Thursday 18 September 2014

தமிழ் இனி மெல்ல [பா.3 :அத்தியாயம் 4 ]தொடர்கிறது

தமிழ் இனி மெல்ல [பா.3 :அதி.3 ]சென்ற பதிவின் இறு தியில் 
 ஒரு நாழிகை கழிகிறது. அருகில் யாரோ நிற்பது போன்ற உணர்வு தோன்றவே திடுக்கிட்டு கண்களைத் திறக்கிறாள். அவளருகில் தலைப்பாகை அணிந்த கோவில் அதிகாரி ஒருவர் கையில் தண்டுடன் நின்று கொண்டிருக்கிறார். அவள் கண்களைத் திறந்ததைக் கண்டதும் அவர் முகத்தில் புன்னகை மலர்கிறது.

“விழித்துவிட்டாயா அம்மா? பயணக் களைப்பு மிகவும் அதிகமா? ஏனம்மா, திருமயிலை பொன்னம்பல ஓதுவாரின் மகள் நிலவுமொழிதானே நீ?” என்று கனிவான குரலில் வினவுகிறார். வியப்பில் பெரிதாகின்றன அவளது விழிகள். எவ்வளவு நேரம் தங்கள் உறக்கத்தைக் கலைக்காமல் தாங்கள் கண்விழிப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறாரோ இவர்? வெட்கம் பிடுங்கித் தின்கிறது நிலவுமொழிக்கு. சட்டென்று எழுந்து கொண்டு தலையைக் குனிந்து கொள்கிறாள் அவள்.

“மன்னிக்க வேண்டும். தாங்கள் வந்து நிற்பதையும் அறியாமல் அயர்ந்து உறங்கி விட்டோம். நான் நிலவுமொழிதான். இவர்தான் எனது தந்தை பொன்னம்பல ஓதுவார். எவ்வளவு நேரமாகத் தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள்? எங்களை எழுப்பி இருக்கலாமே!” மன்னிப்புக் கேட்கும் குரலில் இறைஞ்சுகிறாள் நிலவுமொழி.

“அதனாலென்ன அம்மா. நான் வந்து அதிக நேரம் ஆகவில்லை. நன்கு உறங்குபவர்களை எழுப்பினால் ஆயுள் குறைந்து விடும் என்று ஒரு மரபுச் சொல் உண்டு. அதனால்தான் நீயே கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். உன்னைப் பார்த்தால் காமாட்சி அம்மன் மாதிரி இருக்கிறது. நீ பல்லாண்டு நன்றாக வாழவேண்டும் அம்மா!” என்று ஆசி வழங்கியவாறு அவளுக்குப் பதிலளிக்கிறார் அவர்.

இதற்கிடையில் பேச்சுச் சத்தம் கேட்டுக் கண்விழிக்கிறார் நிலவுமொழியின் தந்தை. காலில் அதிகாரியைக் கண்டதும் பரபரப்புடன் எழுந்து நின்று வணங்குகிறார். “ஐயா, வணக்கம். அடியேன் பெயர் பொன்னம்பல ஓதுவார். திருமயிலைக் கோவிலில் அரச கட்டளைப்படி தினமும் தேவாரம் ஓதி வருகிறேன். இவள் என் மகள் நிலவுமொழி.” என்று அறிமுகம் செய்து கொள்கிறார்.

கனிவுடன் முறுவலிக்கிறார் கோவில் அதிகாரி. “தெரியும். தங்கள் மகள் முன்னமே அதைச் சொல்லிவிட்டாள். களைப்பு மிகுதியால் கண்ணயர்ந்து விட்டீர்கள் போல இருக்கிறது. உங்களை அழைத்துச் சென்று வசதியாகத் தங்க வைக்கும்படி திருமந்திர ஓலைநாயகத்திடமிருந்து செய்தி வந்திருக்கிறது. என்னுடன் கோவில் விடுதிக்கு வாருங்கள். நீராடி, மாலைப் பூசையைக் கண்டு, ஏகாம்பரநாதரை வழிபட்டு இரவு கோவில் விடுதியிலேயே உண்டுவிட்டு, அருகிலிருக்கும் வீட்டிலேயே இரவு தங்கிக் கொள்ளுங்கள். காலையில் ஓலைநாயகம் உங்களைச் சந்திப்பார். இன்று முக்கியமான அரசுப் பணி ஒன்று அவரை நிறுத்தி வைத்திருக்கிறது. தங்களுக்கு எது வேண்டுமானாலும், விடுதிக் காவலன் சோமசுந்தரனைக் கேளுங்கள். எல்லா வசதிகளையும் அவன் செய்து தருவான்.” என்று நடக்க ஆரம்பிக்கிறார். இருவரும் அவரைப் பின் தொடர்கிறார்கள்

