Monday 1 September 2014

அன்றாடம் ஒரு பார்வை :கிடைத்த ஒரு வாழ்க்கை போதும்


                                                             



கவிதாயினி ஜி.ஜே. தமிழ்ச்செல்வி 
    அன்றாடம் ஒரு பார்வை 

          கிடைத்த ஒரு வாழ்க்கை போதும்
                                                         
அந்திப்  பொழுதுக்கு ஒரு மொழியுண்டு. அறிந்தவர்களுக்கு அது புரியும். அந்த  மொழியில் பேசும்  காகங்களின் பேரிரைச்சல்களை நான் இவை என்ன பேசிக்கொள்ளும் என்று சிந்தித்தபடி தான் சாலை கடப்பேன்!

அப்படி ஒரு மாலைப்பொழுதில் அவற்றின் பேச்சுக் களைக் காதில் சிந்தித்தபடி வாங்கிக்கொண்டு சாலையின் இரு பக்கமும் கவனித்து சாலைக் கடக்க எத்தனித்த போது தான் அவளைச்  சந்தித்தேன். 

யந்திரமயமாகி விட்டது வாழ்க்கை இந்த வாழ்க்கையில் சிநேகிதிகளை சந்திப்பது கூட என்றோ ஒரு நாள் தான் .அதுவும் வீதியில். முகம் முகமாய் எதிர்ப் புறம் வந்தாலொழிய,  சாலையின் மறுபக்கத்தில் அவர்கள் செல்லும் போது புன்னகை ஒன்றே பேச்சு மொழியாகிவிடுகிறது.காகங்கள் பரவாயில்லை அன்றாடம் சந்தித்து அன்றாடம் பட்ட பாடுகளைக் கத்திக்கூவி வெளியிட்டுவிடுகின்றன!

திடீரென்று சந்தித்த நட்பின் பரவசத்தில் இருவரும் முகம் மலர்ந்தோம். 
பின் அவள் முகம் கூம்ப நானும் வாடினேன். 

"என்னடி ஆச்சு?" என்ற என் கேள்வி.

"பொண்ணை காலேஜ்ல சேத்துட்டேன்டி, அடிவயத்துல புளிய கரைச்சாப்பல இருக்கு, இந்த காலத்துல நடக்குற நடப்ப பார்த்த பொண்ணுங்கள தனிச்சு விட பயமாயிருக்கு!" என்றாள்.

எனக்கு முந்தாநாள் அழகான இளைஞன் ஒருவனை மகனாகப் பெற்ற தாய் அலுவலகத்தில் வந்து புலம்பியது கவனம் வந்து சிரித்தேன்.

"நான் கலங்கிறேன் ! உனக்கு சிரிப்பு வருதா?" என்று முகம் வாடினாள்

" சீ! இல்லேடி. நேத்திக்கி ஒரு அம்மா அலுவலகம் வந்து பொலம்பினா. நீ பெண்ணா இருக்கிறதால சொல்றேம்மா. ஒரு அழகான பையனை மட்டும் பெத்துக்காதேம்மா! நான் ஒருத்தனைப் பெத்துட்டுத் தவியாத் தவிக்கிறேன். அவனைச் சுத்தி இந்தப்பொண்ணுங்க கூட்டம்  அந்தக் காக்காக் கூட்டம்  மாதிரி அலையிறாளுங்க! எப்போ  கிடைப்பானோ லபக்குனு கதையிலே வர்ற பாட்டி கிட்ட இருந்து வடை தூக்கின மாதிரி தூக்கிட்டுப் போயிடுவாளுங்கண்ணு பதறினா!"
அவள் விழிகளின் ஓரத்தில் இருந்த  ஈரக்கசிவு மேலே நீளவில்லை. இப்படி ஒரு புதுக்கோணம் உண்டா என்று ஓர் ஆர்வம் அதில்.

" நீ என்ன சொன்னே?"

" ஆண்டீ ! நீங்க பத்திரமாப் பாதுகாத்து வச்சாக்கூட உங்க பையன் எவன் கிட்டயாவது மாட்டாமே போயிடுவானா?"

"அதுக்கு அவ என்ன சொன்னா?"

