென்ஸ்  கொஞ்சநேரம் நீடிக்கட்டுமே!" என்று சிரித்தாள் கல்பனா

"ப்ச்.. ப்ளீஸ்.. சும்மா சொல்லுங்க"

"கல்பனா" என்றாள்

"நீங்க பேஸ்புக்ல இருக்கீங்களா கல்பனா? என் பேஸ்புக் ப்ரண்ட்  ஒருத்தங்க கவிதை எழுதுவாங்க பாருங்க செமையா இருக்கும் என்றான் ராஜீவ்

"எத்தனை செமைங்க?"

"ஏங்க இப்படி விளையாட்டுத்தனமாவே தான் இருப்பீங்களா?"

சரி சரி உங்க ப்ரண்ட் எந்த பேர்ல இருக்காங்கன்னு சொல்லுங்க என்றாள் கல்பனா.

"ரோஜா வனம்" என்று அவன் கூறிய போது, ரோஜாவனம் சாட்டில் வந்தாள். 

"ஹாய் ராஜீவ் எப்படி இருக்கீங்க?" என்றாள்

"எப்பொழுதும் சாட்டில் வராதவள் சாட்டில் வருகிறாளே!" என்று எண்ணினான். 

"நான் நல்லா இருக்கேன் நீங்க ?"

"நானும் நல்லா இருக்கேன்! என்னப்பா ஒரே ஓவர் புகழ்ச்சியாம் என்னைப் பத்தி டிரைன்ல!"

"என்ன சொல்றீங்க? யார்ங்க சொன்னது ?"என்று சாட்டில் போட்டவன் சட்டென்று இருக்கை மாறி கல்பனாவின் அருகில் அமர்ந்து லேப்டாப்பைக் கைப்பற்றினான்.

கல்பனாவின் அடிவயிறு சில்லிட்டது. அவளுக்குள் பெண்மையின் உணர்வுக்கதிர்கள்  ஓடத்துவங்கின . 

முதல் முறை ஒரு ஆணின் அருகாமை தந்த உணர்வில் அவள் துவண்டாள்.

ரோஜாவனம் பேஸ்புக் ஐடியில் கல்பனா தான் ராஜீவிற்கு செய்தி அனுப்பிக்கொண்டிருந்தாள்.

உலகம் எத்தனை குறுகிய வட்டத்திற்குள் வந்துவிட்டது. முன் பின் அறிமுகமில்லாத இருவர்  தன் போக்கில் பயணப்பட, அறிமுகமாகியிருந்தும் அறிமுகற்ற உரையாடலின் தொடர்ச்சி, மௌனமாய் இருந்தான் அவன். அவள் காதல் கவிதைகளை அணு அணுவாய் ரசித்து இருக்கிறான். இப்பொழுது இந்த பெண்ணிடம் சொன்னால் என்ன நினைப்பாள். சற்று முன் அவனின் கவிதைகளை படித்துவிட்டு எனக்கே எழுதியது போல் இருக்கிறது என்றவளின் கண்களில் தெரிந்த காதல் அவனை கலவரத்தில் தள்ளியது.

லேப்டாபைப் பற்றியிருந்த கை அவள் தொடையில் அழுந்த பதிந்திருக்க சட்டென்று விழிப்பு பெற்றவனாய் இடம் மாறி அமர்ந்து " சாரி "என்றான்.

அவன் இறங்கவேண்டிய நிறுத்தம் வந்துவிட இறங்கப்போனவன் ஏதோ எண்ணியவனாய் தன் மொபைல் எண்ணை ஒரு பேப்பரில் எழுதிகொடுத்து, "நேரம் இருக்கும் போது கால் பண்ணுங்க பேசலாம்" பிறகு நகர்ந்தான்.

அவனின் திடீர் முகமாற்றம் அவளுக்கு ஏதோ உணர்த்த, கலவரமானாள். பார்த்தவுடன் ஏற்பட்ட உற்சாகம் எதுவும் இருக்கவில்லை. அந்த எண்ணையே பார்த்துக்கொண்டிருந்து எதார்த்தமாய் சன்னல் புறம் திரும்ப அவன் லேப்டாப்பிற்கு சார்ஜ் போடும் வயரை அங்கே மறந்துவிட்டிருப்பது தெரிந்தது. 

அவன் மறந்து விட்டானா? அல்லது தனக்காக ஒரு மெ மரிக்காக விட்டானா? என்றொரு வினா எழ சட்டென்று மனதை அதட்டி தன் நிலை வந்தாள். தன்னுடையவன் அவன் அல்ல என்று மீண்டும் சொல்லிக்கொண்டாள். 

இரயில் அதன் ஓட்டத்தில் கடந்துக்கொண்டிருந்தது 

காலம் அந்தப் பாலத்தின் மீது ஒரு தாள லயத்தோடு ஓடத்தொடங்கியது 

இன்னும் என்னென்னவோ காத்திருக்கிறது என்று சொல்வது போல [வளரும்]

No comments:

Post a Comment