தமிழ் இனி மெல்ல [பா.3 :அத்தியாயம்  4 ]தொடர்கிறது 

நிலவுமொழிக்கு ஏதோ கனவு போல இருக்கிறது. ஏகாம்பரநாதர் கோவிலின் அதிகாரி தாங்கள் உறங்கி விழிக்கும் வரை அருகில் காத்திருந்ததும், அவர் தங்களை அடையாளம் கண்டு கொண்டதும், சிவாச்சாரியார் தாங்கள் தங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்ததும் அவளுக்கு வியப்பாகவே இருந்தது. அப்படியென்றால் அவர்களை அவர் கண்காணித்துக் கொண்டுதானே இருந்திருக்க வேண்டும்? எது எப்படியிருந்தாலும், தனது தந்தைக்கு சிவாச்சாரியரின் சொற்கள் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை எப்படிப் பிறந்தது? ஒருவேளை இறைவன் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவருக்கு மனிதர்கள் மீதும் நம்பிக்கை வைப்பது எளிதாக இருக்கிறதோ என்னவோ? பழையாறை மாளிகையிலும், தஞ்சையிலும் தங்கியிருந்த தனக்கு சிவாச்சாரியார் மீது ஏன் அப்படிப்பட்ட நம்பிக்கை பிறக்கவில்லை? ஒருவேளை அறிவு முதிர்ச்சியின்மை என்பது இதுதானோ? இருபது வயதிற்கும் மேலான தனக்கு இன்னுமா அறிவு முதிர்ச்சி வரவில்லை என்று நினைத்துப் பார்க்கிறாள்.

என்ன இருந்தாலும் தன் உள்ளுணர்வுக்குத் தோன்றியபடியே சிவாச்சாரியரைத் தான் சந்திக்கப் போகிறோம் என்பது அவளுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அவரது சந்திப்பு தன் வாழ்வில் மீண்டும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்றும் அவளது உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருக்கிறது.

விடுதிக் காவலன் இரவில் அவர்களை கோவில் வீடு ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். வீடு சிறிதாக இருந்தாலும், மிகவும் தூய்மையாக இருக்கிறது. அவர்கள் உறங்குவதற்காக புதிய பாய்களும் தலையணைகளும் சுருட்டி வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் பானையில் விளாமிச்ச வேர் ஊறும் குடிநீர் நிரம்பி இருக்கிறது. கூடத்தில் ஒரு நிலைக் கண்ணாடி - தூங்கா விளக்கு முற்றத்திற்கருகில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

“அய்யா, கொல்லையில் கிணறு இருக்கிறது. காலையில் நீராட கிணற்று நீரை உபயோகித்துக் கொள்ளுங்கள். கூடையில் பழங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு சாப்பிடுங்கள். விடிந்து மூன்று நாழிகைக்குள் நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன். உள்ளே அறையில் இருக்கும் பெட்டியில் நீங்கள் அணிந்து கொள்ள மாற்று உடைகள் இருக்கின்றன. அவற்றை அணிந்து கொண்டு வரும்படி ஓலைநாயகம் தெரிவித்திருக்கிறார். கதவைத் தாளிட்டுக் கொண்டு உறங்குங்கள். நான் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பேன். உங்களுக்கு என்ன வேண்டுமென்றாலும், என்னைக் கூப்பிடுங்கள். நான் வருகிறேன்.” என்று கிளம்புகிறான் கோவில் காவலன்.

பிரையில் எரிந்து கொண்டிருக்கும் கைவிளக்கை எடுத்துக் கொண்டு அறைக் கதவைத் திறக்கிறாள் நிலவுமொழி. உள்ளே ஒரு மூலையில் ஒரு பெரிய மரப்பெட்டி இருக்கிறது. அதன் அருகில் இருந்த முக்காலியில் ஒரு பேழை இருக்கிறது. அதை மெல்லத் திறந்து பார்த்தவள் அதிர்ச்சியில் தந்தையை விளிக்கிறாள். “இங்கே வந்து பாருங்கள் அப்பா!”