"அவ ஒன்னும் சொல்லலே! ஏதோ ஒரு கலவரம் மட்டும் கண்ணுலே தெரிஞ்சுது! கற்பனையிலே அவளோட மகன் எவளையோ லவ் பண்ணி அவளை இழுத்துட்டு ஓடிப்போயிடற காட்சியோ என்னமோ!ஐயோ பாவம்.
அவள் தாயுள்ளம் படும் வேதனை எனக்கு புரியவே செய்தது."

"நான் என் கதையைச் சொல்ல வந்தா நீ எவ கதையோ சொல்றே!" குற்றம் சாட்டினாள்

" அந்த ஆண்டிக்கும் உனக்கும் வித்தியாசம் தெரியலடீ! அவ மகனுக்குப் பயப்படறா!நீ மகளுக்குப் பயப்படறா! அவ்வளவு தான். இதுக்கு உடமைப் பிடிப்புன்னு  பேரு. சுதந்திரமா இரு. சுதந்திரமா விட்டு வை. எல்லாம் தானா நல்லா நடக்கும்.நம்பு." தைரியம் சொல்லி அனுப்பி வைத்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு நானும் கூட அப்படித்தான் இருந்தேன். வெளியில் போன குழந்தை எப்போது வீட்டிற்கு வருவாளோ என்ற தவிப்பும், எதிர்பார்ப்பும், உள்ளூர எழுந்து அடங்க தவிக்கும் பயமுமாக.

இன்றைய காலக்கட்டத்தில் நாம் பெண் குழந்தைகளின் தாய் என்பதை மறந்து, அவர்களின் சிநேகிதியாக இருக்க வேண்டும் என்று அவளிடம் கூறினேன். சில பல பேச்சுகளுக்குப் பிறகு புரிந்தது போல் தலையாட்டி கடந்து போனாள் அவள்

இந்த நேரத்தில் ஒரு மாணவி தன் அனுபவத்தை என்னோடு பகிர்ந்தது நினைவிற்கு வந்தது. ஆரம்பத்தில் தன்னோடு சிநேகமாக இருந்த அம்மா,  தான் அனைத்தையும் பகிரத்துவங்கியபோது தன்னுடைய மன உணர்வு களைப்  புரிந்துக்கொள்ளாமல்  திடீரென கட்டுப் பாடு விதித்ததும் அதன் பிறகு அவள் தன் தாயாரோடு எதையும் பகிராமல் , சிலவற்றை மறைத்து விட்டதும் கூட. 

எல்லாமே கற்பனைகள். கற்பனையின் உச்சிகளில் நின்று நாம் கலவரப்படும் 
காட்சிகள். 

எடுத்துக்காட்டாக குழந்தைகள் தன் காதல் கதைகளை சொல்லும் போது கூட அவர்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்து அவர்களுக்கு நல்லது கெட்டதை அவர்களுக்கு புரிய வைக்கவேண்டுமே தவிர அதை விடுத்து அவர்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை தாங்கள் எடுப்பது என்பது அவர்களுடைய வாழ்க்கையைப்  பிடுங்கி நாம் வாழ்வதற்கு சமம்

கிடைத்த ஒரு வாழ்க்கை போதும்
-----------------------------------------------------------------------------------------------------------------
நளினமும் நகைச்சுவையும் நவீனப் பார்வையும்  கொண்ட  நாவல் அடுத்த செப்டம்பர் முதல் தேதிப் பதிவிலிருந்து  தொடங்குகிறது[ என்று அறிவித்தோம்.ஒரே ஒரு நாள் எக்ஸ்டென்ஷன்  கேட்கிறோம்.செப்டம்பர் 2ல் நிச்சயம். 
------------------------------------------------------------------------------
                      எழுதுபவர்:?         ஆணா ? பெண்ணா?

                     நாவல் தலைப்பு?                       தீம்?
                   
                    சமூகமா? சரித்திரமா?
----------------------------------------------------------------

  சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ்..சஸ்பென்ஸ் ....  சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ்..சஸ்பென்ஸ் ...

....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ் .. சஸ்பென்ஸ் ....சஸ்பென்ஸ்..சஸ்பென்ஸ் .....
---------------------------------------------------------------

                ஒரே ஒரு யூகத்திற்கும் கூட ஒரு புதுமையான பரிசு!

.

No comments:

Post a Comment