“என்னம்மா, ஏதாவது பூச்சி பொட்டு இருக்கிறதா? இரு, கூட்டுமாரை எடுத்து வருகிறேன்.” என்று அவரிடமிருந்து பதில் வருகிறது.

“கூட்டுமாருக்கு அவசியமில்லை. இங்கே வந்துதான் பாருங்களேன்!” என்ற அவள் குரலில் இருந்த அவசரத்தைப் புரிந்து கொண்டு அறைக்குள் நுழைகிறார் அவர்.

நிலவுமொழியின் ஒரு கையில் நான்கைந்து தங்கச் சங்கிலிகள் தொங்குகின்றன. இன்னொரு கையில் பத்து வைரங்கள் பதித்த வளையல்கள் இருக்கின்றன. மரப்பெட்டியின் மீது வைத்திருக்கும் விளக்கு வெளியில் அவை பளபளக்கின்றன.

அவற்றைப் பார்த்து பொன்னம்பல ஓதுவார் அப்படியே பேச்சிழந்து நின்று விடுகிறார். மகளையும், அவள் கைகளில் உள்ள ஆபரணங்களையும் மாறிமாறிப் பார்க்கிறார். அவரது கண்கள் திறந்திருக்கும் பேழையில் படிகிறது. அதில் மேலும் பல நகைகள் உள்ளன. அவையும் நல்ல மணிகள் பதித்த நகைகளாகவே இருக்கின்றன. அவைகளும் விளக்கு வெளிச்சத்தில் தகதகவென்று மின்னுகின்றன. எப்படி அவை வந்தன என்று வினவுகிறார்.

“தெரியவில்லை. நான் பேழையைத் திறந்து பார்த்தேன். பேழை முழுவதும் நகைகளாகவே இருக்கின்றன.” என்று தன் கையில் உள்ள நகைகளையும், வளையல்களையும் பேழைக்குள் வைத்து மூடுகிறாள். பிறகு மரப்பெட்டியைத் திறக்கிறாள்.

பெட்டியின் உள்ளே கண்ணைப் பறிக்கும் சீனப்பட்டாடைகள் இருக்கின்றன. வண்ண நூல் வேலைப்பாடு செய்த மார்புக் கச்சைகளும், கீழாடைகளும், மேலாடைகளும், தலைப்பாகையும், சரிகை வேஷ்டிகளும் உள்ளன. இருவருக்கும் ஒரே குழப்பமாக இருக்கிறது.

“இதென்ன ஒரே குழப்பமாக இருக்கிறது! கோவில் காவலன் மாற்று உடைகள் என்றுதானே சொன்னான்? இது அரச குடும்பத்தினர் அணிந்து கொள்ளும் உடைகளாகவும், நகைகளாகவும் அல்லவா இருக்கின்றன! நான் வெளியே சென்று கோவில் காவலனை அழைத்து வருகிறேன். ஏதோ மாறி வந்து விட்டது என்று நினைக்கிறேன்.” என்றபடி அவளையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வருகிறார் ஓதுவார். அவர்கள் காலடிச் சத்தத்தைக் கேட்டவுடன் திண்ணையில் படுத்திருந்த விடுதிக் காவலன் எழுந்திருந்து, “என்ன வேணும்?” என்று விசாரிக்கிறான்.

“மாற்று உடைகள் பெட்டியில் இருக்குன்னு சொன்னியேப்பா. ஆனா ஏதோ அரச குடும்பத்து உடைகள்தாம்ப்பா இருக்கு. தவிர ஒரு பேழையில் நிறைய அரச ஆபரணங்களும் இருக்குப்பா. ஏதோ தவறு நடந்து போயிருக்கோ என்னவோப்பா.” என்று பதட்டமான குரலில் கேட்கிறார் ஓதுவார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. சரியாகத்தான் இருக்கணும். ஓலைநாயகம் அய்யாதான் கொடுத்தனுப்பிச்சாரு. ஓதுவாரும், அவுங்க பொண்ணும் வருவாங்க, அவங்க நாளைக்கு அந்த உடைங்களைப் போட்டுக்கிணு வரணும்னு தகவல் சொல்லு. அதுலே இருக்கறது எல்லாம் அவுங்களுக்குத்தான்னும் சேதி அனுப்பியிருந்தாரு. ஒங்களுக்கு ஏதோ ஓலை வேற வச்சுருக்கறதாவும் சொல்லியிருந்தாரே, பார்த்தீங்களா? இருட்டுலே எங்கேயாவது இருக்கும், பாருங்க. எல்லாம் உங்களுக்குத்தான். உங்கள கண்ணுல வச்சுக் காப்பாத்தத்தான் நான் திண்ணைலே படுத்துக்கிட்டு இருக்கேன். கவலையே படாதீங்க. நல்லாப் படுத்துத் தூங்குங்க. நாளைக்குப் பார்க்கலாம்.” திரும்பப் படுத்துக் கொண்டு விடுகிறான் கோவில் காவலன். அவன் தொண்டை மண்டல ஒற்றர் தலைவன் என்பதும், கோவில் அதிகாரி அவன் கீழ் பணியாற்றும் காஞ்சிப் பகுதியில் ஒற்றர்களில் ஒருவர் என்பதும் அரச இரகசியம்.

பேழைக்கு அடியில் இருந்த ஓலையில் அந்த நகைகளும், உடைகளும் அவர்களுக்கு அருள்மொழிநங்கையின் பரிசு என்று எழுதியிருக்கிறது. இரவு முழுவதும் நிலவுமொழிக்கு உறக்கமே வரவில்லை. மறுநாள் இந்த உடைகளை அணிந்து கொண்டு எங்கு செல்லப் போகிறோம், என்ன அதிசயம் காத்திருக்கிறது என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு மலைப்பாகவே இருக்கிறது. ஆனால் அவளது தந்தையோ நிம்மதியாக மெல்லிய இழையாக குறட்டை விட்டவண்ணம் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

விடியுமா விடியுமா என்று தன்னையும் அறியாமல் உறங்கியவளைத் தட்டி எழுப்புகிறார் அவளது தந்தை. வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்த நிலவுமொழி கொல்லைக் கதவைத் திறந்து பின்புறம் சென்று நீராடிவிட்டு வருகிறாள். அவள் திரும்பி வரும் பொழுது ஒரு மூதாட்டி அவளது தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். நிலவுமொழியைப் பார்த்தவுடன் தனது காவி படிந்த பற்கள் தெரிய புன்னகைக்கிறாள். என்ன என்பது போல கண்களாலேயே தந்தையை வினவுகிறாள் நிலவுமொழி. “இவர்கள் உன்னை அலங்கரிக்க வந்திருக்கிறார்கள். சிவாச்சாரியார் இவர்களை அனுப்பி வைத்தாராம்.”

“வாம்மா கண்ணு. எம்புட்டு அழகா இருக்கே! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு!” என்று அவள் முகத்தைத் தடவி திருஷ்டி நெறிக்கிறாள் அந்த மூதாட்டி. தான் கொண்டு வந்த ஒரு சிறிய பெட்டியுடன் நிலவு மொழியை அறைக்குள் அழைத்துச் சென்று நன்கு அலங்கரித்து விடுகிறாள். அவள் பெட்டியில்தான் எத்தனைவிதமான அழகு சாதனங்கள் - இதுவரை நிலவுமொழி அப்படிப்பட்ட சாதனங்களைப் பார்த்ததே இல்லை. அவளுக்கு நன்றாகச் சீவிச் சிங்காரித்து, கண்ணில் மை தீட்டி, புருவங்களில் ஜவ்வாது கூட்டி, கூந்தலில் சாம்பிராணிப் புகையேற்றி, வளைத்துச் சுற்றி அவளது நீண்ட கூந்தலைக் கொண்டையாக முடிகிறாள். நகைப் பேழையைத் திறந்து ஆபரணங்களை எடுக்கிறாள். முடிந்த கொண்டையில் கல் பதித்த தங்கச் சங்கிலியைக் கட்டிவிடுகிறாள். நெற்றிச் சுட்டி, மூக்குத்திகள், காதுக் குழைகள், எல்லாவற்றையும் அணிவிக்கிறாள். அந்த மூதாட்டி தன் வேலையை முடித்து விட்டு கூடத்தில் இருந்த நிலைக்கண்ணாடி முன்பு தன்னை நிறுத்தியதும், அதில் தெரிந்தது தான்தான் என்று நிலவுமொழியால் நம்பவே முடியவில்லை. அவளைக் கண்டு அவளது தந்தையும் பிரமித்துப் போய்விடுகிறார். அவரும் ஒரு அரசு அதிகாரி மாதிரியே காட்சி அளிக்கிறார். கோவில் காவலன் அவருக்கு மாற்று உடைகளை அணிவித்து விட்டிருக்கிறான்.
ஒரு சிவிகை வாயிலில் வந்து நிற்கிறது. மூதாட்டி நிலவுமொழியை அதில் அமரும்படி சுட்டிக் காட்டுகிறாள். அதன் திரையை விலக்கிப் பார்த்த நிலவுமொழி திடுக்கிடுகிறாள். சிவிகையின் உள்ளே சிரித்தவாறு அமர்ந்திருக்கிறாள் அருள்மொழிநங்கை.
* * *
                                    அத்தியாயம் 4
                       சுந்தர சோழரின் பொன் மாளிகை
                        நள, சித்திரை 15 - ஏப்ரல் 30, 1016
கீழ ரத வீதியைக் கடந்து பராந்தக சோழரின் பொன் மாளிகையை அடைகிறது சிவிகை. நிலவுமொழிக்கு இன்னும் தான் அருள்மொழிநங்கையுடன்தான் சிவிகையுள் அமர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப இயலவில்லை. சிவிகைக்குள் அவளைக் கண்டவுடன் அப்படியே சிலையாய் நின்றுவிட்டதும், தன் கையைப் பிடித்து இழுத்து அருள்மொழிநங்கை இருத்திக்கொண்டதும் கனவுபோல அவள் மனக்கண் முன்னர் திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கிறது. எத்தனை முறை துருவித் துருவித் தன்னை அலங்கரித்துக் கூட்டிச் செல்லும் காரணத்தைக் கேட்டாலும் அருள்மொழிநங்கை பதிலே சொல்லவில்லை. எனவே அருள்மொழிநங்கை மற்ற விவரங்களைப் பேசி வந்தும் மனம் பேச்சில் ஈடுபடாமல் அமைதியாகிவிட்டாள் நிலவுமொழி. இதைக்கண்ட அருள்மொழிநங்கையும் அவளைக் கனவுலகில் அலைந்து திரிய விட்டுவிட்டிருக்கிறாள்.

ஒரு குலுக்கலுடன் சிவிகை கீழே இறக்கப்படுகிறது. திரையை விலக்கிக்கொண்டு இறங்கிய அருள்மொழிநங்கை நிலவுமொழியையும் தன்னுடன் இறங்கி வருமாறு கண் காட்டுகிறாள். அவளைத் தொடர்ந்து இறங்கியவள், ஒரு அழகிய மாட்டு வண்டியிலிருந்து தன் தந்தையை விடுதிக் காவலன் கைவாகு கொடுத்து இறக்கி விடுவதைக் கவனிக்கும் பொழுது நெஞ்சு பெருமையால் விம்முகிறது.

எப்பொழுதுமே மேலாடை இல்லாமலும், சாதாரண உடையுடனும் அவரைப் பார்த்து வந்த அவளுக்கு பளபளக்கும் மேலாடை, கீழாடைகளுடனும், வேலைப்பாடு மிக்க தலைப்பாகையுடன் பார்க்கும் பொழுது சிரிப்பு வந்தாலும், அவர் தற்பொழுது ஒரு அரசு அலுவலரைப் போலக் காணப்படுவது பெருமையாகத்தான் இருக்கிறது. தானாவது அரச குடும்பத்தினருடன் நன்கு பழகி வந்திருக்கிறோம், இப்படிப்பட்ட அனுபவத்தை அவர் இதுகாறும் பெற்றதுகூட இல்லை என்பதையும் எண்ணிப் பார்க்கிறாள்
.
கோவில் விடுதிக் காவலன் அவர்களை வணங்கி விட்டு பொன்மாளிகை வாயிலிலேயே நின்றுகொண்டுவிடுகிறான். வாயிலில் காத்திருக்கும் தாதியர்களும், காவலர்களும் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். முதல் வளாகத்தைத் தாண்டியதும் சிவாச்சாரியனும், அருள்மொழிநங்கையின் தாய் பஞ்சவன்மாதேவியும் அவர்களை எதிர்கொள்கிறார்கள். இருவரையும் தரையில் விழுந்து வணங்க முற்பட்ட நிலவுமொழியைக் கைகளில் தாங்கி நிறுத்துகிறாள் பஞ்சவன்மாதேவி.

சிவாச்சாரி திருமந்திர ஓலைநாயகத்தின் உடைகளை அணிந்திருக்கிறான். அவனைக் கண்டதும் கயல் விழிகள் விரிய, கருவண்டுகள் போன்ற கண்மணிகள் பளபளக்க, பூவிதழ் பிளந்து, முத்துப் பற்கள் பளிச்சிட, பெரிய புன்னகை நிலவுமொழியின் முகத்தில் மலர்கிறது.

ஓடிச் சென்று, “ஐயா, தங்களைச் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கும், என் தந்தைக்கும் இந்த வேஷம் எதற்காக?” என்று கேட்கிறாள். ஒரு புன்னகையையே விடையாகத் தருகிறான் சிவாச்சாரி. பஞ்சவன்மாதேவி அவளது நெற்றிச் சுட்டியைச் சரிப்படுத்தி விடுகிறாள். மேலும் அவளது ஆடைகளையும் சிறிது சரிசெய்து விடுகிறாள். அவளது தோள்களைப் பற்றி அழைத்துச் செல்கிறாள் அருள்மொழிநங்கை.

அவளுடன் அரச மண்டபத்திற்குள் நுழைந்த நிலவுமொழி மகிழ்ச்சியான அதிர்ச்சிக்கு ஆளாகிறாள். மகுடமணிந்த இராஜேந்திரன் நடு அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இருபுறமும் அவனது மைந்தர்கள் இராஜாதிராஜனும், இராஜேந்திரதேவனும், வீரனும், ஆளவந்தானும் அமர்ந்திருக்கிறார்கள்.

இராஜேந்திரனின் சாயலுடன் இருந்த ஆளவந்தானைப் பார்த்து மலைக்கிறாள் நிலவுமொழி. அவனுக்கு அருகில் குறுநில இளவரசனைப் போன்ற ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு அருகில் எழுபதிலிருந்து எழுபத்தைந்து வயது மதிக்கக் கூடிய முதியவர் அமர்ந்திருக்கிறார். அவரைப் பார்த்தால் ஒரு குறுநில மன்னர் மாதிரி இருக்கிறது. வெள்ளை வெளேறென்ற முறுக்கு மீசையும், காதில் வைரக் கடுக்கனும் அணிந்திருக்கிறார். நெற்றியில் தீட்டப்பட்டிருந்த நீண்ட சிவப்புக் கோடு அவர் வைணவர் என்பதைக் காட்டுகிறது. ஊடுருவிப் பார்க்கும் கண்களால் நிலவுமொழியை அளவெடுக்கிறார் அவர். தலையைக் குனிந்து கொள்கிறாள் நிலவுமொழி. அவருக்கும், அவருக்கு அருகில் இருப்பவனுக்கும் சாயல் ஒற்றுமை இருக்கிறது. வயது வித்தியாசத்தை மனதில் கொண்டு அவரது பேரனாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்கிறாள்.

“அனைவருக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளம்மா!” என்று காதில் கிசுகிசுக்கிறாள் பஞ்சவன்மாதேவி. அனைவரையும் வணங்குகிறாள் நிலவுமொழி.

“வாம்மா நிலவுமொழி. நீ இப்பொழுது ஒரு அரசகுமாரி மாதிரித்தான் இருக்கிறாய். உன்னை ஒரு தந்தையாக வரவேற்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் தந்தையாக ஒரு கடமையைச் செய்யவும்தான் உன்னை வரவழைத்திருக்கிறேன்!” கணீரென்று முழங்குகிறது இராஜேந்திரனின் குரல்.

“மகாராஜா! என்ன சொல்கிறீர்கள்? இந்த ஏழை ஓதுவாரின் மகளை உங்கள் மகளென்று சொல்கிறீர்களே!” தழுதழுக்கிறது பொன்னம்பல ஓதுவாரின் குரல். அவரது கைகள் தலைக்குமேல் உயர்ந்து வணக்கத்தில் ஒன்று சேர்கின்றன.

“ஆம், பொன்னம்பல ஓதுவாரே!” என்று இராஜேந்திரன் சொன்னதும் அவரால் தன் காதுகளையே நம்ப இயலவில்லை. தன்பெயர் சோழப் பேரரசரான இராஜேந்திரனுக்கு எப்படித் தெரிந்தது! இப்பொழுதுதானே இராஜேந்திரனனை அவர் முதல்முதலாகச் சந்திக்கிறார்?

“ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவளை எம் மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டோம். அவளுக்கும் திருமண வயது ஆகிவிட்டதல்லவா! ஆகவே தந்தையாக எனது கடமையைச் செய்ய விரும்பி எமது திருமந்திர ஓலைநாயகம் வாயிலாக உம்மையும், எமது மகளையும் இங்கு வரவழைத்தோம்!” அவன் குரல் கனிவாக இருந்தாலும், ஓதுவாருக்கு அது கனவில் ஒலிப்பதுபோல இருக்கிறது.

சிவாச்சாரி அவரை ஒரு ஆசனத்தில் அமரும்படி கைகாட்டுகிறான். இருப்பினும் இராஜேந்திரன், மற்றும் அரசு அதிகாரிகள் பலரின்முன் அவர்களுக்குச் சமமாக அமர ஓதுவாருக்குக் கூச்சமாக இருக்கிறது. அவரைக் கையைப் பிடித்து அமர்த்திய சிவாச்சாரி தானும் அவரருகில் உள்ள ஆசனத்தில் அமர்ந்து கொள்கிறான்.

பஞ்சவன்மாதேவி இராஜேந்திரனுக்கருகில் அவனது அரியாசனத்தில் அமரவே, இராஜாதிராஜனும், இராஜேந்திர தேவனும் எழுந்திருந்து அருள்மொழிநங்கைக்கும், நிலவுமொழிக்கும் தங்கள் இருக்கையை அமரக் கொடுத்துவிட்டு வேறொரு இருக்கையில் அமர்ந்து கொள்கிறார்கள். மிகவும் கூச்சத்துடன் அமர்ந்து கொள்கிறாள் நிலவுமொழி.

“சேதுராயரே, உமது பெயரனை எம் மகள் நிலவுமொழிக்கு மணமுடிக்க உமது சம்மதத்தை யாம் கோருகிறாம்!” சுற்றிவளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறான் இராஜேந்திரன்.

பனித்த மீசையுடன் அமர்ந்திருந்த சேதுராயர் புன்னகையுடன், “எந்தப் பெயரனுக்கு?” என்று வினவுகிறார்.

“வயதாகிவிட்டது உமக்கு, சேதுராயரே!” கடகடவென்று சிரிக்கிறான் இராஜேந்திரன். “அதுதான் எதையும் சட்டென்று புரிந்து கொள்ள இயலவில்லை! எப்பொழுது எமது மகள் என்று சொல்லி விட்டோமோ, அப்பொழுதே ஆளவந்தான் நிலவுமொழியின் அண்ணனாகி விட்டான். நாம் குறிப்பது உமது மகன் வயிற்றுப் பேரனான காடவனைத்தான்!”

“அரசே! தாங்கள் ஆணையிட்டால் அதற்கு நான் மறுப்புச் சொல்லவா போகிறேன்! இருப்பினும்...”  என்று இழுக்கிறார் சேதுராயர்.

“என்ன தயக்கம் உமக்கு?” இராஜேந்திரனிடமிருந்து கேள்வி பிறக்கிறது.

“தாங்களும், தங்களது மகளாகச் சொல்லப்படுபளும் சைவர்கள். நானும் எனது பெயரனும் வைணவர்கள். அப்படியிருக்க, மணவினை நடத்து என்றால்...” மீண்டும் இழுக்கிறார் சேதுராயர்.

“ஏன்? சைவர்களும் வைணவர்களும் மணவினை செய்து கொள்வதில்லையா? உமது மகளை நான் மணந்து கொள்ளவில்லையா?”

“நான் மனம் விட்டுப் பேச கோப்பரகேசரியாரின் அனுமதி வேண்டும்.” சேதுராயரின் குரலில் இருக்கும் உறுதி சபையில் இருக்கும் அனைவருக்கும் ஒருமாதிரியாகப் படுகிறது.

“அரசனாகவும், குறுநில மன்னராகவும் இப்பொழுது நாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை சேதுராயரே! மணவினைக்காக உரையாடுகிறோம். எனவே, நம் உள்ளத்தில் உள்ளதைத் தயக்கமின்றிப் பகிர்ந்து கொண்டால்தான் இளம் மக்களின் மணவாழ்க்கை சிறப்பாக விளங்கும்.” இராஜேந்திரன் முகத்தில் தவழும் புன்னகை சேதுராயர் என்ன சொல்ல விழைகிறார் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மாதிரித்தான் இருக்கிறது.

தொண்டையை இலேசாகச் செறுமிக் கொண்டு விட்டு எழுந்திருக்கும் சேதுராயரைக் கையமர்த்திய இராஜேந்திரன், “நான்தான் அரசுப் பணி இல்லை என்று சொல்லிவிட்டேனே! நீர் தயக்கமின்றி இருக்கையில் அமர்ந்தவாறே பேசலாம்.” என்கிறான்.

“நன்று, நன்று!” என்று தொடர்கிறார் சேதுராயர்.

“அரசே! தாங்கள் என் மகளைக் காதல் கடிமணம் செய்தீர்கள். இருப்பினும் தங்களுடன் சோழ அரியணையில் ஏறவேண்டிய என் மகளும், அவளது வழித்தோன்றல்களும் அரசுரிமைக்கு அருகதையற்றவர்கள் என்ற சக்கரவர்த்தி அவர்களால் அறிவிக்கப்பட்டனர். தாங்கள் அரசுரிமை ஏற்ற பின்னர்தான் என் மகள் வயிற்றுபெயரன் சோழ அரசவைக்கே அழைக்கப்படுகிறான். காரணம் தாங்கள் அறியாததல்ல - என் மகள் வைணவப் பெண் என்பதால்தானே!”

மேலே தொடர முயன்ற அவரை இடைமறித்து, “அல்ல சேதுராயரே, அல்ல! என் தந்தை சிறந்த சைவராக இருந்தாலும், வைணவத்தை மதித்தவர். நிறைய வைணவக் கோவில்களுக்கு நிலமும், அறக்கட்டளையும் வழங்கியவர். சாக்கிய முனியான புத்தருக்கு நாகைப்பட்டினத்தில் விகாரம் அமைக்க என் தந்தையார் அறக்கட்டளை வழங்கவில்லையா? என் அத்தையார் தஞ்சையில் சுந்தர சோழ விண்ணகரம் அமைக்கவும், சமணக் கோவில் கட்டவும் அறக்கட்டளை வழங்கியதை இந்நாடே அறியும். மேலும், தங்கள் மகள் என்னை மணந்ததும், சைவத்தை ஏற்று ஒரு சைவப் பெண் ஆகிவிடவில்லையா? அதல்ல காரணம்...”

சில கணங்கள் அமைதியான இராஜேந்திரனின் குரலில் இலேசான கரகரப்பு இருக்கிறது. “என் முதல் திருமணம் காதல் கடிமணமாக அமைந்ததை தந்தையார் ஒப்புக் கொள்ளவில்லை. சோழநாட்டின் பட்டத்து அரசியாக வரவேண்டியவள் நாடறிய, உலகறிய என்னை மணக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எங்கள் திருமணம் அரசர்களுக்கு அனுமதிக்கப் பட்டதே என்பினும், களவுக் காதல் கடிமணமாக அமைந்ததால், அது அரசுப் பதவி உரிமைக்கு அருகதையற்றது என்று முடிவெடுத்து - எனக்குத் தண்டனையாக தங்கள் மகள் வழியோர் சோழ அரச உரிமையற்றவர்கள் என்று செப்பேட்டில் பதிப்பிட்டுவிட்டார். இன்றுவரை என் அவசரச் செயலுக்காக நான் இதயத்திற்குள் குருதி சிந்தி வருகிறேன். உமது மன ஆற்றாமை எமக்குப் புரிகிறது. அதனால் உம் மனதைக் குளிர வைக்கும் ஒரு அறிவிப்பைச் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.”


இராஜேந்திரனின் கண்கள் பளிச்சிடுகின்றன. “அரசகேசரியான எமது தந்தையாரின் கட்டளையை மீற இயலாவிட்டாலும், சோழ அரசர்களுக்கே உரிய பட்டப் பெயரில் கடைசியான கேசரியை ஆளவந்தானுக்கு வழங்கிச் சிறப்பிக்கிறோம். ஓலைநாயகமே, இனி ஆளவந்தான் மனுநீதிச் சோழன் வழித்தோன்றல் என்பதைக் குறிக்கும் வகையில் “மனுகுல கேசரி”  என்று அழைக்கப் படுவான் என்பதைச் செப்பேட்டில் பதிவு செய்வீராக!” அவன் குரல் மண்டபத்தில் எதிரொலிக்கிறது.[வளரும்]

No comments:

Post a Comment